Photo: Namathumalayagam

08.07.2021 அன்று ‘தமிழில் புலம்பெயர்ந்தோர் சிறுகதைகள்’ எனும் தலைப்பில் ‘இந்திய சாகித்திய அக்கடமி – சென்னை’ ZOOM வழியாக கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் மயில்வாகனம் திலகராஜ் (மல்லியப்புசந்தி திலகர்), ‘இலங்கை மலையகத் தமிழ் சிறுகதைகள்’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தியிருந்தார். முதலாவது பாகம் நேற்று வௌியாகியிருந்தது. இரண்டாவதும் இறுதியுமான பாகம் கீழே தரப்பட்டிருக்கிறது.

###

சுதந்திர இலங்கையில் (1948) மலையகத் தமிழருக்கு நடந்த பெருங்கொடுமை அவர்களின் இலங்கைக் குடியுரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டது ஆகும். இதனால், சுதந்திரத்துக்கு முன்னான நடேசய்யர் காலத்தில் அவரது வார்த்தைகளில் சொல்வதானால் தூங்கிக் கொண்டிருந்த இளைஞர்களை தட்டி எழுப்பவதாக அல்லாமல், விழித்துக்கொண்ட மலையக இளைஞர்களை எழுச்சிக் கொள்ளச் செய்யும் தேவை எழுந்தது. அவர்கள் தமது நாட்டுரிமைப் போராட்டக் களமாக இலக்கியத்தை எடுத்தாளத் தொடங்கினர் எனலாம். அதுவரை இந்திய வம்சாவளியினராக, பெருந்தோட்டத் தொழிலாளர்களாக தம்மை அடையாளப்படுத்திவந்த அவர்கள் தமது இலங்கை நாட்டு உரிமை பறிக்கப்பட்டதோடு தாம் வாழும் பூமியை ‘மலைநாடு’ என விளித்து எழத்தொடங்கினர், எழுதத் தொடங்கினர்.

மாத்தளை அருணேசர், டீ.எம்.பீர் முஹம்மது, ஏ.எஸ்.வடிவேலு, ரபேல், பொ.கிருஸ்ணசாமி என ஓர் எழுத்தாளர் வரிசை 1950களில் சிறுகதைகள் எழுதியுள்ளார்கள். இவர்களுள் எம்.ஏ.அப்பாஸ் போன்று தமிழ் நாட்டில் இருந்து இலங்கையில் வந்த தங்கியிருந்த எழுத்தாளர்களும் அடக்கம். இவரது ‘கள்ளத்தோணி’ கதை பிரபலமான கதை. ‘கள்ளத்தோணி’ என்ற வார்த்தை ஒருபக்கம் அருவருப்புக்கும் மறுபக்கமாக கோபத்துக்கும் உள்ளாக்கியிருந்த காலம் அது.

குடியுரிமை பறிக்கப்பட்ட மக்கள் இந்தியாவில் இருந்து கள்ளத்தோணியில் இருந்து வந்தவர்கள் என ஏளனம் செய்த காலம் அது. இதனை மறுத்து “கடலையே காணாத எங்களை கள்ளத்தோணி எனகிறார்கள்’ என்றும், ‘கள்ளத்தோணியில் அல்லவடா நாங்கள் நல்லத்தோணியில் வந்தோமடா’ என அந்த கால மலையகப் பாவலர்கள் எழுதிய பல பாடல்களைக் கூட இங்கே நினைவுப்படுத்தலாம்.

4.2) 1960 முதல் 1980 வரை

1960களில் எழுந்த எழுச்சியே மலையகத்தின் சிறுகதை மறுமலர்ச்சிக் காலம் என அடையாளப்படுத்தலாம். தமது குடியுரிமை பறிக்கப்பட்டதோடு இலங்கையை விட்டு வெளியேறி இந்தியா திரும்ப வேண்டும் என இலங்கை அரசு இந்திய அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட அந்தக் காலத்தில், கோபத்தில் எழுந்த  ‘ஆத்திர பரம்பரையினர்’ இவர்கள் என இலக்கிய உலகில் இன்றும் அடையாளப்படுத்தப்படும் எழுச்சிக் காலம் அது.

நூறாண்டு காலத்திற்கு மேல் ஒரு நாட்டை பொருளாதார ரீதியில் வளமாக்கிய மக்கள் கூட்டத்தை, ‘நீங்கள் அந்நியர்கள்’ என்று குடியுரிமையைப் பறித்து, ‘நீங்கள் இந்தியர்கள்.. உங்கள் நாட்டுக்கே போய்விடுங்கள்’ என திருப்பி அனுப்பினால் ஆத்திரம் வராமல் இருக்குமா என்ன?

இத்தகைய அவலநிலையை அதற்கு முந்திய தலைமுறையைச் சேர்ந்த சி.வி.வேலுப்பிள்ளை ‘நாடுமில்லை நாயுமில்லை’ (No state No dog) என ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அழகான சிறுகதையாக சொல்லி வைக்க,  அடுத்து வந்த ஆத்திர பரம்பரையினைச் சேர்ந்த செந்தூரனோ, “உரிமை எங்கே?” என கேள்வி எழுப்பினார். செந்தூரன் என்றதுமே என்.எஸ்.எம்.ராமையா, தெளிவத்தை ஜோசப், சாரல்நாடன், மலரன்பன், மு.சிவலிங்கம், மாத்தளை சோமு, என்னும் பெயர்கள் சில இப்போதும் வரிசையாக வந்து நிற்கும். இவர்களும் இவர்களோடு இணைந்து வந்த இன்னும் பலரும் ஆத்திர பரம்பரையில் வந்த மலையக சிறுகதையாசிரியர்கள் என்ற பட்டியலுக்குள் அடங்குகின்றார்கள்.

1961இல் செந்தூரனின் “உரிமை எங்கே?” தமிழ்நாட்டின் ‘கல்கி’ இதழிலும், என்.எஸ்.எம். இராமையாவின் ‘ஒரு கூடைக் கொழுந்து’, தெளிவத்தை ஜோசப்பின் ‘படிப்..பூ’, செந்தூரனின் ‘நடுக்கடலில்’ போன்ற கதைகள் வாரப் பத்திரிகைளில் பிரசுரமாகின.

இதனைத் தொடர்ந்து வீரகேசரியின் தோட்ட மஞ்சரியில் இடம்பெற்ற மலையக சிறுகதைப் போட்டிகள் பல சிறுகதையாளர்களை அறிமுகஞ் செய்துள்ளது.

வீரகேசரி தோட்ட மஞ்சரி பகுதியை நடாத்திய மலையக பத்திரிகையாளரான எஸ்.எம். கார்மேகத்தின் அர்ப்பணிப்பு இங்கு சுட்டிக்காட்டத்தக்கது (இவர் பின்னாளில் தமிழகம் வந்து தினமணி ஆசிரியப்பீடத்திலும் கடமையாற்றினார்). அதேபோல இந்த முயற்சிக்கு அனுசரணை வழங்கிய பெரி.கந்தசாமி போன்ற மலையக சமூக ஆர்லர்களும் மனங்கொள்ளத் தக்கவர்கள்.

1963இல் வீரகேசரி நடாத்திய மலையக சிறுகதை போட்டிக்கு 150 பேர் வரை எழுதியதாக சிறுகதை வரலாற்றில் பதிவாகின்றன. அந்தப் போட்டியில் தெளிவத்தை ஜோசப்பின், ‘பாட்டி சொன்ன கதை’, சாரல் நாடனின் ‘காலஓட்டம்’, தங்கபிரகாஸின் ‘காயம்’ முறையே முதல் மூன்று இடங்களில் தெரிவாகியுள்ளன. போட்டிக்கான பரிசளிப்பு விழா பதுளையில் நடைபெற்ற அன்றே ‘மலைநாட்டு எழுத்தாளர் மன்றமும்’ கருக்கொண்டுள்ளது.

1964இல் நடைபெற்ற இரண்டாவது மலையகச் சிறுகதை போட்டியில் எம்.வாமதேவன், முருகேசு போன்றவர்களும் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்று புது வரவுகளைப் பதிவு செய்துள்ளனர். பின்னர் மலையகச் சிறுகதைகள் மாத்திரமின்றி அதற்கான விமர்சன களத்தையும் வீரகேசரியின் தோட்ட மஞ்சரியில் தொடங்கி வைத்துள்ளார் எஸ்.எம்.கார்மேகம். பி.மரியதாஸ், எம்.வாமதேவன் போன்றவர்களின் விமர்சன கட்டுரைகள் கவனிப்பு பெற்ற கட்டுரைகளாகியுள்ளன.

தோட்ட மஞ்சரி என பிரத்தியேகப் பக்கத்தில் இருந்த மலையகத் தமிழச் சிறுகதைகள், ‘இவ்வாரச் சிறுகதை’ எனும் இலங்கைச் சிறுகதைகளைப் பிரசுரிக்கும் பொதுப்பக்கத்திலும் வெளிவரத் தொடங்கியுள்ளன. மு.சிவலிங்கம், எம்.வாமதேவன், அல்-அசூமத், மு.நித்தியானந்தன், ராம.சுப்பிரமணியம், முருகேசு (குன்றவன்), தமிழோவியன், மல்லிகைக்காதலன், ஜீவரத்தினம், பூரணி, மகேஸ்வரி கிருஸ்ணன், ஈழகாந்தன், எஸ்.சண்முகநாதன் என சிறுகதை ஆசிரியர்கள் அளவிலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளனர்.

மறுபக்கமாக மலையக சிறுகதை போட்டி 3, 4 என தொடர்ந்து கொண்டிருந்திருக்கிறது. மூன்றாவது போட்டியில் மு.சிவலிங்கத்தின் (இதுவும் ஒரு கதை), பரிபூரணின் (பிரசவக்காசு), சி.பன்னீர் செல்வத்தின் (இலவு காத்த கிளி) முதல் மூன்று இடங்களையும் பெற்றுள்ளன. சி.பன்னீர் செல்வம், தொ. சிக்கன் ராஜூ போன்றவர்கள் தாயக் திரும்பியவர்களாக தமிழ்நாடு வந்த பின்னரும் பல படைப்புகளைத் தந்தவர்கள். சி.பன்னீர் செல்வம் தற்போதும் மதுரையில் வாழ்ந்து வருகிறார்.  நான்காவது போட்டியில் மாத்தளை வடிவேலன், சொலமன்ராஜ் என பட்டியல் நீள்கிறது.

பரிசு பெற்ற பன்னிரண்டு கதைகளையும் சேர்த்து அதே வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமாக ‘கதைக்கனிகள்’ நூல்; (1971) வெளியானது (ஏற்கனவே இந்தியாவில் ‘தமிழ் எழுத்தாளர் மன்றம்’ தொகுத்த ‘ஈழத்து பரிசு சிறுகதைகள்’ [1963] நூலில் செந்தூரனின் “உரிமை எங்கே?” இடம்பெற்றுள்ளது). 1971ஆம் ஆண்டு வெளிவந்த ‘கதைக்கனிகள்’ நூல் பற்றி 1973 இல் ‘தற்காலத் தமிழ் இலக்கியம்’ எனும் நூலை எழுதிய பேராசிரியர் இரா.தண்டாயுதம் ஓர் அத்தியாயமே எழுதி இருக்கிறார் என்றும், அதில் மலேசிய சிறுகதை எழுத்தாளரான சி.வடிவேலின் இருண்ட உலகம் நூல் பற்றியும் ஆராய்ந்துள்ளார் எனறும் தெளிவத்தை ஜோசப் மலையக சிறுகதைக வரலாறு நூலில் குறிப்பிடுகிறார்.

இன்றுபோல் அன்றும் மலேசியத் தமிழ் இலக்கியத்தையும் மலையகத் தமிழ்  இலக்கியத்தையும் இணைத்துப் பார்க்கும் மரபு இருந்திருக்கிறது போலும் (இன்று மலேசிய எழுத்தாளர் செய்யது பீர் முஹம்மது இந்த அரங்கில் உரையாற்றுகிறார்).

‘கதைக்கனிகள்’ மலையகத் தமிழ் சிறுகதைகளின் முதல் தொகுதியாக வீரகேசரியில் வந்த அதேநேரம் மு.நித்தியானந்தனின் வைகறைப் பதிப்பகத்தின் ஊடாக வெளிவந்த தெளிவத்தை ஜோசப்பின் ‘நாமிருக்கும் நாடே’(1979) இரண்டாவது மலையக சிறுகதை நூல், முதலாவது தனிநபர் தொகுதி எனும் சிறப்பைப் பெற்றது. இந்த நூலுக்கு இலங்கை அரச சாஹித்திய விருதும் கிடைத்தது முக்கியமாக பதிவு செய்யப்பட வேண்டியது. மலையகச் சிறுகதை நூல் ஒன்று இத்தகைய விருதைப்பெற்ற முதல் சந்தர்ப்பம் இது.

அதனைத் தொடர்ந்து என்.எஸ்.எம்.ராமமையாவின் சிறுகதைகள் அடங்கிய முதலாவது தொகுப்பான ‘ஒரு கூடைக் கொழுந்து’(1980), சி.வி.வேலுப்பிள்ளையின் ‘வீடற்றவன்’ நாவல்(1980) போன்றனவற்றையும் வெளியிட்ட வைகறைப் பதிப்பகத்தின் பணி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

1979 ‘நாமிருக்கும் நாடே’ வெளிவந்த அதே ஆண்டு சென்னையில் ஒரு தமிழ் இலக்கிய மாநாடு நடைபெற்றுள்ளது. அதில் கலந்துகொண்ட ஒருவரின் குறிப்பு இவ்வாறு அமைகிறது.

“தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரில் 1979ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு நாள், அண்ணாசாலையில் உள்ள சென்னை மாவட்ட மத்திய நூலகக் கேட்போர் கூடத்தில் ஓர் இலக்கியக்கூட்டம், நானும் ‘மக்கள் மலர்’ எனும் என்ற நாளிதழின் உதவி ஆசிரியர் என்ற முறையில் போயிருந்தேன். அந்தக் கூட்டத்தில் தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றியும் தமிழ் சிறுகதைகள் நாவல்கள் பற்றியும் பேசினார்கள். பேச்சில் இலங்கையின் வட கிழக்கு பகுதி தமிழ் எழுத்தாளர்களின் பெயர்கள் படைப்புகள் யாவும் வெளிவந்தன. மலேசிய நாட்டு தொழிலாளர்களையும் அவர்களின் கலை இலக்கியங்கள் சிறுகதைகள், நாவல்கள் ஆகியவற்றையும் எடுத்துச் சொன்னார்கள். இலங்கையில் பரம்பரை பரம்பரையாக உழைக்கின்ற மலைநாட்டு மக்களின் கலை, இலக்கியங்கள், சிறுகதைகள் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.”

1980ஆம் ஆண்டு வெளியான ‘தோட்டக்காட்டினிலே…’ எனும் சிறுகதைத் தொகுப்பின் தொகுப்புரையில் இருந்தே மேற்படி மேற்கோளைக் காட்டியுள்ளேன்.

(இந்த மேற்கோளுக்குச் சொந்தக்காரர், இன்றைய அமர்வில் அவுஸ்திரேலிய புலம் பெயர் தமிழ்ச் சிறுகதை பற்றி பேசிய மாத்தளை சோமு என்பது எத்தனை நெகிழ்வான செய்தி. நான் இலங்கையில் இருந்து மலையகத் தமிழ்ச்  சிறுகதைகள் பற்றி அவருடன் இணைந்த சபையில் இந்திய சாகித்திய அக்கடமி ஒழுங்கு செய்யும் கருத்தரங்கம் ஒன்றில் பேசுகின்றேன் என்பது எத்தனை மகிழ்வான செய்தி. இதே அரங்கில் எங்களோடு மலேசிய தமிழ் சிறுகதைகள் பற்றி மூத்தவர் செய்ட் பீர் முஹம்மதுவும் இணைந்து பேசுவது எத்தனை இனிப்பான செய்தி. இதுவே வரலாறு. இதுவே மாத்தளை சோமுவின் ஆதங்கத்தில் ஏற்பட்ட முகிழ்ப்பின் வெற்றி எனலாம்.)

ஆதங்கத்தோடு நின்று விடாமல் அவரது இலக்கிய சகாக்களான மாத்தளை மலரன்பன், மாத்தளை வடிவேலன் ஆகியோருடன் இணைந்து மாத்தளை சோமு தனது கதைகளையும் எழுதி தொகுத்து வெளியிட்ட நூல் ‘தோட்டக்காட்டினிலே..’

மாத்தளைத் தமிழ் எழத்தாளர் ஒன்றியத்தால் 1980ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘தோட்டக்காட்டினிலே..’ சிறுகதைத் தொகுதி மலையகத்தின் மூன்றாவது சிறுகதை நூல்.

இந்த நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கும் பேராசிரியர் கே.கைலாசபதி, “இக்கதைகளின் தர்மாவேசமும் மனிதாபிமானமும் எதிர்கால நம்பிக்கையும் வெவ்வேறு அளவில் கலந்து ஓடுகின்றன… ஓரளவு தோய்ந்து காணப்படும் இன்றைய இலங்கை சிறுகதை உலகில் இத்தொகுதியின் நம்பிக்கையும், நல்லுறுதியும் பாய்ச்சும் என எதிர்பார்க்கலாம்” எனக் குறிப்பிடுகின்றார்.

பேராசிரியர் க.கைலாசபதி குறிப்பிடுவதைப்போல இலங்கை சிறுகதை உலகம் ஓரளவு தோய்ந்திருந்தது என்பதே அந்தக் காலத்தில் இலங்கை மலையகச் சிறுகதைகள் சிலிர்த்து எழுந்தன என்பதன் அடையாளந்தான். அதன் அடையாளமாக கூறக்கூடியது மலையகச் சிறுகதை துறையில் ஏற்பட்ட வேகம்.  மாத்தளை சோமுவின் வேகம் அடுத்தடுத்து இரண்டு தனித்தொகுதிகளான ‘நமக்கென்றொரு பூமி’ (1984), ‘அவன் ஒருவனல்ல’ (1989) வெளிக் கொணர ஏதுவாகியுள்ளது. கூடவே நயீமா சித்திக்கின் ‘வாழ்க்கைச் சுவடுகள்’ (1987), மொழிவரதனின் ‘மேகமலையின் ராகங்கள்’ (1988), மலரன்பனின் ‘கோடிச்சேலை’ (1989) எனத் தனித்தொகுதிகள் வெளிவரத்தொடங்கின.

1979-1989 எனும் பத்தாண்டு கால இடைவெளியில் மொத்தமாக ஒன்பது மலையகத் தமிழ்ச் சிறுகதை நூல்கள் வெளிவந்தன என்பதும், அதில் மூன்று நூல்கள் சிறுகதைக்கான இலங்கை அரச சாகித்திய விருதினைப் பெற்றன என்பதுவும் அதன் வளர்ச்சியைக் காட்டி நிற்கின்றன. தெளிவத்தை ஜோசப்பின் ‘நாமிருக்கும் நாடே’ தொகுதிக்கடுத்து என்.எஸ்.எம்.ராமையாவின் ‘ஒரு கூடை கொழுந்து’ மாத்தளை மலரன்பனின் ‘கோடிச்சேலை’ என்பன அந்த நூல்களின் வரிசையாகும்.

குடியுரிமைப் பறிப்பு, பிராஜாவுரிமைப் போராட்டம், சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தத்திற்கான எதிர்நிலை என்பன 1980 வரையான  மலையக சிறுகதைகளின் பேசுபொருள் எனலாம். தெளிவத்தை ஜோசப்பின் ‘நாமிருக்கும் நாடே’, மாத்தளை சோமுவின் ‘நமக்கொன்று ஒரு பூமி’, மு.சிவலிங்கத்தின் ‘பேப்பர் பிரஜைகள்’, ‘மலைகளின மக்கள்’ போன்ற தலைப்பிலான சிறுகதைகள் இதற்கு உதாரணங்களாகின்றன. இதனோடு மலையக மக்களின் அந்தக் கால வாழ்வியலும் இந்த சிறுகதைகளில் பதிவு பெற்றுள்ளன. மல்லிகை சி.குமார் போன்ற சிறுகதை எழுத்தாளர்களின் வருகை அதனை மேலும் செழுமையாக்கியது எனலாம்.

4.3) 1980கள் முதல் 2000 ஆம் ஆண்டு வரை

1980களுக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் செல்நெறி மாற்றம் இலங்கையில் மலையகத் தமிழ் மக்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்கின. இழந்த குடியுரிமை சிறுகச்சிறுக கிடைக்க ஆரம்பித்த போது மலையகம் எனும் தொடரை மலையக தேசமாக கட்டமைக்கும் இலக்கியப்போக்கு உருவான காலம் இது எனலாம். இந்தக் காலப்பகுதி இளைஞர்களின் பங்களிப்புடன் உருவான ‘தீர்த்தக்கரை’ கலை இலக்கிய இயக்கமும் ‘தீர்த்தக்கரை’ சஞ்சிகையும் இதற்கு சான்று பகர்வன.

எல்.சாந்திகுமாரை ஆசிரியராகவும் எஸ்.நோபட், எம்.தியாகராம், எல்.ஜோதிகுமார், ஆகியோரை ஆசிரியர் குழுவாகவும் பி.சுதந்திரராஜ், எம்.பாக்கியநாதன், எஸ்.சிவப்பிரகாசம், எம்.சிவராம், பி.பாலேந்திரன், ஆகியோரை ஆலோசராகவும கொண்டு இயங்கிய இலக்கிய ஏடு இது.

‘மனித சமூகத்தின் சிகரத்தை எட்டிப்பிடிக்கத்தக்கதான கடின உழைப்பை மேற்கொள்ளும் இலக்கியவாதிகளின் அழகும் வீச்சும் மிக்க படைப்புகள் உருவாக   களம் அமைப்போம்’ என பிரகடனம் செய்து கொண்டு வந்த ‘தீர்த்தக்கரை’ இதழில் வெளியான சிறுகதைகள் பின்னர் ‘தீர்த்தக்கரைக் கதைகள்’ எனும் தொகுதியாக பல சிறுகதையாசிரியர்களின் கதைகளைக்கொண்டு 1995ஆம் ஆண்டு வெளிவந்ததது. 1980 முதல் 1994 வரையான மலையக சிறுகதை இலக்கியத்தின் செழிப்பான செல்நெறியை உருவாக்கியது.

இதே சமகாலப்பகுதியில் பல தனித் தொகுதிகள் வெளிவரத்தொடங்கின. அவற்றை பட்டியலிடும் பணி இலகுவானது என்றாலும், மலையகத் தமிழ்ச் சிறுகதைகள் குறித்தான குறிப்பிடத்தக்க சில கூட்டு முயற்சிகளையும் தொகுதிகளையும் இந்த உரையிலே சுட்டிக்காட்டுவது பொருத்தமானது என நினைக்கிறேன்.

இந்த நூற்றாண்டின் ஈழத்துச் சிறுகதைத் தொகுதி ஒன்று, தொகுதி இரண்டு என   இரண்டு தொகுதிகளை 1993,1994 என அறிமுகம் செய்தவர் ஈழத்து எழுத்தாளரும் பதிப்பாளருமான செ.யோகநாதன்.

ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வரிசையில் தொகுதி ஒன்றில் ரபேல், ஆப்தீன், தெளிவத்தை ஜோசப், சி.பன்னீர்செல்வம், அல் அஸுமத் ஆகியோரது மலையகத் தமிழ்ச் சிறுகதைகளையும், இரண்டாவது தொகுதியில் என்.எஸ்.எம்.ராமையா, சாரல் நாடன், நயீமா சித்திக், மலரன்பன், மு.சிவலிங்கம் மொழிவரதன், மாத்தளை வடிவேலன், கே.கோவிந்தராஜ்,  பாலரஞ்சனி சர்மா ஆகியோரது கதைகளையும் சேர்த்துள்ளார் தொகுப்பாசிரியர் செ.யோகநாதன். தவிரவும் முதலாவது தொகுதியை பேராசிரியர் க.கைலாசபதி, சி.வி.வேலுப்பிள்ளை ஆகியோருக்கு சமர்ப்பணம் செய்துள்ளார்.

முதலாவது தொகுதியின் தலைப்பாக ஈழத்து சிறுகதை மூலவர்களில் ஒருவரான இலங்கையர்கோனின் ‘வெள்ளிப்பாதசரம்’ எனும் கதையின் தலைப்பைத் தெரிவு செய்தவர், இரண்டாவது தொகுதிக்கு என் .எஸ்.எம். ராமையாவின் ‘ஒரு கூடைக் கொழுந்து’ என்பதைத் தெரிவு செய்திருந்தார் என்பதும் முக்கியமானது. மலையகத்தின் ஒரு கூடைக் கொழுந்துக்குள் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளைச் சேர்த்தமை எத்தனைச் சிறப்பு!

1979 இல் மாத்தளை சோமுவின் ஆதங்கமும் அவரது ‘தோட்டக்காட்டினிலே…’ நூலில் க.கைலாசபதி காட்டிய எதிர்பார்ப்பும் மலையகத் தமிழ்ச் சிறுகதைகளை ஈழத்துச் சிறுகதை செல்நெறியோடு சமநிலையில் இணைத்துப்பார்த்ததன் அடையாளத்தினை 1993,1994 காலத்தில் செ.யோகநாதனின் தொகுப்பில் பிரதிபலித்ததைப் பார்க்கலாம். இந்த நூல்களின் தொகுப்புரையில் ‘ஈழத்து இலக்கியத்தினைச் செழுமைப்படுத்தும் பிரதான ஆற்றலை இன்று மலையகம் பெற்றுள்ளது’ என செ.யோகநாதன் குறிப்பிடுவது அதனை உறுதி செய்வதாகவுமுள்ளது.

1994ஆம் ஆண்டு மலையகப் பத்திரிகை முன்னோடிகளில் ஒருவரான ‘கலைஒளி முத்தையாப்பிள்ளை’ நினைவாக நடாத்தப்பட்ட போட்டியில் வெற்றிபெற்ற கதைகளைத் தொகுத்து ‘மலையகப் பரிசுக் கதைகள்’ எனும் ஒரு தொகுதியை வெளியிட்டு பின்னாளில் வந்த மலையகச் சிறுகதை எழுத்தாளர்கள் பலரையும் அங்கீகாரம் செய்துவைத்துள்ளார். ‘வைகறைப் பதிப்பகம்’ மூலம் 1970 களின் இறுதியில் மலையக நூல்களை வெளியிட்ட மு.நித்தியானந்தன் கலையொளி முத்தையாப்பிள்ளையின் மகனாவார். இப்போது லண்டனில் வாழ்கிறார். இலக்கிய செயற்பாட்டிலும் தீவரமாக உள்ள இவர் ‘கூலித்தமிழ்’ (க்ரியா பதிப்பகம், 2014) எனும் மலையக ஆய்வு நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.

1997ஆம் ஆண்டு வெளியான துரைவி பதிப்பகத்தின் முதல் நூலான ‘மலையகச் சிறுகதைகள்’ மிக முக்கியமானது. அதன் பதிப்பாளரான துரை.விஸ்வநாதன் மலையக பதிப்பக முயற்சிகளில் மறக்க முடியாத மனிதர். இந்த நூலின பதிப்புரையில் இவ்வாறு குறிக்கிறார். “மலையகத்தின் தொடக்க கால எழுத்தாளர்களில் இருந்து இன்றைய எழுத்தாளர்களையும் இணைத்து ஒரு சிறுகதைத் தொகுதியை வெளியிட வேண்டும் என்ற யோசனை நானும் மாத்தளை கார்த்திகேசுவும், மாத்தளை சோமுவும் சந்தித்தபோது உருவானது.”

இந்த எண்ணம் அவ்வாறே நிறைவேறி 1997ஆம் ஆண்டு நூலுருப் பெற்றது. இந்த தொகுதியில் முதல் கதையாக  1931இல் வெளியான கோ.நடேசய்யரின் ‘ராமசாமி சேர்வையின் சரிதத்துடன் ஆரம்பமாகி 33 மலையக எழுத்தாளர்களின் சிறுகதைகள் கால ஒழுங்கில் 1980கள் வரையாக இதில் இடம்பெறுகின்றன.

அதே 1997ஆம் ஆண்டு இதன் இரண்டாம் பாகமாக மலையக மண்ணின் மைந்தர்களினதும் மலையகம் சாரா பிற எழுத்தாளர்களினதும் மலையகத் தமிழ்ச் சிறுகதைகளை உள்ளடக்கிய ‘உழைக்கப் பிறந்தவர்கள்’ எனும் பெறுமதியான தொகுதியும் துரைவி வெளியிட்டது. இந்தத் தொகுதியில் 55 எழுத்தாளர்களின் மலையகத் தமிழ்ச் சிறுகதைகள் அடங்கியுள்ளன. புதுமைப்பித்தனின் ‘துன்பக்கேணியும்’ இந்தத் தொகுதியில் இடம்பெறுவது மலையகத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றினை நினைவுபடுத்துவது. இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதியைப்  பூர்விகமாகக் கொண்ட தமிழ் எழுத்தாளர்களான யோ.பெனடிக்ட் பாலன், செ.யோகநாதன், அ.செ.முருகானந்தன், செ.கணேசலிங்கன் உள்ளிட்ட பலரின் மலையகம்சார் தமிழ்ச் சிறுகதைகளையும் இந்தத் தொகுதி கொண்டுள்ளமை சிறப்பாகும்.

துரைவி பதிப்பகம் தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையுடன் இணைந்து நடாத்திய இன்னுமொரு மலையகச் சிறுகதைக் போட்டியின் வெளிப்பாடாக 1998ஆம் ஆண்டு வெளிவந்த ‘துரைவி – தினகரன் பரிசு சிறுகதைகள்’ முதல் இரண்டு தொகுதிகளினதும் தொடர்ச்சி போல அமைந்து, மேலும் பதினைந்து மலையகத் தமிழ்ச் சிறுகதைளை வெளிக்கொண்டுவந்தது. இதில் நான்கு கதைகளை எழுதியவர்கள் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பின்னதாக கூட்டுத்தொகுப்பு நூல்களாக மலையகச் சிறுகதைத் தொகுதிகள் வராதபோதும் தனித் தொகுதிகளாக சடகோபன் ராமையா, பதுளை சேனாதிராஜா, சிவனு மனோகரன், பிரமிளா பிரதீபன் உள்ளடங்களான பலரின் தொகுதிகள் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கின்றன. பலரும் பத்திரிகைகள் சஞ்சிகைகளில் எழுதிக்கொண்டு இருக்கின்றனர்.

நயீமா சித்திக், புசல்லாவ இஸ்மாலிக்கா, பாலரஞ்சனி சர்மா, சாந்தா ராஜ், நளாயினி சுப்பையா, ரோஹிணி முத்தையா, சுகந்தி வெள்ளையன், எக்னஸ் சவரிமுத்து , பிரமிளா பிரதீபன் என ஒரு பெண்கள் பரம்பரையும் மலையகச் சிறுகதை ஆசிரியர் பட்டியலில் தவிர்க்க முடியாத இடம் வகிக்கின்றனர்.

4.4) 2000 ஆம் ஆண்டுகளுக்குப் பின்

2000ஆம் ஆண்டுகளுக்குப் பின்னான மலையகத் தமிழ்ச் சிறுகதைப் போக்கினையும் வரலாற்றையும் ஆராயும் தேவை பலமாக உள்ளது. அறுபதுகளில், எண்பதுகளில் ஏற்பட்ட இலங்கை சமூக, அரசியல் மாற்றங்கள், அது மலையகத் தமிழ் மக்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் சிறுகதைகளில் எவ்வாறு பதிவு பெற்றனவோ அல்லது பிரதி பலித்தனவோ, அவ்வாறே 2000க்கு பின்னர் எவ்வாறு மாற்றம் கண்டுள்ளன என்பதை ஆராய்வது இந்த உரையின் இரண்டாம் பாகமாக அமையலாம்.

அத்தகைய ஒரு ஆய்வுக்கான தேவையை அல்லது ஆரம்பத்தை 2000ஆம் ஆண்டு வெளிவந்த தெளிவத்தை ஜோசப்பின்  ‘மலையக சிறுகதை வரலாறு’ எனும் நூல் முன்னுதாரணமாக நின்று வழிகாட்டுகிறது எனலாம். மலையகத் தமிழ்ச் சிறுகதை வரலாறு பற்றி பேசும், எழுதும் இனிவரப்போகும் யாருக்கும் அந்த வரலாற்றுக்கு  அடி எடுத்துக்கொடுக்கும் நூலாக இது அமையும் தகைமையைக் கொண்டுள்ளது. தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு யாழ். இலக்கிய குவியத்தின் (ஈழத்துச் சிறுகதை முன்னோடி சம்பந்தன் நினைவாக) ‘சம்பந்தன் விருதினை’ சொந்தமாக்கிய ஆய்வுநூல் இது.

கதை மாந்தர்களது பெயரைக் கொண்டோ மலையகப் பேச்சுவழக்கில் எழுதப்பட்டுள்ளது என்பதைக் கொண்டோ ஒரு கதை மலையகத் தமிழ்ச் சிறுகதை ஆகிவிட முடியாது என்பதைப் போலவே எழுத்தாளரின் முகவரியைக் கொண்டும் அது நிர்ணயம் பெறுவதில்லை என இர.சிவலிங்கம் எழுதிய ‘மலையக சிறுகதைகள்: ஒரு மதிப்பீடு’ எனும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதைப் போல மலையகத்தில் இருந்து எழுதி விடுவதனால் மட்டுமே அது மலையத் தமிழ்ச் சிறுகதை ஆகிவிடவும் முடியாது.

1960களில் எழுதத் தொடங்கிய தெளிவத்தை ஜோசப், மு.சிவலிங்கம், மலரன்பன், வடிவேலன், அல்-அஸுமத் போன்றவர்கள் இன்னும் மலையகத் தமிழச் சிறுகதை உலகில் சஞ்சரித்துக்கொண்டிருப்பது அடுத்த தலைமுறையினருக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய பலமாகும். 2013, 2015 காலப்பகுதிகளில் கூட சிறுகதைக்காக தேசிய சாகித்திய பரிசினை தமதாக்கி மு.சிவலிங்கம், தெளிவத்தை ஜோசப், மலரன்பன் போன்றவர்கள் அந்த செல்நெறியை இலங்கைத் தமிழ்ச்சிறுகதை செல்நெறியோடு உயிர்ப்புடன் இணைத்து வைத்துள்ளனர்.

தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் தெளிவத்தை ஜோசப்பின் சிறுகதைகளைத் தொகுத்து ‘மீன்கள்’ எனும் தொகுதியாக (நற்றிணைப் பதிப்பகம், 2013) கொண்டு வருவது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. 1979இல் தமிழ் நாட்டில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த இலங்கை மலையகத் தமிழ் இலக்கியப்பக்கம், தனது கால்களை பலமாக ஊன்றி நிலைபெற்றுக் கொண்டுள்ளது என்பதன் சான்றாகவே இவை அமைகிறது. அதேபோல பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தத்துவமாணி பட்டத்திற்காகவும் அவரது சிறுகதைகள் ஆய்வுக்கு உள்ளாகியுள்ளன. இன்னும் பல மலையகத் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களின் கதைகள் பல்கலைக்கழக மாணவர் ஆய்வுகளுக்கு உட்பட்டுள்ள நிலையில் அவை வெளிவராத பிரதிகளாக உள்ளன என அறியக்கிடைக்கிறது.

மலையகத் தமிழ் இலக்கிய செயற்பாட்டாளர்கள், ஆய்வறிஞர்கள் இந்த வரலாற்றைப் பதிவு செய்யும் அவசியம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இந்திய சாகித்ய அக்கடமி (சென்னை அலுவலகம்) ஒழுங்கு செய்திருக்கக்கூடிய இலக்கிய கருத்தரங்கில் எனது இந்த உரையானது மலையகத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றைப் பதிவு செய்யும் ஒரு பகுதியாகவே கருதுகின்றேன். என்னை அழைத்து வாய்ப்பு வழங்கிய, உரை நிகழ்வுக்கு தலைமையும்  வகித்த பேராசிரியர் பா.ஆனந்தகுமார் அவர்களுக்கும் இந்திய சாகித்திய அக்கடமி நிர்வாகத்தினருக்கும் நன்றி கூறி உரையை நிறைவு செய்கிறேன்.

நன்றி வணக்கம்

உசாத்துணை நூல்கள்:

  1. கதைக்கனிகள், வீரகேசரி பிரசுரம், கொழும்பு, 1971
  2. புதுமை இலக்கியம், சி.வி.வேலுப்பிள்ளை, மாவலி, ஹட்டன், 1974.
  3. நாமிருக்கும நாடே, தெளிவத்தை ஜோசப், வைகறைப்பதிப்பகம், யாழ்ப்பாணம், 1979.
  4. ‘இலங்கை மலையகத்தமிழரின் பண்பாடும் கருத்துநிலையும் – (தொகுதி 1) – பேராசிரியர் கா.சிவத்தம்பி (பதிப்பாசிரியர்), உதயம் பவுன்டேசன் வெளியீடு, கொழும்பு, 1993.
  5. மலையகப் பரிசு சிறுகதைகள், கலையொளி முத்தையாப்பிள்ளை நினைவகம், பதுளை 1994
  6. தீர்த்தகரை கதைகள், நந்தலாலா, ஹட்டன், 1995
  7. மலையகச் சிறுகதைகள், துரைவி பதிப்பகம், கொழும்பு 1997
  8. உழைக்கப் பிறந்தவர்கள், துரைவி பதிப்பகம், கொழும்பு 1997
  9. பரிசு பெற்ற கதைகள் 1998 துரைவி – தினகரன், துரைவி பதிப்பகம், 1998.
  10. மலையகச் சிறுகதை வரலாறு, தெளிவத்தை ஜோசப், துரைவி பதிப்பகம், 2000.
  11. சி.வியின் தேயிலைத் தேசம் – மொழியாக்கம் மு.சிவலிங்கம், துரைவி பதிப்பகம், 2002.
  12. மல்லியப்புசந்தி, திலகர், பாக்யா பதிப்பகம், ஹட்டன் 2007
  13. தேசபக்தன் கோ.நடேசய்யர், சாரல் நாடன், குமரன் புத்தக இல்லம், 2008
  14. ‘தேசமக்களை நாசப்படுத்தும் தேயிலைத் தோட்டப்பாட்டு’ (கண்டி சிலோன் காப்பித்தோட்டப்பாட்டு ), பா.ஆனந்தகுமார், காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம்- திண்டுக்கல், தமிழ்நாடு, இந்தியா. 2017.
  15. இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப்பிழைப்பு நாடகம் – கோ.நடேசய்யர் (பதிப்பாசிரியர் – அந்தனி ஜீவா) குமரன் புத்தக இல்லம், 2018