Photo: Youtube

08.07.2021 அன்று ‘தமிழில் புலம்பெயர்ந்தோர் சிறுகதைகள்’ எனும் தலைப்பில் ‘இந்திய சாகித்திய அக்கடமி – சென்னை’ ZOOM வழியாக கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் மயில்வாகனம் திலகராஜ் (மல்லியப்புசந்தி திலகர்), ‘இலங்கை மலையகத் தமிழ் சிறுகதைகள்’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தியிருந்தார். இரண்டு பாகங்களாக வெளிவரவிருக்கும் இந்த உரையின் முதல் பாகம் இதுவாகும். இரண்டாவதும் இறுதியுமான பாகம் நாளை வெளியாகும்.

###

  1. அறிமுகம்

இலங்கை மலையகத் தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய பார்வையை செலுத்துவதற்கு முன்பதாக இலங்கையில் ‘மலையகம்’ எனும் சொல் குறித்து நிற்கும் அர்த்தம் பற்றிய அறிமுகம் அவசியமானது. புவியியல்சார் நிலவமைப்பு அடையாளத்தைச் சுட்டி நிற்கும் இந்த செல்லாடலுக்குள், தனக்கென ஒரு பண்பாட்டையும், மொழியையும், இன அடையாளத்தையும், பாரம்பரியத்தையும் கொண்ட ஒரு சமூக குழுமத்தின் அடையாளமே நிறைந்திருக்கிறது. எனவே புவியியல் அடையாளத்துக்கு வெளியே, ‘மலையகம்’ என்பது ஒரு சமூகத்தின் கலை, இலக்கிய, அரசியல், பண்பாட்டு உணர்வு வெளிப்பாட்டு அடையாளம் ஆகும்.

“இலங்கைத்தமிழ் வழக்கில் இன்று மலையகம் என்பது இலங்கையின் மலைப் பிரதேசங்களில் உள்ள பெருந்தோட்டங்களிலும் அவற்றைச் சார்ந்த நகரங்களிலும் வாழும் இந்திய வம்சாவளி தமிழரைக் குறிப்பதாகும். மலையகப் பகுதிகளைச் சாராத பகுதிகளிலுள்ள பெருந்தோட்டங்களில் அதாவது மேல், தென் மாகாணங்களைச் சார்ந்த இறப்பர் பெருந்தோட்டங்களில் வாழ்பவர்களையும் மலைசார் பகுதிகளில் இருந்து சென்று வட கிழக்கு பகுதியின் விவசாய பிரதேசங்களிலும் (கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில்) கொழும்பிலும் வாழ்பவர்களையும் கூட மலையகத்தமிழர் என்ற தொடர் கொண்டே சுட்டும் மரபு இன்று வழக்கில் உள்ளது’ என்கிறார் பேராசிரியர் கா.சிவத்தம்பி (‘இலங்கை மலையகத்தமிழரின் பண்பாடும் கருத்துநிலையும் – [தொகுதி 1] பக்.11, 2003)

இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகள் பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த 19ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில்(1824), அவர்களால் இலங்கையில் நிறுவப்பட்ட பெருந்தோட்டங்களில் கூலித் தொழிலாளர்களாக அழைத்துவரப்பட்ட, தமிழ்நாட்டின் (குறிப்பாக தென் மாவட்டங்களின்) வம்சாவளியினரே இந்த ‘மலையகத் தமிழர்’ எனும் மக்கள் தொகுதியினர் ஆகின்றனர்.

இலங்கையில் சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள், இலங்கை முஸ்லிம்கள், இந்தியத் தமிழர்கள், ஏனையோர் எனும் ஐந்து நிலை வகைப்படுத்தலில்  இனக்குழும நிலைநின்ற சனத்தொகை கணக்கெடுப்பே இன்றும் இடம்பெறுகிறது. இதில் சனத்தொகை அளவின் அடிப்படையில் நான்காவது நிலையில் இருக்கும் இனக்குழுமமான ‘இந்தியத் தமிழர்’ எனும் இனமே தம்மை பண்பாட்டு அடிப்படையில் ‘மலையகத் தமிழர்’ என வளர்த்தெடுத்துக்கொண்டுள்ளனர், அழைத்துக்கொள்கின்றனர்.

இலங்கை சுதந்திரமடைவதற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு 1901ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின்போது சுமார் ஐந்து இலட்சமாக பதிவுபெறும் இவர்களது எண்ணிக்கை 1931 ஆம் ஆண்டு பூர்விக இலங்கைத் தமிழர்களைவிட உயர்வான புள்ளியையே பதிவு செய்துள்ளது.

1948ஆம் ஆண்டு சுத்திரத்ததுக்குப் பின்னான 1960ஆம் ஆண்டு வரைக்குமே கூட அந்த அளவினையே பதிவு செய்த ‘இந்தியத் தமிழர்’ சனத்தொகை தமது அடையாளமான ‘இந்தியர்’ என்பதாலேயே இலங்கையில் (1948) குடியுரிமைப் பறிப்புக்கும், வாக்குரிமைப் பறிப்புக்கும் உள்ளாகினர்.

1964ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட இலங்கை – இந்திய அரசுகளின் உத்தியோகபூர்வ (சிறிமா- சாஸ்த்திரி) உடன்படிக்கையினால் லட்சக்கணக்கில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் தாயகம் திரும்பியோர் எனும் பெயரில் தமிழ்நாட்டின் சிலோன் காலனிகளில் இப்போதும் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போதைய நிலையில் மொத்தம் சுமார் பதினைந்து லட்சமாக மலையகத் தமிழ் மக்கள் வாழ்ந்தபோதும் கூட, அதனை இலங்கைத் தமிழர் ஆகவும் இந்தியத் தமிழராகவும் சனத்தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்து கொள்வதால் தொடர்ந்தும் எண்ணிக்கை அடிப்படையில் நான்காம் படிநிலையிலேயே உள்ளனர்.

இவர்களும், இவர்களுக்கு முன்னும் பின்னும் எண்ணிக்கையின் அடிப்படையில் சனத்தொகையில் தனியான இனங்களாக சேர்க்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்களும், முஸ்லிம்களும் தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்கள் என்பது, இந்த மூன்று இனங்களினதும் பொதுப்புள்ளியாகும். ‘தமிழ் மொழி’ தாய் மொழி என்பது தவிர அபிலாசைகள், கலை, கலாசாரம், பண்பாட்டு, பாரம்பரியங்களிலே இவர்களுக்கு இடையே பாரிய வேறுபாடுகள் உண்டு. தமிழ் மொழியை உச்சரிப்பதிலும் கையாள்வதிலுமே கூட.

இப்போது பெருந்தோட்ட மக்கள் எனும் எல்லைகள் விரிவடைந்து அதில் நேரடியாக தொழில் செய்வோர் எண்ணிக்கை மொத்தத்தில் பத்தில் ஒரு பங்காக அதாவது ஒன்றரை லட்சமாகக் குறைந்துவிட்ட போதும் கூட, அவர்கள் வாழும் அந்த பெருந்தோட்டப் பிராந்தியம் ஏற்றுமதிக்கென தேயிலை, ரப்பரை உற்பத்தி செய்யும் ஒரு பொருளாதார வலயமாக, சுமார் பத்து லட்சம் மக்களின் வாழ்விட மையங்களாக, மலையகத் தமிழர் இனத்தின் வேர்ச் சமூகப் பிரதேசமாகவும் அவர்களின் கலாசாரத்தின் இருப்பிடமாகவும் உள்ளது.

  1. ஈழத்து இலக்கியமும் மலையக இலக்கியமும்

திணைக் கோட்பாட்டின் நிலை நின்று இந்த மலையகத் தமிழ் மக்களை குறிக்க முயன்றால் மலையும்  மலைசார்ந்த பகுதிகளிலும் வாழும் குறிஞ்சி நிலப்பண்புகள் இவர்களிடம் மேலோங்கி நிற்கும். இவர்களது கலைகளில் காமன் கூத்து, பொன்னர்-சங்கர், அர்ச்சுணன் தபசு, மருதவீரன் கூத்து போன்ற தமிழ்நாட்டின் கூத்துக்கலைகளும் அதில் இருந்து வளர்ந்த நாடகக் கலையும் உழைக்கும் மக்களுக்கே உரிய நாட்டார் பாடல் வடிவங்களும் அதன் வழி வந்த தோட்டப்புறப் பாடல்களும் இவர்களுக்கே உரியவை, தனித்துவமானவை.

ஈழத்துத் தமிழ் இலக்கியப்பரப்பில் இலங்கைத் தமிழர்களோடும், இலங்கை முஸ்லிம்களோடும் இணைந்து மலையகத் தமிழ் இலக்கியம் எனும் தனி மரபையும் கொண்டுள்ளார்கள் என்பது சிறப்பு. “மலையகத் தமிழ் இலக்கியம் ஈழத்து இலக்கியத்துக்கு புது ரத்தம் பாய்ச்சுகிறது” என பேராசிரியர் க.கைலாசபதி கூறியதாக பலரும் பதிவு செய்யக் கேட்கிறோம்.

“இலங்கையில் தமிழ் என்கிற நதி சிலவேளைகளில் ஒன்றையொன்று சந்திக்கின்ற சில வேளைகளில் சந்திக்காத பல நீரோடைகளின் சங்கமிப்பாக அமைகிறது. இதற்குள் யாழ்ப்பாணம் வருகிறது, மட்டக்களப்பு வருகிறது, வன்னி வருகிறது, கொழும்பு வருகிறது, இஸ்லாமிய வாழ்க்கை வருகிறது, மலையக வாழ்க்கை வருகிறது. இந்த நீரோடைகளின் சலசலப்பான பாய்ச்சல் ஒன்றோடொன்று சேருகின்ற போதுதான், நான் நம்புகிறேன்; ஈழத்து இலக்கியம் என்கிற நதி ஓடும்” என பேராசிரியர் காரத்திகேசு சிவத்தம்பி எனது ‘மல்லியப்புசந்தி’ (கட்டுரையாளர்) கவிதை நூலுக்கு வழங்கிய அறிமுகக் குறிப்பில் குரல் வழியாகவே (இறுவட்டு) பதிவு செய்துள்ளார்.

இதன்படி ஈழத்து மலையகத் தமிழ் இலக்கியப் பிரவாகத்தின் ஒரு நீரோடையான மலையக இலக்கியப் பரப்பில் கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை, இதழியல் என ஒரு நெடுமரபு செழிப்பாக தொடர்ந்து நீடித்துக்கொண்டிருக்கிறது.

  1. மலையகமும் மலையக இலக்கியமும்

‘மலையகம்’, ‘மலையக இலக்கியமாக’ வரும்போது, படைப்பிலக்கியம் சார்ந்தும், ஆய்விலக்கியம் சார்ந்தும் பின்வரும் பகுதியினரையும் ‘மலையகம்’ என்ற தொடருக்குள் உள்ளடக்கிப்பார்க்க வேண்டிய அவசியமும் எழுகிறது.

  • இலங்கை மலையகத்தில் இருந்து இந்தியாவுக்குச் சென்ற பின்னரும் ‘தாயகம் திரும்பியோர்’ என்ற அடையாளத்தோடு வாழும் மலையகத்தமிழர்கள். (தமிழ் நாட்டின் சிலோன்காரர்கள்)
  • மலையகத்தில் இருந்த புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் படைப்பாளிகள். (உதாரணம்: அவுஸ்திரேலியா – மாத்தளை சோமு, இங்கிலாந்து – மு.நித்தியானந்தன்)
  • மலையக வாழ்வு சார்ந்து எழுதும் முஸ்லிம் படைப்பாளிகள்
  • இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசத்தை பூர்விமாகக் கொண்ட தமது படைப்புகளில் மலையக வாழ்வியலைப் பதிவு செய்யும் படைப்பாளிகள் (உதாரணம்: பெனடிக்ட் பாலன், தி.ஞானசேகரன்)

மலையகத் தமிழ் இலக்கியத்துக்கு மலையக மண்ணின் மைந்தர்களும், மண்ணின் மைந்தர் அல்லாதவர்களும் கூட பங்களிப்புச் செய்துள்ளார்கள் என்பதை மலையகத் தமிழ் இலக்கியம் உள்வாங்கிக் கொண்டுள்ளது.

  1. இலங்கை மலையகத் தமிழ்ச் சிறுகதைகள்

4.1)      1930 முதல் 1960 வரை

இலங்கை மலையகச் சிறுகதைகள் பற்றி பேசவந்தவிடத்து மலையக வரலாற்றையும், மலையகத் தமிழர், வரலாற்றையும், மலையகத் தமிழ் இலக்கியம் பற்றியும், ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் அதன் வகிபாகம் பற்றியும் தொட்டுப் பேசி வரவேண்டிய தேவை வெறுமனே எழவில்லை.

இந்தியாவின், தமிழ்நாட்டில் இருந்து பிழைப்புத் தேடி உடல் உழைப்பை வழங்கி வாழவந்த அல்லது ஆசை காட்டி அந்நியர்களால் அழைத்து வரப்பட்ட ஒரு சமூகப்பிரிவினர், இப்போது இலங்கையில் தம்மை ஒரு தேசிய இனமாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிற பின்னணியில் அவர்கள், சொல்வதற்கு எத்தனைக் கதைகள் இருக்கும், இருந்திருக்கும்? என்பதைப் புரிந்து கொள்வதற்கு, அந்த வரலாற்றை மலையகத் தமிழ்ச் சிறுகதை வரலாற்று வழி நின்று நோக்குவதும் அவசியமாகும் என்பதனாலாகும்.

தமிழில் சிறுகதை என்றதும் எப்படி ஒரு சில பெயர்கள் முதலில் மனத்தில் தோன்றுகின்றனவோ, ஈழத்தில் தமிழ்ச் சிறுகதை என்றதும் எப்படி ஒரு சில பெயர்கள் முதலில் மனத்தில் தோன்றுகின்றவோ, அதேபோல மலையகத் தமிழ்ச் சிறுகதைகள் என்றதும் செந்தூரன், என்.எஸ்.எம்.ராமையா, தெளிவத்தை ஜோசப், சாரல்நாடன், மலரன்பன், மு.சிவலிங்கம், மாத்தளை சோமு என்னும் சில பெயர்களே முதலில் மனத்தில் தோன்றும் எனக் குறிப்பிடும் தெளிவத்தை ஜோசப், இந்தப் பெயர்கள் 1960களுக்கு பின் எழுந்த பெயர்கள் என்றாலும், மலையகச் சிறுகதை இலக்கியம் ஓர் உத்வேகத்துடன் 1960 க்குப் பின்னர்தான் எழுந்தாலும் அதற்கான ஒரு தளம் அதற்கு முன்பு இருந்தே சிறுக சிறுக போடப்பட்டே வந்துள்ளது என்பது மனங்கொள்ளத்தக்கது என்றும் குறிக்கின்றார். (மலையக சிறுகதை வரலாறு, துரைவி, 2000, பக்,1.)

“பரந்த அடிப்படையில் நாம் இதை நோக்கினால், தமிழ் நாட்டில் இருந்து எப்போது இந்த மக்கள் இலங்கையில் குடியேறினார்களோ அன்று தொட்டே தமிழ்க் கலை, கலாசாரம், இலக்கியம் ஆகியன இங்கு வளரத் தொடங்கின” என்கின்றார் சி.வி.வேலுப்பிள்ளை (புதுமை இலக்கியம், மாவலி, 1974).

1931க்கு முன்னர் மலையகத்தில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக பணம் வசதி படைத்த ஒரு பிரிவினர் இருந்தனர். பிரித்தானிய தோட்டத் துரைமார்கள் தொழிலாளர்களை வைத்திருந்த தூரத்தில் அல்லாது பெரியாங் கங்காணிகள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக, நகர்ப்பகுதி பாடசாலைகளில் ஆங்கிலம் படிக்கும் வாய்ப்பு பெற்றவர்களாக இவர்கள் இருந்தனர். இவர்களுக்கு ஆங்கில பத்திரிகைகள் மட்டுமல்லாது இந்தியாவில் இருந்து லோகோபகாரி, அமிர்தகுணபோதினி, ஆனந்தபோதினி போன்ற தமிழ் பத்திரிகைகளும் கூட கிடைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அந்த வாய்ப்பைப் பெற்றவர்களாக எழுதத் தொடங்கியவர்களே சி.சுப்பிரமணியம், ஆர்.ராமையா, பெரியாம்பிள்ளை கந்தசாமி போன்றவர்கள் என்றும் பதிவாகிறது. இத்தகைய தகவல்களையும் சி.வி.வேலுப்பிள்ளை தனது ‘புதுமை இலக்கியம்’ கட்டுரையில் பதிவு செய்கிறார்.

சி.சுப்பிரமணியம், சி.வி. வேலுப்பிள்ளையின் தாய்மாமன் என்பது குறிப்பிடத்தக்கது. சி.சுப்பிரமணியம் அவர்களின் தந்தையாரும் சி.வி.வேலுப்பிள்ளையின் தாத்தாவுமான குமரன் மடகொம்பரை தோட்டத்துப் பெரியாங்கங்காணி என்பது தகவல்.

இந்த வரிசையிலேயே பின்னாளில் சி.வி.வேலுப்பிள்ளை, கே.கணேஸ் போன்றவர்கள் எழுத்து உலகிற்கு வருகின்றனர்.

1930ஆம் ஆண்டு கோ.நடேசய்யர் தொழிற்சங்க அரசியல் பண்பாட்டுத் தளத்தை மலையகத்தில் தோற்றுவித்ததோடு பதிப்பக இயக்கத்தைத் தொடங்கியதும், இலங்கையில் வீரகேசரி எனும் தமிழ் தினசரி இந்திய இதழியல் பின்புலங்களோடு ஆரம்பமாவதும், மலையகம் தனக்கான எழுத்து இலக்கிய வடிவத்தை பரவாலாக்கத் தொடங்கிய காலம் எனலாம்.

இந்தியாவில் இருந்து இலங்கை வந்த அனைவருமே தோட்டத் தொழிலாளர்கள் இல்லை. அவர்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்கள் என்பதனால் தனிச் சமூகமாக நிலைத்தனர். ஆரம்பத்தில் ரயில்பாதை அமைப்புக்கும், துறைமுக அமைப்புப் பணிகளுக்கும் என்று கூட உடல் உழைப்பாளர்களாக ஒரு பகுதியினர் இலங்கை வந்தனர். வணிகர்களும் தொழில் முயற்சியாளர்களும் கூட வந்தனர். கொழும்பைத் தளமாகக் (சம்மாங்கோடு) கொண்டு ‘தென் இந்திய வணிகர் சங்கம்’ என்ற ஒன்று அந்த நாளில் செயற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் ‘இந்திய வியாபாரிகள் சங்கத்தின்’ உறுப்பினராக இருந்த பத்திரிகையாளரான கோ.நடேசய்யர் ‘வர்த்தக மித்திரன்’ எனும் தான் பணியாற்றிய சஞ்சிகை சார்பாக இலங்கையில் செயற்பட்ட ‘தென்னிந்திய வியாபாரிகள் சங்கம்’ ஆண்டுவிழாவுக்கு முதலில் (1919) வருகை தந்துள்ளார்.

இரண்டாவது பயணத்தில் (1920 டிசம்பர்) கொழும்பு நகரில் ஏ.இ.குணசிங்க எனும் தொழிற்சங்கவாதியுடன் இணைந்து துறைமுகத்தொழிலாளர்கள் சார்ந்து தொழிற்சங்க பணி செய்யத் தொடங்கியுள்ளார்.  பின்னர் அவருடன் முரண்பட்டு மலைநாட்டுப் பகுதிகளுக்குச் சென்று தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் தமது தொழிற்சங்கப் பணியை (1929) தொடங்கியள்ளார் (தேசபக்தன் கோ.நடேசய்யர், சாரல்நாடன், 2008).

பத்திரிகையாளராக இலங்கை வந்து தொழிற்சங்கவாதியாக பரிணாமம் எடுத்த கோ.நடேசய்யரின் தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் உருவாக்கப்பட்ட தொழிற்சங்க இயக்கம் அந்த மக்கள் சார்ந்து ஒரு வீச்சின் ஆரம்பம் எனலாம். அது இரண்டு வகையில் நிகழ்கிறது.

ஒன்று, அந்தத் தொழிற்சங்க கட்டமைப்பு அரசியல் பரிமாணம் பெறுவது. இரண்டாவது, தொழிற்சங்கம் – அரசியல் சார்ந்த செய்தித் தேவைகளுக்காகத் தொடங்கிய பிரசுர இயக்கம் மலையகத் தமிழ் இலக்கியத்தையும் பதிவு செய்யத் தொடங்குவது. இந்த இடத்தில் நடேசய்யரின்  துணைவியாரும் ஈழத்தின் முதல் பெண் கவிஞருமான மீனாட்சியம்மையின் எழுத்துப் பணிகளும் கூட நினைவு கூரத்தக்கன.

மலையகத்தின் ஹட்டன் நகரில் ‘சகோதரி பிரஸ்’ எனும் அச்சகத்தை தொடங்கிய நடேசய்யர் 1931ஆம் ஆண்டில் ‘தமிழ்நாட்டு வாலிபர்களை உறக்கத்தில் இருந்து தட்டி எழுப்பும் அருமையான நூல்’ எனும் முன்னுரையுடன்  ‘நீ மயங்குவதேன்’ எனும் நூலை வெளியிட்டுள்ளார். இந்த நூலில் இறுதியாக இருப்பது ‘திரு ராமசாமி சேர்வையின் சரிதம்.’ “இந்த சரிதத்தின் முன்னுரையையும் பின்னுரையையும் அகற்றிவிட்டால் ஒரு முழுமைபெற்ற சிறுகதையாகவே திகழ்வதைக் காணலாம்” என்கிறார் தெளிவத்தை ஜோசப் (மலையகச் சிறுகதை வரலாறு, துரைவி, 2000, பக்.17). எனவே, மலையகத்தின் முதலாவது சிறுகதை எனும் இடத்தை ‘ராமசாமி சேர்வையின் சரிதம்’ பெற்றுக்கொள்கிறது. ராமசாமி சேர்வை என்பவர் எவ்வாறு தமிழ்நாட்டில் இருந்து ஏமாற்றப்பட்டு இலங்கைப் பெருந்தோட்டத்தில் கூலியாக்கப்படுகிறார் என்பது சரிதத்தின் கதைச்சுருக்கம்.

தனியே மலையகத்தின் முதலாவது சிறுகதை என மட்டும் அதனை குறிப்பிட்டு விட்டுச் செல்லாமல் ஈழத்து சிறுகதை சூழலோடு ஒப்பிட்டு இன்னும் சில ஆய்வுக்குறிப்புகளையும் பதிவு செய்கிறார்  தெளிவத்தை ஜோசப். தமிழ்நாட்டில் தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளாக அறியப்படும் வ.வே.சு அய்யர், பாரதி, மாதவைய்யா போன்றோரின் கதை வடிவங்களோடு நடேசய்யரின் கதையை ஒப்பீடு செய்கிறார். குறிப்பாக வ.வே.சு. அய்யரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ எனும் கதையோடு ஒப்பிடும்போது கதை வடிவங்களின் படி ‘ராமசாமி சேர்வையின் சரிதம்’ சிறுகதைதான் என உறுதி செய்கிறார். மறுபுறமாக அந்தக் கதை வெளிவந்த  காலத்தில் (1931) ஈழத்தின் தமிழ்ச் சிறுகதை சூழலோடு ஒப்பிட்டு அந்த காலப்பகுதியில் இலங்கைத் தமிழ்ப் பகுதிகளான வடக்கில், யாழ்ப்பாணத்தில்  எழுதிக்கொண்டிருந்த சிறுகதை ஆசிரியர்களான சம்பந்தன், வைத்திலிங்கம், இலங்கையர்கோன் ஆகியோருடன் ஒப்பிட்டு, ஈழத்தின் சிறுகதை முன்னோடிகளில் ஒருவராகவும் கோ.நடேசய்யரை முன்னிறுத்துகிறார்.

‘இந்தியாவில் தமிழச் சிறுகதைகளின் முன்னோடிகள் மூவர் என்பதற்காக இலங்கையிலும் அது மூவராகவே இருக்க வேண்டும் என்பதில்லை. அது நால்வராகவும் இருக்கலாம், நடேசய்யரையும் சேர்த்து’ என தெளிவத்தை ஜோசப் முன்வைக்கும் வாதம் சுவாரஷ்யமானது.

ஆக, மலையக சிறுகதைகளின் தொடக்கம் என்பது வடிவத்தில் தமிழ் நாட்டில் நிலவிய தமிழ் சிறுகதை வடிவத்தினையும், இலங்கையின் ஏனைய பகுதிகளில் எழுதியவர்களோடும் இணைந்தே ஆரம்பம் கொண்டது என்ற அடிப்படையிலும்,  தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் மலையகத் தமிழ்ச் சிறுகதைத் துறையானது தன்னை அதன் வரலாற்றுத் தடத்திலேயே இணைத்துக் கொண்டுள்ளமை உறுதியாகிறது.

இந்த கட்டத்தில் இன்னுமொரு விடயத்தையும் நினைவு கூர்ந்து செல்வது மிகப்பொருத்தமானது. மலையகத் தமிழர்கள் இந்திய வம்சாவளியினர் என்ற அடிப்படையில் தமிழ்நாட்டு நிலை நின்றும் இந்த மக்கள் குறித்து எழுதப்பட்ட இலக்கியப் படைப்புகள் என்ற ஒரு வகை உண்டு.

மலையகக் கவிதை வரலாற்றில் இணைத்துப்பார்க்கக் கூடிய பக்கங்களாக, சங்கீதச் சரபம் சபாபதி முதலியார் தொகுத்த திரிசிரபுரம் ஜனாப்பாபுலவர், செந்தமிழ் சேகர யாஸீன்தாஸ் புலவர் இயற்றிய ‘தேசமக்களை நாசப்படுத்தும் தேயிலைத் தோட்டப்பாட்டு’ (கண்டி சிலோன் காப்பித்தோட்டப்பாட்டு ) எனும் குஜிலிப் பாட்டுப்புத்தகங்களை (2017) (இந்த உரை நிகழ்வுக்கு தலைமை தாங்கும்) பேராசிரியர் பா. ஆனந்தகுமார் (காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம்) ஆய்வில்  பதிவு செய்திருப்பதைப்போல, சிறுகதை குறித்தும் ஒரு பதிவு இருக்கிறது.

நவீன தமிழ்ச் சிறுகதைகளின் பிதாமகன் என அறியப்படும் புதுமைப்பித்தனும் மலையக வாழ்வியலோடு இணைந்த சிறுகதை ஒன்றை எழுதி உள்ளார் என்பதுதான் அந்த தகவல். திருநெல்வேலி மாவட்ட கிராமம் ஒன்றில் இருந்து இலங்கைத் தேயிலைத் தோட்டத்திற்கு சென்று கடும் இன்னல்களுக்கு உள்ளான ‘மருதி’ என்ற பெண்ணின் சோக வாழ்க்கை சித்திரிக்கும் கதையாகவே புதுமைப்பித்தனின் ‘துன்பக்கேணி’அமைகிறது. இந்தப் பதிவு மலையகத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றுக்கு வலுசேர்க்கும் முக்கிய அம்சமாகிறது.

எனவே, மலையகத் தமிழ்ச் சிறுகதைகள், தமிழ்ச் சிறுகதை மரபோடும் ஈழத்துத் தமிழ்ச் வரலாற்றோடும் பின்னிப்பிணைந்ததாகவே வளர்ந்துவந்துள்ள ஒரு இலக்கிய செல்நெறி ஆகும்.

மலையகத் தமிழ் நாவல் இலக்கியம் எழுதத் தொடங்கப்பட்ட காலமாகவும் இதனையே கொள்ளலாம். எனவே, தமிழ்ப் புனைகதை வரலாற்றிலும் இலங்கை மலையகத் தமிழ் புனைகதை வரலாறு இணைத்துப் பார்க்கப்பட வேண்டியதாகிறது. 1930களில் தொடங்கப்பட்ட வீரகேசரியின் ஸ்தாபக ஆசிரியரான எச்.நெல்லையா பின்னாளில் தான் எழுதிய குறுநாவல் ஒன்றை ‘ஒரு சிறுகதை’ எழுதி உள்ளேன் என்றே குறிப்பிட்டு உள்ளார்.

மலையக சிறுகதை வடிவங்களில் இத்தகைய குறுநாவல் அளவுக்கு நீண்ட கதைகளும், ஒரு சம்பவத்தை மட்டும் வைத்து எழுதப்படும் விபரிப்புகளும் (Anecdotes) கூட, ‘சிறுகதை’ என்ற கோதாவுக்குள் வந்து விடுகின்றன. சி.வி.வேலுப்பிள்ளையின் Born to Labour என  ஆங்கிலத்தில் வெளிவந்த ‘உழைக்கப் பிறந்தவர்கள்’ எனும் கதை  இந்த Anecdotes வடிவத்துக்கு சிறந்த உதாரணம் ஆகும். பின்னாளில் மு.சிவலிங்கம் இந்தத் தொகுதியைத் தேயிலைத் தேசம் (துரைவி பதிப்பகம், 2003) எனும் தலைப்பில் மொழி பெயர்த்துள்ளார். கே.கோவிந்தராஜ் ‘தோட்டத்துக் கதாநாயகர்கள்’ (துரைவி பதிப்பகம், 2003) எனும் தொகுதியை Anecdotes வடிவத்தில் படைத்துள்ளார்.

ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல பெரிய வீட்டுப்பிள்ளைகளாக கே.கணேஷ், சி.வி வேலுப்பிள்ளை ஆகியோர் கவிதைகள் ஊடாக எழுத்துப்பிரவேசம் செய்தவர்கள். இவர்கள் இருவரும் ஆங்கிலப்புலமை கொண்டவர்களாக உள்ளே வந்தபோது இரண்டு நிகழ்வுகள் நடந்தன எனலாம்.

ஒன்று, கே.கணேஷ் ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்ப்பு செய்து தமிழுக்கு பல நூல்களைக் கொண்டுவந்து அறிமுகம் செய்தார். இரண்டு, சி.வி.வேலுப்பிள்ளை ஆங்கிலத்திலேயே நேரடியாக எழுதி மலையக இலக்கியத்தை வேறு தளங்களுக்குக் கொண்டு சென்றார். இந்த இருவருமே எண்ணிக்கையில் அதிகமாக அல்லாதபோதும் மலையக சிறுகதைகளையும் எழுதியுள்ளார்கள் என்பது சிறப்பு. சி.வி.வேலுப்பிள்ளையின் ‘உழைக்கப்பிறந்தவர்கள்’ தொகுதிக்கு அப்பால் சென்று அவரது ‘கதை’ எனும் இலக்கிய இதழும், அவரால் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதப்பட்ட மலையக வாழ்வியல் நாவல்களும் கவிதைகளும் விரிவாக பேசுபொருளுக்கு உள்ளாகுபவை.

கே.கணேசின் ‘சத்திய போதிமரம்’ எனும் சிறுகதை (1936) தவிர்த்து முல்கராஜ் ஆனந்த், கே.ஏ.அப்பாஸ், பிரேம்சந்த், ஹோசிமின், லூசுன், பார்பரா, குப்ரியானவ் என்று விரிந்த அவரது மொழி பெயர்ப்பு பணிகளே தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன எனலாம்.

கே.கணேஷ், சி.வி. வேலுப்பிள்ளை ஆகிய இருவருமே இலங்கையில் பிரித்தானியர் ஆட்சி காலத்தையும், இலங்கை சுதந்திரமடைந்த காலத்தையும் ஊடறுத்து வந்த இலக்கியகர்த்தாக்கள் என்பதும் உலக இலக்கியத்துக்கும் மலையகத் தமிழ் இலக்கியத்துக்கும் மொழிவழி நின்று பாலம்  அமைத்தவர்கள் என்பதும் முக்கியமானது.