AP Photo, Human Rights Watch
தேச – அரச (nation-state) அரசியல் கட்டமைப்பு 18ஆம் நூற்றாண்டிற்குரியது. இக்கட்டமைப்பில் தேசியவாத கருத்தியலின் அரசியல் வகிபங்கு மிகக் காத்திரமானது. இக்கட்டமைப்பில் எல்லை நிர்ணயம், பண்பாட்டு விழுமியக்கூறுகள், குறிப்பாக ஒரு அரசிற்குரிய உறுப்பினர்கள் தங்களை ஒரு குழுமத்தோடு, அக்குழுமத்தின் பகிரப்பட்ட வரலாற்று மரபுடனும், பண்பாட்டுடனும், கூட்டு விதியுடனும், அடையாளப்படுத்துகின்ற மரபு உருவானது எனக் கூறலாம் (ஜெல்னர் 1983. அன்டர்சன் (1983). ஒரு சில ஆய்வாளர்கள் தேச – அரச கட்டமைப்புக்களின் எழுச்சியே பின்னாளில் இனங்களுக்கிடையேயான பிரச்சினைகளுக்கும், குழுமங்களுக்கிடையேயான ஏகாதிபத்தியப் போட்டிக்கும் வழிகோலியதாகக் குறிப்பிடுகின்றார் (பொனிகவுஸ்கி 2015). இது முதலாவது தேச – அரச கட்டமைப்பின் முதற்கட்டமாகும். இதனுடைய இரண்டாவது கட்டம் உலகப்போரின் பின்னரும், கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிச ஆட்சியின் பின்னரும் எழுந்ததாக குறிப்பிடப்படுகின்றது. இந்த இரண்டாவது கட்டத்தில் கருத்தியல் கட்டமைப்பு முடிவுகளை எட்டுவது தொடர்பில் சிக்கல் இருந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது (அதே கட்டுரை).
புரூபக்கரின் (1996) ஆய்வின் படி, மூன்று விதமான தேசியவாத கருத்தியல் எழுச்சியைக் குறிப்பிடுகின்றார். முதலாவது, புதிய இறைமைக்குள் ‘தேசியவாதத்தை தேசிய மயப்படுத்தல்’, இரண்டாவது, சிறுபான்மை இனங்களின் ‘சிறுபான்மைத் தேசியவாதம்’, மூன்றாவதாக ‘தாய்நாட்டு தேசியவாதம்.’ இம் மூன்று வகையான தேசியவாத எழுச்சிகளுக்கும் இடையேயான உள்வினை நாளடைவில் அரசினால் கட்டமைக்கப்பட்ட சமூக விலக்கிற்கும், சிறுபான்மை – பெரும்பான்மை பிரச்சினைகளுக்கும் அரசிற்கெதிரான வன்முறைக்கும் இட்டுச் சென்றது. மூன்றாவது கட்டமாக தீவிரவாத தேசியவாத இயக்கங்களின் எழுச்சியை அவதானிக்கின்ற போது, தேச – அரச கட்டமைப்பை மீள் கட்டமைப்புச் செய்வதற்குப் பதிலாக, அவை வலுவுள்ள இனக்குழுமங்களைச் சேர்ந்த இயக்கங்களை அணி திரட்டி மாற்றத்திற்கெதிராக எதிர்ப்பியக்கத்தை கட்டமைத்தது (பொனிகவுஸ்கி 2015). இவ்வாறான இயக்கங்கள் சிறுபான்மைக் குழுக்களுக்கெதிரான, சுதேசிகளுக்கெதிரான நிலைப்பாட்டை இன, மத அடிப்படைவாதத்தில் முதலீடு செய்வதனூடாக வளர்த்தெடுத்தன.
ஜனநாயக தேச – அரச கட்டமைப்பில் சட்டபூர்வ அதிகாரம் மக்களால் விரும்பப்பட்ட, தேர்ந்தெடுக்கப்பட்ட படிமுறைக்கூடாக வழங்கப்படுகின்றது. அதாவது பெரும்பான்மையினரின் தெரிவிற்கமைய, தேச – அரச கட்டமைப்பிற்கூடாக ‘பெரும்பான்மை’ கட்டமைக்கப்படுகின்றது. இவ்வாறான பெரும்பான்மை மூலம் பொது அடையாளம் கட்டமைக்கப்படுகின்றது. அப்பொது அடையாளம் வரலாற்றுப் புனைவுகளுக்கூடாக ஆரம்பமாகி, பகிரப்பட்ட அனுபவ நினைவுத்திறத்திற்கூடாக கடத்தப்படுகின்றது. இவ்வாறான சூழலில் யார், யார் தேச – அரசிற்குரியவர்களாக உள்வாங்கப்பட வேண்டும். யார், யார் உள்வாங்கப்படக்கூடாது அல்லது தேச – அரச கட்டமைப்பு எவ்வாறான உத்திகள் மூலம் சிறுபான்மைக் குழுக்களை பெரும்பான்மைப் பண்பாட்டிற்குள் உள்வாங்குகின்றது போன்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. மேற்கூறப்பட்ட பொறிமுறை அத்தேச – அரச கட்டமைப்பின் சமூக – அரசியல் அக, புற நிலைகளில் தங்கியிருக்கின்றது.
ஆதிகாலவாதத்தை (Primodialism) மையப்படுத்தி அகவயப்படுத்தலை உற்று நோக்குபவர்கள், மக்களுடைய அடையாளம் மாறுபடுவதில்லை, இன அடையாளம் என்பது நிரந்தரமானது, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டது எனக் கருதுகின்றனர். இவர்களின் கருத்துப்படி தேச – அரச கட்டமைப்பு இன அடையாள மூலத்தை தவிர்த்து கட்டமைக்கப்படுவதற்கு வாய்ப்புக்கள் குறைவென்றும், இன அடையாள மூலக்கூறுகளின் அடிப்படையில் எழுகின்ற அடையாளக் கட்டமைப்பாக மாற்றம் பெறுவதாகக் குறிப்பிடுகின்றனர். இவர்களுடைய வாதத்தில் அடிப்படையாக இருப்பது ஆதிகால இன அடையாளக் கூறுகளை மக்கள் இழப்பதற்கு தயாராயில்லை என்பதும், இரண்டாவதாக இனத்தூய்மையை மக்கள் பேணுவதற்கு விரும்புகின்றார்கள் என்பதுமாகும் (H. Mylonas 2013). இதனடிப்படையில் இவ் இன மூலக்கூறுகளை கொண்டிராத ஏனைய இனக்குழுமங்களை, பலமுள்ள/ பெரும்பான்மை இனக்குழுமம் விலக்குவதற்கு அல்லது தவிர்ப்பதற்கு முனையும் இல்லாவிட்டால் தன்னுள் உள்ளீர்ப்பதற்கு, தன்வயப்படுத்துவதற்கு முயலும். வலுவான பெரும்பான்மை தனது இன மூலக்கூறுகளை உறுதிப்படுத்தும் போது சிறுபான்மையினரது இன மூலக்கூறுகள் வலுவற்றுப் போவதற்குரிய செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது. இவ்வாறு இன மூலக்கூற்றுச் சச்சரவில் வலுவான பெரும்பான்மைச் சமூகம், சிறுபான்மைச் சமூகத்தை ‘மற்றமையாக’ (‘the other’) கட்டமைக்கின்றது. மற்றமையாக கட்டமைப்பதன் மூலம் அவ்வினக் குழுமத்தை வேறுபடுத்தி விலக்கி வைக்கின்றது. இதனால் ஹரோவிற்ஸ் (1985) குறிப்பிடுகின்ற ‘இன விரோதப் போக்கு’ (ethnic autipathy) உருவாக்கப்படுகின்றது. மேற்கூறப்பட்ட இன விரோதப் போக்கு இலங்கையைப் பொறுத்தவரையில் மதம், மொழி இனம் சார்ந்து நீடிக்கின்றது.
தேச – அரச சமூக – அரசியல் சொல்லாடல்களினால் கட்டமைக்கப்படுகின்ற மொழி, ஒன்றையொன்று எதிர்க்கின்ற இருமைக் (oppositional binary) கட்டமைப்பு எல்லையைக் கட்டமைக்கின்றது. ஏனைய இனக்குழுமங்கள் தொடர்பான முன்கற்பிதங்களை உருவமைத்து, பாகுபாடுகளை வளர்த்து, ஒரு இனக்குழுமத்தை இன்னொரு இனக்குழுமத்தின் அதன் அடையாளத்தின், இருப்பிற்கெதிரான எதிரியாக, அச்சுறுத்தலாக, மற்றமையாக கட்டமைக்கின்றது. இதனால் வெற்றி பெறுதல் என்பது முக்கியத்துவப்படுத்தப்பட்டு (பொனிகவுஸ்கி 2015) ஏகாதிபத்திய, மேலாண்மை, காலனித்துவத் தன்மை ஏற்படுத்தப்பட்டு ஏற்றத்தாழ்வுகள் இன்றியமையாக்கப்படுகின்ற பொழுது பிளவுகள், துருவமயப்படுத்தல்கள் சமூக கட்டமைப்பாக வலிந்து கட்டமைக்கப்படுகிறது. இது மேற்கத்தைய பண்பாட்டு முறைமையும் கூட. இப்பண்பாட்டு முறைமை காலனித்துவத்திற்குள் உள்வாங்கப்பட்டது. காலனித்துவம், காலனித்துவ காலத்தின் பின்னர், தெற்காசிய நாடுகளில் அகவயப்படுத்தப்பட்ட ‘காலனித்துவத்தன்மை’ அதிகார செயல்வகைத் தன்மையூடு (modus operandi) இன்னும் இயங்கு நிலையில் உள்ளது.
பல ஆய்வாளர்களின் கருத்துப்படி, நவீன அரசுகளின் எழுச்சி, நவீனத்துவம், ஜனநாயகமயப்படுத்தல் போன்றன ஒரு குறிப்பிட்ட இனக்குழுமத்திற்கெதிராக வன்முறை கொள்கைகளை உருவாக்குவதற்கான காரணங்களையும் நோக்கத்தையும் கொடுத்துள்ளது. (modus operandi)ன் கருத்துப்படி ஒதுக்கி வைக்கும் (ஒரு குழுமத்தை) கொள்கைகள் தற்போதைய ஜனநாயகத்தினுடைய இயல்பிலிருந்த உருவாவதாகவும் அவ்வாறான கட்டமைப்பு ‘மக்கள்’ (demos) என்ற பதத்தையும் ‘இனம்’ (ethnos) என்ற பதத்தையும் ஒரு தளத்தில் வைத்துப் பயன்படுத்துவதாகக் குறிப்பிடுகின்றார். ருவாண்டாவில் இடம்பெற்ற இனப்படுகொலை மிகச் சிறந்த உதாரணம். ‘மக்கள்’ ‘இனமாக’ மாற்றப்படுகின்ற சந்தர்ப்பத்தில், சிறு பான்மையினருக்கு பூர்வீக நிலம் இல்லாதவிடத்து அக்குழுமம் வலுவுள்ள பெரும்பாமையினரின் ‘தன்மயப்படுத்தும்’ செயற்திட்டத்தின் இலக்காக மாற்றப்படுகின்றார்கள் (புருபக்கர் 1986). தன்மயப்படுத்தும் அரசியற் செயற்திட்டம் இலக்கை அடையாத போது, இனச் சுத்திகரிப்பு, இனப்படுகொலை இலகுவான தெரிவுகளாக அரசிற்கு முன்வைக்கப்படுகின்றது அல்லது அரசு முன்வைக்கின்றது.
ஒரு இனக்குழுமத்தினுடைய பூர்வீக அடையாளத்தை இல்லாமல் செய்தல் என்னும் அரசியல் செயன்முறை பெரும்பான்மையினரால் ஜனநாயகமுறை மூலம் தெரிந்தெடுக்கப்பட்ட குழு மூலம், தேசத்தைக் கட்டியெழுப்புதல் என்ற போர்வையில் முன்னெடுக்கப்படுகின்றது. தேசத்தை கட்டியெழுப்புவதற்காக கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன. எச்.மைலோன் (2013) பின்வரும் மூன்று தந்திரோபாயங்களுக்கூடான தேசத்தை கட்டியெழுப்புதல் கொள்கைகள் பெரும்பான்மையினரல்லாத ஏனையவரை பொதுத் தேசிய அடையாளத்திற்குள் உள்வாங்குகின்றது. தன்வயப்படுத்தல் (assimilation), இசைவுபடுத்தல் அல்லது ஒத்துப் போகச் செய்தல் (accommodation), மூன்றாவது நீக்கி வைத்தல் அல்லது ஒதுக்கி வைத்தல் (exclusion).
தன்வயப்படுத்தலின் கீழ், தேசத்தை கட்டியெழுப்புவதை மையமாகக் கொண்டு கொள்கைகளை நிரல்படுத்துகின்ற போது, பெரும்பான்மை சாராத ஏனைய குழுமங்களுக்கு பெரும்பான்மையினரின் அடையாளத்தை சிறுபான்மையினர் தமதாக்க வேண்டியதன் அவசியத்தை, பின்வரும் பொறிமுறைகளுக்கூடாக அறிமுகம் செய்யலாம், கல்விமுறைமைக் கூடாக, பெரும்பான்மைப் பண்பாட்டை ஊக்குவித்து, விருத்தி செய்வதனூடாக, பெரும்பான்மை மதத்தை, மொழியை முன்னுரிமைப்படுத்தி ஏனையதை முக்கியத்துவமற்றதாக்கி அடையாள அழிப்பு செய்வதனூடு. ஏற்கனவே தெரிந்தது மாதிரி, பாடசாலை வரலாற்று நூல்களில் பெரும்பான்மை வரலாறு மட்டும் வழங்கப்படுத்தல், 2009ன் பின்னர் சிங்கள – தமிழ் கலப்புத் திருமணங்கள் ஊக்குவிப்பட்டது. இவையும் இந்நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியே, பெரும்பான்மையினரின் பண்பாட்டுக் கூறுகள் உணவு, உடை, கலை இன்னும் பிற நாசூக்காக அறிமுகப்படுத்தப்படுகின்றமை. இவை தேசிய ஒருங்கிணைக்கப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது. இவை இலங்கையில் பெரும்பான்மையினரல்லாத ஏனைய இனக்குழுமங்களை இலக்கு வைத்தே மேற்கொள்ளப்படுகின்றது. வன் அணுகுமுறைக்குட்பட்டு மேற்கூறப்பட்டவை முன்னெடுக்கப்படுகின்ற போது காலனித்துவமாக மாறுகின்றது. சிங்கள – பௌத்த மயமாக்கல் என்பது நவீன காலனித்துவம். பெரும்பான்மையினத்தை சேர்ந்தவரல்லாத மேட்டுக்குடி வர்க்கத்தை நேரடியாக இல்லாவிட்டாலும் வலிந்து வெளியகற்றுதலும் (எச்.மைலோனாஸ் 2015), இல்லாவிடில் மௌனிக்கச் செய்வதும் ஒரே இலக்கை அடைவதற்கான உத்திகளே. ஒட்டுமொத்தத்தில் பெரும்பான்மையினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைத் தெரிவாக இலங்கையில், பெரும்பான்மையினரல்லாத இனக்குழுமங்களின் நம்பிக்கைக் கோட்பாட்டை வெற்றிக்கொண்டு, அவர்கள் விரும்பும் தேசத்திற்கான கீழ்ப்படிவுள்ள விசுவாசிகளை உருவாக்குவதாகும். அதனூடாக எசமானத்துவத்தைக் கட்டமைப்பது.
இசைவுபடுத்தல் அல்லது ஒத்துப்போகச் செய்தல் இன்னொரு உத்தியாகக் கையாளப்படுகின்றது. இதன் கீழ் வித்தியாசங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அரசு ‘சிறுபான்மை’ என்ற சமூக தகுநிலையை வழங்குகின்றது. இந்த சமூகத் தகுநிலை (status) அச்சமூகம் மத்திய அரசிற்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்ற அரசியல் எதிர்பார்ப்பை நேர்மறையாகத் திணிக்கின்றது. அவ் விசுவாசத்தின் அடிப்படையில் தான் அபிவிருத்திச் செயற்பாட்டு நிகழ்ச்சிகளை உற்றுநோக்க வேண்டும். அபிவிருத்திச் செயற்திட்டங்கள் குறிப்பாக வடக்கு – கிழக்கில் மேற்கொள்ளப்படுபவை, அவற்றிற்குரிய அரசியல் உள்நோக்கத்தோடு குறிப்பாக, பெரும்பான்மையினரல்லாத ஏனையோரை இசைவுபடுத்தி ஒத்துப்போகச் செய்வதனூடாக தேசிய மயமாக்கலுக்குள் இழுத்துச் செல்வதாகும். ஜனநாயகத்தை இன்னொரு உத்தியாக பெரும்பாலான நாடுகள், தேசிய மயமாக்கலுக்குப் பயன்படுத்துகின்றன. தாராளவாத ஜனநாயகம், தாராளவாத பொருளாதாரக் கொள்கையை ஊக்குவிக்கின்றது. இது முதலாளித்துவத்தின் இன்னொரு வடிவம், ஜனநாயக பண்புகளை ஒரு நாகரிகமாக அறிமுகம் செய்வதனூடு அந்நாகரிக முறைமையை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நவீனத்துவம் அற்ற சமூகமாக பிரதிபலித்து ஒத்திசைவுபடுத்தல் மேற்கொள்ளப்படுகின்றது. நுண்கடன், பாரிய கடன் வழங்கலுக்குப் பின்னான உள்நோக்கத்தை உற்றுப்பார்க்கின்ற போது முதலாளித்துவத்தின் திணிப்பையும், முதலாளித்துவம் அறிமுகப்படுத்தும் பணக்கார, ஏழை ஏற்றத்தாழ்வையும் அவ் ஏற்றத்தாழ்விற்கூடாக பிரபுத்துவத்தன்மை, எசமானத்துவத்தன்மை மீட்பர் மனப்பாங்கு போன்றவற்றையும் அவதானிக்க வேண்டிய கடப்பாடு எழுகின்றது. முதலாளித்துவப் பொருளாதாரம் வடக்கு – கிழக்கில் ஆரம்பத்தில் இருந்த தன்னிறைவுப் பொருளாதாரக் கோட்பாடுகளுக்கு எதிரானது அல்லது முற்றிலும் மாறுபட்டது எனக் கூறலாம்.
நீக்கி வைத்தல் அல்லது ஒதுக்கி வைத்தல் உத்தியூடான தன்வயப்படுத்தலுக்கு மிகச் சிறந்த உதாரணமாக தென்னாபிரிக்க (நிற) இனவெறிக் கொள்கையைக் குறிப்பிடலாம். இக்கட்டத்தில் அரசு வன்முறையை பிரயோகிக்கும். மேற்குறிப்பிட்ட தன்வயப்படுத்தல் கொள்கைகளை ஒரு தேச – அரசு உள்நாட்டுக்குள் எவ்வாறு பயன்படுத்துகின்றது என்பதையே பார்த்தோம்.
எழில் ராஜன்