11.04.2021, மட்டக்களப்பு சீயோன் தேவாலயம்.

எச்சரிக்கை குரல்களுடன் வோர்க்கி டோக்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. பாதுகாப்பு வழங்குபவர்கள் அணியும் சீருடை, பரிச்சயம் இல்லாத – புதிய முகங்கள் வருகின்றனவா என்று கண்கள் தேடுகின்றன. தேவாலயத்தில் இருந்து கிட்டத்தட்ட 500 மீற்றர்கள் தொலைவு வரை இடைவெளி விட்டு நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். புதியவர்கள் நிறுத்தப்பட்டு தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன. தீவிர பரிசோதனைக்கு அவர்கள் உட்படுத்தப்படுகிறார்கள்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் சீயோன் தேவாலயத்தில் பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்டுள்ள 21 பேர் கொண்ட பாதுகாப்புப் பிரிவே இது. இதில் வேழ் அரசரெட்னமும் இணைந்து கடமையாற்றிவருகிறார். ஒவ்வொரு ஞாயிறன்றும் இடம்பெறும் விசேட பூசையின் போது விசேட பாதுகாப்பு நடவடிக்கையில் இந்தக் குழு ஈடுபட்டுவருகிறது.

கூடைப்பந்து விளையாட்டு வீரரான வேழ் அரசரெட்னத்தின் 13 வயதான ஒரே மகனும் சீயோன் தேவாலய தாக்குதலில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். 2 வருடங்களாக தன்னுடைய மகன் பயன்படுத்திய சைக்கிள், புத்தகங்கள், கூடைப்பந்து, உடைகள் என அவருடைய நினைவுகளோடு வேழ் நாட்களைக் கடத்திவருகிறார்.

“என்னுடைய உணர்வை, அன்பை வெளிக்காட்டுவதற்கு வேறொரு பிள்ளை இருக்கவில்லை. இவர் மட்டும்தான் இருந்தார். என்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும் அவர்தான் என்று இருந்தேன். இப்போது அவர் இல்லாமல் – அடுத்த நிலை என்ன என்று தெரியாமல் – என்னுடைய வாழ்க்கை பூச்சிய நிலையில் இருக்கிறது” என்கிறார் வேழ். துக்கம் அவரது தொண்டையை அடைத்தது, சுதாகரித்துக்கொண்டே தொடர்ந்தும் என்னிடம் பேசினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றோடு 2 வருடங்களாகின்றன. மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 31 பேர் பலியானார்கள். இதில் 14 சிறுவர்கள் உள்ளடங்குகிறார்கள்.

வேழ் அரசரெட்னம் மற்றும் 2 பேரப்பிள்ளைகளை இழந்த ஜீவானந்தம் விஜயலட்சுமியின் வலியுணர்வடங்கிய ஆவணப் படத்தை கீழே காணலாம்.