பின்முள்ளிவாய்க்கால் அரசியல் தலைமைத்துவ வெற்றிடம் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களினால் ஓரளவிற்கு நிவர்த்தி செய்யப்பட்டது என்று கூறினால் மிகையாகாது. வேற்றுமைகளை அல்லது வேறுபாடுகளை கடந்து ஈழத்தமிழினத்தை விடுதலை மையப்புள்ளியில் ஒருங்கிணைக்கக் கூடிய தலைமைத்துவத்தை மறைந்த ஆயர் கொண்டிருந்தார். ஆயரை வெறுமனே சமயத்தலைவராக மட்டும் பிரதிபலிக்க முற்படுவது அவரது தமிழினத்துக்கான தூர தரிசனத்தை சமய வில்லைகளுக்கூடாக மட்டும் பார்ப்பதான வரையறைகளைக் கொண்டிருக்கின்றது. தமிழ்த்தேசியம் ஒருபோதும் மதவரையறைகளுக்குட்பட்டது அல்ல, மத வரையறைகளைக் கடந்து ஈழத்தழிழினத்தை, ‘ஈழத்தமிழ்த்தன்மையின் அடிப்படையில் அடக்முறைக்கெதிராக அணிதிரட்டுகின்ற இயங்கு சக்தியாக இருக்கின்றது.
ஆயரின் சர்ச்சைத் தன்மை
எல்சல்வடோரில் பேராயர் ஒஸ்கார் றொமேரோ பற்றிய பொதுச் சொல்லாடல் அவருடைய திருப்புமுனையிலிருந்து, அரசியல் தலைமைத்துவத்தைக் கொடுக்க முனைந்ததிலிருந்து, முற்போக்கான பேராயராக பிரதிபலிக்கப்படுகின்றார். எல்கல்வடோர் விவசாயிகளை, அடித்தட்டு மக்களை பொறுத்தவரையல் பேராயர் வேறும் மதத் தலைவரல்ல, மதங்களைக் கடந்து, அடக்குமுறைக்குட்பட்ட மக்களை விடுதலையை நோக்கி அணிதிரட்டிய ஒரு தலைவராக நோக்கப்படுகின்றார். மறைந்த முன்னாள் ஆயரின் சர்ச்சைத் தன்மை பற்றிய கட்டமைப்பு பற்றி சுருக்கமாக நோக்கினால் ஆயரும் அவருக்குரிய பேசுபொருளும் சர்ச்சைக்குரியவைகள் அல்ல. ஆனால், அவை சர்ச்சைக்குரியவைகளாக கட்டமைக்கப்பட்டன. எல்கல்வடோரைப் பொறுத்தவரையில் அரச அடக்குமுறைக்கு எதிராகப் போராடுகின்ற குருக்களை அந்த அரசு சர்ச்சைக்குரியவர்களாக சித்தரிக்க முயன்றது. ஆனால், இது சர்ச்சைக்குரிய குருக்கள் பற்றியது அல்ல. அடக்குமுறையும் அதற்கேற்றதான எதிர்ப்பும், மக்களின் அரசியல் அணிதிரட்டலும் தொடர்பானது. அரச அடக்குமுறை இருக்கும் வரை அடக்குமுறைக்கு எதிரான விடுதலை வேட்கை இருந்துகொண்டே இருக்கப்போகின்றது. அரசின் அடக்குமுறையை சவாலுக்குட்படுத்தி நீதியை நிலைநாட்டுவதற்குப் பதிலாக தனது குற்றத்தை அரசு இடம்பெயர்த்தி சர்ச்சைக்குரியவர்களாக சித்தரிப்பவர்கள் மீது பழியைச் சுமத்துகின்றது. ஆயர் இராயப்பு ஜோசப்பின் கூற்றுக்களில் சர்ச்சைக்குரியவைகள் என்று எதுவும் இல்லை. அரச அடக்குமுறைக்கெதிராக மக்களை அணிதிரட்டுவது சர்ச்சையல்ல, அரச அடக்குமுறை அசாதாரணமானது. அடக்குமுறைக்கெதிரான எதிர்ப்பு சாதாரணமானது. இதில் சர்ச்சை எனப்படுவது அசாதாரணமான அரச ஒடுக்குமறையே தவிர அடக்குமுறைக்கெதிரான எதிர்ப்பு அணிதிரட்டல் அல்ல. அரசு தன்னுடைய அடக்குமுறையை நியாயப்படுத்துவதற்காக சர்ச்சைக்குரிய பலிக்கடாக்களை கட்டமைக்கின்றது. இவ்வாறான பலிக்கடா கட்டமைப்பு ஒரு சமூக – அரசியல் கட்டமைப்பு. ஸ்ரீலங்கா அரசு இவ்வாறான கட்டமைப்பை வெற்றிகரமானதாக முன்னெடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் கருவியாக அமைவது சிங்கள பௌத்த இருப்பிற்கெதிரான அச்சுறத்தல். அவ்வாறான ஒரு அச்சுறுத்தலாகத்தான் ஆயரை சிங்கள – பௌத்த ஊடகங்களின் துணையோடு அரச இயந்திரம் ஆயருக்கெதிரான பரப்புரையை தென்னிலங்கையில் முன்னெடுத்தது. அதன் விளைவாக ஆயரை சிங்கள பௌத்த இருப்பிற்கெதிரானவராக கட்டமைத்தது. ஒரு இனம் அரச அடக்குமுறையால் பாதிக்கப்படுகின்றது, அதற்கெதிராக குரல் கொடுப்பது என்பது பொது அறம் சார்ந்தது, சர்ச்சைக்குரியது அல்ல.
ஆயரின் தமிழினத்திற்கான கூட்டுரிமைக் கோரிக்கை
ஆயர் தனது பொதுப்பணியை அரசு அடக்குமுறை சமூக – அரசியல் சூழ்நிலையில் தான் ஆரம்பிக்கின்றார். அவருடைய பட்டறிவும், அவர் சார்ந்த இனத்தின் கட்டமைப்பும் வெவ்வேறாக இருந்தில்லை. அடக்குமுறைக்குட்பட்ட மக்களின் அடக்குமுறைக்கெதிரான பயணத்தில் அவர் தன்னை ஒருபோதும் அந்நியப்படுத்தியதில்லை. ஒரு இனத்தின் உரிமை மீறப்படுகின்றது, மறுக்கப்படுகின்றது என்பதை தனிநபர் சார் உரிமை மீறல் சொல்லாடல் வில்லைகளுக்குட்பட்டு பார்க்க முனைவது உண்மையை மறைத்தலும், மறுத்தலும் ஆகும். தனிநபரின் உரிமை மறுப்பும், மீறலும் தனி நபர் என்பதற்காக செய்யப்பட்டது அல்ல, தனிநபர் ஒரு இனக்குழும அடையாளத்தைக் கொண்டவர் என்பதால், இனக்குழும அடையாளத்தைக்கொண்டு கட்டமைக்கப்படுகின்ற இனப்பாகுபாடு ஏலவே திட்டமிடப்பட்டு வினைத்திறனோடு செயன்முறைப்படுத்தப்படுவது. அரச அடக்குமுறைக்கெதிரான ஆயரின் தமிழின கூட்டுரிமைக்கோரிக்கையை இனத்தின் சார்பாக அவர் முன்வைத்தது வரலாற்றுக்கு முரணானது அல்ல. அந்தக் கூட்டுரிமைக்கோரிக்கை அரசியல் தீர்வு தொடர்பிலும் சரி தமிழின படுகொலைக்கான நீதி கோருவதிலும் சரி தமிழினத்தின் கூட்டுரிமையை முன் நிறுத்தியே குரல் கொடுத்தார்.
ஸ்ரீலங்காவில் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையே என தனது நியாயப்பிரச்சாரத்தை உள்ளூரிலும், சர்வதேசத்திலும் மேற்கொண்டார். பின்முள்ளிவாய்க்கால் அரசியல் வரலாற்றில் ஸ்ரீலங்காவில் வேறு எந்த ஆயராலும் முன்வைக்கப்படாத கோரிக்கையாக இருந்த போதிலும் மறைந்த ஆயர் தமிழின கோரிக்கையை முன்வைத்து, உள்ளக விசாரணையில் எந்தவிதமான நம்பிக்கையும் தமிழர்களுக்கு இல்லை என்பது மட்டுமல்ல, ஸ்ரீலங்கா நீதித்துறை நிறுவனம் தமிழர்களுக்கு நீதியை ஒருபோதும் வழங்கப்போவதில்லை எனக் குறிப்பிட்டார். உள்ளக விசாரணையைப் பற்றி விபரிக்கையில் குற்றவாளிகளிடமே நீதி கோருதலில் ஆபத்தத்தைப் பற்றி தனது சந்திப்புக்களில் விளக்கத்தைக் கொடுத்தார். LLRC ஐ நிராகரித்து வெளியேறியது ஸ்ரீலங்கா அரசின் உள்ளகப்பொறிமுறையின் அறத்தையும் சட்ட வலுத்தன்மையையும் சிக்கலுக்குட்படுத்தியது.
இனப்படுகொலைக்கான நீதி வேண்டிய சர்வதேச விசாரணையில் ஸ்ரீலங்கா அரசு, தமிழினத்தை அதனுடைய இன அடையாளத்தை மையப்படுத்தியே இன அழிவை மேற்கொள்கின்றது. ஆகவே, ஸ்ரீலங்கா அரசின் இனப்படுகொலை உள்நோக்கம் விசாரிக்கப்படுவது அவசியம் எனக்குறிப்பிட்டதோடு தமிழினத்தை அழிக்க வேண்டும் என்ற ஸ்ரீலங்கா அரசின் உள்நோக்கம் வரலாற்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டிருப்பதையும் எடுத்துரைத்து, தமழினத்துக்குரிய அரசியல் தீர்வாக திம்பு கோட்பாட்டின் அடிப்படையிலமைந்த (தாயகம், தேசியம், சுயநிர்ணயம்) தீர்வை முன்வைத்தார். வடக்கு – கிழக்கு நில, ஆள்புல கட்டுறுதியின் இணைப்பு தமிழின அரசியல் தீர்வில் மிக அவசியமானதென குறிப்பிட்டதோடு அல்லாமல் தமிழர்கள் ஒரு தேசத்துக்குரியவர்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார். சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழர்களின் சுயாட்சி நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதில் அவருடைய தெளிவு பல உரைகளில் வெளிவந்தது. முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் சாட்சியாக இருந்து, உண்மையை எடுத்துரைத்து, நீதிகோரியது அவரது பொதுப்பணியின் சூழமைவு சார்ந்த புரிதலை வெளிக்காட்டியது. அவருடைய எழுத்துக்களில் விடுதலை இறையியலின் தீவிரத் தன்மை வெளிப்படாவிட்டாலும் கூட, அவருடைய வாழ்தல், விடுதலை இறையியலின் அடிப்படையான PRAXIS முன்னிலைப்படுத்தியது. ஓஸ்கார் றொமேறோவினுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனை போன்றதொரு திருப்புமுனை குறிப்பிட்ட காலகட்டத்தில் நடந்தது என இதுவரைக்கும் யாரும் குறிப்பிடவில்லை. ஆனால், அந்த திருப்புமுனை வரலாற்றில் வாழ்தலினூடு ஏற்பட்டது என நம்புகின்றேன். ஸ்ரீலங்கா அரசின் அடக்குமுறைகளூடான பயணமும், அனுபவமும் தனிநபர் சார்ந்த பயணம் அல்ல ஒரு கூட்டுப்பயணம். ஒரு இனத்தினுடைய கூட்டு அனுபவப்பயணமே அவரை மக்கள் இயக்க அரசியலின் தலைமைத்துவத்தை ஏற்கவேண்டிய காலகட்டாயத்திற்குள் அவரை நிர்ப்பந்தித்தது எனலாம்.
மாற்று அரசியல் பிரதிநிதித்துவமும் மக்கள் இயக்க அரசியலின் தலைமைத்துவமும்
நாடாளுமன்ற அரசியல் பிரதிநிதித்துவத்துக்கு சமாந்தரமாக மாற்று அரசியல் பிரதிநிதித்துவம் வடக்கு – கிழக்கில் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். சிவில் சமூக அமைப்புக்ளை உருவாக்கி வலுப்படுத்தியதோடு அவற்றை ஒருங்கிணைப்பதில் மிக முக்கிய பங்காற்றினார். தமிழ்த்தேசிய சபை தொடர்பிலான முன்னெடுப்புக்களுக்கு ஆர்வம் காட்டி அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை தொடக்கி வைத்தது வரலாற்றில் நினைவிருக்கும். வடக்கு – கிழக்கில் சிவில் சமூக அமைப்புக்களையும், தமிழ்த்தேசிய கட்சிகளையும் ஒருங்கிணைத்து அவ்வாறான சந்திப்புக்களுக்கு வரையறையின்றி காலத்தையும் வளங்களையும் முதலீடு செய்ததை அதில் பங்குபற்றிய அனைவரும் அறிவர்.
ஆயர் மறைந்த பின்னர் வெளிவந்த இரங்கல் உரைகளும், அவர் தொடர்பான எழுத்துக்களும் அவருடைய தமிழினத்துக்கான தீர்க்க தரிசன நோக்கை மத வரையறைகளுக்குட்பட்டே பார்க்க விரும்பின. தமிழ்தேசியம் மத வரையறைகளைக் கடந்தது என்பதை தமிழ்த்தேசியத்தை ஆழமாகப் புரிந்துகொண்டவர்கள் அறிவார்கள் எனும் ஆழ்ந்த நம்பிக்கை ஆயருக்கு இருந்தது. அந்த நம்பிக்கையின் புரிதலில் தான் ஆயரின் முன்னெடுப்புக்கள் அமைந்திருந்தன.
மாற்று அரசியல் பிரதிநிதித்துவத்தை முன்னெடுப்பதற்குரிய காரணங்கள் அவருக்கு இருந்தன. ஒற்றையாட்சி நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் அவருக்கிருந்த அதிருப்தியும், ஒற்றையாட்சிக்குள் தமிழினத்துக்கான நீதி கிடைக்கப்போதில்லை என்ற மன உறுதியும் அவரை மாற்று அரசியல் பிரதிநிதித்துவத்தை, நாடாளுமன்ற அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு சமாந்தரமாக கட்டமைக்க முற்பட்டதில் இருந்து தெளிவாகின்றது. ஆயர் கட்டமைக்க முன்னெடுத்த மாற்று அரசியல் பிரதிநித்துவம் தமிழ்த்தேசிய வெளிக்குள்ளே மட்டுமே கட்டமைக்க முடியும் என நம்பியதால்தான் மத வரையறைகளை கடந்து மாற்று பிரதிநிதித்துவத்திற்காக எல்லோரையும் ஒன்றிணைக்க முற்பட்டதை வரலாறு சொல்லும்.
மக்கள் சக்தியின் இயங்குதலில் நம்பிக்கை கொண்ட ஆயர், தமிழ்த்தேசியம் நாளாந்த இயங்கு தளத்தின் இயக்கமாக்கப்பட வேண்டும் என விரும்பியதால்தான் தமிழ் மக்களைப் பாதிக்கும் எல்லா அரச நெருக்கீடுகளையும் கண்டித்து வந்தார். குறிப்பாக, செறிவாக இராணுவ மயமாக்கப்படும் வடக்கு – கிழக்கு, சிங்கள -பௌத்த மயமாக்கம் அதன் விளைவான நில அபகரிப்பு, வரலாற்று திரிபு, அரசியல் கைதிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் என பட்டியல் நீண்டுகொண்டே போனது. ஸ்ரீலங்கா அரசு ஆயதமற்ற போரை வடக்கு – கிழக்கில் ஒவ்வொரு வாசலண்டையும் திணித்தது. அப்போரின் பரிமாணங்கள் வெவ்வேறு வடிவில் உருப்பெற்றன, தொல்லியல், வன இலாகா, மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, தமிழினப்படுகொலை மறுப்பு, தமிழின படுகொலைக்கான நீதி மறுப்பு, உண்மை மறுப்பு.
எண்ணிக்கை தொடர்பில் 2008 ஒக்ரோபர் தொடக்கம் 2009 மே வரைக்கும் விளக்கப்பட முடியாது புதிராகிப்போன 146,479 என முன்மொழிந்த போது இதுவரைக்கும் அந்த எண்ணிக்கையை ஸ்ரீலங்கா அரசு மறுத்ததாகவோ, நிராகரித்தாகவோ எந்த உத்தியோகபூர்வ அறிவித்தலையும் வெளியிடவில்லை.
ஆயரினுடைய தலைமைத்துவத்தை வெறுமனே மதம்சார்ந்து கட்டமைப்பது அவருடைய மக்கள் இயக்க அரசியல் தலைமைத்துவத்தை வலுவிழக்க செய்வதாகும் அல்லது தலைமைத்துவம் தொடர்பான அறத்தை சாவாலுக்குட்படுத்துவதாகும் அவருடைய மக்கள் இயக்க அரசியல் தலைமைத்துவம் மாற்று அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான அற ஒழுக்கத்தையும், அற நியாயத்தையும் சட்ட வலுவையும் வழங்கியது. அவ்வாறான தலைமைத்துவத்திற்கூடாக அவருக்கிருந்த அரசியல் செயலாண்மை முகவர் தன்மையை (Political Agency) இடம்பெயர்த்துவதாகவே அரசியல் தலைமைத்துவத்தை சிக்கலுக்குட்படுத்தல் இட்டுச்செல்கின்றது. அரசியல் செயலாண்மை முகவர் தன்மையை இடம்பெயர்த்தல் அவருடைய அரசியல் பிரதிநிதித்துவத்தையும் கேள்விக்குட்படுத்துகின்றது. அல்லது அவரை மத வரையறைகளுக்குட்படுத்தல் அவருடைய அரசியல் பிரதிநிதித்துவப்படுத்தலை சிதைக்கின்றது. ஆயர் குறிப்பிட்ட மதவரையறைகளுக்குள் நின்று தமிழினத்தின் அரசியல் கோரிக்கைகளை பிரதிபலித்து பிரநிதித்துவப்படுத்தவில்லை மாறாக ஒட்டுமொத்த அரசியல் கோரிக்கைகளை தமிழினத்தின் பிரதிநிதியாக நின்று வெளிப்படுத்தியவர், மாற்று அரசியல் பிரதிநிதித்துவ வெளிக்கூடாக.
ஆயரும் தமிழ்த்தேசியமும்
2009 இற்குப் பின்னரான தமிழ்த்தேசிய வெளியின் அரசியல் வரலாற்றுப் பின்புலம் மாற்றமடைந்த சூழமைவில் தமிழ்த்தேசிய அரசியலின் புரிதல் பற்றிய கேள்விகள் பொதுவெளியில் எதிர்மறையாக எழுப்பப்பட்டது. தமிழ்த்தேசிய வெளியை சிதைப்பதற்கான உத்தியாக அது கையாளப்பட்ட போதும் அவ் உத்திகள் தமிழ்த்தேசிய அணுகுமுறைகள் சார்ந்ததே தவிர தமிழ்த்தேசியத்தின் அடிப்படைகளை ஒருபோதும் கூறுபோட்டதில்லை. வரலாற்றில் தமிழ்த்தேசியம் பல்வேறு அணுகுமுறைகளை பயன்படுத்தியது. அந்த அணுகுமுறைகளை சுய விமர்சனத்திற்குட்படுத்தல் தமிழ்த்தேசியத்தின் அடிப்படைத்தன்மைக்கு வலுச்சேர்க்குமே தவிர அடிப்படைத்தன்மையிலிருந்து விலகப்போவதில்லை. தமிழ்த்தேசியம் பிரத்தியேக அல்லது தவிர்த்தல் தன்மையை (மற்றவர்களின் இருப்பைத் தவிர்த்து அல்லது நிராகரித்து தமிழ்த் தேசியம் கட்டமைக்கப்படவில்லை) கொண்டதல்ல என்பதற்கு உதாரணமாக வடக்கிலிருந்த முஸ்ஸிம்களை வெளியேற்றியதை தவறென்று சுட்டிக்காட்டினார், அதேபோல் வடக்கு – கிழக்கில் பாரம்பரியமாக முஸ்ஸிம்கள் இருந்த இடத்தில் அவர்கள் மீள் திரும்ப வேண்டும் என்பதற்காக உழைத்த அதே நேரத்தில் முஸ்ஸிம்களின் நில ஆக்கிரமிப்பை கண்டிக்கவும் தவறவில்லை. வடக்கு – கிழக்கில் பாரம்பரியமாக இருந்த சிங்கள மக்களை வரவேற்றார். ஆனால், வடக்கு – கிழக்கு சிங்கள மயப்படுத்தலை எதிர்த்தார். தமிழ்த்தேசியத் தன்மை இன்னொரு குழுமத்தின் கூட்டுரிமையை மறுப்பதாகவோ, நிராகரிப்பதாகவோ இல்லை என்பதோடு மட்டுமல்ல அவற்றை வலுவூட்டுவதாகவும் அமைந்திருந்தது.
தமிழ்த்தேசியத்தை பிரச்சினைக்குரிய அடிப்படைக் காரணியாக அரசியல் கட்டமைப்புச் செய்ய முற்பட்ட போது தமிழ்த்தேசியம் அடக்குமுறைக்கெதிர்வினையாக எழுச்சி பெற்றதே எனவும் தமிழ்த்தேசியம் சிங்கள – பௌத்த மக்களுக்கெதிரானதும் அல்ல, முஸ்ஸிம் மக்களுக்கும் எதிரானது அல்ல, அது சிங்கள – பெளத்த அடக்குமுறைக்கெதிரானது. ஆனால், ஸ்ரீலங்காவின் தேசிய ஊடகங்கள் அவ் உண்மைகளை மழுங்கடித்து மறைந்த ஆயரை சிங்கள, முஸ்ஸிம் மக்களினங்களுக்கு எதிராக கட்டமைத்ததை வரலாறு ஒருபோதும் மறக்காது. உண்மை, நீதி மறுக்கப்படும் போது குரல் கொடுத்ததை விடுதலைப்புலிகளும் ஏற்றுக்கொள்வர். விடுதலைப்புலிகள் தொடர்பில் அவர்களுடைய அணுமுறை தொடர்பான விமர்சனத்தை முன்வைத்து அவர் எழுதிய கடிதங்கள் சாட்சியம் கூறும். தீவிரவாதியாக, பயங்கரவாதியாக சித்தரித்து மக்களிடமிருந்து ஆயரை அந்நியப்படுத்துவதற்கான முயற்சியை ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்டிருந்ததை மக்கள் அனைவரும் அறிவர்.
பல்சமய உரையாடல் முன்னெடுப்புக்கள் மூலம் ஏனைய இன, மதங்களுக்கிடையே தமிழின ஆதரவு அலையை திரட்டுவதன் மூலம் தமிழின அரசியல் பிரச்சினைக்குரிய தீர்வை முன்னெடுக்க முடியும் என நம்பினார். பல தெற்கு முற்போக்கு சக்திகளுடனான உரையாடல்களிலிருந்து, முற்போக்குச் சிந்தனையுள்ள சக்திகளின் கூட்டிணைவு தமிழின விடுதலைக்கு இன்றியமையாதது என கூறி வந்ததும் அவற்றை ஒருங்கிணைத்து தமிழின அழிப்பு பற்றியும், தமிழின அரசியல் தீர்வு பற்றிய கலந்துரையாடல்களை ஒருங்கிணைத்தார். ஆயரின் தமிழின படுகொலை கோரிக்கையை சர்ச்சைக்குரியதாக்கி அதிலிருந்து அரசியல் இலாபம் தேட முற்பட்டவர்களை அறிந்திருந்தும், தமிழின படுகொலை கோரிக்கையையும் சர்வதேச விசாரணையூடு மாத்திரமே நீதி கிடைக்க முடியும் என்பதிலே உறுதியாய் இருந்தமை விமர்சனத்திற்குரியதாய் இருந்தும் இறுதிவரைக்கும் தனது முடிவிலே உறுதியாய் இருந்தமை அவரைக் காணச் சென்ற பலருக்கு தெரிந்திருக்கும்.
தமிழ்தேசிய அடிப்படைப்பண்புகளை வலுப்படுத்திக்கொண்டே தமிழின விடுதலையை அடைய முடியும் என கருத்தாய் இருந்தது மட்டுமல்லாமல், வடக்கு – கிழக்கு ஒன்றிணைந்த தாயகம் பற்றிய கனவை பல்வேறு ஒருங்கிணைக்கும் முயற்சிகளுக்கூடாக செயற்படுத்த முயன்றார். ஒருங்கிணைக்கப்பட்ட தேசத்திலிருந்து தமிழின அரசியல் தீர்வு அணுகப்பட வேண்டும் எனவும், ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வு முற்றாக சாத்தியமற்றது என இடித்துரைத்து, சமஸ்டி முறையினூடான அவசியத்தை முன்வைத்தார். ஒற்றையாட்சி ஜனநாயக முறைமையின் ஒவ்வாத்தன்மையையும், அதன் தோல்வியையும், கொழும்பு மையத்தில் அதிகாரங்கள் குவிக்கப்பட்டுள்ளதையும் பெரும்பான்மைவாத ஜனநாயகத் தன்மைமையையும் சிக்கலுக்குட்படுத்தி ஸ்ரீலங்கா பல் தேசிய ஜனநாயக முறைமையை நோக்கி நகர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
‘ஈழத்தமிழ் தன்மைதான் தமிழின அடையாள கட்டமைப்புக்கு அடிப்படை நாதமாக உள்ளதென நம்பிக்கைக் கொண்டு அந்த அடையாள அடிப்டைத் தன்மை வலுவிழந்துவிடாது தக்க வைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியதால் அவரை அடையாள அரசியல் செய்கின்றார் என பழி சுமத்தப்பட்டதும் நினைவில் இருக்கும்.
ஆயரை தமிழ்தேசியத்தில் இருந்து அந்தியப்படுத்த வேண்டும் என்ற ஸ்ரீலங்கா அரசின் செயற்திட்டத்துக்கான ஒரு உதாரணத்தை மட்டும் கொடுக்கலாம் என்று நினைக்கின்றேன். ஆயரின் உடல் ஆயர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போது ஆயரில்லத்துக்கு வெளியே சிவப்பு, மஞ்சள் வர்ணத்தில் வீதி அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவருடைய இறுதி ஊர்வலமான திங்கட்கிழமை இராணு வாகனத்தில் வந்த இராணுவத்தினரால் அவை அகற்றப்பட்டதற்கு பலர் சாட்சி. அவருக்காக வழங்கப்பட்ட இரங்கல் உரைகள் பெரும்பாலுமே அவரைத் தமிழ்த்தேசியத்திலிருந்து அந்நியப்படுத்தி குறிப்பிட்ட மதத்தலைவராக கட்டமைக்கப்பட்ட சொல்லாடல் பயன்படுத்தல்களையும், அவர் முதன்மையாக முன்வைத்த ஈழத்தமிழ்த் தன்மை அடையாளத்தை முன்வைத்து சிங்கள அரசு மேற்கொண்ட தமிழின அழிப்புக்கோரிக்கை ஒரேயொரு தடவை மட்டும் உச்சரிக்கப்பட்டதையும் தமிழ்த்தேசிய நீக்க அரசியலினுடைய பிரதிபலிப்பாகவே கொள்ள வேண்டியிருக்கும்.
அரசியல் கதாநாயகத் தன்மையை கட்டவிழ்த்தல்
2009ற்கு பின்னர் அரசியல் கதாநாயக தன்மை நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தோடு ஒன்றி கட்டமைக்கப்பட்டு, பிரதிநிதியைச் சுற்றித் தொண்டர், பின்பற்றுபவர் வட்டத்தை உருவாக்குகின்ற தன்மை தோற்றம் பெறுவதை அவதானிக்கலாம். தலைமைத்துவத்திற்கும் கதாநாயகத் தன்மை உருவாக்குகின்ற கதாநாயகர்களில் தங்கியிருக்கின்ற தொண்டர் தன்மைக்குமிடையே பாரிய வெளி இருக்கின்றதை அறிகின்ற போது கதாநாயகர்கள் தலைவர்களாக இருக்க முடியாது என்பதை தீர்மானிக்கலாம். அதேவேளை தலைமைத்துவம் தொண்டர்களை உருவாக்க முடியாது. அரசியல் கதாநாயகத் தன்மையில் மேலோங்கியிருப்பது ‘விரைவான பழுது நீக்கும் தன்மையே’ (Quick Fix).
அது பெரும்பாலும் மீட்பர் மனப்பான்மையில் கட்டமைக்கப்பட்டதாய் அமைந்திருக்கும். மீட்பர் மனப்பாங்கு அடிப்படையில் காலணித்துவ தன்மை கொண்டது. மேலிருந்து கீழ் நோக்கிய அணுகுமுறையில் மக்களுக்கும் கதாநாயகனுக்கமிடையிலான அந்நியத் தன்மையை அவர்களை கதாநாயகர்களாக கட்டமைக்கின்றது. அரசியல் கதாநாயகத் தன்மை தமிழ்த் தேசியத்துடன் முரண்பாட்டைக் கொண்டிருக்கின்றது. விடுதலைப்போராட்டத்தில் நீண்டகால அர்ப்பணிப்பு அவசியமாகின்றது, கதாநாயகத் தன்மையில் அப்படியில்லை. தமிழ்த்தேசிய வெளியில் அரசியல் கதாநாயகர்களின் உடனடி பழுது நீக்கும் முறைமை செல்லுபடியற்றது.
ஆயர் நீண்டகால அர்ப்பணிப்புடனான தலைமைத்துவத்தில் நம்பிக்கை கொண்டவராதலால் தான் அரசியல் கதாநாயகத் தன்மையை கட்டவிழ்க்க முற்பட்டார்.
எழில் ராஜன்
Photo: Tamilgurdian