படம்: Selvaraja Rajasegar Photo
போராட்டமின்றி சமூக விடுதலை இல்லை, அதிகார தரப்பினரின் அடக்கு முறைக்கு எதிரான போராட்ட வடிவத்தை புரட்சியாளர்களே தீர்மானிக்கின்றனர். தியாகமே போராட்டத்தின் உயிர் மூச்சு.
வடகிழக்கில் அரசியல் போராட்டத்தில் இணைந்து வீர மரணமடைந்தவர்களுக்காக ‘மாவீரர் வாரம்” (நவம்பர் இறுதி வாரம்) பெரும் எழுச்சியோடு நினைவு கூறப்படுகின்றது. அதே போன்று தெற்கில் கிளர்ச்சியில் ஈடுபட்டு மரணமடைந்த மக்கள் விடுதலை முன்னணி இளைஞர்களுக்காகவும் ‘இல்மஹா விரு சமரும” என (நவம்பர் 13ம் திகதி) நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது. அரசியல் சமூக மாற்றத்திற்காக எழுவோர் அதற்கான போராட்டத்தில் வீர மரணம் அடைந்தாலும், அவர்கள் உயிர்ப்போடு, வரலாற்றை வழிநடத்துபவர்களாகவே கொள்ளப்படுவர்.
இத்தகைய வீர வரலாறு மலையகத் தமிழர்களுக்கும் உள்ளது. மலையகத்தின் ஒவ்வொரு தேயிலைச் செடியின் ஆணி வேரையும் மலையக உழைப்பாளர்களின் வியர்வை கலந்த இரத்தம் நனைத்து செழிப்பாக்கி, நாட்டையும் செழிப்பாக்கி கொண்டிருக்கின்றது.
இதனோடு தம்மை ஒடுக்குவோருக்கு எதிராக களத்தில் நின்று போராடி, இரத்தம் சிந்தி, வரலாறு படைத்தவர்களும் உண்டு. கோவிந்தன் முதல் (1940) கண்டி பல்லேகலை தோட்டத்தில் வீரமரணமடைந்த பழனிவேல் (1980) வரை உயிர்த்தியாகமானவர்கள் மலையக போராட்ட வரலாற்றின் உயிர்ப்பு சக்தியாகவே திகழ்கின்றார்கள்.
இவர்களில் தூக்கு மேடையை பஞ்சு மெத்தையாக்கி, தூக்குக் கயிற்றை மலர் மாலைகளாக ஏற்று, மலையக போராட்ட வரலாற்றில் புதிய அத்தியாயத்தை தனதாக்கிய ஸ்டெலன் பேர்க் (கந்தலா) தோட்ட இளைஞர்களான வீராசாமி, வேலாயுதம் ஆகிய இருவரும் சிறப்பாக நினைவுகூரப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல, இவர்கள் வீர மரணம் அடைந்த தினத்தை மலையக மக்கள், ‘மலையக தியாகிகள் தினமாக்கி” அடையாளப்படுத்தி வரலாறு காக்க வேண்டும்.
கொழும்பு, வெலிக்கடை சிறையில் இன்றைக்கு 79 ஆண்டுகளுக்கு முன் 1942 பெப்ரவரி 27ஆம் திகதி காலை 8.00 மணிக்கு வீராச்சாமியும், அடுத்த நாள் அதேநேரம் வேலாயுதமும் தூக்கிலிடப்பட்டனர். இருபத்து இரண்டே வயது நிரம்பிய தியாகி விராசாமி, இராமசாமி என்பவரின் மகனாவதோடு, வேலாயுதம் அதே வயதையொத்ததோடு இவரின் தந்தை ஐயம் பெருமாள் ஆவார்.
காணி உச்ச வரம்புச் சட்டத்தின் கீழ் 1970களில் பெருந்தோட்ட தேசிய மயம் என பெருந்தோட்டங்கள் அரசுடமையாக்கப்படும் வரை, அத் தோட்டத்தை நிர்வகிப்பவரின் தனி இராஜ்ஜியமாகவே அது இருந்தது, அதிலும் சுதந்திரத்திற்கு முன்னரான காலகட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சுதந்திரத்தைப் பறித்து, அடக்குமுறையின் கீழேயே தொழிலாளர்களை வைத்திருந்தனர்.
இடதுசாரி சிந்தனை கொண்ட ஆங்கிலத் தோட்டத்துரையான திரு. பிறிஸ் கேடில் அவர்கள் 1937 ஏப்ரல் 03ஆம் திகதி நாவலப்பிட்டி நகரில் என். எம். பெரேரா தலைமையில் நடந்த பொதுக்கூட்டமொன்றில் கலந்துகொண்டதோடு, அக்கூட்டத்தல் மேடையேறி “தோட்ட அதிகாரிகளின் அனுமதிக்க முடியாத செயல்களை நான் நன்கறிவேன். தோட்ட அதிகாரிகள் தொழிற்சட்டத்தை மீறுவதற்கு இடமளிக்ககூடாது தொழிலாளர்களை சிறுமைப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது……” எனக் கூறியமை அக்காலத்தில் தோட்ட அதிகாரிகளால் தொழிலாளர்கள் அனுபவித்த கொடுமையை வெளிக்கொணர்கின்றது.
அன்று பெருந்தோட்டத் தொழிலாளர்கள் “பஞ்சம் பிழைக்க வந்தவர்கள்”, ‘கூலிகள்’ என்ற மனநிலையில் அதிகாரிகளால் (துரைமார்கள்) அடிமைகளாக நடத்தப்பட்டனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நிலை என்ன விதத்தில் உள்ளது? என்பதை மனித நேயம் கொண்ட விடுதலையாளர், தேசபக்தர் டாக்டர் மணிலால் அவர்களுக்கு காட்ட, நடேசய்யர் அவர்கள் அவரை பல தேயிலைத் தோட்டங்களுக்கு அழைத்துச் சென்றதாகவும், அதன் இறுதியில் “பிஜியில் இந்தியத் தொழிலாளர்கள் இருப்பதைவிட, இலங்கையில் அதிக கேவலமான நிலையில் இருக்கின்றனர். இலங்கை நிலையை கவனிக்கும்போது பிஜி எவ்வளவோ மேல் என்பேன்” என்று மணிலால் குறிப்பிட்டதாக நடேசய்யர் தமது கடிதமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் சில்லறை கங்காணி, கொத்தரப்பு கங்காணி, கவ்வாத்து கங்காணி, கொழுந்து கங்காணி, தோட்டக் காவலர்கள், கணக்கப்பிள்ளை, பெரிய கங்காணி, கண்டாக்கு, சின்னத்துரை, பெரியதுரை எனப் பல அடுக்கு அதிகார அடுக்கு முறையில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்தனர்.
அத்தோடு தோட்டங்களுக்குள் வெளியார் எவரும் உத்தரவின்றி உட்பிரவேசிக்க கூடாது என தடைச்சட்டமும் விதிக்கப்பட்டு, தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் சிறைக் கைதிகளாகவே நடத்தப்பட்டனர் (1957ஆம் ஆண்டே இச்சட்டம் நீக்கப்பட்டது).
மேலும் அரிசி, கோதுமை மா, தேயிலைத்தூள், லயத்து வீடு, குடி நீர் எல்லாவற்றையும் தோட்ட நிர்வாகத்திடம் பெற வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டு இருந்ததால், நிர்வாகக் கட்டமைப்புக்கு அடங்கிய அடிமைகளாகவே இருந்தனர்.
வீட்டுக்குத் தேவையான பொருட்களையும், வேறு அன்றாட பொருட்களையும், பெரிய கங்காணி மற்றும் அவர்களின் கடைகளில் கடனுக்குப் பெற்றுக் கொள்ள முடிந்தாலும், அவர்களுக்கே அடிமைகளாக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
அதிகார கட்டமைப்பில் இருந்தும், அறியாமை மற்றும் கடன் வாழ்வில் இருந்தும் மலையகத் தொழிலாளர் வர்க்கத்தை மீட்பதற்கு, நடேசய்யரும் அவர் மனைவி மீனாட்சி அம்மாளும் அயராது உழைத்து தொழிலாளர் சமூகத்தை விழிப்படையச் செய்தனர்.
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கென முதன் முதலாக ‘அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சம்மேளனம்” எனும் தொழிற்சங்கம் 1933இல் நடேசய்யரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
1935இல் உருவாக்கப்பட்ட தொழிற்சங்கச் சட்டத்தைத் தொடர்ந்து தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தில் இணைய அனுமதிக்கப்பட்டனர். இதே காலப்பகுதியில் கண்டியில் தலைமையகத்தைத் கொண்டிருந்த இடதுசாரியினரான சமசமாஜ கட்சியினரால் ‘தோட்டத் தொழிலாளர் சங்கம்’ தோற்றுவிக்கப்பட்டது.
எனினும், தோட்டங்கள் தோட்டத் துரைமாரின் தனித்தனி சுகபோக அதிகார இராஜ்ஜியங்களாக திகழ்ந்ததால், தொழிற்சங்கம் அமைப்பதும், தொழிற்சங்கத்தில் இணைவதும் அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை.
பெருந்தோட்ட உரிமையாளர்களுக்கும், மது விற்பனைக்கும், மது விற்பனையாளர்களுக்கும் நெருங்கிய உறவு இருந்த காலகட்டம் அது. இதனால், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மது எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள, பொகவந்தலாவை பிரதேச கொட்டியாகலை தோட்ட மக்கள், தோட்டத்தில் சங்கம் அமைக்க துரையிடம் அனுமதி கேட்டபோது, “இது தோட்ட பெரிய கங்காணியின் அதிகாரங்களை வேரறுக்கும் முயற்சி” எனக் கூறி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அத்தோட்ட மக்கள் தன்னெழுச்சியோடு 1939 ஜனவரியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனை “தலைவர்கள் இன்றியே, அரசியல் நோக்கங்கள் இன்றியே, இன்றைய சமுதாய சீர்திருத்தத்திற்கு மக்கள் எழுத் தொடங்கிவிட்டனர்” என அரசாங்க குறிப்பேடுகளே குறிப்பிடுவதாக கூறப்படுகின்றது.
சுய கௌரவத்துடனும், மரியாதையுடனும், சுதந்திரத்தோடும், உரிமைகளோடும், பாதுகாப்புடனும் வாழவேண்டும் எனும் உணர்வு கொழுந்து விடத்தொடங்கி விட்டதிற்கு இது நல்ல உதாரணமாகும். இதற்கு நடேசய்யரும், இடதுசாரி தலைவர்களும் தொழிலாளர்கள் உள்ளத்தில் விதைத்த புரட்சி போராட்ட சிந்தையே காரணம் எனலாம்.
இதனைத் தொடர்ந்தே, ஹேவாஹெட்ட முல்லோயா தோட்ட மக்களின் 16 சத சம்பள உயர்வுக்கான போராட்டம் வெடிக்கின்றது. அதில் கோவிந்தன் உயிர்த் தியாகியாகின்றான். தொழிலாளர் கோரிக்கைகளும் வெற்றி பெறுகின்றன.
இதனால் ஆத்திரமும் கோபமும் அடைந்த துரைமார், தொழிலாளரை பல்வேறு வகையில் ஒடுக்கியதோடு, தொழிலாளர் ஒன்றான சக்தியாவதை தடுக்கவும், தொழிற்சங்க நடவடிக்கைகளை தமது கைக்கூலிகளைக் கொண்டு கவனித்து, அதில் ஈடுபடுபவர்களை மறைமுகமாகவும், நேரடியாகவும் தண்டிக்கவும் திட்டந்தீட்டி செயல்பட்டனர்.
அதேநேரம் முல்லோயா கோவிந்தனின் ரத்தம் தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சிக்கு உணர்வளித்து அவர்களை ஒன்று திரண்ட சக்தியாகி, போராட்டம் மூலமே உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனும் மனநிலையை உருவாக்கியது.
கந்தலா (ஸ்டெலன் பேர்க்) தோட்டம் முல்லோயா தோட்டத்திற்கு அண்மையிலேயே உள்ளது. இங்கு உள்ள இளைஞர்களும் தொழிலாளர்களும் தனது தோட்டத்திலும், தொழிற்சங்கம் அமைக்க வேண்டும் எனும் உத்வேகத்துடன் செயல்பட்டனர். அதற்கான பல கலந்துரையாடல்களை மறைமுகமாக ரகசிய முறையில் நடத்தி, தோட்டத்தில் இயங்கிய இடதுசாரி தொழிற்சங்கமான ‘தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்கத்தை’ அமைக்க முழு நடவடிக்கைகளும் மேற்கொண்டனர்.
இதற்கு மெய்யப்பன் எனும் தொழிலாளி தலைமை தாங்கியதோடு, எத்தகைய எதிர்ப்பு வரினும் அதற்கு முகங்கொடுக்க இளைஞர்கள் தம்மை தயார்படுத்திக் கொண்டனர். தொழிற்சங்க சந்தா பணத்தை முறையாக வசூலித்து மெய்யப்பனிடம் கையளித்து, தமது விசுவாசத்தினை வெளிப்படுத்தினர்.
தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைப்பதையோ, ஒன்று திரள்வதையோ விரும்பாத தோட்டத் துரையான சி. ஏ. ஜி. போப், தமது ஒற்றர்கள் மூலம் மக்கள் செயல்பாட்டை அறிந்து கொண்டார். தொழிற்சங்க செயற்பாட்டை தடுத்து சிதைப்பதற்கு ஒரே வழி தலைமை தாங்கும் மெய்யப்பனை தோட்டத்திலிருந்து துரத்துவது என தீர்மானித்து, 1941ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எத்தகைய ஒரு காரணமுமின்றி, வேலையில் இருந்து நீக்கியதோடு, அன்று நடைமுறையிலிருந்த பற்றுச்சீட்டையும் கையில் கொடுத்து தோட்டத்தை விட்டே வெளியேறுமாறு பணித்தார்.
இதற்கு இன்னுமொரு மறைமுக காரணமும் இருந்தது. அதே தோட்டத் தொழிலாளியான வீராசாமி என்பவரே தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளராக இயங்கினார். வீராசாமியை, துரை வேலையில் இருந்து அகற்றிய போது அதற்கான நீதிக்காக போராடி, மீண்டும் தொழிலை பெற்றுக் கொடுத்தவர் மெய்யப்பன் ஆவார். தமது அடாவடி நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாளர் எழுந்துவிட்டனர், இதனை அடக்க வேண்டும் என்பதும், தனக்கு எதிராக எழுந்த மெய்யப்பனை தண்டிக்க வேண்டும் என்பதுவுமே மறைமுக காரணமாகும்.
மெய்யப்பன் தான் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கும், தனக்கு பற்றுச்சீட்டு கொடுத்தமைக்கும் அஞ்சவில்லை. தனக்கு நிகழ்ந்த அநீதி தமது தலைமையை ஏற்றுக்கொண்ட தமது தோட்ட மக்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையாகக் கருதி, அதற்கு எதிராக போராடுவதே ஒரே வழி என தமது தொழிற் சங்க கண்டி பணிமனையை நாடினார் மெய்யப்பன்.
இவ்விடயத்தில் தலையிட்ட சமசமாஜ தொழிற்சங்க பணிமனை, வேலை நீக்கம் செய்யப்பட்ட வீராசாமிக்கு சார்பாக செய்யப்பட்ட மெய்யப்பனின் செயல் சரி என்றும், மெய்யப்பனை வேலைநீக்கம் செய்து, பற்றுச்சீட்டையும் கொடுத்த துரையான சி. ஏ. ஜி. போப் துரையே பிழை என்றும், 1941.04.26ல் கடிதம் அனுப்பியது.
அரச ஆதரவும், பொலிஸ் துணையும் தமக்கு இருப்பதாக நினைத்து, அடக்குமுறையை கட்டவிழ்த்து விட துணிந்து விட்ட துரை, தொழிற்சங்கம் அனுப்பிய கடிதத்தை ஏற்றுக்கொள்ளாததோடு, மெய்யப்பன் தனது உத்தரவையும் மீறி பலவந்தமாக குடியிருப்பதாகவும், உடனே கைது செய்து வெளியேற்ற வேண்டும் எனவும், கம்பளை நீதிமன்றில் பிடியாணை பிறப்பிக்க வகை செய்தார்.
நீதிமன்ற உத்தரவோடு 1941.05.07ஆம் திகதி கந்தலா தோட்டத்திற்கு வந்த பொலிஸார் மெய்யப்பனை கைது செய்ய முடியாது, இருக்கும் இடமும் தெரியாது வெறுமனே திரும்பினர். மெய்யப்பனின் நண்பர்களான வீராசாமி, வேலாயுதம், குப்புசாமி, இராச கவுண்டர் ஆகியோர் இரகசியமாக தோட்டத்தை விட்டு வெளியேறி, தமது தொழிற்சங்க பணிமனையில் மறைந்திருந்த மெய்யப்பனிடம், பொலிஸார் தேடி வந்து சென்ற செய்தியை அறிவித்தனர்.
சமசமாஜக் கட்சியின் ஆலோசனை வழிகாட்டலின் பேரில், நீதிமன்றில் சரணடைந்த மெய்யப்பனுக்கு மே 9ம் திகதி பிணை வழங்கப்பட்டது.
போப் துரை கொலை
முல்லோயா கோவிந்தனின் கொலையைத் தொடர்ந்து நடைபெற்ற தொடர்ச்சியான போராட்டங்கள் பெருந்தோட்டத் துரைமாரின் அடக்குமுறை, தொழிலாளர்களின் அடிமை வாழ்க்கை என்பனவற்றை முழு நாட்டுக்கும் வெளிப்படுத்தியதோடு, முல்லோயா கோவிந்தனின் இரத்தம் பெருந்தோட்ட இளைஞர்களின் உள்ளத்தில், சுதந்திரத்திற்கும் உரிமைக்குமான போராட்ட உணர்வு தீயை சுடர் விட செய்தது.
கந்தலா தோட்ட இளைஞர்களான வேலாயுதம், வீராசாமி மற்றும் அவர்களின் நண்பர்களான வேலு, ரெங்கசாமி, சின்ன முனியாண்டி ஆகியோர் தமது தோட்டத் துரையை தீர்த்து கட்டுவதன் மூலமே அனைத்து துரைமாருக்கும், தோட்டத்தில் நிலவும் அடிமை கட்டமைப்பு அதிகார வர்க்கத்திற்கும் பாடம் படிப்பிக்க முடியும் எனும் தீர்மானத்திற்கு வந்ததோடு அதற்கான சந்தர்ப்பத்திற்காக உளவு பார்த்தனர்.
மெய்யப்பன் நீதிமன்றில் சரணடைந்து பிணை பெற்ற 1941.05.09ஆம் திகதி, ஆத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்த வீராசாமியும், அவரது நண்பர் குழுவும் போப் துரை அன்றைய தினம் மாலையில் காரில் புறப்பட்டுச் செல்வதை அவதானித்தனர். இதுவே நல்ல தருணம் என கருதிய வீராசாமி குழுவினர் தமது திட்டத்திற்கு தயாராகிவிட்டனர்.
காரில் புறப்பட்டு சென்ற போப் துரை, நேராக பக்கத்து தோட்டமான லெவலன் தோட்டத்தில் துரையாக இருக்கும் தனது நண்பரான ஆர்.டி. பிளேக் அவர்களின் பங்களாவிற்கு சென்றவர், அங்கேயே இரவு உணவையும் முடித்துக்கொண்டு, இரவே தமது தோட்டத்திற்கு பயணமானார். இதுவே, அவருக்கு தனது நண்பனுடனான இறுதி உணவு என்பதை நினைக்கவும் இல்லை. அறிந்திருக்கவும் இல்லை.
பாதை ஓரத்தில் காத்திருந்த வீராச்சாமி, வேலாயுதம் மற்றும் நண்பர் குழுவினர் போப் துரை வரும் பாதையின் வளைவு ஒன்றில் மரங்களை வெட்டி வீழ்த்தி பாதையை தடுத்திருந்தனர். குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும் போப் துரை செய்வதறியாது காரை விட்டு இறங்கிய போது, அதற்கான தருணம் பார்த்திருந்தவர்கள் இரும்பு கம்பி, தடி என்பவற்றால் தாக்கி தமது திட்டத்தை நிறைவேற்றினர். அந்த இடத்திலேயே துரையின் உயிர் பிரிந்துவிட்டது. வீராசாமி, வேலாயுதம் குழுவினர் மறைந்து விட்டனர்.
இரண்டு நாட்களின் பின்னர் கொலை குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். வேலாயுதமும், வீராசாமியும் கொலையை தாம் மட்டுமே செய்ததாக வாக்குமூலம் அளித்து, ஏனைய நண்பர்களைக் காப்பாற்றினர்.
தொடர்ச்சியாக நடைபெற்ற போப் துரை கொலை வழக்கின் இறுதியில் வீராசாமி, வேலாயுதம் இருவருக்கும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட போது, அது தொடர்பாக மேன்முறையீடு செய்த போதும் பலனளிக்கவில்லை. தூக்குத்தண்டனை வெலிக்கடை சிறைச்சாலையில் 1942.02.27ஆம் திகதி காலை 8.00 மணிக்கு வீராச்சாமிக்கும், அடுத்த நாள் வேலாயுதத்திற்கும் என நாள் குறிக்கப்பட்டது.
தூக்குத் தண்டனைக்கு முதல் நாள் இவர்களின் இறுதி ஆசை என்னவென்று கேட்டபோது, “உலகத் தொழிலாளர்கள் நீடூழி வாழவேண்டும்” என இருவர் சார்பாக வேலாயுதம் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதன் மூலம், உலக தொழிலாளர் வர்க்க போராட்டத்தோடு தம்மையும் இணைத்துக் கொண்டு, தியாகிகளாக, தூக்கு மேடையை பஞ்சு மெத்தையாகவும், தூக்கு கயிறை மலர் மாலையாகவும் ஏற்றுக் கொண்டமை, தொழிலாளர் வர்க்கத்தின் சுதந்திரம், உரிமை என்பவற்றின் மீது கொண்ட வேட்கையையும், விடுதலை உணர்வையும், வெளிக்காட்டுகின்றது. இதனை அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக மலையகத்தில் வெடித்த புரட்சி எனலாம்.
சி.ஏ.ஜி. போப் துரை அவர்களின் கொலை வராலாற்று முக்கியம் வாய்ந்தது என்பதால், இவ் வழக்கில் அரச சார்பு சட்டத்தரணிகளாக செயற்பட்ட அட்வகேட் ஓ.எல்.டி. க்ரஸ்டர் அவர்கள் இவ் வழக்கின் சாட்சியின் குறிப்புக்களை தொகுத்து 1942 மே 21ஆம் திகதி நூல் வடிவில் கொண்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது.
எதிராளியை மறைந்திருந்து தாக்கும் பாணியை 1971 மற்றும் 88/89ம் ஆண்டுகளில், தெற்கின் இளைஞர் கிளர்ச்சியின் போதும், வடக்கின் யுத்தத்தின் போதும் நாம் அறிந்திருக்கின்றோம். இதே பாணி சுதந்திரத்திற்கு முன்னர் மலையகத்தில், இளைஞர்களின் சிந்தையிலும் இருந்துள்ளது என்பதை போப் துரையின் கொலை வெளிப்படுத்துகின்றது.
போப் துரையின் கொலையோடு மலையக பெருந்தோட்ட தொழிலாளரை அடிமையாக்கும் அதிகார வர்க்க கட்டமைப்பு ஆடிப்போனது. இதனைத்தொடர்ந்து அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எதிர்ப்பு அதிகரித்த நிலையில் தோட்டத் துரைமார் சங்கம் அரசுக்கு கொடுத்த அழுத்தம் காரணமாய், கொல்வின் ஆர்.டி. சில்வா, என். எம். பெரேரா, லென்சி குணவர்தன, எட்மன் சமரக்கொடி, பிலிப் குணவர்த்தன போன்ற இடதுசாரி தலைவர்களை கைதுசெய்து சிறையிலடைத்ததாகவும் கூறப்படுகின்றது.
மலையக உரிமைப் போராட்ட முதல் உயிர்தியாகி கோவிந்தனின் 81ஆம் உயிர்த்தியாக அகவையிலும், தூக்குக் கயிற்றை மலர் மாலையாக ஏற்ற வீராசாமி, வேலாயுதம் ஆகியோரின் உயிர்த்தியாக 79ஆம் அகவையிலும் இருக்கும், மலையகத் தொழிலாளர் வர்க்கமும், அவர்களின் தலைவர்களாக தம்மை அடையாளப்படுத்துவோரும், மலையக தியாகிகளின் வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டும். இவர்களை நினைத்து கௌரவப்படுத்துவதன் மூலமே புதிய தலைமுறையினரை, புதிய அரசியல் கலாச்சாரத்தை நோக்கி வழிநடத்த முடியும்.
அருட்பணி மா. சத்திவேல்