படம்: Selvaraja Rajasegar

இலங்கையில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இந்த வருடம், பின் அடுத்த வருடம் என, ஒவ்வொரு வருடமும் குறைபாடுடையதும் அதிக அரசியல் மயப்படுத்தப்பட்டதுமான அரச மனித உரிமைப் பொறிமுறையொன்றின் மீது ஏன் திரும்பத் திரும்ப தங்களது நம்பிக்கையை வைக்கிறார்கள்? மனித உரிமைத் தளத்தில் பணியாற்றும் எங்களில் பலருக்கு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையுடன்  (யு.என்.எச்.ஆர்.சி) ஈடுபடும் ஒரு நீண்ட வரலாறு உள்ளது. என்னுடையது 2008 இல் ஆரம்பமானது, அப்போது உலகம் முழுவதுமாக மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மற்றும் முன்னேற்றுவதற்கும் ஸ்தாபிக்கப்பட்ட அமைப்பு பற்றி புதிதாக அறிந்து கொள்வதில் ஜெனீவாவில் நான் நேரம் செலவளித்தேன். அநேகமான சமயங்களில் (எந்நேரமுமல்ல), பேரவை ஓர் அரங்கமாக மாற்றமடையும். பாத்திரம் வகிப்போர்கள் தங்களது பாத்திரத்தை நடிப்பர். ‘நல்ல நாடுகள்’, கெட்ட நாடுகள்’ மற்றும் ‘நடுநிலை நாடுகள்’ தங்கள் சம்பந்தப்பட்ட முக்கிய கதாபாத்திரங்களை நடிக்கும். ஐ.நா. பணியாளர்கள், சர்வதேச அரச சார்பற்ற ஸ்தாபனங்கள் மற்றும் உள்ளூர் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் துணைப் பாத்திரங்களை ஏற்பர் – அவர்களில் பலரும் மனித உரிமைகள் நோக்கத்திற்காக நேர்மையான வகையில் பற்றுறுதி கொண்டவர்கள். வேறு சிலரோ பாத்திரம் வகிப்பதற்குக் கூட அழைக்கப்படுவதில்லை. இந்த செயல்முறை குறித்து எங்களில் பலரும் அதிகம் அதிருப்தி கொள்ளத் தொடங்கினோம். ஏனெனில், இந்த நாடகத்தின் நிறைவில், நாங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் – மனித உரிமைகள் துஷ்பிரயோகங்களின் பாதிப்புக்குள்ளானோர்களுக்கு என்ன உறுதியான நன்மை பெறப்பட்டது என நாங்கள் வினவிக் கொண்டோம்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வும், அதன் முந்தியவற்றுக்கு வேறுபாடானதொன்றல்ல. மேடையில் மீண்டும் வேறுபட்ட நடிகர்களை நாங்கள் காண்போம். அமர்வின் திரை மூடும் பொழுது, அங்கே வெளிச்சங்களும், புகைச்சல்களும் இருக்கும், சீர்கெட்டுக் கொண்டிருக்கும் மனித உரிமைகளின் இடர்நிலைக்கு மீளும் ஆபத்தை நாங்கள் எதிர்கொள்ளுவோம். துஷ்பிரயோகங்களுக்கான இலங்கையின் பொறுப்புக்கூறலுக்காக தொடர்ந்து முயற்சிப்போர்கள் #HRC46 மூலமாக இலங்கையில் நிலைபேறான சீர்திருத்தத்தை உறுதிப்படுத்திக் கொள்வதில் ஒரு மெல்லிய வாய்ப்பினை மட்டுமே கொண்டிருப்பர். அர்த்தமுள்ள சீர்திருத்தம், கடந்தவற்றை எண்ணி நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் இலங்கைக்கு மிக முக்கியமானது என இனவாதம் கொண்ட பெரும்பான்மைச் சமூகத்தை நம்பவைக்கும் நேர்மையான அரசியல் விருப்பை அல்லது துணிவைத் தேவைப்படுத்துவதாக அமையும். இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவைச் செயல்முறை எமக்கு ஒரு தொகை பொய்யான வாக்குறுதிகளைத் தந்துள்ளது. முன்னைய நிர்வாகத்தால் பேணப்பட்ட சிறிய வாக்குறுதிகள் கூட இலகுவாக புறந்தள்ளப்பட்டன. நாங்கள் கோரிநிற்கும் உண்மையான சீர்திருத்தம் இதுவாயின், #HRC46 அதனை உறுதிப்படுத்துவதற்கான அமர்வல்ல. அப்படியானால், இந்தச் செயல்முறையில் பயனேதும் உள்ளதா எனக் கேட்பது சரியானதா?

முற்றிலுமாக அவ்வாறில்லை. #HRC46 உண்மையில் எதற்கானது என நாங்கள் விளங்கிக்கொள்ளும் வரை, இலங்கையில் மனித உரிமைகள் உறுதிப்படுத்தப்பட முடியுமென அக்கறை கொள்வோர்களுக்கு உறுதியான சில நன்மைகள் அங்கே இருக்கிறது. #HRC46 கவனத்தைப் பெற்றுக் கொள்வது குறித்தானது. அது மேடையிலுள்ள நடிகர்களைப் பற்றி மட்டுமானதல்ல, அவர்கள் மீது வீசும் வெளிச்சம், மற்றும் கூர்ந்து அவதானித்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்கள் பற்றியும் ஆனவொன்றாகும். மேடையில் நீங்கள் உள்ள போது, நீங்கள் திறந்த அரங்கில் செயற்பட வேண்டும். மேலும், ஒளி வீச்சின் கவனம் உங்கள் மீது இருக்கும் போது, உங்களது சிறந்த செயற்பாட்டை காண்பிப்பதற்கு நீங்கள் முயல்வீர்கள். #HRC46 சீர்திருத்தத்தை எங்களுக்குத் தரா விட்டாலும், அது அதற்கான ஓர் இடைவேளையை எங்களுக்குத் தரலாம்.

ஒளி வீச்சின் கவனத்தின் கீழ், மோசமான கண்டனங்களைத் தவிர்ப்பதற்கு இலங்கை அநேகம் (சிறிதளவாகிலும் கூட) முயலலாம். குறைந்ததளவிற்காகிலும் புத்தியுடைய அரசியல்வாதிகள் நடைமுறை அழுத்தத்திற்கு பதிலிறுப்பர், மேலும் புத்திசாலியான அரசியல்வாதிகளால் நிர்வகிக்கப்படும் அரசாங்கம் ஒரு கண்காணிப்பின் கீழுள்ள போது சிறந்த முறையில் நடந்து கொள்வதற்கு முயலும். இந்தக் கவலையான நிஜத்தையே நாங்கள் எல்லாச் சமயங்களிலும் கண்டுள்ளோம். இலங்கையின் மனித உரிமைகள் பதிவு 2012 மற்றும் 2018 இற்கிடையில் முன்னேற்றம் கண்டுள்ளது. மனித உரிமைகளுக்கான எந்த குறிக்காட்டியும் அதனை உறுதிப்படுத்தும். முன்னேற்றம் காட்டிய இப்பதிவு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நுணுக்குக் காட்டியின் கீழ் வந்த காலப்பகுதியுடன் இணங்கியதால், 2012 இல், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பான ஒரு தீர்மானத்தை ஏற்று அங்கீகரித்தது. நான் இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கையில், அநேகம் இலங்கை கொண்டிருந்ததான அரசியல்வாதிகளுள் மிகவும் புத்திசாலியான, பிரதமர், வலிந்து தகனம் செய்யும் கொள்கையை அரசாங்கம் நீக்குமென நாடாளுமன்றத்தில் பேசும் போது அறிவித்தார் (அவரது அலுவலகம் தற்போது அதனை மறுத்துரைத்து வருகிறது). ICCPR சட்டத்தின் கீழ் நீதியற்ற முறையில் இலக்கு வைக்கப்பட்ட ஓர் எழுத்தாளர் மற்றும் கவிஞருமான சக்திக்க சத்குமார, இந்த வாரம் விடுதலை செய்யப்பட்டார். இந்த இரண்டு சம்பவங்கள் அல்லது சைகைகளின் நேரம் தற்செயலானதல்ல. இங்கு, #HRC46 பற்றிய  அச்சம் அதன் பெறுமதியை நிரூபிக்கிறது.

எனவே, வேறொன்றும் இல்லையாயின், நாட்டில் தற்போது நடைபெற்று வரும் துஷ்பிரயோகங்களிலிருந்து சிறிய இடைவேளையை உறுதிப்படுத்துவதற்கு #HRC46 நாடகத்தின் இன் சாத்தியங்களை மனித உரிமை ஆதரவாளர்கள் தொடர்வார்கள் மற்றும் தொடருதல் வேண்டும். இச்செய்முறை வலிந்து தகனம் செய்யும் கொள்கையை முடிவுறுத்துவதற்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளது. அது நிலப் பறிப்புகளை முடிவுறுத்துவதற்கு, ஊடக சுதந்திரத்தைப் பேணுவதற்கு மற்றும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா போன்ற மனித உரிமைகள் பாதுகாவலரை விடுவிப்பதற்கான வாய்ப்புகளையும் அநேகம் அதிகரிக்கும். உள்நாட்டு ஆதரவு செயற்படுவதைக் காண முடியாத ஒரு பின்புலத்தில், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தங்களது நம்பிக்கைகளை முழுமையல்லாத சர்வதேசப் பொறிமுறை மீது வைப்பது முற்றிலும் நியாயப்படுத்தப்படக் கூடியதே. இதற்கான கணிப்பு எளிமையானது: சிறு இடைவேளையை வழங்குவதற்கு அரசாங்கம் அநேகம் அழுத்தமளிக்கப்படும்.

சரியான விடயங்களைச் செய்வதற்கு, மனித உரிமைகளை மதிப்பதற்கு மற்றும் பிரஜைகளை கௌரவத்துடன் நடத்துவதற்கு வெளி அழுத்தம் தேவை என அரசாங்கங்கள் நினைப்பது மகிழ்ச்சியானதல்ல. நாகரீகமடைந்த மற்றும் கௌரவமான எந்தவொரு சமூகமும், அதன் அரசாங்கம் சரியான காரியத்தை மேற்கொள்ள வைப்பதற்கு ஏன் வெளி அழுத்தங்களில் தங்கியிருத்தல் வேண்டும்? எங்களின் சமுதாயத்திலுள்ள பெரும்பான்மையானவர்கள் இந்த விடயங்களையிட்டு உண்மையில் கவனமெடுப்பதில்லை என்பதனையே இதற்கான சமன்பாடு குறிக்கிறது. எனவே, இலங்கை எதிர்கொள்ளும் பெரும் சவால், அக்கறையின்மை அல்லது கரிசனையின்மையாகும். இலங்கைக்குள் ஆழமான ஒரு பிளவை தடுப்பதற்கான ஓர் இடைவேளையே #HRC46 ஆகும். உண்மையாக உள்நோக்கிப் பார்க்கின்ற மற்றும் குடியியல், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார மனித உரிமைகள் மீது உள்ளக இணக்கப்பாடுகள் மற்றும் உண்மையான மனித அபிவிருத்தி என்பவற்றைக் கட்டியெழுப்புவதற்கு முடிகின்ற அரசியல் தலைமைத்துவமே உண்மையில் எங்களுக்குத் தேவை. அவ்வாறான தலைமைத்துவம் எப்பொழுதாவது தோன்றினால், இலங்கை இந்தக் கட்டத்திலிருந்து ஒரே தடவையில் வெளிவந்துவிடும். அதுவரை, நாடகங்களின் சுழற்சியில் சீர்திருத்தத்திற்குப் பதில் இடைவேளை மாத்திரமே நிகழ்ச்சித்திட்டத்தில் உண்மையான ஒரு விடயமாக இருப்பதை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதற்கு முடியும்.

கிஹான் குணதிலக

HRC46: Not for Reform But for Respite என்ற தலைப்பில் கிறவுண்ட்விவ்ஸ் தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.­­