பட மூலம், Selvaraja Rajasegar
1992ஆம் ஆண்டு அரச தோட்டங்கள் யாவும் மீண்டும் தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை அரசாங்கம் முன்வைக்கையில் மலையக தொழிற்சங்கத் தலைவர்களின் கருத்தினை அறியும் வகையில் பிரபலத் தொழிற்சங்கத் தலைவர்களை ஆங்கிலத்தில் நேர்காணலை செய்தேன். இவ்நேர்காணல் கண்டி சத்தியோதய நிறுவனத்தின் கீழ் இயங்கிய தோட்டப்பிரதேசங்களுக்கான கூட்டச் செயலகத்தினால் வெளியிடப்பட்ட குரலற்றோரின் குரல் (Voice of Voiceless) ஆங்கில சஞ்சிகையில் வெளியிடப்பட்டது. இவ் நேர்காணல்களின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரான மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமானைத் தவிர மறைந்த தோழர்களான எஸ்.நடேசன், ஓ.ஏ.ராமையா மற்றும் திரு. விக்ரமபாவு கருணாரத்ன உள்ளிட்ட ஏனைய தொழிற்சங்கத் தலைவர்கள் அரச தோட்டங்களை தனியார் கம்பனிகளுக்கு வழங்குவதை எதிர்த்தனர்.
திரு. சௌமிய மூர்த்தி தொண்டமான் மட்டுமே தனியார் மயமாக்கலை ஆதரித்தார். அதனால் அவரை நேர்காணல் செய்யும் போது வெள்ளைக்காரர்கள் கையில் இருந்த தோட்டங்களை 1972 இல் அரசுடமையாக்கும் போது நீங்கள் எதிர்க்கவில்லை. அப்போது அதனை எதிர்க்காத நீங்கள் தற்போது எதிர்ப்பதற்கான காரணம் என்ன என்ற கேள்வியை எழுப்பினேன். அதற்கு அவர் உங்கள் டேப் ரெக்கோடரை மூடுங்கள் எனக் கூறினார். நான் டேப் ரெக்கோடரை மூடிய பின்பு இவ்வாறு கூறினார்.
நான் அன்று அதனை ஏற்றுக்கொண்டேன். ஏன் என்றால் தோட்டங்கள் அரசுடமையாக்கப்பட்டால் நம் தோட்டத் தொழிலாளர் அரசாங்க சேவையாளராக கணிக்கப்படுவர். அதனால், அரச ஊழியர் பெறும் உரிமைகளைப் பெறுவர் என நினைத்தேன். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. மாறாக எம்மக்கள் தோட்டங்களை விட்டு விரட்டி அடிக்கப்பட்டதுடன் தோட்டப்பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. பல தோட்டங்கள் இல்லாமற் ஆக்கப்பட்டன. அரசாங்க மந்திரிமார்கள் தமது விருப்பத்திற்கேற்ப தோட்டக் காணிகளை கிராம மக்களுக்கு பிரித்துக் கொடுத்தனர். இன்றும் அது நடக்கின்றது. எம்மக்களின் பாதுகாப்பு பிரச்சினையாகி போய்விட்டது. தோட்டங்கள் அரசாங்கத்திற்கு கீழ் தொடர்ந்து இருக்குமாயின் தோட்டங்கள் படிப்படியாக இல்லாது போகும். சிங்கள குடியேற்றங்கள் அதிகரித்தால் எதிர்காலத்தில் நம் மக்களுக்கு இப்போது இருக்கும் நாடாளுமன்ற பிரதிநிதிதித்துவமும் இல்லாது போய்விடும். நமக்கு இரண்டு நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைப்பதை இல்லாதொழிக்கவே நுவரெலியா, மஸ்கெலியா ஆசனத்தை பல் ஆசனமாக ஆக்கினர். எனவே, நான் இருக்கும்போதே என் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய நினைக்கிறேன். அதற்கு ஒரே வழி தோட்டங்களை தனியாருக்கு வழங்குவது தான். தோட்டங்களைத் தனியாருக்கு வழங்கினால் அத்து மீறல் குடியேற்றங்களை கம்பனிகள் தடுத்து விடும். நினைத்த நேரத்தில் அரசியல்வாதிகளுக்கு தோட்டக் காணிகளைப் பெற முடியாது. அத்துமீறிய குடியேற்றத்தை ஊக்குவிக்க முடியாது. எவ்வாறு வெள்ளைக்காரன் காலத்தில் தனியாருக்கு தோட்டக்காணிகளை ஆக்கிரமிக்க முடியாமல் இருந்ததோ அதே போன்ற நிலையை உருவாக்கும். தனியார் கம்பனிகளுக்கு தோட்டங்களை நீண்டகால குத்தகைக்கு வழங்குவதன் மூலமே இதனை செய்ய முடியும். அதனாலேயே நான் தனியார்மயத்தை ஆதரிக்கின்றேன் என்றார்.
இதனை நான் இருக்கும் போதே செய்துவிடவேண்டும். இதனை உங்களது பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டாம் எனவும் கூறினார். இதனை அவர் கூறும்போது நண்பர் அந்தனி ஜீவாவும் என்னுடன் இருந்தார்.
திரு. தொண்டமான் கூறியதை இங்கு நான் எதற்காக குறிப்பிடுகின்றேன் எனில், 1000 ரூபா சம்பள பிரச்சினை தொடர்கின்ற இவ்வேளையில் வெளியார் உற்பத்தி என்ற கருத்து அறிவுஜீவிகள், அரசியல்வாதிகள் மற்றும் கம்பனிகள் மத்தியில் பேசு பொருளாக இருக்கின்றது. தோட்டத் தொழிலாளரின் வேதன உயர்வு வரலாற்றைப் பொருத்தவரை அவர்கள் ஒருபோதும் தமது வாழ்க்கைச் செலவிற்கேற்ப வேதன உயர்வினைப் பெற்றதில்லை. பெறப்போவதும் இல்லை. காரணம் யாதெனில், ஆரம்பம் முதலே பின்பற்றப்பட்டு வரும் சம்பள அதிகரிப்பு முறையே இதற்கான காரணம்.
அண்மைய வரவு – செலவு திட்டத்தில் 1000 ரூபா சம்பளம் தோட்டத்தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. வரவு – செலவு திட்டத்தின் ஊடாக சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் எனக் கூறப்பட்டவுடன் தோட்டத் தொழிலாளர்களில் சிலர் சந்தோசமடைந்ததுடன் பலர் ஆரவாரமின்றி அமைதியாக இருந்ததைக் காண முடிந்தது. 1000 ரூபா சம்பள அதிகரிப்பு இன்றுள்ள வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடுகையில் போதாது என்பதை தொழிலாளர்களும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத் தலைமைகளும் நன்கு அறிவர். அதேவேளை தோட்டக் கம்பனிகளும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளிமார் சம்மேளனமும் இதனை நன்கு அறியும். 1000 ரூபா சம்பள அதிகரிப்பு கோரிக்கை ஐந்து வருடங்களுக்கு முன்னர் முன்வைக்கப்பட்டதாகும். ஒரு வேளை அரசாங்கத்தின் அழுத்தத்தின் காரணமாக தோட்ட கம்பனிகள் 1000 ரூபா சம்பளத்தை கொடுக்க முன்வந்தாலும் அடுத்து வரும் இரண்டு வருடத்தில் சம்பள அதிகரிப்பினை கோரவே வேண்டும்.
சம்பள அதிகரிப்பு என்பது நாட்டில் நிலவும் வாழ்க்கைச் செலவுடன் ஒட்டியதாகும். வாழ்க்கைச் செலவு அதிகரிக்க அதிகரிக்க தொழிலாளார்கள் சம்பளத்தைக் அதிகரிக்கும்படி கோருவர். எனவே, தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு என்பது தொடர் நிகழ்வாகும். சம்பள அதிகரிப்பு போராட்டம் இரண்டு அல்லது நான்கு வருடத்திற்கு ஒரு முறை எழலாம் அல்லது பணவீக்கத்தின் காரணமாக எழும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் காரணமாக திடீரெனவும் எழலாம். எனவே, இதற்கு மாற்று முறையொன்றினை கண்டறிவது அவசியம். அவ்வாறு கண்டறியும் போது மறைந்த திரு. சௌமியமூர்த்தி தொண்டமான் கூறிய கருத்தினையும் கவனத்தில் கொண்டே மாற்றுத் திட்டத்தைக் கண்டறிய வேண்டும். வெளியார் உற்பத்தி முறை என்ற பெயரில் காணிப்பகிர்வு நடைபெறுகையில் தோட்டத் தொழிலாளர்களைத் தவிர்த்து பிறருக்கும் காணி பகிர்ந்தளிக்கப்படுமேயானால் தோட்டத்தொழிலாளர்களில் செறிவு குறைவடைவதுடன் அதற்கேற்றவாறு அவர்களது அரசியல் பிரதிநிதித்துவம் பிரதேச, மாகாண மற்றும் நாடாளுமன்றத்தில் குறைவடையும் அபாயம் ஏற்படும்.
1972-75 ஆம் ஆண்டு தோட்டங்கள் அரசுடமையாக்கப்பட்டதுடன் தோட்டக்காணிகள் கிராமத்தவர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டன. இதனால், தோட்ட மக்களில் ஒரு பிரிவினர் தமது இருப்பிடங்களை இழந்து வடக்கு நோக்கி செல்ல நேர்ந்தது. எஞ்சியோர் தோட்ட லயன் காம்பிராக்குள் எல்லைப்படுத்தப்பட்டனர். தோட்டக்காணிகள் கிராமத்தவர்களுக்கு வழங்கப்பட்டதுடன் லயன்கள் சிங்கள குடியேற்றங்களினால் சுற்றி வளைக்கப்பட்டன. குறிப்பாக கண்டி, மாத்தளை மாவட்டங்களில் வாழ்ந்த மக்கள் வட கிழக்கிற்கு குடியகல நேர்ந்ததுடன் எஞ்சியோர் லயன்களுக்குள் முடக்கப்பட்டனர். இதனால், மலையக மக்களின் செறிவு இம்மாவட்டங்களில் குறைவடைந்து இன்று அரசியல் பிரதிநிதித்துவத்தை முழுமையாகப் பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 1975 க்கு முன்னர் கண்டி மாவட்டத்திலும் மாத்தளை மாவட்டத்தில் காணப்பட்ட பல தோட்டங்கள் இன்று இல்லை. எனவே, இந்நிலையை கவனத்தில் எடுத்துக் கொண்டே வெளியார் உற்பத்தி முறையின்பால் கவனம் செலுத்த வேண்டும். தோட்ட மக்களது வருமானமும் அதிகரிக்கப்படவேண்டும். அதேபோல் அவர்களது செறிவும் குறைவடைய இடமளிக்கலாது.
இன்றைய நிலையில் சில கம்பனிகள் தமது இலாபத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் சில மாற்று உற்பத்தி உபாயங்களை பரீட்சாத்தமாக அறிமுகப்படுத்தியுள்ளன. தனியார் கம்பனிகளுக்கு முன் அரசின் கீழ் உள்ள எல்கடுவ மற்றும் ஜனவசம கம்பனி தனியார் உற்பத்தி முறையை அறிமுகப்படுத்தி தோல்வி கண்டுள்ளன. இவ்வனுபவத்தையும் கருத்திற்கொண்டு சில தோட்டக் கம்பனிகள் தனியார் உற்பத்தி முறையை அறிமுகப்படுத்தியுள்ளன. மதுரட்ட தோட்டக் கம்பனி மாவோ தோட்டத் தொழிலாளர்களை தோட்டத்தொழிலிலிருந்து முற்றாக நீக்கி தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 1500 – 3500 தேயிலை மரங்கள் என கணக்கிட்டு தோட்டக் காணியை பிரித்துக் கொடுத்துள்ளதுடன் அதனை கண்கானிக்க தோட்டத்துரை ஒருவரை நியமித்தது. தோட்டக் காணிகளை பகிர்ந்தளிக்கும் போது தோட்டத்தினால் வழங்கப்படும் அனைத்து சமூக சேவைகளை வழங்குவதாக உத்தரவாதமளிக்கப்பட்டது. ஆரம்பத்தில் தோட்டத் தொழிலாளர்களின் வருமானம் 20 ஆயிரம் ரூபாவிலிருந்து 30 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. பின்னர் இத்தோட்டத்தை பயோ டீ எனும் கம்பனிக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளது. பயோ டீ கம்பனி சேதன பயிர்செய்கையை மேற்கொள்ளுமாறு தொழிலாளர்களைப் பணித்தது. தோட்டத் தொழிலாளர்கள் சேதனப் பயிர்ச்செய்கைக்கு மாறியதுடன் பச்சை கொழுந்து உற்பத்தி குறைந்ததுடன் வருமானமும் குறைந்தது. தற்போது பல தோட்டக் காணிகள் பராமரிப்பற்ற நிலையில் உள்ளதுடன் தோட்டத் தொழிலாளர்கள் வெளி வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
இன்னுமொரு கம்பனியான களனிவெலி தோட்டக் கம்பனி நுவரெலிய தோட்டத்தில் ‘புளக்’ முறையெனும் வெளியார் உற்பத்தித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி அத்தோட்டத்தின் ‘பணிய’ டிவிசனிலுள்ள தேயிலை மரங்கள் தோட்ட குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 3000 தேயிலை மரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தோட்ட வேலை நேரத்திற்குப் பின்னர் அல்லது லீவு நாட்களிலேயே தனக்கு வழங்கப்பட்ட காணிகளில் வேலை செய்ய வேண்டும். தோட்டத்தில் 25 நாட்கள் வேலை வழங்கப்படுகின்றது. பறிக்கும் கொழுந்தின் அளவிற்கு கொடுப்பனவு வழங்கப்படும். சம்பளத்திற்கு மேலதிகமாக மாதம் பத்தாயிரம் வருமானமாக் கிடைப்பதாகக் கூறுகின்றனர்.
இதேவேளை, இதே களனிவெலி கம்பனி டிக்கோயா, பட்டல்கள தோட்டத்தில் இன்னுமொரு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அத்தோட்ட ‘மேல்’ டிவிசனில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 தேயிலை மரங்களை இரண்டு வருட குத்தகைக்கு தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளது. தொழிலாளர்கள் மாதாந்தம் 5000 ரூபாவை மேலதிக வருமானமாகப் பெறுகின்றனர். பறிக்கும் கொழுந்தினை சந்தை விலைக்கேற்ப தோட்டத்திற்கு வழங்குகின்றனர். தோட்ட வேலையை செய்துக் கொண்டே தனக்கு வழங்கப்பட்ட மரங்களை பராமரிக்கின்றனர்.
இதே களனிவெலி கம்பனி, கஹவத்த என்தான தோட்டத்தில் இன்னுமொரு முறையினை அறிமுகப்படுத்தியுள்ளது. இங்கு தோட்டத்தில் வேலை செய்யும் ஒரு குடும்பத்திற்கு 1750 மரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தோட்டத்தில் ஆண் பெண் இருபாலரும் 2 மணிவரை வேலை செய்ய வேண்டும். அதன் பின்னர் தமக்கு வழங்கப்பட்ட காணிகளில் வேலை செய்யலாம். தோட்டத்தில் பத்து நாட்கள் மட்டுமே வேலை தரப்படுகின்றது. அதற்கு ஊழியர் சேமலாபநிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் வழங்கப்படுகின்றது. மிகுதி 20 நாட்கள் அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட காணியில் வேலை செய்ய வேண்டும். அதனைப் பராமரிப்பதற்கான உரம் முதலியவற்றினை தோட்டம் வழங்கும். அதற்கான செலவினை தொழிலாளரிடமிருந்து தவணை முறையில் அறவிட்டுக்கொள்கின்றது. நிலவும் தேயிலை சந்தை விலைக்கேற்ப கொழுந்தினை தோட்டம் பெற்றுக்கொள்ளும். இதனால், தோட்டத் தொழிலாளர்கள் சராசரி 20 ஆயிரம் ரூபாவை மாத வருமானமாகப் பெறுகின்றனர்.
இறுதியாக கூறப்பட்ட என்தான தோட்ட முறையையே முன்னால் தோட்டதுரைமார் சங்கத் தலைவரும் களனிவெலி கம்பனியின் இயக்குனருமான திரு. ரோசான் ராஜதுரை விதந்துரைத்துள்ளார். இத்திட்டத்தை அனைத்து கம்பனிகளும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டதாக இல்லை. இருப்பினும் இம்மாற்று வெளியார் உற்பத்தி முறையும் இப்போது பேசுப் பொருளாக உள்ளது.
கம்பனிகளினால் அறிமுகப்படுத்தப்பட்ட வெளியார் உற்பத்தித் திட்டத்தை விட இன்னுமொரு வெளியார் உற்பத்தி முறை தென் மாகாணத்தில் பின்பற்றப்பட்டு வருகின்றது. அது கூட்டுறவு வெளியார் உற்பத்தி முறையாகும். தோட்டக் காணிகள் தனி குடும்பங்களுக்கு வழங்கிய வேளை தெனியாய, கொட்டபொல பிரதேச செயலகப்பிரிவிற்குற்பட்ட கொட்டபொல கூட்டுறவு சங்கம் கொட்டபொல தேயிலை சிறு உடமையாளர் கூட்டுறவு சங்கம் என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளது. இக் கூட்டுறவு சங்கத்தில் 2500 தேயிலை சிறு உடமையாளர்கள் அங்கம் வகிப்பதுடன், இச்சங்கம் தேயிலை தொழிற்சாலை ஒன்றினையும் உருவாக்கியுள்ளது. தேயிலை சிறு உடைமையாளர்களுக்கு உற்பத்தி தொடர்பான பயிற்சிகள் மற்றும் குறைந்த விலையில் உரம் வழங்குவதுடன் சந்தை விலைக்கேற்ப பச்சைக் கொழுந்தினை கொள்வனவு செய்கின்றது.
இதுதவிர சங்க சிறு உடைமையாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில், வருட இறுதியில் மிகவும் ஏழ்மையானவர்களுக்கு வீடு கட்டிகொடுத்தல், வருட இறுதி சுற்றுலா என்பவற்றுடன், தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களுக்கு இரவு நேர உணவு, காலை உணவு மற்றும் களைப்பாறுவதற்கு சிறந்த களைப்பாறும் அறைகள் என்பனவற்றினை வழங்கியுள்ளது. இதேவேளை தொழிலாளர் ஒருவர் நோய்வாய்ப்பட்டால் அவருக்கு சிகிச்சை அளிக்க பணவுதவியும் வழங்குகின்றது.
இவற்றுடன் தொழிற்சாலை கணினிமயப்படுத்தப்பட்டுள்ளது. சிறு உடமையாளர் வழங்கும் பச்சைக் கொழுந்து கணினி முறையில் நிறுக்கப்படுகின்றதுடன், அத் தகவல்கள் உடனுக்குடன் கூட்டுறவு சங்கத்தின் மத்திய பணிமனை கணினியில் உடன் பதிவு செய்யப்படுகின்றது. அத்துடன், சிறு உடமையாளர்களுக்கும் அத்தகவல் வழங்கப்படுகின்றது. சிறு உடைமையாளர்களின் தோட்டங்களை மேற்பார்வை செய்து அவர்களுக்கு நிபுணத்துவ அறிவுரை வழங்க பயிற்சி பெற்ற அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இச்சிறு உடைமை தேயிலை தொழிற்சாலை கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இதேபோல் 3000 தேயிலை சிறு உடைமையாளர்களை அங்கத்தினர்களாகக் கொண்ட இன்னுமொரு கூட்டுறவு தேயிலைச் தொழிற்சாலையும் இதே பகுதியில் செயற்பட்டு வருகின்றது.
மேற்கூறப்பட்ட முறைகளில் எது உகந்தது என்பதை ஆய்வுசெய்து தெரிவு செய்தல் அவசியமாகும். ஏனெனில், ஏதோ ஒருமுறையை அறிமுகப்படுத்தி தோட்டத் தொழிலாளர்களின் வருமானப் பிரச்சினைக்கு தீர்வுக்கானாவிட்டால் எதிர்வரும் காலங்களில் தோட்டத்தொழிலாளார் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும். அதேபோல் தோட்டத் தொழிற்துறையும் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும். ஒரு மாற்று முறையினைத் தெரிவு செய்கையில் பின்வருனவற்றை கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
- தனியார் கம்பனிகளிடம் உள்ள தோட்டக்காணிகளை அரசுடமையாக்கும் படி அல்லது மக்களுக்கு பிரித்துக் கொடுக்கும்படி கோருவதன் பிரதி விளைவை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. தோட்டக் காணிகள் அரசுடமையாக்கப்பட்டால் திட்டமிட்ட குடியேற்றம் நடைபெறும். மறுபுறம் சிங்கள அரசியல்வாதிகள் அத்துமீறிய குடியேற்றங்களை ஊக்குவிப்பர். இதனால், மலையக மக்களின் இனப்பரம்பல் விரிசலடையும். அதன் விளைவாக பிரேதேச, மாகாண மற்றும் நாடாளுமன்ற அவைகளில் மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறைவடையும் அல்லது இல்லாமற் போகும் (தற்போது அரசின் கீழ் உள்ள ஜனவசம, அரச பெருந்தோட்டயாக்கம் மற்றும் எல்கடுவ தோட்டக்கம்பனிகளின் காணிகள் கிராமத்தவர்களுக்கும், தனியார் கம்பனிகளுக்கும் பகிர்ந்தளிக்கின்றமை இதற்கு நல் உதாரணம். மேலும், அரசாங்கம் ஒரு லட்சம் பேருக்கு காணி வழங்க உறுதியளித்துள்ளது. தற்போது தோட்டங்களின் இரு பகுதிகளில் உள்ள ரயில்வே காணிகளை அரசாங்கம் மீளப்பெறும் முயற்சியில் ஈடுபடுவதை அறிய முடிகின்றது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தவேளை 37 ஆயிரம் ஹெக்டயார் தோட்டக்காணியை பகிர்ந்தளிக்க முயற்சிகள் மேற்கொண்டதை இங்கு கவனத்தில் கொள்வது நன்று. இக்காணிகள் சொந்தமாக தனியாருக்கு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது தோட்ட மக்களுக்கும் காணிகள் சொந்தமாக வழங்கப்படவேண்டும் என குரல் எழுப்பப்பட்டமையினால் அம்முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஒருபோதும் எந்தவொரு அரசாங்கமும் தோட்டக்காணிகளை தோட்டத் தொழிலாளர்களுக்கு சொந்தமாக வழங்க முன்வராது என்பதை கவனத்தில் இருத்திக் கொள்ளல் வேண்டும். எனவே, இச்சூழலின் கீழ் எவ்வாறு மலையக தோட்ட மக்களின் இருத்தலையும், பொருளாதாரத்தையும் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றியும் கவனம் செலுத்தவேண்டியுள்ளது).
- உள்ளக வெளியார் உற்பத்தியை அறிமுகப்படுத்துவதை கோருவதாயின். வெளியார் உற்பத்தி என்ற பெயரில் தோட்டத்தில் பணிபுரியாதவர்களுக்கு தேயிலைக் காணிகளைப் பகிர்ந்தளிக்க இடமளிக்கலாகாது.
- உள்ளக வெளியார் உற்பத்தியை ஏற்பதாயின் தோட்டத் தொழிலாளர்களுக்கு முப்பது வருட குத்தகையின் அடிப்படையில் காணிகளை வழங்கும் படி கோர வேண்டும். வழங்கப்படும் காணிகளின் ஓரங்களில் அல்லது மீள்நடவு செய்ய முடியாத வெற்றிடத்தில் வருமானத்திற்காக பழ மரங்களை உருவாக்க வாய்ப்பளிக்கும்படி கோர வேண்டும். தரிசு நிலங்களில் புற்கள் வளர்ப்பதற்கும் கால்நடை வளர்ப்பிற்கும் இடமளிக்க கோர வேண்டும்.
- உள்ளக வெளியார் உற்பத்தியை கண்காணிக்கும் பொறுப்பினை கம்பனிக்கே வழங்கும்படி கோர வேண்டும். உப கம்பனிகளுக்கு வழங்க இடமளிக்களாகாது.
- காணிகள் பராமரிப்பதில் குறைபாடுகள் காணப்படுமாயின் அக்காணியை மீண்டும் தோட்டக்கம்பனிகளுக்கே வழங்கும் அதிகாரம் உள்ளடக்கப்படவேண்டும்.
- உள்ளக வெளியார் உற்பத்தியை அறிமுகப்படுத்தும் கம்பனிகள் தொழிலாளர்களுக்கு ஒரு நேர வேலை வழங்கலை அறிமுகப்படுத்த வேண்டும். அதாவது ஒரு மணியுடன் வேலை நிறுத்தப்பட வேண்டும். அதன் பின்னர் அவர்களுக்கு வழங்கப்பட்ட காணியில் சுய விருப்பின் பேரில் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்.
- உரம், கவ்வாத்து முதலிய பராமரிப்பு செலவுகளை குறிப்பிட்ட காணி உரித்தாளர்களிடம் அறவிடுவதாயின் சந்தை விலைக்கே பச்சைத் தேயிலையை தோட்டக் கம்பனி கொள்வனவு செய்ய வேண்டும்.
- நட்டமடையும் அரச தோட்டங்களையும், தனியார் தோட்டங்களையும் கூட்டறவு அமைப்பு முறையின் கீழ் கொண்டு வந்து தோட்டத் தொழிலாளர்களை பங்குதாரர்கள் ஆக்கி தோட்டங்களை நடாத்த வேண்டும்.
பெ.முத்துலிங்கம்