பட மூலம், Eranga Jayawardena Photo, HRW

பெண்களை மிகப்பெரும்பான்மையாகக் கொண்ட கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களை சட்டவிரோதமான முறையிலும் பாதுகாப்பற்ற முறையிலும் மனிதாபிமானமற்ற முறையிலும்  தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியமைக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுதந்திர வர்த்தக வலயத் தொழிற்சாலை ஊழியர்களுடன் பரந்த அளவிற்குப் பணியாற்றும் நிறுவனங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் சமிலா துஷாரி, சந்ரா தேவநாராயண, அஷிலா தந்தெனிய மற்றும் அருட்சகோதரி நொயெல் கிறிஸ்டின் பெர்ணாண்டோ ஆகியோரே முறைப்பாட்டை மேற்கொண்டிருக்கின்றனர்.

தன்னிச்சையான முறையில் சட்டவிரோதமாகத் தொழிலாளர்கள் சுற்றிவளைக்கப்பட்டு குரூரமாகவும் மனிதாபிமானமற்ற முறையிலும் அல்லது அவமானப்படுத்தும் முறையிலும் நடத்தப்பட்டமை தொடர்பிலும் அரசியலமைப்பின் உறுப்புரைகள் 11, 12(1), 12(2), 13(1), 13 (2), 14(1) (h) ஆகியவற்றின் கீழ் உத்தரவாதப்படுத்தப்பட்ட நடமாட்ட சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டமை தொடர்பிலும் பொருளாதார மற்றும் சமூக அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையில் சட்டத்தின் சமமான பாதுகாப்பு மட்டுப்படுத்தப்பட்டு பாகுபாடு காட்டப்பட்டமை தொடர்பிலும் விசாரணை ஒன்றினை முன்னெடுக்குமாறு முறைப்பாட்டாளர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கொவிட்-19 தொற்றினைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் (NOCPCO) தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராகவும், 98 தொழிலாளர்களையும் சுற்றிவளைப்பதற்காகச் சென்ற இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகவும் இந்த முறைப்பாடு சுற்றிவளைக்கப்பட்ட 98 தொழிலாளர்களின் சார்பில் முன்வைக்கப்படுள்ளது.

NOCPCO தலைவர் என்கின்ற ரீதியிலும் இராணுவத் தளபதி என்கின்ற ரீதியிலும் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறார். இவரின் பணிப்புரை இன்றி இராணுவ அதிகாரிகள் இந்த நடவடிக்கையினை நடத்தியிருக்க முடியாது என்றும், சமூகமளித்த இராணுவ அதிகாரிகள் ஒவ்வொருவரினதும் பெயர்களை நாம் எதிர்காலத்தில் அறிந்துகொண்டால் அவற்றினை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கான உரிமையினை கொண்டுள்ளோம் என்றும் முறைப்பாட்டாளர்கள் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்கள்.

முறைப்பாட்டிற்கான பின்புலத்தை அறிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்.

அண்மைய நெருக்கடியினை அரசாங்கமும் இராணுவமும் கையாண்ட விதம், குறிப்பாகப் பெண் தொழிலாளர்கள் இவர்களினால் கையாளப்பட்ட விதம், தெளிவான தகவல்களோ அல்லது விழிப்புணர்வோ இல்லாமை, பாதுகாப்பற்ற போக்குவரத்து, துப்பரவற்ற தனிமைப்படுத்தல் வசதிகள் மற்றும் தொழிலாளர்களைப் பஸ்களில் ஏற்ற முன்னரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அனுமதிக்க முன்னரும் பிசிஆர் பரிசோதனை நடத்தப்படாமை ஆகியவை அரசாங்கம் கூறிவரும் அடிப்படை கொவிட்-19 ஒழுங்குவிதிகளை தெளிவாக மீறும் வகையில் உள்ளதென முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் படி பிரதிவாதிகளால் மீறப்பட்ட அடிப்படை உரிமைகள் என முறைப்பாட்டில் உள்ளடக்கப்பட்டிருப்பவை:​

  • ஆடைத் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் 98 பேரையும் சுற்றிவளைத்து கைதுசெய்து அவர்களை அழைத்துச்சென்று, களுத்தறையில் உள்ள பெயர் குறிப்பிட்டுக் கூறப்படாத ஓரிடத்தில் தடுத்துவைத்தமை உறுப்புரைகள் 12(1), 13(1) மற்றும் 13(2) ஆகியவற்றினை மீறியுள்ளது.
  • 98 தொழிலாளர்களும் தடுத்துவைக்கப்பட்டுள்ள ‘தனிமைப்படுத்தல் மையங்கள்’ சட்டரீதியாக உருவாக்கப்பட்டவை அல்ல என்பதால் இவ்வாறான மையங்களில் இவர்களைத் தடுத்துவைத்திருப்பது சட்டத்தினால் உருவாக்கப்பட்ட செயல்விதிகளுக்கு அமைவானது அல்ல என நாம் குறிப்பிடுகின்றோம். எனவே, பெயர் குறிப்பிடப்படாததும் சட்டவிரோதமானதுமான தனிமைப்படுத்தல் மையங்களில் இவர்களைத் தடுத்துவைத்திருப்பது உறுப்புரைகள் 12(1), 13(2), 14(1)(h) ஆகியவற்றினை மீறுகின்றமையாகும்.
  • பெண் தொழிலாளர்களின் விடுதிகளினுள் ஆண் இராணுவ உத்தியோகத்தர்கள் நுழைந்து இச்சட்டவிரோத மற்றும் தன்னிச்சையான கைதினையும் தடுத்துவைப்பினையும் நிகழ்த்தியுள்ளனர். இது உறுப்புரைகள் 12(1), 13(2) ஆகியவற்றின் மீறுவதாகும்.
  • பரிசோதனைகளை மேற்கொள்ளாது தொழிலாளர்களைச் சுகாதாரக் கேடுமிக்க தனிமைப்படுத்தல் மையங்களில் ஒன்றுசேர்த்து வைத்திருப்பதன் மூலம் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகும் ஆபத்தினை அதிகரிக்கின்றமை உறுப்புரை 11 இனை மீறுகின்ற செயலாகும். தொழிலாளர்கள் இராணுவ அதிகாரிகளினால் மனோரீதியான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் மனிதாபிமானமற்ற முறையில் அல்லது அவமானமிகு முறையில் நடத்தப்பட்டுள்ளனர்.
  • இக்குறிப்பிட்ட தனிமைப்படுத்தல் நிலையத்தினை விட்டு இந்த 98 தொழிலாளர்களும் வெளியேறுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கு எக்காரணமும் வழங்கப்படவில்லை. இது உறுப்புரை 14(1)(h) இனை மீறுகின்றமையாகும்.
  • இந்த 98 தொழிலாளர்களும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு அவசியமான பொருட்களைப் பொதிசெய்வதற்குக் கூடப் போதிய நேரம் வழங்கப்படாது, பஸ்களில் திணிக்கப்பட்டு, பெயர் தெரியாத இடங்களில் சுகாதாரக் கேடான சூழ்நிலையில் வைக்கப்பட்டு, உண்பதற்கு ஒழுங்காக உணவு கூட வழங்கப்படாது, எந்த ஒரு மனிதனும் நடத்தப்படக்கூடாத விதமாக நடத்தப்பட்டுள்ளனர். மேலே குறிப்பிட்ட அனைத்து மீறல்களுக்கும் அப்பால் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் என்கின்ற இவர்களின் பொருளாதார வகுப்பு காரணமாக இவர்கள் பாகுபாட்டுக்கு உட்படுத்தப்பட்டமையால் உறுப்புரை 12(2) உம் மீறப்பட்டுள்ளது.

இச்சட்டவிரோதமானதும் தன்னிச்சையானதுமான சுற்றிவளைப்பும் தடுத்துவைப்பும் மேற்கொள்ளப்பட்ட முறையின் காரணமாக கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகும் அச்சுறுத்தலைத் தொழிலாளர்கள் கொண்டுள்ள காரணத்தினால் பிரதிவாதிகளான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இலங்கை இராணுவ அதிகாரிகளின் நடத்தை தொடர்பாக விசாரிக்குமாறு நாம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முழுமையான முறைப்பாட்டை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.