பட மூலம், AFP/ Ishara S. Kodikara, Asia Times

தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு கௌரவமான தீர்வொன்றை காண்பதற்கும் அந்த மக்களுக்கு சிறப்பான வாழ்வை கொடுப்பதற்குமான குறிக்கோளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறுகிறார்.

போரின் பின்னரான தசாப்தத்தில் பிரதானமாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வாழுகின்ற மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஆகஸ்ட் பொதுத்தேர்தலில் பெரிய பின்னடைவை சந்தித்தது. முன்னைய நாடாளுமன்றத்தில் 16ஆசனங்களைக் கொண்டிருந்த கூட்டமைப்பு, 6ஆசனங்களை இழந்து தற்போது 10 எம்.பிக்களுடன் நாடாளுமன்றத்தில் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் கூட்டமைப்பின் பிரசன்னம் பலவீனப்பட்டிருப்பதுடன் மத்தியில் மீண்டும் ராஜபக்‌ஷாக்கள் அதிகாரத்துக்கு வந்திருக்கும் நிலையில், அதுவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களை அவர்கள் கைப்பற்றியிருப்பதற்கு மத்தியில், அரசியல் தீர்வொன்றுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நீண்டகால கோரிக்கையின் எதிர்கால வாய்ப்புகள் எவ்வாறு அமையும்? அது குறித்து சுமந்திரன் ‘த இந்து’ இதழின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசனுக்கு அளித்த விரிவான நேர்காணல் ஒன்றில் விளக்கமளித்திருக்கிறார்.


பட மூலம், The Diplomat

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகஸ்ட் நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்தது. அது, கடும்போக்கு தேசியவாதிகளுக்கும் ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் நேச அணிகளுக்கும் அதன் ஆசனங்களை இழந்திருக்கிறது. இது பற்றி கூட்டமைப்பின் சிந்தனை விளக்கம் என்ன?

பதில்: இது மிகவும் பாரதூரமான ஒரு பின்னடைவு. நாடாளுமன்றத்தில் எமது பிரதிநிதித்துவம் 16 ஆசனங்களிலிருந்து 10 ஆசனங்களாக குறைந்திருக்கிறது. 2018 பெப்ரவரி உள்ளூராட்சித் தேர்தல்களுடன் ஒப்பிடும்போது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் பெரும் வித்தியாசம் கொண்டவையல்ல.

எமது பின்னடைவுக்கு பிரதானமான காரணம் 2015-2019வரை சிறிசேன – விக்கிரமசிங்க அரசாங்கம் பதவியிலிருப்பதற்கு நாம் வழங்கிய ஆதரவேயாகும். அந்த அரசாங்க காலத்தில் மக்கள் மிக உயர்ந்த எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தார்கள். அந்தக் காலகட்டத்தில் தங்களது சகல பிரச்சினைகளும் முழுமையாக தீர்க்கப்பட்டுவிடும் என்று மக்கள் நம்பினார்கள். பெருமளவான விவகாரங்களில் கனிசமான முன்னேற்றங்கள் காணப்பட்டாலும் போரின் பின்னர் தீர்க்கப்பட வேண்டியிருந்த சகல பிரச்சினைகளும் முழுமையாக தீர்க்கப்படவில்லை. இது தொடர்பில் மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றமும் விரக்தியும் ஏற்பட்டதாக நான் நினைக்கிறேன்.

தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான கோரிக்கையான அரசியல் தீர்வுகூட உறுதியளிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பின் ஊடாக தீர்க்கப்படவில்லை. அந்த முனையிலும்கூட நாம் பெரிய முன்னேற்றம் கண்டிருந்தோம். ஆனால், இறுதியில் கேள்வி, தீர்வு சாதிக்கப்பட்டதா இல்லையா என்பதேயாகும். அதை சாதிக்கவில்லையென்றால் அது தோல்வியாகவே கருதப்படும். இராணுவம் கையகப்படுத்தியிருந்த நிலங்களை விடுவிப்பது தொடர்பில் கனிசமான பலன்கள் ஏற்பட்டன. ஆனால், ஒட்டுமொத்தத்தில் நோக்குகையில், மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை என்பதால் (நாம் ஆரம்பத்திலிருந்து எதிர்க்கட்சியாக இருந்திருந்தாலும்) பதவியிலிருந்த அரசாங்கத்துக்கு எதிரான மக்களின் உணர்வுகளினால் நாமும் பாதிக்கப்பட்டோம்.

இரண்டாவதாக, எமது கட்சி பிரதானமாக அல்லது முழுமையாக என்றும் சொல்லலாம், அரசியல் தீர்வொன்றையே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. எமது மக்கள் எதிர்நோக்கிய பொருளாதாரப் பிரச்சினைகள் பலவற்றை நாம் கவனிக்காமல் விட்டுவிட்டோம். அந்தக் கடைசி ஐந்து வருடங்களில்  பொருளாதார விடயங்களில் சிலவற்றை தீர்ப்பதற்கு முயற்சித்தோம். ஏனென்றால், பதவியிலிருந்த அரசாங்கம் எமக்கு அனுகூலமானதாக இருந்ததேயாகும்.

என்றாலும்கூட, மக்களால் உண்மையில் பயன்பெற முடியவில்லை. அரசியல் தீர்வும் எம்மைவிட்டு நழுவிச்சென்ற நிலையில் குறைந்தபட்சம் தங்களது பொருளாதார நிலைமையாவது மேம்படும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு பலத்த ஏமாற்றமாக போய்விட்டது. வேறு காரணமும் இருக்கலாம். ஆனால், இந்த இரண்டு காரணமே எமது தேர்தல் பின்னடைவுக்கு அதாவது கடும்போக்கு தேசியவாத தமிழ்த் தரப்பினருக்கு எமது ஆசனங்களை நாம் இழப்பதற்கு பிரதானமானவை என்று நான் நினைக்கிறேன். அந்தக் கடும்போக்கு தேசியவாத தரப்பினர் தமிழர் தேசிய பிரச்சினைக்கு இறுதித் தீர்வொன்றை எதிர்பார்க்கிறார்கள். சிறப்பான பொருளாதார வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டிருந்த மக்களில் ஒரு பகுதியினரை கவரக்கூடிய வாக்குறுதிகளை அவர்கள் வழங்கினார்கள்.

கேள்வி: முன்னோக்கி செல்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்யப்போகிறது?

பதில்: கூட்டமைப்பு தமிழர் தேசியப் பிரச்சினைக்கு கௌரவமான அரசியல் தீர்வொன்றை காணும் குறிக்கோளை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும். அது அடிப்படையானதாகும். அந்த விவகாரத்தில் எமது முயற்சிகள் தொடரும். எமக்கு இப்போது கிடைத்திருக்கும் ஜனநாயக வெளியில் அதுவும் நாட்டின் சனத்தொகையில் மிகவும் பெரும்பான்மையினராக சிங்களவர்களும் பௌத்தர்களும் இருக்கும் நிலையில், அரசியல் தீர்வொன்றை காணுவதற்கு பெரும்பான்மை சமூகத்தின் கனிசமான பிரிவினரை நாம் வென்றிருக்க வேண்டும் என்பதை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். அவ்வாறு அவர்களின் ஆதரவை வென்றெடுக்காவிட்டால் தீர்வு சாதிக்கப்படமுடியாததாகும். பெரும்பான்மை சமூகத்தினரை தொடர்ந்தும் அந்நியப்படுத்திக்கொண்டு போனால் அவர்களின் அச்சங்கள் அதிகரிக்குமானால் நிச்சயமாக தீர்வை சாதிக்க முடியாது. அது ஒரு விடயம்.

மற்றைய விடயம், ஒரு அரசியல் கட்சி என்ற வகையிலும் கூட எமது மக்களுக்கு சிறப்பான பொருளாதார வாழ்வை கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளில் எம்மை ஈடுபடுத்த வேண்டும். இது தொடர்பில் அரசாங்கம் ஒத்துழைக்காமல் இருக்குமேயானால், அடுத்து நாம் குறைந்தபட்சம் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்க வேண்டும். எமது புலம்பெயர் சமூகத்தின் பங்கேற்பினூடாக பொருளாதார செயற்பாடுகளை அதிகரிக்க வேண்டும். அதற்காக களத்தில் நிலைவரங்கள் மாற்றியமைக்கக்கூடிய குறிப்பிட்ட சில கட்டமைப்புகளை நாம் உருவாக்க வேண்டியிருக்கிறது.

கேள்வி: நீதி தொடர்பான பிரச்சினை பற்றி என்ன கூறுகிறீர்கள்?

பதில்: நீதி சம்பந்தப்பட்ட பிரச்சினை அரசியல் தீர்வுடன் தொடர்புடையது. இனமோதல் காரணமாகவே நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான பிரச்சினைகள் எழுந்தன. எமது நியாயபூர்வமான அரசியல் தீர்வுகளை கேட்டபோதெல்லாம் வன்முறைகளால் பாதிக்கப்பட்டோம். அதனால் அரசியல் உரிமைக்கான போராட்டம் எல்லாமே வன்முறையாக மாறி இறுதியில் முழுஅளவிலான போருடன் முடிவுக்கு வந்தது.

நீதிக்கான ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையின் செயன்முறையை பொருத்தவரை அது நிலைமாறுகால நீதி என்ற வடிவத்தை எடுத்தது. அதில் உண்மை, நீதி, இழப்பீடுகள் மற்றும் மீண்டும் நிகழாது என்ற உத்தரவாதம் ஆகியவை சம்பந்தப்பட்டிருக்கின்றன. 2015இல் இலங்கை அரசாங்கம் புதிய அரசியலமைப்பு ஒன்றின் வழியாக அரசியல் தீர்வொன்றை வழங்க முன்வந்தது. இது மீண்டும் முன்னரைபோன்று வன்முறைகளோ பாகுபாடுகளோ இடம்பெறாது என்ற உத்தரவாதம் போன்று அமைந்திருந்தது. நிலைமாறுகால நீதியின் ஏனைய தூண்களும் முக்கியமானவை. அவற்றை அடைவதற்கும் நாங்கள் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருந்தோம். ஆனால், இறுதியில் இனநெருக்கடிக்கான அடிப்படை காரணத்துக்கு நிரந்தரமான தீர்வொன்றுக்கு வழிவகுப்பதாக இருக்க வேண்டும். சில சந்தர்ப்பங்களில் பிரச்சினைகளின் அடிப்படை காரணிகளுக்கு தீர்வுகண்டு பிறகு இடைக்கால தீர்வாக நீதி பிரச்சினைகளை நோக்குவது சிறப்பானதாக இருக்கும். இது நாம் தென்னாபிரிக்காவில் கற்றுக்கொண்டதாகும். இது கடந்த காலத்தைத் திரும்பிப் பார்ப்பதற்கு முன்னதாக எதிர்காலத்தை பாதுகாப்பானதாக உறுதிப்படுத்துவதாகும். அதுவே இந்தப் பிரச்சினைகளை கையாளுவதற்கு கூடுதலானளவுக்கு நியாயமானதும் அறிவுபூர்வமானதுமான ஒரு வழியாகும் என்று நான் நினைக்கிறேன். இந்தக் காரணியின் விளைவாக எமது அரசியல் நிகழ்ச்சி நிரலில் அரசியல் தீர்வொன்றை காண்பதற்கான எமது முயற்சிகள் பிரதான இடத்தை பெறுகின்றன.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்து கடுமையாக நியாயப்படுத்திய 19ஆவது அரசியலமைப்பு திருத்தம் மேற்கொண்டு அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாடுகளை மேம்படுத்துவதற்கு அடிப்படையாக கருதிய 13ஆவது திருத்தமும் இப்போது அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கிறது. இது எவ்வாறு தேசிய அரசியலில் அதுவும் குறிப்பாக தமிழர்களின் நலனில் தாக்கத்தை ஏற்படுத்தும்?

பதில்: 2015இல் தோல்வியைச் சந்தித்த பிறகு மீண்டும் பதவிக்கு வருவதற்கான முயற்சியில் இன்றைய அரசாங்கம் பெரும்பான்மை சமூகத்தின் மத்தியிலுள்ள குறுகிய நோக்குடன் இனவாத சக்திகளை அணிதிரட்டியது. அத்துடன் சனத்தொகை எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கும் சமூகங்கள் பற்றி அந்த இனவாதிகளுக்கு இருக்கும் அச்சங்களைத் தூண்டிவிட்டது.

துரதிர்ஷ்டவசமாக இது பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் அரசியல்வாதிகளால் அடிக்கடி நாடப்படுகின்ற ஒரு அரசியல் விளையாட்டாகும். 2015 – 2019 காலகட்டத்தில் பதவியிலிருந்த முன்னைய அரசாங்கம் அதன் வாக்குறுதிகளை குறிப்பாக ஐக்கியப்பட்ட நாடொன்றுக்குள் நல்லிணக்கத்தை காண்பது தொடர்பில் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற தவறியமை தமிழ் மக்களின் நம்பிக்கையை மாத்திரமல்ல, சிங்கள பெரும்பான்மையினரின் நம்பிக்கையையும் பாதித்தது.

அதனால் அவர்கள் (ராஜபக்‌ஷாக்கள்) நாட்டில் வாழுகின்ற ஏனைய சமூகங்களுக்கு மேலாக சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை முன்னிலைப்படுத்த விரும்பிய உரத்து கூச்சலிடுகின்ற கடும்போக்கு சிங்களவாத சக்திகளின் ஆதரவுடன் மீண்டும் அதிகாரத்துக்கு வரக்கூடியதாக இருந்தது. அதிகாரத்துக்கு வந்ததும் இந்த அரசாங்கம் அந்த கடும்போக்கு சக்திகளை சாந்தப்படுத்துவதில் நாட்டம் கொண்டிருக்கிறது. அதாவது ராஜபக்‌ஷாக்கள் தங்களது அடிப்படை ஆதரவு சக்திகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நாட்டம் கொண்டிருக்கின்றார்கள். அதை செய்வதில் ஒரு புதிய அரசியலமைப்பு குறித்து ராஜபக்‌ஷாக்கள் உறுதியளித்தார்கள். ஆனால், இடைக்கால ஏற்பாடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி நாட்டிலுள்ள மற்றைய சமூகங்கள் எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய முறையில் பலம்பொருந்திய சிங்கள பௌத்த ஆட்சியாளராக இருப்பார் என்பதை காட்டுவதற்கும் பெரும்பான்மை சமூகத்தின் பாதுகாப்பும் உரிமைகளும் உறுதிப்படுத்தப்படும் என்று உத்தரவாதம் கூறுவதற்கும் அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை இப்போது முன்வைத்திருக்கிறார்கள்.

20ஆவது திருத்தச் சட்ட மூலம், 19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்துக்கு முன்னரான நிலைவரத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான நோக்கத்தை கொண்டிருக்கிறது. அந்த முன்னைய நிலைவரத்தில் எந்தவிதமான தடுப்புகளும் சமப்படுத்தல்களும் இல்லாத – உலகெங்குமே இல்லாத நிகரற்ற அதிகாரங்களுடனான பலம்பொருந்திய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி செய்தார். ஆனால், அது அரசாங்கத்தின் சொந்த ஆதரவாளர்கள் மத்தியில் கூட கவலைகளை தோற்றுவித்துள்ளது போல் தெரிகிறது. தற்போதைய ஜனாதிபதிகளின் கைகளில் இந்த அதிகாரங்கள் இருப்பது ஒரு மிகைப்படியானது என்று அல்லது இன்னொரு ஜனாதிபதி எதிர்காலத்தில் இந்த அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வாரென்று அவர்கள் நினைக்கிறார்கள். அதனால் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக தங்களது ஆதரவாளர்களுக்கு காட்டுவதற்கு ராஜபக்‌ஷாக்களின் அரசாங்கம் மேற்கொள்கின்ற முதல் முயற்சியே நெருக்கடிக்குள்ளாகியிருப்பது போல தோன்றுகிறது.

மேலும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை இல்லாதொழிப்பதற்கு நாடு விரும்புவதற்கு ஒரு பின்புலம் இருக்கிறது. கால் நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக பெரும்பான்மை சிங்கள சமூகம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி முறையை ஒழிப்பதற்கு திரும்பத் திருப்ப ஆணை வழங்கியிருக்கிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக்கு வந்தவர்களினால் அதிகாரங்கள் திரும்பத் திரும்ப துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை நாடு கண்டதே இதற்குக் காரணமாகும். அத்துடன், அந்த துஷ்பிரயோகங்கள் சிறுபான்மை சமூகங்களை மாத்திரமல்ல, பெரும்பான்மை சமூகத்தையும் கூட பாதிக்கிறது. மட்டுப்பாடற்ற அதிகாரங்களுடன் கூடிய நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகார துஷ்பிரயோக நினைவுகள் தென்னிலங்கை மக்கள் மத்தியிலும் கவலையை ஏற்படுத்திய ஒன்றாக இருக்கும். அதன் காரணத்தினால்தான் அரசியலமைப்புக்கான 19ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு அரசாங்கத்துக்கு வெளிப்படையான ஆணை வழங்கப்பட்டுள்ளபோதிலும் கூட அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்த வரைவு முன்வைக்கப்பட்டபோது அந்த ஆணையை கொடுத்தவர்களும்கூட சந்தேகப்பட ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த வகையான அதிகாரங்களை ஒரு நபரிடம் கொடுப்பதற்கு அவர்கள் விரும்பவில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பதற்கு குறைந்தபட்சம் 1994ஆம் ஆண்டிலிருந்து திரும்பத் திரும்ப தென்பகுதி வாக்காளர்களால் வழங்கப்பட்ட ஆணைகளிலிருந்து வேறுபட்டதாக ராஜபக்‌ஷாக்களுக்கு இத்தடவை வழங்கப்பட்ட ஆணையும் இல்லை. 2019 உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான இழுபறி காரணமாகவே இடம்பெறக் கூடியதாக இருந்ததென்றும் 19ஆவது திருத்தமே அதற்கு பொறுப்பு என்றும் அதனால் 20ஆவது திருத்தச் சட்டமூலம் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் சுமுகமாக செயற்படுவதற்கான ஏற்பாட்டுடனேயே பெருமளவுக்கு சம்பந்தப்பட்டது. ஆனால், 19ஆவது திருத்தச் சட்டமூலத்தில் முன்னதாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி வசமிருந்த அதிகாரங்களை மீண்டும் ஜனாதிபதிக்கு கொடுப்பதற்கு மக்கள் ஆணை வழங்கவில்லை.

அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை பொறுத்தவரை தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு தீர்வாக 1987இல் மாகாண சபைகள் அமைக்கப்பட்டபோதிலும் கூட தமிழ்த் தரப்பினரை அது திருப்திப்படுத்தவில்லை. 13ஆவது திருத்தம் மூலமாக மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானவையல்ல என்றும் நியாயமான முறையில் அதிகாரங்கள் பகிரப்படவில்லை என்றும் தமிழ்த் தரப்பினர் தொடர்ச்சியாக கூறிவருகின்றனர். மாகாண சபைகளின் அதிகாரங்களை பலப்படுத்துவது நாட்டின் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்ற பிரசாரத்தின் விளைவாக பெரும்பான்மை சமூகத்தின் அச்சங்களை அதிகரிப்பதற்கும் இது பங்களிப்பு செய்திருக்கிறது.

அதிகாரப் பகிர்வை அர்த்தபுஷ்டியானதாக்கும் முகமாக மாகாணங்களுக்கு கூடுதலான அதிகாரங்களை தமிழ்த் தரப்பினர் கோரி வருகின்ற அதேவேளை, அதை நாட்டு பிரிவினைக்கு வழிவகுக்கும் என்று கூறி சிங்களவர்கள் மத்தியிலுள்ள கடும்போக்காளர்கள் எதிர்த்துக் கொண்டே வருகிறார்கள். மாகாண சபைகளை வலுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படக்கூடிய எந்தவொரு நடவடிக்கையும் நாட்டு பிரிவினைக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் தற்போதைய அரசாங்கத்தை உறுதியாக ஆதரிக்கும் வாக்காளர் மத்தியிலும் எடுபடக்கூடியதாக இருக்கிறது. அந்த வாக்காளர் பிரிவினரின் உணர்வுகளை ஆசுவாசப்படுத்தும் முகமாக மாகாண சபைகள் முறையை முற்றுமுழுதாக நீக்குவதன் மூலமாக அல்லது குறைந்தபட்சம் அதன் அதிகாரங்களை குறைப்பதன் மூலமாக நிலைமைகள் தமது கட்டுப்பாட்டில் இருக்கும் என்று அரசாங்கத் தரப்பினர் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டிருப்பதை நாம் காண்கிறோம்.

20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட வரைவும் அந்த அச்சங்களை தணிக்கக்கூடும். உறுதியான ஜனாதிபதி ஒருவர் இருப்பாரேயானால், நாட்டை பிளவுபடுத்துவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு முயற்சியையும் அவரால் தடுக்கக்கூடியதாக இருக்கும் என்றும் ஒரு பலவீனமான ஜனாதிபதி நாட்டில் எந்தவொரு பிளவையும் தடுக்க இயலாதவராக இருப்பார் என்றும் சிங்கள மக்கள் நம்புகிறார்கள்.

கேள்வி: நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பதற்கு தென்னிலங்கை மக்கள் திரும்பத் திரும்ப வழங்கிய ஆணைகளை எவ்வாறு விளங்கிக்கொள்வது?

பதில்: ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த மட்டுமீறிய அதிகாரங்களின் விளைவாகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை பிறந்தது. மக்கள் அந்த நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருக்கிறார்கள். அரசாங்கத்தின் முக்கியமான ஆதரவாளர்களை பற்றி நான் கூறுவது என்னவென்றால், நாடு பிளவை எதிர்நோக்குவது தொடர்பில் எழக்கூடிய அச்சங்கள் இருக்குமானால் அவற்றை கட்டுப்படுத்தக்கூடிய நிறைவேற்று அதிகார ஜனாதிபதியையே அவர்கள் ஆதரிப்பார்கள்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பதுடன் மாகாண சபைகளை பலப்படுத்துவதற்கு கடந்த ஐந்து வருடங்களாக நாம் நடத்திய பேச்சுவார்த்தைகளிலும் கூட ஜனாதிபதியின் அதிகாரம் தொடர்ந்தும் பேணப்பட்டது. மாகாண சபைகளுக்கு மேலாக ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்துடன் தொடர்புபட்டது அதுவாகும். மாகாணம் ஒன்று பிரிந்து போவதற்கு மேற்கொள்ளப்படக்கூடிய எந்தவொரு முயற்சியையும் தடுப்பதற்கு அவசியமான மத்திய அதிகாரம்வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு (பெரும்பான்மை சமூகத்தின் அச்சங்களை ஆசுவாசப்படுத்தக் கூடியதாக ஒரு வசதியான காரணியாக) நாம் இணக்கமும் தெரிவித்தோம்.

மாகாண சபைகளுக்கான தேர்தலை முன்னைய அரசாங்கம் பிற்போட்டபோது அதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்தது என்ற விமர்சனங்களுக்கும் முகம்கொடுத்தோம். மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்கவில்லை. மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரங்களுடன் கூடிய புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டுவருவதற்கான முயற்சிகளிலேயே நாம் ஈடுபட்டோம். புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கான அந்த முயற்சி மூன்று முக்கிய பகுதிகளை கொண்டிருந்தது – அதாவது அதிகாரப்பரவலாக்கல், புதிய தேர்தல்முறை மற்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி முறையை ஒழித்தல் ஆகியவையே அந்தப் பகுதிகளாகும். தற்போதைய விகிதாசாரத் தேர்தல் முறையும் பழைய தொகுதி அடிப்படையிலான தேர்தல் முறையும் கலந்ததான ஒரு தேர்தல் முறைக்கு இணக்கம் காணப்பட்டபோது நாமும் அதற்கு இணங்கவேண்டி ஏற்பட்டது. நாடாளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் என்ற மூன்று மட்டங்களிலும் ஒரே தேர்தல் முறையே இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதன் காரணத்தினால் தான் புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்படுவதற்கு முன்னதாக கூட அரசியலமைப்பு சபையின் கலந்தாலோசனைகளின் போது இணங்கிக்கொள்ளப்பட்ட புதிய கலப்பு தேர்தல்முறையை உள்ளூராட்சி சபைகளுக்கு அறிமுகப்படுத்த இணங்கிக்கொண்டோம். 2018 பெப்ரவரி உள்ளூராட்சி தேர்தல்கள் அந்த புதிய முறையின் கீழேயே நடத்தப்பட்டன.

புதிய அரசியலமைப்பில் நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களுக்கும் கலப்பு தேர்தல் முறையே கொண்டுவரப்படும் என்பதே எதிர்பார்ப்பாக இருந்தது. மாகாண சபைத் தேர்தல் நடத்துவதில் ஏற்பட்ட தாமதத்துக்கு அதுவே காரணமாகும். மாகாணங்களுக்காக நடத்தப்பட்ட எல்லை நிர்ணய செயன்முறைகளை நாடாளுமன்றம் நிராகரித்ததன் காரணத்தினாலேயே அவ்வாறு நடந்தது. புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதில் நாம் வெற்றி கண்டிருந்தால் மூன்று மட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தேர்தல்முறை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும். அத்துடன், மாகாண சபைத் தேர்தலும் நடந்தேறியிருக்கும். துரதிர்ஷ்டவசமாக புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரும் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. அதன் காரணத்தினால்தான் மாகாண சபைத் தேர்தல்கள் பிற்போடப்பட்டன. புதிய அரசியலமைப்பில் புதிய மாகாணங்கள் கூடுதல் அதிகாரங்களைக் கொண்டிருக்கும் என்பதும் பரவலாக்கப்பட்ட அதிகாரங்கள் கூடுதலான முறையில் பயனுறுதியுடைய முறையில் செயற்படுத்தப்பட்டிருக்கும் என்பதுமே எமது எதிர்பார்ப்பாக இருந்தது.

கேள்வி: நீங்கள் குறிப்பிட்டதைப் போன்று அண்மையில் தெரிவு செய்யப்பட்ட ராஜபக்‌ஷ அரசாங்கம் புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டுவருவதாக உறுதியளித்திருக்கிறது. 2005 – 2010 இடைப்பட்ட காலத்தில் ஜனாதிபதி மஹிந்த பதவியிலிருந்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவரது அரசாங்கத்துடன் 18 சுற்றுப்பேச்சுகளை அரசியல் தீர்வு தொடர்பில் நடத்தியது. ஆனால், கருத்தொருமிப்பெதையும் எட்ட முடியவில்லை. அடுத்துவந்த அரசாங்கத்துடனும் புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டுவருவதிலும் நீங்கள் ஈடுபட்டீர்கள். அதுவும் ஒப்பேறவில்லை. இந்த இரு அரசாங்கங்களுடனுமான உங்களது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது ராஜபக்‌ஷாக்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கும் அரசியல் தீர்வொன்றுக்கான உண்மையான சாத்தியத்துக்கும் வாய்ப்பெல்லை என்ன?

பதில்: ராஜபக்‌ஷாக்களை பொருத்தவரை அவர்கள் முன்னர் பதவியிலிருந்தபோது (போரின் முடிவுக்கு முன்னரும் போரின் முடிவுக்கு பின்னரும்) அவர்கள் இந்த நாட்டில் தமிழர் பிரச்சினைக்கு உகந்த இணக்கத் தீர்வொன்று காணப்படும் என்று உலகுக்கு திரும்பத்திரும்ப உறுதி கூறினார்கள். போரின் முடிவுக்கு முன்னர் அவர்கள் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதும் சர்வக்கட்சி பிரதிநிதித்துவ குழுவினாலும் அதன் நிபுணர் குழுவினாலும் விதந்துரைக்கப்பட்ட ஏற்பாடுகளின் வழியில் உகந்த தீர்வொன்று காணப்படும் என்று இந்தியா மற்றும் மேற்குலகு நாடுகளுக்கும் ஒரு கட்டத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய கூட்டு தலைமைக்கும் உறுதியளித்தார்கள். இப்போது எம்மிடம் சர்வக்கட்சி பிரதிநிதித்துவ குழுவினதும் நிபுணர்குழுவினதும் அறிக்கைகள் இருக்கின்றன. அவை கூடுதலானளவுக்கு அர்த்தபுஷ்டியான ஏற்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. இந்த மார்க்கத்தில் தான் தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு தாங்கள் தீர்வை காணப்போவதாக ராஜபக்‌ஷ அரசாங்கம் உலகுக்கு உறுதியளித்தது.

போர் முடிந்தபிறகு அர்த்தபுஷ்டியான அதிகாரப் பரவலாக்கலை நடைமுறைப்படுத்துவதற்கான அரசியலமைப்புக்கான 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைபடுத்துவதாகவும் அதை அடிப்படையாகக் கொண்டு மேலும் மேம்பாடுகளை செய்வதற்கும் இணங்கியிருப்பதாக இந்தியாவுக்கு குறைந்தபட்சம் மூன்று தடவைகள் உறுதியளித்தது. அந்த உறுதிமொழி கூடுதலான அதிகாரப் பரவலாக்க மார்க்கத்திலேயே மீண்டும் அமைந்தது. இப்போது மீண்டும் ஒரு ராஜபக்‌ஷ ஆட்சி நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு ஒன்றை வழங்குவதற்கு நாட்டம் கொண்டிருக்கும் வேளையில், உலகிற்கே மிகவும் விசேடமான நிபந்தனைகளில் திரும்பத்திரும்ப அளித்த உறுதிமொழிகளை மறுக்கவோ எதிர்த் திசையில் பயணம் செய்ய முயற்சிக்கவோ முடியாது. அவர்கள் வரலாற்று பின்புலத்தை அதுவும் குறிப்பாக மிகவும் அண்மைய வரலாற்று பின்புலத்தை கருத்திலெடுத்து தங்களது உறுதிமொழிகளை கட்டாயம் நிறைவேற்ற வேண்டியது அவசியமாகும்.

எம்மை பொறுத்தவரை, 2011ஆம் ஆண்டில் நாம் அவர்களுடன் செய்ததைப் போன்று முழுஅளவில் ஒத்துழைப்போம். மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கத்துடனும் 18 சுற்றுப் பேச்சுக்களை நடத்தினோம். அதேபோன்று அரசியலமைப்பு செயன்முறைகளில் சுமார் மூன்று வருடங்கள் மத்திய அரசாங்கத்துடன் செயற்பட்டோம். இதையொத்த செயன்முறைகளில் நாம் தொடர்ந்தும் ஆக்கப்பூர்வமாக செயற்படுவோம். 2015 – 2018 செயன்முறைகளில் கூட ராஜபக்‌ஷ முகாம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாக நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகித்தபோது வழிகாட்டல்குழு மற்றும் பல்வேறு உபக்குழுக்களில் அவர்களின் பிரதிநிதிகள் ஊடாக கூடுதல் அதிகாரப் பரவலாக்கலுக்கு இணங்கிக் கொண்டார்கள். அதிகார பரவலாக்கல் விவகாரங்களில் பெருமளவு கருத்தொருமிப்பும் இருந்தது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி மற்றும் தேர்தல்முறை தொடர்பிலேயே முரண்பாடுகள் பெருமளவு காணப்பட்டன. ஆனால், அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் பெருமளவு கருத்தொருமிப்பே இருந்தது. எனவே, ராஜபக்‌ஷாக்கள் அதிகாரத்தில் இருந்தவேளையிலும் பதவியில் இருந்த வேளையிலும் குறிப்பிட்ட ஒரு நிலைப்பாட்டை அவர்கள் எடுத்திருந்தார்கள். அந்த நிலைப்பாடு புதிய அரசியலமைப்பு செயன்முறைகளிலும் தொடர வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.

கேள்வி: மாகாண சபைகளை பலப்படுத்தும்போது நாடு பிளவடையும் என்று ராஜபக்‌ஷாக்களின் பிரதான ஆதரவாளர்கள் அஞ்சுவதாக நீங்கள் குறிப்பிட்டீர்கள். தென்பகுதி மக்களின் மனங்களை வென்றெடுக்க வேண்டும் என்பது குறித்தும் நீங்கள் பேசினீர்கள். அதிகாரப் பரவலாக்கலை சுற்றி தீவிரமான சந்தேகங்கள் இருக்கின்ற நேரத்தில் எவ்வாறு தென்பகுதி மக்களை வென்றெடுப்பது சாத்தியமாக முடியும்?

பதில்: போர் முடிவடைந்ததுக்கு பின்னரான கடந்த 10 வருடங்களிலும் இந்தப் பிரச்சினையை கையாள்வதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடைபிடித்த வழிமுறை, காணப்படக்கூடிய எந்தவொரு அரசியல் தீர்வும் ஐக்கியப்பட்ட – பிளவுபடாத நாட்டுக்குள்ளேயே அமையும் என்பதை திரும்பத்திரும்ப உறுதி கூறுவதையே நோக்கமாக கொண்டிருந்தது.

இலங்கை அரசின் தன்மையைப் பொறுத்தவரை ‘பிளவுபடுத்த முடியாத’ (Indivisible) என்ற சொல்லைக் கூட நாம் குறிப்பிட்டோம். இரண்டாவதாக சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினால் புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று நாங்களாகவே கேட்டிருந்தோம். அவர்களின் முதுகுகளுக்கு பின்னால் எதையும் சாதிக்க விரும்பவில்லை என்பதே இதன் அர்த்தமாகும். அத்துடன், புதிய அரசியலமைப்பின் ஏற்பாடுகள் பெரும்பான்மை சமூகத்துக்கு ஏற்புடையதாகவும் இருக்க வேண்டும். அந்த ஒளிவுமறைவற்ற அணுகுமுறை, சிங்கள மக்களை வென்றெடுக்கும் என்று நாம் நினைக்கிறோம். அத்தகைய ஒரு உடன்பாடு தொடர்ந்து நிலைக்கும் என்று சிங்கள மக்களுக்கு உத்தரவாதத்தையும் நம்பிக்கையையும் அவர்கள் மத்தியிலுள்ள முற்போக்குள்ள சக்திகள் கொடுக்க வேண்டும்.

கேள்வி: பொதுத்தேர்தலுக்கு முன்னராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரங்களின்போது பல வேட்பாளர்கள் அரசியல் தீர்வு பற்றி குறிப்பிட்ட வேளையில் இந்தியாவின் உதவிபற்றி குறிப்பிட்டார்கள். ராஜபக்‌ஷாக்கள் பெற்ற மிகப்பெரிய ஆணையை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது இந்தியா அல்லது சர்வதேச சமூகம் புவிசார் அரசியல் அக்கறைகள் உட்பட அவற்றின் வேறு அக்கறைகளுக்கு மத்தியில் என்ன செய்யும்?

பதில்: இலங்கை பௌதீக ரீதியில் (Physically) ஒரு தீவு. ஆனால், உருவக வடிவில் (Metaphorically) எந்த நாடுமே ஒரு தீவாக இருக்க முடியாது. இன்றைய உலகில் ஒவ்வொருவரும் மற்றவர்களின் அக்கறைகளை மதித்து குறிப்பிட்ட சில உலகளாவிய விழுமியங்களை அடியொட்டி நாம் எல்லோரும் வாழ வேண்டும். இலங்கையின் வெளியுறவுகள் எப்போதுமே அதை மனதில் கொண்டவையாக இருந்து வந்திருக்கின்றன. மிகவும் நெருங்கிய அயல்நாடு என்ற வகையில் இலங்கையின் அரசியல் உறுதிப்பாட்டின் மீது இந்தியா கொண்டிருக்கக்கூடிய அக்கறைகளை சகல இலங்கையர்களும் புரிந்துகொண்டு மதிக்க வேண்டும். அதன் காரணத்தினால் தான் 1983இல் பிரதமர் இந்திரா காந்தி தனது நல்லெண்ணங்களை வழங்க முன்வந்தார். அது இலங்கை அரசாங்கத்தினால் நன்றியுணர்வுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த நன்றியுணர்வு இன்றுவரை தொடர்கிறது. இலங்கையின் மோதலும் நெருக்கடியும் இந்தியா மீது தாக்கத்தைக் கொண்டிருக்கிறது. மூன்று தசாப்தகால போரின்போது ஒரு இலட்சம் அகதிகளுக்கு இந்தியா புகலிடம் அளித்தது. இலங்கை நெருக்கடி, இந்தியா மீதும் உலக நாடுகள் மீதும் எந்த தாக்கத்தையும் கொண்டிருக்கவில்லை என்று கூறுவது புத்திசாலித்தனமானதல்ல.

அதன் காரணத்தினால்தான் அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள் இந்தியாவுடனும் சர்வதேச சமூகத்தின் ஏனைய பிரிவினர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி கடந்த காலத்தில் இந்த உறுதிமொழிகளை வழங்கின. அந்த வகையில் நோக்குகையில், இந்தியா இந்த நெருக்கடியைத் தீர்த்துவைப்பதில் அதன் நல்லெண்ண முயற்சிகளைப் பயன்படுத்துவது எப்போதும் அவசியமாகும். அதை சகல கட்சிகளும் வரவேற்கும்.

சர்வதேச சமூகத்தின் ஏனைய பிரிவினருடன் ஊடாட்டங்களைச் செய்வதும் முக்கியமானதாகும். மனிதவுரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அண்மையில் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையின் கூட்டத்தொடரின் ஆரம்பத்தின்போது 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற முயற்சியையும் இலங்கையில் உரிமைகள், சுதந்திரங்கள், நல்லிணக்கத்தின் மீது அந்த முயற்சி கொண்டிருக்கக்கூடிய எதிர்மறையான தாக்கத்தையும் சுட்டிக்காட்டி எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். அந்த பெறுமதியான அக்கறைகளை கருத்தூன்றி கவனத்திலெடுத்து இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டும்.

மீரா ஸ்ரீனிவாசன்