பட மூலம், Tamilwin
தமிழர் தாயகம், ஒரு நாடு இரு தேசம், வடக்கு – கிழக்குக்கான தீர்வு குறித்து சர்வதேசத்தின் மேற்பார்வையுடன் குறிப்பாக ஐ.நாவின் மேற்பார்வையுடன், சர்வஜன வாக்கெடுப்பு போன்ற கடுமையான நிலைப்பாடுகளை கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரன் தலைமையிலான கட்சியினர் இந்தத் தேர்தலின்போது முன்வைத்திருக்கிறார்கள். ஜனநாயக அரசியல் நடைமுறைக்கேற்ப இந்த கோரிக்கைகளை பிழையானது என்று கூறமுடியாது. ஆனால், இங்குள்ள நிலைமை என்ன? தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று கூறப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பினர் தோற்கடிக்கப்பட்ட பின்னர் எம் மக்கள் சார்பாக கோரிக்கைகளை முன்வைத்து எதையாவது இதுவரை சாதிக்க முடிந்துள்ளதா? இது பற்றி சிந்திக்கவேண்டும் என்று கூறுகிறார் தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரும், வீரகேசரி பத்திரிகையின் செய்திப் பிரிவின் ஆலோசகருமான வீரகத்தி தனபாலசிங்கம்.
நாம் முன்வைக்கும் கோட்பாடுகள் சரியாக இருக்கலாம். ஆனால், கோட்பாட்டு பிடிவாதம்தான் எம் சமூகத்தை அழிக்கும். அப்படி அழிந்த சமூகங்கள் இருக்கின்றன. அதற்காக கோட்பாடுகளை கைவிடச் சொல்லவில்லை. காலத்திற்கேற்ப அந்தச் சிந்தனைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழர் தரப்பிலே இந்தக் கோட்பாட்டு பிடிவாதத்தினால்தான் அந்த பிள்ளைகள் செய்த தியாகங்களை ஏதாவதொரு அரசியல் பயனாக இன்று அறுவடை செய்ய முடியாமல் இருக்கிறோம்.
தேர்தலின் பின்னரான தமிழர் அரசியல் பற்றி மாற்றம் தளத்துடன் வீ. தனபாலசிங்கம் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.