பட மூலம், Gotabaya Rajapaksa Official Twitter
அனைத்து சிறந்த விடயங்களும் ஒருநாள் முடிவுக்கு வரவேண்டும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பெறப்பட்ட வெற்றியும், கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் கிடைத்த சிறிதளவு வெற்றியும், வேகமாக நீண்ட தூர இனிய நினைவுகளாக மாறிவருகின்றன.
கோட்டாவும் அவரது சகாக்களும் சிறிதளவு கூட அறிந்திராத, போராடுவதற்கு சிறந்த ஆயுதங்கள் அற்ற புதிய எதிரி, அவரது அரசாங்கத்தினையும், நாட்டையும் பொருளாதாரத் தட்டுப்பாடு, பட்டினி, போசாக்கின்மை மற்றும் மரணம் என்ற கடலிற்குள் மூழகடிக்கும் விதத்தில் அச்சுறுத்துகின்றது. பொருளாதார ‘மாளிகை’ நொருங்கிக்கொண்டிருக்கும்போது தேர்தல் போராட்டத்தில் ஈடுபடுவதும், அதிக அதிகாரத்தை பெற முயல்வதும் அர்த்தமற்றது.
இந்த முதல் எதிரியை கோட்டபாய ராஜபக்ஷ உருவாக்கவில்லை. அது கொவிட்-19 உடன் வெளியிலிருந்து வந்தது. கொரோனா வைரஸ் அனேகமாக முதியவர்களையே தாக்கியது. ஆனால், பொருளாதார வைரஸ் அனைவரையும் தாக்குகின்றது. அடுத்த இரண்டு வருடங்களில் மொத்த தேசிய உள்நாட்டு உற்பத்தி சர்வதேச அளவில் 4.9 வீதம் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், அதாவது 12 டிரில்லியன் டொலர் – சர்வதேச நாணயநிதியத்தின் எதிர்வுகூறலின் படி சீனாவை தவிர அனைத்து நாடுகளும் நெருக்கடியான நிலையில் உள்ளன. சீனாவின் வளர்ச்சி ஒரு வீதமாக காணப்படுகின்றது, எனினும் தரவுகளை அரசியல் கொள்கை ரீதியிலான காரணங்களுக்காக சீனா பயன்படுத்திய வரலாறு உள்ளதால் இதனை அவதானத்துடன் அணுகவேண்டும்.
மிகப்பெரிய அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எட்டு வீதத்தினால் வீழ்ச்சியடையும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5 வீதத்தினாலும் ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.8 வீதத்தினாலும் வீழ்ச்சியடையும் என்ற அச்சம் காணப்படுகின்றது. ஆசியாவின் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரங்களை பொருத்தவரை இந்த வீழ்ச்சி குறைவானது என்கின்றபோதிலும் அவற்றின் பொருளாதார வளர்ச்சி இரண்டு வருடங்களிற்கு தேங்கிய நிலையில் காணப்படும். இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டிற்குள் கிட்டத்தட்ட 300 மில்லியன் வேலைகள் பறிபோயிக்கும். தெளிவாக சொல்வதென்றால் உலகம் தனது வரலாற்றில் மிகமோசமான பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்கின்றது. இவ்வாறான நம்பிக்கையற்ற சூழ்நிலையில் இந்த போக்கிற்கு எதிராக இலங்கை நீச்சலடிப்பதற்கான வாய்ப்புகள் எவ்வாறு உள்ளன?
இந்த வலியை வேதனையைக் குறைப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்பதே முக்கியமான கேள்வி? மத்திய வங்கி மாயாஜாலம் நிகழ்த்தும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. ஏனென்றால், இந்தப் பிரச்சினை வெறுமனே நிதி சார்ந்தது மாத்திரமல்ல. உலகின் அனைத்து நாடுகளும் முதல் நடவடிக்கையாக பணத்தை அச்சிடும் இயந்திரத்திடம் சென்றுள்ளன – பொருளாதாரங்கள் பணப்புழக்கத்தினால் நிரம்பி வழிகின்றன.
ஜனாதிபதியின் அழுத்தத்தின் காரணமாக பழமைவாத மத்திய வங்கியும் அதனைச் செய்துள்ளது. சந்தையில் பொருட்கள் விநியோகத்தினை அதிகரிக்காமல் மேலும் மேலும் பணப்புழக்கம் அதிகரிக்க, பணவீக்கம் ஏற்பட வழிவகுக்கும். இது நோய்க்கான தீர்வை விட மோசமானது.
அரசாங்கம் தற்போது நிதி பக்கம் திரும்பி கட்டுப்பாடுகளை இறுக்கமாக்குகின்றது. நடுத்தரகால உறுதிப்படுத்தல்களுக்காக நாடுகளுக்கு சிறந்த நிதி கட்டமைப்புகள் அவசியம் என ஆலோசனை வழங்குகின்றார் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளியல் நிபுணர் கோபிநாத். வீணாண செலவீனங்களைக் குறைப்பதன் மூலம், வரித்தளத்தை விரிவுபடுத்துவதன் மூலம், வரி தவிர்த்தலை குறைத்தல் மற்றும் சில நாடுகளில் வரி விதிப்பில் அதிக முன்னேற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் இதனை முன்னெடுக்கலாம் என்கின்றார் அவர். இது மாத்திரம் இலங்கைக்கு போதுமா? பற்றாக்குறைகளுக்கு மத்தியில் இந்த நிதி இறுக்க நடவடிக்கைகள் சாதாரண மக்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். விலைகள் அதிகரிப்பதும், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதுமே அதற்கான காரணம். நுகர்வோர் செலவிடுவது குறைவடைய வர்த்தகங்கள் பாதிக்கப்படும், வீடுகளின் வருமானம் குறைவடையும், அரசாங்கத்தின் வரி சேகரிப்பின் அளவு குறைவடையும், இது மிகவும் ஆபத்ததான நச்சுவட்டமாகக் காணப்படப்போகின்றது.
எந்த விலை செலுத்தியும் விநியோகப் பக்கத்தினை ஊக்குவிக்கவேண்டும். வெளிச்சந்தை கொரோனாவிற்கு முந்தைய நிலையை அடைய ஆகக்குறைந்தது இரண்டு அல்லது மூன்று வருடங்களாகும். ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளதால், விநியோகம் என்பது உள்ளூர் சந்தையை இலக்குவைத்து செயற்படவேண்டும், ஆகக்குறைந்தது அவற்றின் செலவினை மீட்டெடுப்பதன் மூலமாவது உள்ளூர் உற்பத்திகளும் வர்த்தகங்களும் இரண்டு மூன்று வருடங்களுக்கு தப்பிப்பிழைக்க முடிந்தால், நிலைமை சாதகமாக மாறும்போது மேலதிக நேர வேலையை முன்னெடுப்பதற்கு ஏற்றவிதத்தில் நிரந்தர செலவீனம் பாதுகாப்பானதாகக் காணப்படும்.
இதன் காரணமாக உள்நாட்டு சந்தையின் முழுமையான விரிவாக்கத்திற்கு தடையாக உள்ள அனைத்தையும் அகற்றவேண்டும். இது முழுமையாக கோட்டாவின் கரங்களிலேயே உள்ளது, மத்திய வங்கியினதோ திறைசேரியினதோ கரங்களில் இல்லை.
எனது முன்னைய கட்டுரைகள் பலவற்றில் பொருளாதார மீள்எழுச்சி என்பது நாட்டின் அனைத்து சமூகத்தினரையும் உள்வாங்கிய கூட்டு முயற்சியாகக் காணப்படவேண்டும் என்பதை நான் வலியுறுத்தியுள்ளேன். சமூகத்தை பிளவுபடுத்தி ஐக்கியமின்றி வைத்திருக்கும் எந்தக் கொள்கையும் நடவடிக்கையும், நாட்டிற்கும் பொருளாதாரத்திற்கும் எதிரான பாரிய குற்றச்செயலாகும். 1970லிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய முதலாவது பாடம் இதுவாகும்.
இந்த ஐக்கியம் அவசியமில்லை என சில செல்வாக்குள்ள சக்திகள் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குகின்றன.
சில சமூகங்கள் தவிர்க்கப்படக்கூடியவை, இதன் காரணமாக இவர்களை அகற்றலாம் என அந்தச் சக்திகள் கருதுகின்றன.
இந்த அடிப்படையிலேயே, உதாரணத்திற்கு அவர்கள் தொல்பொருளியலிற்கான செயலணியை நியமிக்குமாறு ஜனாதிபதியை வலியுறுத்தினார்கள். அது உடனடியாக பௌத்தர்களின் தொல்பொருள் சிதைவுகளைப் பாதுகாக்கும் நடவடிக்கை என்ற போர்வையில் பொத்துவிலில் உள்ள முஸ்லிம்களின் நிலத்தை அபகரிப்பதில் இறங்கியது. நாட்டின் முன்னுரிமைக்குரிய விடயமா இது?
இந்த முதலாவது எதிரியை தோற்கடிப்பதற்குப் படையினரும் ஆயுதங்களும் போதுமானவையல்ல. மதகுருமார் சமூகம் கோட்டபாய ராஜபக்ஷவை நாட்டின் மீது சுமைகளை அதிகரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றது. மார்க்சிய சொற்பதத்தினைப் பயன்படுத்துவதானால் இவை சமூக ஒட்டுண்ணிகள் வர்க்கத்தின் ஒரு பகுதியாகும். மதம் மக்களுக்கு உணவூட்டுவதில்லை, தங்குமிடத்தை வழங்குவதில்லை, அவர்களுக்கு ஆடைகளை வழங்குவதில்லை. அது உற்பத்தி வேலைவாய்ப்பினை உருவாக்குவதில்லை. மாறாக மதகுருமார் வர்க்கம் சமூகத்தின் பொருளாதார உற்பத்தி மற்றும் வருமானத்தில் வாழ்கின்றது. இந்த நேரத்தின் மிகமுக்கியமான தேவை பொருளாதார ரீதியில் தப்பிப்பிழைத்தலே ஆகும். நாட்டின் எந்தப் பகுதியிலும் பொருளாதார உற்பத்தியை சீர்குலைக்கும் எந்தவொரு தடையும் உடனடியாக அகற்றப்படவேண்டும். இந்த அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டிய அடிப்படை உண்மையிது. துரதிஷ்டவசமாக தேர்தலின் சூடு, ஒற்றுமையை மற்றும் மீட்பு முயற்சிகளை தடுக்கின்றது.
பொருளதாரமே கோட்டாவின் முதலாவது எதிரி. அவர் அதனை தோற்கடிக்காவிட்டால், அவர் மக்களின் முதலாவது எதிரியாக மாறுவார்.
கலாநிதி அமீர் அலி
“The Economy: Gota’s Enemy No. 1” என்ற தலைப்பில் DailyFT பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.