பட மூலம், president.gov.lk

கடந்த ஆண்டு காணி உரிமைகளுக்கான மக்கள் கூட்டணியினால் அமைக்கப்பட்ட ஒரு காணிக் கமிசன் நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் சமூகங்களினது, காணி தொடர்பான பிரச்சினைகளைக் கேட்டறியும் முயற்சிகளில் ஈடுபட்டது. இந்தக் கமிசனின் அமர்வு ஒன்று முல்லைத்தீவிலே இடம்பெற்ற போது, அங்கு பேசிய ஒருவர் பின்வரும் கருத்தினை வெளியிட்டார்: “தொல்பொருளியல் திணைக்களத்தினைச் சேர்ந்தோர் இரவு வேளைகளில் வருவார்கள். அப்போது எதையாவது புதைத்து விட்டுச் செல்வார்கள். அடுத்த நாள் அதனைக் கிண்டி எடுத்துவிட்டு, அந்தப் பிரதேசம் பௌத்தர்களின் புனித பூமி என்று செல்லுவார்கள்.”

இலங்கையின் சிறுபான்மை மக்களின் மத்தியில், அதிலும் குறிப்பாக வடக்குக் கிழக்கு மாகாணங்களிலே வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் மத்தியிலே, இலங்கையின் தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிகள் தொடர்பாக இவ்வாறான ஒரு பார்வை பரந்த அளவிலே அவதானிக்கப்படுகிறது. இந்த மக்கள் வாழும் பிரதேசங்களின் மீது அரசினால் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருளியல் வன்முறையே, இவ்வாறான பார்வை ஒன்று வடக்குக் கிழக்கிலே எழுந்தமைக்கான பிரதானமான‌ காரணம் ஆகும்.

தொல்பொருளியல் வன்முறை

இலங்கை அரசின் ஒரு பாகமாக இருக்கும் தொல்பொருளியல் திணைக்களம், இலங்கையினைச் சிங்கள பௌத்தர்களுக்குரிய ஒரு தேசமாக உருவாக்கும் முயற்சிகளுக்கு பங்களிப்புச் செய்து வருகிறது. எமது பாடசாலைகளிலே கற்பிக்கப்படும் வரலாற்றுப் பாடநூல்கள் எவ்வாறு நாட்டின் சிறுபான்மை இன மக்களின் வரலாறுகளை இருட்டடிப்புச் செய்கின்றனவோ, அதே போலவே தொல்பொருளியல் திணைக்களமும் சிறுபான்மை மக்களிற்கும், இந்தத் தீவுக்கும் இடையிலான வரலாற்று ரீதியிலான உறவுகளை நீர்த்துப் போகச் செய்யும் பணிகளிலே ஈடுபடுகிறது. தொல்பொருளியல் துறையினைப் பயன்படுத்தி, இவ்வாறு திட்டமிட்ட முறையிலே, அரசினால் மேற்கொள்ளப்படும் ஆதிக்க ரீதியிலான அறிவுருவாக்க, வரலாற்றுருவாக்க முயற்சிகளை இந்தக் கட்டுரை தொல்பொருளியல் வன்முறை என விளங்கப்படுத்த முற்படுகிறது.

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து தமிழ்த் தேசிய அடையாளத்தின் மூலமான ஒரு சுயநிர்ணய உரிமைக்கான குரல் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில், இந்தப் பிரதேசத்தினை சிங்கள‍ பௌத்த‌ மயமாக்குவதன் மூலம், இப்பிராந்தியத்தின் சுயநிர்ணய உரிமைக்கான கோசங்களை வலுவிழக்கச் செய்யலாம் என்பதுவும் தொல்பொருளியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் வன்முறைக்கு மற்றொரு காரணம் ஆகும்.

தொல்பொருளியல் செயலணி

இவ்வாறான ஒரு சூழமைவிலேயே, கிழக்கு மாகாணத்தில் இருக்கும் தொல்பொருளியல் முக்கியத்துவம் மிக்க இடங்களை முகாமை செய்வதற்கான ஒரு செயலணியின் நியமனம் ஜனாதிபதியினால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலமாக அண்மையிலே வெளியிடப்பட்டது. ஒப்பீட்டளவில் நோக்குகையில் இலங்கையிலே இன, மதப் பல்வகைமை மிகவும் கூடிய மாகாணமாகக் கிழக்கு மாகாணம் அமைகின்றது. கிட்டத்தட்ட 77% ஆன தமிழ் பேசும் மக்களை உள்ளடக்கிய ஒரு மாகாணத்தின் தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க இடங்களைப் பேணும் நோக்கத்துக்காக அமைக்கப்பட்டிருக்கும் ஒரு செயலணியிலே தமிழ் பேசும் சமூகங்களைச் சேர்ந்த ஒருவர் தன்னும் இடம்பெறாமை, கிழக்கில் வாழும் தமிழ் – முஸ்லிம் மக்களின் மத்தியில் இந்தச் செயலணி தொடர்பாக அச்ச உணர்வுகளைத் தோற்றுவித்துள்ளது. தமது சமூகங்களின் கலாசாரங்களையும், மதச் சின்னங்களையும், ஏன் தம் அடையாளம் சார் இருப்பினையும் தகர்க்கும் வகையிலேயே, இந்தச் செயலணி செயற்படக்கூடும் என்ற அச்சம் அவர்களைச் சூழ்ந்துள்ளது.

இந்தச் சூழலிலேயே இந்த இரண்டு சமூகங்களும் இணைந்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்துப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த இரண்டு சமூகங்களும் இணைந்து செயற்படுவதற்கு எவ்வாறான அரசியல் முயற்சிகள் அவசியம் என்பதனையும், அரசின் குறுகிய தேசியவாத ரீதியிலான தொல்பொருளியல் பார்வைக்கு மாற்றாக, இந்தப் பிரதேசத்திற்கென எவ்வாறான மாற்று அரசியற் பார்வை ஒன்று தேவைப்படுகிறது என்பதனையும் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் முக்கிய நோக்கம் ஆகும்.

வரலாறு

அதற்கு முன்னர் இந்தப் பிரதேசத்தின் வரலாறு குறித்தும் சற்று சிந்திப்பது பொருத்தமானது. ஏனெனில், அரசு எழுத முற்படும் திரிபுவாத வரலாற்றுக்கு மாற்றான ஒரு வரலாறு எம்மத்தியில் இருந்து எழ வேண்டியதும் இங்கு அவசியம். அவ்வாறான மாற்று வரலாறு என்ன என்பதனையும் நாம் கருத்தில்கொண்டே எமது எதிர்ப்பினையும், எதிர்காலம் தொடர்பான எமது பார்வையினையும் வளர்த்தெடுக்கலாம்.

சமகாலத்திலே தமிழ்த் தேசியவாதம் வடக்குக் கிழக்கினைத் தமிழர்களின் இணைந்த தாயகமாக வலியுறுத்தினும், கிழக்கு மாகாணத்தின் வரலாற்றினை எடுத்துக் கொண்டால் அது எல்லாக் காலங்களிலும், அரசியல் ரீதியாக‌ வடக்குடன் இணைந்ததாக இருக்கவில்லை. உதாரணமாக, டக்மர் ஹெல்மன் ராஜநாயகம் என்ற வரலாற்று ஆசிரியரின் கருத்தின்படி, தற்போதைய மட்டக்களப்பு மாவட்டம் ஒரு போதும் நேரடியான தமிழ் ஆட்சியின் கீழோ அல்லது யாழ்ப்பாண இராசதானியின் கீழோ இருக்கவில்லை. முதலிலே அது உருகுணை இராசதானியின் ஒரு பகுதியாகவும் பின்னர் கண்டி இராசதானியின் ஒரு நிலமானியப் பகுதியாகவும் இருந்தது.

கண்டி இராசதானி பற்றி எழுதும் வரலாற்றாசிரியர் பத்மநாதன், புல்மோட்டையில் இருந்து பாணமை வரையிலான அந்த இரசாதானியின் கிழக்குக் கரையோரத்திலே தமிழர்களும், முஸ்லிம்களும் அதிக அளவிலே வாழ்ந்தமையினைச் சுட்டிக்காட்டுகிறார். நாம் தற்கால சமூகங்களை வேறுபடுத்துவதற்குப் பயன்படுத்தும் தமிழ், சிங்களம், முஸ்லிம் போன்ற வகைப்படுத்தல்கள் கண்டிய இராசதானிக் காலத்திலும் அதற்கு முன்பும் வாழ்ந்த மக்களை வகைப்படுத்துவதற்குப் பயன்படுத்த முடியுமா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. ஏனெனில், நாம் பயன்படுத்தும் இன அடையாள‌ லேபள்களுக்கு என்றும் ஒரு வரலாறு இருக்கிறது. அந்த லேபள்கள் எப்போது முதன் முதலிலே பயன்படுத்தப்பட்டன? யாரினால் என்ன நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்பட்டன என்ற கேள்விகளும் இங்கு முக்கியமானவை.

எவ்வாறாயினும், கிழக்கு மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளும், வடக்கு மாகாணமும் ஒரே அரசியல் நிர்வாகத்தின் கீழ் காலனித்துவக் காலத்திற்கு முன்னர் இருந்திருக்கவில்லை என்பதனை நாம் இந்த வரலாற்றாசிரியர்களின் கருத்துக்களின் மூலமாக அறிய முடியும். வரலாற்று ரீதியில் தீவின் வடக்குக் கிழக்குப் பகுதிகள் தொடர்ச்சியாக இணைந்திருந்தமையினை நிரூபிக்க முடியாது எனினும், சம காலத்திலே இந்த இரண்டு மாகாணங்களும் இணைந்த நிலையிலும் சரி, பிரிந்த நிலையிலும் சரி, நாட்டின் அரசியலிலே மிகவும் முக்கியத்துவம் மிக்க பிரதேசங்களாக மாறியுள்ளன. இந்த இரண்டு மாகாணங்களின் பெரும்பான்மை மக்களாக, நாட்டில் ஒட்டுமொத்தமாகச் சிறுபான்மையாக உள்ள சமூகங்கள் இருக்கின்றன. சுதந்திரத்துக்குப் பிற்பட்ட காலத்திலே, அரசின் சிங்கள பௌத்த மயமாக்கத்துக்கு எதிரான குரல்களும், போராட்டங்களும் ஒன்று திரட்டப்பட்ட முறையிலே இந்தப் பிராந்தியத்தில் இருந்து உறுதியான முறையிலே தொடர்ச்சியாக வெளிப்பட்டவாறு இருக்கின்றன. இந்தப் பிராந்தியத்திலே ஒரு தனி அரசினை அமைப்பதற்கான ஆயுதப் போராட்டமும் 30 ஆண்டுகளாக இடம்பெற்றது.

சுதந்திரத்துக்குப் பிற்பட்ட காலத்திலே, இந்தப் பிராந்தியத்திலே வாழும் சிங்கள மக்களின் தொகை அதிகரித்தமைக்கு இந்தப் பிராந்தியத்திலே அரசினால் முன்னெடுக்கப்பட்ட நீர்ப்பாசனத் திட்டங்களும், குடியேற்றத் திட்டங்களும் பிரதானமான‌ காரணங்களாக‌ அமைந்தன. மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாண ஆசிரியர் சங்கம் உள்ளடங்கலாகப் பல அமைப்புக்கள் இந்தக் குடியேற்றத் திட்டங்களிலே சில எவ்வாறு இப்பிராந்தியத்திலே தமிழ், முஸ்லிம் மக்களின் குடிப்பரம்பல் வீதத்தினைத் திட்டமிட்ட வகையில் குறைக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டன என்பதனை ஆதார பூர்வமாக விளக்கியுள்ளனர்.

தமிழ்த் தேசியமும் தாயகக் கோட்பாடும்

வடக்குக் கிழக்கினைத் தளமாகக் கொண்டு உருவாகிய தமிழ்த் தேசிய அரசியலின் மையமாக இருக்கும், பாரம்பரியத் தாயகக் கோட்பாட்டினை முன்னிறுத்தியே, சிங்கள பௌத்தத் தேசியவாதத்துக்கான எதிர்ப்பு வெளியிடப்படல் வேண்டும் என்ற குரல்களே இன்றும் பலமாக ஒலிக்கின்றன. தொல்பொருளியல் செயலணியினை எதிர்க்கும் நோக்கிலே தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையினை வலியுறுத்தும் குரல்கள் கூட, இந்தத் தாயகக் கோட்பாட்டினை உறுதியாகப் பற்றி நிற்கின்றன. இவ்வாறான ஒரு கோட்பாட்டினை வலியுறுத்தியவாறு இந்த இரு சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமையினையும், தோழமையினையும் கிழக்கு மாகாணத்திலே உருவாக்க முடியுமா என்று கேள்வி இங்கு எழுகிறது.

தமிழ் முஸ்லிம் உறவுகளை வளர்த்தெடுக்க நாம் முற்படுவோமாயின், வடக்குக் கிழக்கினைத் தமிழர் தாயகம் என்று சொல்லப்படும் உரையாடலினைக் கேள்விக்குட்படுத்த வேண்டியது அவசியம். வடக்குக் கிழக்கு தமிழருடைய தாயகம் என்பதற்குப் பதிலாக, அது யாருடைய தாயகம் என்ற கேள்வியினை எழுப்புவது தாயகக் கோட்பாட்டின் அடிப்படையில் இருக்கும் புறமொதுக்கல்களை நாம் புரிந்து கொள்ள உதவும். வடக்குக் கிழக்குத் தமிழர்களின் தாயகம் எனின் அது முஸ்லிம்களின் தாயகம் இல்லையா? அல்லது அது அங்கு வாழும் சிங்கள மக்களின் தாயகம் இல்லையா?

வடக்குக் கிழக்கு, பன்மைத்துவம், சகவாழ்வு

வடக்குக் கிழக்கினை தமிழ்த் தேசம், தமிழர்களின் தாயகம் என்பவற்றுக்கு அப்பால், சிங்கள பௌத்தத் தேசியவாதத்தின் கொடுமையினை எதிர்க்கின்ற, பன்மைத்துவத்தினைத் தாங்கிய ஒரு பூமி என்றே நான் விளங்க முற்படுகிறேன். அந்த அடிப்படையில் நோக்கும் போது வடக்குக் கிழக்கினை நாம் தேசியவாதத்தினுள்ளும், தாயகக் கோட்பாடுகளினுள்ளும் குறுக்கி வைக்கும் அபாயம் இல்லாது போகிறது. இவ்வாறான ஒரு புரிதலின் அடிப்படையில் பார்க்கும் போது, ஒடுக்கும் தன்மையான சிங்கள பௌத்தத் தேசியவாதமானது எல்லாவற்றுக்கும் முதன்மையாக வடக்குக் கிழக்குப் பிராந்தியத்தில் இருக்கக்கூடிய மொழிகள், சமயங்கள், கலாசாரங்கள் மற்றும் இனக் குழுக்களின் சகவாழ்வுக்கு எதிரானது என்ற நிலைப்பாட்டுக்கு நாம் வர முடியும்.

சிங்கள பௌத்தத் தேசியவாதம் வடக்குக் கிழக்கிலே இருக்கும் ஒரு இஸ்லாமிய, கிறிஸ்தவ, இந்து மத அடையாளத்தினை அழிக்க முற்படுகையில், அதன் கோரத்தினை அந்தப் பிராந்தியத்தில் இருக்கும் பன்மைத்துவத்தின் மீது மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதலாகவும் நாம் பார்க்க முடியும். சிங்கள பௌத்தத் தேசியவாதம் ஆதிக்கம் மிக்க முறைகளிலே அல்லது ஜனநாயகமற்ற முறைகளிலே ஒரு பௌத்த அடையாளத்தினை வடக்குக் கிழக்கிலே நிர்மாணிக்க அல்லது மீள் நிர்மாணிக்க முற்படுவது கூட, அந்தப் பிராந்தியத்தில் இருக்கும் பன்மைத்துவத்தினை இல்லாதொழிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் ஒரு செயற்பாடே.

ஒடுக்கும் பெரும்பான்மைத் தேசியவாதம், தொல்பொருளியல் வன்முறையினைப் பிரயோகித்துத் தனித்தனியாக இன மற்றும் மத அடையாளங்களை அழிக்கிறது என்பதனை நாம் மறுக்க வேண்டியதில்லை. ஆனால், தனி அடையாள அழிப்புக்கள் எவ்வாறு அந்த நிலப்பரப்பின் ஒட்டுமொத்த அடையாள உருவத்தினைச் சிதைக்கிறது அல்லது மாற்றுகிறது என்பது பற்றி நாம் விழிப்புணர்வு உடையவர்களாக இருக்கும் போது, இந்தப் பிராந்தியத்திலே வாழும் வேறுபட்ட சமூகங்களுக்கு இடையில் தொடர்புகளினையும், தோழமை உணர்வுகளையும் எம்மால் வளர்த்தெடுக்க முடியும்.

இவ்வாறான ஒரு அணுகுமுறையின் ஊடாக, எமது கலாசார வாழ்வு எவ்வாறு மற்றையோரின் கலாசார வாழ்வுடன், ஒரு கலாசார சகவாழ்வாக  பிணைந்திருக்கிறது என்பதனையும், அடையாளங்களின் சேர்க்கையினால் உருவாகும் அடையாளக் கலவன்களுக்கும் இந்தப் பிராந்தியத்திலே இடம் இருக்கிறது என்பதனையும் நாம் ஏற்றுக்கொள்ளுவது, எமது எதிர்ப்பின் வீரியத்தினை மேலும் கூட்டும். இந்த மாதிரியான ஒரு புரிதலே வடக்குக் கிழக்கின் வரலாற்றினை அதனுடைய எல்லா சிக்கல் தன்மைகளின் ஊடாகவும் விளங்குவதற்கு எமக்கு வழி செய்யும்.

சிங்கள பௌத்தத் தேசியவாதம் தனியே வடக்குக் கிழக்கிலே வாழும் தமிழர்களினதும், முஸ்லிம் மக்களினதும் அரசியல் இருப்புக்கு மாத்திரமல்லாது, இந்தப் பிராந்தியத்திலே காலம் காலமாக வாழ்ந்த (அவர்கள் எண்ணிக்கையிலே குறைவாக இருந்தாலும்) சிங்கள சமூகங்களினதும், பௌத்தத்தினைப் பின்பற்றியோரினதும், சகிப்புத் தன்மை மிக்க கலாசாரங்களுக்கும் ஒரு அச்சுறுத்தலினை விடுக்கிறது.

உதாரணமாக எம்.எச். அஷ்ரஃப் அவர்கள் எழுதிய “மணியோசை” என்ற கவிதை, தீகவாபியில் அமைந்திருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க விகாரை ஜனநாயகமற்ற முறையிலே ஒரு புனித வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட போது, அது எவ்வாறு அப்பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம் விவசாயிகளுக்கும், தீகவாபி விகாரைக்கும் காலங்காலமாக இருந்த பிணைப்புக்களை இல்லாதொழித்தது என விபரிக்கிறது.

இந்தப் பிரகடனம் விகாரையினைச் சூழவுள்ள நிலங்களில் இருந்து முஸ்லிம் விவசாயிகளை வேரோடு பிடுங்கி எறிந்த அதேவேளை, ஏனைய சமூகங்களினை அச்சுறுத்தாத வகையில், அப்பிராந்தியத்தில் இருக்கும் ஏனைய கலாசாரங்களுடன் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த ஒரு பௌத்தப் பாரம்பரியத்தினையும் இல்லாதொழித்தது. புனித வலயப் பிரகடனத்துடன், பௌத்தம் அங்கு ஒரு கோர முகத்தினை வெளிக்காட்டியது. வடக்குக் கிழக்கினை மையமாகக் கொண்ட தாயகக் கோட்பாட்டினால் இன, கலாசார எல்லைகளைக் கடந்துபோகும் இந்த மாதிரியான உறவுகளையும், அவை எவ்வாறு சிங்கள பௌத்தத் தேசியவாதத்தினால் சிதைந்து போகின்றன என்பதனையும் விளங்கப்படுத்த முடியாது. ஒற்றை அடையாளத்தினுள் புதைந்து போயிருக்கும் இந்தக் கோட்பாடு, சமூகங்களை ஒன்றில் இருந்து ஒன்று பிரிக்குமே ஒழிய, அவை சேர்ந்து செயற்படுவதற்கான வழிகளை ஏற்படுத்தாது.

இன மையமற்ற சுயநிர்ணயம்

இன்றைய கிழக்கு மாகாணத்திலே, தமிழரும் முஸ்லிம்களும் இணைந்த நிலையில் 77% ஆன சனத்தொகையினை உருவாக்குகின்றனர். அவர்கள் தமது சமூகங்களினை மையமாகக் கொண்டு இயங்கும் இனத் தேசியவாதங்களினையும், குறுகிய நிலப்பரப்பு சார் கோட்பாடுகளினையும் விடுத்து, அவற்றின் மேலாக எழுந்து, வடக்குக் கிழக்கின் பன்மைத்துவத்தினைப் பாதுகாக்கும் வகையிலும், தமது சகவாழ்வினைக் கொண்டாடும் வகையிலும் ஒரு பதாகையின் கீழ் ஒன்றுபடுவார்களாயின், அது அரசினால் தொல்பொருளியல் பாதுகாப்பு என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் கலாசார அழிப்புக்கு, உறுதியானதும், எவரையும் புறமொதுக்காததுமான ஓர் எதிர்வினையினை வழங்கும்.

இவ்வாறான ஓர் ஒருமிப்பு தமிழ், முஸ்லிம் தேசியவாதங்களையும், தாயகக் கோட்பாடுகளையும் தாண்டி வடக்குக் கிழக்கின் பன்மைத் தன்மையினையும், அங்கு வாழும் சமூகங்களின் சகவாழ்வினையும் முதன்மைப்படுத்தும் வகையிலான ஒரு இன மையமற்ற சுயநிர்ணயம் தொடர்பான பார்வையினையும் வளர்த்தெடுக்க உதவும்.

வடக்குக் கிழக்கின் சுயநிர்ணயப் போராட்டத்துக்கு என ஒரு குறிப்பிட்ட சமய அடையாள மையம் இருக்கவில்லை. அவ்வாறான சமய மையமில்லாமை, அந்தப் போராட்டத்திலே பல சமயத்தவரும் இணைவதற்கு உதவியதாக இருந்தது. அதே போலவே அந்தப் போராட்டத்துக்கு ஒரு இன அடையாள மையமும் இருக்க வேண்டியதில்லை.

வடக்குக் கிழக்கினை நாம் தமிழர்களின் தாயகம் அல்லது தமிழ் முஸ்லிம் மக்களின் தாயகம் என்ற அடிப்படையில் வரையறுத்து, அதனடிப்படையில் அரசின் தொல்பொருளியல் வன்முறையினை எதிர்க்கப் போகிறோமா அல்லது அது ஒரு பன்மைத்துவத்தினையும், சகவாழ்வினையும் மதிக்கும் பூமி என நிலைநிறுத்தி அந்த அடிப்படையில் இருந்து பௌத்தமயமாக்கத்தினை எதிர்க்கப் போகிறோமா? இதிலே இரண்டாவது மார்க்கம் வடக்குக் கிழக்கிலே வாழும் பல தரப்பினரையும் ஒரு குடையின் கீழே கொண்டுவரக் கூடியது. ஒரு இனத்தேசியவாதத்துக்கு இன்னொரு இனத்தேசியவாதம் பதில் அல்ல என்பதனை வெளிப்படுத்தக் கூடியது. இவ்வாறான ஒரு அணுகுமுறையே சிங்கள பௌத்தத் தேசியவாதத்துக்கு கருத்தியல் ரீதியாகவும் சரி, கட்டமைப்பு ரீதியாகவும் சரி, செயற்பாட்டுத் தளத்திலும் சரி ஒரு பலமான மாற்றினையும், எதிர்ப்பினையும் உண்டுபண்ணும்.

மகேந்திரன் திருவரங்கன்,
தகுதிகாண் விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்