பட மூலம், AP Photo/Gemunu Amarasinghe, The National Herald

இலங்கையில் மிகவும் பயரங்கமான உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் இடம்பெற்று ஒரு வருடமாகியுள்ளது. மத வழிபாட்டுத்தலங்களையும், ஹோட்டல்களையும் இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட பல தாக்குதல்களால் நூற்றுக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. அந்தத் தாக்குதல் பேரழிவை ஏற்படுத்தியதுடன், இலங்கையை முற்றாக ஆட்டம் காணச்செய்தது.

ஊடகங்களில் வெளியான படங்களும், அதன் பின்னர் கொச்சிக்கடை புனித செபஸ்டியன் தேவாலயம் மற்றும் நீர்கொழும்பு செபஸ்டியான் தேவாலயத்துக்கு நான் மேற்கொண்ட விஜயங்களும் யுத்தம் இடம்பெற்ற வருடங்களிற்கு என்னை இட்டுச்சென்றன. இந்த இரு தேவலாயங்களிலும் இடம்பெற்ற  குண்டுவெடிப்புகளால் நூற்றிற்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாயின. மீண்டும் நாங்கள் மரணச்சடங்குகளினதும், துயரத்தில் சிக்கி தவிக்கும் குடும்பங்களினதும் படங்களை எதிர்கொண்டோம். இவை அனைத்தும் யுத்தம் முடிவடைந்து தசாப்தகாலமாகின்ற போதிலும் எங்கள் சமாதானம் மிகவும் பலவீனமானது என்பதை நினைவுபடுத்தியுள்ளது. தாக்குதலுக்குப் பின்னர் வெளியான உணர்வுகள் எதிர்வினைகள் எங்களுக்குப் பரிச்சயமானவை. துயரம், அச்சம் – பயம் மேலும் நேரடியாக பாதிக்கப்பட்ட,  சாட்சிகளாக உள்ள சமூகங்கள் மத்தியில் காணப்பட்ட சீற்றம்  என்பன தெளிவானவை. இடம்பெற்ற விசாரணைகள் தலைமைத்துவத்தின் தோல்விகளையும், பாதுகாப்பு குறைபாடுகளையும் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த சீற்றம் அடுத்துவந்த நாட்களில் மேலும் தீவிரமடைந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகம் ஒடுக்குமுறைகள், பாரபட்சம்,​தூண்டுதல்கள், வன்முறைகள் என்பனவற்றை எதிர்கொண்டது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் ஊரடங்கு உத்தரவின் போது வன்முறைகள் எவ்வாறு பரவின என்ற கேள்வியை எழுப்பின. தாமதங்களும் மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கான திறமையின்மையும் அச்சங்களை மேலும் தீவிரப்படுத்தியதுடன் பல வருடங்களாக வன்முறைகளை சந்தித்த சமூகத்தின் மத்தயில் அச்சத்தையும் உருவாக்கின. இந்த காலத்தின் போதே அகதிகள் மீதான தாக்குதல்களை நாங்கள் சந்தித்தோம், அவர்கள் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாத போதிலும், தங்கள் சொந்தநாடுகளில் இருந்து ஒடுக்குமுறை காரணமாக தப்பி வந்த மக்கள் இலங்கையில் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளனர்.

அந்த துரதிஷ்டவசமான நாளுக்குப் பின்னர் ஒருவருடம் கடந்துள்ளது. அதன் பின்னர் பல  விடயங்கள் இடம்பெற்றுள்ளன. அந்தத் தாக்குதல்களுக்குப் பிந்தைய வாரங்களில் யுத்தத்திற்குப் பின்னர் இலங்கை மிகமோசமான இனமத வன்முறைகளை  எதிர்கொண்டது. தாக்குதல் இடம்பெற்றவேளை ஆட்சியிலிருந்த அரசாங்கத்தின் தோல்விகள் காரணமாக உண்டான சீற்றமும் ஏமாற்றமும் இலங்கைக்குப் பாதுகாப்பான ஸ்திரமான  தலைமை அவசியம் என்ற குரல்கள் ஒலிப்பதற்கு காரணமாக அமைந்ததுடன் இறுதியில் நவம்பர் 2019 தேர்தலில் கோட்டபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்குக் காரணமாக அமைந்தது. கடந்த கால துஷ்பிரயோகங்கள் குறித்த குற்றச்சாட்டு காணப்பட்டபோதிலும், வேட்பாளர் ராஜபக்‌ஷ ஒழுக்கம், பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் திறமை ஆகியவற்றை முன்னிறுத்தியதை வேட்பாளர்கள் ஏற்றுக்கொண்டனர். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவர் முக்கிய பதவிகளை முன்னாள் இராணுவ அதிகாரிகள் உட்பட விசுவாசிகளுக்கு வழங்கினார். தற்போது ஒருவருடகாலமாகியுள்ள நிலையில் நாடாளுமன்றம் அற்ற நிலையில் இலங்கை புதிய அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

மேலும், இலங்கை முன்னர் ஒருபோதும் சந்தித்திராத சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. கொவிட்-19 எங்களது நாளாந்த வாழ்கையை தீர்மானிப்பதுடன் பொருளாதாரம் மற்றும் நிர்வாகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் மாதத்திற்குப் பின்னர் நாங்கள் தேர்தலை தாமதிப்பதற்கான கடுமையான நடவடிக்கைகளையும், நீதிமன்றங்களை  ஏனைய அலுவலகங்களை மூடுவதற்கான நடவடிக்கைகளையும், நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும், தனிமைப்படுத்தலையும் சந்தித்துள்ளோம். இந்த நெருக்கடியில்தான் இராணுவம் மற்றும் புலனாய்வுத்துறை நோய்த் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கு மற்றும் தனிமைப்படுத்தலுடன் முக்கிய பங்கு வகிப்பதைக் காண்கிறோம்.

மேலும் இந்த வாரம் தேர்தல் ஆணையகம் ஜூன் 20 திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது. எனினும், சுகாதார நெருக்கடிகளின் மத்தியிலும், தேர்தல் நோய் தொற்றினை தீவிரப்படுத்தலாம் என்ற கரிசனைகள் காணப்படுவதால் தேர்தல் இடம்பெறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

இவ்வாரான சூழ்நிலையின் மத்தியிலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஒரு வருடகாலமாகியுள்ளது. இந்தச் சூழமைவின் மத்தியில் எந்தப் பாடத்தையாவது நாங்கள் கற்றுக்கொண்டுள்ளோமா என்ற ஆச்சரியம் எங்கள் மத்தியில் காணப்படுகின்றது.

விசாரணைகளின் போது வெளியான விடயங்கள் குறித்து சிந்தித்தல்

தாக்குதலுக்குப் பின்னைய மாதங்கள், அந்தப் பேரழிவை தடுத்து நிறுத்தக்கூடிய தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசியல் தலைமைகளும், பாதுகாப்பு தரப்பினரும் தவறினர் என்பதை வெளிப்படுத்தின. குண்டுவெடிப்பு இடம்பெற்றவேளை இலங்கையின் ஜனாதிபதியாகயிருந்தவர் நியமித்த விசாரணை ஆணைக்குழுவும், நாடாளுமன்ற தெரிவுக்குழுவும் இடம்பெற்ற தவறுகள் குறித்து ஆராய்ந்ததுடன் பல தவறுகள் இடம்பெற்றதாகத் தெரிவித்தன. ஜனாதிபதி நியமித்த குழுவினரின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படாத அதேவேளை நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை  அனைவரும் வாசிக்ககூடியதாக காணப்படுகின்றது (இதன் பல அமர்வுகளுக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதுடன் ஊடகங்களில் பரந்துபட்ட செய்திகள் வெளியாகியிருந்தன). நாடாளுமன்ற தெரிவுக்குழு, ஏப்ரல் நான்காம் திகதி முதலாவது புலனாய்வு எச்சரிக்கை கிடைத்தபோதிலும் உரிய தருணத்தில் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளதுடன் அரச புலனாய்வு சேவையின் இயக்குநரே பிரதான குற்றவாளி என தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத் தெரிவுக்குழு அரசாங்கத்தைச் சேர்ந்த பலர் மீதும் தவறுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் பாதுகாப்பு தரப்பினர் மத்தியிலும் தவறுகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இது தவிர பல்வேறுபட்ட தரப்பினரின் தவறுகளையும் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பிட்ட அறிக்கை தற்போதைய கட்டமைப்பு குறித்தும் ஆராய்ந்துள்ளது, பாதுகாப்பிற்கான உயர் அமைப்பான தேசிய பாதுகாப்பு பேரவை குறித்தும் ஆராய்ந்துள்ளது. தாக்குதல் இடம்பெறுவதற்கு சமீப மாதங்களில் அவ்வப்போது தேசிய பாதுகாப்பு பேரவை கூட்டங்களை நடத்தியதுடன், பலதரப்பட்ட பாதுகாப்பு சவால்களுக்கு உரிய பதில்களை வழங்கத் தவறியுள்ளது. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த உள்ளூர் குழுக்கள் தெரிவித்த தகவல்கள் அதிகாரிகளால் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டன என்பதும் குறித்தும் நாடாளுமன்ற தெரிவு குழு ஆராய்ந்தது. பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் தரப்பினரைச் சேர்ந்த பல்வேறுபட்டவர்கள் கண்காணிப்பின் கீழ் ஈடுபட்டபோதிலும் இது இடம்பெற்றுள்ளது.

முழுமையான அறிக்கையை  வாசிப்பது மிகவும் பயனுள்ளது என்றாலும், நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையின்  80ஆவது பக்கம் பின்வரும் விடயங்களை குறிப்பிட்டிருந்தது.

“இவ்வாறான சூழ்நிலையில், இது தொடர்பான சில கேள்விகளை கேட்கவேண்டும் – சில அரசியல்வாதிகளின் ஆதரவுடன், புலனாய்வுத் தரப்பைச் சேர்ந்த ஒரு பிரிவினர் நடைபெறும் விசாரணைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்த முயன்றார்களா? குற்றவாளிகள் என கருதப்படுபவர்களை கைதுசெய்வதைத் தடுக்க முயன்றார்களா? முக்கியமான தகவல்களை பரிமாறவேண்டாம் என தெரிவித்தார்களா? 2018 முதல் காணப்பட்ட அமைதியின்மையும், அதிகரித்த மத பதற்றமும், நிச்சயமற்ற தன்மையை அதிகரிப்பதற்கும் சமூகங்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சியா? குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில்? இது சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கட்டுப்பாடின்மையை வெளிப்படுத்துவதற்கான – ஆட்சிமாற்றத்திற்கான குரல்களை அதிகரிப்பதற்கான – ஒரு முயற்சியா?

2019 ஜனாதிபதி தேர்தல் மற்றும் 2020 நாடாளுமன்ற தேர்தல் வரை மக்களின் நாளாந்த வாழ்க்கையைப் பாதிக்கக்கூடிய வன்முறை மற்றும் அதிகரித்த பதற்றங்கள் இடம்பெற்றது. இது சமூகங்கள் மத்தியில் அச்சத்தையும் சந்தேகத்தையும் விதைத்ததுடன், குறிப்பாக சிறுபான்மை இனத்தவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய நிலை காணப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களும், அதன் பின்னர் இலங்கையின் பல பகுதிகளில் இடம்பெற்ற மத வன்முறைகளும், மக்கள் மத்தியில் அதிகளவு அச்சத்தை ஏற்படுத்தியதுடன், அரசியல் தலைமைத்துவம் மற்றும் பாதுகாப்பு தரப்பு குறித்து மக்கள் மத்தியிலிருந்து விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் உருவாக்கின.

இக்காலப்பகுதியிலேயே ஆட்சி மாற்றத்திற்கான குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. இவற்றை தற்செயலானவை எனக் கருதமுடியாது. இது குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளவேண்டும். புலனாய்வு துறையில் சில பிரிவினரின் நடவடிக்கைகள் குறித்தும், பாதுகாப்பு, தேர்தல் நடவடிக்கைகள், அரசியல், இலங்கையின் எதிர்காலத்தை தங்களுக்கு ஏற்ற விதத்தில் உருவாக்குவதற்கான அவர்களின் நடவடிக்கை குறித்தும்  விசாரணை செய்வதும் முக்கியமானது.”

இந்த அறிக்கை ஒக்டோபர் 2019 இல் வெளியான போதிலும், அதன் பின்னர் ஆறுமாதங்கள் கடந்துவிட்டபோதிலும், சீர்திருத்தங்களை முன்னெடுத்து குற்றவாளிகளை பொறுப்பாளிகளாக்குவதற்கான அர்த்தபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவா என்ற கேள்விகள் எழுகின்றன. தாக்குதல் இடம்பெற்று ஒரு வருட காலத்தின் பின்னரும், அமைப்பு ரீதியான தோல்விகள் குறித்தும், தக்க நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான சில தனிநபர்களின் முயற்சிகள் குறித்தும் விசாரணைகள் இடம்பெற்றனவா  என்ற கேள்விகள் எழிகின்றன.

இலங்கை தற்போது கொவிட்-19 இன் நடுவில் சிக்குண்டுள்ளது. பல தரப்பட்ட தனிநபர்கள் பதில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர், முன்னரங்குகளில் பலர் மிகவும் அசாதாரண  பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வலுவான பயனளிக்கக் கூடிய நடவடிக்கைகள் அவசியம் என்பதில் எந்தவித சந்தேகங்களும் இல்லை. இந்தப் பதில் நடவடிக்கைகளின் அரசமைப்பு மற்றும் சட்டரீதியான தாக்கங்கள் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிப்பது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல, அது குறித்து எதிர்வரும் மாதங்களில் ஆழ்ந்த கவனத்தை செலுத்தவேண்டும். இதில் கவனத்தில் எடுக்கவேண்டிய விடயம் என்னவென்றால், கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிலரின் குறிப்பிடத்தக்க நடவடிக்கைள் மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகள், சிவில் உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீது தாக்கத்தைச் செலுத்தும் என்பதே. ஊடகங்கள்  தெரிவிக்கின்ற தகவல்களின் படி இராணுவத்தினரும் புலனாய்வுத் தரப்பினரும் நோயாளிகளைக் கண்டுபிடிப்பது, தனிமைப்படுத்துவது ஆகியவற்றில் முக்கிய பணியை ஆற்றியுள்ளனர். இந்த நடவடிக்கைகள் பலனளிப்பவையாக காணப்படுகின்ற அதேவேளை, நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் கண்டுபிடிப்புகளை தற்போதைய சூழ்நிலையில் ஆராய்ந்து பார்க்கவேண்டியதும் அவசியம். குறிப்பாக கட்டமைப்புகள் மற்றும் குறிப்பிடத்தக்க சிலரின் நடவடிக்கைகள் குறித்தும் ஆராயவேண்டியது அவசியம். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் தற்போதும் கொவிட் -19 சூழலில், கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனரா? அப்படியானால் பொறுப்புக்கூறலையும், கண்காணிப்பையும் உறுதிசெய்வதற்கான சீர்திருத்தங்கள் எவையாவது முன்னெடுக்கப்பட்டனவா?

பாதுகாப்புத் துறை சீர்திருத்தங்கள் தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்வைத்த பரிந்துரைகளை ஆராய்வது முக்கியமானது. குறிப்பிடப்பட்ட ஒரு விடயம் என்னவென்றால், சீர்திருத்தப்பட்ட தேசிய பாதுகாப்பு பேரவை மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை உருவாக்குதல் ஆகியவையாகும். இந்தச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றனவா என்பது குறித்த தகவல்கள் எவையும் பொதுவெளியில் காணப்படவில்லை. தற்போதைய நெருக்கடியை கருத்தில் கொள்ளும்போதும் ,சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கான முன்னுரிமையை கருத்தில் கொள்ளும்போதும், கட்டமைப்பு மற்றும் சட்டரீதியான சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதற்கு கவனத்தை செலுத்தவேண்டியது முக்கியமானது. அவ்வாறான சீர்திருத்தங்கள் முக்கிய ஸ்தாபனங்களை, அச்சுறுத்தல்களுக்கு தீர்வை காண்பதற்கும் அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்குமான விதத்தில் வலுப்படுத்தும். இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்குமான கட்டமைப்புகள் காணப்படுகின்றன. இலங்கையின் கடந்த காலங்களையும் புதிய சவால்களையும் கருத்தில்கொள்ளும்போது இந்தத் துறைகளில் சீர்திருத்தங்கள் அவசியமானவை.

நாடாளுமன்றத்தைக் கண்காணிப்பது உட்பட மேலும் பல விடயங்கள் குறித்து நாடாளுமன்ற தெரிவுக்குழு பரிந்துரைகளை முன்வைத்திருந்தது. நிறைவேற்று அதிகாரம் அளவுக்கதிகமாக செயற்படுவதை கட்டுப்படுத்துவதற்கும் அதனை பொறுப்புக்கூறச்செய்வதற்கும் இது அவசியம். வலுவான நாடாளுமன்ற கண்காணிப்பு என்பது பொறுப்புக்கூறுதல் வெளிப்படைத்தன்மைக்கு அப்பால் செல்ல முடியும், மேலும் பாதிக்கப்பட்ட சமூகத்தினர் மத்தியில் அளவுக்கதிகமான மர்மமான பாதுகாப்புச் சாதனங்கள் குறித்து காணப்படுகின்ற நம்பிக்கையின்மைகளுக்குத் தீர்வை காணமுடியும். நாடாளுமன்றம் என்பது சட்டசீர்திருத்தங்கள் மற்றும் பொதுநிதிக்கும் அவசியமானது. கொவிட்-19னை எதிர்த்துப் போராடுவதில் இந்த இரண்டும் முக்கியமான விவகாரங்களாகும். துரதிஷ்டவசமாக நாடாளுமன்றம் தற்போது இயங்காத நிலையில் தீர்மானங்கள் முற்றாக நிறைவேற்று அதிகாரத்தினாலேயே எடுக்கப்படுகின்றன. நிறைவேற்று அதிகாரத்தின் நடவடிக்கைகளை கண்காணிப்பிற்கு உட்படுத்தக்கூடிய நாடாளுமன்றம் இல்லாத நிலை, ஏதேச்சதிகார ஆட்சிக்கு வழிவகுப்பதுடன், எங்கள் ஜனநாயகத்தின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

எதிர்காலத்திற்கான சிந்தனைகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் இலங்கை குழப்பமான வருடத்தை எதிர்கொண்டது. தேர்தல் வாக்குறுதிகளையும், பதவியேற்ற பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் வைத்து பார்க்கும்போது பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, ஒழுக்கம் மற்றும் திறமை ஆகியனவே அரசாங்கத்தின் முன்னுரிமைக்குரிய விடயங்கள் போல தோன்றுகின்றன. திறமையற்ற எதிர்கட்சி காரணமாக ஜனாதிபதியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. எனினும், இது கொரோனா வைரஸிற்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் மனித வாழ்க்கை பொருளாதாரத்தின் மீதான தாக்கங்களின் போது சோதனைக்குள்ளாகும்.

ஒரு வருட காலமாகியுள்ள நிலையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்காக எடுக்கப்பட்ட சீர்திருத்தங்கள் குறித்து எந்தத் தகவலும் பொதுவெளியில் இல்லை. மாறாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரச்சினைக்குரிய விதத்தில் செயற்பட்டனர் என நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சிலர் மேலும் வலுவான விதத்தில் பங்களிப்புச் செய்வதை நாங்கள் காண்கின்றோம். கொவிட்-19 சிலரின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தப்போகின்றதா? அவசியமான சீர்த்திருங்களுக்கு என்னாகப்போகின்றது?

இதேவேளை, ஒரு வருட பூர்த்திக்கு முன்னதாக தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்ட பலரின் கைதுகள் இடம்பெற்றன. இந்த கைதுகளின் நோக்கம் மற்றும் நேரம் குறித்து கேள்விகள் காணப்படுகின்றன. உரிய நடைமுறைகள் முற்றாக அலட்சியம் செய்யப்படுவது குறித்த கரிசனைகள் காணப்படுகின்றன. விசாரணைகள் அவசியம். அதேவேளை உரிய நடைமுறைகளும், சட்ட கட்டமைப்பை பின்பற்றுதலும் அதேபோன்று முக்கியமானவை. நாடாளுமன்றம் இல்லாத நிலையில் சட்டத்தின் ஆட்சியின் சரிவு என்பது எதேச்சதிகாரம் குறித்த கவலையை அளிக்கும் போக்காகும்.

கொவிட்-19 இன் மத்தியில் தூண்டுதல்களும், மதரீதியாக முத்திரை குத்துதல்களும் அதிகரித்துள்ளமை கவலைத் தரும் விடயங்களாகும். பாதிக்கப்பட்டவர்களினதும், சிறுபான்மையினத்தவர்களினதும்  கரிசனைகளுக்குத் தீர்வை காண்பதற்கான  நியாயமான முயற்சிகள் இல்லாத சூழ்நிலையில் இந்த அரசாங்கம் சிறுபான்மை இனத்தவர்களின் உரிமைகள், சகவாழ்வு, நல்லிணக்கம்  குறித்து அக்கறை கொண்டுள்ளதா என்ற கேள்விகள் எழுகின்றன.

இலங்கை பயணித்துக்கொண்டிருக்கும் திசை குறித்த கடினமான கேள்விகளை எழுப்பவேண்டும், பல சுற்று வன்முறைகளையும் பேரழிவுகளையும் சந்தித்திருக்கும் இலங்கை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற ஒன்றை ஒருபோதும் எதிர்பார்த்திருக்கவில்லை. 2019 இல் காணப்பட்ட அச்சம், சீற்றம், வெறுப்பு ஆகியவற்றின் விசக்கலவை கவலைக்குரியது என்றபோதிலும், கொவிட்-19 இற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாட்டில் அவ்வாறான போக்குகளைத் தொடர்ந்தும் பார்க்கப்போகின்றோமா என்ற கவலை காணப்படுகின்றது.

இலங்கை பல சுற்று வன்முறைகளுக்கு முகம்கொடுத்துள்ளதுடன், இழப்பையும் துயரத்தினையும் சந்தித்துள்ளது. மீண்டும் நாங்கள் அவ்வாறான ஒன்றை எதிர்கொண்டுள்ளோம். ஒரு வருடத்தின் பின்னர் நாங்கள் பாடங்களைக் கற்றுக்கொண்டுள்ளோமா என்ற கேள்வியே எழுகின்றது.

பவானி பொன்சேகா