பட மூலம், The Economist
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உறுதிமொழியை பொய்யாக்கிவிட்டு சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவிக்கு தேர்ந்தெடுப்பது தொடர்பான செய்தி பரவத்தொடங்கியபோதே எதிர்ப்பும் வெளியிடப்பட்டது. சுங்க தொழிற்சங்கங்கள் முதலில் எதிர்ப்பை தெரிவித்ததோடு பின்னர் இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தினரும் அவர்களோடு இணைந்துகொண்டார்கள். அவர்கள் விஜித ரவிப்பிரியவின் நியமனம் தொடர்பில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மனுவொன்றையும் கையளித்திருந்தனர்.
அதன் படி, இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிர்வாக சேவைகள் சங்கத்தினருக்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்தச் சந்திப்பின்போது, சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரியவின் நியமனத்தை ரத்துச்செய்வதாக நிர்வாக சேவைகள் சங்கத்திடம் கூறியிருக்கிறார். இராணுவ அதிகாரியொருவரை நியமிக்கப்போவதில்லை என்றும் பிரதமர் அவர்களிடம் கூறியிருக்கிறார். பணிப்பாளர் பதவி நிர்வாக சேவையில் மிக முக்கிய பதவிநிலையென்று நிர்வாக சேவைகள் சங்கமும் பிரமரிடம் கூறியுள்ளது. அத்தோடு, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளதன் படி, தகுதிவாய்ந்தவர்களே பதவிகளில் அமர்த்தப்படுவர் என்ற உறுதிமொழி ரவிப்பிரியவின் நியமனத்தில் மூலம் பொய்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் சங்கம் கூறியுள்ளது.
சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக விஜித ரவிப்பிரிய நியமனம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த சுங்க தொழிற்சங்கங்கள், நிர்வாக சேவைகள் சங்கம், அவர் கடமைகளைப் பொறுப்பேற்றதன் பின்னர் அது தொடர்பாக பொதுவெளியில் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இருந்தபோதிலும் இதே சுங்கத் தொழிற்சங்கமும் நிர்வாக சேவைகள் தொழிற்சங்கமும் கடந்த நல்லாட்சியின் போது சுங்கத் திணைக்களத்துக்கு ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சமல் பெர்ணாந்து நியமிக்கப்பட்டமைக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தன. இதனோடு நிறுத்திவிடாமல், தொழிற்சங்க நடவடிக்கையின் மூலம் சுங்கம் மட்டுமன்றி நிர்வாக சேவையையும் நிறுத்தப்போவதாக அச்சுறுத்தல் விடுத்தன. ஆனால், இன்று இந்த தொழிற்சங்கங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றன.
நாட்டில் இடம்பெறும் போரின்போது போர்க்களத்திலும், அத்தியாவசியமான சேவைகளில் பாதிப்பு ஏற்படும்போது அவற்றை சீராக நடாத்துவதற்கும் உதவிக்கு அழைக்கப்படும் முப்படையினர், இப்போது நாட்டின் நிர்வாக நடவடிக்கையிலும், சிவில் நிர்வாக நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்படுவது அரசின் புதிய நிர்வாக செயன்முறையாக மாற்றமடைந்துள்ளது. இப்போது புதிதாகவும் ஒன்று சேர்ந்துள்ளது – பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினருக்கு உதவியாக இராணுவ, கடற்படை மற்றும் விமானப் படைப் பொலிஸார் வீதிகளில் இறக்கப்பட்டிருக்கின்றனர். பொலிஸ் கட்டளை சட்டத்தின் படி, போக்குவரத்து சார்ந்த முகாமைத்துவம் மற்றும் அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் பொலிஸாருக்கே உள்ளது. இராணுவப் பொலிஸாராலோ, விமானப்படைப் பொலிஸாராலோ, கடற்படைப் பொலிஸாராலோ இதனை நிறைவேற்ற முடியாது. முப்படை வசமுள்ள பொலிஸார் அவர்களுடைய இராணுவம் கொண்டிருக்கும் ஒழுக்கநெறியை நிறைவேற்றவே இருக்கின்றனர்.
அரசியல் நடவடிக்கைகளுக்காக முப்படையினரை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலப்பகுதியில் எவ்வாறு பயன்படுத்தினர் என்பதை நினைத்துப் பார்க்கும்போது, இப்போது கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் முப்படைப் பொலிஸாருக்கு தேவையென்றால் செய்வதற்கு ஏராளமான ‘ஒழுக்கநெறி’ சார்ந்த கடமைகள் இருக்கலாம். அன்று “மேலிட உத்தரவின்படி” செயற்பட்டதனால் ஒழுக்கநெறியை மீறியதற்காக எப்போதும் விசாரணைகள் நடைபெறாது என்பது உறுதி.
இப்போது போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக வீதிகளுக்கு வந்திருக்கும் முப்படைப் பொலிஸாரால் வாகனங்களுக்கு சைகை காட்டுவதை மட்டுமே செய்யமுடியும். அதுவும் அன்று அந்த இடத்தில் இருக்கும் பொலிஸ் அதிகாரியின் வழிகாட்டலைப் பொறுத்தே. பொதுவாக சந்தர்ப்பங்களுக்கேற்ப, ஒவ்வொரு இடங்களிலும் எவ்வாறு போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவது என்று பொலிஸாருக்கு மட்டுமே தெரியும். அத்தோடு, அந்த சந்தர்ப்பத்தில் வேறு பகுதிகளில் கடமையில் ஈடுபட்டிருக்கும் பொலிஸாரிடமிருந்தே ஏனைய பொலிஸாருக்கும் தகவல்கள் கிடைக்கின்றன. அரசாங்கத்தின் உயர் பதவிகளில் இருப்பவர் வரும்போது போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துமாறு தகவல்கள் கிடைப்பதும் பொலிஸாருக்கு மட்டுமே.பொலிஸாருக்கு உதவியாக இராணுப் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டிருப்பதனால் மாற்றம் நிகழ்ந்திருப்பதாகத் தெரியவில்லை. மாறாக போக்குவரத்து நெரிசலே அதிகரித்திருக்கிறது.
போக்குவரத்து விளக்குகள் மூலம் மட்டும் இயங்கும் பிரதான சந்திகள் இப்போது சைகை மூலம் இயக்கப்படுகின்றன. சிலவேளை முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக வேண்டுமென்றே பொலிஸார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுகிறது. தாங்கள் வீதிக்கு இறங்கினால் இலகுவாக, நேரத்தை வீதியிலேயே கழிக்காமல் பயணத்தை தொடரவே மக்கள் விரும்புகிறார்கள். பொலிஸ், இராணுவ சண்டை அவர்களுக்கு தேவையில்லை. ஏனைய அரச நிறுவனங்களைப் பொறுத்தவரையிலும் மக்கள் அதையேதான் எதிர்பார்க்கின்றனர். நிறுவனங்களிடம் சேவையை எதிர்பார்த்துவரும் மக்களுக்கு இராணுவத்துக்கும் சிவில் நிர்வாகத்திற்கும் இடையில் இடம்பெறும் மோதல் அவசியமில்லாத ஒன்று. தங்களுடைய தேவையை எவ்வளவு சீக்கிரமாக பூர்த்திசெய்ய முடியுமோ என்று மட்டும்தான் மக்கள் பார்ப்பார்கள்.
இவ்வாறு பார்க்கும்போது, அரச நிறுவனங்களுக்கும் தூதரகங்களுக்கும் இராணுவ அதிகாரிகளை நியமிப்பது நாட்டுக்கு அவ்வளவு நல்ல விடயமல்ல. அரச நிர்வாகத் துறைக்கும், இராணுவ அதிகாரிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெறக்கூடிய வாய்ப்பு அதிகம்.
இந்த மோதல் இறுதியில் யார் வெற்றி பெறுவது என்பதை நோக்கியே நகரும். அரச நிறுவனத்தின் பிரதானியாக இராணுவ அதிகாரி இருப்பதனாலும், மக்கள் மத்தியில் அரச நிறுவனங்கள் மீதுள்ள அதிருப்தியினாலும், எல்லாவற்றுக்கும் தீர்வாக இராணுவத்தையே மக்கள் கோரி நிற்பதாலும் பெரும்பாலும் இந்தப் போட்டியில் இராணுவ அதிகாரியே வெற்றிபெறக்கூடும். இவற்றுக்கு ஆசீர்வதிக்கக்கூடிய, பலத்தை வழங்கக்கூடிய வகையில் இராணுவ அதிகாரியொருவரே ஜனாதிபதியாக இருப்பதாலும், அவருடைய விருப்பத்தைப் பெற்ற இராணுவ அதிகாரிகளால் அரச நிறுவனங்கள், தூதரக பதவிகளை நிரப்பி நாட்டை ஆட்சி செய்வதாலும் உத்தியோகபற்றற்ற இராணுவ ஆட்சி இடம்பெறும் நாடொன்றே நமக்கு மிஞ்சும்.
நீதிமன்றம் இருப்பது நிறைவேற்றதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்படுவதற்கல்ல என்று ஜனாதிபதி சுதந்திரதினத்தன்று சொல்லாமல் சொல்லியிருந்தார். நாடு எந்தப் பாதையை நோக்கி செல்லவேண்டும் என்பதை அதன் மூலம் நன்றாக உணரக்கூடியதாக இருக்கிறது. நீண்டகாலமாக சுபீட்சமான நாட்டைப் பற்றி கனவு காணும் மக்கள் இந்த நிலையை தொடரவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
அண்மைய இராணுவ உறுப்பினர்கள் நியமனம்
- ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன – செயலாளர், பாதுகாப்பு அமைச்சு | தலைவர், இலங்கை தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு
- ஜெனரல் தயா ரத்னாயக்க – தலைவர், இலங்கை துறைமுக அதிகார சபை
- ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி – தலைவர், விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம்
- ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க – பணிப்பாளர், இடர் முகாமைத்துவ மத்திய நிலையம்
- அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம – தூதுவர், பாகிஸ்தான்
- ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய – பணிப்பாளர், இலங்கை சுங்கம்
- ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எஸ்.டபிள்யூ.எல். தவுலகல – தலைவர், இலங்கை கடற்தொழில் கூட்டுத்தாபனம்
- ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டீ.எஸ்.எஸ். திசாநாயக்க – தலைவர், நுகர்வோர் அதிகார சபை
- அட்மிரல் ஜயநாத் கொலம்பகே – வெளிநாட்டு அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர்
- ஓய்வுபெற்ற மேஜர் நந்த மல்லவ ஆரச்சி – பணிப்பாளர், பல்நோக்கு அபிவிருத்தி பணிக்குழு
- ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா – உறுப்பினர், வறுமையை ஒழிப்பதற்கான ஜனாதிபதியின் பணிக்குழு
- ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் – பணிப்பாளர், சிவில் பாதுகாப்பு திணைக்களம்
- ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் – தேசிய புலனாய்வுப் பிரிவுத் தலைவர் (இந்த பதவிநிலையில் கடந்த அரசாங்க காலப்பகுதியின்போது பொலிஸ் அதிகாரியொருவரே கடமையாற்றியிருந்தார்)
- பிரிகேடியர் சுரேஷ் சலே – தலைவர், அரச புலனாய்வுப் பிரவு (SIS, இது பொலிஸ் திணைக்களத்தின் பதவியாகும்)
හමුදා පාලනයට යන රටේ පාලනය என்ற தலைப்பில் லசந்த ருஹுனுகே எழுதி ‘அனித்தா’ பத்திரிகையில் வெளியான கட்டுரையின் தமிழ் வடிவம்.