பட மூலம், Colombo Gazatte 

மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி சிறிசேன எடுத்திருக்கும் தீர்மானம் பரந்தளவிலான எதிர்ப்புக்களை சந்தித்துள்ளது. அரசாங்கத்திலும், எதிர்க்கட்சியிலும் இருக்கும் பிரதான கட்சிகள் அனைத்தும் – ஐக்கிய தேசிய முன்னணி, இலங்கை பொது ஜன பெரமுன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் அனைத்தும் – அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. பிரஜைகள் அமைப்புக்களும் அந்தத் தீர்மானத்தை கண்டித்துள்ளன. ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஐரோப்பிய யூனியன், போதை வஸ்துக்கள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பான ஐ.நா. அலுவலகம் (UNODC) என்பனவும், அதேபோல பல நாடுகளும் ஜனாதிபதியின் இந்தத் தீர்மானம் திரும்ப விலக்கிக் கொள்ளப்பட வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளன. மரண தண்டனையை அமுல் செய்வதானது, போதைவஸ்து கடத்தல் மற்றும் பயங்கரவாதம் என்பவற்றுக்கு எதிரான செயற்பாடுகளின் போது சர்வதேச ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கான ஒரு தடையாக இருந்துவர முடியும் என்ற விடயமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மரண தண்டனையை அமுல் செய்து வரும் நாடுகளுடன் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்கோ, குற்றவாளிகளை தமது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புவது தொடர்பான  ஏற்பாடுகளைக் கொண்டிருப்பதற்கோ இடமளிக்காத விதத்தில் பல நாடுகள் சட்டங்களை கொண்டுள்ளன. இந்த எதிர்ப்பு அணியில் கடைசியாக சேர்ந்து கொண்டிருக்கும் அமைப்பு இலங்கை மருத்துவக் கழகமாகும். மரண தண்டனையை அமுல்படுத்தும் செயற்பாடுகளில் ஏதேனும் விதத்தில் சம்பந்தப்படுவதானது மருத்துவ ஒழுக்கநெறிகளுக்கு முரணானதாக இருந்து வரும் என்ற விடயத்தை  இலங்கை மருத்துவக் கழகம் மருத்துவ ஆளணியினரின் கவனத்திற்கு எடுத்து வந்துள்ளது.

அரசாங்க கொள்கை தன்னிச்சையானதும், அரசியல் யாப்புக்கு முரணானதுமாகும்

மரண தண்டனையை ஒழிக்கும் இறுதிக் குறிக்கோளை நோக்கிய ஒரு படிமுறை என்ற முறையில் மரண தண்டனைகள் தொடர்பாக தற்காலிக தடைகளை விதிப்பதற்கு ஆதரவளிக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பல்வேறு தீர்மானங்களுக்கு இலங்கை 2007ஆம் ஆண்டு தொடக்கம் மீண்டும் மீண்டும் சார்பாக வாக்களித்து வந்துள்ளது. அதன் பின்னர் பல தடவைகள் உறுதிப்படுத்தப்பட்ட 2007ஆம் ஆண்டின் தீர்மானம் பின்வருமாறு பிரகடனம் செய்திருந்தது, “மரண தண்டனையை அமுல்படுத்துவதானது மனித கண்ணியத்தை சீர்குலைக்கின்றது என்ற விடயமும், அது தொடர்பாக தற்காலிகத் தடை ஒன்றை விதிப்பதானது மனித உரிமைகளின் முன்னேற்றகரமான அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்கின்றது என்ற விடயமும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மரண தண்டனை, குற்றங்களைத் தடுக்கக்கூடிய ஆற்றலை கொண்டிருக்கின்றது என்பதை நிரூபித்துக் காட்டுவதற்கு முடிவான நிரூபணங்களும் இருந்து வரவில்லை. மரண தண்டனையை அமுல்படுத்தும் விடயத்தில் நீதி தவறாக நிலைநாட்டப்பட்டால் அல்லது நீதி தோல்வியடைந்தால் அதனை மீண்டும் மாற்றியமைப்பதற்கு எவ்விதமான வாய்ப்பும் கிடைப்பதில்லை. அந்த இழப்பை ஒருபோதும் ஈடு செய்ய முடியாது.” மிக அண்மையில் 2018 டிசம்பர் மாதத்திலும் கூட இலங்கை இந்த இடைக்காலத் தடைக்கு ஆதரவாக மீண்டும் ஒரு முறை வாக்களித்திருந்தது.

ஐக்கிய நாடுகள் அமைப்பில் இலங்கை தொடர்ச்சியாக தெரிவித்து வந்திருக்கும் அதன் கடப்பாடு இது தொடர்பான அரசாங்கத்தின் தெளிவான கொள்கையை எடுத்துக் காட்டுகின்றது. இந்தப் பின்புலத்திலும் 1976ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் மரண தண்டனை அமுல் செய்யப்படாதிருக்கும் பின்புலத்திலும் ஒரு சட்ட விவகாரம் என்ற விதத்தில் மரண தண்டனையை அமுல் செய்வது தொடர்பான ஜனாதிபதியின் செயற்பாடு அரசாங்கக் கொள்கையை மீறுவதாக இருந்து வருகின்றது என நான் வாதிடுகின்றேன். மேலும், அரசியல் யாப்பின் உறுப்பிரை 42(1) இன் பிரகாரம், இலங்கை குடியரசு அரசாங்கத்தின் நெறிப்படுத்தல் மற்றும் கட்டுப்பாடு என்பவற்றுக்கான பொறுப்பினை அமைச்சரவையே கொண்டுள்ளது. எனவே, ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக செயற்பட முடியாது என்ற வாதத்தையும் நான் இங்கு முன்வைக்கின்றேன். மேலும், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் பிரதான கட்சிகள் மரண தண்டனையை மீண்டும் எடுத்து வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் கருத்துக்களை கேட்டு, அவற்றை தெரிந்து கொள்ள வேண்டிய கடமையை ஜனாதிபதி கொண்டுள்ளார். இத்தகைய சந்தர்ப்ப சூழ்நிலைகளில், மரண தண்டனையை மீண்டும் எடுத்து வருவது தொடர்பாக ஜனாதிபதி எடுத்திருக்கும் தீர்மானம் விவேகபூர்வமற்றதாகவும், நியாயமற்றதாகவும், தன்னிச்சையானதாகவும், அரசியல் யாப்பின் உறுப்புரை 12(1) மீறுவதாகவும் இருந்து வருகின்றது.

மீண்டும் ஒரு போதும் மாற்றியமைக்க முடியாதது – நீதி தவறான விதத்தில் நிலைநிறுத்தப்படக் கூடிய சாத்தியம்

கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா  1956ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் இப்படிக் குறிப்பிட்டார்: “அரசு மனிதனிடமிருந்து அபகரித்துக் கொள்ளும் அனைத்துப் பொருட்களிலும் முக்கியமான ஒரு பொருள் இருக்கின்றது. அப்பொருளை நீங்கள் அபகரித்துக் கொண்டால் மீண்டும் ஒருபோதும் உங்களால் அதனைத் திருப்பியளிக்க முடியாது. அந்த நபருக்கு அது தொடர்பாக உங்களால் நட்டஈடு வழங்கவும் முடியாது. ஏனெனில், அது அவரின் உயிராகும்.”

மரண தண்டனையுடன் சம்பந்தப்பட்ட விதத்தில் நீதித்துறை தீர்ப்புக்கள் தவறான விதத்தில் வழங்கப்பட்டிருக்கும் பெருந்தொகையான உதாரணங்களை வரலாறு கொண்டுள்ளது. இங்கு இரண்டு உதாரணங்களை எடுத்துக் காட்ட முடியும். ஒரு பெண்மணியை கொலை செய்த குற்றத்திற்காக திமோதி எவான்ஸ் என்பவர் 1950ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05ஆம் திகதி இங்கிலாந்தில் தூக்கிலிடப்பட்டார். மூன்று வருடங்களின் பின்னர் ஜோன் கிறிஸ்டி என்ற மற்றொரு நபர், எவான்ஸ் கொலை செய்ததாக கூறப்பட்ட பெண்மணியையும் உள்ளடக்கிய விதத்தில் ஆறு பெண்களை தான் கொலை  செய்திருப்பதாக கூறி அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பெருமளவுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த 52 ஆட்களின் கொலைச் சம்பவங்கள் தொடர்பாக ரஷ்ய அதிகாரிகள் அண்ட்ரி சிக்காடிலோ என்ற தொடர் கொலைகாரனை 1994ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தூக்கிலிட்டார்கள். ‘இந்தக் கொலைகளை வெகு விரைவில் நிறுத்தும் நோக்கத்தில், ‘அதற்கு முன்னர் இந்தக் கொலைகளில் ஒன்று தொடர்பாக அலெக்சாண்டர் கிராவ்சென்கோ என்ற தவறான நபரை’ தாம் தூக்கிலிட்டிருந்த விடயத்தை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டார்கள்.

வாஷிங்டன் டி.சியைச் சேர்ந்த R.T Stratgies என்ற நிறுவனம் ஐக்கிய அமெரிக்காவில் 500 பொலிஸ் அதிகாரிகளுக்கு மத்தியில் 2008ஆம் ஆண்டில் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. அதில் “வன்முறையுடன் கூடிய குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான மிக முக்கியமான” வழிகளில் ஒன்றை குறிப்பிடுமாறு கேட்கப்பட்டிருந்தது. உயர் பொலிஸ் அதிகாரிகள் அதற்கான வழிகளை பட்டியலிடும் பொழுது, மரண தண்டனையை கடைசி இடத்திலேயே வரிசைப்படுத்தியிருந்தார்கள். பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், போதைப்பொருள் பாவனையை குறைத்தல் மற்றும் சிறந்த பொருளாதாரம் ஒன்றை உருவாக்குதல் என்பன (குற்றச் செயல்களை தடுப்பதற்கான) அவர்கள் குறிப்பிட்ட உயர் முன்னுரிமைகளாக இருந்து வந்தன.

ஐக்கிய அமெரிக்காவில் மரண தண்டனையை அமுல் செய்துவரும் மாநிலங்களில் இடம்பெற்று வரும் கொலைகளின் எண்ணிக்கை, மரண தண்டனையை ஒழித்திருக்கும் மாநிலங்களில் இடம்பெற்று வரும் கொலைகளின் எண்ணிக்கையிலும் பார்க்க குறைவானதாக இருந்து வரவில்லை என்பது யாவருமறிந்த ஒரு விடயமாகும்.

கொலராடோ – போல்டர் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியரான மைக்கல் எல். ரட்லொட், “தூக்குத் தண்டனைகள், படுகொலை விகிதங்களை குறைத்து வருகின்றனவா?: முன்னணி குற்றவியல் வல்லுனர்களின் கருத்துக்கள்” என்ற தலைப்பில் Journal of Criminal Law and Criminology என்ற சஞ்சிகையில் 2009ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

மரண தண்டனை, கொலைகளை குறைக்க முடியும் என்ற அனுமானம் ஒரு மாயையாக இருந்து வருகின்றது என்ற விடயத்தை அனுபவ ரீதியான ஆராய்ச்சி எடுத்துக் காட்டியுள்ளது. இதனை உலகின் முதன்மை குற்றவியல் வல்லுனர்களில் பெரும்பாலானவர்கள் நம்புகின்றார்கள் என்பதனை எமது மதிப்பீட்டாய்வு சுட்டிக்காட்டுகின்றது. இந்தக் கருத்துக் கணிப்பில் பங்கேற்ற குற்றவியல் வல்லுனர்களில் 88.2% மரண தண்டனை குற்றங்களை தடுக்கும் ஒரு காரணியாக இருந்து வர முடியும் என்ற விடயத்தில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.

மரண தண்டனை படுகொலைகளின் எண்ணிக்கையை கணிசமான அளவில் குறைக்கின்றது’ என்ற கூற்றுக்கு 9.2% குற்றவியல் வல்லுனர்கள் மட்டும் ‘சரியானது’ என பதிலளித்திருந்தார்கள். எவ்வாறிருப்பினும், ஒட்டுமொத்தமாக வாக்களிப்பில் பங்கேற்ற நிபுணர்களில் 10% இற்கும் குறைவானவர்களே நீண்டகால சிறைத்தண்டனையிலும் பார்க்க, மரண தண்டனையின் குற்றத் தடுப்புக் காரணி குறித்து நம்பிக்கை வைத்திருந்தனர். நீண்டகால சிறைத்தண்டனையிலும் பார்க்க குற்றங்களை தடுக்கும் விடயத்தில் மரண தண்டனை எல்லை ரீதியான ஒரு தாக்கத்தையே கொண்டுள்ளது என்ற நிலைப்பாட்டைக் காட்டும் அண்மைக்கால பொருளியல் கணித ஆய்வுகள் வரையறுக்கப்பட்டவையாக அல்லது குறைபாடுகளை கொண்டவையாக இருந்து வருகின்றன. மேலும், அவை பொதுவான கருத்தொற்றுமையை உதாசீனம் செய்வதிலும் தோல்வி கண்டுள்ளன.

சுருக்கமாக சொல்வதானால், குற்றவியல் வல்லுனர்களுக்கு மத்தியில் பொதுவாக நிலவி வரும் கருத்தொற்றுமை, மரண தண்டனை, நீண்டகால சிறைத் தண்டனையிலும் பார்க்க குற்றங்களை தடுக்கும் விடயத்தில் எத்தகைய ஒரு கணிசமான  தாக்கத்தையும் எடுத்து வரவில்லை என்பதாகும்.”

முன்னைய ஜனாதிபதிகள் எவரும் மரண தண்டனைக்கு அனுமதி வழங்கியிருக்கவில்லை

மரண தண்டனை எமது சட்டப் புத்தகங்களில் உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும், அது காகிதத்தில் மட்டுமே இதுவரை காலமும் இருந்து வந்துள்ளது. தற்போதைய அரசியல் யாப்பின் கீழ் இதுவரையும் எந்தவொரு ஜனாதிபதியும் அதனை அமுல் செய்திருக்கவில்லை.

உயர் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டிய கொலைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நபர்கள் மீது 2005ஆம் ஆண்டில் குற்றத் தீர்ப்பு வழங்கப்பட்ட பொழுது, மரண தண்டனை மீண்டும் எடுத்து வரப்பட வேண்டும் என முனைப்பான விதத்தில் குரல்கள் எழுப்பப்பட்டன. ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க இந்த வேண்டுகோள்களுக்கு செவிமடுக்க முடியும் என்ற அச்சத்தில் அவருடன் இந்த விடயம் குறித்து கலந்துரையாடுமாறு பல நபர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டார்கள். அம்பேபிட்டிய சட்டக் கல்லூரியில் வகுப்புத் தோழராக இருந்து வந்த போதிலும், நான் உலக அளவிலான பல விவரங்கள் மற்றும் புள்ளிவிபரங்கள் என்பவற்றுடன் நல்ல ஆயத்த நிலையில் ஜனாதிபதி குமாரதுங்கவை சந்திப்பதற்குச் சென்றேன். நான் எனது முதலாவது வார்த்தையை முடிப்பதற்கு முன்னர், அவர் என்னுடைய பேச்சை இடைநிறுத்தி, இப்படிச் சொன்னார்: “ஆட்கள் என்ன தான் சொன்னாலும் மரண தண்டனை உத்தரவில் நான்தான் கைச்சாத்திட வேண்டும். அதனை நான் ஒரு போதும் செய்யமாட்டேன்.” திரு. சந்திரிக்கா குமாரதுங்கவுடன் நான் நடத்திய மிகச் சுருக்கமான சம்பாஷணை அதுவாகும். தனது தந்தை மற்றும் கணவர் ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்டிருந்த ஒருவரிடமிருந்து, கொலை முயற்சியிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பி, ஒரு கண்ணை இழந்திருந்த ஒருவரிடமிருந்து இந்த வார்த்தைகள் வந்தது குறித்து நான் பெருமளவுக்கு மகிழ்ச்சிடைந்தேன்.

அம்பேபிட்டிய கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நபர்களின் மேன்முறையீடுகள் 2006ஆம் ஆண்டில் தள்ளுபடி செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், ஆகக் குறைந்தது பிரதான குற்றவாளியையாவது தூக்கிலிட வேண்டும் என்ற விதத்தில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. எவ்வாறிருப்பினும், சரத் அம்பேபிட்டியவின் மற்றொரு வகுப்புத் தோழராக இருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் அந்த வேண்டுகோளை ஏற்க மறுத்தார். மரண தண்டனைக்கான தனது எதிர்ப்பை கடந்த வாரத்தில் அவர் மீண்டும் வலியுறுத்திக் கூறியதை பார்த்த பொழுது நான் மகிழ்ச்சிடைந்தேன்.

ஜனாதிபதி சிறிசேன மரண தண்டனையை நிறைவேற்றும் விடயத்தைத் தொடர்ந்து முன்னெத்துச் சென்றால் ஒரு பௌத்தர் என்ற முறையில் அவர் ஒருபோதும் நிம்மதியாக தூங்க முடியாதிருக்கும். குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இந்த நான்கு நபர்களினதும் ஆவிகள் என்றென்றைக்கும் அவரை சுற்றிக் கொண்டிருக்கும். ஜனாதிபதி சிறிசேன பல தடவைகள் தனது முன்னைய வாக்குறுதிகள் மற்றும் தனது கடப்பாடுகள் என்பவற்றை மீறி வந்திருக்கின்றார். அது தொடர்பான மிகப் பிந்திய உதாரணம் தானே முனைப்புடன் முன்னெடுத்த 19ஆவது திருத்தத்திற்கு எதிராக அவர் இப்பொழுது கடுமையாக குரல் கொடுத்து வருவதாகும். இப்பொழுது அதனை ஒரு சாபக்கேடாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் இந்த மரண தண்டனைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று, சில வருடங்களின் பின்னர் தான் இது தொடர்பாக தவறிழைத்திருப்பதாக கூறினாலும் கூட நான் ஆச்சரிப்படமாட்டேன்.

தென்னாபிரிக்க அரசியலமைப்பு நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்பு மிக்க முன்னணித் தீர்ப்பொன்றை மேற்கோள் காட்டி, இந்தச் சிறு குறிப்பை முடிவுக்கு கொண்டு வருவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன். மிகப் பிரபல்யமான Makwanyane வழக்கில் மரண தண்டனை வாழ்வதற்கான உரிமையை மீறுகின்றது என அந்நீதிமன்றம் ஏகமனதாக தீர்மானித்தது. “குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான மிகச் சிறந்த தடுப்புக் காரணி, குற்றவாளிகள் பிடிக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக குற்றத்தீர்ப்பு வழங்கப்பட்டு, தண்டிக்கப்படுவார்கள் என்ற சாத்தியப்பாடாகும். ஆனால், இதுவே தற்போதைய நீதிமுறையில் காண முடியாத ஒரு விடயமாக இருந்து வருகின்றது [1995] (3) SA 391, [122] (CC). ஜனாதிபதி சிறிசேன தனது தூக்கத்திலிருந்து எழுந்து, இலங்கையின் நீதித்துறையிலும் கூட இல்லாமல் இருக்கும் ஒரு விடயமாக இதுவே காணப்படுகின்றது என்ற விடயத்தை புரிந்து கொள்வது நல்லது.

கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன

“On resuming implementation of death penalty” என்ற தலைப்பில் தி ஐலன்ட் பத்திரிகையில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.