இப்போதெல்லாம் தர்மராணியால் போராட்டங்களில் கலந்துகொள்ள முடிவதில்லை. வெயிலில் நடந்தால் தலைச்சுற்றுகிறது. உயர் இரத்த அழுத்தம் என்று வைத்தியர்கள் கூறியிருக்கிறார்கள். உடம்பில் சத்திரசிகிச்சையும் செய்யப்பட்டிருக்கிறது. பஸ்ஸில் பயணிக்க யாருடைய உதவியாவது தேவைப்படுகிறது.

இறுதிப் போரின்போது தர்மராணியின் இரண்டு மகன்களையும் விடுதலைப் புலிகள் பலவந்தமாக படையில் இணைத்திருக்கிறார்கள். “பச்சை நிற ஜீப்பில் வந்த விடுதலைப் புலிகள் மூத்த மகனைப் பிடித்துச் சென்றதை அயலவர்கள் கண்டிருக்கிறார்கள். 20 வயதான இளைய மகனை என் கண் முன்னால்தான் கொண்டுசென்றார்கள். நான் எவ்வளவோ கெஞ்சியும் விடவில்லை” என்கிறார் தர்மராணி.

தர்மராணியின் கணவர் அன்றாடம் கூலி வேலைகள் செய்துவருகிறார். மகள் ஆடைத்தொழிற்சாலையொன்றுக்குச் செல்கிறார். தன்னால் வேலைக்குச் செல்ல முடியாததை நினைத்து கவலையடைவதாகக் கூறும் தர்மராணி, அதைவிட தனது பிள்ளைகளைத் தேடி எங்கும் செல்ல முடியாமல் இருப்பதே கொடூரமான வேதனையாக இருப்பதாகவும் கூறுகிறார்.

தர்மராணியின் கதை 360 டிகிரி பாகையில் சுழலும் வகையிலான காணொளிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. விர்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் மூலமும் இதனைப் பார்க்கலாம்.

ஆசிரியர் குறிப்பு: தொடர்புபட்ட கட்டுரை, 360 “நான் செத்த பிறகு பேரனை யார் தேடுவார்கள்”,“11 பேர் கடத்தலும் கடற்படைக் கொலையாளிகளும்”