படம் | AP Photo/Eranga Jayawardena, DAILYMAIL

அரசியல் கைதிகள் விவகாரம் மீண்டும் தமிழ் அரசியலை கொதிநிலைப்படுத்தியிருக்கிறது. சில தினங்களாக தமிழ் அரசியல் சூழல் பரப்பரவாகவே இருந்து வருகிறது. சுமந்திரன் அவுஸ்திரேலியாவில் பங்குகொண்ட நிகழ்வொன்றின் போது இடம்பெற்ற குழப்பங்கள், பின்னர் அவுஸ்ரேலிய தமிழ் வானொலி ஒன்றிற்கு சுமந்திரன் வழங்கிய நேர்காணலில், முதலமைச்சர் விக்னேஸ்வரனை தமிழரசு கட்சியிலிருந்து நீக்குமாறு தான் கட்சியிடம் வலியுறுத்தியிருப்பதாக தெரிவித்திருந்தார். வழக்கமாக எல்லாவற்றிலும் அமைதியாக இருக்கும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, சுமந்திரனின் மேற்படி கருத்து தொடர்பில் வாய்திறந்திருக்கின்றார். இதனை சுமந்திரனின் தனிப்பட்ட கருத்து என்று கூறியிருக்கும் மாவை, தமிழரசு கட்சி அவ்வாறானதொரு முடிவை இன்னமும் எடுக்கவில்லை என்றும், சுமந்திரனின் கருத்து தொடர்பில் அவரிடம் விளக்கம் கோரப்படும் என்றும் தெரிவித்திருக்கின்றார். சுமந்திரனிடம் விளக்கம் கோரக்கூடிய அதிகாரம் மாவைக்கு இல்லாத போதும் மாவை இவ்வாறானதொரு கருத்தை தெரிவித்திருக்கின்றார். ஆனால், சுமந்திரன் தனது நேர்காணலில் தெளிவாக தன்னுடைய நிலைப்பாட்டை கட்சியிடம் தெரிவித்திருப்பதாகவே குறிப்பிட்டிருக்கின்றார். சுமந்திரனின் கருத்துப்படி நோக்கினால் இது ஏலவே மாவையின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டுவிட்டது.

மேலும், சுமந்திரன் தான் விக்னேஸ்வரனிடம் விளக்கம் கோருமாறு கட்சியிடம் கேட்டிருப்பதாகவும், ஆனால், இன்னும் கட்சி அதனைச் செய்யவில்லை, ஆனால், விரைவில் கட்சி அதனைச் செய்தே ஆகவேண்டும் என்றும் ஆணித்தரமாக குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால், இங்கு மாவையின் கருத்தை உற்றுநோக்கினால், இந்த விவகாரம் தொடர்பில் மாவையிடம் உள்மன அவாவும் மெதுவாக எட்டிப்பார்க்கவே செய்கிறது. வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து வெளியேற்றும் சுமந்திரனின் கருத்து மாவைக்கும் உவப்பான கருத்துத்தான் என்பது மெதுவாக அவரையறியாமலேயே தலைநீட்டிவிட்டது. இங்கு மாவை பதிலளிக்கும் போது, தமிழரசு கட்சியில் இன்னமும் அவ்வாறானதொரு முடிவை எடுக்கவில்லை என்றுதான் குறிப்பிட்டிருக்கின்றார். இதன் பொருள் என்ன? எதிர்காலத்தில் அவ்வாறானதொரு முடிவு எடுக்கப்படும் என்பதுதானே அல்லது எடுக்கப்பட வேண்டிய தேவையுண்டு என்பதுதானே!

இதேவேளை, சம்பந்தன் மேற்படி விடயம் தொடர்பில் வேறுவிதமாக பதிலளித்திருக்கின்றார். அதாவது, விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்கும் திட்டம் எதுவுமில்லை என்றும், அவ்வாறு எவரேனும் கூறியிருந்தால் அது தவறானது தகவல் என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார். இதனைத்தவிர, வடக்கு மாகாண சபை அமைச்சர்களை மாற்றியமைப்பது தொடர்பிலும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறுகின்றன. நிலைமைகளை உற்று நோக்கினால் ஒன்று தெளிவாகும், இப்போது தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கவல்ல ஒரேயொரு அரசியல் சக்தியாக நோக்கப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனக்குள் இருக்கும் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. நிலைமைகளை நோக்குகின்ற போது பிறிதொரு கேள்வியும் எழுகிறது – தமிழரசு கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விடயங்களில் சம்பந்தன் தன்னுடைய முழுமையான கட்டுப்பாட்டை இழுந்துவிட்டாரா? இவ்வாறானதொரு சூழலில்தான் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தமிழ் அரசியலை கொதிநிலைப்படுத்தியிருக்கிறது.

எனது முன்னைய பத்திகளில் குறிப்பிட்டவாறு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் என்பது உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் தோல்வியையே பறைசாற்றுகின்றது. ஏனெனில், அரசியல் கைதிகள் எப்போது தங்களின் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருக்கும் முடிவை எடுத்தார்களோ, அப்போதே அவர்கள் கூட்டமைப்பின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்பதே பொருள். அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தே எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மற்றும் கொழும்புடனான உறவுகளை பேணிவரும் சுதந்திரன் ஆகியோர் மேற்படி விடயத்தில் தலையீடு செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவாகியது. எனினும், வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைவாக, தாங்கள் விடுதலை செய்யப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியே மீண்டும் அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர். இந்த நிலையிலேயே தற்போது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்களுக்கு பிணை வழங்க அரசு இணங்கியுள்ளது. இதற்கிடையில் அரசியல் கைதி விவகாரத்தில் அரசின் போக்கை கண்டித்து வடக்கு கிழக்கில் ஹர்த்தால் ஒன்றிற்கும் கூட்டமைப்பு அழைப்புவிட்டுள்ளது. இந்தக் கட்டுரை எழுதப்பட்டும் கொண்டிருக்கும் போது அவ்வாறானதொரு செய்தி வெளியாகியிருக்கிறது. ஆனால் கூட்டமைப்பு ஹர்த்தாலுக்கு அழைப்புவிடுகின்ற போது, அதன் தலைவர் சம்பந்தன் நாட்டில் இல்லை. எந்த அரசை சம்பந்தன் போற்றினாரோ அந்த அரசின் போக்கை கண்டித்து தற்போது கூட்டமைப்பு ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுகின்றது. இதில் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளின் தலைவர்களுக்கு பெரிய பொறுப்பு இல்லை என்பதை இப்பத்தி ஏற்றுக் கொள்கின்றது. ஏனெனில், ஆட்சி மாற்றத்தின் பின்பு நிகழும் தமிழ் மக்கள் தொடர்பான அனைத்து விவகாரங்களும் சம்பந்தன் மற்றும் அவரால் அங்கீகாரமளிக்கப்பட்ட பிரதிநிதியான சுமந்திரனால் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கூட்டமைப்பு அரசை கண்டித்து ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கும் செயலானது பிறிதொரு புறம் சம்பந்தனது தோல்வியை கூட்டமைப்பே ஒப்புக்கொள்வதாகவே அமைகிறது. ஏனெனில், அந்தளவிற்கு உள்நாட்டிற்குள்ளும் வெளிநாட்டு பிரதிநிதிகளிடமும் சம்பந்தன் அரசை வெகுவாக நியாயப்படுத்தியிருந்தார். குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில் சிங்களத் தலைவர்கள் கூட காண்பிக்காத ஒரு பற்றை சம்பந்தன் காண்பித்திருந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது சம்பந்தன் பேசிய ஒவ்வொரு மேடைகளிலும் மைத்திரிபால மனச்சாட்சியுள்ளவர், அவரை எனக்கு நீண்ட காலம் தெரியும், அவர் தன்னுடைய மனச்சாட்சிப்படி முடிவுகளை எடுக்கக் கூடியவர், என்றெல்லாம் அவரை புகழ்ந்து அரசின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தார். அப்படியானதொரு அரசிற்கு எதிராக கூட்டமைப்பு எவ்வாறு ஹர்த்தாலுக்கு அழைப்புவிட முடியும் என்று ஒரு தமிழ் வாக்காளன் கேள்வி தொடுத்தால் சம்பந்தனின் பதில் என்னவாக இருக்கும்? இது பற்றி நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, எதிர்காலத்தில் கூட்டமைப்பு பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிவரும் என்று நான் கூற – அதற்கு அந்த நண்பரோ வெகு சாதாரணமாக காலை ஆட்டிக் கொண்டு பதிலளித்தார். என்ன கேள்வி? யார் கேட்பது? அப்படியே கேட்டாலும் அதற்கான பதிலில்லை. நாங்கள் இந்த அரசை நம்பினோம் – ஓம் மைத்திரிபால சிறிசேன மனச்சாட்சியுள்ளவர் என்று சொன்னோம் ஆனால், அவர்கள் எங்களை ஏமாற்றிவிட்டார்கள். அவர் மனச்சாட்சிப்படி நடப்பார் என்று நம்பினோம், ஆனால், அது நிகழவில்லை, மீண்டும் எங்களை சிங்கள ஆட்சியாளர்கள் ஏமாற்றிவிட்டார்கள். இதில்தான் எங்களுடைய அரசியல் தலைவர்களுக்கு அறுபது வருட கால பயிற்சியிருக்கிறதே! மீண்டும் எங்களுடைய தமிழ் வாக்காளர்கள் அள்ளி வழங்குவார்கள். தமிழ் மக்களின் மௌனம்தான் தமிழ் அரசியல்வாதிகள் பலம் போலும்.

சம்பந்தன் தேர்தல் காலத்தில் வழங்கிய நம்பிக்கைகளுக்கும் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்கள் பேசியதற்கும் வித்தியாசங்கள் உண்டு. அதனால்தான் இப்பத்தியும் அவர்களை பற்றி எதுவும் பேசவில்லை. ஆட்சி மாற்றத்தில் தொடங்கி நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் நிகழ்ந்த பல விடயங்களில் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளுக்கு எந்தவொரு வகிபங்கும் இருந்திருக்கவில்லை. இதன் எதிரொலி தற்போது அரசியல் கைதிகளின் விவகாரத்தில் மிகவும் தெளிவாகவே தெரிகிறது. அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சுவார்த்தைகளின் முழு விபரங்களும் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு தெரிந்திருக்கவில்லை. அவர்களை சம்பந்தன் பேச்சுவார்த்தைகளுக்கு அழைத்திருக்கவுமில்லை. தற்போது சம்பந்தன் நாட்டில் இல்லாத நிலையில் இது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் அவர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். இதற்கு எவரை குற்றஞ்சாட்டுவது? அரசத் தரப்பிலிருந்து பிறிதொரு விடயமும் சுட்டிக் காட்டப்படுகிறது. அது, அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் எங்களுக்கு ஆட்சேபனையில்லை, ஆனால், நீதித்துறையின் ஒத்துழைப்பின்றி அதனை எவ்வாறு செய்ய முடியும்? நீதித்துறையை எவ்வாறு அரசியல் மயப்படுத்த முடியும்? ஆட்சி மாற்றத்தின் போது முன்வைக்கப்பட்ட முக்கிய சுலோகங்களின் ஒன்று, முன்னைய அரசு நீதித்துறையின் சுயாதீனத்தை முற்றிலுமாக களங்கப்படுத்திவிட்டது. நீதித்துறை முற்றிலும் அதன் சுயாதீனத்தை இழந்துவிட்டது என்பதே! இதற்கு சம்பந்தனும் முற்றிலும் ஆதரவாக இருந்தார். இப்போது நீதித்துறை சுத்தம் செய்யப்பட்டுள்ளது. பின்னர் எவ்வாறு நீதித்துறையை உதாசீனம் செய்து புதிய அரசால் செயலாற்ற முடியும்? அரசு மறைமுகமாக இப்படியொரு பூட்டை போட முற்படுகிறது. சம்பந்தன் பூட்டுக்குள் அகப்பட்டு விட்டார். ஆனால், அகப்படாதது போல் காண்பித்துக்கொள்ள முற்படுகின்றார். சம்பந்தன் எறியத் தெரியாமல் எறிந்த பூமறாங் இப்போது தமிழர்களுக்கு எதிராக திரும்பி அவர்கள் தலையை குறிவைக்கின்றது.

அரசியல் கைதிகளின் விவகாரம் முற்றிலும் கூட்டமைப்பின் பொறுப்பிற்குரியது. அதாவது, சம்பந்தனின் பொறுப்புக்குரியது. சம்பந்தன் இந்தப் பொறுப்பிலிருந்து விலகி ஓட முடியாது. இதற்கான எதிர்ப்பை சம்பந்தன் எப்படி காண்பிக்கப் போகின்றார். சம்பந்தன் மீதான விமர்சனங்கள் தொடர்பில் பேசுகின்றபோது ஒரு சிலர் இவ்வாறு கூற முற்படுகின்றனர். எல்லாவற்றுக்கும் நாம் சம்பந்தனை குறை கூற முடியுமா? சம்பந்தனால் என்னதான் பெரிதாக செய்துவிட முடியும்? அது உண்மை, சம்பந்தனால் எல்லாம் செய்ய முடியாது என்னும் வாதம் சரியானதே. ஆனால், அதனை சம்பந்தன் மக்கள் முன்னால் ஒப்புவிக்க வேண்டும். இதுதான் எனது எல்லை இதற்கு மேல் எங்களால் அதிகம் இன்றை சூழலில் போக முடியாது. எனக்கு கால அவகாசம் தேவை. இந்த குறிப்பிட்ட காலத்திற்குள்ளும் எங்களால் எதுவும் முடியாது போகுமானால் நாங்கள் சில எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம். ஆனால், சம்பந்தன் தன்னால் எல்லாவற்றையும் இலகுவாக கையாள முடியும் என்பதான ஒரு தோற்றத்தையே காண்பித்து வருகின்றார். ஆனால், நிலைமைகளில் பெரிய முன்னேற்றங்கள் எதுவுமே நிகழவில்லை.