படம் | AP photo, INDIAN EXPRESS
தற்போதைய அரசியல் சூழலில் தென்பகுதி சிங்கள அரசியல் கட்சிகளுக்கு பிரதானமாக மூன்று விடயங்கள் முக்கியம் பெறுகின்றன. ஒன்று, போர்க்குற்ற விசாரணையை தவிர்ப்பது. இரண்டாவது, அரசியல் வேறுபாடுகளுக்கு மத்தியிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, படை உயர் அதிகாரிகள் ஆகியோரின் புலிகள் தொடர்பான வேலைத் திட்டங்களை தேசிய நடவடிக்கையாக கருதுவது. மூன்றாவது, சர்வதேச தலையீடுகளை முற்றாக தவிர்ப்பது. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கடந்த வாரம் செய்தியாளர் மாநாட்டில் வெளியிட்ட கருத்துக்கள் இந்த மூன்று விடயங்களையும் உறுதிப்படுத்துகின்றன.
அரசின் நிலை
இந்த மூன்று விடயங்களும் தமிழ் மக்கள் சார்ந்து நோக்கப்படுகின்றன. சிங்கள தேசிவாதம் என்ற சிந்தனையின் கண்ணோட்டத்தில் கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் இந்த மூன்று விடயங்களும் பிரதானமாகின்றன. குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அணிக்கு புதிய பாதை ஒன்றை திறந்து விடுவதற்கான வழியை இந்த மூன்று விடயங்களும் ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு. ஆட்சி மாற்றம் என்பதை சாதகமாகக் கொண்டு ஜெனிவா மனித உரிமை பேரவையின் சர்வதேச விசாரணைகள் நீக்கப்பட்டு அது உள்ளக விசாரணையாக மாற்றப்பட்டுவிட்டது
ராஜபக்ஷவுடன் அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் போர்க்குற்ற விசாரணை மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் போன்ற விடயத்தில் சர்வதேச அணுகுமுறைகள் அவசியமற்றவை என்பதுதான் பௌத்த தேசியவாதத்தின் கருத்து. ஆகவே, அந்த கண்ணோட்டத்தில் புதிய அரசு செயற்படவேண்டிய கட்டாய நிலைமை. இதன் காரணமாகவே ஜெனிவா மனித உரிமை பேரவையின் விசாரணைகளை முற்று முழுதாக நிறுத்தக் கூடிய வல்லமை புதிய அரசிடம் வலிந்து உருவாக்கப்பட்டது.
வட மாகாண சபையின் நிலைப்பாடு
இந்த நிலையில், வட மாகாண சபை நிறைவேற்றிய இனப்படுகொலை தொடர்பான பிரேரணையை அரசு நிராகரித்தாலும் சர்வதேச ரீதியாக அந்த பிரேரணை தற்போது பேசுபொருளாகி விட்டது. அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இனப்படுகொலை என்பதை இலகுவில் ஏற்றுக்கொள்ளாது என்று கூறினாலும், ஜெனீவா மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் ஏனைய நாடுகள் அல்லது வேறு சர்வதேச பொது அமைப்புகள் இனப்படுகொலை என்பதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக கூறப்படுகின்றது.
ஆகவே, அவ்வாறு வெளிப்படையாக எற்றுக்கொள்ளத் தயாராகவுள்ள நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசுவதற்கான ஏற்பாடுகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டு வருகின்றார். இதற்காகத்தான் இனப்படுகொலை எனக் கூறி வரும் வட மாகாண சபையை களைத்து புதிய தேர்தலை நடத்தி தமக்குச் சாதமான ஒருவரை முதலமைச்சராக்க பிரதமர் முற்படுகின்றார் என்றும் அறிய முடிகின்றது. ஆனால், இந்த அணுகுமுறை சாத்தியப்படக்கூடியதல்ல. ஆனாலும், சம்பந்தன் – சுமந்திரன் ஆகியோர் தமிழத் தேசிய கூட்டமைப்பில் முக்கிய பங்காற்றுவதனால் அந்த இருவரின் ஆதரவின் மூலமாக மேற்படி அணுகுமுறையை நகர்த்தலாம் என்று பிரதமர் யோசிப்பதாகவும் தகவல்.
இந்தியா – அமெரிக்கா
அதேவேளை, இந்தியாவும் அமெரிக்காவும் இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொள்ளாது விட்டாலும் சர்வதேச அரங்கில் இந்த விடயம் பேசுபொருளாக மாறிவிட்ட நிலையில் அரசுக்கு தொடர்ச்சியான நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றது. அதனால், முடிந்த வரை சர்வதேச நாடுகளுக்கு இலங்கைத் தேசியம் என்பதை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து பிரதமர் ரணில் விளக்கமளித்து வருகின்றார். சர்வதே நாடுகள் இலங்கை என்ற சிறிய அரசை பிளவுபடுத்த முற்படுகின்றன என்பதுதான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குற்றச்சாட்டு.
இனப்படுகொலை என்ற விடயம் சர்வதேச அரங்கில் பேசுபொருளாக மாற்றிவிட்டமையினால் எதிர்காலத்தில் அதனை அமெரிக்கா கூட தமக்கு சாதகமாகப் பயன்படுத்தலாம் என்ற கருத்தை மஹிந்த ராஜபக்ஷ அணி ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் கூறி வருகின்றது. அதனை பௌத்த தேசியவாதமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால்தான் மைத்திரிபால சிறிசேன அரசு பௌத்த தேசியவாதிகளை திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் அவன்காட் நிறுவன விவகாரம் கூட மூடி மறைக்கப்பட்டமைக்கு அதுதான் காரணம் என சிங்கள நாடு ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தது.
துணிவுடன் சொல்வது யார்?
இந்த நிலையில், தமிழ் மக்களுக்குப் பிரச்சினைகள் உண்டு என்றும், அதற்காக பிரிபடாத இலங்கைக்குள் சுயாட்சி அதிகாரத்தை வழங்க வேண்டும் என்றும் சிங்கள மக்கள் மத்தியில், அதாவது பௌத்த தேசியவாதிகள் முன்னிலையில் துணிவுடன் சொல்லக் கூடிய அரசியல் கட்சி எது? அல்லது அந்தப் பிரசாரத்தை முன்கொண்டு செல்லக் கூடிய சிங்களத் தலைவர்கள் யார்? கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இனவாதத்தை பேசியே சிங்களத் தலைவர்கள் வெற்றி பெற்றார்கள்.
ஆட்சியமைத்த சிங்களக் கட்சிகளும் ஒட்டுமொத்தமாக இனவாதத்தையே பேசினர். அல்லது தமிழ் மக்களுக்கு, அதாவது இனப்பிரச்சினை என ஒன்று உள்ளது, அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று இன்றுவரை கூட எந்த ஒரு சிங்கள அரசியல் கட்சியும் ஒப்புக்கொள்ளவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேசினால் கூட ஈழத்துக்கு ஆதரவு கொடுப்பதாகவே சிங்கள பௌத்த தேசியவாதம் கருதியது. ஆகவே, பிராந்தியம் என்பதை தாண்டி சர்வதேச ரீதியிலான அணுகுமுறைகளை தமிழ்த் தரப்பு கையாள வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனை செய்வது யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தமிழர்கள் தங்கள் அரசியல் தந்திரோபாயங்களை மாற்றியமைக்க வேண்டிய காலகட்டம் உருவாகியுள்ளதாக அரசியல் விமர்சகர் ரொஹான் எதிரிசிங்க கூறியிருந்தார். அதற்காக ஆயுதப் போராட்டம் உகந்த வழிமுறை அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.