படம் | INDIAN EXPRESS
தமிழ்த் தேசிய அரசியலில் ஆக்கபூர்வமான விடயங்கள் நடைபெறுகிறதோ இல்லையோ, ஆனால் அவ்வப்போது சர்ச்சைகளுக்கு மட்டும் குறைவில்லை. அண்மைக்காலமாக இப்படியான சர்ச்சைகள் பெரும்பாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான இலங்கை தமிழரசு கட்சியில், சம்பந்தனுக்கு அடுத்த நிலையில் நோக்கப்படுபவரும், கூட்டமைப்பின் சார்பில் அதன் சர்வதேச விவகாரங்களை கையாளும் அதிகாரம்மிக்கவருமான ஆபிரகாம் மதியாபரணம் சுமந்திரனின் கருத்துக்களை அடியொற்றியே வட்டமிடுகின்றன. இதற்கு என்ன காரணம்? ஏன் அண்மைக்கலாமாக சுமந்திரன் தெரிவிக்கும் கருத்துக்கள் மட்டுமே சர்ச்சைக்குரியவையாக நோக்கப்படுகின்றது அல்லது சர்ச்சைகளை ஏற்படுத்துகின்றது. சுமந்திரன் சொல்ல முற்படுவதை மற்றவர்கள் விளங்கிக் கொள்ளவில்லையா அல்லது சுமந்திரன் எதனை எப்போது சொல்ல வேண்டும் என்னும் அரசியல் தெரியாது பேசுகின்றாரா? அல்லது சுமந்திரனுக்கு தான் வகிக்கும் அரசியல் வகிபங்கு தொடர்பில் தெளிவில்லையா? இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது சர்ச்சைகளை ஏற்படுத்தும் வகையில் சுமந்திரன் தொடர்பில் பிறிதொரு செய்தியும் வெளியாகியிருக்கிறது. இலங்கை இராணுவத்தை கௌரவிக்கும் வகையில் சுமந்திரன், ஏனைய சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்று பொப்பி மலரை தன்னுடைய ஆடையில் அணிந்தவாறு நாடாளுமன்றத்திற்கு சமூகமளித்ததாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இப்படியான செயல்கள் மூலம் உண்மையிலேயே சுமந்திரன் தமிழ் மக்களுக்கு என்ன கூற வருகின்றார்?
சில தினங்களுக்கு முன்னர், வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட 25ஆவது ஆண்டின் பூர்த்தியை நினைவு கூர்ந்து இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசியபோது, சுமந்திரன் தெரிவித்திருந்த விடயங்கள் தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. சுமந்திரன் அப்படியென்ன கூறியிருக்கின்றார்? சுமந்திரன் கூறுகின்றார் – யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியமையானது ஒரு இனச்சுத்திகரிப்பாகும். இதனை எண்ணி நான் வெட்கித் தலைகுனிகின்றேன். இதற்கு ஒவ்வொரு தமிழரும் பொறுப்பேற்க வேண்டும். இது தொடர்பில் வடக்கு மாகாண சபையில் ஒரு பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும். அப்படியான ஒரு பிரேரணைணை வடக்கு மாகாண சபை நிறைவேற்றாதுவிட்டால், சர்வதேசம் தமிழர்கள் மீதான இனப்படுகொலை விவகாரத்தையும் ஒரு விடயமாக கொள்ளாது என்றும் சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார். ஏற்கனவே, வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன், இனப்படுகொலை தொடர்பில் வடக்கு மாகாண சபையில் பிரேரணையொன்றை நிறைவேற்றியிருக்கின்ற நிலையில்தான், சுமந்திரன் இவ்வாறானதொரு கருத்தை தெரிவித்திருக்கின்றார். சுமந்திரனின் கருத்துக்கள் தொடர்பான அதிருப்தியை விடவும் சுமந்திரன் ஏன் திடீரென்று இப்படியெல்லாம் கூறுகின்றார். அதுவும், குறிப்பாக தேசிய அரசு போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுடனான கலந்துரையாடல்களை செய்வதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்திருக்கின்ற சூழலில், வடக்கு மாகாண சபையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரேரணை ஒன்றை கொண்டுவர வேண்டுமென்று வாதிடுகின்றார். இதன் மூலம் சுமந்திரன் யாரை திருப்திப்படுத்த விரும்புகிறார்?
சுமந்திரன் கூறும் விடயமொன்று நடைபெறாமலில்லை. அது நடைபெற்றது. 1990இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துவந்த முஸ்லிம் மக்களை 24 மணித்தியால காலக்கெடுவில் வலிந்து வெளியேற்றியிருந்தது. அன்றைய சூழலில் கிழக்கில் தமிழ் – முஸ்லிம் முரண்பாடுகள் தீவிரமடைந்திருந்தன. இதனை சரியாக கையாள இருதரப்பினருமே தவறியிருந்தனர். ஆனால், அரசு இதனை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டது. அன்றைய சூழலில் கப்டன் முனாஸ் என்பவரின் தலைமையில் ஒரு சிறப்பு இராணுவப்பிரிவு மேற்படி முரண்பாட்டை பெருப்பித்து தமிழ் – முஸ்லிம் மக்களுக்கிடையில் முரண்பாடுகளையும் குரோதங்களையும் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டிருந்தது. ஆரம்பத்தில் முனாஸ் என்பவர் உண்மையிலேயே ஒரு முஸ்லிம் என்றே பலரும் நம்பியிருந்தனர். ஆனால், சில வருடங்களின் பின்னர், அவர் ஒரு முஸ்லிம் அல்ல, மாறாக அவர் இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த சிங்களவர் என்பது தெரியவந்தது. ஒரு சிங்களவர் ஏன், தனது புலனாய்வு நடவடிக்கைகளை, முஸ்லிம் பெயர் தரித்து மேற்கொண்டார்? இதிலிருந்து எந்தளவிற்கு அரசு தமிழ் – முஸ்லிம் முரண்பாட்டை கையாளுவதில் கரிசனை கொண்டிருந்தது என்பது தெளிவாகும். இந்தக் காலத்தில் முஸ்லிம் ஊர்க்காவல் படையினர், கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக பல அநியாயங்களை மேற்கொண்டிருந்தனர். இவ்வாறானதொரு சூழலில் வடக்கிலும் அவ்வாறானதொரு நிலைமை வந்துவிடுமோ என்று அஞ்சிய விடுதலைப் புலிகளின் தலைமை முஸ்லிம் மக்களை வெளியேற்றும் முடிவை எடுத்தது. அந்த நேரத்தில் யோகரட்ணம் யோகி இது தொடர்பில் ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருந்ததாக நினைவு. சிறிலங்கா இராணுவத்துடன் மோதல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு கெரில்லா அமைப்பு என்னும் வகையில் விடுதலைப் புலிகளிடம் இராணுவப் பார்வை ஒன்றே இருந்தது. இராணுவ வாதம் என்பது எப்போதும் வழிமுறைகளில் கவனம் கொள்வதில்லை, மாறாக முடிவுகளில் மட்டுமே கரிசனை கொள்ளும். அப்படியானதொரு பார்வைதான், அரசியல் விளைவுகளை கருத்தில் கொள்ளாது விடுதலைப் புலிகள் அவ்வாறானதொரு தவறிழைக்கக் காரணமாகியது. விடுதலைப் புலிகள் அமைப்பு எக்காரணத்திற்காக அதனை செய்திருப்பினும் கூட அது ஒரு வரலாற்றுத் தவறு என்பதில் இரு வேறு கருத்திற்கிடமில்லை. ஆனால், இது தொடர்பில் சுமந்திரன் புதிதாக எதையோ கண்டுபிடித்தது போன்று பேசுவதுதான் பலரது விசனத்திற்கு காரணம் போலும்.
வடக்கு முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் 1994ஆம் ஆண்டு பி.பி.சிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போது, முஸ்லிம் மக்களின் வெளியேற்றம் தொடர்பில் வருத்தம் தெரிவித்திருந்தார். யாழ்ப்பாணம் முஸ்லிம்களின் சொந்த நிலம் என்று குறிப்பிட்டிருந்த பிரபாகரன், துரதிஸ்டவசமாக சிக்கலானதொரு சூழ்நிலையின் விளைவாக, முஸ்லிம் மக்கள் அகதிகளாக நேர்ந்தது. இதற்கான நாம் மிகவும் வேதனையுறுகிறோம் என்று குறிப்பிட்டிருந்தார். இதனை சுமந்திரன் அறியவில்லையா? இது போதாதென்று விடுதலைப் புலிகளின் தத்துவ ஆசிரியர் அன்ரன் பாலசிங்கம், 2002இல், நான் முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன், நாங்கள் உங்களுடன் பேசி, பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விருப்பம் கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார். இதனையும் சுமந்திரன் அறியவில்லையா? வடக்கு முஸ்லிம் மக்கள் தொடர்பில் விடுதலைப் புலிகளால் இழைக்கப்பட்ட தவறிற்கு விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்தும், அவர்களுக்கு வெளியிலும் பல தடவைகள் வருத்தம் தெரிவிக்கப்பட்டிருப்பதுடன், பல தடவைகள் மன்னிப்பும் கோரப்பட்டுவிட்டது. ஆனால், அன்று பலரும் இவ்வாறு வருத்தம் தெரிவித்த வேளையில் சுமந்திரன் என்றொரு பெயர் எங்குமே தெரிந்திருக்கவில்லை. தவறு என்று தெரியும் ஒன்றிற்காக வருத்தம் தெரிவிப்பதற்கும், அதனை கண்டிப்பதற்கும் நாடாளுமன்ற பதவிகள் தேவையில்லை. மனித உரிமைசார்ந்த உணர்வுநிலை ஒன்றே போதும். ஆனால், 2009இற்கு முன்னர் சுமந்திரன் அப்படியான உணர்வுநிலைக்கு ஆளாகாமை தொடர்பில் ஆச்சரியம்தான் ஏற்படுகின்றது. இது தொடர்பில் சுமந்திரனின் பதில் என்ன?
இன்று, வடக்கு மாகாண சபையில் முஸ்லிம் மக்கள் வெளியேற்றம் தொடர்பில் பிரேரணை கொண்டுவர வேண்டுமென்று கூறும் சுமந்திரன், முஸ்லிம் தரப்பினால் தமிழ் மக்கள் தொடர்பில் இழைக்கப்பட்ட தவறுகள் தொடர்பில் எப்போதாவது சிந்தித்ததுண்டா? முஸ்லிம் தலைமைகளும் சரி முஸ்லிம் புத்தஜீவிகளும் சரி அவர்கள் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு எப்போதுமே பகிரங்க தளத்தில் ஆதரவாக இருந்ததில்லை. சிலர் விதிவிலக்காக இருக்கலாம். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது மஹிந்த அரசின் பங்காளிகளாக இருந்த எந்தவொரு முஸ்லிம் தலைமையாவது அது தொடர்பில் ஒரு வார்த்தைதானும் பேசியதுண்டா? இது தொடர்பில் சுமந்திரனின் பதில் என்ன? ஈராக்கிலும், பாலஸ்தீனத்திலும் மக்கள் கொல்லப்படுவதாக அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் கோஷமிட்ட முஸ்லிம் தலைமைகளால் அருகிலிருக்கும் வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தை நிறுத்துங்கள் என்று கோஷமெழுப்ப முடியாதளவிற்கு, அவர்களை தடுத்து நிறுத்திய காரணி எது? இது தொடர்பில் சுமந்திரனின் பதில் என்ன? மஹிந்த ராஜபக்ஷ அரசில் சகல சவுகரியங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நியாயமான எந்தவொரு விடயத்திற்கும் முஸ்லிம் தலைமைகள் ஒத்துழைக்கவில்லை, மாறாக மஹிந்தவின் அதிகார விருப்பின் ஒத்தோடிகளாகவே முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து பிரதான முஸ்லிம் கட்சிகளும் இருந்தன. இது தொடர்பில் சுமந்திரனின் கருத்து என்ன?
சுமந்திரன் விபரம் இல்லாமல் பேசக் கூடியவர் என்றால் அதனை எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால், அவர் ஏன் இப்படியெல்லாம் பேசுகின்றார் என்பதில்தான் பலருக்கும் குழப்பமாக இருக்கின்றது. இந்த தீவில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 1990இல் மட்டும்தான். ஆனால், தமிழ் மக்கள், தமிழர்கள் என்னும் ஒரேயோரு காரணத்திற்காகவே பல தடவைகள் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். அவ்வாறான வெளியேற்றங்களில் ஒன்றுகூடவா இனச்சுத்திகரிப்பு என்னும் வரையறைக்குள் அடங்கவில்லை? இவ்வாறு தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்ட போதெல்லாம் – தமிழ் மக்கள் அழிவுக்குட்பட்ட பொதெல்லாம் – சிங்கள ஆட்சியாளர்களை தடுத்து நிறுத்தி, தமிழ் மக்களை பாதுகாக்க தவறியதில் ஒவ்வொரு சிங்களவருக்கும் தொடர்பில்லையா? அதற்கு அவர்கள் பொறுப்புச் சொல்ல வேண்டியதில்லையா? இதற்கென நாடாளுமன்றத்தில் ஒரு விசேட விவாதம் தேவையில்லையா? ஒரு சட்ட நிபுனர் என்னும் வகையில் இது தொடர்பில் சுமந்திரனின் பதில் என்ன?
முஸ்லிம்கள் வெளியேற்றம் தொடர்பில் வடக்கு மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றினால்தான் சர்வதேசம் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை விவகாரத்தை ஒரு விடயமாக எடுத்துக்கொள்ளும் என்பதுதான் சுமந்திரனின் நிபுனத்துவ விளக்கம் என்றால், இது தொடர்பில் ஏதேனும் வெளிநாட்டு உதாரணங்கள் இருக்கின்றனவா அல்லது சர்வதேச சட்டத்தில் ஏதும் விளக்கங்கள் இருக்கின்றனவா? இது தொடர்பில் சுமந்திரனின் பதில் என்ன?
முதலில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை ஒன்று இடம்பெற்றுள்ளது என்னும் வடக்கு முதலமைச்சரின் நிலைப்பாட்டை சுமந்திரன் ஏற்றுக் கொள்கின்றாரா? வடக்கு மக்களின் 58,000 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்றிருக்கும் சுமந்திரனாலேயே வடக்கு மாகாண சபையின் பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாது போனால், அதன் தார்ப்பரியத்தை சர்வதேசம் எங்கனம் விளங்கிக்கொள்ள முயற்சிக்கும்? இதற்கெல்லாம் சுமந்திரனின் பதில் என்ன?
சில விடயங்கள் தொடர்பில் பேசுவது தவறல்ல. ஆனால், அதனை பேசுவதன் மூலம் நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கு என்ன நன்மை விளையப் போகிறது என்பதுதான் முக்கியம். ஏனெனில், தமிழ் மக்கள் தங்களின் நலன்களை வென்று தருவார்கள் என்னும் நம்பிக்கையில்தான் சுமந்திரன் போன்றவர்களை தெரிவு செய்திருக்கின்றனர். 2009இற்கு முன்னர் சுமந்திரனை அவர் சார்ந்த சட்டத்துறையுடன் தொடர்புடைய சிறிய குழுவினருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. இன்று சுமந்திரனின் தொடர்பு வட்டம் மிகவும் பெருத்துவிட்டது. இன்று சுமந்திரன் ஒரு செல்வாக்கு மிக்க தமிழ் அரசியல் தலைவர். இந்த தகுதிநிலையில் நின்று சுமந்திரன் பேசும் ஒவ்வொரு விடயங்களும் தமிழ் அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தும். இதனை விளங்கிக் கொண்டுதான் சுமந்திரன் செயற்படுகின்றாரா? அன்றைய தமிழ் – முஸ்லிம் முரண்பாட்டை இலங்கை அரசு கச்சிதமாக கையாண்டு வெற்றியீட்டிய அனுபவத்தை சுமந்திரன் எண்ணிப்பார்க்கவில்லையா?