படம் | Selvaraja Rajasegar
பரணகம அறிக்கை எந்த அடிப்படையில் முன்வைக்கப்பட்டது என்ற கேள்விகள் தற்போது எழுகின்றன. காணாமல்போனோர், கடத்தப்பட்டடோர் பற்றிய விடயங்களை மாத்திரம் விசாரணை செய்து அறிக்கையிடுவதற்காகவே இந்த ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டது. இதன் பின்னர் எல்.எல்.ஆர்.சி. எனப்படும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டது.
சட்டத்தரணியின் கேள்வி
இந்த ஆணைக்குழுவிலும் பரணகம உறுப்பினராக பதவி வகித்தார். ஆகவே, குறிப்பிட்ட ஒரு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் ஒருவர் அந்தச் சம்பவங்களுடன் தொடர்புள்ள வேறு விடயங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்படும் ஆணைக்குழுவிலும் எவ்வாறு அங்கம் வகிக்க முடியும் என சட்டத்தரணி காண்டீபன் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், பரணகமவுக்கு வழங்கப்பட்ட சம்பளம் தொடர்பாகவும், ஆலோசனைகள் பெறப்பட்ட முறையிலும் அவர் சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.
இந்த நிலையில்தான் பரணகம ஆணைக்குழு அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எந்த அடிப்படையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பிள்ளார். பரணகம அறிக்கையின் அடிப்படையில் போர்க்குற்ற விசாரணைகளும் நடைபெறலாம் என்ற சந்தேகத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். ஆகவே, இனப்பிரச்சினை இருக்கின்றது, அதற்குரிய அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்க வேண்டும் என்ற சிந்தனை சிறிதளவு கூட இல்லாத நிலையில் இலங்கை அரசு என்ற கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள அபகீர்த்தியை எவ்வாறு நீக்குவது என்பதில்தான் பிரதமர் ரணிலுக்கு அக்கறை என்ற முடிவுக்கு வரலாம்
வேறுபாடுகள் இல்லை
இந்த இடத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அணுகுமுறைக்கும் மைத்திரிபால சிறிசேன அரசின் அணுகுமுறைக்கும் இடையே பாரிய அளவில் வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை என்பதையும் காணக்கூடியதாக உள்ளது. முடிந்தவரை படையினர் மீதான குற்றச்சாட்டுகளை தவிர்ப்பதுதான் இந்த அரசின் நோக்கம் என கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன கூறியிருந்தார். ஜனநாயகத்தை நிலைநாட்ட சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்க வேண்டும் என கூறிய அவர், அதற்குரிய 19ஆவது திருத்தச்சட்டத்தைக் கூட நடைமுறைப்படுத்த பிரதமர் ரணில் முற்படவில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆகவே, இனப்பிரச்சினையின் வரலாற்றை நோக்கினால் முன்னைய அரசு தமிழர் தொடர்பாக எடுத்த நிலைப்பாட்டை பின்னர் பதவிக்கு வரும் அரசு கையாண்டு வந்துள்ளது என்பதைத்தான் அறியமுடிகின்றது. ஆக, கட்சிகள், தலைவர்கள் வேறுபடுகின்றனர். ஆனால், தமிழர் தொடர்பான செயற்பாடுகளில் மாற்றங்கள் இல்லை என்பதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசிலும் அடையாளப்படுத்தலாம் என்பதை விக்கிரமபாகு கருணாரத்ன சொல்லாமல் சொல்கின்றார்.
சுயாதீன ஆணைக்குழுக்கள்
19ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் அரச நிறுவனங்களை சுயாதீனமாகச் செயற்படுத்த அனுமதிக்க வேண்டும் என எந்த ஒரு ஆணைக்குழுவின் அறிக்கையிலும் கூறப்படவில்லை. ஆனால், தேர்தலை காண்காணிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் அந்த அழுத்தத்தை கொடுத்துள்ளது. ஆனால், அதற்கு விளக்கமளித்துள்ள அமைச்சர் ராஜித சேனாரத்ன பரணகம ஆணைக்குழுவும் எல்.எல்.ஆர்.சி. ஆணைக்குழுவும் அரச திணைக்களங்களை சுயாதீனமாக செயற்பட அனுமதிக்க வேண்டும் என எந்த ஒரு இடத்திலும் கூறவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அரச நிறுவனங்கள் சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்ற ஆலோசனையை ஐரோப்பிய ஒன்றியம் முன்வைக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், ஐரோப்பிய ஒன்றியம் 19ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக கூறிய விடயங்கள் நடைமுறை அரசியல் யாப்பில் செய்யப்பட்ட ஒரு திருத்தம்தான். அந்தத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு கோருவதற்கு யாருக்கும் உரிமை உண்டு. அதாவது, ஜனநாயக கட்டமைப்புகள் தொடர்பாக நாடுகளிடையே உள்ள அமைப்புகள், ஒன்றியங்கள் கருத்துக்களை வெளியிட முடியும். குறிப்பாக இலங்கைக்கு உதவி வழங்கும் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகள் பொருளாதார திட்டங்கள் தொடர்பாக முன்வைக்கும் யோசனைகளின் அடிப்படையில் கூட பொருளாதாரச் சட்டங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.
பிரதான அரசியல் நோகம்
இந்த நிலையில், அமைச்சர் ராஜித சேனாரத்ன ஐரோப்பிய ஒன்றியம் குறித்து கூறிய விடயங்கள் ஏற்புடையவை அல்ல. பரணகம மற்றும் எல்.எல்.ஆர்.சி. ஆணைக்குழுக்கள் இலங்கை அரசால் நியமிக்கப்பட்டவை. ஆனால், அதன் பின்னணியில் அரசியல் நோக்கங்கள் உண்டு. பிரதானமாக தமிழர் தொடர்பான விடயங்களில் இலங்கை அரசு என்ற கட்டமைப்புக்கு சேதம் விளைவிக்காமல் அறிக்கையை தயாரிப்பது என்ற அரசியல் இருக்கும். அந்த அடிப்படையில்தான் இரு ஆணைக்குழுக்களும் அறிக்கையை வெளியிட்டுள்ளன. அந்த துணிச்சலுடன்தான் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
ஆகவே, சர்வதேச அணுகுமுறையை அல்லது மத்தியஸ்த்த முயற்சியை தவிர்ப்பது, இலங்கை அரச என்ற கட்டமைப்பில் இருக்கக்கூடிய அதிகாரங்களை பகிராமல் தடுப்பது, வெறுமனே நிர்வாகத்தை மாத்திரம் வடக்கு – கிழக்கு மாகாணத்திற்கு பரவலாக்கம் செய்வது என்ற மூன்று காரணங்களின் அடிப்படையில் இந்த அரசு செயற்படுகின்றது. இந்த அரசியலின் பின்னணில்தான் பரணகம அறிக்கை மற்றும் ஜெனீவா மனித உரிமை பேரவை ஆணையாளரின் அறிக்கை போன்றவற்றை அரசு முக்கியப்படுத்தி பிரச்சாரங்களை செய்கின்றது. இந்த அரசியல் அணுகு முறைக்கு எதிர்ப்பை வெளிக்காட்டினாலும் உள்ளார்ந்த ரீதியில் மஹிந்த ராஜபக்ஷ அணியும் ஆதரவு வழங்கும் நிலை உண்டு.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
இந்த நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எந்த வகையான அரசியல் செயற்பாடுகளை கையாள்கின்றது என்ற கேள்விகளும் எழுகின்றன. அரசின் மேற்படி அணுகுமுறைகள் தூரநோக்கு சிந்தனை கொண்டவை என விமர்சகர்கள் கூறும் நிலையில், இரண்டு பிரதான விடயங்களை கூட்டமைப்பு முதலில் கையாள வேண்டும். ஒன்று, இனப்பிரச்சினையின் சர்வதேச ஆதரவு தளத்தைத் தொடர்ந்து எவ்வாறு பேணுவது என்பதும், புவிசார் அரசியலுக்கு ஏற்ப தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கான தீர்வை தயாரிக்க வேண்டியதும் அவசியமாகும். இரண்டாவது, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இலங்கை அரசு என்ற கட்டமைப்பு சார்ந்த தூர நோக்கு சிந்தனைக்கு வலுச்சேர்க்கும் செயற்பாடுகளில் இருந்து விலகி நிற்க வேண்டும்.
ஆக, இந்த இரண்டு விடயங்களிலும் உடனடி கவனம் தேவை. குறிப்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பதை விட சம்பந்தன் – சுமந்திரன் ஆகியோரை உள்ளடக்கிய இலங்கைத் தமிழரசுக் கட்சி இந்த இரு விடயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் தமிழர் விவகாரத்தை எப்படி கையாள்வது என்பதற்கான ஒரு பொதுக் கொள்கை சிங்கள கட்சிகளிடையே உருவாகிவிடும்.