படம் | ASIAN TRIBUNE

போர்க்குற்ற விசாரணைணை ஆரம்பிக்க ஒன்றரை வருடங்கள் தேவையென கூறிவிட்டு அதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் குற்றம் சுமத்தப்பட்ட படையினருக்கு சட்ட உதவியளிப்பது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதிக்கட்ட போரில் ஈடுபட்ட பல இராணுவ உயர் அதிகாரிகள் இராஜதந்திரிகளாகவும் மற்றும் வேறு பதவிகளிலும் அமர்த்தப்பட்டுள்ள நிலையில் அவர்களைப் பாதுகாப்பது தொடர்பான தேசிய திட்டம் ஒன்றை வகுத்து செயற்படுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட முக்கியமான அரசியல் பிரமுகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இது தொடர்பாக பல்வேறுபட்ட கலந்துரையாடல்கள் ஆலோசனைக் கூட்டங்கள் கூட நடத்தப்பட்டுள்ளதாக அரசத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சி அரசியல் வேறுபாடுகள் இன்றி இந்தப் பாதுகாப்பு திட்ட ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இறுதிக்கட்டப் போரில் ஈடுபட்ட படையினரை கட்சி அரசியல் அரசியல் வேறுபாடுகள் இன்றி பாதுகாக்க வேண்டும் என அமைச்சர் சஜித் பிரேமதாச கூறியிருந்தார்.

திட்டங்களை வகுக்கப்படும்

குற்றம் சுமத்தப்பட்ட படையினர் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் ஆகியோரை பாதுகாக்க அரசு திட்டங்களை வகுத்து செயற்படும் என்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச அம்பாந்தோட்டையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கூறியிந்தார். அமைச்சர் ராஜித சேனாரத்னவும் படையினருக்கு சட்ட ஆலோசணை வழங்குவதற்கான ஒழுங்கு முறைகள் குறித்து திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டிருந்தார். படையினரை பாதுகாப்பதுதான் அரசின் கடமை என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் தெரிவித்திருந்தார்.

ஆகவே, விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே படையினரை பாதுகாப்பு குறித்த விடயங்கள் ஜனாதிபதி, பிரதமர் மட்டத்தில் தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்பதை அறியமுடிகின்றது. அதேவேளை, படையினரைப் பாதுகாப்பதற்கான சட்ட விலக்களிப்பு பிரேரணை ஒன்றை நடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பாக அரசின் பங்காளிக்கட்சியான ஜாதிக ஹெல உறுமய ஆலோசித்து வருகின்றது. சட்ட விலக்களிப்பு பிரேரணை மூலம் குற்றம் சுமத்தப்பட்ட படையினரை காப்பற்ற முடியும் என்ற தகவலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஏற்கனவே வெளியிட்டுள்ளனர்.

அமைச்சர் சம்பிக்க ரணவக்க

அந்தத் தகவலின் அடிப்படையில்தான் அமைச்சர் சம்பிக்க ரணவக்க சட்ட விலக்களிப்பு பிரேரணையை சமர்ப்பித்து குற்றம் சுமத்தப்பட்ட படையினர் மீதான விசாரணைகளை தடுத்து நிறுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார் எனக் கூறப்படுகின்றது. சட்ட விலக்களிப்பு பிரேரணை என்பது போரில் ஈடுபடும் படையினர் மேற்கொள்ளும் குற்றச் செயல்கள் அல்லது வேறு நடவடிக்கைகள் யுத்தகால நடவடிக்கைகளாக பார்க்கப்படும். யுத்தம் தீவிரமாக நடைபெறும் பிரதேசங்களில் சாதாரண சட்ட நடைமுறைகளை விட இராணுவத்திற்குரிய சட்ட ஏற்பாடுகள் மற்றும் இராணுவம் இடும் கட்டளைகளை மக்கள் எற்க வேண்டும் என்ற விதிமுறைகளும் உள்ளன.

இந்த விடயங்களைத்தான் சட்ட விலக்களிப்பு பிரேரணையில் குறிப்பிட்டு குற்றம் சுமத்தப்பட்ட படையினரை காப்பாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்த ஏற்பாட்டுக்கு அமைச்சர்கள் பலர் ஆதரவு வழங்கவுள்ளனர் என்றும் அறிய முடிகின்றது சட்ட விலக்களிப்பு பிரேரணை குறித்த மேலதிக ஆலோசணைகளை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து பெறவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி உதய கம்மன்பில செய்தியாளர் மாநாடு ஒன்றில் கூறியிருந்தார். உதய கம்மன்பிலவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் அரசியல் ரீதியாக முரண்பட்டிருந்தாலும் படையினரை பாதுகாக்கும் விடயத்தில் இணைந்து செயற்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக சிங்கள வார ஏடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மஹிந்தவும் சோமவன்சவும்

புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ள ஜே.வி.பியின் முன்னர் தலைவர் சோமவன்ச அமரசிங்கவும் முன்னர் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்‌ஷவும் இணைந்து போர்க்குற்ற விசாரணைகளை எதிர்க்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இராணுவத்தை பாதுகாக்கும் சட்ட விலக்களிப்பு பிரேரணை குறித்தும், இலங்கை அரசியலமைப்பின் படி ஜனாதிபதி ஒருவர் தனது பதவிக் காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணை நடத்த முடியாது என்ற விதிமுறைகள் இருப்பதாக உதய கம்மன்பில கூட்டிக்காட்டிய விடயங்கள் தொடர்பாகவும் இருவரும் பேசியுள்ளனர்.

ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள், தனிப்பட்ட முறையிலான நடவடிக்கைகள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ஒருவரை விசாரணைக்கு அழைக்க முடியும். ஆனால், போர்க்கால நடவடிக்கைகள் மற்றும் போரை நடத்திய முறைகள் குறித்தும் முன்னாள் ஜனாதிபதி மீது விசாரணை நடத்த முடியாது எனவும் உதய கம்மன்பில கூறியுள்ளமை பற்றியும் இருவரும் உரையாடியுள்ளனர். தற்போது இந்த விடயங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தனது சட்டத்தரணிகளுடன் ஆராய்ந்து வருகின்றார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர் போராட்டங்கள்

ஆகவே, போர்க்குற்ற விசாரணையை எதிர்ப்பது என்ற அடிப்படையில் மஹிந்த ராஜபக்‌ஷவும் சோமவன்ச அமரசிங்கவும் செயற்பட்டு அரசுக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளனர். இந்த எதிர்ப்புப் போராட்டங்களுக்கு அரசில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமயவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள அமைச்சர் பலரும் ஆதரவு கொடுக்கவுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் சிலரும் ஆதரவு வழங்கக்கூடிய நிலைமை வரலாம் எனவும் அரச தகவல்கள் கூறுகின்றன.

எனவே, போர்க்குற்ற விசாரணையை எதிர்ப்பது தொடர்பாக எதிர்க்கட்சிகளும், விசாரணை நடைபெற்றால் அதிலிருந்து படையினரை எவ்வாறு பாதுகாக்கலாம் என்ற விடயத்தில் அரசும் ஈடுபட்டு வருகின்றது. இந்த இருவகையான செயற்பாடுகள் சிங்கள மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. போர்க்குற்ற விசாரணைகள் என்பது இலங்கையின் இறைமைக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்பது சிங்கள தேசியவாதத்தின் அடிப்படை சிந்தனையாகும். அந்த வகையில் இவ்வாறான இரு நகர்வுகளும் வெற்றியளிக்கக்கூடிய நிலைமைதான் உள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

ஏனெனில், எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அரசு மறைமுக ஆதரவை கொடுக்கலாம். அதுபோன்று விசாரணையின்போது படையினரை காப்பாற்றக் கூடிய அரசின் சட்ட ஏற்பாடுகளுக்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு வழங்கலாம். ஆகவே, முரண்பாடுகளில் ஓர் உடன்பாடாக போர்க்குற்ற விசாரணை குறித்த விடயங்களில் அரசும் பிரதான எதிர்க்கட்சியும் ஒன்றிணைந்துள்ளன. ஆனால், தமிழ்த்தரப்பின் செயற்பாடுகளில் பலவீனங்கள் மாத்திரமே விஞ்சிக் காணப்படுகின்றன.