படம் | SELVARAJA RAJASEGAR Photo

ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தால் மார்ச் 2014 இலிருந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கையின் பிரதான உள்ளடக்கத்தில் பொதுவில் பெரிய ஆச்சரியங்கள் இல்லை. ஏற்கனவே, ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை கூடுதல் தரவுகளோடும் ஆழமாகவும் இந்த அறிக்கை முன் வைத்திருக்கின்றது. அந்த அடிப்படையில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரு தரப்பாலும் குற்றங்கள் புரியப்பட்டமைக்கான ஆதாரங்கள் உண்டு எனவும், இவை சர்வதேச குற்றவியல் சட்டத்தால் விதந்துரைக்கப்படும் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் என்ற வகைக்குரியவை என்றும் அறிக்கை சொல்கின்றது. இவ்வறிக்கையை முன் வைத்து எழுந்துள்ள சில விவாதங்கள் தொடர்பில் எனது சிந்தனை ஓட்டங்களை இப்பத்தியின் மூலம் பதிவு செய்கிறேன்.

இதுவரை நடந்தது தரவு சேகரிப்பு மட்டுமே. குற்றவியல் நீதிமன்ற விசாரணை இனித்தான் நடைபெற வேண்டும்.

இக்கட்டுரையாளர், ஜெனீவாவில் 2014இல் தீர்மானம் மூலமாக ஆணை வழங்கப்பட்டது ஒரு முழுமையான விசாரணைக்கு முதற்கண் தேவைப்படும் ஒரு தரவு சேகரிப்பு முயற்சிக்கு (fact finding) மட்டுமே என்று தொடர்ந்தேர்ச்சியாக சொல்லி வந்தார். ஐ.நாவின் கட்டமைப்புக்குள் ஐ.நா. மனித உரிமை பேரவையால் அதிகபட்சம் செய்யக்கூடியது தரவுகளை சேகரிப்பதும் பரிந்துரைகளை வழங்குவதும், கண்காணிப்பு பொறிமுறைகளை உருவாக்குவதும் என்பன மட்டுமே. ஒரு நீதிமன்ற செயன்முறையை ஐ.நா. மனித உரிமை பேரவை மூலம் உருவாக்க சாத்தியமில்லை. ஜெனீவா இதற்கான இடமல்ல. அதற்கு நியூயோர்க்தான் (ஐ.நா. பாதுகாப்பு சபையிடம்) செல்லவேண்டும்.

வெளிவந்துள்ள அறிக்கையில் மிகத் தெளிவாக தாம் செய்திருப்பது ஒரு தரவு சேகரிப்பு மட்டுமே, குற்றங்கள் நிகழ்ந்துள்ள வகைமுறை பற்றியே எங்களால் ஆராய முடிந்ததென்றும், தனிப்பட்ட ரீதியாக இந்தக் குற்றங்களுக்கு யார் பொறுப்பு என்பதை தீர்மானிக்கும் பணி நீதிமன்ற குற்றவியல் விசாரணை ஒன்றின் மூலம்தான் தீர்மானிக்க முடியும் என்றும் ஆணையாளர் கூறுகின்றார். ஆகவே, சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, இனிமேல் உள்ளகப் பொறிமுறைதான் உண்டு என்று சொல்லி மக்களை குழப்பும் முயற்சியை செய்தவர்களின் பொய்யுரைகள் இனிமேல் தானும் தொடரக் கூடாது. தொடர்ந்து குற்றவியல் நீதிமன்ற விசாரணை ஒன்று நடைபெற வேண்டும் என்று அறிக்கை தெளிவாகச் சொல்கின்றது. அதற்காக இதுவரை காலம் நடைபெற்றது சர்வதேச விசாரணை அல்ல என்று அர்த்தம் அல்ல. முழுமையான சர்வதேச விசாரணையின் ஓர் பகுதியான தரவு சேகரிப்பு மட்டுமே என்பதயே வலியுறுத்திச் சொல்லுகின்றேன்.

அறிக்கையின் மூலம் பெறப்படும் பிரதான பலாபலன் என்ன?

ஜூன் 2010இல் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிபுணர்களால் திரட்டப்பட தொடங்கிய தரவுகள் 2014இல் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் மூலம், தொடர்ந்து தற்போது வெளிவந்துள்ள அறிக்கை மூலம் மிகப் பயங்கரமான மோசமான கொடூரங்கள் இலங்கையில் நடைபெற்றுள்ளன என்பது அதிகார பூர்வமாக ஐ.நா. அங்கம் ஒன்றால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 16ஆம் திகதி அறிக்கையை வெளியிட்டு நடத்தப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நடைபெற்றுள்ள குற்றங்களின் பல்வகைத் தன்மையையும் அதன் கொடூரத்தையும் ஆவணப்படுத்தியுள்ள வகையில் இது ஐ.நா. வரலாற்றில் ஒரு தனித்துவமான அறிக்கை எனத் தெரிவித்துள்ளார். குறிப்பாக பெண்களுக்கெதிராக இழைக்கப்பட்டுள்ள கொடூரங்கள் படுபயங்கரமானவை என்றும் தெரிவித்துள்ளார். இவற்றை வெளிக் கொணர்ந்தமையின் மூலம் இக்குற்றங்கள் நடைபெறவில்லை என இனியும் மறுப்பதற்கான சூழல் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. இக்குற்றங்களுக்கு தண்டனை அளிக்கலாமல் இருப்பது பெரும் அநீதி என்ற கருத்துருவாக்கத்தையும் இந்த அறிக்கை உருவாக்கியுள்ளது. இந்த விசாரணையை உள்ளகப் பொறிமுறை மூலம் செய்ய முடியாது எனவும் தீர்க்கமாக அறிக்கை பதிவு செய்துள்ளது. இதுதான் இந்த அறிக்கையின் மூலம் பெறப்படும் பிரதான பலாபலன். ஆகவே, தொடர்ந்து நீதிக்கான போராட்டத்தில் இவ்வறிக்கை ஒரு முக்கியமான வகிபாத்திரத்தை கொண்டிருக்கும் என நம்பலாம்.

இனப்படுகொலை குற்றம் நடைபெறவில்லை என்று அறிக்கை கூறுகிறதா?

இனப்படுகொலை குற்றம் தொடர்பான விசாரணையும் செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை தமிழர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார். ஒரு முழுமையான விசாரணை எல்லாக் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என்ற பார்வையிலேயே இது பிரதானமாக சொல்லப்பட்டது. இனப்படுகொலை நடந்ததா என்பது தொடர்பில் அறிக்கை மௌனமாக உள்ளது. எனினும், இது தொடர்பில் ஜெனீவா பத்திரிகையாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த ஐ.நா. மனித உரிமை ஆணையாளர், இந்த முடிவு இதுவரை நடந்த விசாரணைகளை வைத்து எடுக்கப்பட்ட முடிவு என்றும், எதிர்காலத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் விசாரணை இனப்படுகொலை நடைபெற்றது என்ற முடிவை எட்டுவது சாத்தியமற்ற ஒன்றல்ல என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடுத்தது என்ன?

உள்ளகப் பொறிமுறை மூலம் நம்பகமான குற்றவியல் நீதிமன்ற விசாரணை ஒன்று நடத்தப்படுவது சாத்தியமில்லை என்று ஐ.நா. அறிக்கை மிகவும் திட்டவட்டமாக கூறுகிறது. ஏலவே குறிப்பிட்டவாறு இதுதான் இந்த அறிக்கையின் முக்கியமான முடிவு. ஆனால், அந்த முடிவு எட்டப்பட்டமைக்கு சொல்லப்பட்டுள்ள காரணம் முழுமையாக திருப்தி தருவதாக இல்லை. இந்த அரசிற்கு அத்தகைய விசாரணையை செய்வதற்கு தேவையான அரசியல் விருப்பு இருக்கின்றது என அறிக்கை கருதுகின்றது. ஆனால், 30 வருடகால யுத்தம் நீதி முறைமையை வெகுவாக சீர்குலைத்து விட்டது என்றும், இலங்கை சட்ட முறைமைக்கு இத்தகைய முறைசார் குற்றங்களான போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்களை விசாரிக்க தகைமை இல்லை என்றும் ஐ.நா. அறிக்கை கூறுகின்றது. அதன் காரணமாகத்தான் தனித்து உள்ளகப் பொறிமுறை மூலமாகவன்றி இலங்கையும் சர்வதேசமும் இணைந்து உருவாக்கும் ஒரு கலப்பு பொறிமுறையை ஐ.நா. அறிக்கை பரிந்துரைக்கின்றது. இந்த கலப்பு பொறிமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதை இலங்கை அரசு ஐ.நாவோடும் பாதிக்கப்பட்ட மக்களோடும் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் ஐ.நா. அறிக்கை கூறுகின்றது.

ஐ.நா. பாதுகாப்புச் சபை மூலம் ஏன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் இவ்விடயத்தை பாரப்படுத்த அறிக்கை பரிந்துரை செய்யவில்லை என்ற கேள்வி ஆணையாரிடம் முன் வைக்கப்பட்டது (சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நியாயதிக்கத்தை வழங்கும் இலங்கை ரோம் சாசனத்தில் உறுப்பு நாடாக இல்லாத போதிலும் ஐ.நா. பாதுகாப்புச் சபை தீர்மானத்தின் மூலம் இலங்கையில் நடந்த குற்றங்களை விசாரிக்குமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்க சர்வதேச சட்ட ஏற்பாடுகள் உண்டு). அதற்கு ஆணையாளர் அளித்த பதில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினாலேயே தாம் அந்தப் பரிந்துரையை முன் வைக்கவில்லை என்பதாகும். புதிய அரசு தான் விசாரணைகளை முன்னெடுப்பேன் என்று தொடர்ந்து கூறி வருகின்றமையை ஆணையாளர் சுட்டிக் காட்டியிருந்தார். அவர்களுக்கு அரசியல் விருப்பு இருக்கின்றது. ஆனால், செய்வதற்கு இலங்கையின் நீதித் துறைக்கும் சட்டத் துறைக்கும் தகைமை இல்லை என்பதுதான் அறிக்கையின் முடிவு. அதனாலேயே தாம் கலப்பு பொறிமுறையை உருவாக்குங்கள் என்ற பரிந்துரையை முன் வைத்ததாக அறிக்கை கூறுகின்றது.

ஆனால், தமிழர்களை பொறுத்த வரையில் புதிய அரசிற்கு உண்மையில் விசாரணைகளை தொடர்ந்து கொண்டு நடத்துவதற்கான அரசியல் விருப்பு இருக்கின்றதா என்பதில் சந்தேகங்கள் உண்டு. தமிழ் சிவில் சமூக அமையத்தின் தலைமையில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த 22 பொதுசன அமைப்புக்கள் 18 செப்டெம்பர் 2015 அன்று வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் 14 செடெம்பர் 2015 அன்று ஜெனீவாவில் மங்கள சமரவீர ஆற்றிய உரையை உதாரணமாக சுட்டிக் காட்டி புதிய அரசிற்கும் உண்மையான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு விருப்பம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர். அவ்வுரையில் தம்மீது நம்பிக்கை வைக்குமாறு வினயமாக உறுப்புநாடுகளைக் வெளிநாட்டமைச்சர் கோரியிருந்தாலும், தாம் நடத்தும் உள்நாட்டு விசாரணை மூலம் இலங்கையின் இராணுவத்தின் நற்பெயரை காப்பாற்றுவோம் என அவர் அதே உரையில் தெரிவித்தமை இலங்கை மீது நம்பிக்கைவைக்குமாறு அவர் கோரியமையின் நம்பகத் தன்மைக்கு தானே பங்கம் ஏற்படுத்திக் கொண்டதாக அமைந்து விட்டது என்று அந்த அமைப்புக்கள் தமது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றன. கலப்பு பொறிமுறை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனக் கூறும் இவ்வமைப்புக்கள் உள்ளகப் பொறிமுறை மீயுயர்வு பெறும் கலப்பு பொறிமுறைக்கும் தனித்த உள்ளகப் பொறிமுறை ஒன்றிற்கும் வித்தியாசம் இருக்க மாட்டா என்பதாயும் கோடிட்டு காட்டியிருக்கிறார்கள். ஆகவே, கலப்பு பொறிமுறை ஒன்றை ஏற்றுக் கொள்வதாயின் அது சர்வதேச பொறிமுறையை மீயுயர்வாகக் கொண்ட கலப்பு முறையாக இருக்க வேண்டும் என்று அவ்வமைப்புக்கள் வலியுறுத்துகின்றன.

செப்டெம்பர் 30ஆம் திகதி முன் வைக்கப்படவிருக்கும் புதிய பிரேரணை எதனை வலியுறுத்தும்?

கலப்பு பொறிமுறை ஒன்றை (அது கூடுதலாக உள்ளகப் பொறிமுறையை நோக்கி சாய்வானதாக இருந்தாலும்) இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளாது என்றே அறியக் கிடைக்கின்றது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கை விடயத்தை ஒப்படைக்கத் தேவையில்லை என்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் முடிவெடுத்தமை தமக்கு வெற்றி என்று கடந்த வெள்ளிக்கிழமை நடந்த பத்திரிகை ஆசிரியர்களின் சந்திப்பில் பெருமைப் பட்டிருக்கிறார் ரணில் விக்கிரமசிங்க. அத்தோடு, கலப்பு பொறிமுறையை ஐ.நா. பரிந்துரைத்திருந்தாலும் சர்வதேச சமூகம் தம்மை உள்ளகப் பொறிமுறை மூலம் விசாரணைகளை முன்னெடுக்க ஆதரவளிக்கும் என்று பிரதமர் தெரிவித்திருந்திருக்கிறார். சர்வதேச சமூகம் எண்டு ரணில் இங்கு கூறுவது அமெரிக்காவையும் இந்தியாவையும்தான் என்பதில் சந்தேகம் இருக்கத் தேவையில்லை. மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் தொடங்க முன்னமே உள்ளகப் பொறிமுறைக்கு ஆதரவளிக்கும் பிரேரணையை தாம் இலங்கையின் சம்மதத்தோடு இந்தக் கூட்டத்தொடரின் போது கொண்டுவரத் தீர்மானித்து விட்டதாக அமெரிக்கா அறிவித்திருந்தமை ஞாபகம் இருக்கலாம். ஆகவே, இலங்கை அரசு ஆட்சி மாற்றத்தின் மூலம் தாம் பெற்றுக் கொண்ட புதிய நண்பர்களைக் கொண்டு முழுமையாக சர்வதேச விசாரணையை செப்டெம்பர் முப்பத்தோடு முடிவுக்கு கொண்டு வர முயற்சி எடுக்கும். தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் இந்த பயணத்தில் இணைத்துக் கொள்ள அரசு நிச்சயம் முயற்சி செய்யும், செய்து கொண்டு இருக்கின்றது. ஐ.நா. அறிக்கையின் பரிந்துரைகளை முழுமையாக வரவிருக்கும் பிரேரணையில் உள்ள்ளடக்கச் சொல்லி தமிழ் தரப்பும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் அழுத்தம் பிரயோகிக்கலாம். அதன் காரணமாக இலங்கை அரசு முன்னெடுக்கவுள்ள உள்ளகப் பொறிமுறையையில் குறைந்தபட்சமாக சர்வதேச தொழில்நுட்ப உதவியையும் (நிபுணத்துவ உதவி) அதிகபட்சமாக உள்ளகப் பொறிமுறையில் இலங்கை அரசு சில வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும், சர்வதேச கண்காணிப்பாளர்களை மேற்பார்வை செய்ய அனுமதிக்க வேண்டும் போன்ற ஏற்பாடுகளைக் கொண்டதாக பிரேரணை முன் வைக்கப்படலாம். ஆனால், இறுதியில் அமெரிக்காவும் – இலங்கையுமே பிரேரணையின் இறுதி வடிவத்தை தீர்மானிப்பார்கள்.

ஒட்டு மொத்தத்தில் அடுத்த 18 மாதங்களில் புதிய அரசானது காணி விடுவிப்பு, காணாமல்போனோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் பிரச்சினை போன்றவற்றில் சில விட்டுக் கொடுப்புக்களை செய்வதன் மூலமும் புதிய அரசியலமைப்புக்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதன் மூலமும் இடம்பெற்ற குற்றங்களை விசாரிப்பதற்கான தனது கடப்பாட்டிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் எனத் திட்டமிடுகின்றது. இதில் அரசு வெற்றியும் காணக்கூடும்.

தமிழ் மக்கள் இது தொடர்பில் விழிப்பாக இருப்பது முக்கியம். வெளிவந்துள்ள அறிக்கையை பயனற்றதாக்க எடுக்கும் முயற்சிகளை அவர்கள் முறியடிக்க வேண்டுமென்றால் அறிவுபூர்வமான மக்கள் அணிதிரட்டல் ஒன்றிற்கு நாம் தயாராக வேண்டும். திறக்கப்பட்டதாக சொல்லப்படக் கூடிய ஜனநாயக வெளி உண்மையில் திறந்துள்ளதெனில் நாம் அதை உபயோகப்படுத்துவது எமது கடமையாகும்.

ஞாயிறு தினக்குரல் பத்திரிகைக்காக குமாரவடிவேல் குருபரன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.