படம் | PRESS EXAMINER

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டபோது அந்தப் பதவியினால் தமிழர்கள் தங்கள் இலக்கை அடையக்கூடியதாக இருக்குமா என்பதே தமிழர்கள் மத்தியில் எழுந்த கேள்வி. 38 வருடங்களுக்கு முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்ற வேளையிலும் தமிழர்கள் இதே கேள்வியைத்தான் கேட்டார்கள். ஆனால், வேறுபட்ட அரசியல் சூழ்நிலையில்.

1977 ஜூலை பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்தில் ஆறில் ஐந்துபங்கு பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றி பெருவெற்றி பெற்றபோது முன்னாள் பிரதமர் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெறுமனே 8 ஆசனங்களையே பெறக்கூடியதாக இருந்தது. பழைய தொகுதிவாரி முறையில் நடைபெற்ற அந்தத் தேர்தலில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழர் விடுதலைக் கூட்டணி 18 ஆசனங்களைக் கைப்பற்றக்கூடியதாக இருந்ததால் அமிர்தலிங்கம் அன்று எதிர்க்கட்சித் தலைவராக முடிந்தது.

இன்று விகிதாசாரப் பிரதிநிதித்துவ அடிப்படையிலான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணிக்கு அடுத்த படியாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் நாடாளுமன்றத்தில் 95 ஆசனங்களைக் கைப்பற்றக்கூடியதாக இருந்த போதிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் தேசிய ஐக்கிய அரசொன்று அமைக்கப்பட்டதன் காரணத்தினால் (16 ஆசனங்களைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்) சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்கக் கூடிய வாய்ப்புக் கிட்டியது.

இலங்கைத் தமிழர்கள் தங்களது அரசியல் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு ஒரேவழி வடக்கு – கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி தமிழீழம் ஒன்றை அமைப்பதே என்று 1976 மேயில் வட்டுக் கோட்டை மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் 1977 பொதுத்தேர்தலில் தமிழ் மக்களின் ஆணையைக் கேட்டு தமிழர் விடுதலைக் கூட்டணி பெருவெற்றிபெற்றதையடுத்தே அமிர்தலிங்கம் எதிர்க்க்கட்சித் தலைவரானார். அவர் அப்பதவியை வகிக்கத் தொடங்கிய காலகட்டத்தில்தான் நாடாளுமன்ற அரசியல் தமிழ்த் தலைமைத்துவத்தில் நம்பிக்கையிழந்த தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கத் தொடங்கினார்கள். அமிர்தலிங்கத்தின் தலைமைத்துவத்துக்கு அந்த ஆயுதப் போராட்டம் பெரும் நெருக்குதலைக் கொடுத்தது. இறுதியில் 1983 ஜூலையில் நாடு பூராகவும் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்செயலுக்குப் பிறகு தமிழ் நாட்டுக்குச் சென்றுவிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களினால் இலங்கையில் தமிழர் அரசியல் களத்தில் செல்வாக்கைச் செலுத்த முடியாமற் போய்விட்டது. அந்தத் தலைவர்களில் சம்பந்தனும் ஒருவர்.

ஆனால், இன்று சம்பந்தன் சுமார் மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு 6 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலேயே எதிர்க்கட்சித் தலைவராக வந்திருக்கிறார். அமிர்தலிங்கம் எதிர்நோக்கியதைப் போன்று ஆயுதமேந்திய தமிழ்த் தீவிரவாத இயக்கங்களின் நெருக்குதல் என்றோ அச்சுறுத்தல் என்றோ எதுவுமே சம்பந்தனுக்கு இன்று இல்லை.

தமிழீழத்துக்கு தமிழ் மக்களின் ஆணையைக் கேட்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றிபெற்ற நிலையில் அமிர்தலிங்கம் அன்று எதிர்கட்சித் தலைவராகினார் என்றால், இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையில் அரசியல் இணக்கத் தீர்வொன்று காணப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மையமாகக் கொண்ட தேர்தல் விஞ்ஞாபனமொன்றை தமிழ் மக்கள் முன்னிலையில் வைத்து வெற்றி பெற்றிருக்கும் நிலையில் சம்பந்தன் அந்தப்பதவியை ஏற்றிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டு அமிர்தலிங்கம் வெளிநாடுகளுக்கு விஜயம் செய்து தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகளை விளக்கிக் கூறி அவர்களின் அரசியல் இலட்சியங்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக முன்னெடுத்த நடவடிக்கைகளே இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தும் செயன்முறைகளின் தொடக்கமாக அமைந்தது. அந்த சர்வதேச மயப்படுத்தலைத் தீவிரப்படுத்திய உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான இன்றைய காலகட்டத்தில் இலங்கையின் இனமுரண்பாட்டுப் பிரச்சினையுடன் தொடர்புடைய விவகாரங்களில் வெளிநாடுகளின் குறிப்பாக சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகளின் தலையீட்டை சாத்தியமான அளவுக்கு இல்லாமற் செய்வதற்கு கொழும்பு தீவிர இராஜதந்திர முயற்சிகளில் இறங்கியிருக்கின்ற வேளையிலேயே சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக வந்திருக்கிறார்.

அவர் இப்பதவியை வகிக்கின்ற இன்றைய காலகட்டம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் முன்னென்றுமில்லாத ஒரு முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. இலங்கையின் இரு பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் தேசிய அரசொன்றை அமைத்திருக்கின்றன. இதை தங்களுக்கு நன்மைதரக்கூடிய சூழ்நிலையைத் தோற்றுவிக்க வல்லதொரு நிகழ்வுப் போக்காக நோக்க முடியுமா என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாமல் எழுகிறது.

கடந்த மாதத்தைய பொதுத்தேர்தலில் தென்னிலங்கை சிங்கள மக்களும் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களும் தங்கள் மத்தியில் உள்ள கடும்போக்கு நிலைப்பாடுகளைக் கொண்ட அரசியல் சக்திகளை நிராகரித்துவிட்டார்கள் என்று அரசியல் அவதானிகள் பலரும் எழுதுகிறார்கள். வடக்கு கிழக்கில் நிராகரிக்கப்பட்ட அளவுக்கு தென்னிலங்கையில் கடும் போக்கு அரசியல் நிராகரிக்கப்பட்டதாக கூறவே முடியாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் தேர்தல் களத்தில் இறங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் நாடாளுமன்றத்தில் 95 ஆசனங்களைக் கைப்பற்றக்கூடியதாக இருந்திருக்கிறது. ராஜபக்‌ஷவின் பேரினவாத அரசியல் சிந்தனை சிங்கள மக்கள் மத்தியில் இன்னமும் கூட செலுத்தக்கூடியதாக இருக்கின்ற கெடு நோக்குடைய செல்வாக்கை இது பிரகாசமாக வெளிக்காட்டுகின்றது. அதனால், சிங்கள மக்களிடமிருந்து அதிருப்தியைச் சம்பாதிக்கக்கூடியதாக இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதை நோக்கிய உருப்படியான செயன்முறை எதிலும் இந்தத் தேசிய அரசு இறங்குவதற்கு துணிச்சல் கொள்வது சாத்தியமில்லை. சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகளை திருப்திப்படுத்துவதற்காக சிலவேளைகளில் அரசு இனப்பிரச்சினை விவகாரத்தில் முன்னெடுக்கக்கூடிய எந்தவொரு நேர்மறையான நடவடிக்கைக்கும் எதிராக தென்னிலங்கை மக்களை தூண்டிவிடக் கூடிய சந்தர்ப்பத்துக்காக ராஜபக்‌ஷ முகாம் காத்துக்கொண்டிருக்கிறது.

இத்தகையதொரு சூழ்நிலையில் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கப்போகிறார் என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரை முக்கியமானதொரு கேள்வி. சமகாலத்தில் நடைமுறைச் சாத்தியமற்றதும் கோட்பாட்டுப் பிடிவாதமுடையதுமான அரசியல் அணுகுமுறைகளையே தமிழ் மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இதுவரையான அணுகுமுறைகள் சகலதையும் அவர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள் என்பதன் வெளிப்பாடாக தேர்தல் முடிவுகளை அர்த்தப்படுத்திவிட முடியாது.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நாட்டு மக்களில் சகல பிரிவினருக்காகவும் குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பும் சம்பந்தனிடம் சுமத்தப்பட்டிருக்கிறது. அந்தப் பணியை ஆரோக்கியமான முறையில் அவர் செய்வாராக இருந்தால் இலங்கையின் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கான பயனுறுதியுடைய பங்களிப்பாக அது அமையமுடியும் என்று தென்னிலங்கை அரசியல் அவதானிகள் சிலர் அபிப்பிராயம் வெளியிட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

அதேவேளை, மறுபுறத்தில் அன்று அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றதைப் பயன்படுத்தி சிங்கள மக்கள் மத்தியில் தமிழர் விரோத உணர்வுகளைத் தூண்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதைப் போன்று இன்று சம்பந்தனின் பதவியை சிங்களவர்களின் அரசியல் அந்தஸ்துக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு அச்சுறுத்தலாகக் காண்பிப்பதற்கு சில சக்திகள் முயன்று கொண்டிருக்கின்றன. அன்று அமிர்தலிங்கத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியினரே நம்பிக்கையில்லாப் பிரேரனையொன்றைக் கொண்டு வந்தனர். நாடாளுமன்ற ஜனநாயக முறையின் வரலாற்றிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்கு எதிராக ஆளும் கட்சி அத்தகைய பிரேரணையொன்றைக் கொண்டுவந்து நிறைவேற்றிய முதன் முதலான சந்தர்ப்பம் அதுவாகத்தான் இருக்கக் கூடும். ஜனாதிபதி ஜெயவர்தன நினைத்திருந்தால் அந்தக் கேலிக்கூத்தைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால், அவருக்குத் தேவைப்பட்டதெல்லாம் அமிர்தலிங்கம் வெளிநாடுகளுக்குச் சென்று தனது அரசுக்கு எதிராக பிரசாரம் செய்வதைத் தடுத்து நிறுத்துமுகமாக அவரையும் தமிழர்களையும் மிரட்டிப் பணிய வைக்க வேண்டுமென்பதேயாகும். நாடாளுமன்றத்தில் அன்று ஆளும் கட்சி அரசியல்வாதிகளினால் நிகழ்த்தப்பட்ட ஆவேசமான உரைகள் தமிழர்களுக்கு எதிரான குரோத உணர்வை தென்னிலங்கையில் கடுமையாகத் தீவிரப்படுத்தி வன்முறைகளைத் தூண்டிவிட்டன. அமிர்தலிங்கத்துக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் அன்றைய இளம் நாடாளுமன்ற உறுப்பினரான இன்றைய பிரதமரும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை விவகாரங்களில் சர்வதேச சமூகத்தின் ஈடுபாடு பற்றிய சர்ச்சை மீண்டும் கவனத்தைப் பெற்றிருக்கும் இன்றைய நிலையில் தமிழர்கள் சார்பாக சம்பந்தன் எடுக்கக்கூடிய நிலைப்பாடு அவருக்கு எதிராகவும் நாடாளுமன்றத்தில் பிரச்சினைகளைக் கிளப்பக்கூடிய சூழ்நிலையைத் தோற்றுவிக்குமா? சரித்திரம் திரும்பிவருமா?

வீ. தனபாலசிங்கம்