Photo, Aithiya

அன்பான ஒரு நண்பரையும், உடன் போராடிய தோழரையும் நாம் இழந்துவிட்டோம். பசில் பெர்னாண்டோ செப்டம்பர் 30 அன்று, தனது 81 ஆவது வயதில் ஹாங்காங்கில் காலமானார். சட்டத்தரணி, சட்ட வல்லுநர், கவிஞர், தத்துவஞானி மற்றும் மார்க்சிஸ்ட்டான அவர், அநீதியுடன் ஒருபோதும் சமரசம் செய்துகொண்டதில்லை. மனித கண்ணியத்திற்காகப் போராடிய மிகத் தைரியமான போராளிகளுள் ஒருவரை ஆசியா இழந்துவிட்டது.

ஆரம்பம்

பசில் 1944 அக்டோபர் 14 அன்று இலங்கையின் வத்தளையில் பிறந்தார். அவர் ஒரு ஏழ்மையான மீன்பிடி கிராமத்திலிருந்து வந்தவர். சாதியும் வர்க்கமும் தன்முன் நிறுத்திய தடைகளைத் தாண்டி, அவர் ஒரு தீவிரமான மனித உரிமைகள் சட்டத்தரணியாக உருவெடுத்தார். இந்த ஆரம்பகால அனுபவங்கள் அவரது வாழ்வின் இறுதி வரை அவரோடு நிலைத்திருந்தன. சட்டத்தைப் பற்றி எழுதுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, அநீதி என்றால் என்ன என்பதை அதை அனுபவித்த சாதாரண மனிதர்களின் வாழ்க்கையிலிருந்தே அவர் புரிந்துகொண்டிருந்தார்.

இளம் மார்க்சிஸ்ட்

பசிலின் அரசியல் பயணம் இடதுசாரியத்திலிருந்தே தொடங்கியது. ஒரு இளைஞனாக அவர் புரட்சிகர கம்யூனிஸ்ட் அமைப்பின் வாராந்த பத்திரிகையான ‘கம்கரு மாவத்த’ (தொழிலாளர் பாதை) அமைப்பைச் சுற்றி திரண்ட குழுவில் இணைந்தார். கொழும்பு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற ‘கம்கரு மாவத்த’ போராட்ட ஊர்வலத்திற்கு பசில் தலைமை தாங்கியதை அவரது சக தோழர் ஒருவர் பின்னர் நினைவுகூர்ந்தார்.

அந்த மார்க்சிச அரசியல் வழிகாட்டல் அவரது பின்னாளைய அனைத்துச் செயல்பாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பசிலைப் பொறுத்தவரை மனித உரிமைகள் என்பது ஒருபோதும் வெறும் சுருக்கமான கோட்பாடுகளாக இருந்ததில்லை. அவை அதிகாரம், வர்க்கம் மற்றும் சாதாரண உழைக்கும் மக்கள் வாழும், இறக்கும் நிலைமைகள் பற்றிய விடயங்களாகவே இருந்தன. அவரது பணிகள் அவரை நீதிமன்ற அறைகளுக்கும், ஐக்கிய நாடுகளின் பணிகளுக்கும், சர்வதேச மனித உரிமைகள் இயக்கத்திற்கும் அழைத்துச் சென்றபோதிலும், அந்தப் பகுப்பாய்வுப் பார்வையை அவர் ஒருபோதும் இழக்கவில்லை.

அவர் 1972 இல் இலங்கை பல்கலைக்கழகத்தில் சட்டமாணிப் பட்டம் பெற்றார். பட்டப்படிப்புக்குப் பிறகு முதலில் வித்யோதய பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் கற்பித்தார். 1980இல் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட அவர், 1989ஆம் ஆண்டின் இறுதி வரை இலங்கையில் சட்டத் தொழிலில் ஈடுபட்டார். பின்னர் அவர் தனது சுயசரிதையான ‘A Confession of a Lawyer’ (ஒரு சட்டத்தரணியின் வாக்குமூலம்) நூலின் மூலம் இந்தப் பயணத்தின் கதையை விவரித்தார்.

நாட்டைவிட்டு வெளியேறல்

அந்த ஆண்டுகள் இலங்கையின் இருண்ட காலங்களாக இருந்தன. நீதித்துறையையும் சட்டத் தொழிலையும் விழுங்கிக் கொண்டிருந்த அரசியல்மயமாக்கல் மற்றும் ஊழலுக்கு எதிராக பசில் நின்றார். 1989ஆம் ஆண்டளவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர், மேலும் பசிலின் பெயரும் மரணப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. இதனால் தனது மனைவி மற்றும் சிறிய மகளுடன் அவர் ஹாங்காங்கிற்குத் தப்பிச் செல்ல வேண்டியதாயிற்று. அரசாங்கத்தால் வேட்டையாடப்படுவது என்றால் என்ன என்பதை அவர் தனது சொந்த வாழ்க்கையிலிருந்தே அறிந்திருந்தார். தப்பிச் செல்ல முடியாதவர்களை அவர் ஒருபோதும் மறக்கவில்லை.

நாடுகடந்த நிலையில் நீதியைக் கட்டியெழுப்புதல்

1989 முதல் 1992 வரை ஹாங்காங்கில், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் (UNHCR) ஆதரவு பெற்ற திட்டமொன்றில், வியட்நாமிய அகதிகளுக்கான மேல்முறையீட்டுச் சட்டத்தரணியாகப் பணியாற்றினார். 1992 முதல் 1993 வரை அவர் கம்போடியாவில் ஐக்கிய நாடுகளின் இடைக்கால அதிகார சபையின் (UNTAC) விசாரணைப் பிரிவிற்குப் பொறுப்பான சிரேஷ்ட ஐ.நா மனித உரிமைகள் அதிகாரியாக இருந்தார். பின்னர் 1994 வரை கம்போடியாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மையத்தின் அலுவலகத்தில் சட்ட உதவிப் பணிகளை வழிநடத்தினார்.

1994இல் அவர் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் (Asian Human Rights Commission – AHRC) இணைந்ததுடன், பின்னர் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளரானார். அந்தப் பதவியைப் பயன்படுத்தி அவர் மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தியதுடன், களமட்ட மக்கள் போராட்டங்களைச் சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தங்களுக்கான இயக்கங்களுடன் இணைத்தார். சித்திரவதை, சட்டவிரோதத் தடுப்புக்காவல், அரச அதிகார துஷ்பிரயோகம் மற்றும் உயிர் ஆபத்திலிருந்து கைதிகளைப் பாதுகாப்பதற்காக “அவசர மேல்முறையீட்டு” (Emergency Appeals) முறையைத் தொடங்குவதில் அவர் முன்னோடியாகத் திகழ்ந்தார். சொல்லொணாத் துயரிலிருந்த எண்ணற்ற குடும்பங்களுக்கு, ஹாங்காங்கிலிருந்து வந்த அத்தகைய அவசர மேல்முறையீடானது, எங்கோ யாரோ ஒருவர் அவர்களின் வேதனைக்குச் செவிசாய்க்கிறார் என்பதற்கான முதல் சமிக்ஞையாக இருந்தது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடுவதை அவர் ஒருபோதும் நிறுத்தவில்லை. இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை தென்கொரியாவின் குவாங்ஜூ நகரின் ‘மே 18 இயக்கத்துடன்’ இணைத்தார். அந்தத் தொடர்பு, பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவகளுக்காக ஒரு தேசிய நினைவிடத்தை அமைப்பதற்கான ஊக்கத்தை அளித்தது. தனது தோழர்களுடன் இணைந்து அவர் ‘Narrative of Justice in Sri Lanka’ என்ற நூலை உருவாக்கினார். 1998 முதல் 2011 வரையிலான காலப்பகுதியில் பொலிஸ் சித்திரவதைகளுடன் தொடர்புடைய 1,500 சம்பவங்கள் அதில் ஆவணப்படுத்தப்பட்டிருந்தன. மேலும் அவர் ‘article 2’ என்ற காலாண்டு இதழையும் வெளியிட்டார்.

ஆசிய மனித உரிமைகள் சாசனம் மற்றும் ஆசிய சட்டத்தின் ஆட்சி பற்றிய சாசனம் ஆகியவற்றை உருவாக்குவதிலும் அவர் பங்களித்தார். 2012 இல் அவர் சித்திரவதை மற்றும் கொடூரமான நடத்தைகளுக்கு எதிரான ஆசியக் கூட்டமைப்பின் (Asian Alliance Against Torture and Ill-Treatment) இணை நிறுவனரானார். இவை அனைத்திலும், உண்மையான ஜனநாயகத்திற்கு வலுவான மற்றும் சுயாதீனமான சிவில் சமூகம் அவசியமானது என்று அவர் நம்பினார். ஆசியா முழுவதிலும் உள்ள இளம் செயல்பாட்டாளர்களுக்காக அவர் தனது நேரத்தைத் தாராளமாக அர்ப்பணித்தார்.

கவிஞர்

பசில் உண்மையான ஆற்றல்மிக்க ஒரு கவிஞராகவும் இருந்தார். அவரது ‘Pride and Pain in Difficult Times’ என்ற கவிதைத் தொகுப்பு, தசாப்தங்களாக இலங்கையை உலுக்கிய மோதல்களுக்கு ஒரு ஆழமான மானுடக் குரலை வழங்குகிறது. அது ஒருபுறம் ஆவணப்படுத்தலாகவும், மறுபுறம் அவரது தாய்நாடு மற்றும் நாடுகடந்த வாழ்க்கை பற்றிய ஆழமான சிந்தனையாகவும் இருந்தது.

காணாமல் போன தன் மகனைத் தேடுவதை ஒருபோதும் நிறுத்தாத பெற்றோர் பற்றிய அவரது ‘Looking for Raju’ (ராஜுவைத் தேடி) என்ற கவிதை, இலங்கையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) நடத்திய ‘Silenced Shadows’ போட்டியில் வெற்றிபெற்ற கவிதைகளுள் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. மொழிபெயர்ப்புகள் மூலம் அவரது படைப்புகள் சிங்கள வாசகர்களையும் சென்றடைந்தன.

கௌரவங்களும் விருதுகளும்

2001இல் அவர் மனித உரிமைகளுக்கான குவாங்ஜூ பரிசைப் பெற்றார். 2005இல் அவர் Ashoka Fellow நியமிக்கப்பட்டார். 2014 இல் “மாற்று நோபல் பரிசு” என்று அழைக்கப்படும் Right Livelihood Award அவருக்கு வழங்கப்பட்டது. இருப்பினும் அவர் ஒருபோதும் ஆணவத்துடன் இந்த கௌரவங்களை ஏற்றுக்கொண்டதில்லை. அவரது கருத்துப்படி, அந்த கௌரவங்கள் அனைத்தும் தனது எழுத்துக்கள் மூலம் உலகிற்குத் தைரியத்தை அறிமுகப்படுத்திய பாதிக்கப்பட்ட மக்களுக்கே உரியவை.

மெல்பேர்னில் பசில்

2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் எங்களது அழைப்பை ஏற்று பசில் ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்தார். எனக்கும் இணைய வாய்ப்பு கிடைத்த ‘People for Human Rights and Equality’ (PHRE) அமைப்பின் கூட்டங்கள் உட்பட மெல்பேர்னில் நடந்த பல மனித உரிமைகள் மாநாடுகளில் அவர் உரையாற்றினார். அவரது தெளிவு, நகைச்சுவை உணர்வு மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பது அரசியலமைப்பில் எழுதப்பட்ட வார்த்தைகள் மட்டுமல்ல, சமூகத்தின் கடைக்கோடி ஏழை மனிதனுக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என்ற அவரது தீவிர வலியுறுத்தலும் எனக்கு இன்று போல நினைவிருக்கிறது.

சகலரின் ஆதரவுப் போராட்டத்திற்கும் எல்லைகள் இல்லை என்பதையும், இலங்கையின் பொலிஸ் சிற்றறையில் நடப்பது நம் அனைவரின் கவனத்திற்கும் உரிய விடயம் என்பதையும் அவர் நமக்கு நினைவூட்டினார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கோரிக்கை

பசில் தசாப்தங்களாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் தோளோடு தோள் நின்று போராடினார். இலங்கை முழுவதும் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கிலும் தாய்மார்கள், மனைவிகள் மற்றும் பிள்ளைகள் இன்னமும் தங்கள் அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியக் காத்திருக்கிறார்கள். பலர் அப்படிக் காத்திருந்தே வயதாகிவிட்டனர். சிலர் எந்தப் பதிலும் இன்றி இறந்துவிட்டனர். அவரது ‘Looking for Raju’ கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ள பெற்றோரைப் போல, அவர்கள் ஒருபோதும் தங்கள் கேள்வியைக் கேட்பதை நிறுத்தவில்லை.

பசிலுக்குச் செய்யும் மரியாதையாக, இக்குடும்பங்களுக்கு நீதியை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு நான் அழைப்பு விடுக்கின்றேன். அதாவது, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது மற்றும் அவர்கள் இருக்குமிடம் பற்றிய உண்மையை அவர்களிடம் கூறுதல், சுயாதீனமான மற்றும் நம்பகமான விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடர்தல்கள் மூலம் பொறுப்பானவர்களைப் பொறுப்புக்கூறச் செய்தல், அர்த்தமுள்ள இழப்பீடுகளை வழங்குதல் மற்றும் அரசின் முகவர்களால் அழைத்துச் செல்லப்பட்ட தனது அன்பிற்குரியவரைத் தேடி அலையும் நிலை இலங்கையில் உள்ள எந்தவொரு குடும்பத்திற்கும் இனி ஒருபோதும் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றைச் செய்வதுடன், காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தை (OMP) வலுப்படுத்துவதும் நீண்டகாலமாக நிலவும் தண்டனையிலிருந்து தப்பிக்கும் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதும் அவர்களின் சார்பில் இக்கேள்விகளைத் தொடர்ந்து கேட்பதை ஒருபோதும் நிறுத்தாத ஒரு மனிதனுக்கு நாம் எழுப்பக்கூடிய மிகப்பொருத்தமான நினைவாக இருக்கும்.

விடைபெறுதல்

அவரது அன்பான மனைவிக்கும் மகளுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது நாடுகடந்த வாழ்க்கை, போராட்டம் மற்றும் நீண்டகாலச் சேவையை அவர்கள் அவருடன் பகிர்ந்துகொண்டனர்.

ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும், ஆசிய சட்ட வள மையத்திலும் அவருடன் பணியாற்றிய அவரது சக போராளிகள் மற்றும் உதவியாளர்களுடனும், ஆஸ்திரேலியாவில் உள்ள PHRE மற்றும் ‘Australian Advocacy for Good Governance in Sri Lanka’ (AAGGSL) அமைப்புகளில் உள்ள நமது நண்பர்களுடனும், அவரது வழிகாட்டலாலும் முன்மாதிரியாலும் வலுப்பெற்ற ஆசியா முழுவதிலும் உள்ள எண்ணற்ற மனித உரிமைப் போராளிகளுடனும் இந்தத் துயரத்தை நாங்கள் பகிர்ந்துகொள்கிறோம்.

நீதி என்பது பொறுமையுடன் கட்டியெழுப்பப்பட வேண்டிய ஒன்று என்று பசில் நம்பினார். சம்பவத்திற்குச் சம்பவம், குரலுக்குக் குரல் நீதி கட்டியெழுப்பப்பட வேண்டும். அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கான சிறந்த வழி அவர் தொடங்கிய அந்தப் பணியை முன்னோக்கி எடுத்துச் செல்வதே ஆகும்.

விடைபெறுகிறோம், அன்பான தோழரே. உமது குரலை ஒருபோதும் மௌனிக்க முடியாது.

லயனல் போபகே