Photo, TAMIL GUARDIAN

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான நீண்டகாலப் போராட்டத்தில், 2026 ஒரு முக்கிய ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. தமிழ்த் தேசியவாத அரசியலில் நம்பிக்கைமிக்கோர் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நிறைவை இந்த வருடத்தில் நினைவு கூர்ந்து வருகின்றனர். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒரு தனித் தமிழ் அரசை உருவாக்குவதற்கான முதற்படியாக, இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியால் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தமிழ் தேசம் என்பதற்கான கற்பிதமான வரலாற்று உரிமை கோரல்களின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் அமைந்திருந்தபோதிலும், சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் ஒரு சிங்கள – பௌத்த இனத்தேசிய/ இனவாத அரசின் கீழ், கட்டமைக்கப்பட்ட‌ ஓரங்கட்டலையும் வன்முறையையும் தமிழர்கள் எதிர்கொண்டு வந்த வேளையில், அடுத்தடுத்து வந்த‌ இலங்கை அரசாங்கங்கள் தமிழர்களின் நீண்டகாலக் குறைகளை நிவர்த்தி செய்யத் தவறிய சூழலிலேயே இத்தீர்மானம் உருவானது.

சுதந்திரத்திற்குப் பிறகு தமிழர்கள் எவ்வாறு அரசாங்கத்தினால் ஓரங்கட்டப்பட்டார்கள் என்பதை வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் ஆங்கில வடிவத்தின் ஒரு பகுதி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட, ஆக்கிரமிப்பு நோக்கம் கொண்ட‌ சிங்கள – பௌத்தமயமாக்கல் செயன்முறைகள், அரசின் நேரடிப் பங்களிப்புடன் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன வன்முறைகள் மற்றும் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சமத்துவம் மறுக்கப்பட்டமை போன்ற பல விடயங்கள் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளன‌. அத்துடன், வட்டுக்கோட்டைத் தீர்மானம் தமிழர்களிடையே நிலவும் சாதியக் கட்டமைப்பினை ஒழிக்க அழைப்பு விடுப்பதுடன், எதிர்காலத் தமிழீழ அரசில் வளங்களை மறுபகிர்வு செய்வதற்கும், சோசலிசப் பொருளாதாரத் திட்டம் ஒன்றை மக்களுக்கு வழங்குவதற்கும் உறுதியளிக்கிறது.

1950களுக்கும் 1970களின் நடுப்பகுதிக்கும் இடைப்பட்ட காலத்தில், தமிழ் அரசியல் தலைவர்கள் பேச்சுவார்த்தைகள் மற்றும் சமரச முயற்சிகள் மூலம், சமஸ்டி (Federalism) உள்ளிட்ட அதிகாரப் பகிர்வு கட்டமைப்புகளுக்குள் தங்கள் சமூகத்தின் குறைகளுக்குத் தீர்வுகளைக் காண முயன்றனர். இருப்பினும், சிங்கள அரசியல் தலைமைகளின் பிடிவாதப் போக்கு பேச்சுவார்த்தை மூலமான எந்தவொரு சுமுகத் தீர்வுக்கும் எப்போதும் ஒரு தடையாகவே இருந்தது. சிங்களத் தலைவர்களிலே சிலர் தாம் உருவாக்கிய சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஓரளவாவது ஆர்வம் காட்டியபோதுகூட, பௌத்த மத நிறுவனங்கள் மற்றும் சிங்கள தேசியவாதக் குழுக்களின் அழுத்தங்களுக்கு அவர்கள் இறுதியில் அடிபணிய நேரிட்டமையினை நாம் வரலாற்றின் ஓட்டத்திலே காண்கிறோம். இதன் காரணமாக, அவர்கள் தமிழ்த் தலைவர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களைக் கூட கிழித்தெறிந்தமையும் இலங்கையின் பின்காலனித்துவ வரலாற்றிலே ஒரு பகுதியாகியது.

ஆரம்பத்தில் தமிழர்களுடன் தார்மீக ரீதியாகத் துணை நின்ற நாட்டின் இடதுசாரித் தலைவர்கள், காலப்போக்கிலே சிங்கள தேசியவாத அரசியலால் உள்வாங்கப்பட்டு, இன – மத சிறுபான்மையினருக்கு எதிராகத் தொடர்ந்த பாரபட்சங்களுக்குத் துணையாக மாறினர். இத்தகையதொரு பின்னணியில்தான், தனிநாடு என்ற யோசனை தமிழ்த் தரப்பினரால் முன்வைக்கப்பட்டது.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது வேறு வழியற்ற ஒரு நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான‌ இறுதி முயற்சியாகவே உருவெடுத்தது என வாதிடலாம். எனினும், இத்தீர்மானத்தை வெறும் வெற்று முழக்கம் என்று பார்க்கும் விமர்சகர்களும் இருக்கிறார்கள். குறிப்பாக, 1970 பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த அரசியல் தலைவர்கள், தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே இதனை முன்வைத்ததாக சில விமர்சகர்கள் கருதுகின்றனர். இத்தீர்மானத்தின் பின்னணியில் இருந்த அரசியல் கட்சிகளுக்கு, தங்கள் இலக்குகளை அடைவதற்கான தெளிவான உத்தி எதுவும் இருக்கவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மறுபுறம், ஒரு தனிநாட்டினை அமைப்பது என்பது சாத்தியமற்றது என்பதை இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக இருந்த‌ அரசியல் தலைமை அறிந்திருந்திருக்கலாம்; ஆனால், பிரிக்கப்படாத ஒரு நாட்டிற்குள் நியாயமானதொரு தீர்வை வழங்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு வழியாக அல்லது உத்தியாக‌ அவர்கள் இந்தத் தீர்மானத்தைப் பயன்படுத்தியிருக்கவும் கூடும். இருப்பினும், தமிழ் இளைஞர்கள் இத்தீர்மானத்தைத் தமது இலக்காக வரித்துக்கொண்டனர். அதில் குறிப்பிடப்பட்டிருந்த இலக்குகளை அடைவதற்காக அவர்கள் மக்களை அணிதிரட்டத் தொடங்கினர். அரச வன்முறைகள் மோசமடைந்த சூழலில், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் விளைவாகத் தமிழ் ஆயுதப் போராட்டம் ஒரு பலமான சக்தியாக‌ உருவெடுத்தது. இது பாரம்பரியத் தமிழ் தேசியவாதக் கட்சிகளிடமிருந்து வந்த அரசியல் எதிர்ப்பையும் தாண்டி, தமிழ் மக்களின் பின்காலனித்துவ அரசியல் வரலாற்றிலே மிக முக்கிய இடத்தைப் பிடித்தது.

இந்தத் தீர்மானம் தோன்றுவதற்குக் காரணமாய் இருந்த சூழலை நாம் புரிந்துகொள்ள முயற்சிக்கும் அதே வேளையில், அதன் பிரகடனங்களில் பொதிந்துள்ள எதிர்காலம் குறித்த பிரச்சினையான‌ பார்வையையும் நாம் கூர்ந்து பரிசீலிக்க வேண்டும். ஏனெனில், தமிழ் தேசியவாதத்தைப் நியாயப்படுத்துவதற்காக‌ இந்தத் தீர்மானத்தில் பொறிக்கப்பட்டுள்ள அடிப்படை வாதங்கள், இன்றும் தமிழ் அரசியலில் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன. இந்த அடிப்படைக் கோட்பாடுகள் எவற்றுடனும் சமரசம் செய்துகொள்ள முடியாது என்றே, இன்றும் கூட தமிழ் அரசியல் தலைவர்களாலும், தமிழ் தேசியவாதச் செயற்பாட்டாளர்களாலும் அடிக்கடி சொல்லப்படுகிறது.

தமிழ்த் தேசத்தின் வரலாறு

தேசம் என்ற கருத்தியல், தமிழ் சூழலில் எவ்வாறு சமூக அல்லது அரசியல் கற்பிதமாக உருவெடுத்தது என்பதில் கவனம் செலுத்தாமல், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் ஆரம்பப் பகுதியே தமிழ் தேசத்தின் இருப்பை ஒரு வரலாற்றுக்கு அப்பாற்பட்ட (Ahistorical) பாணியில் கட்டமைக்கிறது. ஐரோப்பாவிலும், முன்னர் ஐரோப்பியக் காலனித்துவத்திற்கு உட்பட்ட நாடுகள் பலவற்றிலும் எழுச்சி பெற்ற‌ பல தேசியவாதங்களைப் போலவே, இந்தத் தீர்மானமும் தேசம் என்பதை காலத்தைக் கடந்த ஒரு நித்தியமான‌ வடிவமாகவே சித்தரிக்கிறது. இத்தீர்மானத்தின் விரிவான ஆங்கில வடிவம், தமிழ் தேசத்தின் தோற்றத்தை “வரலாற்றின் ஆரம்பம்” வரை பின்னோக்கி இழுத்துச் சென்று நிலைநிறுத்துகிறது. வரலாற்று ஆசிரியர்கள் அவதானித்துள்ளபடி, இன்று இலங்கையிலும் தென்கோள‌ உலகின் (Global South) பல பகுதிகளிலும் நாம் காணும் இன அடையாளங்களும் இன உணர்வுகளும், காலனித்துவ ஆட்சிக் காலத்திலேயே கூர்மை பெற்று அரசியல் அமைப்புகளாக ஒருங்கிணைக்கப்பட்டன. எனவே, காலனித்துவத்திற்கு முற்பட்ட காலத்தினையும், ஊடுருவக்கூடிய/ நெகிழ்வான எல்லைகளைக் கொண்டிருந்த உள்நாட்டு இராசதானிகளினையும் தற்கால இன அடையாளங்களைப் பாவித்து உரிமை கோருவது என்பது முற்றிலும் வரலாற்றுக்கு முரணான ஒரு செயலாகும்.

போர்த்துகேயரின் ஆக்கிரமிப்பு ஏற்படும் வரை தமிழர்கள் தங்களுக்கென்று ஒரு இறையாண்மைமிக்க இராச்சியத்தைக் கொண்டிருந்தார்கள் என்றும், பின்னர் அதனை ஐரோப்பிய ஆட்சியாளர்களிடம் இழந்தார்கள் என்றும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் குறிப்பிடுகிறது. தமிழர்கள் இழந்ததாகச் சொல்லப்படும் இறையாண்மையை மீட்டெடுப்பதற்கான ஒரு வழியாக நவீன தேசியவாதத்தினை முன்னிறுத்தும் முயற்சியை நாம் இங்கு காண்கிறோம். போர்த்துக்கேயரின் வருகையின் முன்னர் தீவின் வடக்குப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே இயங்கி வந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் பிராந்திய எல்லைகளை, ஒட்டுமொத்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விரிவுபடுத்த முயன்றதும், வலுவான தமிழ் அரசியல் உணர்வு இல்லாதிருந்த ஒரு காலத்தில், அவ்வாறு செயற்கையாகப் பெருப்பிக்கப்பட்ட ஒரு நிலப்பரப்பை ‘தமிழ் இராச்சியம்’ என மறுபெயரிட்டதும் அரசியல் ரீதியாகவும் சரி, அறிவுசார் ரீதியாகவும் சரி ஒரு களங்கமானதும், கபடமானதுமான செயலே.

ஐரோப்பியக் கட்டமைப்பு

தேசியவாதத்தை ஓர் அரசின் உருவாக்கத்துக்கான‌ வழிகாட்டும் தர்க்கமாக (Framing logic) கையாள்வது என்பது, காலனித்துவ மற்றும் நவ காலனித்துவ செயல்முறைகள் மூலம் ஐரோப்பாவிலிருந்து நமக்குக் கடத்தப்பட்ட ஒரு நடைமுறையாகும். ஐரோப்பிய சூழலில், நவீன காலத்தின் ஆரம்பத்திலிருந்தே, தேசம் என்பது ஒரு பொதுவான நிலப்பரப்பையும், கலாச்சார மற்றும் மொழி ரீதியான பிணைப்பையும் கொண்ட ஒரு கற்பித சமூகமாகவே கட்டப்பட்டது. ஐரோப்பிய வரலாற்றின் நவீன கட்டத்தில் உருவெடுத்த தேச-அரசுகள் (Nation-states), இத்தகைய நில எல்லைக்குட்பட்ட தேசியவாதக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே கட்டியெழுப்பப்பட்டன. தேச உருவாக்கத்தின் இந்த செயல்முறையானது, மஹ்மூத் மம்தானி (Mahmood Mamdani) குறிப்பிடுவது போல, வரையறை செய்யப்பட்ட நிலப்பரப்புக்களுள் இன/ மொழி/ கலாசார/ சமய அடிப்படையில் “நிரந்தர பெரும்பான்மையினரையும்” “நிரந்தர சிறுபான்மையினரையும்” உருவாக்கும் நிலைமையினையே ஏற்படுத்தியது.

இருப்பினும், காலனித்துவ எதிர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்ற‌ காலத்தில், இந்தியா போன்ற பிராந்தியங்களில் இருந்த சில தலைவர்கள் தேசம் என்பதை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் கற்பனை செய்தனர்; மொழி, மதம் அல்லது கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஒற்றை அடையாளத்தை அவர்கள் மையப்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக, பன்மைத்துவம், மதச்சார்பின்மை காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்கான கூட்டு அர்ப்பணிப்பு மற்றும் மக்களின் எதிர்காலத்திற்கான சமூக, பொருளாதாரத் திட்டம் ஆகியவற்றின் மூலமாகவே தேசம் என்பது அங்கு வடிவமைக்கப்பட்டது. ஆனால், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் வெளிப்படும் தமிழ் தேசியவாதமானது, நவீனத்துவத்தின் ஒரு பகுதியாக உருவெடுத்த, பிறரை விலக்கி வைக்கும் (Exclusivist) ஐரோப்பிய தேசியவாதங்களை ஒத்ததாகவே காணப்படுகிறது.

ஐரோப்பிய தேசியவாதங்கள் ஏற்படுத்திய ‘அந்நியப்படுத்துதல்’ (Othering – மற்றவராக்குதல்) மற்றும் வன்முறைகள் குறித்து விமர்சகர்கள் விரிவாக எழுதியுள்ளனர். 1492 இல் ஸ்பெயினில் இருந்து யூதர்களும் மூர்களும் (Moors) வெளியேற்றப்பட்டதில் இருந்து, 20ஆம் நூற்றாண்டின் யூத இனப்படுகொலை (Holocaust) மற்றும் இன்று பல ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம்கள், புலம்பெயர்ந்தோர், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் அடக்குமுறைகள் வரை, தேசியவாதத்தின் வன்முறையை நாம் நாளாந்தம் கண்ணுற்று வருகிறோம். ருவாண்டா மற்றும் உகாண்டா போன்ற இடங்களிலும், இந்தியத் துணைக்கண்டப் பிரிவினையின் போதும் நாம் கண்ட வன்முறைகளும், தற்பொழுது காசாவில் நாம் கண்டுகொண்டிருக்கின்ற‌ இனப்படுகொலையும் ஐரோப்பாவில் உருவாகிய தேசியவாத வடிவம் காலனித்துவத்தின் ஊடாக‌ உலகமயமாக்கப்பட்டதின் விளைவுகளாகவே விளங்கிக்கொள்ளப்படல் வேண்டும்.

அரசின் ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் சமூகங்களில் இருந்து கிளம்பும் தேசியவாதம் தீங்கற்றது என்றோ, அல்லது இன தேசியவாதமானது அதனை முன்னெடுக்கும் தரப்புக்கள் மற்றும் அமைப்புகளின் நிலைப்பாடுகளைப் பொறுத்து வெவ்வேறு வடிவங்களையும் பரிமாணங்களையும் எடுக்கிறது என்றோ தேசியவாதிகள் வாதிடலாம். இருப்பினும், ‘நிஜமான’ அல்லது கற்பிதமான வரலாறுகளின் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட சமூகம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட நிலத்தினைத் தனக்குச் சொந்தமானது என்றோ, அல்லது மற்றவர்களை விட அந்த நிலத்தின் மீது தான் உயர்ந்த உரிமைகளைக் கொண்டுள்ளேன் என்றோ முன்வைக்கும் பிராந்திய தர்க்கமும் (Territorial logic), ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் அல்லது தேசத்தின் தாயகம் என்று மறுபெயரிடுவது போன்ற செயன்முறைகளும், பாகுபாட்டினையும், புறமொதுக்கல்களையும் உற்பத்தி செய்கின்றன என்பதனையும், அவை அடையாள/ கருத்தியல் ரீதியான (Symbolic/Discursive) வன்முறையின் வடிவங்களாக அமைகின்றன என்பதனையும் தெளிவாகச் சுட்டிக்காட்டுவது மிகவும் அவசியம். இவ்வாறான முன்வைப்புக்களும், செயன்முறைகளும் ஒரு இனப்படுகொலைக் கருத்தியலை நிறுவனமயமாக்குவதற்கும், அரசியலமைப்பினுள் புகுத்துவதற்குமான‌ முயற்சிகளாகவே பார்க்கப்பட வேண்டும். இந்த முயற்சிகள் உடனடியாகவே வன்முறை எதனையும் உருவாக்காது போகலாம்; ஆனால் அவை எப்போதும் வன்முறையைத் தமது வயிற்றுனுள் கருவாகச் சுமந்து நிற்கின்றன என்பதனை நாம் விளங்குவது அவசியம். அந்தக் கரு எப்போதும் வன்முறையாக வெடித்து வெளியில் வரலாம்.

உதாரணமாக, 1976 இல் வட்டுக்கோட்டைத் தீர்மானம் முன்வைக்கப்பட்ட போது, அதனை உருவாக்கியவர்கள் 14 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு தமிழ் தேசியவாத நிலைப்பாட்டினை உடைய‌ ஆயுதப் போராட்ட இயக்கத்தின் தலைமையில் முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பு (Ethnic cleansing) நடக்கும் என்று நினைத்திருக்க மாட்டார்கள். நிலப்பரப்பு குறித்த ஒரு இனப் படிநிலை அடிப்படையிலான (Hierarchical) கற்பிதம் இயல்பாக்கப்பட்டு, நிறுவனமயமாக்கப்படும்போது, வன்முறை என்பது எப்போதும் சாத்தியமான ஒன்றாகவே மாறுகிறது; அது பிறப்புக்காகக் காத்திருக்கும் ஒரு பூதம் போன்றதாகும்.

முஸ்லிம்களும் மலையகத் தமிழர்களும்

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் ஐம்பதாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில், ஒரு முக்கிய தமிழ் தேசியத் தலைவர், இத்தீர்மானத்தை ஆதரிக்காததற்காக முஸ்லிம்களையும் அவர்களின் அரசியல் தலைவர்களையும் விமர்சித்துப் பேசினார் (1976 இல் எம்.எச்.எம். அஷ்ரப் இத்தீர்மானத்தின் முக்கிய ஆதரவாளராக இருந்தார் என்பதும், 1977 பொதுத் தேர்தலின் போது அதன் அடிப்படையிலேயே பிரச்சாரம் செய்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது). தமிழர்களை மட்டுமே மையமாகக் கொண்ட இந்தத் தீர்மானத்தின் பிறரை விலக்கி வைக்கும் (Exclusivist) போக்கைப் பற்றியோ அல்லது தீர்மானம் எவ்வாறு முஸ்லிம்களை அந்நியப்படுத்தியிருக்கக்கூடும் என்பது குறித்தோ சுயபரிசீலனை செய்வதற்குப் பதிலாக, வடக்கு – கிழக்கில் வாழும் ஒரு சிறுபான்மைச் சமூகம் (முஸ்லிம்கள்), வடக்கு – கிழக்கு என்பது தமிழ் தேசத்தின் தாயகம் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்தப் பேச்சாளர் எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது. இந்தத் தீவு தங்களுக்குத்தான் சொந்தமானது என்ற சிங்கள – பௌத்தத் தேசியவாதிகளின் தேசக் கட்டமைப்பை அனைத்துச் சிறுபான்மையினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆதிக்கம் மிக்க சிங்கள – பௌத்தப் பார்வையில் இருந்து, இந்தத் தமிழ்த் தேசிய‌ எதிர்பார்ப்பு எவ்வாறு வேறுபட்டது என்ற கேள்வியினை எழுப்புவது அவசியம்.

இத்தீர்மானத்தின் நிலப்பரப்பு சார் அரசியற் பார்வையினால், வடக்கு – கிழக்குக்கு வெளியே வாழும் மலையகத் தமிழர்கள் போன்ற தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுத் தீர்வுகாண முடியாது. மலையகத் தமிழர்கள் தற்போது வாழும் மற்றும் வேலை செய்யும் இடங்களிலேயே அவர்களுக்கான ஒரு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதனை நோக்கி அழுத்தம் கொடுப்பதற்குப் பதிலாக, எதிர்காலத் தமிழீழ அரசுக்கு இடம்பெயர்ந்து வருமாறு இத்தீர்மானம் அவர்களை அழைக்கிறது. மலையகத் தமிழர்கள் தங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கிய – அது எவ்வளவுதான் சொற்பமானதாக இருந்தாலும் – மத்திய மலையகத்தின் தோட்டப் பொருளாதாரத்துடனான தங்களது பிணைப்பைத் துண்டித்துக்கொண்டு, வடக்கு – கிழக்குக்கு இடம்பெயர்வது பொருளாதார ரீதியில் சாத்தியமான ஒன்றாக இருந்திருக்குமா?

சுருக்கமாகக் கூறின், வட்டுக்கோட்டைத் தீர்மானமும், தேசம், பிராந்தியம் மற்றும் தேசத்திற்கும் அரசுக்கும் இடையிலான உறவு குறித்து அது கொண்டுள்ள அனுமானங்களும் ஐரோப்பிய நவீனத்துவத்தை பிரதிபலிக்கும் ஓர் அரசியல் தர்க்கத்தினையே வெளிப்படுத்துகின்றன‌. உலகெங்கிலும் இரத்தக் களரியை ஏற்படுத்திய ஒரு தேச – அரசு (Nation-state) மாதிரியின் தெளிவானதொரு நகலாகவே இத்தீர்மானம் அமைந்துள்ளது. இது தமிழ்ச் சூழலிலே மாத்திரமே அவதானிக்கப்படும் ஒரு கருத்தியல் பிரச்சினை அல்ல என்பதனையும் நாம் புரிந்துகொள்வது அவசியம். சுயநிர்ணய உரிமை குறித்துப் பேசும் உலகெங்கிலுமுள்ள தாராளவாத, இடதுசாரி மற்றும் காலனித்துவ எதிர்ப்புச் சிந்தனையாளர்களால் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களிலிருந்தே இவ்வாறான புறமொதுக்கும் தேசியவாதக் கருத்தியல் இயல்பாக்கப்பட்டுள்ளதுடன், விடுதலைக்கான வழியாகவும் முன்னிறுத்தப்படுகின்றது என்ற கசப்பான உண்மையினையும் நாம் இங்கு ஏற்றுக்கொள்ள வேண்டும். இத்தகையதொரு மாதிரியை ‘விடுதலைக்கான ஒரு பார்வை’ என்று அழைப்பது முரண்நகையானது மட்டுமல்ல, ஆழமானதொரு துயரமுமாகும்.

ஒரு புதிய சிந்தனைக்கான‌ தேவை

தமிழ்த் தேசியவாதம் குறித்து விமர்சனப்பூர்வமாக எழுதுவது, ஒருவரை யாழ்ப்பாணத்திலும் சரி சமூக ஊடகங்களிலும் சரி ஆபத்தான நிலைக்குள் தள்ளிவிடக்கூடும். தமிழ்த் தேசியவாதம் தொடர்ந்து தமிழ் மக்களிடமிருந்து முழுமையான விசுவாசத்தைக் கோரி நிற்கிறது. அதனை விமர்சிப்பவர்கள் அரச ஆதரவாளர்கள், தாராளவாதிகள், ஒத்தோடிகள் மற்றும் துரோகிகள் என்று உடனடியாக‌ முத்திரை குத்தப்படுகிறார்கள். இருப்பினும், ஒருவர் இதற்கு அஞ்ச வேண்டியதில்லை. அச்சம் என்பது நம்மை உரக்கக் கற்பனை செய்வதிலிருந்து தடுக்கிறது. பலர் இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைத் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் ஒரு முக்கியமான/ முற்போக்கான‌ மைல்கல் என்று மகிமைப்படுத்தினாலும், அதிலிருந்து வெளிப்படும் அரசியற் “பார்வையை” மீண்டும் உறுதிப்படுத்துமாறு தமிழர்களுக்கு அழைப்பு விடுத்தாலும், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பின்னணியில் உள்ள, பிறரை விலக்கி வைக்கும் (Exclusivist) தமிழ் தேசியவாதத்தின் பார்வையை நாம் தட்டிக்கேட்டே ஆக வேண்டும்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைத் தொடர்ந்து (அதற்கு முன்னரும் கூட), இன – தேசியவாதக் கோட்பாடுகளால் தூண்டப்பட்ட பல பேரிடர்கள் இலங்கைத் தீவிலே நிகழ்ந்தன. முப்பது ஆண்டுகால உள்நாட்டுப் போர் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களின் மீதான ஒரு இனஅழிப்புடன் முடிவுக்கு வந்தது. இந்த நீண்ட‌ போரின் போது, வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் திட்டமிட்ட முறையில் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டதையும் காண முடிந்தது. இதில் முதலாவது பேரிடரானது (முள்ளிவாய்க்கால்), சிங்கள – பௌத்த தேசியவாத வன்முறையின் ஒரு வெளிப்பாடாகும்; வட்டுக்கோட்டைத் தீர்மானமும் அதன் பின்னரான அதன் வடிவங்களும் (திம்புக் கோட்பாடு, பொங்கு தமிழ்ப் பிரகடனம், எழுக தமிழ்ப் பிரகடனம், திருகோணமலைப் பிரகடனம்) இந்த சிங்கள பௌத்த‌ ஒடுக்குமுறைக்கு எதிராகவே பதிலளிக்க முயன்றன.

அதேவேளையில், இரண்டாவது பேரிடரானது (முஸ்லிம்களின் வெளியேற்றம்), வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பின்னணியில் உள்ள புறமொதுக்கும் தேசியவாதச் சிந்தனையின் தாக்கத்தினால் ஏற்பட்ட‌ விளைவாகவே பார்க்கப்பட வேண்டும். முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் அரசுடன் இணைந்து தமிழ் மக்களின் மீது கிழக்கிலே வன்முறையினைப் பிரயோகித்த ஒரு சூழலிலே, அதற்குப் பதிலடியாக வடக்கில் முஸ்லிம் மக்களின் இனச் சுத்திகரிப்பு நிகழ்ந்தது என சிலர் வாதிடுவர். தமிழ் ஆயுதப் போராட்ட இயக்கங்ளும் அரசுடன் சேர்ந்து தமிழ் மக்கள் மீது வன்முறையில் ஈடுப்பட்டனர். ஆனால் அதற்காக ஒட்டுமொத்தத் தமிழர்களும் ஒரு இனமாகத் தண்டிக்கப்படவில்லை. வடக்கு முஸ்லிம் மக்கள் மீது மாத்திரம் இன அடிப்படையிலான‌ வன்முறை  ஒட்டுமொத்த இனச்சுத்திகரிப்பாக வெளிப்பட்டமை, வடக்கின் நிலப்பரப்புத் தொடர்பிலே தமிழ்த் தேசியவாத அடிப்படையில் முன்வைக்கப்பட்ட ஒரு புறமொதுக்கும் பார்வையில் இருந்து கிளம்பியது என்பது இங்கு சுட்டிக்காட்டப்படல் வேண்டும்.

இந்த இரண்டு பேரிடர்களில் இருந்தும் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் ஏதேனும் இருக்குமாயின், அவற்றுள் முதன்மையானது, இலங்கை அரசை இன – தேசியவாதத்திலிருந்து முழுமையாக விடுவிப்பதும் (அல்லது அரசை சிங்கள – பௌத்த நீக்கத்துக்கு உட்படுத்துவது), அதே நேரத்தில் இன – தேசியவாதத்தை முற்றாக நிராகரிக்கும் ஒரு பார்வையின் ஊடாக தமிழர்களின் விடுதலையை மீளச்சிந்திப்பதுமாகும். ஒடுக்குபவனின் தேசியவாதமும், ஒடுக்கப்படுபவனின் தேசியவாதமும், நிலப்பரப்பு மற்றும் சமூகம் குறித்து ஒரே மாதிரியான‌ ‘இன அடிப்படையிலான தர்க்கத்தினால்’ (Ethnic logic) தான் இயக்கப்படுகின்றன என்பதை இந்த இரு பெரும் துயரங்களும் நமக்கு மிக அழுத்தமாக உணர்த்துகின்றன.

இலங்கையில் தமிழர்களும் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இன்றும் முற்றுகையின் கீழேயேயும் ஆக்கிரமிப்பின் கீழேயுமே உள்ளன. இவை பலத்த இராணுவமயமாக்கலுக்கு உள்ளாக்கப்பட்டு, தீவிரமான சிங்கள – பௌத்தமயமாக்கலுக்கு உட்படுத்தப்பட்டு வரும் பிராந்தியங்களாகும். தொல்பொருள் திணைக்களம், வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம், வனவளத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகாரசபை போன்ற தனது அரச நிறுவனங்களைக் கட்டவிழ்த்து விட்டு, இந்த இரு பிராந்தியங்களினதும் கலாச்சார மற்றும் மக்கள்தொகை (Demographic) கட்டமைப்பைச் சிதைப்பதற்கும் மாற்றுவதற்கும் அரசாங்கம் முயன்று வருகிறது. இப்பகுதிகளில் வாழும் இரு சமூகங்களும் திட்டமிட்ட வகையில் சிறுபான்மையாக்கப்படும் (Minoritisation) அச்சுறுத்தலைத் தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருகின்றனர். எனவே, இப்பிராந்தியத்திலிருந்து அரசாங்கத்திற்கு எதிராக ஓர் ஒருங்கிணைந்த கூட்டு எதிர்ப்பு என்பது அவசியமானதாகும். இருப்பினும், தமிழ் தேசியவாதமும், அதன் பிரகடனங்களான வட்டுக்கோட்டைத் தீர்மானம் மற்றும் திம்பு கோட்பாடுகள் (Thimpu Principles) போன்றவையும் அத்தகையதொரு கூட்டு எதிர்ப்பிற்கான அடிப்படையாக அமைய முடியாது. ஏனெனில், அவற்றினால் இனத்துவத்தினைக் கடந்து ஒரு பொதுவான அரசியல் பார்வையினை முன்வைக்க முடியாது.

முற்றுகை மற்றும் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகியிருக்கும் ஒரு பிராந்தியத்தின் மக்கள் என்ற ரீதியில் – வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களை இன, மத, கலாச்சார மற்றும் மொழி எல்லைகளைக் கடந்து ஒன்றுபடுத்தும் ஒரு தொலைநோக்குப் பார்வையே எமக்கு இப்போது தேவையாக இருக்கிறது. மஹ்மூத் மம்தானி மற்றும் நந்திதா சர்மா ஆகியோர் தங்களது எழுத்துக்களிலே குறிப்பிடுவது போல‌, நாம் ‘விடுதலை’ என்ற கருத்தாக்கத்தையே காலனித்துவ நீக்கத்திற்கு (Decolonise) உள்ளாக்க வேண்டும்; அத்துடன், ஐரோப்பிய நவீனத்துவத்தின் ஒரு பகுதியாக உருவெடுத்த கட்டமைப்புகளுக்கு வெளியேயிருந்து விடுதலையை மறுகற்பனை செய்ய வேண்டும்.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது தேசம் குறித்த ஒரு காலனித்துவ, ஐரோப்பிய மைய, பிறரை விலக்கி வைக்கும் மாதிரியையே நமக்கு வழங்குகிறது. இது விமோசனம் (Emancipation) என்ற போர்வையில் புதிய வன்முறைச் சுழற்சிகளை (உதாரணம்: வடக்கில் இருந்து முஸ்லிம் மக்களின் வெளியேற்றம்) உருவாக்கக் கூடியது. எனவே, நமது அரசியல் சிந்தனையின் மொழியை ‘தேசம்’ என்பதிலிருந்து ‘பிராந்தியம்’ (Region) என்பதாக மாற்ற நாம் எத்தனிக்க‌ வேண்டும்; ‘இனம்’ (Ethnicity) என்பதிலிருந்து நகர்ந்து, ஒரு புதிய அரசியல் சிந்தனை மற்றும் அரசியல் சமூகத்தை உருவாக்குவதற்கான அடிப்படையாக ‘வசிப்பிடம்’ (Residency) என்ற தர்க்கம் எமக்கு வழங்கக் கூடிய‌ சாத்தியக்கூறுகளை ஆராய்வதை நோக்கி நாம் நகர வேண்டும்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு மாறாக, ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் (ANC) ‘சுதந்திர சாசனத்தை’ (Freedom Charter) இங்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன். அந்த சாசனத்திலே, தென்னாப்பிரிக்கா என்பது அங்கு வாழும் அனைத்து மக்களுக்குமே சொந்தமான ஒரு நாடு என்று பிரகடனப்படுத்தப்பட்டது. அந்தச் சுதந்திர சாசனத்தில், ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது தேசத்தின் உறுப்பினர் என்ற அடையாளத்தைக் காட்டிலும், ‘வசிப்பிடம்’ (Residency) என்பதே நிறவெறிக்கு எதிரான (Anti-apartheid) இயக்கத்தின் புதிய எதிர்ப்பரசியல் சிந்தனையின் மையத் தர்க்கமாக மாறியது. நிறவெறிக்குப் பிந்தைய தென்னாபிரிக்காவிற்கான தனது பரந்த தொலைநோக்குப் பார்வையில், இனம்/ இனத்துவ‌/ மத/ மொழி ரீதியான பிராந்தியமயமாக்கல் என்ற ஐரோப்பிய – நவீன தேசியவாதத் தர்க்கத்திற்கும் அப்பால் ஆபிரிக்க தேசிய காங்கிரஸினால் மேவிச் சிந்திக்க‌ முடிந்தது. நிறவெறி ஆட்சிக்கு ஒரு தீர்வாகப் ‘பல்லின ஜனநாயகத்தை’ (ஒரு ‘கறுப்பின தேச‍ அரசாக’ அதனைக் குறுக்காது), அவர்களால் முன்வைக்க முடிந்தது.

இத்தகையதொரு பார்வையே எமக்கும் வடக்கு – கிழக்கில் இப்போது தேவையாக இருக்கிறது. அது இப்பிராந்தியத்தின் கடந்தகாலம் குறித்த எந்தவொரு ‘நிஜமான’ அல்லது கற்பிதமான வரலாறுகளின் அடிப்படையிலும் அமைந்திருக்க வேண்டியதில்லை. அது சமூகங்கள் மற்றும் இனங்களின் படிவரிசைப்படுத்தல்களையும், நிலத்துடனான அவற்றின் படிநிலையாகப்பட்ட‌ உறவையும் நிராகரிக்க வேண்டும். இப்பிராந்தியத்தில் வாழும் மக்களின் நல்வாழ்வுக்கும், அவர்கள் சமத்துவமான சமூகங்களாகவும், மக்களாகவும் சகவாழ்வு வாழ்வதற்கும் முன்னுரிமை அளிக்கும் ஒரு தொலைநோக்குப் பார்வையே இன்று எமக்குத் தேவைப்படுகிறது. அத்தகையதொரு பார்வையானது வளங்களின் மறுபகிர்வு, சமூக நீதி, பாலினம் சார் நீதி மற்றும் சாதிய ஒழிப்பு ஆகியவற்றை உறுதிசெய்யும் ஒரு சமூக – பொருளாதாரத் திட்டத்தின் மூலம் பலப்படுத்தப்பட வேண்டும்.

மகேந்திரன் திருவரங்கன்
கட்டுரையாளர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆங்கிலத் துறையிலே ஒரு சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றகிறார்