Photo, GLOBALPRESSJOURNAL
இன்றைய அரசாங்கம் முதலாளிமார் சம்மேளனத்தினரிடமும் தோட்ட முகாமையாளர் சங்கத்துடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதன் விளைவாக தோட்டத் தொழிலாளருக்கு 200 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க தோட்டக் கம்பனிகள் முன்வந்துள்ளன. மறுபுறம் அரசாங்கம் நாளொன்றிற்கு 200 ரூபா சம்பள அதிகரிப்பை அரசாங்க திறைசேரியிலிருந்து வழங்க முன்வந்துள்ளது. இதன்படி மொத்தமாக ஜனவரி மாதம் முதல் தோட்டத் தொழிலாளர்கள் 400 ரூபா சம்பள அதிகரிப்புடன் நாளொன்றிற்கு 1750 ரூபாவினை ஒரு நாள் சம்பளம் பெரும் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். இன்றைய பொருளாதார நெருக்கடியினைக் கவனத்திற் கொள்ளும்போது இச்சம்பள அதிகரிப்பு ஒரளவு ஆறுதலை தோட்டத் தொழிலாளர்களுக்கு தரும் என்பதில் ஐயமில்லை. அவ்வகையில் இச்சம்பள அதிகரிப்பு வரவேற்கத் தக்கதாகும்.
அரசாங்கம் வழங்க முன்வந்துள்ள 200 ரூபாவை எப்படி அரச நிதியிலிருந்து தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க முடியும் என எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதுடன் எதிர்ப்புகள் கிளம்புகையில் பின்னர் அதனை அவர்கள் வாபஸ் வாங்கிக் கொண்டனர். முதலாளித்துவ கட்டமைப்பின் கீழ் பாரிய தொழிற்றுறை அல்லது பாரிய கம்பனி ஒன்று வங்குரோத்து நிலையை அடையும் போது அரசாங்கம் அத்தொழிற்றுறையை அல்லது கம்பனியைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுவது வழக்கம். இது முதலாளித்து கட்டமைப்பின் கீழ் நிலவும் சாதாரண நிகழ்வு. ஆனால், தேயிலைத் தோட்டக் கம்பனிகள் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளதா என்பது கேள்விக்குரியதாகும். தேயிலைத் தோட்டக் கம்பனிகள், தமது உற்பத்தி செலவு அதிகம். அதனால் சம்பளத்தை அதிகரிக்க முடியாது எனக் கூருகின்றதே தவிர தமது கம்பனிகள் லாபம் பெறாது நட்டமடைகின்றது, அதனால் தோட்டங்களை மீண்டும் நாங்கள் அரசுக்கே வழங்குகின்றோம் எனக் கூறவில்லை. மாறாக கம்பனிக்கு மாற்றிக் கொண்டு தோட்டங்களை நடாத்திச் செல்கின்றனர். ஆரம்பத்தில் இருந்த கம்பனிகளை விட ‘தம்ரோ’, ‘எல்ஓஎல்சி’, ‘ஆர்பிக்கோ’ முதலிய புதிய கம்பனிகள் தற்போது தோட்டங்களை நடாத்தி வருகின்றன. சில கம்பனிகள் உப கம்பனிகளையும் உருவாக்கிக் கொண்டுள்ளன. தோட்டங்கள் நட்டத்தில் செல்கின்றதெனில் ஏன் நட்டமடையும் தோட்டங்களை புதிய கம்பனிகள் எடுத்து நடாத்த முன் வரவேண்டும். அதனை ஏன் அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை என்ற கேள்வி எழுகின்றது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு தோட்டக் கம்பனிகள் 400 ரூபா வழங்காவிட்டால் தோட்டங்களை மீளப்பெற்றுக் கொள்வோம் என ஏன் அரசாங்கத்தால் கூறமுடியாதுள்ளது. இதற்கு முன்னர் தோட்ட கம்பனிகள் சம்பளத்தை அதிகரிக்க முடியாது எனக் கூறியவேளை அதிலும் தோட்டங்கள் முழுமையாக தோட்ட முதலாளிக்குச் சொந்தமாக இருந்த பல சந்தரப்பங்களில் நாட்டில் நிலவும் வாழ்கைச் செலவினைக் கருத்திற் கொண்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு பாதீடு (வரவு செலவு) அலவன்ஸ் (படி கொடுப்பனவு) வழங்கும்படி சட்டத்தை அறிமுகம் செய்வதனூடாக சம்பளத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. சட்டத்தை புறக்கணித்தால் வழக்கு தாக்கல் செய்யும் வாய்ப்பினை அளித்திருந்தது. அதன்படி பார்க்கும்போது,
- 1967ஆம் பொருளாதாரா நெருக்கடி நிலை ஏற்பட்ட வேளை தொழிற்சங்கங்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தவிர்ந்த ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைமையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் 17.50 பஞ்சப்படி சம்பள உயர்வினைக் கோரின. அப்போராட்டத்தை முன்னெடுக்கையில் அன்றும் தோட்டக் கம்பனிகள் சம்பள உயர்வை அதிகரிக்க முடியாது எனக் கூறின. ஆனால், பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இடைகால மதிப்பீட்டிறக்கம் அலவன்ஸ் சட்டத்தை (Interim Devaluation allowances of Employees Act. No.40 of 1968) அறிமுகப்படுத்தி தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றிற்கு .30 சதம் அல்லது மாதத்திற்கு ரூபா 7.50 சம்பள அதிகரிப்பு வழங்க தோட்டக் கம்பனிகளை நிர்ப்பந்தித்தது. வழங்க மறுத்தால் தொழிற் திணைக்களத்திற்கு முறையீடு செய்து பெற வாய்ப்பளித்தது.
- அதேபோல் 1977ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது தோட்டத் தொழிலாளர்களுக்கு 2.50 சதம் சம்பள அதிகரிப்பை அல்லது மாதம் 55 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கும் வகையில் (Supplementry Allowance for workers Act no. 65 of 1979) என்ற சட்டத்தை வெளிக் கொணரந்தது. இதன் படி தேயிலைத் தோட்ட ஆண் தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பள அலவன்சாக (படிக் கொடையாக) 18 சதத்தையும் பெண்களுக்கும், பிள்ளைத் தொழிலாளர்களுக்கும் 12 சதத்தை வழங்கும் படி செய்தது.
- இதேபோல் 1987ஆம் ஆண்டு பாதீடு (வரவு செலவு) (Budgetary relief Allowance of workers (no.2) Act no 18 o1987) நிவாரணச் சட்டத்தின் கீழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு வேலை செய்த நாட்களுக்கான சம்பளத்துடன் 6% கொடுப்பனவை அல்லது மாதத்திற்கு 15 ரூபாவை அலவன்சாக வழங்கும்படி செய்தது. எனவே, அதிகரிக்கும் வாழ்க்கை செலவினைக் கருத்திற்கொண்டு ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் அலவன்ஸ் (படி கொடுப்பனவு) வழங்கும் படி தோட்டக் கம்பனிகளை சட்டங்கள் கொண்டு வருவதன் மூலம் அரசாங்கங்கள் நிர்பந்தித்து வந்துள்ளன.
ஆனால், இன்றைய அரசாங்கம் அவ்வழக்கத்தை கைவிட்டு திறை சேரியிலிருந்து நாளொன்றிற்கு 200 ரூபா சம்பள அதிகரிப்பாக வழங்கியுள்ளது. இக்கொடுப்பனவினை அரசாங்கம் முதலாளிமார் சம்மேளனத்துடன் நேரடியாக மேற்கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம் வழங்கியுள்ளது. இவ்வுடன்படிக்கை தோட்டத் தொழிற்சங்களை இணைத்துக் கொள்ளாது செய்துள்ளது. இதுவரை கிடைக்கப் பெறும் தகவலின் படி மூன்று வருடத்திற்கு இவ்வுடன்படிக்கை நடைமுறையில் இருக்கும் எனக் கூறப்படுகின்றது. இரண்டாவது, இவ்வுடன்படிக்கையில் கையொப்பம் இட்டுள்ள தரப்பினர்களான அரசாங்கமோ அல்லது முதலாளிமார் சம்மேளனமோ உடனபடிக்கையில் கையொப்பம் இட்டு இணங்கியதன்படி இணங்கியவற்றினை நடைமுறைப்படுத்தாமலும் இருக்க முடியும் எனக் கூறப்படுகின்றது. மேலும், இப்புரிந்துணர்வு உடன்படிக்கை சட்டமாக்கப்படவில்லை. மூன்றாவது, தொழிலாளர்கள் சேவையிலிருந்து ஓய்வு பெறும் போது வழங்கப்படும் ஓய்வூதிய கொடுப்பனவினை கணக்கிடும் போது குறிப்பிட்ட தொழிலாளி ஒருவர் வருடத்தில் கட்டாயம் 180 நாட்கள் வேலை செய்திருந்தால்தான் ஓய்வூதியம் பெற தகுதியுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.
மேற்கூறப்பட்டவைகளைக் கருத்திற் கொள்ளும் போது இன்றைய அரசாங்கம் தொழிலாளர்களுக்கு 400 ரூபா சம்பள அதிகரிப்பினைப் பெற்றுக் கொடுத்துள்ள போதிலும் முதலாளிமார் சங்கத்துடன் செய்துள்ள உடன்படிக்கையில் தொழிலாளர் சார்பாக அரசாங்கமே முதலாளிமார் சங்கத்துடன் கைச்சாத்திட்டுள்ளது. இலங்கை தொழிலாளர்களது வரலாற்றில் இதுவே முதற் சம்பவமாகும். வரலாறு முழுவதும் தொழிற் சங்கங்களுக்கும் தொழில் தருனர்களுக்கும் இடையில் நடைபெறும் ஒப்பந்தங்களின் போது அரசாங்கம் மூன்றாம் தரப்பினர் பாத்திரத்தை வகிப்பதுடன் தொழிற்சங்கங்களே ஒப்பந்தங்களில் தொழிலாளர்கள் சார்பாக கைச்சாத்திடும்.ஒப்பந்தங்களில் மூன்றாம் தரப்பினராகக் கலந்துக்கொள்ளும் அரசாங்கம் அதனை வர்த்தமானியில் பிரசுரிக்கும். இதுவரை இப்புரிந்துணர்வு உடன்படிக்கை அரச வர்தமானியில் பிரசுரிக்கப்பட வில்லை. மேலும் இவ்வொப்பந்தத்தின் படி எத்தனை வருடங்களுக்கு அரசாங்கம் 200 ரூபா வழங்கும் என்பது தெரியவில்லை. கிடைக்கப் பெறும் தகவல்களின் படி மூன்று வருடங்களுக்கு செல்லுபடியாகுமெனில் மூன்று வருடம் வரை தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வைக் கோர முடியாது.
இதன்படி பார்க்கும்போது தற்போது கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த பின்வரும் விடயங்களை நீர்த்துப் போகச் செய்துள்ளது.
- தொழிற்சங்கங்கள் போராடிப் (தொழிலாளர்கள்) பெற்றிருந்த கூட்டு ஒப்பந்த முறைமையை இல்லாதொழித்துள்ளது.
- அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவிற்கேற்ப இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சம்பளப் பேரம் பேசலுக்கான வாய்ப்பினை இல்லாதொழித்துள்ளது.
- முதலாளிமார் சம்மேளனத்திற்கு விரும்பின் ஒப்பந்தத்தை மீறக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது
- தோட்டக் கம்பனிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மீறினால் வழக்கு தாக்கல் செய்யக் கூடிய வாய்ப்பினை இல்லாதொழித்துள்ளது.
- ஏலவே பலவீனமடைந்துள்ள தொழிற் சங்கங்களை மேலும் பலவீனமுறுவதற்கு வாய்ப்பேற்படுத்தியுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள வரலாற்றை பொருத்த மட்டில் தோட்டத் தொழிற்றுறை ஆரம்பித்த நாள் முதலே நாட்டின் ஏனைய தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் குறைவான சம்பளமே வழங்கப்பட்டு வந்துள்ளதுடன் இன்று வரையும் அவ்வாறே தொடர்கின்றது. தற்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு 1750 ரூபா வழங்குகையில் சம்பள நிர்ணய சபை 1850 ரூபா வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. சம்பள நிர்ணய சபையின் படி விதந்துரைப்பின் படி 100 ரூபா குறைவாகும். மறுபுறம் நாட்டின் சாதாரண நாட் கூலி தொழிலாளி ஒருவர் குறைந்தபட்சம் ரூபா 3500 சம்பளமாகப் பெறுகிறார். நாட்டின் வாழ்க்கை செலவே சம்பளத்தின் உண்மையான பெறுமதியை நிர்ணயிக்கின்றது. அவ்வகையில் பார்க்கும் போது இன்று தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளம் அவர்களது குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு போதுமானதாக இல்லையென்றே கூறவேண்டும்.
இலங்கையின் தொழிலாளர்கள் மட்டுமல்லாது உலகின் பல நாடுகளின் தொழிலாளர்கள் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கை செலவினை சமாளிப்பதற்கு குறைந்தபட்ச சம்பளம் (Minimum Wage) போதாது, எனவே, வாழ்வதற்கான சம்பளத்தை வழங்குகள் என்ற கோரிக்கையை 2003ஆம் ஆண்டிற்குப் பின்னர் வலுவாக முன்வைத்து வருகின்றனர். வாழ்வதற்கான சம்பளம் என்ற கோரிக்கை 2003ஆம் ஆண்டிற்குப் பின்னர் வலுவடைந்தபோதிலும் இக்கோரிக்கையானது 1800 இல் அமெரிக்க தொழிற்சங்க சம்மேளத்தினால் முன்வைக்கப்பட்டதொன்றாகும். வாழ்வதற்கான சம்பள கோரிக்கை எதன் அடிப்படையில் முன்வைக்கப்படுகின்றதெனில் ஒரு தொழிலாளி வேலை செய்யும் போது அவரது குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்துக்கொள்ளும் வகையில் அதாவது வீடு, உணவு, வைத்தியவசதி, பிள்ளை பராமரிப்பு, போக்குவரத்து செலவு என்பனவற்றினை பெற்றுக்கொள்ளும் வகையில் ஒருவரது சம்பளம் இருக்கவேண்டும் எனக் கூறப்படுகின்றது. இப்பின்புலத்துடன் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு செல்நெறிகையை நோக்குவோமாயின் தற்போதைய சம்பள அதிகரிப்பு மற்றும் அதற்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து அதிகரிப்புகளும் அவர்களது வாழ்க்கைச செலவினை பூர்த்தி செய்வதாக இருக்கவில்லை. எல்லா சம்பள உயர்வுகளும் வாழ்க்கைச் செலவிற்கு ஈடுகொடுப்பதாக அமையவில்லை.
2005ஆம் ஆண்டு முதல் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகம் ஒரு சில தொழிற்சங்கங்களுடன் இணைந்து தோட்டத் தொழிலாளருக்கு வாழ்வதற்கான சம்பளக் கோரிக்கையை முன்வைத்த போதிலும் பாரிய தொழிற்சங்கங்கள் இக்கோரிக்கையை முன்வைக்கவில்லை. மேலும், வாழ்வதற்கான சம்பளம் தொடர்பில் 2005ஆம் ஆண்டு முதல் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகம் வாழ்வதற்கான சம்பளம் தொடர்பாக ஆய்வினை மறைந்த பேராசிரியர் எம். சின்னத்தம்பி மற்றும் பேராசியர் எஸ். விஜேசந்திரன் அவர்களைக் கொண்டு ஆய்வு நடாத்தி வந்ததுடன் ஆய்வின் வெளிப்பாடுகளை தொழிற்சங்கங்களுக்கு வழங்கி வந்தது. கடந்த 2024ஆம் ஆண்டு பேராசிரியர் எஸ். விஜேசந்திரனைக் கொண்டு ஆய்வினை மேற்கொண்டது. அவ்வாய்வின் படி 2024ஆம் ஆண்டு 25 நாட்கள் வேலை வழங்கினால் ரூபா 2321.04 சதம் வழங்க வேண்டும் என்றும், அதே 21 நாட்கள் வேலை வழங்கினால் 2763.14 சதம் வழங்கப்படவேண்டும். இத்தொகை 2026ஆம் ஆண்டில் அதனை விட அதிகமாக இருக்கலாம் .
இவற்றினைக் கருத்திற்கொள்ளும் போது எதிர்வரும் காலத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்வதற்கான சம்பளம் வழங்குக என்ற கோரிக்கையை முன்வைத்து அதனைப் வென்றுக் கொள்ளாவிடின் தொடர்ந்தும் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வதற்கான சம்பளத்தை பெறாத, தொடர்ந்தும் வறுமையில் வாடும் தொழிலாளர்களாக இருக்க நேரிடும். தோட்டக் கம்பனிகள் நிரந்தரத் தொழிலாளர்களைக் குறைக்கும் அதேவேளை மறுபுறம் நாட் கூலிகளை அதிகரித்துச் செல்கின்றது. தற்போது சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்களே நிரந்தரத் தொழிலாளர்களாக இருக்கின்றனர். எதிர்வரும் வருடங்களில் இது மென்மேலும் குறைந்துக்கொண்டே செல்லலாம். அதேவேளை, நிரந்தமற்றத் தொழிலாளர்களுக்கும் ஊழியர் சேமலாப நிதி, உள்ளிட்ட அனைத்து நியதிக் கொடுப்பனவுகளை வழங்க வேண்டும் எனக் கோரவேண்டும். எனவே, தொழிற்சங்கங்கள் தமது உபாயத்தை மாற்றி வாழ்வதற்கான சம்பளக் கோரிக்கையை முன்வைத்து தோட்டத் தொழிலாளர்களை அணிதிரட்ட வேண்டும்.
பெ.முத்துலிங்கம்