Photo, NBC NEWS
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தின் முதலாவது வருடத்தில் முன்னெடுத்த கொள்கைகளும் நடவடிக்கைகளும் தேசிய மற்றும் சர்வதேசிய நடைமுறைகள் மற்றும் கடப்பாடுகள் மீதான அவரின் அலட்சியத்தை தெளிவாக காண்பித்தன. அவர் தொடக்கிவைத்த செயன்முறைகளும் கொள்கைகளும் அமெரிக்காவை மாத்திரமல்ல, ஏனைய நாடுகளையும் பல தசாப்தங்கள் பின்னோக்கித் தள்ளிவிடும் ஆபத்தை தோற்றுவித்திருக்கின்றன. உலக ஒழுங்கு ஒன்று தலைகீழாக திருப்பப்படுகின்றது.
கடந்த மாத முற்பகுதியில் தென்னமெரிக்க நாடான வெனிசூலாவுக்குள் துருப்புக்களை அனுப்பி ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் அமெரிக்காவுக்கு கடத்திச் சென்றது சர்வதேச சட்டங்களை மீறிய செயல் என்ற சர்வதேச கண்டனங்களுக்கு நியூயோர்க் ரைம்ஸ் நேர்காணல் ஒன்றில் பதிலளித்த ட்ரம்ப், சர்வதேச சட்டம் தனக்குத் தேவையில்லை என்றும் எந்தவொரு சர்வதேச சட்டத்துக்கும் நியமங்களுக்கும் கட்டுப்பட்டுச் செயற்பட வேண்டியது அவசியம் என்று தான் உணரவில்லை என்றும் கூறினார்.
இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்காவும் சேர்ந்து உருவாக்கிய உலக ஒழுங்கின் நியமங்கள் தனது நாட்டுக்கு அநாவசியமான சுமையாக இருக்கின்றன என்றும் அவர் கூறினார். உண்மையில் சுமை என்று அவர் கூறியது ஐக்கிய நாடுகளை சபையையேயாகும்.
இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் போரின் கொடுமைகளில் இருந்து எதிர்காலச் சந்ததிகளை பாதுகாத்து மனித உரிமைகள் மீதான நம்பிக்கையை மீள உறுதிப்படுத்தவும் உடன்படிக்கைகள் மற்றும் சர்வதேச சட்டங்களில் இருந்து எழுகின்ற கடப்பாடுகள் மீதான மதிப்பையும் நீதியையும் பேணக்கூடிய ஒழுங்கு ஒன்றை நிறுவுவதற்காகவே 1945 ஒக்டோபரில் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. காலனித்துவ ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு சுதந்திமான அரசுகளாக வெளிக்கிளம்பிய அரசுகளுக்கு உதவுவதும் அதன் நோக்கங்களில் ஒன்றாகும்.
ஆனால், இப்போது ஐக்கிய நாடுகளின் அதிகாரம் போக்கிரித்தனமான தலைவர்களினாலும் அரசுகளினாலும் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறது. ஏற்கனவே, தனது முதலாவது பதவிக் காலத்தில் (2016 – 2020) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் உலக சுகாதார நிறுவனம் போன்ற பல்வேறு சர்வதேச நிறுவனங்களை அவமதித்த ட்ரம்ப் ‘அமெரிக்காவுக்கு அநாவசியமான ஒரு சுமை’ என்று தான் கருதும் ஐக்கிய நாடுகளை பலவீனப்படுத்தும் நோக்கிலான செயற்பாடுகளில் வெளிப்படையாகவே இறங்கியிருக்கிறார்.
நாடுகளின் வளங்களைச் சுரண்டுவதற்காக தான் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கின்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குத் தடையாக எந்த இடையூறும் வந்துவிடாதிருப்பதை உறுதிசெய்வதற்காகவே ட்ரம்ப் ஐக்கிய நாடுகளை மலினப்படுத்தும் வியூகங்களை முன்னெடுக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.
டென்மார்க்கிற்கு சொந்தமான சுயாட்சிப் பிராந்தியமான கிறீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைப்பதற்கான அவரது முயற்சிகள் காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் ஏற்பட்ட கடுமையான முரண்பாடுகளுக்கு மத்தியில் உலக பொருளாதார அமைப்பின் வருடாந்த உச்சி மகாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகருக்கு சென்ற ட்ரம்ப் அங்கு ‘சமாதான சபையை’ (Board of Peace) இம்மாதம் 22ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்து அதன் சாசனத்தையும் வெளியிட்டார்.
மத்திய கிழக்கில் காசா போரை முடிவுக்குக் கொண்டுவந்து அந்தப் பள்ளத்தாக்கை மீளக் கட்டியெழுப்புவதற்கெனக் கூறிக்கொண்டு தனது திட்டத்தை கடந்த செப்டெம்பரில் அறிவித்த வேளையில் சமாதான சபையை அமைக்கும் தனது யோசனையை முதன்முதலாக முன்வைத்த அவர் பிறகு அந்தச் சபையின் பணி காசாவுக்கு அப்பால் உலகின் ஏனைய மோதல்களுக்கும் முடிவைக்காணும் நோக்கத்துக்காக விரிவுபடுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார். தனது சமாதான சபையில் இணைந்து கொள்ளுமாறு உலக நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி அழைப்பு விடுத்த அதேவேளை, அவரின் திட்டம் ஐக்கிய நாடுகளின் பணிகளுக்கு பாதகமாக அமையும் என்று இராஜதந்திரிகள் சமூகம் எச்சரிக்கை செய்தது.
டாவோஸ் நகரில் சமாதான சபையின் சாசனத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றிய ட்ரம்ப் ஐக்கிய நாடுகளை மலினப்படுத்தும் தனது நோக்கத்தை மறைக்கவில்லை. அங்குரார்பணக் கூட்டத்தில் அமெரிக்காவின் முக்கியமான பல நேசநாடுகள் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பங்குபற்றுவதை தவிர்த்த போதிலும், அவர், ஒவ்வொரு நாடும் சமாதான சபையில் அங்கம் வகிக்க விரும்புகின்றன என்றும் அது நாளடைவில் ஐக்கிய நாடுகளுக்கு போட்டியான அமைப்பாக மாறமுடியும் என்றும் கூறினார். “இது அமெரிக்காவுக்கு அல்ல, உலகத்துக்கே உரித்தான அமைப்பு. காசாவில் நாம் வெற்றிபெற்றால் ஏனைய விவகாரங்களுக்கும் இதை விரிவுபடுத்த முடியும் என்று நான் நினைக்கிறேன்.”
இதுவரையில் 59 நாடுகள் சாசனத்தை ஏற்றுக்கொண்டு சமாதான சபையில் இணைந்திருப்பதாக ட்ரம்ப் கூறியிருக்கின்ற போதிலும், அங்குரார்பண நிகழ்வில் 19 நாடுகளின் பிரதிநிதிகள் மாத்திரமே பங்கேற்றனர். இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளின் தலைவர்களுக்கும் அவர் அழைப்புவிடுத்திருந்தார். அவரின் அழைப்பை ஏற்றுக்கொண்டு நிகழ்வில் கலந்துகொண்ட நாடுகளில் துருக்கி, சவூதி அரேபியா, இஸ்ரேல், பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், அசர்பைஜான், பரகுவே மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. “நீங்கள் உலகில் மிகவும் பலம்பொருந்தியவர்கள்” என்று அந்த நாடுகளின் பிரதிநிதிகள் மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி கூறினார்.
போருக்குப் பின்னர் காசாவை மீளக்கட்டியெழுப்பும் பணிகளை கண்காணிப்பதற்காக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை 2025 நவம்பரில் நிறைவேற்றிய தீர்மானத்தின் (2803) மூலமாக சமாதான சபைக்கு அதிகாரமளித்தது. பதவிக்காலம் புதுப்பிக்கப்படாத பட்சத்தில் 2027 டிசம்பர் 31ஆம் திகதி வரை மாத்திரமே சமாதான சபை செயற்பட முடியும் என்று தெளிவான காலவரையறையை விதித்திருக்கும் அந்தத் தீர்மானம் சபையின் செயற்பாடுகள் குறித்து ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை பாதுகாப்புச் சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கேட்டிருக்கிறது.
சுயமாகவே பதவிக் காலத்தை நீடித்து சமாதான சபை தவறான ஒரு முன்மாதிரியாக அமைந்து விடாதிருப்பதை உறுதி செய்வதற்காகவே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், அந்தச் சபை நிரந்தரமான அமைப்பு என்று ட்ரம்ப் கூறுகிறார். “மோதல்களினால் பாதிக்கப்படுகின்ற அல்லது அச்சுறுத்தப்படுகின்ற உலகின் பாகங்களில் உறுதிப்பாட்டை மேம்படுத்துவதையும் சட்டபூர்வமான ஆட்சிமுறையை நிலை நிறுத்துவதையும் நிலைபேறான சமாதானத்தை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு ‘சர்வதேச அமைப்பு’ என்று சமாதான சபையை அதன் சாசனம் வர்ணிக்கிறது.
சபையில் நிரந்தர உறுப்புரிமையைப் பெறுவதற்கு நாடுகள் 100 கோடி அமெரிக்க டொலர்களை கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு உலக நாடுகளின் தலைவர்களையும் இராஜதந்திர சமூகத்தையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. கட்டணம் அறவிடுவது பற்றி பாதுகாப்பு சபையின் தீர்மானத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அமெரிக்காவின் மூலமுதல் திட்டத்தை ஐக்கிய நாடுகள் ஆதரித்த போதிலும், சமாதான சபையின் தற்போதைய கட்டமைப்பும் ஆணையும் அமெரிக்காவினால் தன்னிச்சையாக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்பது வெளிப்படையானது. சாசனத்தில் காசாவைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று அதன் உள்ளடக்கங்களை அந்தரங்கமாக அறிந்து கொண்ட முக்கியமான சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
சமாதான சபையின் தலைவராக ட்ரம்ப் தன்னை நியமித்திருக்கிறார். அதன் நிறைவேற்றுக்குழு அவரின் குடும்பத்தவர்களினாலும் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளயர் போன்ற நண்பர்களினாலும் நிரப்பப்பட்டிருக்கிறது. சர்வதேச இராஜதந்திர செயற்பாடுகளுக்கான பிரதான சர்வதேச நிறுவனமாக ஐக்கிய நாடுகளுக்கு இருக்கும் அந்தஸ்தை சூழ்ச்சித்தனமாக அபகரிக்கும் நோக்குடனான வாசகங்கள் சமாதான சபையின சாசனத்தில் காணப்படுகின்றன.
இந்தச் சபை பாலஸ்தீன நிபுணர்களை நியமிக்கும் என்ற போதிலும், பாலஸ்தீன தலைவர்கள் உள்ளடக்கப்படாமல் இருப்பது பாலஸ்தீனத்தை அங்கீகரித்த நாடுகளை திட்டமிட்டு அவமதிக்கும் ஒரு செயலாகும். பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகளின் அமைப்புக்களினால் குற்றஞ்சாட்டப்படுகின்ற இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகு சமாதான சபையில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற அதேவேளை, பாலஸ்தீன ஜனாதிபதி முஹம்மட் அப்பாஸ் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார். இதன் விளைவாக, பாலஸ்தீனத்தின் எதிர்காலம் குறித்து ட்ரம்ப் எடுக்கும் அடாத்தானதும் நியாயப்பாடு இல்லாததுமான தீர்மானங்களுக்கு உறுப்பு நாடுகள் இணக்கத்தை தெரிவிக்கக்கூடிய ஆபத்து இருக்கிறது.
இது இவ்வாறிருக்க, சமாதான சபையின் இலச்சினையும் கூட, முழுமையாக ட்ரம்புக்கு விருப்பமான தங்கத்தின் நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பதையும் அமெரிக்க வரைபடத்தை கொண்டிருப்பதையும் தவிர, மற்றும்படி தோற்றத்தில் ஐக்கிய நாடுகளின் இலச்சினையை ஒத்ததாகவே இருக்கிறது.
ஒட்டுமொத்தத்தில் காசாவை மீளக்கட்டியெழுப்புவது என்ற போர்வையில் அமைக்கப்பட்டிருக்கும் சமாதான சபை சர்வதேச சட்டங்களை மீறுகின்ற ஒரு நபரின் தன்னகம்பாவத்துக்கு சேவைசெய்வதற்கான ஒரு சர்வதேச அமைப்பாகவே அமையப்போகிறது.
வீரகத்தி தனபாலசிங்கம்