Photo, REUTERS

மாகாண சபை தேர்தல்கள் அடுத்த வருடம் நடத்தப்படும் என்று அரசாங்கத் தலைவர்கள் அண்மைக் காலமாக செய்துவரும் அறிவிப்புக்கள் தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்படும் என்ற நம்பிக்கையை தருவதிலும் பார்க்க சந்தேகத்தை வலுப்படுத்துபவையாகவே அமைந்திருக்கின்றன.

நீண்டகாலமாக தாமதிக்கப்படும் மாகாண சபை தேர்தல்களை அடுத்த வருடத்திற்குள் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்திருக்கிறது என்றும் தற்போதைய எல்லை நிர்ணயச் செயன்முறை நிறைவடைந்தவுடன் தேர்தல்கள் குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கடந்த வியாழக்கிழமை (9/10) நாடாளுமன்றத்தில் அறிவித்தார். “மாகாண சபை தேர்தல்களை விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் நடத்துவதா அல்லது கலப்பு தேர்தல் முறையின் கீழ் நடத்துவதா என்பதை நாம் பிறகு தீர்மானிப்போம். இதை நாடாளுமன்றமே தீர்மானிக்க முடியும். தேர்தல் முறை குறித்து தீர்மானிப்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும்” என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கமும் ஜீவன் தொண்டமானும் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் கூறினார்.

அண்மையில் முடிவடைந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றிய வேளையிலும் அதற்கு முன்னதாக இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சமர்ப்பித்த அறிக்கைக்குப் பதிலளித்த வேளையிலும் விஜித ஹேரத் மாகாண சபை தேர்தல்கள் தொடர்பான அரசாங்கத்தின் இதே நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

ஆளும் தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) பலம் பொருந்திய பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களான சபை முதல்வரும்  அமைச்சருமான பிமல் இரத்நாயக்க மற்றும் அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ போன்றவர்களும்  எல்லை நிர்ணயச் செயன்முறை நிறைவடைந்தவுடன் அடுத்த வருடம்  மாகாண சபை தேர்தல்களை நடத்தப்படும் என்று கூறினார்கள்.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையையும் பழைய தொகுதி அடிப்படையிலான முறையையும் உள்ளடக்கிய கலப்பு தேர்தல் முறையில் மாகாண சபை தேர்தல்களை நடத்துவதாக இருந்தால் மாத்திரமே எல்லை நிர்ணயச் செயன்முறை நிறைவடையும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

மாகாண சபை தேர்தல்களுக்கான புதிய எல்லை நிர்ணயக் குழுவொன்றை அமைப்பது தொடர்பில் தங்களுக்கு எந்த அறிவுறுத்தலும் கிடைக்கவில்லை என்றும் அந்தச் செயன்முறை எப்போது முன்னெடுக்கப்படும் என்பது தொடர்பில் தெளிவான தீர்மானம் ஒன்று இல்லாத நிலையில் மாகாண சபை தேர்தல்களுக்கான காத்திருப்பு தொடருகிறது என்றும் சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். இரத்நாயக்க ஊடகங்களுக்கு கூறியிருந்தார்.

முன்னைய குழுக்களின் அறிக்கைகளை மீளாய்வு செய்வதற்கும் மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் வழிகாட்டல்களை வழங்குவதற்கும் புதியதொரு எல்லை நிர்ணயக்குழுவை நியமிப்பதற்கு ஆகஸ்ட் மாத முற்பகுதியில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. ஆனால், எல்லை நிர்ணயச் செயன்முறை நிறைவடைந்தவுடன் தேர்தல்களை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று முன்னதாக உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதிலும், அந்த செயன்முறைகளின் முன்னேற்றம் குறித்து பிந்திய தகவல் எதுவும் அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை.

உள்ளூராட்சி தேர்தல்களைப் போன்று மாகாண சபை தேர்தல்களையும் கலப்பு முறையின் கீழ் நடத்துவதற்காக ‘நல்லாட்சி’ அரசாங்க காலத்தில் 2017ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் மாகாணங்களில் 2022 தேர்தல் வட்டாரங்களையும் 222 பட்டியல் அடிப்படையிலான ஆசனங்களையும் நிர்ணயம் செய்வதற்காக கலாநிதி கே.தவலிங்கம் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. ஆனால், அந்தக் குழு அதற்கான கால அவகாசம் கடந்த நிலையில் 2018ஆம் ஆண்டில் சமர்ப்பித்த அறிக்கையை அன்றைய அமைச்சரவை நிராகரித்தது.

அவ்வாறு எல்லை நிர்ணயக்குழுவின் அறிக்கை நிராகரிக்கப்படும் பட்சத்தில், பிரதமர் தலைமையிலான குழு ஒன்று அதை மீள்பரிசீலனை செய்து இரு மாதங்களுக்குள் புதிய அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு சட்டத்தில் ஏற்பாடு இருக்கிறது. அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு இரு மாதங்களில் எல்லை நிர்ணயக்குழுவின் அறிக்கையை முழுமையாக மீள்பரிசீலனை செய்வது சாத்தியமில்லை என்று ஒரு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது  என்று கூறப்படுகிறது. அதற்கு பிறகு புதிய மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்படாமல் 11 வருடங்களுக்கும் அதிகமான காலம் கடந்துவிட்டது. அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தின் கீழ் இறுதியாக 2014ஆம் ஆண்டில் மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அரசாங்கம் பதவியேற்று ஒரு வருட காலத்திற்குள் மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்படும் என்று கடந்த வருட தேசிய தேர்தல்களின் போது தேசிய மக்கள் சக்தி வாக்குறுதி வழங்கியது. அந்த ஒரு வருடம் நிறைவு பெறுவதற்கு இன்னமும் இரு மாதமே இருக்கிறது. உள்ளூராட்சி தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் வாக்குகளில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டதை அடுத்து மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தயக்கம் காட்டுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியம். அடுத்த வருட முதல் அரைப்பகுதியில் அந்தத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று அரசாங்கத்தின் சில தலைவர்கள் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், தற்போது வெளியுறவு அமைச்சர் அடுத்த வருடத்திற்குள் தேர்தல்கள் நடத்தப்படும் என்று கூறியிருப்பது இயல்பாகவே சந்தேகங்களுக்கு வழிவகுத்திருக்கிறது.

அமைச்சரவை ஆகஸ்டில் வழங்கிய அங்கீகாரத்தின் பிரகாரம் புதியதொரு எல்லை நிர்ணயக்குழு நியமிக்கப்படுமாக இருந்தால், அது புதிதாக அதன் செயன்முறைகளை தொடங்கும் பட்சத்தில் அடுத்த வருடம் மாகாண சபை தேர்தல்களை நடத்துவது எந்தவிதத்திலும் சாத்தியமில்லை. அதனால் மீண்டும் தேர்தல்கள் ஓரிரு வருடங்கள் தாமதிக்கப்படுவதற்கான வாய்ப்பே இருக்கிறது. ஆனால், ஏற்கனவே ஏழு வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றம் நிராகரித்த எல்லை நிர்ணயக்குழுவின் அறிக்கையை தற்போதைய பிரதமரின் தலைமையில் குழுவொன்றை அமைத்து மீள்பரிசீலனை செய்யும் உத்தேசம் அரசாங்கத்துக்கு இருக்கிறது என்று சில அரசியல் வட்டாரங்கள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது.

மாகாண சபை தேர்தல்களை மேலும் தாமதிக்காமல் விரைவாக நடத்த வேண்டுமானால், ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் அதை நடத்துவதே நடைமுறைச் சாத்தியமான ஒரேயொரு வழிமுறையாகும். அதற்கு வழிசெய்யும் வகையில் முன்னைய அரசாங்க காலத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தனிநபர் பிரேரணை என்ற வடிவில் கொண்டுவந்ததைப் போன்ற சட்டமூலத்தை தற்போது தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கொண்டு வந்திருக்கிறார்.

உண்மையிலேயே மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டும் என்ற அக்கறை அரசாங்கத்துக்கு இருந்தால், சாணக்கியனின் தனிநபர் பிரேரணையை சபையில் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும். ஆனால், அதற்கான விருப்பத்தை அரசாங்கம் வெளிக்காட்டுவதாக இல்லை என்பது மாத்திரமல்ல தானாகவே அத்தகைய சட்டமூலம் ஒன்றை கொண்டுவந்து நிறைவேற்றும் நோக்கமும் அதற்கு இல்லை. நாடாளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு இருக்கும் மூன்றில் இரண்டு ஆசனங்களுக்கும் அதிகமான பெரும்பான்மைப் பலத்தை பயன்படுத்தி அதை இலகுவாகச் செய்யமுடியும்.

மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்துவதற்கு குறுக்கே நிற்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண வேண்டியது முற்று முழுதாக அரசாங்கத்தின் பொறுப்பேயாகும். தாமதத்துக்கு இடமளிக்காமல் உகந்த முறையில் தேர்தல்களை நடத்துவதாக உறுதியளித்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவற்றை பின்போடுவதை எந்த காரணத்தின் அடிப்படையிலும் நியாயப்படுத்த முடியாது. நாடாளுமன்ற தேர்தலைப் போன்று உள்ளூராட்சி தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கு பிரமிக்கத்தக்க வெற்றி கிடைத்திருந்தால் அதைத் தொடர்ந்து உடனடியாகவே அரசாங்கம் மாகாண சபை தேர்தல்களை நிச்சயமாக நடத்தியிருக்கும்.

தேர்தல்களை பின்போடுவதன் மூலமாக மேற்கொண்டும் வாக்கு வீழ்ச்சியை எந்த அரசாங்கத்தினாலும் தவிர்க்க முடியாது. தேர்தல்களை தாமதிப்பதனால் மேலும் வாக்குகளில் வீழ்ச்சி ஏற்படுமே தவிர, மக்களின் ஆதரவை எந்த வகையிலும் அதிகரிக்க முடியாது. தோல்விப் பயத்தில் தேர்தல்களை ஒத்திவைத்த சகல அரசாங்கங்களுமே படுதோல்வியையே சந்தித்தன என்பதை இன்றைய அரசாங்கத் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இது இவ்வாறிருக்க, தென்னிலங்கை அரசியல் நிகழ்வுப் போக்குகளில் ஒரு விசித்திரமான திருப்பத்தை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

கடந்த ஒரு தசாப்தத்துக்கும் அதிகமான காலமாக மாகாண சபை தேர்தல்களைப் பற்றி எந்தவிதமான அக்கறையும் இல்லாமல் இருந்த தற்போதைய எதிர்க்கட்சிகள் அந்தத் தேர்தல்களை விரைவாக நடத்துமாறு அண்மைக் காலமாக அரசாங்கத்தை வலியுறுத்தத் தொடங்கியிருக்கின்றன. மாகாணங்களுக்கான அதிகாரப்பரவலாக்கம் மீதான அக்கறை அதற்கு காரணமில்லை என்பதை புரிந்துகொள்வதில் எவருக்கும் சிரமம் இருக்க முடியாது.

உள்ளூராட்சி தேர்தல்களில் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட பின்னடைவினால் உற்சாகமடைந்த எதிர்க்கட்சிகள், தேசிய தேர்தல்களின்போது தேசிய மக்கள் சக்தி நாட்டு மக்களுக்கு வழங்கிய பெருவாரியான வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற முடியாமல் இருப்பதன் காரணத்தினால் அடுத்து வரக்கூடிய எந்தவொரு தேர்தலிலும் அதற்கு பாரிய பின்னடைவு ஏற்படும் என்று எதிர்பார்க்கின்றன.

மறுபுறத்தில், மத்தியில் தற்போதைக்கு அதிகாரத்துக்கு வரக்கூடிய வாய்ப்பு இல்லை என்பதால், இந்த எதிர்க்கட்சிகள் ஆட்சிமுறையின் இரண்டாம் அடுக்கான மாகாண சபைகளில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் நாட்டம் காட்டுகின்றன. ஏற்கனவே படுமோசமாக பலவீனமடைந்திருக்கும் இந்தக் கட்சிகள் ஏதாவது ஒரு மட்டத்தில் அதிகாரப் பதவிகளுக்கு நீண்டகாலத்துக்கு வரமுடியாவிட்டால் அவற்றின் கட்டமைப்புக்கள் மேலும் சீர்குலையாமல் தடுப்பது கஷ்டமான காரியமாக இருக்கும். மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் இந்த கட்சிகள் அரசாங்கத்துக்கு சவால் விடுப்பதற்கு துணிச்சல் கொண்டதற்கு இதுவே காரணமாகும்.

முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் சில தினங்களுக்கு முன்னர் கூட்டப்பட்ட மகாநாடு ஒன்றில் எதிர்க்கட்சிகளும் சில சிவில் சமூக அமைப்புக்களும் தாமதமின்றி விரைவாக மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு நெருக்குதல்களை கொடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக ஆராய்ந்தன. அடுத்த வருடம் வரை காத்திராமல் இந்த வருடத்திற்குள்ளாகவே தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும் அவை கோரிக்கை விடுத்தன.

தென்னிலங்கையில் மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் இவ்வாறாக அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைத்துவரும் நிலையில், வடக்கு, கிழக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் இது விடயத்தில் அரசாங்கத்துக்கு நெருக்குதல்களை கொடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய்வதில் பெரிதாக அக்கறை காட்டாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு வருடம் நிறைவடையும் நிலையில், இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் அக்கறை காட்டாததையும் மாகாண சபை தேர்தல்கள் தாமதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டிய தமிழரசு கட்சி, ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அவகாசம் கோரி அவருக்குக் கடிதத்தை அனுப்பியிருந்தது. ஜனாதிபதி விரைவில் தமிழரசு கட்சியின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசுவார் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் போன்றவர்கள் செய்தியாளர்கள் மாகாநாட்டில் கூறினார்களே தவிர, ஜனாதிபதியிடமிருந்து எந்தவிதமான பதிலும் தமிழரசு கட்சிக்குக் கிடைத்ததாக அறிய வரவில்லை.

வீரகத்தி தனபாலசிங்கம்