Photo, Front Line Socialist Party
அரசியல் பிளவுகள் இலங்கைக்கு புதியது அல்ல. அவை நம் நாட்டிற்கு மட்டும் தனித்துவமானவையும் அல்ல. பெரும்பாலும் ஒரே கொடியின் கீழ் பயணித்தவர்களிடையே வரலாறு சச்சரவுகள், பிரிவுகள் மற்றும் துரோகங்களால் நிறைந்துள்ளது. குறிப்பாக, இடதுசாரிகள் நீண்டகாலமாக வெளிப்படுத்தியது குழுவாதம், கருத்தியல் சச்சரவுகள் மற்றும் சீர்திருத்தம் மற்றும் புரட்சி பற்றிய ஒருவருக்கொருவர் போட்டியிடும் பார்வைகளை ஒன்றிணைக்க இயலாமையாகும்.
லெனினின் மரணத்திற்குப் பிறகு ஸ்டாலின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் இடையே நிலவிய கடுமையான போட்டியிலிருந்து 1960களின் சீன-சோவியத் பிளவு வரை, சோசலிச முகாமில் எழுந்த சச்சரவுகள் அதன் பரந்த நோக்கங்களை மீண்டும் மீண்டும் புதைத்துவிட்டன. இலங்கையின் இடதுசாரிகளும் இதே போன்ற வடிவத்தைப் பின்பற்றியுள்ளனர். ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) கூட மாஸ்கோ மற்றும் பெய்ஜிங் வரிசைகளிலிருந்து எழுந்த இந்த பிளவுகளின் அடிப்படையிலேயே உருவானது. பின்னர், அதன் ஒரு கிளையான முன்னணி சோசலிச கட்சி (Frontline Socialist Party {FSP}), மற்றொரு பிளவுக்குப் பிறகு உருவானது.
இன்று, தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைமையிலான ஜே.வி.பி. மற்றும் அதிலிருந்து விலகி செயற்பட்டுக் கொண்டிருக்கும் முன்னணி சோசலிச கட்சியுடன், இந்தப் பழைய பதற்றங்கள் தொடர்ந்து கொதித்துக்கொண்டிருக்கின்றன. அரசாங்க ஆதரவுடன் ஜேவிபி ஆதரவாளர்களால் யக்கல பகுதியில் அமைந்துள்ள FSP அலுவலகத்தை சமீபத்தில் வன்முறையைப் பயன்படுத்தி கைப்பற்றியுள்ளனர் என்று கூறப்படுகிறது, இந்த எதிர் முரண்பாடு பொது மக்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.
தனக்குச் சாதகமான நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் இந்த விவகாரத்தை தீர்த்துவிட்டதாக தேசிய மக்கள் சக்தி கூறுகிறது. இது சட்டபூர்வமானது என்ற போர்வையில் மாறுவேடமிட்ட அரசியல் வன்முறை நடவடிக்கை என்று FSP கூறுகிறது. தெளிவாக, சட்டத்தின் ஆட்சி போதுமானதாக இருக்க வேண்டிய இடத்தில் வன்முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. உண்மையில், நீதிமன்ற உத்தரவு இருந்திருந்தால் அதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை கைகள், கால்களைப் பயன்படுத்தி வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடும் கட்சி ஆதரவாளர்களுக்கு அளிக்காமல் சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரிகளிடம் ஒப்படைத்திருக்கலாம்.
இந்த சச்சரவை வெறும் சொத்து சர்ச்சையாக கருதி புறக்கணிக்க முடியாது. இது தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாக்குறுதிகளின் இதயமான, சட்டத்தின் ஆட்சியில் நம்பிக்கையை மீண்டும் நிறுவுவதை நோக்கியே செல்கிறது. அதன் ‘வளமான நாடு, அழகான வாழ்க்கை’ என்ற கொள்கை அறிக்கை, ஜனநாயக கட்டடத்தின் மையக் கூறாக “சுதந்திரமான மற்றும் திறம்பட நீதி வழங்கும் நிர்வாகத்தை” உருவாக்குவதாக வாக்குறுதியளித்தது. அரசியல் ஆர்வலர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்கும்போது அந்த வாக்குறுதி வெற்றுத்தனமானதாக தோன்றுகிறது.
இத்தகைய மோதல்கள் இடதுசாரிகளுக்கு மட்டும் வரையறையானதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். முதலாளித்துவ முகாமும் – ஐக்கிய தேசியக் கட்சி, சமகி ஜன பலவேகய (SJB), இலங்கை சுதந்திரக் கட்சி (SLFP), இலங்கை மகஜன கட்சி (SLMP), இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் பிற கட்சிகளாக – மீண்டும் மீண்டும் பிரிந்துள்ளது. இந்தப் பிளவுகள் பெரும்பாலும் அதிகாரம், நிதி மற்றும் அரச வளங்களுக்கான அணுகலைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. சொத்து சர்ச்சைகளும் புதியவை அல்ல: ஒரு காலத்தில் ஜனதா விமுக்தி பெரமுனத்திற்கு ஒதுக்கப்பட்ட சர்ச்சைக்குரிய நிலத்தில்தான் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் கட்டப்பட்டது.
ஆனால், ஆழமான பிரச்சினை இதுதான்: இலங்கை பல தசாப்தங்களாக ஜனநாயக கொள்கைகளை விட கட்சி, அதிகாரம் மற்றும் தனிப்பட்ட தேவைகளை முன்னிறுத்தும் அரசியல்வாதிகளால் அவதிப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் அல்லது சர்ச்சைகளை தீர்க்க அரசு கருவிகளை பயன்படுத்தும்போது, குடிமக்கள் அதனுடன் தொடர்புடைய தரப்பினர் மீது மட்டுமல்ல, நீதி என்ற கருத்தின் மீதே நம்பிக்கையை இழக்கிறார்கள்.
சட்டத்தின் ஆட்சி என்பது தேர்தல் மேடைகளுக்கான போர் முழக்கம் அல்ல. அது எந்தவொரு செயல்பாட்டு ஜனநாயகத்தின் அடித்தளமாகும். அதன் பொருள் – அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி, சக்தி வாய்ந்தவர்கள் மற்றும் சக்தியற்றவர்கள் – அனைவரும் நியாயமாகவும் மற்றும் பயம் அல்லது அனுசரணை இல்லாமலும் ஒரே சட்டத்திற்கு கீழ்ப்படிவதாகும். அது பரவியிருக்கும் இடத்தில், நிலைத்தன்மை மற்றும் சட்டபூர்வமான தன்மை அதை பின்தொடர்கின்றன. அது இல்லாத இடத்தில், பயம், ஒழுங்கற்ற நிலை மற்றும் இறுதியில் சமூக சரிவு எப்போதும் எம்மை நெருங்கத் தொடங்கும்.
கடந்தகால அவமானகரமான அரசியல் மரபுகளிலிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்ட தேசிய மக்கள் சக்தி உண்மையில் விரும்பினால், மற்ற அனைவருக்கும் எதிராக பயன்படுத்த வாக்குறுதியளிக்கும் விதிகளுக்கு தேசிய மக்கள் சக்தியும் உட்படுத்தப்பட விரும்புவதாக நிரூபிக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் நம்பகத்தன்மையை சேதப்படுத்தும் வன்முறை, அச்சுறுத்தல் மற்றும் அரசியல் அடக்குமுறை அவர்களின் எதிர்ப்பாளர்களுக்கு ஆயுதங்களை வழங்குகின்றன.
அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான தகுதியை விட நீதியின் கொள்கைகளை மதிக்கும் அரசாங்கம் வரும் வரை இலங்கையர்கள் நீண்டகாலமாக காத்திருந்துள்ளனர். ஆளும் கூட்டணி சட்டத்தின் ஆட்சிக்கு ஏற்ப செயல்படத் தவறினால், ‘வளமான நாடு, அழகான வாழ்க்கை’ பற்றிய அவர்களின் பார்வை ஒரு பக்கத்தில் காட்டப்பட்டுள்ள வார்த்தைகளைத் தவிர வேறு எதுவும் மிஞ்சியிருக்காது.
லயனல் போபகே