Photo, Social Media
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் அரசியல் வரலாற்றில் பல முதலாவது ‘சாதனைகளுக்கு’ சொந்தக்காரர். இந்த நாட்டின் மிகவும் பழைமை வாய்ந்த அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக விக்கிரமசிங்கவை போன்று வேறு எந்த அரசியல் தலைவரும் நீண்டகாலம் பதவி வகித்ததில்லை. மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக தனது கட்சியின் தலைவராக இருந்து வரும் அவரே மிகவும் நீண்டகாலம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த அரசியல் தலைவர்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்றத்தில் தேர்தல் மூலமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவான முதல் அரசியல் தலைவர் விக்கிரமசிங்கவே. இறுதியில் அவரே அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முதலாவது முன்னாள் ஜனாதிபதி என்ற அவப்பெயரையும் தனது சுமார் அரை நூற்றாண்டுகால அரசியல் வாழ்வின் அந்திமக் காலத்தில் சம்பாதிக்க வேண்டியதாகப் போய்விட்டது.
ஜனாதிபதியாக இருந்த வேளையில் 2023ஆம் ஆண்டு செப்டெம்பரில் ஜி 77 நாடுகளின் உச்சி மகாநாட்டில் பங்குபற்றுவதற்காக கியூபாவுக்கும் அடுத்து ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78ஆவது வருடாந்த கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக அமெரிக்காவுக்கும் உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்ட விக்கிரமசிங்க நாடு திரும்பும் வழியில் லண்டனில் தனிப்பட்ட தேவைக்காக தங்கிநின்ற இரு நாட்கள் தனக்கும் தனது குழுவினருக்குமான செலவுகளுக்கு அரச பணத்தைப் பயன்படுத்தியதன் மூலம் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து விட்டார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டாகும்.
முன்னாள் ஜனாதிபதியின் மனைவியான பேராசிரியை மைத்ரி. விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பல்கலைக்கழகம் ஒன்று கௌரவப் பேராசிரியை பட்டம் வழங்கிக் கௌரவித்த வைபவத்தில் பங்கு பற்றுவதற்காகவே அவர் லண்டனுக்குச் சென்றார். பேராசிரியை மைத்ரி தனக்குரிய கௌரவத்தைப் பெறுவதற்காக தனது சொந்தப் பணத்திலேயே ஐக்கிய இராச்சியத்துக்கு சென்றிருந்தார். அமெரிக்க விஜயத்தை முடித்துக் கொண்டு லண்டனுக்குச் சென்று தங்கியிருந்த போது விக்கரமசிங்க தனது அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்கான செலவினங்களுக்கு 16.6 மில்லியன் ரூபா அரச பணத்தை செலவிட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.
இலங்கை பொலிஸின் குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தின் அழைப்பின் பேரில் ஆகஸ்ட் 22ஆம் திகதி தனது வாக்குமூலத்தை வழங்குவதற்கு அதன் தலைமையகத்துக்குச் சென்ற விக்கிரமசிங்கவை நீண்டநேரம் விசாரணை செய்த பிறகு பொலிஸார் கைதுசெய்து கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். ‘நாடக பாணியிலான’ நிகழ்வுகளுக்குப் பிறகு அன்றையதினம் இரவு 10 மணிக்குப் பிறகு அவரை ஆகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
கைவிலங்கிடப்பட்ட நிலையில் சிறைச்சாலை வாகனத்தில் கூட்டிச் செல்லப்பட்ட விக்கிரமசிங்கவின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததை அடுத்து அவர் முதலில் வெலிக்கடைச் சிறைச்சாலை வைத்தியசாலையிலும் பிறகு கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவரால் ஆகஸ்ட் 26ஆம் திகதி நீதிமன்றத்திற்கு செல்லமுடியவில்லை. இணையவழியின் மூலமாக நீதிமன்றத்தில் தனது பிரசன்னத்தை உறுதிசெய்த முன்னாள் ஜனாதிபதியின் உடல் நிலையைக் கருத்தில்கொண்டு கோட்டை மாஜிஸ்திரேட் அவரை தலா ஐந்து மில்லியன் ரூபா மூன்று ஆளுறுதிப் பிணையில் விடுதலை செய்தார்.
ஒருவாரகாலம் தேசிய வைத்தியசாலையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் இருதய நோய் மற்றும் நீரிழிவு உட்பட பல பாரதூரமான நோய்களுக்காக விசேட வைத்திய நிபுணர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்ற பிறகு ஆகஸ்ட் 29 வெள்ளிக்கிழமை முன்னாள் ஜனாதிபதி வீடு திரும்பினார். வெளிநாட்டில் சிகிச்சை பெறுவதற்கு விக்கிரமசிங்க விரும்பினால் அரசாங்கம் அதற்கு அனுமதிக்குமா என்று தெரியவில்லை. முன்னாள் ஜனாதிபதி வெளிநாட்டுக்குச் செல்லாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு அவரது கடவுச்சீட்டை பறிமுதல் செய்யுமாறு சட்டமா அதிபரின் சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
மீண்டும் விக்கிரமசிங்கவின் வழக்கு அக்டோபர் 29ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படும். அவரின் கதியை இனிமேல் நீதிமன்றமே தீர்மானிக்கும் என்பதால் இதற்கு மேல் நாம் அதைப்பற்றி எதையும் கூறுவது நீதித்துறையை அவமதிப்பதாக அமைந்து விடும். அரச பணத்தை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டதற்குப் பிறகு அந்த விவகாரம் முற்றிலும் சட்டப் பிரச்சினையாக மாறிவிட்டாலும் கூட, அது அரசியல் அரங்கில் பெரும் பதற்றத்தை தோற்றுவித்திருக்கிறது.
விக்கிரமசிங்கவை கடந்த காலத்தில் மிகவும் கடுமையாக விமர்சித்த அரசியல்வாதிகளும் கூட அணிதிரண்டு அவருக்கு தங்களது ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் வெளிக்காட்டினர். பெரும்பாலும் சகல எதிர்க்கட்சிகளின் தலைவர்களுமே செய்தியாளர்கள் மகாநாடுகளைக் கூட்டி விக்கிரமசிங்கவை நியாயப்படுத்தியதுடன் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ வாழ்வையும் தனிப்பட்ட வாழ்வையும் வேறுபடுத்திப்பார்க்கக் கூடாது என்றும் கூறினர். மேலும், விக்கிரமசிங்க மீதான சட்ட நடவடிக்கையை அவர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் என்றே வர்ணிக்கிறார்கள்.
விக்கிரமசிங்கவுக்கு எதிரான நடவடிக்கையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் மீதான பெரும் தாக்குதல் என்று கண்டனம் செய்த அதேவேளை, முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ விக்கிரமசிங்கவின் கைதை அரசியல் பழிவாங்கல் என்று வர்ணித்தார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கட்டமைத்து வருகின்ற அரசியலமைப்பு ரீதியான சர்வாதிகாரத்தை தோற்கடிப்பதற்கு கட்சி வேறுபாடுகளை மறந்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார். கோட்டபாய ராஜபக்ஷ மாத்திரமே இந்த விவகாரத்தில் பகிரங்கமாக கருத்து எதையும் வெளியிடாமல் இருந்துவரும் முன்னாள் ஜனாதிபதியாவார்.
விக்கிரமசிங்க விவகாரம் ஒரு ஜனாதிபதியின் தனிப்பட்ட விஜயங்களையும் உத்தியோகபூர்வ விஜயங்களையும் வேறுபடுத்திப் பார்க்க முடியுமா என்ற விவாதம் ஒன்றையும் மூளவைத்திருக்கிறது. அவ்வாறு வேறுபடுத்திப்பார்க்க முடியாது என்று விக்கிரமசிங்க கூறியதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீபா பீரிஸ் கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.
தேசிய மக்கள் சக்தி/ ஜே.வி.பியின் நிகழ்ச்சிகளுக்கும் அநுராதபுரத்தில் தனது குடும்ப உறுப்பினர்களை சந்திப்பதற்கும் செல்லும் போது ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க பாதுகாப்புப் பிரிவினர் இல்லாமல் தனது சொந்த வாகனத்தையா பயன்படுத்துகிறார் என்று எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின.
இதற்குப் பதிலளித்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஜனாதிபதி தனிப்பட்ட தேவைகளுக்காக, குறிப்பாக சுகவீனமுற்றிருக்கும் தனது தாயாரைப் பார்வையிடுவதற்காக நாட்டுக்குள் பயணங்களைச் செய்வதையும் முன்னாள் ஜனாதிபதி வெளிநாடுகளுக்கு விமானங்களில் செல்வதையும் ஒருபோதும் ஒப்பிட முடியாது என்று குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகள் முடியுமானால் திசாநாயக்கவின் உள்நாட்டுப் பயணங்கள் தொடர்பில் நீதிமன்றத்தை நாடட்டும் பார்க்கலாம் என்று ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சவால் விட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.
தற்போதைய இலங்கை அரசியல் தலைவர்களில் விக்கிரமசிங்கவே சர்வதேச மட்டத்தில் செல்வாக்கும் மதிப்பும் கொண்டவராகக் கருதப்படுவதால் அவருக்கு எதிரான நடவடிக்கைகளை குறிப்பாக, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் கண்டனம் செய்யும் என்றும் அவரை உடனடியாகவே விடுவிக்க வேண்டும் என்று அரசாங்கத்துக்கு நெருக்குதல்களைக் கொடுக்கும் என்றும் பரவலான எதிர்பார்ப்பு இருந்தது. அவ்வாறு எதுவுமே நடைபெற்றதாகத் தெரியவில்லை. இலங்கையின் நிகழ்வுப் போக்குகளை அந்த நாடுகள் அவதானித்துக் கொண்டிருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், வெளிநாடுகளில் இருந்து அவருக்கு சார்பாக பகிரங்கமாக கருத்து வெளியிட்டவர்கள் என்றால் இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஷி தரூரும் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவர் நோர்வேயின் எரிக் சொல்ஹெய்முமேயாவர். விக்கிரமசிங்க பாரதூரமான குற்றச் செயல் எதையும் செய்யவில்லை என்று கூறிய அவர்கள் இருவரும் அவரை உனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்தினார்கள்.
முன்னாள் ஜனாதிபதியின் கைது தொடர்பில் வெளிநாட்டு தூதரகங்கள் உட்பட சர்வதேச சமூகத்திடமிருந்து நெருக்குதல்கள் வந்ததா என்று அமைச்சரவை செய்தியாளர்கள் மகாநாட்டில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்திடம் கேட்கப்பட்டபோது அதற்குப் பதிலளித்த அவர், எந்தவொரு வெளிநாட்டு இராஜதந்திரியோ அல்லது இராஜதந்திர அமைப்போ எந்தக் கருத்தையும் கூறவில்லை என்றும் சில தனிப்பட்டவர்கள் வெளிநாடுகளில் இருந்து வெளியிட்ட கருத்துக்கள் முக்கியத்துவமற்றவை என்றும் குறிப்பிட்டார். கடந்த காலத்தில் தற்போது இலங்கையில் சட்டத்தின் ஆட்சி சமத்துவமான முறையிலும் நேர்மையாகவும் பிரயோகிக்கப்படுகிறது என்பதை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கிறது என்றும் அவர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதியின் கைதுக்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து கொழும்பில் உள்ள பல்வேறு வெளிநாட்டு தூதரகங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த தலைவர்கள் விளக்கிக் கூறியதாகவும் கைது தொடர்பில் மேலதிக விபரங்களை குறிப்பிட்ட சில சர்வதேச அமைப்புக்கள் அவர்களிடம் கோரியதாகவும் கட்சி வட்டாரங்கள் அறிவித்தன.
விக்கிரமசிங்க விவகாரம் தற்போது சிதறிப்போயிருக்கும் எதிர்க்கட்சிகளை ஐக்கியப்படுத்தி அரசாங்கத்துக்கு பெரிய சவாலைத் தோற்றுவிக்கக்கூடிய சாத்தியத்தை எதிர்பார்ப்பதற்கில்லை. முன்னாள் ஜனாதிபதியின் கைதுக்கு உடனடியாக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மத்தியில் காணப்பட்ட ஆரவாரம் தற்போது தணிந்து போயிருப்பதாகவே தோன்றுகிறது. எதிர்க்கட்சிகளின் பரந்தளவிலான கூட்டணியொன்றை அமைப்பதற்கு அவற்றை வழிநடத்தக்கூடிய அரசியல் செல்வாக்கும் வல்லமையும் கொண்ட ஏற்புடைய தலைவர் ஒருவர் அவர்கள் மத்தியில் இல்லை. அதேவேளை, கடந்த வாரத்தைய சம்பவங்களுக்குப் பிறகு எதிரணி அரசியல் கட்சிகளை ஐக்கியப்படுத்தக்கூடிய ஒரு வலிமையான அரசியல் காரணியாக விக்கிரமசிங்க மாறியிருக்கிறாரா என்பதும் முக்கியமான ஒரு கேள்வி.
இன்றைய எதிர்க்கட்சி அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள் அவர்களது கடந்தகால முறைகேடான செயற்பாடுகளுக்காக அரசாங்கத்தினால் எளிதாக இலக்கு வைக்கப்படக்கூடிவர்களாக இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் தங்கள் மீது சட்ட நடவடிக்கைகளை எடுப்பதில் அரசாங்கம் நாட்டம் காட்டாமல் இருப்பதை உறுதிசெய்யக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்காகவே ஐக்கியப்படுவது குறித்தும் மக்களை அணிதிரட்டுவது குறித்தும் அவர்கள் பேசுகிறார்கள். அத்தகைய அணுகுமுறை மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான சாத்தியம் குறித்து வலுவான சந்தேகம் எழுகிறது.
அதேவேளை, கடந்த வருடத்தைய தேசிய தேர்தல்களின்போது நாட்டு மக்களுக்கு அளித்த பெருவாரியான வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முக்கியமான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திருப்புவதற்காக முன்னைய ஆட்சியாளர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் அக்கறை காட்டுகிறது என்ற விமர்சனமும் இருக்கிறது. விக்கிரமசிங்கவை விடவும் கூடுதலான அளவுக்கு செல்வாக்குடைய பலம்பொருந்திய அரசியல் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளில் இறங்குவதற்கு முன்னதாக மக்களின் உணர்வுகளை நாடிபிடித்துப் பார்க்கும் ஒரு நடவடிக்கையே அவரின் கைது என்றும் ஊகிக்கப்படுகிறது.
அரசியல் பழிவாங்கலில் இறங்கியிருப்பதாக அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் எச்சரிக்கைளை தாங்கள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்று காட்டும் வகையில் நடந்துகொள்ளும் அரசாங்கத் தலைவர்கள் ஊழல்தனமான அரசியல்வாதிகளுக்கு எதிராக மேற்கொண்டு எடுக்கப்போகும் நடவடிக்கைகளைப் பற்றி அறிவிப்புகளைச் செய்கிறார்கள். விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நீதிமன்ற வளாகத்துக்கு ஆர்ப்பாட்டக்காரர்களை அணிதிரட்டிக்கொண்டு வந்தவர்களை அடையாளம் காணும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ்மா அதிபர் கூறியிருக்கிறார்.
சகல குடிமக்களுக்கும் சமத்துவமான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய ஜனாதிபதி திசாநாயக்க ஏற்கனவே எடுக்கப்பட்ட எந்தவொரு நடவடிக்கையும் மீள்பரிசீலனை செய்யப்படமாட்டாது என்று கூறியிருக்கிறார். அரச பணத்தை தவறாகப் பயன்படுத்தியவர்களிடம் இருந்து அது திரும்பப் பெறப்படும் என்றும் ஊழலுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் பொறுப்பானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் கொழும்பில் கடந்தவாரம் நிகழ்வொன்றில் கூறினார். செப்டெம்பரில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டதும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அரசுக்குச் சொந்தமான வீடுகள் திரும்பப் பெறப்படும் என்றும் ஜனாதிபதி அறிவித்திருக்கிறார்.
அதேவேளை, விக்கிரமசிங்கவைப் போன்று மற்றைய முன்னாள் ஜனாதிபதிகளும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் அவை குறித்து விசாரணை செய்யப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. சட்டம் சகலருக்கும் சமமான முறையில் பிரயோகிக்கப்படும் என்று கூறிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால எவரிடமிருந்தாவது முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் மற்றைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று ஊடகங்களுக்கு கடந்த வாரம் கூறினார்.
விக்கிரமசிங்க விவகாரத்தில் முக்கியமான ஒரு அம்சத்தை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அவர் இலங்கையின் பாரம்பரியமான அரசியல் அதிகார வர்க்கக் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு அரசியல் தலைவர். அவரது கைதும் நீதிமன்றத்தில் அவர் பல மணி நேரமாக அனுபவிக்க வேண்டியிருந்த அசௌகரியங்களும் கொழும்பு உயர் வர்க்கத்தவர்களுக்கு கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜனாதிபதி திசாநாயக்க உட்பட தேசிய மக்கள் சக்தியின் குறிப்பாக, ஜே.வி.பியின் தலைவர்களின் எளிமையான குடும்பப் பின்னணிகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது விக்கிரமசிங்கவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒரு வர்க்க வன்மம் வெளிக்காட்டப்பட்டதாகவும் விமர்சனங்கள் உண்டு.
விக்கிரமசிங்கவின் அரசியலையும் எதையுமே மெத்தனமாக நோக்கும் அவரது சுபாவத்தையும் விரும்பாதவர்கள் பலர் கூட அவர் கைவிலங்கிடப்பட்டு சிறைச்சாலை வாகனத்தில் கூட்டிச் செல்லப்பட்டதனால் கடுமையான அதிருப்தியடைந்திருக்கிறார்கள் என்பது தெளிவானது. அத்துடன், மனைவியின் பட்டமளிப்பு வைபவத்தில் பங்கேற்பதற்காக (இலங்கையில் இடம்பெற்ற நிதி தொடர்பான பாரிய ஊழல் நடவடிக்கைளுடன் ஒப்பிடும்போது) ஒரு சிறிய தொகையான 16.6 மில்லியன் ரூபாவை பயன்படுத்தியதை பாரதூரமான பிரச்சினையாக ஊதிப்பெருப்பித்து அவரை கைதுசெய்திருக்க வேண்டியதில்லை என்ற ஒரு அபிப்பிராயமும் பல மட்டங்களில் இருக்கிறது.
வழமையாக விக்கிரமசிங்கவை மிகவும் கடுமையாக விமர்சித்து வருபவரான முன்னாள் இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜெயதிலக கடந்த வாரம் எழுதிய கட்டுரை ஒன்றில் ஜனாதிபதி திசாநாயக்கவின் நிருவாகத்தின் உண்மையான முகம் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரத்தை பொறுத்தவரை, சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட ஒருவராக முன்னாள் ஜனாதிபதியைக் கருதவில்லை என்று கூறியிருக்கும் தயான், விக்கிரமசிங்க தனது குடும்பத்தவர்களிடம் அல்லது நண்பர்களிடம் கேட்டிருந்தால் ஒரு நிமிடத்தில் பெற்றிருக்கக்கூடிய 16.6 மில்லியன் ரூபாவை அரச நிதியில் இருந்து அவர் கையாடியிருப்பார் என்று நம்பினால் தனது விவேகத்தையே நிந்தனை செய்வதாக அமையும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சட்டபூர்வத் தன்மைக்கும் நியாயப்பாடான தன்மைக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் விளங்கிக்கொள்வது சாத்தியமில்லை என்றும் ஒப்பீட்டளவில் வலுவில்லாத ஒரு பிரச்சினைக்காக விக்கிரமசிங்கவை கைதுசெய்து அசௌகரியத்தை கொடுத்ததன் மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சமூக நீதியில் அதற்கு இருக்கும் பற்றுறுதியை அல்ல, அதன் தலைமைத்துவத்தின் கீழ்த்தரமான சிந்தனையையும் மட்டுமீறிய தவறான உணர்ச்சியார்வத்தையும் வெளிக்காட்டியிருக்கிறது என்றும் தயான் மேலும் கூறியிருக்கிறார்.
இலங்கை அதன் வரலாற்றில் முன்னென்றுமில்லாத பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தபோது ஆட்சிப் பொறுப்பை அரசியல் தைரியத்துடன் ஏற்றுக்கொண்டு மீட்சிக்கு வழிகாட்டிய ஒரு தலைவரை கைதுசெய்து அவமதித்திருக்கக் கூடாது என்றும் ஒரு பிரிவினர் கவலைப்படுகிறார்கள். 2022 ஜூலையில் வெறுமனே 50 மில்லியன்
டொலர்களாக இருந்த வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பு 2025 செப்டெம்பரில் 6 பில்லியன் டொலர்களாக உயரக்கூடியதாக நாட்டின் பொருளாதாரத்தை மீடடெடுத்த தலைவர் 53,000 டொலர்களுக்கு (16.6 மில்லியன் ரூபா)வுக்கு பெறுமதி இல்லாதவரா என்று சில தினங்களுக்கு முன்னர் ஒரு அரசியல் பத்தியாளர் தர்மாவேசத்துடன் கேள்வியெழுப்பியிருந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து வெளியேறியபோது விக்கிரமசிங்க தனது கையில் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் போறிஸ் ஜோன்சனின் “கட்டவிழ்த்துவிடப்பட்டது ” (Unleashed) என்ற தலைப்பிலான சுயசரிதை நூலை கையில் வைத்திருந்தார். தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்தபோது அதை அவர் வாசித்திருக்கிறார் போன்று தெரிகிறது. அதன் மூலமாக ஏதாவது அரசியல் செய்தியை நாட்டுக்கு அல்லது அரசாங்கத்துக்கு சொல்வதற்கு அவர் நோக்கம் கொண்டிருந்தாரோ தெரியவில்லை.
போறிஸ் ஜோன்சனின் நூல் பற்றிய தகவல்களை அறியும் ஆவலில் கூகிளில் தேடுதல் நடத்தியபோது அது பற்றி லண்டன் கார்டியன் பத்திரிகையின் இணையாசிரியர் மார்டின் கெற்றில் கடந்த வருட பிற்பகுதியில் எழுதிய விமர்சனத்தை காண நேர்ந்தது. “போறிஸ் ஜோன்சனின் நூல் – ஒரு கோமாளியின் வரலாற்றுக் குறிப்புகள் ” (Unleashed by Boris Johnson review – memoirs of a clown) என்று அதற்கு தலைப்பிடப்பட்டிருந்தது.
வீரகத்தி தனபாலசிங்கம்