Photo, TAMIL GUARDIAN

ஆகஸ்ட் ஹர்த்தால் என்பது  இலங்கை அரசியலில் வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்ட மாபெரும் போராட்டம். பிரதமர் டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அரிசி மானியத்தை குறைத்ததை எதிர்த்து  இடதுசாரி அரசியல் கட்சிகளும் அவற்றின் தொழிற்சங்கங்களும் மக்களின் பேராதரவுடன் 1953 ஆகஸ்ட் 12ஆம் திகதி நடத்திய ஹர்த்தால் போராட்டம் முழு நாட்டையுமே செயலிழக்க வைத்தது.

அரசாங்கம் மக்களின் சீற்றத்துக்கு பயந்து அதன் அமைச்சரவைக் கூட்டத்தை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்ற பிரிட்டிஷ் கப்பலில் நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அரசியலில் பல எதிரொலிப்புகளை ஏற்படுத்திய அந்த மகத்தான ஹர்த்தால் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் அத்திபாரத்தை ஆட்டங்காண வைத்தது.

உடனடியாக இல்லாவிட்டாலும், இரு மாதங்களில் டட்லி சேனநாயக்க பிரதமர் பதவியில் இருந்து விலகியது மாத்திரமல்ல, அரசியலில் இருந்தும் தற்காலிகமாக பின்வாங்கினார். ஹர்த்தாலின் பின்னரான அரசியல் நிகழ்வுப் போக்குகளே இறுதியில் 1956 நாடாளுமன்ற தேர்தலில் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்படவும் வழிவகுத்தது.

வரலாறு படைத்த அந்த ஆகஸ்ட் ஹர்த்தாலுக்குப் பிறகு தென்னிலங்கையில் அத்தகைய ஒரு போராட்டம் இடம்பெறவில்லை என்ற போதிலும், 1972 முதலாவது குடியரசு அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து தேசிய இனப்பிரச்சினை தீவிரமடையத் தொடங்கிய பின்புலத்தில் எழுபதுகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் அறைகூவலில் பல ஹர்த்தால் போராட்டங்கள் நடாத்தப்பட்டன. தமிழ் மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கிய அந்தப் போராட்டங்கள் தமிழ்த் தேசியவாத உணர்வுகளை தீவிரமடையச் செய்தன. அவற்றுக்குப் பின்னரான காலப்பகுதியில் ஆயுதப் போராட்டம் தொடங்கியதைத் தொடர்ந்து அந்த வகையான அமைதிவழி எதிர்பியக்கங்களுக்கு வடக்கு, கிழக்கில் இடமிருக்கவில்லை.

உள்நாட்டுப் போர் முடிவடைந்ததற்குப் பின்னரான கடந்த 16 வருடங்களில் புதிய உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் நிலைவரங்களுக்கு மத்தியில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கு உகந்த கொள்கைகளையும் தந்திரோபாயங்களையும் வகுக்க முடியாத நிலையில் இருக்கும் தமிழ் தேசியவாத கட்சிகள் ஹர்த்தால் போன்ற போராட்ட வழிமுறைகளில் பெரிதாக நாட்டம் காட்டவில்லை.

இத்தகைய பின்புலத்தில், தமிழ் அரசியல் நிகழ்வுப் போக்குகளில் எதிர்பாராத ஒரு திருப்பமாக கடந்த வாரம் வடக்கு, கிழக்கில் ஒரு ‘ஆகஸ்ட் ஹர்த்தாலை’ கண்டோம். 1953 ஆகஸ்ட் 12 ஹர்த்தாலுக்கு இலங்கை அரசியலில் ஒரு நேர்மறையான குறியீடு இருக்கிறது என்றால், 2025 ஆகஸ்ட் 18 ஹர்த்தாலுக்கு ஒரு எதிர்றையான குறியீடு இருக்கிறது எனலாம். அந்த ஹர்த்தாலுக்கு அறைகூவல் விடுக்கப்பட்டதன் நோக்கத்தை எவரும் குறைகூற முடியாது என்றாலும், ஒரு ஹர்த்தால் எவ்வாறு நடத்தப்படக்கூடாது என்பதற்கு அது உதாரணமாக அமைந்து விட்டது துரதிர்ஷ்டவசமானதே.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன்கட்டு பகுதியில் இராணுவத்தினருடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் (வயது 32) என்பவர் படையினர் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் ஆகஸ்ட் 9ஆம் திகதி மரணமடைந்ததை அடுத்து அவரது மரணத்துக்கு நீதி கோரியும் வடக்கு, கிழக்கில் தொடருகின்ற மட்டுமீறிய இராணுவமயத்துக்கு எதிராகவும் பிரதான தமிழ் தேசியவாதக் கட்சியான இலங்கை தமிழரசு கட்சி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தது.

கபில்ராஜின் மரணம் தொடர்பாக தலையீடுகளற்ற முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானமும் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவுக்கு ஆகஸ்ட் 10ஆம் திகதி எழுதிய கடிதத்தில் வடக்கு, கிழக்கில் போர் முடிவுக்கு வந்த பின்னரும் கூட மட்டுமீறிய இராணுவப் பிரசன்னமும் படையினரின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுமே அத்தகைய சம்பவங்கள் இடம்பெறுவதற்கு காரணம் என்றும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் அந்த மரணத்துக்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அரசாங்கம் உறுதியளித்தது. பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சில இராணுவ வீரர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

முதலில் ஆகஸ்ட் 15 வெள்ளிக்கிழமை முழுநாள் ஹர்த்தாலுக்கே அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், நல்லூர் திருவிழா மற்றும் மடுத்தேவாலய உற்சவம் ஆகியவற்றை கருத்திற்கொண்டு ஹர்த்தால் ஆகஸ்ட் 18 திங்கட்கிழமைக்கு மாற்றப்பட்டது. முல்லைத்தீவு சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கக்கூடிய ஒரு ஹர்த்தால் போராட்டம் அவசியமற்றது என்று அரசாங்கம் வெளிப்படையாக கூறியபோதிலும், தமிழரசு கட்சி அதன் அழைப்பை வாபஸ் வாங்கவில்லை. ஆனால், அரைநாள் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் என்று அது அறிவித்தது.

மற்றைய தமிழ்க் கட்சிகளுக்கு தமிழரசு கட்சியுடன் அடிப்படையில் பெரிதாக கொள்கை வேறுபாடு இல்லை என்ற போதிலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஹர்த்தால் அழைப்பை விடுப்பதில் முன்னரங்கத்தில் நின்று செயற்பட்ட காரணத்துக்காக அந்தக் கட்சிகள் ஆதரவை வழங்க முன்வரவில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியம். ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுப்பதற்கு முன்னதாக தமிழரசு கட்சி மற்றைய தமிழ்க் கட்சிகளுடன் கலந்தாலோசிக்கவில்லை என்பது ஒரு முக்கிய குறைபாடு.

தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளூராட்சி உறுப்பினர்களும் ஹர்த்தால் வெற்றிகரமாக அமைவதற்கு முழுமையாக பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்று தலைமைப்பீடம் உத்தியோகபூர்வமாக அறிவுறுத்தியதற்கு மத்தியிலும், கட்சியின் நாடாளுமன்றக்குழுவின் தலைவர் கூட ஹர்த்தாலை ஆதரிக்க வெளிப்படையாக முன்வரவில்லை.

ஆனால், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, தொழிலாளர் தேசிய சங்கம் போன்ற மலையகக் கட்சிகளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற முஸ்லிம் கட்சிகளும் ஹர்த்தாலுக்கு அவற்றின் முழுமையான ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்தியிருந்தன.

இத்தகைய முரண்பாடுகள் நிறைந்த ஒரு சூழ்நிலையில் நடைபெற்ற ஹர்த்தாலின்போது இரு மாகாணங்களிலும் பல பகுதிகளில் காலையில் சில மணித்தியாலங்கள் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. அதேவேளை, இராணுவமயத்துக்கு எதிரான போராட்டம் என்பதையும் பொருட்படுத்தாமல் வேறு பல பகுதிகளில் வர்த்தக நிறுவனங்கள் ஒத்துழைப்பை வழங்கவில்லை. மற்றைய தமிழ்க் கட்சிகள் வெளிப்படையாக ஹர்த்தாலை எதிர்த்து அறிக்கை எதையும் வெளியிட்டிருக்க முடியாது என்கிற அதேவேளை, போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் மீதான அரசியல் பகைமை காரணமாக அது தோல்வியில் முடிவடைய வேண்டும் என்பதில் அக்கறையாக இருந்தன என்பதில் மறைத்துப் பேசுவதற்கு எதுவுமில்லை.

வடக்கு, கிழக்கில் எதிர்பார்த்த அளவுக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்ற போதிலும், தமிழரசு கட்சியின் தலைவரும் பொதுச்செயலாளரும் ஹர்த்தால் முடிவடைந்த பிறகு நடாத்திய செய்தியாளர்கள் மகாநாட்டில் தமிழ் மக்களின் கலாசாரத் தலைநகரம் என்று கருதப்படும் யாழ்நகரில் ஹர்த்தாலுக்கு கிடைக்காத ஆதரவு குறித்து தங்களது விசனத்தை பிரத்தியேகமாக வெளிப்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தவர்களுக்கு தமிழ் மக்கள் உகந்த பாடத்தை புகட்டியிருக்கிறார்கள் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். போரின் முடிவுக்குப் பின்னரான இன்றைய காலப்பகுதியில் ஹர்த்தால் போன்ற போராட்ட வழிமுறைகளில் தமிழ் மக்களுக்கு அக்கறை இல்லை என்பது கடந்த வாரம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்ற  கருத்தை முன்வைக்கும் இன்னொரு தரப்பினரும் இருக்கிறார்கள். அவ்வாறானால், இனிமேல் ஒருபோதுமே வடக்கு, கிழக்கில் ஹர்த்தாலையோ அல்லது வேறு வடிவிலான அமைதிவழிப் போராட்டங்களையோ பயனுறுதியுடைய முறையில் நடத்த முடியாமல் போகலாம் என்றே தோன்றுகிறது.

ஆகஸ்ட் 18 வடக்கு, கிழக்கில் காணக்கூடியதாக இருந்த கோலங்கள் முன்னாள் போர் வலயங்களில் தொடருகின்ற அநாவசியமான  இராணுவமயமாக்கல் குறித்த மக்களின் விசனத்தை பிரதிபலித்ததா அல்லது இலங்கை  தமிழ் அரசியல் சமுதாயத்திற்குள் இருக்கின்ற ஆரோக்கியமற்ற பிளவுகளை பிரதிபலித்ததா என்ற கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லை.

தேசிய இனப்பிரச்சினையாக இருந்தாலென்ன, வடக்கு, கிழக்கில் மக்கள் எதிர்நோக்குகின்ற மனிதாபிமானப் பிரச்சினைகளாக இருந்தாலென்ன அவற்றுக்குத் தீர்வுகளைக் காண்பதற்கு தமிழ்க் கட்சிகளிடம் ஒன்றிணைந்த அணுகுமுறைகளை எதிர்பார்ப்பது அர்த்தமற்றதாகவே தோன்றுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கும் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையும் சில சிவில் சமூக அமைப்புக்களும் சேர்ந்து அனுப்பிய கடிதத்தில் கையெழுத்திடுவதற்கு தமிழரசு கட்சி மறுத்துவிட்டது. தங்களுடன் முன்கூட்டியே கலந்தாலோசிக்காமல் அந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டதே அதற்கான காரணம் என்று சுமந்திரன் கூறியிருந்தார்.

ஆனால், அதே சுமந்திரன் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுப்பதற்கு முன்னதாக மற்றைய தமிழ்க் கட்சிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டிய தேவை குறித்து கவனம் செலுத்தவில்லை. இந்த நிகழ்வுப் போக்குகள் எல்லாம் தமிழ் அரசியல் சமுதாயத்தை பீடித்திருக்கும் ஒரு பிணியின் வெளிப்பாடுகளாகும். தமிழ் மக்களின் நலன்களை விடவும் தங்களுக்கு இடையிலான கட்சி அரசியல் மாச்சரியங்களிலும் ஆளுமைப் போட்டியிலுமே தமிழ் அரசியல்வாதிகள் தங்களது நேரத்தைச் செலவிடுகிறார்கள்.

தமிழ்க் கட்சிகளை ஐக்கியப்படுத்துவதில் அக்கறைகொண்டு இனிமேலும் எழுதுபவர்களுக்கும் பேசுபவர்களுக்கும் சித்தப்பிரமை என்று எவராவது சந்தேகித்தால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

வீரகத்தி தனபாலசிங்கம்