Photo, GETTY IMAGES
பெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர் முதலான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது. வரவேற்கப்படவேண்டிய நடவடிக்கைகளாக, மலையகத்திற்கான காணிக்கொள்கை உருவாக்கம், காணி உறுதிகள் விநியோகம் போன்ற செயற்பாடுகள் எதிர்காலத்தில் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. இவ்வதிகார சபை நீடித்து நிலைத்து தனது நோக்கங்களை அடைய தடங்களின்றி செயலாற்ற இவ்வமைப்பு குறித்த அடிப்படை புரிதல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மேல்மட்டங்களிலும் எமது மக்களிடத்திலும் ஏற்படுத்துவது அவசியம். பெருந்தோட்டங்களில் வாழும் மலையக மக்களை கிராமவாசிகளாக இந்நாட்டின் சம உரிமை அனுபவிக்கும் பிரஜைகளாக மாற்றும் நோக்கத்துடன் பழனி திகாம்பரம் அமைச்சராக இருந்தபோது 2018 இன் இறுதிக் காலப்பகுதியில் மிகுந்த சவால்களுக்கு மத்தியில் இந்த அதிகார சபை உருவாக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.
அந்தரத்தில் அதிகார சபை
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் இந்த அதிகார சபைக்கு மீண்டும் ஒரு சோதனை வந்துள்ளது. இதன் பணிகளை பெருந்தோட்ட அமைச்சிடம் ஒப்படைத்துவிட்டு இதனை மூடிவிடவேண்டும் என்ற சிபாரிசிற்கு தற்போது அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததும் பிரதமரால் உயர்மட்ட நிர்வாக உத்தியோகத்தர்களைக் கொண்ட ஒரு குழு டிசம்பர் 2024 இல் நியமிக்கப்பட்டது. இக்குழுவின் பெப்ரவரி 2025 திகதியிட்ட அறிக்கையின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதி அமைச்சராக இத்தீர்மானத்திற்கு தனது உடன்பாட்டினை தெரிவித்திருக்கின்றார்.
அத்துடன், இந்த சிபாரிசினை நடைமுறைப்படுத்துவதை கண்கானித்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அமைச்சரவைக்கு முன்னேற்ற அறிக்கை சமர்ப்பிக்கும் படி கேட்டுள்ளார். இதனால், மலையக அபிவிருத்திக்கான இவ்வமைப்பு நீண்டகாலத்திற்கு தொடருமோ தொடராதோ என்ற நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இந்த மாதமோ அடுத்த மாதமோ மூடப்படலாம் என்ற உடனடி ஆபத்து இல்லாவிடினும் அடுத்த வருடத்தில் என்ன நடக்குமோ என்ற நிச்சயமற்றத்தன்மை காணப்படுகின்றது. உறுப்பினர்களை நியமித்து நிதி ஒதுக்கி, காத்திரமான செயற்பாட்டினூடாக வினைத்திறனை காட்டுவது மூடப்படுவதிலிருந்து தப்பிக்கும் தற்காலிக ஏற்பாடாக இருந்தாலும் அரசாங்கம் செயற்படும் முறைமையை அறிந்தவர்களுக்குத் தெரியும் இந்த அதிகார சபையை மூடுவது குறித்த அமைச்சரவை தீர்மானத்தை முறையாக மீளப்பெற வைப்பதே இதற்கான சரியான நீண்டகால தீர்வாக இருக்கும் என்று.
இந்த அமைச்சரவை தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக மாற்றுவதற்கோ பிற்போடுவதற்கோ இரண்டு வகையான அணுகுமுறைகள் இருக்கின்றன. முதலாவது – மூடுவதற்கு, மாற்றியமைப்பதற்கு என நிரற்படுத்தப்பட்டுள்ள ஏனைய அமைப்புகளுடன் ஒப்பிடும்போது இவ்வதிகார சபை மிகவும் அண்மையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இதன் பயனுறுதிமிக்க செயற்பாட்டைவெளிப்படுத்த கால அவகாசம் தேவை எனவும் நியாயப்படுத்தலாம். பெருந்தோட்ட அமைச்சின் ஒரு அங்கமாக இதனை மாற்றுவது உகந்தது எனும் ஆய்வுக்குழு முன்மொழிந்த சிபாரிசில் உள்ள குறைப்பாட்டை எடுத்துரைக்கலாம்.
மலையகத்தில் மக்கள் வாழ்வியலில் முன்னேற்றகரமான மாற்றத்தை ஏற்படுத்த பல அமைச்சுகளின், அரச நிறுவனங்களின் தொடர் ஈடுபாடும் ஒருங்கிணைப்பும் அவசியம் என்ற பட்டறிவினாலேயே தனி அமைச்சை தாண்டி இத்தகைய அதிகார சபை உருவாக்கப்பட்டது. காலத்திற்குக் காலம் பெயர் மருவி தோன்றி மறையும் அமைச்சின் அங்கமாகவன்றி சட்ட ரீதியான அத்திவாரத்துடனான ஒரு பொறிமுறையின் அவசியம் 10 ஆண்டு, 5 ஆண்டு மலையக அபிவிருத்தித் திட்ட காலங்களிலேயே உணரப்பட்ட ஒன்றாகும். பழையக் குருடி கதவைத் திறடி கதையாக மீண்டும் இதனை ஒரு அமைச்சின் கீழ் கொண்டுவருவதால் சிறப்பாக செயற்படலாம் என கருத்துவதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை என்பதை சுட்டிக் காட்டலாம்.
பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நம்பிக்கை நிதியிம் (PHDT), பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு என்பவற்றின் பணிக்கோள், வேலை பகுப்பில் இல்லாத, குறை நிரப்பும் நடவடிக்கைகளுக்கான ஒரு பொறிமுறையே இந்த அதிகார சபை என்பதை விளக்கப்படுத்தலாம். இதன் அண்மைக்கால செயற்பாடுகள் மந்த கதியிலிருந்திருப்பினும் எதிர்காலத் திட்டங்கள் காத்திரமானவையென எடுத்துரைக்கலாம். இந்த அதிகார சபையை அன்றைய அமைச்சர் பழனி திகாம்பரம் உருவாக்கும்போதும் இதேபோன்ற சவால்கள் இருந்தன. அப்போது பயன்படுத்திய ஆவணங்கள், ஆதாரங்கள் மற்றும் அமைச்சரின் ஆலோசகராக இருந்த வாமதேவனின் தர்க்க நியாயங்கள் இதற்கு பிரயோசனமானதாக இருக்கும்.
இதற்கு சமாந்திரமாக அதிகார சபையின் தேவை குறித்து அரச நிர்வாக மட்டத்தில் நியாயப்படுத்தும் அதேவேளை இவ்வமைப்பின் அவசியம் பற்றி அரசியல் தளத்தில் அழுத்தம் கொடுக்கும் அணுகுமுறையும் இன்றியமையாததாகும். பெருந்தோட்டங்களில் வாழும் மலையக சமூகத்தை புதிய கிராமங்களினூடாக இந்நாட்டின் சம உரிமையுடைய பிரஜைகளாக மாற்றும் ஒரு பொறிமுறையை இல்லாதொழிப்பதன் அரசியல் குறித்தும் அதன் தாக்கம், பாதிப்பு குறித்தும் அரசாங்கத்தையும், மக்களையும் தெளிவுபடுத்துவது அவசியம். மலையக சமூகத்தின் முன்னேற்றத்திற்கான நிலைமாற்றத்தை இலகுபடுத்தவென மிகுந்த சவால்களுக்கு மத்தியில் நல்லாட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பை இல்லாதொழிப்பது, அதனை பெருந்தோட்ட நலனை நோக்காகக் கொண்ட அமைச்சின் கீழ் அங்கமாக்குவது இம்மக்களை கம்பனிகளின், தோட்ட முகாமையாளர்களின் கெடுபிடிகளுக்குள் தொடர்ந்தும் முடக்கிவைக்க ஏதுவாகிவிடும். தற்போது பொறுப்பில் இருக்கும் அனைத்து மலையகப் பிரதிநிதிகளும் இதனைப் புரிந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவை.
அதிகார சபையின் அவசியம்
மலையக சமூகத்தின் பெரும் பகுதியினரைத் தொடர்ந்து உரிமை மறுப்பிற்குள்ளாக்கி, ஒடுக்கி வாழ நிர்ப்பந்திக்கும் பெருந்தோட்ட இராச்சிய (Plantation Raj) முறைமையின் எச்ச சொச்சங்களை நீக்கி கெளரவமான பிரஜைகளாக மாற்றும் நோக்கத்துடனேயே இவ்வதிகார சபை உருவாக்கப்பட்டது. இந்த சமூம் பொருளாதார வலுப்பெற்று நாட்டின் அபிவிருத்திக்கு சம பங்குதாரராக பங்களிப்பதை இலகுபடுத்துவதற்கு இத்தகைய அமைப்பொன்றின் அத்தியாவசிய தேவை உள்ளது. இதன் மேற்குறித்த நோக்கங்களை அடையவென இவ்வமைப்பிற்கு சட்ட ரீதியாக பணிக்கப்பட்டுள்ள விடயங்களை அவதானிக்கும்போது இதன் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ளலாம்.
2018ஆம் ஆண்டின் 32ஆம் இலக்க புதிய கிராமங்கள் சட்டத்தின் பிரகாரம் இவ்வதிகார சபை தோட்ட வதிவிடங்களை புதிய கிராமங்களாக அபிவிருத்தி செய்தல், இது தொடர்பாக தேசிய, மாகாண மற்றும் மாவட்ட மட்ட அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பை மேற்கொள்ளல், அரசின் நிகழ்ச்சித் திட்டமிடலிலும் அமுலாக்கலிலும் இச்சமூகத்தினரின் பங்குபற்றலை உறுதிசெய்தல், தோட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு காணி உறுதி வழங்கி அவர்களுடைய வீடுகளுக்கான உரித்தை நிச்சயப்படுத்தும் செய்முறையை இலகுபடுத்தல் போன்ற முக்கிய பணிகளைக் கொண்டுள்ளது.
அதுமட்டுமன்றி மாகாண மற்றும் தேசிய அமைச்சுகளுடன் இணைந்து தொழிற்பட்டு இவற்றினூடாக வழங்கப்படும் அத்தியாவசிய சேவைகளைத் தோட்ட மக்களுக்கும் சென்றடைய செய்தலும் இதன் பொறுப்புகளின் ஒன்றாகும். தோட்டத்தில் வசிக்கும் மக்கள் தமது சமூக நலன் சார்ந்த விடயங்களுக்கும் தோட்ட நிர்வாகத்திலேயே தங்கி நிற்கும் நிலைமையை மாற்றி நாட்டின் முழுப் பிரஜைகளாவதற்கான அடிப்படை இதுவாகும். தோட்ட நிர்வாகத்தினர் தமது சேவைகளை குறித்த சந்தர்ப்பங்களில் தம்மிடம் வேலை செய்யும் தொழிலாளர் குடும்பங்களுக்கு மட்டும் என குறுக்கிவிட்டு முன்னர் தொழிலாளர்களாக இருந்த பல தசாப்தங்களாக அதே தோட்டங்களில் வசிக்கும், ஆனால் தற்போது தொழிலாளர் அல்லாத காரணத்தால் புறக்கணிக்கும் பல லட்சக்கணக்கானோரையும் அடிப்படை சேவைகள் சென்றடையும் விதத்தில் இச்சட்டம் பொருள்கோடல் செய்துள்ளது கவனிக்க வேண்டிய ஒன்றாகும். தனியார்மயமாக்கப்பட்டதன் பின் தோட்டங்களில் முக்கால்வாசி ஆளணி குறைக்கப்பட்டு, ஆனால் பரம்பரை பரம்பரையாக தோட்டங்களிலேயே வசிக்கும் பல குடும்பங்களையும் அவர்கள் சந்ததியினரையும் கருத்தில் கொண்டே இவ்வாறு வரைவிலக்கணம் செய்யப்பட்டது.
எமது சமூகம் கல்வியினூடாக நிலை மாற்றம் அடைந்து முன்னேறவேண்டும் என்ற நோக்கில் இவ்வதிகார சபை மலையக இளைஞர் யுவதிகள் பல்கலைக்கழக, தொழில்வாண்மை கல்வி பெற ஆதரவளித்தலும் இதன் பணிகளில் ஒன்றாகும். அதேபோல இப்பிரதேசங்களில் வாழும் பெண்கள், முதியோர், சிறுவர் வலுவூட்டல் தொடர்பான இடையீடுகளையும் இவ்வமைப்பு செய்ய இயலும். இவற்றிற்காக இலங்கை அரசாங்கத்தின் வரவு – செலவு திட்டத்தில் ஒதுக்கீடுகள் மட்டுமன்றி வேறு வழிமுறைகளில் நிதி திரட்டும் அதிகாரமும் இவ்வமைப்பிற்கு உள்ளது. சரியான தலைமைத்துவம் உள்ளவிடத்து இது போன்ற நலத்திட்டங்களை அமுல்படுத்தும் பலவாறான சமூக அமைப்புகளை ஒருங்கிணைத்து காத்திரமான இடையீடுகள் செய்யக்கூடிய இயலுமை இவ்வதிகார சபைக்கு சட்டபூர்வமாக உள்ளது.
மலையக பிரதேசங்களின் அனர்த்த அபாயத்தை கருத்திலெடுத்து சூழல் பாதுகாப்புத் திட்டங்களை வலுப்படுத்தவும் அதேநேரம் NBRO போன்ற அரச நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து அனர்த்த அபாயம் உள்ள இடங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றம் செய்வதற்கான வழிகாட்டலை வழங்கும் பொறுப்பும் இவ்வமைப்பைச் சார்ந்தது.
அதிகார சபை மலையக அரசியலில் ஒரு மைல்கல்
புதிய கிராமங்கள் அதிகார சபை மலையக அரசியல் பயணத்தில் முக்கியமான மைல்கற்களுள் ஒன்றாக கருதுவதற்கு மேலும் சில காரணங்கள் உள்ளன. இந்த அதிகார சபையின் உருவாக்கத்தின் போது இலங்கை அரசு சட்டபூர்வமாக உடன்பாடளித்த இரண்டு விடங்கள் குறிப்பிடப்பட வேண்டியன. முதலாவது – இந்த சட்டத்தின் படி புதிய கிராமங்கள் எனும்போது அவை லயத்து வீடுகளுக்குப் பதிலாக தனி வீடுகளானவையாக இருக்க வேண்டும் எனவும் அவை ஒவ்வொன்றிலும் தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதாகும்.
அவ்வப்போது தலையெடுக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் எனும் அழுத்தங்களுக்கு பதிலிறுப்பதற்காகவே அன்று இவ்வாறு வரைவிலக்கணப்படுத்தி சட்டத்தில் உள்வாங்கப்பட்டது. அதேபோல, பெருந்தோட்ட பிரதேசங்கள் எனும்போது அவை மத்திய, ஊவா மாகாணங்களிலிருக்கும் தோட்டங்களையும் மக்களையும் மட்டுமல்ல நாட்டில் பல மாவட்டங்களிலும் பரந்து காணப்படும் தோட்டங்களையும் சமூகத்தையும் உள்ளடக்கும் என்பதும் இச்சட்டத்தால் நிச்சயமாக்கப்பட்டது. மலையக அடையாளத்திற்கான ஆற்புலத்தை இது குறித்து காட்டுகின்றது. அரச பெருந்தோட்டங்கள் (JEDB, SLDPC) மற்றும் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளின் (RPCS) கீழ் இருக்கும் தோட்டங்களைத் தாண்டி 20 ஏக்கருக்கும் மேற்பட்ட, 10 வதிவிட தொழிலாளர்களைக் கொண்ட தனியார் தோட்டங்களையும் அரச அபிவிருத்தி கட்டமைப்பிற்குள் கொண்டுவருவதற்கு இச்சட்டம் வழி சமைத்துள்ளது.
மலையக உரிமை கோரிக்கைகளுள் ஒன்று இச்சமூகத்தின் அபிவிருத்திக்கு விசேட குறைதீர் ஏற்பாடுகள் (Affirmative Action) அவசியம் என்பது. அதிகார சபை இதற்கான ஒரு ஆரம்ப உதாரணமாகும். அது மட்டுமன்றி அரசியலமைப்பு சீர்திருத்த முன்னெடுப்புகளில் மலையக சமூகத்தின் அதிகாரப் பகிர்வு கோரிக்கைகள் சிலவற்றின் நிர்வாகப் பொறிமுறையாக வார்த்தெடுக்கக் கூடிய அமைப்பாக இது காணப்படுகிறது.
அடுத்த கட்ட நடவடிக்கை
அதிகார சபை குறித்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தீர்மானங்கள் மற்றும் சபைக்கான அங்கத்தவர் தெரிவு என்பன இவ்வமைப்பின் முக்கியத்துவம் குறித்த புரிதல் குறைவையும், இத்தகைய தீர்மானங்களில் தாக்கம் செலுத்துவதில் அரசாங்கத்தில் இருக்கும் மலையகப் பரதிநிதிகள் எதிர்நோக்கும் சவால்கள், சிரமங்களையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மலையகம் சார்ந்த கருத்தியல் வறட்சியை எடுத்துக்காட்டுவதாக இருக்கின்றது. இது நாம் கரிசனைக் கொள்ளவேண்டிய விடயமாகும்.
இந்நிலைமையை மாற்றி அதிகார சபையை பாதுகாத்து காத்திரமாக செயற்படவைக்க வேண்டுமெனின்,
- அரசாங்கத்தில் இருக்கும் மலையகப் பிரதிநிதிகள் இவ்வதிகார சபையின் அவசியத்தை, அரசியல் பின்னணியை கட்சி மற்றும் அரசாங்கத்தின் மேல் மட்டங்களில் இருப்பவர்களுக்குப் புரியவைத்து அமைச்சரவை தீர்மானத்தை மாற்றும் படி கோரவேண்டும். அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்தவர் என்ற அடிப்படையில் பிரதமரிடமும் அதற்கு உடன்பாடு தெரிவித்து தொடர் கண்காணிப்பு செய்பவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதியிடமும் இத்தீர்மானத்தை மீளப்பெறுவதற்கான கோரிக்கையை முன்வைத்து அழுத்தம் கொடுக்கவேண்டும். அதிகார சபைக்கான ஆளணி மற்றும் போதியளவான நிதி ஒதுக்கீட்டை எதிர்வரும் வரவு – செலவு திட்டத்தில் கேட்டுப்பெற வேண்டும்.
- எதிர்க்கட்சியில் இருக்கும் எமது பிரதிநிதிகள் இதனை நாடாளுமன்றத்திலும் வெளியேயும் பேசு பொருளாக்கவேண்டும்.
- மலையக பிரதிநிதிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக சிவில் செயற்பாட்டாளர்கள் இது தொடர்பான அழுத்த செயற்பாடுகளையும் தெளிவுபடுத்தும் செயற்பாடுகளையும் பல மட்டங்களிலும் முன்னெடுக்க வேண்டும்.
கௌதமன் பாலசந்திரன்