Photo, JVP SRILANKA

புலம்பெயர் இலங்கை தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் வாழும் மூத்த பத்திரிகையாளரும் சிறந்த அரசியல் ஆய்வாளர்களில் ஒருவருமான டி.பி.எஸ். ஜெயராஜ்  அண்மைக் காலத்தில் எழுதிய கட்டுரைகள் சிலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு நூலாக வெளிவந்திருக்கிறது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கடந்த வருடம் செப்டெம்பரில் இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவரது ஆரம்பகால வாழ்க்கை மற்றும் அரசியல் எழுச்சி குறித்து ஆறு கட்டுரைகளையும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி குறித்து மூன்று கட்டுரைகளையும் ஜெயராஜ் எழுதியிருந்தார். அவற்றின் இந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு ‘அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம்; இலங்கையின் முதலாவது இடதுசாரி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க’ என்று தலைப்பு.

இத்தகையதொரு நூல் வெளிவரப்போகிறது என்று முன்கூட்டியே அறிந்துகொண்ட – ஜெயராஜின் எழுத்துக்களை பற்றி நன்கு தெரிந்த அரசியல் ஆர்வலர்களும் ஊடகவியலாளர்களும் அவர் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் குறித்து மார்க்சியப் பார்வையில் வர்க்க அடிப்படையிலான ஆய்வு ஒன்றைச் செய்து  எழுதியிருக்கிறாரா என்று பதிப்பாளர்களிடம் வினவினார்கள். கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (9/3) மாலை நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்விலும் அந்தக் கேள்வி எழுந்தது. குறிப்பாக, அங்கு உரையாற்றிய சமூக, அரசியல் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான சுவஸ்திகா அருளிங்கம் அந்த விடயம் குறித்து ஒரு வகையான விமர்சன அடிப்படையில் கருத்து வெளியிட்டார்.

திசாநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்துக்கு வந்ததையும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மகத்தான வெற்றிபெற்று அரசாங்கத்தை அமைத்ததையும் அரசியல் அதிகாரத்தின் ஒரு வர்க்க மாற்றமாகக் கருதமுடியாது என்று அவர் கூறினார். தன்னை ஒரு இடதுசாரி என்று அடையாளப்படுத்திக்கொண்டு உரையாற்றிய அவர் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்துக்கு வந்திருப்பதை இலங்கையில் முதலாளி வர்க்கத்தை தோற்கடித்து தொளிலாளி வர்க்கம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியதாக வியாக்கியானம் செய்தலாகாது என்று கூறிவைக்கவே விரும்பினார் என்று தெரிகிறது. நூலின் தலைப்பே இந்த குழப்ப நிலைக்கு காரணமாகும்.

‘அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம்’ என்ற தலைப்புடன் நூல் வெளிவரவிருக்கிறது என்று ஜெயராஜுக்கு அறிவிக்கப்பட்டபோது அவர் தான் அவ்வாறு எந்தவிதமான வர்க்கக் கண்ணோட்டத்தில் திசாநாயக்கவினதும் தேசிய மக்கள் சக்தியினதும் எழுச்சியை பார்க்கவில்லை என்றும் அத்தகைய தலைப்பு தன்னை ஒரு அசௌகரியத்துக்கு உள்ளாக்கிவிடக்கூடும் என்றும் கூறினார். ஜெயராயை பொறுத்தவரை ‘அநுர குமார திசாநாயக்கவின் வாழ்வும் அரசியல் எழுச்சியும்’ என்பதே நூலுக்கு பொருத்தமான தலைப்பு.

‘அநுர குமார திசாநாயக்க இலங்கை வானில் ஒரு இடதுசாரி நட்சத்திரம்’ என்ற தலைப்பிலான முதலாவது கட்டுரையில் ஜெயராஜ் ஜனாதிபதியின் எழுச்சி பற்றிய தனது பார்வையை பின்வருமாறு முன்வைக்கிறார்;

“அநுரா குமார திசாநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற நாளில் இருந்து சர்வதேச ஊடகங்கள் (மேற்கத்தைய மற்றும் இந்திய ஊடகங்கள் ) அவரை மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட்,  நவ மார்க்சிஸ்ட், இடதுசாரி, மத்திய இடது அரசியல்வாதி என்று பலவாறாக வர்ணித்து வருகின்றன. சில இந்திய விமர்சகர்கள் அவருக்கு ‘இந்திய விரோதி’ என்றும் ‘தமிழர் விரோதி’ என்றும் நேர்மையற்ற முறையில் நாமகரணம் சூட்டுகின்றனர். எனது நோக்கில் திசாநாயக்க நிச்சயமாக இடதுசாரிக் கோட்பாடுகளுக்கு தன்னை அர்ப்பணித்த ஒரு இடதுசாரி. ஆனால், பாரம்பரிய அர்த்தத்தில் அவரை ஒரு மார்க்சிஸ்ட் என்று அழைக்கமுடியுமா என்பது சந்தேகமே.

“டொனல்ட் ட்ரம்ப் என்ற பேர்வழி வெள்ளை மாளிகையை அசிங்கப்படுத்துவதற்கு முன்னதாக அந்தக் காலத்தில் அமெரிக்க ஜனாதிபதிகள் பரவலாக பெருமளவுக்கு மதிக்கப்பட்டனர். பல அமெரிக்க ஜனாதிபதிகளின் வாழ்க்கைச் சரிதைகள் வாசித்துச் சுவைக்கப்பட்டன. பலர் ஆபிரகாம் லிங்கனையே சிறந்த அமெரிக்க ஜனாதிபதியாக நோக்குவர். அடிமை முறையை ஒழிப்பதற்கும் அடிமைகளின் தளைகளை அறுத்து அவர்களை விடுவிப்பதற்கும் உள்நாட்டுப்போர் ஒன்றையே நடத்துமளவுக்கு அவர் சென்றார்.

“லிங்கன் மிகவும் எளிமையான பின்புலத்தைக் கொண்ட ஒரு மனிதர். அமெரிக்காவின் அதியுயர்ந்த பதவிக்கு அவரின் உயர்வு ‘மரக்கொட்டகையில் இருந்து வெள்ளை மாளிகைக்கான ஒரு கதை’ என்று அழைக்கப்படும். அதே போன்றே திசாநாயக்கவும் கூட இலங்கையின் முதல் குடிமகனாக வந்திருக்கும் ஒரு சாதாரண மனிதரே. அவரின் உயர்வையும் கூட ‘மண் வீட்டில் இருந்து ஜனாதிபதி மாளிகைக்கு வந்த காவியம்’ என்று வர்ணிக்க முடியும்.”

இலங்கையில் இதுகாலவரையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி வகித்தவர்களில் ரணசிங்க பிரேமதாசவையும் மைத்திரிபால சிறிசேனவையும் தவிர, மற்றையவர்கள் சகலரும் பாரம்பரியமான அரசியல் அதிகார உயர்வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். பிரேமதாசவும் சிறிசேனவும் கூட அந்த உயர்வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வந்திருக்கும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூலமாகவே ஜனாதிபதியாக வந்தனர்.

அதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அந்த அதிகார வர்க்கத்தையும் அதைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளையும் சாராத ஒருவரான, அதுவும் ஒரு காலத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஆயுதக்கிளர்ச்சிகளை நடத்திய இடதுசாரி கட்சியொன்றின் இன்றைய தலைவரான திசாநாயக்க ஜனாதிபதியாக வந்ததில் ஒரு தரம்சார்ந்த மாற்றம் (Qualitative Change) இருக்கிறது. அதை விளங்கிக்கொள்வதில் எவருக்கும் சிரமம் இருக்க முடியாது.  தன்னை ஒரு மார்க்சிய – லெனினியவாதி என்று திசாநாயக்க தற்போது வெளிப்படையாக அடையாளப்படுத்திக்கொள்கிறாரோ இல்லையோ அது வேறு விடயம்.

ஆனால், இடதுசாரி இயக்கம் ஒன்றைச் சேர்ந்த –  ஒரு காலத்தில் ஆட்சியதிகாரத்துக்கு மாத்திரமல்ல, அரசியலிலும் கூட மிகவும் உயர்ந்த இடத்துக்கு வருவது குறித்து நினைத்துப் பார்த்திருக்க முடியாத ஒரு எளிமையான குடும்பப் பின்புலத்தைக் கொண்ட அவர் நாட்டின் அதியுயர்ந்த பதவிக்கு மக்களால் தெரிவாகக் கூடியதாக இருந்ததை ஒரு வித்தியாசமான கோணத்தில் பார்த்தே ஜெயராஜின் நூலுக்கு அந்தத் தலைப்பை வெளியீட்டாளர்கள் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

திசாநாயக்க ஒரு இடதுசாரிக் கிளர்ச்சி மூலமாக ஆட்சிக்கு வரவில்லை. மூன்று வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட படுமோசமான பொருளாதார நெருக்கடியை அடுத்து அன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராக இலங்கை வரலாறு முன்னென்றும் கண்டிராத வகையில் மக்கள் வீதிகளில் இறங்கி கிளர்ச்சி செய்தார்கள். ஆரம்பக்கட்டங்களில் அந்தக் கிளர்ச்சியில் ஒரு அமைதி வழியிலான அரசியல் புரட்சியின் பரிமாணங்கள் தென்பட்டன. தெற்காசிய பிராந்தியத்தில் முதன் முதலாக மக்கள் கிளர்ச்சி ஒரு அரசாங்கத்தை தூக்கியெறிந்த முதல் சந்தர்ப்பமாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவின் வீழ்ச்சி அமைந்தது.

கடந்த வருடம் ஆகஸ்டில் பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனாவை நாட்டை விட்டு விரட்டிய கிளர்ச்சிக்காரர்களுக்கு இலங்கையின் கிளர்ச்சி நிச்சயமாக ஒரு முன்னுதாரணமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பங்களாதேஷில் கிளர்ச்சிக்காரர்களின் பக்கம் நின்ற அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனம் ஒன்றின் தலைவரான முஹமட் யூனுஸ் இடைக்கால தலைவராக வந்ததைப் போன்று,  கோட்டபாய நாட்டை விட்டு தப்பியோடிய பிறகு கிளர்ச்சிக்காரர்கள் ஆட்சிக்கு வரவில்லை. அறகலய கிளர்ச்சியின் முன்னரங்கத்தில் நின்ற செயற்பாட்டாளர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது மக்கள் அவர்களை கருத்தில் எடுக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

அறகலய கிளர்சியின் விளைவாக நாட்டு மக்கள் மத்தியில் பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கத்துக்கும் அதை பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் கட்சிகளுக்கும் எதிராக மக்கள் மத்தியில் வளர்ந்த உணர்வுகளை மிகவும் விவேகமான முறையில் பயன்படுத்தி திசாநாயக்கவினால் ஜனாதிபதியாகவும் தேசிய மக்கள் சக்தியினால் ஆளும் கட்சியாகவும் வரமுடிந்தது. இதை தொழிலாளர் வர்க்கம் இடதுசாரி இயக்கம் ஒன்றின் தலைமையில் அதிகாரத்துக்கு வந்திருப்பதாக எவரும் கூறவில்லை. ஜனாதிபதியோ அல்லது தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களில் எவருமோ கூட அவ்வாறு கூறவில்லை.

இடதுசாரிகளினால் இலங்கையில் ஒருபோதும் அதிகாரத்துக்கு வரமுடியவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்த இடதுசாரி செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களில் ஒரு பிரிவினர் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்துக்கு வந்ததை அடுத்து தங்களுக்குள் திருப்திப் பட்டுக்கொண்டார்கள்.

ஆனால், முன்னர் ஆட்சியதிகாரத்தில் இருந்தவர்களை விடவும் வேறுபட்ட சமூகப் பின்னணியுடனான அதிகப் பெரும்பான்மையானவர்களைக் கொண்டதாக இன்றைய அரசாங்கம் இருக்கிறது. இதை கடந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு எழுதிய கட்டுரை ஒன்றில் இலங்கையின் முக்கியமான அரசியல் நிபுணரான பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட மிகவும் தெளிவான முறையில் விளக்கியிருந்தார்.

“இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க பதவியேற்ற நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புதிய தொடக்கம் ஒன்றை குறித்து நிற்கிறது. அரசியல் அதிகாரத்தின் வர்க்கத் தளங்களில் ஒரு திடீர் நகர்வை அடையாளப்படுத்துவதாக அந்தத் தொடக்கம் அமைகிறது. அதாவது கொழும்பை மையமாகக் கொண்ட – மேற்கத்தைய பாணி வாழ்க்கை முறையைப் பின்பற்றும் வசதிபடைத்த ஒரு சிறிய எண்ணிக்கையான  பிரிவினரிடம் இருந்து அதிகாரத் தளங்கள் உயர் வர்க்கத்தைச் சாராத சமூக சக்திகளின் கூட்டணி ஒன்றுக்கு நகர்ந்திருக்கிறது.

“காலனித்துவ ஆட்சியாளர்களிடம் இருந்து சுதந்திரமடைந்த நாளில் இருந்து இலங்கையின் ஜனநாயகம் அரசியல் அதிகாரத்தில் உயர் வர்க்கத்தவர்களின் இடையறாத தொடர்ச்சியை உத்தரவாதம் செய்திருந்தது என்றால், இப்போது அது கடந்த காலத்தில் இருந்து ஒரு விலகலை ஏற்படுத்தியிருக்கிறது; அது ஜனநாயகத்தினாலும் சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தல்களினாலும் அவ்வப்போது தோற்றுவிக்கப்படக் கூடிய ஒரு வியத்தகு தருணமாகும்.

“குறிப்பாக, தேர்தல் முடிவுகள் அமைதியான – இரத்தம் சிந்தாத அதிகார மாற்றத்தைக் குறித்து நிற்கிறது. சுமார் ஏழு தசாப்தங்களாக வசதிபடைத்த சமூக வர்க்கங்களின் பிறப்புரிமை போன்று நிலைத்திருந்த ஊழல்தனமானதும் நாட்பட்டுப் போனதுமான அரசாங்க முறைமை ஒன்றை முழுவதுமாக மாற்றியமைப்பதற்கான வாக்குறுதியுடன் புதிய ஜனாதிபதி தனது மக்கள் ஆணையைப் பெற்றிருக்கிறார். நிறுவனமயப்படுத்தப்பட்டிருந்த அரசியல் அதிகாரத்தின் மீதான வர்க்க ஏகபோகம் ஜனநாயகத்தின் ஊடாக பொதுமக்களினாலேயே இப்போது தகர்க்கப்பட்டிருக்கிறது” என்று பேராசிரியர் உயன்கொட எழுதினார்.

‘அறகலய’ மக்கள் கிளர்ச்சி ‘முறைமை மாற்றத்தையும்’ புதிய அரசியல் கலாசாரத்தையும் வேண்டி நின்றது. அந்த சுலோகங்களை தனது கையில் எடுத்துக் கொண்டு தேர்தல்களைச் சந்தித்த  ஜனாதாபதி திசாநாயக்கவிடம் ‘மெய்யான மாற்றம்’ ஒன்றுக்கு வழிவகுக்கக்கூடிய ‘புதிய தொடக்கம்’  ஒன்றையே மக்கள் எதிர்பார்த்தார்கள். நாட்டை ஆட்சிசெய்ய வேண்டியவர்கள் யார் என்பதை தீர்மானிப்பதில் வழமைக்கு மாறான தீவிர மாற்றத்தைச் செய்ததன் மூலமாக அந்தப் புதிய தொடக்கத்தை நோக்கிய திசையில் முதலாவது அடியை இலங்கை மக்கள் எடுத்துக் கொடுத்தார்கள்.

ஆனால், முறைமை மாற்றம் என்பதையும் புதிய கலாசாரம் என்பதையும்  மக்கள் மாத்திரமல்ல, தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களும் கூட எவ்வாறானதாக விளங்கி வைத்திருக்கிறார்கள் என்பது தொடர்பில் சந்தேகம் எழக்கூடியதாக கடந்த ஆறு மாதகால அரசியல் மற்றும் ஆட்சிமுறை நிகழ்வுப் போக்குகள் அமைந்திருக்கின்றன.

இலங்கையில் புதிய அரசியல்  கலாசாரம் என்பது வெறுமனே ஊழல் முறைகேடுகளும் அதிகார துஷ்பிரயோகமும் இல்லாத ஆட்சிமுறை என்று மாத்திரம் அர்த்தப்பட்டுவிடாது. சகல சமூகங்களையும் அவலத்துக்கு உட்படுத்திய  மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்த தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயபூர்வமான அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காணவேண்டிய தேவையை தென்னிலங்கை மக்கள் உணரக்கூடிய சூழ்நிலை ஒன்றை உருவாக்குவதும் அந்த புதிய அரசியல் கலாசாரத்தின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருக்க வேண்டும்.

சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளையும் மனக்குறைகளையும் ஏற்றுக்கொள்கின்ற மனநிலை தென்னிலங்கை அரசியல் சமுதாயத்துக்கு ஏற்படாத பட்சத்தில் புதிய கலாசாரம் என்பதில் எந்தவிதமான அர்த்தமும் இருக்கப்போவதில்லை. இதை தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் புரிந்துகொண்டதற்கான எந்த அறிகுறியையும் கடந்த ஆறு மாதங்களில் காணமுடியவில்லை. ​

பழைய அரசியல் அதிகார வர்க்கத்துக்கு காலங்காலமாக சேவை செய்த அரசு இயந்திரத்தை வைத்துக் கொண்டு பழைய ஒழுங்கை மாற்றுவதை நோக்கிய செயற்பாடுகளை ஒரு இடதுசாரிக் கட்சி முன்னெடுப்பதில் உள்ள சிரமங்களை ஜனாதிபதி திசாநாயக்கவும் தேசிய மக்கள் சக்தியின் குறிப்பாக ஜேவி.பியின் தலைவர்களும் இதுவரையில் விளங்கிக் கொண்டிருப்பார்கள்.

உயர் சமூக வர்க்கங்களைச் சாராத பிரதிநிதிகள் என்ற வகையில் ஜனாதிபதி திசாநாயக்கவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் மாற்றத்தை வேண்டி நிற்கும் சகல சமூகங்களையும் சேர்ந்த மக்களின் எதிர்பார்ப்புகளையும் உணர்வுகளையும் மதித்துச் செயற்படக்கூடிய ஆட்சியாளர்களாக தங்களால் மாறமுடியும் என்பதை இதுவரையான செயற்பாடுகள் மூலமாக எந்தளவுக்கு நிரூபித்திருக்கிறார்கள் என்ற முக்கியமான ஒரு கேள்வி இருக்கிறது.

வீரகத்தி தனபாலசிங்கம்