Photo, REUTERS
மீண்டும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளில் இறங்குவார் என்பது எதிர்பார்க்கப்பட்டதே. ஜனவரி 20ஆம் திகதி பதவியேற்ற மறுகணமே அவர் பிறப்பித்த உத்தரவுகள் தொடக்கம் கடந்த ஒரு மாதகாலமாக அவரது நிருவாகத்தின் நடவடிக்கைகள் சர்வதேச கடப்பாடுகளில் இருந்து விலகுவதே அவரது வெளியுறவுக் கொள்கையின் தீர்க்கமான அம்சமாக இருக்கிறது என்பதை மீண்டும் தெளிவாக நிரூபித்து நிற்கின்றன.
உலக சுகாதார நிறுவனம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் சர்வதேச உடன்படிக்கை ஆகியவற்றில் இருந்து விலகியதைத் தொடர்ந்து அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிகளை இடைநிறுத்துவதற்கும் ட்ரம்ப் நிருவாகம் தீர்மானித்தது.
அமெரிக்காவின் உலகளாவிய உதவிக்கான ஒரு கட்டமைப்பாக ஆறு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக செயற்பட்டு வந்திருக்கும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவன நிறுவனம் ‘ யூ.எஸ். எயிட்’ (United States Agency for International Development – USAID) செயற்திறன் அற்றதாகவும் கோட்பாட்டு முரண்பாடுகளை கொண்டிருப்பதாகவும் ஒரு காரணத்தைக் கூறி ட்ரம்ப் நிருவாகம் வெளிநாட்டு உதவிகளை 90 நாட்களுக்கு முடக்கியிருக்கிறது. அந்த நிறுவனத்தை மூடி இராஜாங்கத் திணைக்களத்துடன் இணைக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
அமெரிக்க அரசாங்கத்தின் நிறுவனங்கள் அமெரிக்காவின் உலக மேலாதிக்க மற்றும் மூலோபாய நலன்களை பேணிப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கின்ற போதிலும், உலகம் பூராவும் வாஷிங்டனின் மென் அதிகாரத்தை (Soft Power) மேம்படுத்தும் ஒரு முக்கிய கருவி என்று வர்ணிக்கப்பட்டுவந்த யூ.எஸ்.எயிட் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான டொலர்கள் உதவிகளை நாடுகளுக்கும் அமைப்புகளுக்கும் வழங்கிவருகிறது. வெளிநாட்டு உதவிகளை முடக்கும் ட்ரம்ப் நிருவாகத்தின் தீர்மானத்தின் விளைவாக உயிர் வாழ்வுக்காக அமெரிக்க உதவியில் தங்கியிருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு பாரதூரமான பாதிப்பு ஏற்படப் போகிறது.
அமெரிக்க அரசாங்கத்தின் செயற்திறன் திணைக்களத்தின் (Department of Government Efficiency) தலைவரான உலகின் பெரிய தனவந்தர் இலன் மஸ்க் யூ.எஸ். எயிட் நிறுவனம் அமெரிக்கவை வெறுக்கும் தீவிரவாத இடது – மார்க்சியவாதிகளினதும் நம்பமுடியாத பயங்கரமான கும்பல்களினதும் கூடாரமாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
எந்தவிதமான சான்றையும் முன்வைக்காமல் யூ.எஸ்.எயிட்டை ‘கிறிமினல் அமைப்பு’ என்று என்று வர்ணித்த மஸ்க் ‘அந்த நிறுவனம் சாவதற்கான நேரம் வந்து விட்டது’ என்றும் கூறினார். அதேவேளை, ஜனாதிபதி ட்ரம்ப் யூ.எஸ்.எயிட் தீவிரவாத கிறுக்கர்கள் கும்பல் ஒன்றினால் நிருவகிக்கப்பட்டு வந்ததாகவும் அவர்களை தாங்கள் வெளியேற்றிக் கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் கூறினார்.
வெளிநாடுகளுக்கு உதவிகளை வழங்குவதற்கு இதுகாலரை அமெரிக்க நிருவாகங்கள் கடைப்பிடித்து வந்திருக்கும் கொள்கைகளும் நடைமுறைகளும் பல சந்தர்ப்பங்களில் அமெரிக்காவின் நலன்களுக்கும் விழுமியங்களுக்கும் முரணானவையாக அமைந்திருப்பதாக கருதும் ட்ரம்ப் “அந்த உதவிகள் வெளிநாடுகளின் சிந்தனைகளை மேம்படுத்துவதற்கும் நாடுகளுக்குள்ளும் நாடுகள் மத்தியிலும் இணக்கப்போக்கான, உறுதிவாய்ந்த உறவுகள் பாதிக்கப்படுவதற்கும் வழிவகுத்திருப்பதாக” கூறுகிறார்.
ட்ரம்ப் நிருவாகத்தின் இந்தத் தீர்மானங்களை உலக நாடுகளும் சர்வதேச அமைப்புக்களும் கடுமையாகக் கண்டனம் செய்துவருகின்ற அதேவேளை, இலங்கையில் இரு அரசியல்வாதிகள் ஆதரித்து விசித்திரமான கருத்துக்களை வெளியிட்டு ட்ரம்பின் விசிறிகள் போன்று நடந்துகொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ஷவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்சவுமே அவர்கள்.
இலங்கையில் யூ.எஸ். எயிட்டின் நிதியுதவிகள் குறித்து விசாரணை செய்வதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்த நாமல் ராஜபக்ஷ “மற்றைய நாடுகளின் விவகாரங்களில் தலையீடு செய்யாத “ட்ரம்பின் கொள்கையை பாராட்டியிருப்பதுடன் அமெரிக்க வரியிறுப்பாளர்களின் நிதி ஒதுக்கீடுகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
வெளிநாடுகளில் அரசாங்கங்களுக்கு எதிராக கிளர்ச்சிகளை தூண்டிவிடும் நடவடிக்கைகளுக்கு யூ.எஸ். எயிட்டின் நிதி பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதாகவும் ட்ரம்ப் கூறியிருப்பது நாமல் ராஜபக்ஷவை கவர்ந்திருக்கிறது போன்று தெரிகிறது. தங்களது ஆட்சிக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியின் பின்னணியில் வெளிநாட்டுச் சதி இருந்ததாக கூறும் ராஜபக்ஷர்களுக்கு உலகம் வெறுக்கின்ற ட்ரம்ப் ஒரு ‘சிறந்த அரசியல்ஞானியாக’ தெரியும் விசித்திரம்.
அதேவேளை, அமெரிக்காவை வெறித்தனமாக தாக்கிப் பேசுவதை வழக்கமாகக் கொண்ட விமல் வீரவன்சவும் யூ.எஸ். எயிட் நிறுவனத்தின் ‘தவறான செயல்களை’ ஜனாதிபதி ட்ரம்ப் அம்பலப்படுத்துவதாகக் கூறி அவரை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார். அவர் எக்ஸ் சமூக ஊடகத்தில் செய்திருக்கும் பதிவொன்றில் “அமெரிக்க தனவந்தர் ஜோர்ஜ் சோரோஸ் ஊடாக வழங்கப்படும் யூ.எஸ். எயிட் நிதியுதவி இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் தோற்றுவித்த நெருக்கடிகளை அம்பலப்படுத்துகின்றமைக்காக அமெரிக்க ஜனாதிபதிக்கு நன்றி. குழப்ப நிலைகளுக்கு ஆதரவளிக்கின்ற தூதுவர்களையும் அம்பலப்படுத்துமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
டொனால்ட் ட்ரம்பை வெளிநாடுகளின் விவகாரங்களில் தலையீடுகளைச் செய்யாத வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடிப்பவராக ராஜபக்ஷவும் வீரவன்சவும் ‘கண்டுபிடித்திருப்பது’ தான் இங்கு விசித்திரமான ஒரு விடயமாகும். டென்மார்க் நாட்டுக்குச் சொந்தமான கிறீன்லாந்து தீவை அமெரிக்காவுக்கு சொந்தமாக்கப் போவதாகவும் மத்திய கிழக்கில் காசா பள்ளத்தாக்கில் இருந்து பாலஸ்தீன மக்களை வெளியேற்றிவிட்டு அந்தப் பள்ளத்தாக்கை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப் போவதாகவும் கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக்குவதற்கு விரும்புவதாகவும் ட்ரம்ப் கூறியதை அறிந்த பின்னரும் கூட இந்த இரு இலங்கை அரசியல்வாதிகளும் ட்ரம்பை ‘தலையீடு செய்யாத கொள்கைக்காக’ பாராட்டுகிறார்கள் என்றால் அதை என்னவென்று சொல்வது?
ராஜபக்ஷவும் வீரவன்சவும் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் மீதான தங்களது வெறுப்பின் காரணமாகவே யூ.எஸ். எயிட் மீதான ட்ரம்ப் நிருவாகத்தின் தாக்குதலை ஆதரிக்கிறார்கள் என்று தெரிகிறது. மூன்று வருடங்களுக்கு முன்னர் ராஜபக்ஷர்களின் ஆட்சியை வீழ்த்திய மக்கள் கிளர்ச்சியின் பின்னணியில் வெளிநாடுகளிடம் இருந்து உதவிகளைப் பெறும் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களும் செயற்பட்டதாக இவர்கள் ஏற்கெனவே குற்றஞ்சாட்டி வந்திருக்கிறார்கள். பல தொண்டர் நிறுவனங்களுக்கும் சிந்தனைக் குழாம்களுக்கும் (Think Tanks ) எதிரான தங்களது தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்துவதற்கு யூ.எஸ். எயிட்டுக்கு எதிராக ட்ரம்ப் நிருவாகம் நடவடிக்கையில் இறங்கியிருக்கும் இன்றைய சந்தர்ப்பத்தை இவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
வீரவன்சவை பொறுத்தவரை, உள்நாட்டுப் போர் காலகட்டத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்த மனிதாபிமான பெரும் இடர்பாடுகளுக்கு மத்தியில் செய்த மனிதாபிமான உதவிகளைக் கூட பயங்கரவாதத்துக்கும் பிரிவினைவாதத்துக்கும் வழங்கப்படும் ஆதரவு என்று விமர்சித்தவர். இராணுவ ரீதியாக அன்றி அரசியல் ரீதியாக தேசிய இனப்பிரச்சினைக்கு இணக்கத் தீர்வைக் காணவேண்டும் என்று குரல் கொடுத்த தொண்டர் நிறுவனங்களுக்கு எதிரான விசமத்தனமான பிரசாரங்களின் முன்னரங்கத்தில் வீரவன்ச போன்றவர்கள் நின்றார்கள்.
அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்கும் சிவில் சமூக அமைப்புக்களுக்கும் எதிராக ‘போர்க்கொடி’ தூக்கியவர்கள் பெரும்பாலும் இலங்கையில் சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளில் குறைந்தபட்சமானவற்றைக் கூட ஏற்றுக் கொள்ளத் தயாரில்லாதவர்கள். இன்று இத்தகையவர்கள் நிறவெறியையும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான உணர்வுகளையும் கொண்ட ஒரு அமெரிக்க ஜனாதிபதியை பாராட்டுவதில் திருப்தி காண்கிறார்கள்.
அமெரிக்க மக்களின் வரிப்பணம் வெளிநாடுகளில் ஒதுக்கீடு செய்யப்படுவதில் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ தங்களது குடும்பத்தின் ஆட்சிக் காலத்தில் சொந்த நாட்டு மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டதில் இருந்த வெளிப்படைத் தன்மையின் இலட்சணத்தை ஒருகணம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
இவர்களுக்கும் ட்ரம்புக்கும் இடையே உணர்வுகள் ஒத்துப் போவதற்கு காரணம் ‘மற்றவர்கள்’ மீதான வெறுப்பேயாகும். குறுகிய மனப்பான்மை என்பது பெரும்பாலும் வெறுப்புணர்வில் இருந்தே வெளிக்கிளம்புகிறது. அமெரிக்காவில் சிறுபான்மைச் சமூகங்களுக்கும் குடியேற்றவாசிகளுக்கும் எதிரான வெறித்தனமான உணர்வைக் கொண்ட ஜனாதிபதி ட்ரம்ப்பை, தங்களது அரசியல் மீட்சிக்கு இனவாதத்தில் மாத்திரம் நம்பிக்கை கொண்டிருக்கும் இவர்கள் கோட்பாட்டு அடிப்படையிலான தங்களது நேசசக்தியாக வரித்துக் கொள்வதில் காட்டும் நாட்டம் ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல.
யூ.எஸ். எயிட் உதவி நிறுத்தம் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களை மிகவும் கடுமையாகப் பாதித்திருக்கிறது. அத்தகைய நிறுவனங்கள் சகலதுமே வெளிப்படைத் தன்மையுடனும் நேர்மையாகவும் செயற்படுகின்றன என்று கூறமுடியவிட்டாலும், உண்மையில் சமூகங்களின் நலன்களுக்காக பயனுறுதியுடைய செயற்திட்டங்களை முன்னெடுக்கும் நிறுவனங்கள் பாதிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது.
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்று பணிப்பாளரான கலாநிதி ஜெகான் பெரேரா கடந்தவாரம் ‘முற்றுகைக்குள்ளாகியிருக்கும் யூ.எஸ். எயிட்டும் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களும்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் பட்டினிக் கொடுமை மற்றும் போர்ச் சூழல்களில் மக்களின் இடர்பாடுகளைத் தணிப்பதில் அமெரிக்க உதவி முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தை வகிக்கும் உலகின் பிராந்தியங்களில் பெரும் எண்ணிக்கையான மக்களின் உயிர்வாழ்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது என்கின்ற அதேவேளை, யூ.எஸ். எயிட் உதவி நிறுத்தம் இலங்கையில் முற்றிலும் வேறுபட்ட காரணத்துக்காக செய்திகளில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இலங்கையிலும் உலகம் பூராவும் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கின்றன. இந்த நிறுவனங்களுக்கு இதுகாலவரையில் மிகவும் பெரியளவில் நிதியுதவியைச் செய்த நிறுவனமாக யூ.எஸ். எயிட் விளங்கி வந்திருக்கும் நிலையில், நிதியுதவி இடைநிறுத்தம் பல தொண்டர் நிறுவனங்கள் அவற்றின் ஊழியர்களின் எண்ணிக்கையில் குறைப்புச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பது மாத்திரமல்ல, சில தொண்டர் நிறுவனங்கள் ஏற்கெனவே மூடப்பட்டும் விட்டன என்றும் ஜெகான் பெரேரா கூறியிருக்கிறார்.
முன்னைய அரசாங்கங்களில் முக்கிய பொறுப்புக்களை வகித்த அரசியல்வாதிகள் ஊழல் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைகளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவர்களே மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக யூ.எஸ். எயிட் உதவி நிறுத்தப்பட்ட சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்கும் சிவில் சமூக அமைப்புக்களுக்கும் எதிராக பிரசாரங்களை முன்னெடுத்திருக்கிறார்கள். தங்களது வீழ்ச்சிக்குத் தவறான ஆட்சிமுறையும் ஊழல் முறைகேடுகளுமே உண்மையில் காரணம் என்பதை இந்த அரசியல்வாதிகள் இன்னமும் புரிந்துகொள்ளவில்லை. யூ.எஸ். எயிட்டின் நிதியுதவியைப் பெற்றுவந்த அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் சதி வேலைகள் காரணமாகவே தாங்கள் இடைநடுவில் அதிகாரத்தில் இருந்து விரட்டப்பட்டதாக இவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள் என்றும் ஜெகான் பெரேரா எழுதியிருக்கிறார்.
யூ.எஸ். எயிட் உதவி திடீரென்று இடை நிறுத்தப்பட்டதனால் இலங்கை உதவிகளைப் பெறுவதற்கு ‘மாற்றுவழிகளை நாடவேண்டியிருக்கும்’ என்று அரசாங்க பேச்சாளரான சுகாதார, தகவல்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியிருக்கிறார். யூ.எஸ். எயிட் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து அந்த நிறுவனம் இலங்கைக்கு 200 கோடி டொலர்களை (சுமார் 72 ஆயிரம் கோடி ரூபா) உதவியாக வழங்கியிருக்கிறது என்று கூறப்படுகிறது.
கெடுபிடியுத்தம் (Cold War ) உச்சக்கட்டத்தில் இருந்த காலப்பகுதியில் உலக நாடுகளில் சோவியத் யூனியனின் செல்வாக்கை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் முக்கியமான ஒரு அங்கமான வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைப்பதற்காக ஜனநாயக கட்சி ஜனாதிபதியான ஜோன் எவ். கென்னடியினால் 1961ஆம் ஆண்டில் யூ.எஸ். எயிட் நிறுவனம் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வீரகத்தி தனபாலசிங்கம்