Photo, @anuradisanayake
உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் சிக்ஸர் அடிக்கவே முயற்சிக்கிறது தேசிய மக்கள் சக்தி. குறிப்பாக வடக்குக் கிழக்கில் உள்ளூராட்சி மன்றங்களிலும் தன்னுடைய கொடியை ஏற்ற விரும்புகிறது. இந்த நோக்கத்தையும் சேர்த்தே கடந்த சில நாட்களுக்கு முன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்துக்கான தன்னுடைய பயணத்தைத் திட்டமிட்டிருந்தார். யாழ்ப்பாணத்துக்கு வந்த அநுர, மிருசுவில், நெல்லியடி, வல்வெட்டித்துறை என்று பல இடங்களுக்கும் சென்றார்.
இதன்போது ஜனாதிபதி என்ற பெரிய பந்தா ஒன்றும் இல்லாமல் எளிமையாக (Simply யாக) பழகுவதைப்போலொரு தோற்றத்தைக் காட்டினார் அநுர. இதனால் அநுர செல்லுமிடமெங்கும் சனங்களும் திரண்டனர். சனங்களுக்கு இப்பொழுது அநுரதான் ஹீரோ. இதனுடைய உச்சக்கட்டமாக அநுரவின் வருகையையொட்டி பிரபாகரனுடைய ஊரான வல்வெட்டித்துறையில் கொடி பறக்கும் நிகழ்ச்சி (பட்டமேற்றும் நிகழ்வு) ஒன்றும் மக்கள் சந்திப்பும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அரசியல் அர்த்தத்தில் ‘காலமாற்றத்தை உணருங்கள்’ என்று சொல்லாமல் சொல்லும் குறியீட்டு நிகழ்ச்சியே இதுவாகும். அதாவது சூழல் மாற்றம், காலமாற்றம், நிலைமாற்றம் ஆகிய மூன்றையும் இது பிரதிபலிக்கிறது எனலாம்.
இதைப்பற்றிப் பேசியபோது உணர்ச்சி மேலிட “விடுதலைப் புலிகள் புகழோடிருந்த காலத்தில் கூட வல்வெட்டித்துறையில் பிரபாகரன் இப்படி வெளிப்படையாக மக்கள் மத்தியில் வந்ததில்லை” என்றார் அந்த ஊர்வாசி ஒருவர்.
இப்பொழுது அதே விளையாட்டைக் காட்டுவதற்காக பிரதமர் ஹரிணி அமரசிங்க யாழ்ப்பாணத்துக்கு வந்து சென்றிருக்கிறார். யாழ்ப்பாணத்துக்கு வந்த ஹரிணி, போகாத இடமில்லை. சந்திக்காத ஆட்களில்லை என்ற அளவுக்குப் பல இடங்களுக்கும் சென்று திரும்பியிருக்கிறார். போகுமிடங்களில் குழந்தைகள், முதியோர், பெண்கள் என எல்லோரோடும் மிகச் சாதாரணமாக (casually) பழகியிருக்கிறார் பிரதமர். பெரும்பாலான பெண்களுக்கு ஹரிணி, ஹீரோயினி ஆகிவிட்டார்.
இதற்கு முன்பு வடக்கிற்கு வந்த ஏனைய சிங்களத் தலைவர்களுடன் இந்தளவுக்கு தமிழ்ச்சனங்கள் நெருக்கத்தைக் காட்டியதில்லை. அவர்களும் தமிழ்ச்சனங்களோடு நெருங்கிக் கொண்டதில்லை. அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்தால், ஜெட் விங்கில் அல்லது ரில்கோ போன்ற உல்லாச விடுதிகளில் தங்குவார்கள். நல்லூர் முருகன் கோயிலுக்குச் செல்வார்கள். அதற்கப்பால் எனில் ‘உதயன்’ பத்திரிகை அலுவலகத்துக்குப் போவதுண்டு. அல்லது சரவணபன் வீட்டுக்குக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வார்கள். மாவட்ட நிர்வாகச் சந்திப்புகளை நடத்துவதாக இருந்தால், U.S உல்லாச விடுதியில் (அரச கணக்கில்) செய்வார்கள்.
எல்லாமே சனங்கள் நெருங்க முடியாத அளவுக்கு உயர்நிலையில் இருக்கும். அரசியற் பிரதிநிதிகள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஒரு சில உயர் வர்க்கத்தினரைத் தவிர, வேறு யாரும் நெருங்கவே முடியாத அளவுக்குத்தான் அந்தத் தலைவர்கள் நடந்து கொண்டனர்.
அநுரவும் ஹரிணியும் தேசிய மக்கள் சக்தியின் ஏனைய அமைச்சர்களும் இதையெல்லாம் உடைத்தெறிந்தனர். சாதாரண உடையில், சாதாரணமான நிலையில் தங்களை மாற்றிக் கொண்டு மக்களுடன் கலக்கின்றனர். மாவட்டச் செயலர், பிரதேச செயலர், துறைசார் அதிகாரிகளைக் கூட உத்தியோகத்தர்களும் மக்களும் எட்ட நின்றே சந்திக்க வேண்டியிருக்கின்ற சூழலில் ஜனாதிபதியும் பிரதமரும் அமைச்சர்களும் சாதாரண மக்களுடன் எளிமையாக – எளிதில் – சந்திப்பதும் பழகுவதும் சனங்களுக்கு இன்ப அதிர்ச்சியே. மறுவளமாக யாழ்ப்பாணத்தின் தமிழ் மேட்டிமைத்தனச் சிந்தனையாளர்களுக்கும் அந்த வழியிலான அரசியலாளர்களுக்கும் இதுவொரு அரசியற் கலாச்சார அதிர்ச்சியை அளித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் அரசியல் நடவடிக்கைகளும் அணுகுமுறையும் நேரடியாகச் சனங்களிடம் நெருக்கத்தையும் செல்வாக்கையும் உண்டாக்கும் முயற்சிகளாகும் – தந்திரோபாயங்களேயாகும். அதற்கு ஓரளவுக்குப் பயனும் கிடைத்துள்ளது போலவே தெரிகிறது.
இப்போது யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் காட்டும் நெருக்கத்தை விட, அவர்களுக்குக் கொடுக்கின்ற வரவேற்பை விட அநுர, ஹரிணி போன்றோருக்கு மக்கள் காட்டுகின்ற வரவேற்பும் நெருக்கமும் கூடுதலாகவே உள்ளது.
அநுரவும் ஹரிணியும் தங்களுடைய ஆதர்சத் தலைவர்கள் என்று நம்புகின்றனர் மக்கள்.
ஜனாதிபதியும் பிரதமரும் மட்டுமல்ல, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமாரகே, காணி, நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த போன்றோரும் வடக்குக்கு வந்து சென்றிருக்கிறார்கள். இதைப்போல இன்னொரு அணி கிழக்கிற்கும் சென்றிருக்கிறது.
இதற்கு அடுத்த கட்டமாக இப்பொழுது வரவு செலவுத் திட்டத்திலும் வடக்குக் கிழக்கிற்கு விசேட கவனத்தைக் கொடுத்துள்ளது NPP. காங்கேசன்துறை, மாங்குளம் ஆகிய இடங்களில் கைத்தொழில் பூங்காக்கள். பரந்தனில் இராயனத் தொழிற்சாலையை மீள ஆரம்பித்தல். யாழ்ப்பாண பொது நூலகத்தை விரிவாக்கம் செய்தல். முல்லைத்தீவு வட்டுவாகல் (வெட்டுவாய்க்கால்) பாலத்தை நிர்மாணித்தல். தெங்கு முக்கோண வலயத்தை உருவாக்குதல். மீள் குடியேற்றம் மற்றும் வீட்டு நிர்மாணம் உட்பட வடக்குக் கிழக்குக்கு வரவு செலவுத்திட்டத்தில் 5000 பில்லியன் ரூபாயை ஒதுக்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு, அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பள உயர்வு, பல்கலைக் கழக மாணவர்களுக்கான மகாபொல கொடுப்பனவு, முதியோருக்கான உதவித்தொகை அதிகரிப்பு, உடகவியலாளர்கள் – கலைஞர்களுக்கான வசதிகள், புத்தாண்டுக்கான பொதி வழங்கும் திட்டம், கோதுமை மாவின் விலைக்குறைப்பு என வேறு சில பல கவர்ச்சிகரமான அம்சங்களையும் வரவு செலவுத்திட்டத்தில் அரசாங்கம் (அநுர) அறிவித்திருக்கிறது.
இதன் மூலம் சில விடயங்களை நிறைவேற்ற முற்பட்டிருக்கிறது தேசிய மக்கள் சக்தி.
- நாடாளுமன்றத் தேர்தலில் வடக்குக் கிழக்கு மாகாண மக்கள், தேசிய மக்கள் சக்தியை ஆதரித்ததற்கான நன்றிக்கடனை நிறைவேற்றுதல்.
- வடக்குக் கிழக்கிலுள்ள அதிலும் குறிப்பாக வடக்கிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றுவதற்கான சூழலை உருவாக்குதல். மக்களின் ஆதரவைப் பெருக்குதல்.
- உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்திக்கு வெற்றி கிட்டினால், உடனடியாகவே அது மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடிய சூழலை உருவாக்கும். அதிலும் வெற்றி கிடைக்குமானால், அரசியலமைப்பை நிறைவேற்றக் கூடிய வாய்ப்பு இலகுவாகக் கிடைக்கும்.
- பிராந்திய அரசியலை ((Regional Politics) முடிவுக்குக் கொண்டு வந்து தேசிய அரசியலை (National Politics) நிலைப்படுத்தக் கூடியதாக இருக்கும்.
- இதெல்லாம் இதுவரையிலும் ஆட்சியதிகாரத்திலிருந்த ஐ.தே.க, சு.க, பொதுஜன பெரமுன போன்றவை சாதிக்க முடியாததை, தேசிய மக்கள் சக்தி சாதித்ததாக ஒரு வரலாற்றைப் படைப்பதாக இருக்கும்.
ஆகவே, முதற் குறியாக வடக்குக் கிழக்கில் உள்ளூராட்சி மன்றங்களில் வெற்றியைப் பெறுவதற்கு NPP முயற்சிக்கிறது. அத்துடன், வடக்குக் கிழக்கில் உள்ள ப.நோ. கூ. சங்கங்கள், தெங்கு பனை அபிவிருத்திச் சங்கங்கள், கடற்தொழிற் சங்கங்கள், பெண்கள் அமைப்புகள், வர்த்தகர் சங்கங்கள் என அனைத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் அல்லது செல்வாக்கின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் தீவிரமாக இயங்குகிறது.
இதற்காக தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர்களும் அதனுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆட்சேர்ப்பு, அணி சேர்ப்பு, ஆதரவு திரட்டல் எனப் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஏறக்குறைய போர்க்கால நடவடிக்கையைப்போல அதிதீவிரச் செயற்களமொன்று திறக்கப்பட்டுள்ளது.
ஊர்களில் யாரெல்லாம் பிரமுகர்களாக – செல்வாக்குள்ளவர்களாக இருக்கிறார்களோ அவர்களையெல்லாம் வளைத்துப் பிடிக்கும் (வலை வீசிப் பிடிக்கும்) நடவடிக்கை துரிதமாக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியோடு எப்படித் தொடர்பை ஏற்படுத்துவது? எவ்வாறு நெருக்கத்தை உண்டாக்குவது? எனத் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு இது தேடித்திரிந்த தெய்வத்தை நேரில் சந்தித்ததைப்போல ஆகியுள்ளது. இதனால் தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவுத் தளம் மேலும் விரிவடையத் தொடங்கியுள்ளது.
கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி, அனைத்து நிலைகளிலும் தன்னைப் பலப்படுத்திக் கொள்ளவே தேசிய மக்கள் சக்தி முயற்சிக்கிறது. இது 2008 க்கு முன், விடுதலைப்புலிகள் செயற்பட்டதற்கு ஒத்ததாகும். தமக்குக் கீழ் அனைத்தையும் கொண்டு வருதல். ஆயுதம் தாங்கிய இயக்கங்களிடம் இத்தகைய குணாம்சம் இருப்பதுண்டு. தேசிய மக்கள் சக்தியின் பிரதான மையமான ஜே.வி.பி என்ற ஆயுதம் தாங்கிய வரலாற்றைக் கொண்ட இயக்கம் – அமைப்பு – இருக்கின்ற காரணத்தினால், அதனிடமும் இத்தகைய பண்பு மேலோங்கியுள்ளது.
மட்டுமல்ல, மக்களுடன் நெருக்கமாகி வேலை செய்யும் ஒரு நீண்ட அனுபவம் ஜே.வி.பி (NPP) க்கு உண்டு. அதனுடைய அரை நூற்றாண்டுக்கு மேலான வரலாற்றில் அது மக்களுடனான அரசியலையே செய்து வந்துள்ளது. அதிகாரத்துக்கு இப்பொழுதுதான் முதற்தடவையாக வந்திருக்கிறது. ஆகவே, அதிகாரத்துக்கு எதிராக, மக்களுடன் இணைந்திருந்த அனுபவத்தை இப்பொழுது ஆட்சியதிகாரத்தில் இருக்கும்போது சேர்த்துக் கொண்டு புதிய பயணத்தைத் தொடருவதற்கு அது முயற்சிக்கிறது.
இதெல்லாம் தமிழ்த்தேசிய அரசியல் தரப்பினரைக் கலங்கடிக்கிறது. தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கும் தரப்புகளில் ஆயுதம் தாங்கிய விடுதலை இயக்க வரலாற்றைக் கொண்டவையும் உண்டு. அதற்கு மறுதலையான தேர்தல் மைய அரசியலை வழிமுறையாகக் கொண்டவையும் உண்டு. இரண்டும் நீண்டகாலமாக (1990 க்குப்பின்) முற்று முழுதாகவே தேர்தல் மைய அரசியலையே தொடர்ந்து வந்தன. குறிப்பாக கொழும்பு மையத்தை தேர்தல் அரசியலின் மூலம் எதிர்ப்பதாகவே தம்மைக் கட்டமைத்திருந்தன.
இந்த அரசியல் தமிழ்ச் சமூகத்தின் எந்தப் பிரச்சினையையும் தீர்க்கவில்லை. பதிலாக மேலும் மேலும் நெருக்கடிகளையே சந்திக்க வேண்டியிருந்தது. இதனால் தமிழ் மக்கள் மிகப் பெரிய பின்னடைவையே எதிர்கொள்ள நேரிட்டது. இதிலிருந்து எப்படி மீள்வதென்று தெரியாமல் குழப்பமடைந்திருந்த சூழலில்தான் தேசிய மக்கள் சக்தியின் அலை தமிழ் மக்களை அள்ளியெடுத்தது.
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியத் தரப்புகள் தோற்றுப் பின்னடைந்ததற்குப் பிரதான காரணம், அவற்றிடம் செயலூக்கமும் இல்லை, புத்தாக்கத்திறனும் இல்லை (No action, No innovation) என்பதேயாகும்.
ஆக, தேசிய மக்கள் சக்தி உருவாக்கியிருக்கும் அரசியல் நெருக்கடி, வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் தமிழ்த் தேசிய அரசியற் தரப்பினரை மட்டுமல்ல, பிராந்திய அரசியலில் (Regional Politics) தம்மைப் பிணைத்துக் கொண்டு வாழ்ந்து வரும் தமிழ், முஸ்லிம், மலையக அரசியற் தரப்பினரையும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.
மட்டுமல்ல, இதுவரையும் அரசாங்கத்துடன் அல்லது தென்னிலங்கை அதிகாரத் தரப்புகளுடன் கூட்டு அரசியலைச் செய்துவந்த டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன், அங்கஜன் இராமநாதன் போன்றோருக்கும் சிக்கலை உண்டாக்கியுள்ளது. விஜயகலா மகேஸ்வரன், உமாச்சந்திரா பிரகாஸ் போன்றோரை அரங்கிற் காணவே இல்லை.
எல்லாத் தரப்புகளையும் அடித்துப் புரட்டிக் கொண்டிருக்கிறது தேசிய மக்கள் சக்தி என்ற சுனாமிப் பேரலை. இதை எதிர்த்து முறியடிக்கக் கூடிய அரசியல் வியூகமொன்றை வடக்குக் கிழக்கு, மலையக அரசியற் சக்திகள் வகுக்க வேண்டும். அது இலகுவானதல்ல. அதற்கு முற்றிலும் மாறான – வெற்றியளிக்கக் கூடிய புத்தாக்கத்திறனும் செயலூக்கமும் நிறைந்த அரசியல் முன்னெடுப்புகள் அவசியம். அதைச் செய்வதற்கான கால அவகாசம் மிகக் குறைவு. ஏனென்றால், இன்னும் இரண்டு மாதங்களில் (ஏப்ரல், 2025) உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடக்கவுள்ளது. அது முடிய மாகாண சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்படலாம்.
பிற தரப்புகள் தம்மைச் சுதாகரித்து எழுவதற்கு முன் அதிரடியாக தாக்குதலை நடத்துவதற்கே தேசிய மக்கள் சக்தி முயற்சிக்கிறது. வரலாற்று வாய்ப்பை யார்தான் தவற விடுவார்கள்?
எனவே, தற்போதைய சூழலில் – நிலையில் – தனிக்காட்டு ராஜாவாகவே NPP வெற்றிவாகை சூடவுள்ளது என்றே தெரிகிறது.
கருணாகரன்