Photo, CNN

இந்த வருடம் நாடாளுமன்றத் தேர்தலில் அதிகளவானோர் பங்கு பற்றுவது வரவேற்கத்தக்க விடயம். இவை தெரிவுகளிற்கான பெருவெளியை ஏற்படுத்தியிருக்கிறது இருப்பினும், பாரம்பரிய கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும், புதிதாக இணைக்கப்பட்ட கட்சிகளும் எப்போதும் விவாதத்திற்குரியவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 2024ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலானது மக்கள் மத்தியில் ஒரு நிலைமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது அல்லது ஒரு உந்துசக்தியை கொடுத்திருக்கிறது எனலாம்.

யாவரும் அரசியலில் பங்கெடுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டிருந்தாலும் அதிலும் இன்னும் விவாதத்திற்குட்படுத்தப்பட வேண்டிய பல விடயங்களின்னும் இருந்துகொண்டுதானிருக்கிறது. படித்தவர்கள்தான் அரசியலிலுக்கு வர முடியும் என்கிற நிலை மெது மெதுவாக  உருப்பெறுகிறது. அண்மையில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் வேட்பாளர் ஒருவர் முதலில் நான் என்னுடைய கல்வித்தகைமையை குறிப்பிட விரும்புகிறேன் என்று தொடங்குகிறார். இது அந்த வேட்பாளருக்கு மனநிலை ரீதியாக என்ன வகையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதற்கு எங்களுடைய கடந்தகால கட்சி அரசியலினுடைய பங்கும் அவை உருவாக்கிய கலாசாரமும் மிக முக்கியமானது.

படித்தவர்கள் என்று சொல்லப்படுகின்ற எத்தனை பேரால் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நீதிக்கான அரசியல் வெளிகளை நிலைநாட்ட முடிந்திருக்கிறது? இவற்றை நாங்கள் பகுப்பாய்விற்குட்படுத்த வேண்டும். இத்தனை காலமும் இயங்குநிலையிலிருந்த பாரம்பரிய கட்சிகளால் எத்தனை ஒடுக்குமுறைகளுக்கெதிராக பொறுப்புக் கூற முடிந்திருக்கிறதென்பதை அவர்கள் மீளாய்வு செய்ய வேண்டும். இதயசுத்தியோடு அவர்கள் அதை செய்திருப்பின் ஆகக் குறைந்தபட்சம் சிந்தனைத் தெளிவோடு நடந்துகொள்வார்கள் என்பதுதான் யதார்த்தம். அவற்றை ஒரு சமூகமாக பொறுப்புக் கூற வைப்பதற்கான தந்திரோபாயங்களை அல்லது அதற்கான வெளிகளை ஏற்படுத்தியிருக்கிறோமா என்பதை எங்களிடம் நாங்களே கேட்டுக் கொள்ள வேண்டும். இச்சமூகத்தில் வாழ்கின்ற அடிப்படையில் எங்கள் யாவருக்கும் அந்தப் பொறுப்பும் அர்ப்பணிப்பும் இருப்பதாக நம்புகிறேன். இவ்வாறான நிலைமைகள​தான் அரசியல்வாதிகளை கேள்விக்குட்படுத்த முடியாத போலிகளையும் கற்பிதங்களையும் எங்கள் மத்தியில்  உருவாக்கியிருக்கிறது. அதைத் தவிர அவர்களுக்கும் மக்களுக்குமான தொடர்பையும் பங்குபற்றலையும் இல்லாமல் செய்திருக்கிறது. நாங்கள் இவ்வாறன அதிகார படிநிலைகளை பல விடயங்களில் உருவாக்கி வைத்திருக்கிறோம். அவற்றைத்தான் இன்றளவும் நம்பிக்கொண்டிருக்கிறோம். நாங்கள் இவை எல்லாவற்றிற்கும் இசைவாக்கமடைந்து நீண்டகாலமாகிவிட்டது. இதற்கு நாங்களும் பொறுப்புக் கூற வேண்டியவர்களே, இவை எதுவும் மாறாமல் நீதியான சமூமாற்றமென்பது சாத்தியமில்லை.

கறுப்பு அல்லது வெள்ளை – இது அல்லது அது என்கிற குறுகிய பார்வை ஒருபோதும் மாற்றங்களை நோக்கி எங்களை நகர்த்தாது. படித்தவர்கள்தான் நேர்மையானவர்கள் அவர்களால்தான் அரசியலில் ஈடுபட முடியும், படிக்காதவர்களால் அரசியலில் ஈடுபட  முடியாது என்கிற கூட்டு முரண் காலாகாலமாக இருந்து வருகிறது. இது எங்களுடைய கல்வி முறையில் இருக்கின்ற சிக்கலும் கூட. அதனடிப்படையில்தான் நாங்கள் எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறோம்.

அரசியல் கட்சிகள் பொதுவாக  வெளிப்படையான கொள்கைகளையும் இலக்கினையும் கொண்டிருக்க வேண்டும். அதேநேரம் ஒரு கட்சிக்குத் தலைமையென்பது அத்தியவசியமானதொன்றாக இருக்கிறது. கட்சிக்கென கொள்கைகளையும் கோட்பாடுகளையும் வைத்திருக்க வேண்டும், கட்சிக்கான வேலைத்திட்டங்கள் அல்லது வரைபுகள் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். அவற்றிற்கான நீண்டகால மற்றும் குறுகியகால திட்டங்கள​ தயாரிக்கப்பட்டிருத்தல் அவசியமானதாகும். அவற்றை நடைமுறைப்படுத்த பொருத்தமான அணுகுமுறைகளும் உத்திகளும் அவசியமாக இருக்கும்.

திட்டங்கள் தொடர்பான மீளாய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மிக முக்கியமாக தீர்மானங்களை எடுக்கின்றபோது மக்களுடைய பங்களிப்பினையும்  கருத்துக்களையும் உள்வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். தேர்தல் அல்லாத காலங்களிலும் மக்களுடனான தொடர்பை பேண வேண்டும். இவ்வாறாக கட்சி அரசியலில் இருக்க வேண்டிய பல விடயங்களை கூறிக்கொண்டே செல்லலாம். ஆனால், கட்சி அரசியலில் ஈடுபடுபவர்கள் இவை எல்லாவற்றிலும் பிரக்ஞை பூர்வமாக இருத்தல் அவசியம்.

ஆனால், தமிழ் பேசும் தரப்பில் நடைமுறைகள் வேறொன்றாக இருப்பதைதான் பார்க்கிறோம். அனேகமாக தேர்தல் காலங்களில் மாத்திரம்தான் மக்களை தேடிச்சென்று தங்களால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கிவிட்டு வருகிறார்கள். அனேகமான கட்சிக்காரர்கள் மக்களுடன் எவ்வித கலந்துரையாடலும் இன்றி துண்டுப்பிரசுரங்களை குடுக்கும்போது எடுக்கின்ற படங்களையும் வீடியோக்களையும் வைத்துக் கொண்டுதான் தங்களுடைய பிரச்சாரங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள். அதுமட்டுமல்ல துண்டுப்பிரசுரங்களை வீட்டுவாயில்களில் செருகிவிட்டு வருவதும் ஒருவகையான பிரச்சாரம் என நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். தேர்தல் காலங்களில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை செய்தீர்களா எனக் கேள்வி கேட்கின்ற பண்பாட்டினை நாங்கள் உருவாக்கத் தவறிவிட்டோம். இனிவரும் காலங்களிலாவது அவற்றைப் பற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறான பண்பு இல்லாமல் போனதற்கு மிக முக்கிய காரணம் தேர்தல் முடிந்ததும் நாடாளுமன்றத்திற்குச் செல்பவர்களை பின்னர் காணக்கிடைக்காது, அவர்கள் ஏதேனும் ஒரு நிகழ்வில் பிரதம விருந்தினராக வந்து விழக்கேற்றுவதையும், பரிசில் வழங்குவதையும்தான் காண முடியும். இதை நாங்கள்தான் மாற்ற வேண்டும். இவ்வாறான விடயங்களிற்குத்தான் அவர்களை நாங்கள் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறோம். இவைதான்  எங்கள் மனதில் மிக ஆழப் பதிந்திருக்கிறது. ஆகவே, அவர்களும் அதையே கடைப்பிடிக்கின்றார்கள். இவ்வாறான விடயங்களை கேள்விக்குட்படுத்தி புதியதொரு அரசியல் கலாசாரத்தை நாங்கள் உருவாக்க வேண்டும்.

ஒடுக்குமுறைகளற்ற சமூகத்தை காண விரும்பியவர்களெல்லாம் இன்றைக்கு பாரம்பரிய கட்சிகளில் இணைந்திருக்கின்றார்கள். எவ்வித மாற்றங்களையும் பெயரளவிலேனும் ஏற்படுத்த முடியாத கொள்கைகளையும், கோட்பாடுகளையும் காவ முற்படுகிறார்கள். அதற்காக தங்களுடைய இயல்புகளை மாற்றி கட்சி அரசியலுக்காக தங்களது சுயத்தை அர்பணித்திருக்கிறார்கள். இதை அவர்களது இயலாமையாகவும் பார்க்க முடியும். மாற்றுச்சிந்தனைகளை முன்வைக்கின்ற ஒரு சில கட்சிகள் இருந்தும் அங்கே இணைவதற்கான எவ்வித முன்னெடுப்புக்களையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. சுயேட்சையாக இணைந்து செயற்படக் கூடிய வாய்ப்புகள் இருந்தும் அதனையும் அவர்கள் கருத்திற்கொள்ளவில்லை. இது அவர்களது ஆத்மார்த்தமான தெரிவு என்பதைத் காட்டுகின்றது.

இங்கே முற்போக்காக சிந்திக்கக்கூடிய ஒத்த சிந்தனையுடைய பலர் இருந்தும் அவர்களால் ஒரு கோட்டில் இணையமுடியவில்லை என்பது அவர்களுக்கிடையில் இருக்கின்ற பரஸ்பர நம்பிக்கையையும் சமூகத்தின் மீதான அர்ப்பணிப்பினையும் கேள்விக்குட்படுத்துகின்றது. அதேநேரம் கருத்தியல் ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் இருக்கக்கூடிய உடைவுகளை சுட்டிக்காட்டி நிற்கிறது. எல்லோரும் ஒரே கொள்கைகளோடு இருக்க வேண்டும் என்பதல்ல. ஆனால், ஒரே நோக்கத்திற்காக பயணிக்க முடியும்.

புதிதாக தொடங்கப்பட்ட கட்சிகளும் தமிழ்த் தேசியவாதக் கோட்பாட்டை கையிலெடுத்திருக்கிறார்கள். மிக நீண்டகாலமாக இக்கோட்பாட்டுடன் அரசியல் முன்னெடுப்புக்களை செய்தவர்கள் இன்னும் அதே இடத்தில் தேங்கிப்போய் இருப்பதை கண்கூடாகக் காண்கிறோம். இன ஒடுக்குமுறையை பேசுவதற்கும் அதற்கெதிராக போராடுவதற்கும் தமிழத் தேசியக் கோட்பாட்டை கையிலெடுக்கிறோம். நீண்டகாலமாக அதைத்தான் செய்துகொண்டும் இருக்கிறோம். முப்பது வயதில் இன ஒடுக்குமுறைக்கெதிராக பேசியவர்களெல்லாம் தமிழ்த் தேசியவாதக் கோட்பாட்டைத்தான் வாழ்வின் இலக்காகக் கொண்டிருந்தார்கள். துரதிஸ்ட்டவசமாக அவர்கள் எழுபது வயதிலும் அதே கோட்பாட்டு விழுமியங்களோடும் அணுகுமுறைகளோடும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தமிழ்த்தேசியவாதக் கோட்பாட்டினூடாக இனவிடுதலையை அடைய முடியாவிடின் ஏன் மாற்றுவழிமுறைகளை அல்லது இன்னொரு கோட்பாட்டின்பால் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது? ஒடுக்குமுறைகளில் இருந்து விடுபட வெவ்வேறு அணுகுமுறைகளை பரீட்சித்துப் பார்ப்பதில் நாங்கள் ஏன் பின்னிற்கின்றோம், இன்றைக்கு ஒரு கூட்டாக அநீதிக்கெதிராக போராடமுடியாமல் இருக்கின்றோம் காரணம், தமிழ்த் தேசியவாதக் கோட்பாட்டை நம்புகின்ற பலர் குறிப்பாக இன விடுதலையினையும், நில உரிமையையும் பற்றி மட்டும்தான் பேசுகிறார்கள். அதைத் தாண்டிய ஏனைய ஒடுக்குமுறைகளுக்கெதிராக குரல் கொடுப்பதை காணமுடியவில்லை. அதேநேரம் தமிழ்த் தேசியவாதம் சில ஒடுக்குமுறைகளை தோற்றுவிப்பதற்கான மையப்புள்ளியாகவும் இருக்கிறது. இதை பொதுவெளியில் கேள்விக்குட்படுத்தினால் உடனடியாக முத்திரை குத்திவிடுகிறார்கள். ஒரு விடயம் பற்றிய மாற்றுக்கருத்துக்களை முன்வைத்தால் உடனடியாக சமூகவிரோதியாக அடையாளப்படுத்துகிறார்கள். எல்லா விடயங்களையும் விமர்சனத்திற்குட்படுத்த வேண்டும். எதையும் புனிதப்படுத்திக் காவிச்செல்ல முடியாது. நாங்கள் பின்பற்றுகின்ற கோட்பாடுகளை வெறுமனே கோட்பாடுகளாக மட்டும் பார்க்க முடியாது. நடைமுறை வாழ்வோடும் தொடர்புபடுத்திப் பகுப்பாய்விற்குள்ளாக்கப்பட வேண்டும். எல்லாவற்றையும் புனிதப்படுத்தி எவ்வித விமர்சனங்களுமின்றிப் பின்பற்றுவது ஒரு ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல, கேள்விகளையும் விமர்சனங்களையும் எதிர்கொள்ள முடியாத எவராலும் எந்தக் கோட்பாட்டையும் ஆத்மார்த்தமாக நேசிக்க முடியாது.

தமிழ்த் தேசியவாதக் கோட்பாட்டின் அடிப்படையில் தேர்தலில் வேட்பாளர்களாக வலம்வருபவர்களின் பிரச்சாரங்களையும் விஞ்ஞாபனங்களையும் பார்த்தால் இவைகளை இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும். பிரச்சினைகளை பொதுமைப்படுத்தி எவ்தவித ஆய்வுகளுமின்றி விஞ்ஞாபனத்தை எழுதியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட எல்லோருடைய விஞ்ஞாபனங்களிலும் ஒத்த தன்மையைக் காண முடியும். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுப்போம் என்றால் எப்படி விளங்கிக் கொள்வது? எந்த ஒடுக்குமுறைக்கெதிராக நீங்கள் குரல் கொடுக்கப் போகிறீர்கள் என்பதையாவது தெளிவாக கூறவேண்டும். அப்படி இருந்தால்தான் ஆகக் குறைந்தபட்சம் அவை தொடர்பான செயற்பாடுகளில் உங்களால் ஈடுபட முடியும் என நினைக்கிறேன். மக்களுக்கு நீங்கள் கொடுக்கின்ற வாக்குறுதிகள்தான் அவர்களுக்கும் உங்களுக்குமான நம்பிக்கையை கட்டியெழுப்பும். உண்மையில் இது வெறுமனையே நாடாளுமன்றம் செல்வதற்கான பிரச்சாரமாக மட்டும் இருக்க முடியாது.

பல பிரச்சார மேடைகளில் பார்த்தால் ஏனைய கட்சிக்காரரைப் பற்றித்தான் பேசுகிறார்கள். அவர்களுடைய நடத்தைகளை விமர்சிப்பதைதான் பிரச்சார பேச்சாக வைத்திருக்கிறார்கள். எங்கள் கட்சி அரசியலில் நாங்கள் என்ன செய்யப் போகிறோம், எப்படிச் செய்யப் போகிறோம், மக்களுக்கும் எங்களுக்குமான தொடர்பை எப்படிப் பேணப் போகிறோம், ஏற்கனவே செய்த செயற்பாடுகளை இன்னும் எப்படிச் செய்யலாம் என்பதைப் பற்றித்தானே நீங்கள் பேச வேண்டும். மக்கள் ஏதோ ஒரு நம்பிக்கையில் உங்கள் கூட்டங்களிற்கு வந்தால் நீங்கள் மற்றவர்களை பற்றிப் பேசுவதிலே நேரத்தை செலவிடுகிறீர்கள். இதற்குப் பெயர் வேறொன்றாகத்தான் இருக்க முடியும்.

அரசியலில் ஈடுபடுவதற்கான சுதந்திரம் அனைவரிற்கும் உண்டு. ஆனால், அந்த வெளி இன்னமும் பாரபட்சமாகவே காணப்படுகிறது. பெண்களை உள்வாங்குவதில் இன்றளவும் சிக்கல்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. பெண்கள் உள்வாங்கப்பட்டிருந்தாலும் நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்புகள் எப்படியாவது மழுங்கடிக்கப்பட்டுவிடுவதையே பார்க்கின்றோம். இது எங்களுடைய சமூகத்தில் இருக்கின்ற சிந்தனை முறையும் கூட, இவற்றில் பெரியளவிலான மாற்றங்கள் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. பால் பல்வகைமையினரும் அரசியலில் உள்வாங்கப்படுவதில்லை. அரசியல் என்பதைத் தாண்டி அவர்கள் மனிதர்களாகக் கூட கணக்கிலெடுக்கப்படுவதில்லை, எங்கள் மதிப்பிற்குரிய தமிழ் பேசும் வேட்பாளர்களால். குறிப்பாக, வடக்கில் குயர் சமூகத்தினர் அதிகமாக வாழ்கின்றார்கள். இம்முறை கட்சி அரசியலில் ஈடுபட்டிருக்கின்ற அனைவருக்கும் இவ்விடயம் புதிதல்ல ஆனால், யாரும் அவர்கள் தொடர்பான பிரச்சினைகளையோ, அவர்களது உரிமைகளையோ, அவர்களோடு சேர்ந்து கதைப்பதற்கு தயாராக இல்லை. ஆனால், திட்டங்களில் மட்டும் இரகசியமாக அவர்களை உள்வாங்குவதை அவதானிக்க முடிகிறது. பொதுவெளியில் அவர்களது உரிமைகளை பற்றி பேசினால் யாழ்மையவாத சமூகம் வாக்குவங்கியில் கைவைத்துவிடுவார்களென்ற பயத்தில் தனிப்பட்ட ரீதியாகவும் உள்வீட்டிலும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். இவ்வாறான நிலைமைகளை குயர் சமூகமாக தங்களை அடையாளப்படுத்துகின்ற, அவற்றைக் கேள்விக்குட்படுத்த இயலுமையுடையவர்கள் பொதுவெளியிலொரு நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் அல்லது இவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். வடக்கில் வாழ்கின்ற குயர் சமூகத்தைச் சேர்ந்த எவரும் மையநீரோட்ட அரசியல் தொடர்பான எவ்வித நிலைப்பாடுகளையும்  முன்வைக்கவில்லை. அதைவிட தங்களுடைய உரிமைகள் மற்றும் தங்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகள், சட்டங்கள் தொடர்பான எவ்வித கோரிக்கைகளையும் வேட்பாளர்களிடம் பொதுவெளியில் முன்வைக்கவில்லை. இவ்வாறான நிலைமைகள் தான் அரசியலில் அவர்களுக்கிருக்கக் கூடிய உரிமைகளையும் பங்குபற்றலையும் மழுங்கடிக்கிறது.

இங்கே வருந்தத்தக்க விடயம் யாதெனில், தங்களை முற்போக்காளர்களாகக் காட்டிக் கொள்கின்ற மற்றும் மனித உரிமைகள், ஒடுக்குமுறைகள் எனப் பேசுபவர்களெல்லாம் துளியும் குற்றவுணர்வில்லாமல் பெண், ஆண் எனப் பிரச்சாரக்கடிதம் எழுதுகிறார்கள். இப்படிப்பட்வர்கள் ஏன் நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டிய நேரம். இவர்கள் மட்டுமல்ல அரசியலில்  ஈடுபடுகின்ற அனைவருக்கும் இச்சமூகத்தில் வாழ்கின்ற ஒவ்வொருவர் பற்றிய பொறுப்பும் அக்கறையும் இருக்கவேண்டும். மனிதர்களாக பிறந்த அனைவரும் அரசியலில் உள்வாங்கப்பட வேண்டும் என்பதுதான் அடிப்படை. ஆனால், இன்னும் பெண், ஆண் என்று பேசிக் கொண்டு சமத்துவத்தையும், பன்மைத்துவத்தையும் வரையறை செய்கிறார்கள். இவ்வாறான விடயங்களை ஆழமாக சிந்திக்காதவிடத்து ஒடுக்குமுறைகளற்ற சமூக மாற்றம் சாத்தியம் இல்லை. மையநீரோட்ட அரசியலில் இருக்கக்கூடிய பழமைகளை கேள்விக்குட்படுத்தி புதியதொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம்.

திசா திருச்செல்வம்