கடந்த செப்டம்பர் மாதம் 2024 இல் மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் உலகின் உள்ள 18 நாடுகளில் வாழ்கின்ற இந்திய வம்சாவளியினரின் உலக அமைப்பான (GOPIO) இன் மாநாடு நடைபெற்றது. இதில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னணி தொழிலதிபர்களும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களான கலாநிதி ஆர். ரமேஸ் மற்றும் பேராசிரியர் ஏ. எஸ்.சந்திரபோஸ் அவர்களும் இம்மாநாட்டில் கலந்துக்கொள்ள அழைக்கப்பட்டிருந்தனர். இம்மாநாட்டில் இடம்பெற்ற நிகழ்வுகளையும் மாநாட்டின் பின்னர் மேற்கொண்ட பயணங்களின் போது சந்தித்த இந்திய தமிழ் தொழிலாளர்களின் அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும வகையில் பேராசிரியர் இக்கட்டுரையை தொகுத்துள்ளார்.
மலேசியாவின் இப்போதைய (2024) மொத்த மக்கள்தொகை 34 மில்லியன்களாகும். இவர்களில் 62.5 வீதமானவர்கள் (21,200,000), மலாய் இனத்தவராகவும், இவர்களுக்கு அடுத்த நிலையில் சீனர்கள் 20.6 வீத்தினராகவும் (6,830,000) இந்திய வம்சாவளியினர் 6.2 வீதமாகவும் (2,100,000) வாழ்கின்றனர். 1824ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிரத்தானியரது ஆட்சியின்போதே பெருமளவிலான இந்தியர்கள் அழைத்துவரப்பட்டனர். இரண்டாம் உலகப்போரின் போது மலேசியாவில் இருந்து போராடிய சுபாஸ் சந்திரபோஸ் தலைமையினாலான போராட்டத்தில் இணைந்துக்கொண்ட இந்தியர்களில் சுமார் எட்டு இலட்சம் பேர் மாண்டுள்ளனர். 1957 ஆண்டு பிரித்தனியரிடமிருந்து சுதந்திரம் பெற்ற மலேசியா மலாயா, சர்வார்க், சபா மற்றும் சிங்கப்பூர் என்ற பிரதேசங்காளாக இணைந்திருந்தன. எனினும், 1963ஆம் ஆண்டு சிங்கப்பூர் லீகுவான் தலைமையில் தனிநாடாக உதயமாகியதை யாவரும் அறிவோம். மலேசியாவின் தனிநபர் வருமானம் 12,466 US$ ஆகும் (இலங்கை 3.354 US$). மலேசிய நகரங்கள் முழுவதும் பாரிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளன. மலேசியா வருடம் பூராவும் சீரான காலநிலையைக் கொண்ட அயனமண்டலத்தில் அமைந்துள்ள நாடாகவும் இலத்திரனியல் உதிரிப்பாகங்களை பெருமளவில் உற்பத்தி செய்து அதனை ஏற்றுமதி செய்து வருமானத்தை பெற்றுக்கொள்ளும் வளமிகுந்த நாடாகவும் காணப்படுகின்றதுடன் செம்பனையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எண்ணை ஏற்றுமதியில் உலகின் இரண்டாவது இடத்தை வகிக்கும் நாடாகவும கணப்படுகின்றது.
GOPIO இன் இம்முறை மாநாடானது மலேசியாவில் வாழ்கின்ற இந்திய வம்சாவளியினரது இளம் தலைமுறையினரின் பங்களிப்புடன் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்கள் பற்றிய ஆய்வுத்துறையில் நிபுணத்துவம் பெற்றவரும் புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் பேராசிரியர் Ajay Dubey பிரதான உரையை நிகழ்த்தினார். அன்றைய தினம் இந்திய வெளிவிவகார அமைச்சின் துனை அமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் அவர்களும் மலேசியாவிற்கான இந்திய தூதுவர் என்றவாறு பலரும் நிகழ்ச்சியில் பங்கு கொண்டிருந்தளனர். GOPIO அமைப்பின் மூத்த தலைவர்களில ஒருவரான வைத்தியர் திரு பொன்னுசாமி அவர்களும் இந்நிகழ்சியில் பிரசன்னமாகியிருந்தார். அந்தந்த நாடுகளில் வாழ்கின்ற இந்தியர்களில் தொழில்முயற்சி, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொண்டுபுரிந்தவர்கள் என்றுவாறு பல்வேறு சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சி ஆய்வரங்கமாகும். இந்தியா, தென்னாப்பிரிக்கா, மொரிசியஸ், கனடா, பிர்த்தானியா, சிங்கப்பூர், மலேசியா, ஜேர்மன், கிரீஸ், சவூதி அரேபியா மியன்மார் போன்ற நாடுகளில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளினரது அரசியல், சமூக மாற்றங்கள் மற்றும் கலாசார விழுமியங்கள் பற்றி ஆய்வு செய்தவர்கள் தமது ஆய்வு அறிக்கையினை சமர்பித்திருந்தனர். இலங்கையில் வாழ்கின்ற இந்திய வம்சாவளியினரின் கலாசாரம், அரசியல் பங்களிப்பு பற்றிய ஆய்வறிக்கையை இக்கட்டுரையாளரும் ஆர்.ரமேஸும் சமர்ப்பித்திருந்தோம். இச்சந்தர்பத்தில அந்த ஆய்வரங்கில் இருந்ந மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் (UKM)பேராசிரியர்கள் தங்களது பல்கலைகழகத்திற்கும் எங்களை அழைத்தனர். அவர்களது அழைப்பினை ஏற்று ளுPர்நுயு என்ற சர்வதேச உறவுகள் மற்றும் மாணிடவியல் பீடத்தின் பேராசிரியர. ரவிச்சந்திரன் மூர்த்தி அவர்களின் தலைமையில் இடம் பெற்ற அரங்கிலும் ஆய்வினை சமர்ப்பணம் செய்தமை குறிப்படத்தக்க விடயமாகவும்.
இதேசமயத்தில் அந்தந்த நாடுகளின் தொழிலதிபர்களும் தமது தொழில்விருத்தி மற்றும் சவால்கள் பற்றிய கலந்துரையாடலுக்கு தனியான செயலமர்வும் இடம்பெற்றது. இவ்வரங்கில் தொழிலதிபரும் GOPIO -Sri Lanka வின் சர்வதேச ஒருங்கிணைப்பாளரான திரு வி.பாலா மற்றும் சிதம்பரம் ஆகியோர்கள் அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தனர். இவ்வாறான நிகழ்வுகளில் மற்றுமொரு அம்சமாக மலேசியாவில் உள்ள முன்னணி தொழில் அதிபர்களும் மாநாட்டில் வருகை தந்த இலங்கை உட்பட பிற நாடுகளில் இந்திய வம்சாவளி தொழில் அதிபர்களின் கூட்டமும் பிரதான நிகழ்ச்சியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதைவிட (BRIKSFIELD) Little இந்தியா என்ற இடத்தில் இராமகிருஷ்ண மிஷன் பாடசாலையில் இடம்பெற்ற விழாவிலும் பேராளர்கள் கலந்துகொண்டதுடன் கலாநிதி ஆர். ரமேஸின் சிறப்புரையும் அங்கு நடத்தப்பட்டது.
மாநாடு நிறைவு பெற்றதும் நாம் அங்குள்ள தோட்டங்களில் வேலை செய்து வருகின்ற இந்தியத்தமிழர்களின் இருப்பிடங்களுக்கு சென்று வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதில் தத்தோ மணிவண்ணன் வேலு மற்றும் தத்தோ தேவராசா மலேசிய நுகர்வோர் ஆலோசணை ஒருங்கமைப்பின் தலைவர் மற்றும் தத்தோ தேவதாசன் ஆகியோர்களை சுங்கை தீங்கி Shah Alam மற்றும் Midland ஆகிய இடங்களில் சந்திபதற்கு ஏற்பாடாகியிருந்தது.
இதில் தத்தோ வேலு மணிவன்ணனின் சந்திப்பு மிகவும் பயனுள்ள அனுபவங்களை வழங்கியது. நாம் இவர்களைச் சந்தித்த போது இற்றைக்கு பல வருடங்களுக்கு முன்னர் செலங்கூரில் உள்ள கேரத்திவி சுங்கை தீங்கி தோட்டத்தில் இருந்து வெளியேறி நகரங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களின் ஒன்று கூடல் வைபவம் இடம்பெற்றது. ஆரம்ப காலத்தில் இறப்பர் தோட்டமாக இருக்கும் போது அவர்களுடைய வாழ்க்கைமுறை, கோவில் விழாக்களிலும் ஒன்று சேர்ந்த குடும்பங்களாக வாழ்ந்த வாழ்க்கையை நினைவூட்டி நடந்த விழா மிகவும் பரவசமாக இருந்தது. ஓவ்வொருவரும் தமது தோட்டத்தில் லயன்களில் வாழ்ந்த வாழ்க்கையை சுவைபட எடுத்துக்கூறி நாள் முழவதுமான நிகழ்வாக அதனை மிக அற்புதமாக நெறிப்படுத்தியிருந்தனர். ஆடல்கள், பாடல்கள் என்று கலைக்கதம்பமே இடம்பெற்றது.
இந்த கேரத்தீவி சுங்கை தீங்கி தோட்டத்தில் உள்ள இறப்பர் மரங்கள் அகற்றப்பட்டு இப்போது செம்பனைகள் நெருக்கமாக நடப்பட்டுள்ளன. இவர்கள் வாழ்ந்த வீடுகள், நடமாடிய இடங்கள் எல்லாம் இப்போது அடையாளமே காண முடியாத போய்விட்டதாகவும் இறப்பர் மரங்கள் இருக்கும் போது இங்கு சுமார் 200 குடும்பங்கள இருந்ததாகவும், ஆனால் இப்போது சுமார் 25 குடும்பங்கள் மட்டுமே இருக்கின்றதாகவும் குறிப்பிட்டனர். இறப்பர் மரங்களை அகற்றிவிட்டு செம்பனைகளாக நடும்போது பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்கள் தமது தோட்டங்களை விட்டு நகர்புறங்களிலும் குடியேறிவிட்டனர். இப்போது அங்கு அமைந்துள்ள தமிழ் பள்ளியில் ஆறாம் தரம் வரையிலான வகுப்புகளில் மொத்தமாக 25 மாணவர்கள் மட்டுமே கல்வி கற்கின்றனர்.
ஆனாலும் பாடசாலை கட்டடம், வகுப்பறைகள், மாணவர்களுக்கு வைத்திய வசதிகள், மலசலகூடங்கள் என்பன நவீன முறையில் சுகாதாரமாக அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வகுப்பில் ஐந்து அல்லது மாணவர்கள் மட்டுமே உள்ளனர். 25 மாணவர்களுக்கு எட்டு ஆசிரியர்கள் ஒரு அதிபர் உள்ளனர். ஆசிரியர்களினது தராதரம் நாட்டில் கடைபிடிக்கப்படும் நியமங்களுக்கு சமனாக உயர்தரத்திலான அடைவுகளுடன் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கே வழங்கப்படுகின்றன. இங்குள்ள பாடசாலைகளை சூழவுள்ள இடங்களில் மூலிகை செடிகள் மரங்கள் வளர்க்கப்பட்டு அதன் பயன்பாடுகள் பற்றி மாணவர்கள் அறியும் வண்ணம் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
இப்பாடசாலைக்கு அண்மையில் கெலன்ட என்ற இடத்தில் அதிகமான தமிழ் மக்கள் தோட்டங்களில் வாழ்கின்றனர். ஆங்கு அமைந்துள்ள பாடசாலையில் சுமார் 150 மாணவர்கள் இருப்பதாக அப்பாடசாலையின் அதிபர் குறிப்பிட்டார். அரசாங்கம் பாடசாலைகளின் பராமரிப்பிற்கென கணிசமான நிதியை ஒதுக்குகின்றது. அவ்வாறு வழங்கப்படும் பணம் பாடசாலையை சிறந்த முறையில் பராமரிக்க போதுமானதாக உள்ளதாகவும் நாம் சந்தித்த அதிபர்கள் குறிப்பிட்டனர்.
கேரத்தீவி சுங்கை தீங்கி தோட்டத்தில் இருந்து விடைப்பெற்ற நாம் தோட்டங்களில் தொடர்ந்து வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் குடியிருப்புகளை பார்வையிடவதற்காக அங்கிருந்து சுமார் பத்து கிலோமீற்றர் தூரம் வரை வாகனத்தில் பிரயாணம் செய்தோம். வழியில் இருமருங்கிலும் செம்பனைகள் வளர்க்கப்பட்டுள்ளதுடன் இடையில் எந்த விதமான குடியிருப்புகளையோ கடை வீதிகளையோ அவதானிக்க முடியாத நிலையில் மிகவும் செறிவாக வளர்க்கப்பட்டுள்ளன. இப்படியாக அடர்த்தியாக செம்பனையில் காணும் இடங்கள் முன்னர் இறப்பர் தோட்டங்களாகவே காணப்பட்டிருக்கின்றன.
நாம் செம்பனை தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர் குடும்பங்கள் சிலரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. கணிசமான தமிழ் மக்கள் தோட்டங்களை விட்டு வெளியேறிய நிலையில் சிறிய எண்ணிகையான தமிழர்கள் மட்டுமே செம்பனைகளில் வேலை செய்கின்றனர். அங்கு நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிரப்புவதற்கு இப்போது பங்களாதேஷ் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து மக்கள் குடிபெயர்ந்து வருகை தந்து தோட்டங்களில் வேலை செய்வதையும் காண முடிந்தது. இவ்விரண்டு நாடுகளிலும் இருந்து குடிபெயர்ந்து வருபவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்களாகும். செம்பணை தோட்டத்தில் வேலை செய்யும் ஒருவருக்கு மாதாந்தம் குறைந்தபட்சம் 1500 ரிங்கிட் (இலங்கை ரூபாவில் 120,000) கிடைக்கக்கூடியதாகவுள்ளது. இதைவிட மேலதிக நேர வேலைக்கான கொடுப்பனவு லாபத்தில பங்கு என்று மாத வருமானத்தில் மாற்றஙகள் காணப்படும்.
செம்பனை தோட்டங்களின் பெரும்பாலானவை தனியார் உடமைகளாகும். தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுளள வீடுகள் யாவும் தோட்ட முகாமையாளர்களுக்கு சொந்தமானதாகும். குடிநீர் வசதி, மலசலகூடம். காய்கறி தோட்டம் என்று யாவருக்கும் நல்ல சுகாதாரமான சூழலில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. தோட்ட வேலைகளில் இருந்து நிரந்தரமாக வீடு பெறும் போது உடனடியாக தாம் வாழ்ந்த வீட்டை தோட்ட நிர்வாகத்திற்கு ஒப்படைத்துவிட வேண்டும்.
இலங்கையில் உள்ள பெருந்தோட்ட மக்களை ஒழுங்குப்படுத்த 1889ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந்திய தொழிலாளர்களுக்கான தொழிற்சங்க கட்டளைச் சட்டம் போலவே மலேசியாவிலும் 1884ஆம் ஆண்டு முதல் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கான கட்டளைச் சட்டம் உள்ளது. அதன்படியே தோட்டங்களின் தொழில்கள், சமூக நலன்கள், வருமானம் என்பன பராமரிக்கப்படுகின்றன. ஆனாலும், 1957ஆம் ஆண்டளவில் பிரித்தானியர்களிடம் காணப்பட்ட பெருமளவிலான இறப்பர் காணிகள் சீனர்களுக்கும், தமிழர்கள் சிலருக்கும் கைமாற்றப்பட்டது. இறப்பர் காணிகளில் செம்பனைகளை மீள்நடுகின்ற காலம்முதல் அங்கு வேலை செய்துவந்த தமிழ் தொழிலாளர் குடிபெயர்ந்த போது 1884ஆம் ஆண்டின் தொழிலாளர் கட்டளைச் சட்டத்திலிருந்து விடுபட்ட இவர்கள் அதன் பின்பு மலேசியாவின தேசிய சட்டத்திற்குட்பட்டவர்களாக உள்வாங்கப்பட்டனர். ஆனாலும், இன்று வரை தோட்டங்களில் அதாவது செம்பனை தோட்டங்களில் வேலை செய்பவர்களுக்கு இச்சட்டம் இன்றும் நடைமுறையில் உள்ளது. எவ்வாறாயினும் வீட்டு வசதிகள், வருமானம் போன்றவற்றில் இலங்கையில் உள்ள தோட்டத் தொழிலாளர்களையும் பார்க்க பலமடங்கு முன்னேற்ற மிக்க மக்களாகவே காணப்படுகின்றனர்.
மலேசியாவில் இந்தியர்களில் அதிக எண்ணிக்கையானோர் இந்தியத் தமிழர்களாகும். அங்கு இந்தியர்கள் என்ற நிலையில் மலையாளிகள், தெலுங்கர்கள், குஜராத்தியர்கள், சீக்கியர்கள் என்று பலரும் இந்தியர்கள் என்ற அடையாளத்துடன் வாழ்கின்றனர். நாட்டில் ஏற்பட்ட பொருளாதார அபிவிருத்தியானது தொழில்நுட்பவியலாளர்களை கவர்ந்துள்ளதுடன் நாட்டின் காலநிலையும் மக்கள் வாழ்விற்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளதாகக் கருதலாம். மலேசியாவின் மக்கள் தொகையில் அதிகமானோர் இஸ்லாமியர்கள். ஆயினும், இந்துக்களின் வழிபாட்டு தளங்கள் நேர்த்தயாக பராமரிக்கப்படுகின்றன. அங்குள்ள ஆலயங்களில் BATU CAVES முருகன் ஆலயம் பிரபல்யமானதாகும். வருடாந்தம் நடைபெரும் தைபூச திருவிழாவில் உலகெங்கும் உள்ள முருக பக்கதர்கள் மட்டுமன்றி உல்லாசப் பயணிகளும் பெருமளவில் பங்குகொள்ளும் பெருவிழாவாகக் காணப்படும்.
மலேசியாவில் வாழ்கின்ற இந்தியர்களும் இலங்கை வாழ் இந்திய தமிழர்களும் ஏறக்குறைய சமகாலத்தில் இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்து வந்தவர்களாகும். இலங்கையில் உருவாக்கப்பட்ட பெருந்தோட்டங்களுக்கு இந்திய தமிழர்களின் வருகை 1823ஆம் ஆண்டு கோப்பிச் செய்கையுடன் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மலேசியாவில் ஆரம்பிக்கப்பட்ட கரும்பு பெருந்தோட்டங்களுக்கு 1840ஆம் ஆண்டில் முதலாவது தொகுதி இந்தியர்கள் வரவழைக்கப்பட்டனர். இதன் பின்னர் 1870 களில் இலங்கையில் கோப்பிச்செய்கை வீழ்ச்சியடைந்போது மலேசியாவில் அதனை ஆரம்பிக்க இரண்டாவது தொகுதி தொழிலாளர்களும் 1890 இல் இறப்பர் தோட்டங்களுக்கும் வரவழைக்கப்பட்டனர். இவ்வாறு மலேசியாவிற்கு வருகைதந்த இந்தியர்கள் உள்நாட்டில் இடம்பெற்ற பலவேறு அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிய அதேவேளை, இந்தியாவின் சுதந்திரத்திறகாகவும் சுபாஸ் சந்திரபோசுடன் இணைந்து பேராடினார்கள். ஜப்பானின் உதவியுடன் தாய்லாந்து நாட்டினுடாக ரயில்வே பாதை அமைத்து இந்தியாவின் விடுதலைக்கு உதவ முற்பட்டபோது சுமார் எட்டு இலட்சம் இந்தியர்கள் உயிரிழந்தமையை யாவரும் அறிவோம். பெரும்பாலும் பிரித்தானிய கம்பனிகளுக்குச் சொந்தமான றப்பர் தோட்டங்களில் வேலைசெய்த தமிழர்கள் 1957ஆம் ஆண்டின் பின்னர் றப்பர் தோட்டங்கள் கைமாற்றப்பட்டு அதனை பொறுப்பேற்ற சீனர்களும் தமிழ் முதாளிகளும் செம்பனையை ஆரம்பித்தபோது அங்கிருந்து வெளியேறி நகரங்களில் வெவ்வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டனர். தோட்டங்களில் இருந்து வெளியேறியவர்களில் அதிகமானோர் சீனர்கள் நடத்திக்கொண்டிருந்த கைத்தொழில் பேட்டைகளில் இணைந்துக்கொண்டனர் மற்றுமொறு பகுதியினர் வர்த்தகத்திலும் அரச தொழில்களில் வழங்கப்படும் ஒதுக்கீடுகளிலும் தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக்கொண்டனர். இருப்பினும், இலங்கைக்கு பெருமளவு செல்வத்தைத் தேடித்தந்த இந்தியத் தமிழர்களுக்கு குடியுரிமையை பறித்தது மட்டுமன்றி அவர்களில் ஒரு பகுதியினரை மீளவும் இந்தியாவிற்கு அனுப்பியதுடன் அவர்களைப் பிரித்தானியர்கள் அடிமைகளுக்காக கட்டிகொடுத்த லயன்களில் வாழவைத்துக்கொண்டிருப்பது மட்டுமன்றி இவர்களின் மறுவாழ்விற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோட்டத்தில் வாழ்கின்ற 80 வீதமானவர்களுக்கு சென்றடையவில்லை.
பேராசிரியர் ஏ.எஸ். சந்திரபோஸ்