Photo, LANKAFILES

தமிழ்ப்பொது வேட்பாளராக ஒருவரைக் (பா.அரியநேத்திரனை) கண்டுபிடித்ததைப் பெருஞ்சாதனையாக தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான பொதுச்சபையினர் அறிவித்து, ஆரவாரப்படுகின்றனர். அரசியல் பெறுமானத்தில் இது நகைப்புக்குரியதாக (கோமாளிதனமாக) இருந்தாலும் அவர்களைப் பொறுத்தவரையில் இது பெரும் சாதனைதான். சிறுவர்கள், குரும்பட்டியில் தேர் செய்வதைப்போல (அது அந்தச் சிறுவர்களுக்கு படு சீரியஸான விடயமாகவே இருக்கும்) விளையாட்டாகத் தொடங்கப்பட்ட ‘பொதுவேட்பாளர்’ விடயம், ஒரு மெய்யான தேராகுவதற்குப் பல சிக்கல்களைக் கொண்டதென்று அவர்கள் எண்ணியிருக்கவில்லை. போகப்போகத்தான் அதனுடைய சிக்கல்களும் சிரமங்களும் விளங்கத் தொடங்கின (ஒரு கட்டத்தில் பொதுவேட்பாளர் விடயத்தை ஏன் தொட்டோம் என்று எண்ணக் கூடிய அளவுக்கு, இவர்களுடைய தூக்கத்தையே பறித்தது).

முக்கியமாக ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுகின்றவருக்குத் தேர்தல் விதிமுறைகளின்படி இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகள் என்ன என்பதைக் கூட இவர்கள் விளங்காமலே இருந்துள்ளனர். இதை அவர்களே சொல்கிறார்கள், “தமிழ் மக்கள் பொதுச்சபைக்குள் காணப்படும் கருத்துருவாக்கிகள் ஒரு பொதுவேட்பாளர் தொடர்பாக கட்டியெழுப்பிய கருத்துருவாக்கம் என்னவென்றால், கிழக்கிலிருந்து ஒரு பெண் வேட்பாளர்தான். அவரும் அரசியல் கட்சிகள் சாராதவராக இருந்தால் உத்தமம் என்று கருதப்பட்டது. ஆனால், நடைமுறையில் அப்படி ஒரு பெண் வேட்பாளரைத் தேடிக் கண்டுபிடிப்பதில் நெருக்கடிகள் இருந்தன. மட்டுமல்ல, நாட்களும் குறைவாக இருந்தன. ஒரு பெண் வேட்பாளரைக் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் ஓர் ஆண் வேட்பாளரை அதாவது கட்சிசாரா ஆண் வேட்பாளரை கண்டுபிடிக்கலாமா என்று சிந்திக்கப்பட்டது. ஆனால், அங்கேயும் வரையறைகள் இருந்தன. அதன் பின்னர்தான் கட்சி சார்ந்த யாராவது இருப்பார்களா என்று தேட வேண்டி வந்தது” என.

  1. ஒரு சிறிய குழுவினர் கூடித் தம்மைத்தாமே “தமிழ் மக்கள் பொதுச்சபையினர்” என்று அழைத்துக் கொள்கின்றனர். ஒரு அமைப்புக்குரிய விதிமுறைகள், அடிப்படைகளின்படி இந்த அமைப்பின் உறுப்பினர்கள் எவராலும் தெரிவு செய்யப்படவில்லை. மேலும் தம்மைக் கருத்துருவாக்கிகள்(!) என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். இந்தக் கருத்துருவாக்கிகள் 2009க்குப் பின் (புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்), தம்மை அரசியல் அரங்கில் நிலைப்படுத்துவதற்கு தலைகீழாகக் கூட நின்று பார்க்கிறார்கள். இதற்காக தமிழ்த்தேசியப் பேரவையை உருவாக்கியது தொடக்கம் விக்னேஸ்வரனைத் தமிழர் அரசியலின் மகாமேதை, ஈழத்தின் தலாய்லாமா என்றது வரையில் என்னவோ எல்லாம் செய்து பார்த்தனர். இறுதியாக இப்போது வந்திருக்கும் இடமே தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற “குரும்பட்டித் தேர்.”
  2. தமிழ்ப் பொதுவேட்பாளராக கிழக்கிலிருந்து ஒரு பெண் வேட்பாளரை நிறுத்துவதற்கு தாம் யோசித்ததாகக் கூறப்படுகிறது. நல்ல யோசனைதான். ஆனால், சமூக வெளியில் பெண்களையும் இளையோரையும் அரசியல், சமூக ஆளுமைகளாக வளர்க்காமல், தன்னியல்பாக எங்கேனும் ஓரிருவர் எழுந்து வந்தால் அவர்களைக் கொண்டாடாமல் இருந்து விட்டு, இப்படித் திடீரென ஆட் தேடினால் திரவியம் கிடைக்குமா? அதற்கான உழைப்பு (தேடுவதற்கான உழைப்பல்ல. ஆளுமைகளை உருவாக்குவதற்கான உழைப்பு) செலுத்தப்பட்டிருக்க வேண்டும். அதுதான் தேசமாகச் சிந்திப்பதன் அடிப்படையாகும்.
  3. இதேதான் அரசியல் சாராத இன்னொரு ஆளுமையைத் தேடுவதிலும் நிறுத்துவதிலும் வந்த பிரச்சினையாகும். ஆக, தமிழ்ச்சமூகம் (தமிழீழம்) மிகப் பெரிய ஆளுமை வரட்சியில்உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசியலில் மட்டுமல்ல, அனைத்துத் துறைகளிலும் இதுதான் நிலைமை. இதையே நாம் தொடர்ச்சியாகச் சுட்டிக் காட்டி வருகிறோம். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நகைப்புக்குரியதாக்கி நிராகரித்தவர்கள், இப்போது சூழலைக் கரித்துக் கொட்டுகிறார்கள். மாற்றுச் சிந்தனையோடு, புதிதாகச் சிந்திப்போரையும் புத்தாக்கம் காண்போரையும் நிராகரித்து ஒதுக்கி வந்ததன் விளைவையும் இதனுடன் சேர்த்துப் பார்க்க வேண்டும்.
  4. “பொதுவேட்பாளரைக் கண்டுபிடிப்பதற்கு கால அவகாசம் (நாட்களும்) போதாமலிருந்தது” என்று அழுகிறார்கள். 15 ஆண்டுகளாகப் பொதுவேட்பாளரைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும் கருத்துருவாக்கிகளுக்கு அதற்கான வேட்பாளராக யாரை – எப்படியானவரை நிறுத்தலாம் என்று யோசிக்க முடியாமல் போய் விட்டது. என்பதால்தான் எல்லா இடமும் தேடிக் கட்டக் கடைசீயாக அரியநேத்திரனைக் கண்டு பிடிக்க முடிந்தது. அல்லது அவருடைய கால்களைப் பிடிக்க வேண்டியிருந்தது. ம்… எல்லாம் ஒரு விதி!

இன்னும் இவர்களுடைய கவலைகள் முடியவில்லை.

“ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் பொதுக் கட்டமைப்புக்கு சட்டரீதியாக சில வரையறைகள் இருந்தன. தேர்தலில் பதிவுசெய்யப்பட்ட ஒரு கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்தலாம். அல்லது ஒரு முன்னாள் அல்லது இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுயேட்சையாகக் களமிறங்கலாம். இந்த இரண்டு சாத்தியக்கூறுகளுக்குள்ளும்தான் ஒரு பொது வேட்பாளரைத் தேட வேண்டியிருந்தது. அதாவது தேர்தல் சட்டங்களின்படி ஒன்றில் பதிவுசெய்யப்பட்ட ஒரு கட்சி வேண்டும்.அல்லது முன்னாள் அல்லது இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டும்” என.

இப்படிச் சிரமப்படக் காரணம், களநிலை அனுபமும் நடைமுறை அறிவும் இல்லாததே. குறைந்த பட்சம் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கான தகுதிநிலையைப் பற்றிய தேர்தல் சட்டம் என்ன என்று கூடத் தெரியாமலிருந்திருக்கிறது. “கற்பனைக் குதிரையில் சவாரி”  செய்வோரின் நிலை இப்படித்தானிருக்கும்.

இதனால்தான் படாத பாடெல்லாம் பட்டு ஒரு பொதுவேட்பாளரைக் கண்டு பிடிக்கவும் அவரை இணங்க வைக்கவும் வேண்டியிருந்தது. ‘எப்படியோ இறுதியில் ஒரு பலிக்கடா கிடைத்து விட்டது – வசமாக மாட்டி விட்டது’ என்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறார்கள். என்பதால்தான் “பொது வேட்பாளர் வந்து விட்டார்” என்று புளகாங்கிதமடைகிறார்கள். உண்மையில் இப்போதுதான் இவர்கள் நிம்மதிப்பெருமூச்சை விடுகிறார்கள்.

அது கூட இவர்கள் எதிர்பார்த்த – இவர்கள் கூறிய பரப்பிற்குள் வேட்பாளர் அமையாமல், எதிர்முகாமான தமிழரசுக் கட்சிக்குள்ளேயே தேடவேண்டியிருந்தது. இதற்கொரு சப்பை நியாயத்தைச் சொல்கிறார்கள். “தமிழரசுக் கட்சிக்குள் குழப்பத்தை உண்டாக்கவும் அதை உடைக்கவும் அதற்குள்ளிருக்கும் பொது வேட்பாளருக்கான ஆதரவு – எதிர் என்ற இரு நிலைப்பாட்டை ஒரு வழிக்குக் கொண்டு வருவதற்காகவே தாம் அரியநேத்திரனையும் தவராஜாவையும் இலக்கு வைத்ததாக. (சிரித்து விடாதீர்கள்). இப்படியெல்லாம் கற்பனைக்கதைகள் பல உண்டு.

ஆனால், மேற்கூறிய அடிப்படையில் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கான தகுதியும் வாய்ப்புகளுமுள்ளவர்கள் பொதுக்கட்டமைப்பிற்குள் இருந்தனர். தேவையான சின்னங்களும் அதை வழங்கக்கூடிய கட்சிகளும் இருந்தன. ஆனால், அதற்குத் தயாரான மனநிலை கட்சிகளுக்குள் இருக்கவில்லை என்பதே உண்மை. இதையும் பொதுச்சபையினரே வெளிப்படையாகச் சொல்கிறார்கள், “தமிழ் தேசியப் பொதுக் கட்டமைப்புக்குள் பதிவுசெய்யப்பட்ட கட்சிகள் உண்டு. ஈ.பி.ஆர்.எல்.எப்.  போன்ற கட்சிகள் அவ்வாறு சின்னத்தை தருவதற்குத் தயாராகக் காணப்பட்டன. சில கட்சிகள் தரத் தயங்கின. பொதுகட்டமைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் ஒரு விடயம் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கட்சியின் சின்னத்தை ஒரு பொது நிலைப்பாட்டுக்காகப் பயன்படுத்தி அதன்மூலம் திரட்டப்பட்ட வாக்குகளையும் பிரபல்யத்தையும் அடுத்து வரும் தேர்தலில் அக்கட்சி தனது தனிப்பட்ட கட்சித் தேவைகளுக்குப் பயன்படுத்துவது தொடர்பாக ஓர் உடன்படிக்கை எழுதப்பட வேண்டும் என்று அங்கே சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால், இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் தேர்தல் ஆண்டுகளாகக் காணப்படும் ஓர் அரசியல் பின்னணியில், ஜனாதிபதித் தேர்தலை உடனடுத்து வரக்கூடிய எந்த ஒரு தேர்தலிலும் தமது கட்சி சின்னத்தைப் பயன்படுத்தாமல் விடுவது தொடர்பில் கட்சிகள் அதிகமாக யோசித்தன” என.

ஆக பொதுக்கட்டமைப்பின் விசித்திரம் இப்படித்தானிருக்கிறது. அதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒரு வேட்பாளரை நிறுத்துவதற்குத் தாம் ஏற்றுக் கொண்ட உடன்படிக்கையின்படி, அதற்காக எந்த விட்டுக் கொடுப்பையும் செய்யத் தயாரில்லை. அதாவது, அவை தாம் இணைந்து மேற்கொள்ளும் தீர்மானத்துக்காக எந்தத் தியாகத்தையும் செய்வதற்குத் தயாராக இல்லை. காரணம், அடுத்த தேர்தலிலேயே அவற்றிற்கு அக்கறையுள்ளது. அதனால் அவற்றுக்கு இந்தப் பொதுவேட்பாளர் விடயத்தில் முழுமையான ஈடுபாடில்லை என்பதேயாகும். சில உறுப்பினர்களின் நிர்ப்பந்தம், அரசியற் தடுமாற்றம் போன்றவற்றினாலேயே பொதுவேட்பாளர் நிலைப்பாட்டை இவை ஆதரிக்கின்றன. குறிப்பாக ரெலோவுக்குள்ளும் புளொட்டுக்குள்ளும் எதிர்நிலைப்பாடுண்டு. இதை அந்தக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தனிப்படவும் பொதுவெளியிலும் (வினோநோகராதலிங்கம் – ரெலோ) வெளிப்படுத்தி வருகின்றனர்.  இரண்டாவது காரணம், இந்த விளையாட்டுக்காகத் தம்முடைய நீண்டகால அரசியல் நலன்களை அவை இழக்கத் தயாரில்லை என்பதேயாகும்.

இந்த லட்சணத்தில்தான் சிதறிக் கிடக்கும் தமிழ்த்தேசியச் சக்திகளை தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற மாயாவி ஒரு புள்ளியில் ஒருங்கிணைத்துத் திரளாகக் கூட்டிக் கட்டுவதைப் பற்றிப் பேசப்படுகிறது.

ஆனாலும் பொதுக்கட்டமைப்பிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ். தன்னுடைய சின்னத்தைக் கொடுப்பதற்குப் பெருந்தன்மையுடன் முன்வந்தது என்று சொல்லப்பட்டுள்ளது. அது பொதுச்சபையினரால் ஏற்கப்படவில்லை (இதற்கான காரணம் இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை). இவ்வளவுக்கும் பொதுவேட்பாளருக்கான தகுதியை வழங்கக் கூடியவாறு பொதுக்கட்டமைப்புக்குள் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் நான்கு உள்ளன.

ஆக இவர்களிடம் எந்தத் திரவியங்களுமே இல்லை. விசுவாசமும் தெளிவும் உண்மையும் இல்லை என்பதே நிரூபணம்.  என்பதால்தான் ஒரு வேட்பாளருக்காகத் தமிழரசுக் கட்சியிடம் போகவேண்டியிருந்தது. அதற்குள்ளிருந்து ஒரு ஆளை எடுக்க வேண்டியேற்பட்டது.

இதைப் புரிந்து கொண்டோ புரியாமலோ அரியநேத்திரனும் உசாரோடு பொதுவேட்பாளராகத் தன்னுடைய தலையைக் கொடுத்துள்ளார்.

அரியநேத்திரன் தேர்வு செய்யப்பட்டதை ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட், சிறிகாந்தாவின் தமிழ்த்தேசியக் கட்சி போன்றவை அவ்வளவாக விரும்பவில்லை. காரணம், முன்பு இந்தக் கட்சிகளையெல்லாம் அரியநேத்திரன் “ஒட்டுக்குழுக்கள், அரசாங்கத்தின் ஆட்கள், துரோகிகள், காட்டிக் கொடுப்போர், தமிழின விரோதிகள், போராட்டத்தை விலை கூறி விற்பவர்கள் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியும் விமர்சித்தும் வந்தவர். இறுதிவரையிலும் (ஏன் இப்போதும் கூட) அப்படியான ஒரு உளநிலையிலேயே இருக்கிறார் அரியநேத்திரன்.

எனினும், ஒரு வேட்பாளரை நிறுத்தியே ஆக வேண்டும். இதற்கு மேலும் ஆட்தேடிக் காலத்தை நீடிக்க முடியாது என்ற நிலையில்தான் அவை இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு அவரை ஆதரிக்கின்றன. இதையெல்லாம் ஏற்று அனுசரித்துப் போக வேண்டிய இக்கட்டான நிலை பொதுச் சபைக்கும் பொதுக் கட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கும் வந்து விட்டது.

இப்படிப் பல இடியப்பச் சிக்கல்களுக்கு மத்தியில் பொதுவேட்பாளரைக் கண்டு பிடித்து, வேட்பு மனுத் தாக்கல் செய்த பின்னும் பிணக்கும் பிரச்சினைகளும் முடியவில்லை. அவை உட்கசப்பையே தந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் வெளிப்பாட்டுக்கு ஒரு சாட்சியமாக – “ஒரு பொதுக் குறியீட்டை ஏன் தேட வேண்டி வந்தது? ஏனென்றால் தமிழ் மக்கள் மத்தியில் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு. ஆனால், தமிழ் அரசியல் சக்தியை ஒரு புள்ளியில் ஒன்றிணைக்கவல்ல ஜனவசியமிக்க தலைவர்கள் அநேகமாக இல்லை. தமிழ் மக்களை ஆகக்கூடியபட்சம் ஒரு பொது நிலைப்பாட்டின் கீழ், ஒரு பொதுக் கொள்கையின் கீழ் ஒன்றிணைக்கவல்ல ஜனவசியமிக்க தலைமைகள் இருந்திருந்தால் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளருக்கு தேவையே இருந்திருக்காது. எனவே, ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை தேடுவதில் உள்ள சவால் என்னவென்றால், தமிழ் மக்களை ஒரு பொதுக் குடையின் கீழ் ஒன்றிணைக்க வல்ல தலைமைகளுக்கு தட்டுப்பாடு உள்ளது என்பதுதான்” எனப் பொதுச்சபையைச் சேர்ந்த நிலாந்தன் பகிரங்கமாகவே குறிப்பிட்டுள்ளார்.

பொதுக் கட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகளுக்கும் அதற்கு வெளியே உள்ள கட்சிகளுக்கும் அவற்றின் தலைவர்களுக்கும் இதைவிட வேறு கௌரவம் வேண்டுமா? நமக்கும் தெரியும் இதுதான் உண்மை நிலவரம் என்று. இதை நாம் ஏற்கனவே பல தடவை சொல்லி விட்டோம். ஆனால், இவர்களையெல்லாம் தலைவர்கள் என்று ஏற்றுக் கொண்ட பொதுச் சபையினர், ஒன்றாகக் கூடிப் பேசி, தேநீர் குடித்து விருந்துண்டு கொண்டே இப்படியொரு விமர்சனத்தை – குற்றச்சாட்டை பொதுவெளியில்  சொல்லியிருப்பதுதான் கேள்வியை எழுப்புகிறது.

ஆக மொத்தத்தில் பொதுவேட்பாளர் என்ற விடயத்தை தொடக்கத்திலிருந்து தலையில் தூக்கிச் சுமந்து கொண்டிருப்பது பொதுச் சபையினர் என்றே நிரூபிக்கப்படுகிறது. 15 ஆண்டுகளாக இந்தச் சிந்தனையைப் பொதுச் சபைக்குள்ளிருக்கும் சில கருத்துருவாக்கிகள்தான் (மேதாவிகள்) சுமந்து கொண்டிருக்கின்றனர். இப்போது அதை நடைமுறையாக்க முற்படுவதாகச் சொல்கிறார்கள். அதற்காகத் தாம் பட்ட – படுகின்ற சிரமங்களையும் செலுத்துகின்ற உழைப்பையும் பற்றி விளக்குகிறார்கள்.

பொதுவேட்பாளரை ஏற்றிருக்கும் கட்சிகள், வெளியே சொல்கின்ற அளவுக்கு இதில் சீரியஸாகவும் இல்லை. நேர்மையாகவும் இல்லை. இதற்காக உழைப்பதாகவும் இல்லை. இதனால்தான் பொதுவேட்பாளர் வேட்புமனுத் தாக்கல் செய்யுமிடத்திற் கூட இவர்களில் பலரும் நிற்கவில்லை. அதற்குள் சிங்களத் தரப்பின் (எதிர்த்தரப்பின்) வேட்பாளரைச் சந்திப்பதற்காகக் கொழும்புக்கு ஓடி விட்டனர் என்று கவலைப்படுகின்றனர் பொதுக்கட்டமைப்பினர்.

தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்தியதே எதிர்த்தரப்பினர் மீது நம்பிக்கை இல்லை என்ற அடிப்படையில்தான். அப்படியிருக்கும்போது வேட்பு மனுத்தாக்கல் செய்து விட்டு, ரணில், சஜித், அனுர, நாமல் என்று ஓடித்திரிந்தால் மக்கள் எப்படிப் பொதுவேட்பாளரை ஏற்றுக் கொள்வார்கள்? என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர். இதனால்தான் தாம் இந்தச் சந்திப்புகளை நிராகரித்தோம் என்றும் விளக்குகின்றனர். இந்த நியாயம் மதிக்கப்படக் கூடியதே!

இதேவேளை தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற விடயத்தை ஆரம்பித்து வைத்தது தாமே என்று ஈ.பி.ஆர்.எல்.எவ். கூறுகிறது. திரு. சுரேஸ் பிரேமச்சந்திரனே இதனை முன்னெடுத்தார் என்கின்றனர் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் முக்கியஸ்தர்கள்.

தமிழ்ப் பொதுவேட்பாளரைப் பற்றிப் பிள்ளையார் சுழி போட்டதே தமது தரப்பு என்கிறது யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டியங்கி வரும் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைக்குழுமம் ஒன்று. வேண்டுமென்றால், எங்களுடைய பத்திரிகையைப் புரட்டிப் பாருங்கள். அதற்கான ஆதரமிருக்கும் என்று அந்தத் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

இதெல்லாம் ஒருபுறமிருக்க, வேட்பாளரான அரியநேத்திரன் மீது அவருடைய தமிழரசுக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கத் தீர்மானித்துள்ளது. கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக, கட்சிக்குத் தெரிவிக்காமலே அதனுடைய மத்தியகுழு உறுப்பினர் ஒருவர் இப்படிச் செயற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்குரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று ஒரு காலக்கெடுவை விதித்திருக்கிறது தமிழரசுக் கட்சி. அதுவரையிலும் கட்சிச் செயற்பாடுகளில் அரியநேத்திரனுக்கு இடமில்லை

ஆக, இப்படி ஏகப்பட்ட சிக்கல்கள், முரண்பாடுகள், நம்பிக்கையீனங்களின் மத்தியில்தான் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார். என்னவோ இதையெல்லாம் பார்க்கும்போது முன்னர் கிராமங்களில் ஆடப்படும் கூத்தில் வருகின்ற பபூன்கள்தான் கண்ணுக்குள் நிற்கின்றனர்.

கருணாகரன்