Photo, REUTERS
தெற்காசியாவில் இரு வருடங்களுக்குப் பிறகு இன்னொரு அரசாங்கத் தலைவரை மக்கள் கிளர்ச்சி நாட்டைவிட்டு விரட்டியிருக்கிறது. கடந்த வாரம் பங்களாதேஷில் வீதிப்போராட்டங்கள் தீவிரமடைந்திருந்த கட்டத்தில் தன்னைச் சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகரிடம் பிரதமர் ஷேய்க் ஹசீனா, ‘அராஜகவாதிகள்’ இலங்கை பாணியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி அரசாங்கத்தைக் கவிழ்க்கத் திட்டமிடுகிறார்கள் என்று கூறியிருந்தார். இறுதியில் அவ்வாறே நடந்து முடிந்திருக்கிறது.
பங்களாதேஷில் இடம்பெறுவதைப் போன்ற படுமோசமான வன்முறைகளும் உயிரிழப்புகளும் இலங்கை கிளர்ச்சியின்போது இடம்பெறவில்லை. கிளர்ச்சியை அடக்குவதற்கு ஹசீனா பொலிஸாரையும் தனது அவாமி லீக் கட்சியின் செயற்பாட்டாளர்களையும் கட்டவிழ்த்துவிட்டதைப் போன்று இலங்கையில் அன்றைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் செய்யக்கூடியதாக இருக்கவில்லை.
இலங்கையில் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை ஆகியவற்றை மக்கள் முற்றுகையிட்டதைப் போன்று கடந்த வாரம் பங்களாதேஷிலும் தலைநகர் டாக்காவில் பிரதமரின் வாசஸ்தலம், நாடாளுமன்றம் மற்றும் அரசாங்க கட்டிடங்களை மக்கள் முற்றுகையிட்டார்கள். மாளிகைகளுக்குள் இருந்த பொருட்களைச் சூறையாடிய மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டார்கள். வன்முறைகள் தொடருகின்றன. அவாமி லீக் கட்சியின் தலைவர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எதிராக வன்முறைகள் திசைதிருப்பப்பட்டிருக்கின்றன. அவர்களில் பலர் கொல்லப்பட்டதாகச் செய்திகள் கூறுகின்றன.
முன்னாள் இராணுவ அதிகாரியான கோட்டபாய இராணுவத்தை தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்று நம்பப்பட்ட போதிலும், அவர் உத்தரவிட்டிருந்தாலும் கூட இராணுவம் மக்களுடன் கொடூரமாக நடந்துகொண்டிருக்காது. அதேபோன்றே பங்களாதேஷிலும் போராட்டக்காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்க இராணுவம் தயாராக இருக்கவில்லை.
வெளிநாட்டில் இருந்துகொண்டு கோட்டபாய பதவியைத் துறந்த பிறகு இலங்கையில் அதிகார மாற்றம் பல்வேறு விமர்சனங்களுக்கு மதியிலும் அரசியலமைப்பின் பிரகாரம் சுமுகமாக நடந்தது. ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை நாடாளுமன்றம் தெரிவு செய்ததைத் தொடர்ந்து கொழும்பு காலமுகத்திடலில் இருந்து போராட்டக்காரர்களைக் கலைப்பதற்கு ஆயுதப்படைகள் பயன்படுத்தப்பட்டனவே தவிர அதிகார மாற்றத்தில் இராணுவம் செல்வாக்கு செலுத்தக்கூடிய வாய்ப்புக்கு இடமிருக்கவில்லை.
ஆனால், பங்களாதேஷில் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றவில்லையே தவிர, மற்றும்படி ஹசீனாவை நாட்டை விட்டுவெளியேற நிர்பந்தித்தது தொடக்கம் இடைக்கால நிர்வாகத்தை அமைத்தது வரை இராணுவத் தளபதி ஜெனரல் வாகீர் – உஸ் – சமான் தனது செல்வாக்கைச் செலுத்தினார். முக்கியமான அறிவிப்புக்கள் அவரிடமிருந்தே வந்தன.
கடந்த ஜனவரியில் தெரிவான நாடாளுமன்றத்தை ஜனாதிபதி முஹமட் சஹாபுதீன் உடனடியாக கலைத்துவிட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் அரசியல் செயற்பாட்டாளர்களும் விடுதலை செய்யப் பட்டிருக்கிறார்கள்.
ஹசீனாவின் ஆட்சியில் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட நோபல் சமாதானப் பரிசாளரான 84 வயதான முஹமட் யூனுஸ் மாணவ போராட்டக்காரர்களின் விருப்பத்துக்கு இணங்கி பிரதம ஆலோசகர் என்ற அந்தஸ்தில் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக கடந்த வியாழக்கிழமை பொறுப்பேற்றார். ஹசீனா ஆட்சி முடிவுக்கு வந்த ஆகஸ்ட் 5ஆம் திகதியை அவர், ‘இரண்டாவது வெற்றித்தினம் ‘ என்று வர்ணித்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுளைச் செய்வதே மூன்று மாதங்களுக்கு பதவியில் இருக்கப்போகும் இடைக்கால அரசாங்கத்தின் முக்கிய பணியாகும்.
இலங்கையில் இருந்து கோட்டபாய ராஜபக்ஷ வெளியேறியபோது எந்த நாடும் அவரை மனமுவந்து வரவேற்கவில்லை. மிகவும் குறுகிய காலத்துக்கு அவரும் மனைவியும் தங்கியிருப்பதற்கே சிங்கப்பூரும் தாய்லாந்தும் அனுமதித்தன. இறுதியில் அவர் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு நாட்டுக்குத் திரும்பிவந்தார். ஆனால், கடந்த வாரம் இராணுவ விமானம் ஒன்றில் தனது சகோதரி றெஹானா சகிதம் இந்தியா சென்ற ஹசீனா அங்கு ஒரு வாரகாலமாக தங்கியிருக்கிறார். உத்தரப் பிரதேசத்தில் விமானப்படைத் தளம் ஒன்றில் வந்திறங்கிய அவரை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வரவேற்றார்.
2022 ஜூலையில் இலங்கை விமானப்படையின் விமானத்தில் சென்று சென்னை அருகே உள்ள விமானப் படைத் தளம் ஒன்றில் இறங்குவதற்கும் பிறகு சென்னை விமான நிலையம் ஊடாக இருந்து சிங்கப்பூர் செல்வதற்கும் கோட்டபாய சார்பில் அனுமதி கேட்கப்பட்டபோது இந்திய அரசாங்கம் அதற்கு மறுத்துவிட்டதாக கூறப்பட்டது.
பங்களாதேஷ் நெருக்கடியையும் ஹசீனா விவகாரத்தையும் ஆராய்வதற்காக மோடி அரசாங்கம் உடனடியாகவே சர்வகட்சி மகாநாடொன்றைக் கூட்டியது. இந்தியாவில் அவருக்கு அரசியல் தஞ்சம் அளிப்பது குறித்து தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கூறியிருக்கின்ற போதிலும், ஹசீனா இந்தியாவில் தங்கியிருப்பதற்கு எந்த கால எல்லையும் வரையறுக்கப்படவில்லை.
இந்தியாவில் இருந்து லண்டனுக்கு செல்வதற்கே ஹசீனா முதலில் திட்டமிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அவரை தற்காலிகமாகக் கூட அனுமதிப்பதற்கு பிரிட்டனும் அமெரிக்காவும் மறுத்துவிட்டன. நூற்றுக்கணக்கானவர்களைப் பலியெடுத்த கொடூரமான அடக்குமுறைக்காக ஹசீனாவை பொறுப்புக்கூற வைக்கவேண்டும் என்று கேட்டிருக்கும் அமெரிக்கா, அவரின் விசாவை ரத்துச் செய்திருக்கிறது. அதேவேளை பங்களாதேஷ் வன்முறைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் தலைமையில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று பிரிட்டன் கோரியிருக்கிறது.
இந்திய அரசாங்கம் ஹசீனா தொடர்பில் இறுதியில் எத்தகைய முடிவை எடுக்கும் என்று உடனடியாகத் தெரியவில்லை. ஆனால், சாத்தியமானளவு விரைவாக வெளியேறிவிடுமாறு கோட்டபாயவை சிங்கப்பூரும் தாய்லாந்தும் கேட்டுக் கொண்டதைப் போன்று ஹசீனாவை இந்தியா வலியுறுத்தப் போவதில்லை என்பது மாத்திரம் நிச்சயம். மோடி அரசாங்கத்தின் அணுகுமுறை பங்களாதேஷ் வீதிகளில் இந்திய விரோத உணர்வுகளை அதிகரிக்கக்கூடிய ஆபத்து இருப்பதாக அவதானிகள் எச்சரித்தார்கள்.
சிறுபான்மைச் சமூகங்களுக்கு குறிப்பாக இந்துக்களுக்கு எதிரான மோசமான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது. அதனால் இந்தியா ஒரு சிக்கலான சூழ்நிலையை எதிர்நோக்குகிறது.
ஹசீனா பங்களாதேஷுக்கு இனிமேல் ஒருபோதும் திரும்பப்போவதில்லை என்றும் அரசியலிலும் ஈடுபடப்போவதில்லை என்று அவரின் மகன் சஜீப் வாசெட் ஜோய் கடந்தவாரம் முதலில் கூறினார். ஆனால், இடைக்கால அரசாங்கம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது குறித்து தீர்மானிக்கும்போது ஹசீனா நாடுதிரும்புவார் என்று நான்கு நாட்கள் கழித்து ரைம்ஸ் ஒஃப் இந்தியா பத்திரிகைக்கு அமெரிக்காவில் இருந்து வழங்கிய நேர்காணலில் கூறியிருக்கிறார். அவாமி லீக் நிச்சயம் தேர்தலில் போட்டியிடும் என்று கூறிய அவர் தாயார் போட்டியிடுவாரா இல்லையா என்பதை வெளிப்படையாகக் கூறவில்லை.
இலங்கையில் கோட்டபாய அரசாங்கம் பொருளாதாரத்தை தவறாகக் கையாண்டது போன்று பங்களாதேஷில் ஹசீனா அரசாங்கம் நடந்துகொள்ளவில்லை. இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்தபோது அவசர கடனுதவியை வழங்கக்கூடிய நிலையில் பங்களாதேஷ் இருந்தது.
அவரது கடந்த 15 வருடகால ஆட்சியில் பங்களாதேஷ் கணிசமான பொருளாதார வளர்ச்சியைக் கண்டது. 17 கோடி சனத்தொகையைக் கொண்ட நாட்டில் பல இலட்சம் இலட்சம் வறுமையில் இருந்து மீட்கப்பட்டனர். என்றாலும் இளைஞர்கள் மத்தியிலான வேலையில்லாத் திண்டாட்டம் சுமார் 40 சதவீதமாக இருந்தது ஒரு பெரிய குறைபாடு. அதேவேளை, அயல்நாடான மியன்மாரில் வன்முறைகளில் இருந்து தப்பியோடிவந்த ஆயிரக்கணக்கான றொஹிங்கியா முஸ்லிம் அகதிகளுக்கு தஞசம் அளித்தமைக்காக ஹசீனாவின் அரசாங்கத்தை சர்வதேச சமூகம் பாராட்டியது.
கோட்டபாயவைப் போன்று ஹசீனா அரசியல் அனுபவம் இல்லாதவரும் அல்ல. பங்களாதேஷுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்த ஷேய்க் முஜிபுர் ரஹ்மானின் புதல்வியான ஹசீனா முதலில் 1996 ஜூன் தொடக்கம் 2001 ஜூலை வரையும் பிறகு 2009 ஆகஸ்ட் தொடக்கம் 2024 ஆகஸ்ட் வரையும் மொத்தமாக 20 வருடங்கள் பிரதமராக பதவி வகித்தார். தனது நாட்டில் மாத்திரமல்ல, உலகிலேயே மிகவும் நீண்டகாலம் பதவியில் இருந்த பெண் அரசாங்கத் தலைவர் என்ற வரலாற்றுப் பெருமைக்குரியவராக புகழப்படக்கூடிய அவர் இறுதியில் மக்கள் கிளர்ச்சிக்கு மத்தியில் அபகீர்த்தியுடன் நாட்டை விட்டு தப்பியோட வேண்டிய நிலை ஏன் வந்தது?
அண்மைய பல வருடங்களாக ஹசீனாவிடம் வளர்ந்துவந்த எதேச்சாதிகாரப் போக்கு அவரின் அரசாங்கத்தின் நியாயப்பாட்டை கேள்விக்குள்ளாக்கியது. எதிர்க்கட்சிகளுக்கும் அவருக்கும் இடையில் பெருமளவுக்கு பகைமையான உறவுமுறையே இருந்தது.
2018 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக முன்னாள் பிரதமரும் பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் தலைவியுமான பேகம் காலிதா சியாவுக்கு ஐந்து வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு அந்தச் சிறைத்ண்டனை பத்து வருடங்களாக நீடிக்கப்பட்டது. தீவிரவாதப் போக்குடைய இஸ்லாமிய கட்சியொன்றின் தலைவர்கள் பலரை போர்க்குற்ற விசாரணை மன்றம் குன்றவாளிகளாகக் கண்டு தூக்கிலிட்டது. தீவிரமான இந்திய ஆதரவாளரான ஹசீனா இஸ்லாமிய தீவிரவாத சக்திகளினால் கடுமையாக வெறுக்கப்பட்டார்.
பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி அடுத்தடுத்து இரு நாடாளுமன்றத் தேர்தல்களைப் பகிஷ்கரித்தது. இறுதியாக 2024 ஜனவரியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் வெற்றி கேள்விக்குரியதாகவே இருந்தது. முறைகேடுகள் பாரியளவில் இடம்பெற்றதாக பரவலாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தொடர்ச்சியாக கொடுமைப்படுத்தப்பட்டனர். ஹசீனாவின் அரசியல் எதிரிகளுக்கு எதிராக பெருவாரியான வழக்குகள் தொடுக்கப்பட்டன. எதிரணி அரசியலுக்கான வெளி அண்மைய பல வருடங்களாக கடுமையாகச் சுருங்கிவிட்டது. தனது ஆட்சியின் கீழான பொருளாதார வளர்ச்சி தனது எதேச்சாதிகாரப் போக்கை மக்களின் கவனத்தில் இருந்து திசைதிருப்பும் என்று ஹசீனா நினைத்திருக்கக்கூடும். ஆனால், மக்கள் மத்தியில் குமுறல் அதிகரித்துக் கொண்டே வந்தது. அந்தக் குமுறல் வெளிக்கிளம்புவதற்கு உடனடியான ஒரு தூண்டுதலாக அரசாங்க தொழில் வாய்ப்புகள் தொடர்பான ஒதுக்கீட்டு முறைக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் அமைந்தது.
இந்த ஒதுக்கீட்டு முறையை முதலில் 1972 அறிமுகப்படுத்தியவர் ஹசீனாவின் தந்தையான முதல் ஜனாதிபதி முஜிபுர் ரஹ்மானே. பங்களாதேஷ் விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற போராளிகளுக்கு அரசாங்க தொழில் வாய்ப்புகளில் கூடுதல் பங்கு ஒதுக்கப்பட்டது.
அந்த ஒதுக்கீடு பிறகு நாளடைவில் சுதந்திரப் போராளிகளின் வழித்தோன்றல்களுக்கும் நீடிக்கப்பட்டது. ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமான அரசாங்க தொழில்வாய்ப்புகள் சனத்தொகையின் வெவ்வேறு பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. அதில் 30 சதவீதம் சுதந்திரப் போராளிகளின் வழித்தோன்றல்களுக்கு கிடைத்தது. இதை ஆளும் அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு சலுகையாக மாணவர்களும் எதிர்க்கட்சிகளும் நோக்கின.
இந்த ஒதுக்கீடுகளுக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து 2018ஆம் ஆண்டில் அந்த முறையை ஹசீனா ரத்துச்செய்தார். ஆனால், பங்களாதேஷ் மேல்நீதிமன்றம் பழைய ஒதுக்கீட்டு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது. நியாயமான ஒரு ஒதுக்கீட்டு முறை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்த மாணவர்கள் வீதிப் போராட்டங்களில் இறங்கினர். மேல்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஹசீனா அரசாங்கம் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தது. அது தொடர்பான விசாரணை ஆகஸ்ட் 7 ஆம் திகதி விசாரணைக்கு வரவிருந்தது. ஆனால், போராட்டங்கள் தணியவில்லை.
ஜூன் மாதம் தொடக்கம் இடம்பெற்றுவந்த போராட்டங்களை ஒடுக்குவதற்கு ஹசீனாவின் அரசாங்கம் மேற்கொண்ட கொடூரமான நடவடிக்கைகளே அதற்கு முக்கிய காரணம். அந்தத் தாக்குதல்களில் ஒரு மாதகாலத்துக்குள் 300க்கும் அதிகமானவர்கள் பலியானார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் காயடைந்தனர். குறைந்தது 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
மாணவர்களின் போராட்டம் நாளடைவில் பிரதமர் ஹசீனா பதவி விலகவேண்டும் என்று கோரும் நாடுதழுவிய பரந்த மக்கள் கிளர்ச்சியாக மாறியது. அதை அடக்குவதற்கு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஆகஸ்ட் 4 ஆம் திகதி மாத்திரம் 150க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். தலைநகர் டாக்காவுக்கு படையெடுத்த மக்கள் இலங்கையில் நடந்ததைப் போன்று நாடாளுமன்றம் உட்பட அரசாங்கக் கட்டடங்களை ஆக்கிரமித்தனர். தனது வாசஸ்தலத்தை மக்கள் முற்றுகையிடுவதற்கு முன்னதாக ஹசீனா பதவியைத் துறந்து இராணுவ விமானத்தில் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.
பதவி துறப்பதற்கு முன்னதாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு ஹசீனா விரும்பிய போதிலும், இராணுவம் அதற்கு அனுமதிக்கவில்லை. நாடாளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதி விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
இலங்கையின் மக்கள் கிளர்ச்சியின் பின்னணியில் வெளிநாட்டுச்சதி இருந்ததாக அரசியல்வாதிகள் கூறினார்கள். தன்னைப் பதவிகவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட சதி குறித்து கோட்டபாய ஐந்து மாதங்களுக்கு முன்னர் ஒரு நூலை எழுதினார்.
பங்களாதேஷ் கிளர்ச்சியின் பின்னணியில் இருந்திருக்கக்கூடிய வெளிநாடுகள் குறித்து பல சந்தேகங்கள் கிளப்பப்படுகின்றன. எதிர்காலத்தில் ஹசீனாவும் அவ்வாறு ஒரு நூலை எழுதக்கூடும்.
பங்களாதேஷுக்கு விடுதலையைப் பெற்றுத்தந்த முஜிபுர் ரஹ்மானின் சிலைகள் தற்போதைய வன்முறைகளின்போது தகர்த்து வீழ்த்தப்படுகின்றன. இது மிகவும் வெறுக்கத்தக்க ஒரு செயலாகும்.
சிறைவாசம் உட்பட பல கொடுமைகளை அனுபவித்து விடுதலையைப் பெற்றுக்கொடுத்த முஜிபுர் ரஹ்மான் வெறுமனே மூன்று வருடங்களுக்கும் சற்று அதிகமான காலமே ஆட்சியில் இருந்தார். 1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் திகதி இடம்பெற்ற இராணுவச்சதிப் புரட்சியின்போது அவரும் பெரும்பாலும் முழுக் குடும்பத்தவர்களும் இராணுவ அதிகாரிகளினால் படுகொலை செய்யப்பட்டனர். 28 வயதான ஹசீனாவும் சகோதரியும் அந்த நேரத்தில் ஐரோப்பாவில் இருந்ததால் தற்செயலாக உயிர்தப்பினர். இதுகாலவரையில் ஹசீனாவைக் கொலை செய்வதற்கு 19 முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தந்தையாரின் அரசியல் மரபுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் எதேச்சாதிகார ஆட்சியை நடத்திய ஹசீனா மீதான வெறுப்பை முஜிபுர் ரஹமானின் சிலைகளின் மீது போராட்டக்காரர்கள் காட்டுகிறார்கள். இலங்கையில் போர் வெற்றிக்கு ஏகபோக உரிமையை ராஜபக்ஷர்கள் கோருவது போன்று பங்களாதேஷ் சுதந்திரத்தின் மரபின் பாதுகாவலர்களாக ஹசீனாவும் அவாமி லீக் கட்சியினரும் தங்களைக் காட்டிக்கொண்டனர். அதனால் சுதந்திரப் போராட்டத்தை ஒரு புராதன வரலாறாக மாத்திரமே தெரிந்து வைத்திருக்கும் இன்றைய இளஞ்சந்ததி முஜிபுர் ரஹமானின் பெருமையைப் புரிந்து கொள்ளாமல் நடந்துகொள்கிறது. வரலாற்றில் என்றுமே மறக்கப்பட முடியாத ஒரு மகத்தான தலைவரின் சிலைகள் இப்போது இடிபாடுகளுக்குள் கிடக்கின்றன.
எதேச்சாதிகார ஆட்சியாளர் ஒருவரின் வீழ்ச்சி தன்னியல்பாகவே ஜனநாயகத்தையும் முறைமை மாற்றத்தையும் கொண்டு வந்துவிடப் போவதில்லை என்பதற்கு அரபு வசந்தம் தொடக்கம் இலங்கை கிளர்ச்சி வரை பெருவாரியான படிப்பினைகள் எம்முன்னால் விரிந்து கிடக்கின்றன. பிந்திய பங்களாதேஷ் கிளர்ச்சியும் அவற்றில் ஒன்றா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளவதற்கு நீண்டநாட்கள் தேவையில்லை.
வீரகத்தி தனபாலசிங்கம்