Photo, SELVARAJA RAJASEGAR

மக்கள் போராட்ட முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பான விமர்சனக் குறிப்பு

முன்னிலை சோசலிசக் கட்சி, புதிய ஜனநாயக மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் கட்சி, பல்வேறு மாணவர் செயற்பாட்டாளர்கள் மற்றும் தனிநபர்கள் அடங்கிய கூட்டணியான மக்கள் போராட்ட முன்னணி  2024 ஜூலை 23 அன்று யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நிகழ்த்தியது. .

1983 ஜூலையில் தமிழர்களுக்கு எதிராக அரச அனுசரணையுடன் நடத்தப்பட்ட வன்முறைகளை நினைவேந்தும் நாளில் நிகழ்த்தப்பட்ட இச்சந்திப்பு ஒரு முக்கிய அரசியல் குறியீடாக அமைகிறது என்பது வரவேற்கத்தக்கதே.

நான் இச்சந்திப்பை இணையவழி காணொளியில் பார்த்தேன். முன்னணியின் கொள்கைகளை மக்கள் மத்தியில் முன்வைத்த பேச்சாளர்களின் உரைகள் பற்றிய ஆரோக்கியமான விமர்சனம் இங்கு அவசியமாகிறது. .

இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் மற்றும் கடன் நெருக்கடியை முகாமைத்துவம் செய்வதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்திற்கு முன்னணியின் எதிர்ப்பும் அது சம்பந்தமான கருத்தாக்கங்களும் வரவேற்கத்தக்கன. மக்களின் ஆணையற்ற அரசு, சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது மக்கள் விரோத ஜனநாயக மறுப்பின் வெளிப்பாடு. இந்த உடன்படிக்கையின் மூலம் கடன்களை திருப்பிச் செலுத்துவது  சாதாரண குடிமக்கள் மீது சுமத்தப்பட்டது, அதேவேளை, கடனை அடைப்பதற்கு பொறுப்பானவர்கள் எந்த விளைவுகளையும் எதிர்கொள்ளவில்லை என்ற  முன்னணியின் குற்றச்சாட்டு நியாயமானது. சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையையும் பல்தேசிய கூட்டுத்தாபனங்கள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களின் அரசியல் பொருளாதார தலையீட்டையும் முன்னணிப்பேச்சாளர்கள் கடுமையாக எதிர்த்தனர்.

பேரினவாத சிங்கள – பௌத்த அரச கட்டமைப்பு தொடர்பான முன்னணியின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கதே. தமிழர்களுக்கும் ஏனைய சிறுபான்மையினருக்கும் எதிரான வன்முறைகள், ஆயுதப் படைகளால் தமிழர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட கொடூரமான வன்முறை, வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு, திரிக்கப்பட்ட வரலாற்றைப் பயன்படுத்தி தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் என்ற போர்வையில் நில அபகரிப்பு, காணாமல்போனவர்களுக்கு நீதி கிடைக்காத நிலை ஆகிய அனைத்து விடயங்களிலும் ஆரோக்கியமான கருத்துகள் முன்வைக்கப்பட்டன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

எனினும், ‘தேசியப் பிரச்சினை’ தொடர்பாக மூன்று தமிழ் பேச்சாளர்களின் முரணான உரைகளையிட்டு நான் ஆழ்ந்த விசனம் கொண்டுள்ளேன். . ‘தேசியப்பிரச்சினை’ சம்பந்தமாக ஒரு ஆழமான தெளிவான அணுகுமுறையை முன்னணியின் தமிழ் பேச்சாளர்கள் முன்வைக்கவில்லை. மாறாக, முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

ஏனைய கட்சிகளைப் போலல்லாமல், முன்னணியின் அரசியல் வேலைத்திட்டம் சாத்தியமானதும் மக்களை மையமாகக் கொண்டதும் என பேச்சாளர்கள் விளம்பினர். எனவே, தமிழர்கள் தங்களுடன் போராட்டத்தில் இணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தனர். எனினும், அவர்கள் ‘தேசியப் பிரச்சினை’க்கான தீர்வை தெளிவாக வரையறுக்கவில்லை.

பேச்சாளர்கள் தம்மை கூட்டணியின் உறுப்பினர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதோடு, இந்த ஊடக  சந்திப்பு  சமூக – பொருளாதார பிரச்சினைகள் மற்றும் ‘தேசிய பிரச்சினை சம்பந்தமாக கட்சியின் நிலைப்பாட்டை சுருக்கமாக கோடிட்டுக் காட்டுவதை இலக்காகக் கொண்டதாக தெரிவித்தனர்.

பேச்சாளர்களில் ஒருவரான சுவஸ்திகா அருலிங்கம், 13ஆவது திருத்தம் அரசியலமைப்பில் இருக்கின்றது என்றும் மற்றைய அரசியல் கட்சிகள் பல அதை முழுமையாக அமுல்படுத்துவதாக தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகின்றனர் என்றும் கூறினார். அத்தகைய கதையாடல்கள் ‘தேசியப் பிரச்சினையை’ தீர்க்கப் போவதில்லை எனவும் அதற்கு மாற்றாக  முன்னணி ‘சுயாட்சி’ அலகுகளை  தீர்வாக முன்வைத்துள்ளதென்றார். எனினும், 13ஆம் திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படாத அரசியல் காரணிகள் பற்றி அவர் விளக்கவில்லை. சுயாட்சி அலகுகள் எதை உள்ளடக்குகின்றன என்பதையும் முன்னணி தெளிவுபடுத்தத் தவறிவிட்டது.

13ஆவது திருத்தத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி முன்னணி, மாகாணத்தை சுயாட்சி அலகாக தக்க வைக்கும் பரிந்துரையை முன்மொழிவார்களா அல்லது வேறு வடிவங்களை முன்மொழிவார்களா? கணிசமான அதிகாரப் பகிர்வு இல்லாமல் அதிகாரப் பகிர்வின் அலகைக் குறைப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் வட கிழக்கில் உள்ள தமிழர்களால் சந்தேகத்துடன் பார்க்கப்படும், மேலும் இந்த மாகாணங்களில் உள்ள முஸ்லிம்களும் தமிழர்களுக்கு இன ரீதியாக அலகுகள் கொடுக்கப்படுவதை சந்தேகக் கண்கொண்டு பார்ப்பர்.

எனவே, அதிகாரப் பகிர்வின் அலகு எவ்வாறு அமையும்? பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய அதிகாரங்கள் எவை? மாகாணத்தின் அனுமதியின்றி மத்திய அரசு  அல்லது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருதலைப்பட்சமாக பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை திரும்பப் பெறுவதைத் தடுப்பதற்கான பொறிமுறைகள் என்ன என்பவை குறித்து முன்னணி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவது முக்கியமானதாகும்.

தென்னிலங்கையின் அரசியல் பொறிமுறையும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் உள்ள பாரிய அதிகாரங்களும் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு பாரிய தடைகளாக உள்ளன என்பதே எனது புரிதல். ஜனாதிபதியால் நியமிக்கப்படும் மாகாண ஆளுநர்களுக்கு மாகாண அரசாங்கங்களைக் கலைக்கும் அதிகாரம் உள்ளது. ஒற்றையாட்சி அரசு அதன் பெரும்பான்மைவாத குணாம்சம் மற்றும் சிங்கள பௌத்த சக்திகளின் எதிர்ப்பு  குறித்த அச்சம் ஆகிய காரணிகளாலேயே மாகாண அரசுகளுக்கான, முக்கியமாக வட கிழக்கு மாகாணங்களுக்கான பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்க தயக்கம் காட்டுகிறது.

மேலும், ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தென்னிலங்கை அரசியல் சக்திகள் விரும்பவில்லை எனில், தேசிய பிரச்சினைக்கு சுயாட்சியே தீர்வு எனக்கூறும் முன்னணி அதனை எவ்வாறு மக்கள் மத்தியில் கொண்டு செல்லப் போகிறது; அதற்கான வேலைத்திட்டங்கள் என்ன என்ற தெளிவுபடுத்தல்கள் முன்னணியிடம் காணப்படவில்லை.  நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதன் அவசியம், அதிகாரப்பகிர்வுக்கான அவசியம் மற்றும் பெரும்பான்மைவாத மனநிலையை எதிர்கொள்ளல் என்பவையடங்கிய மேலாதிக்க எதிர்ப்புக்கருத்தியல் பரப்புரையே இன்றைய காலத்தின் முக்கிய அரசியல் பணியாகும். அத்தகைய முன்னெடுப்புகள் இன்றி எழும் முன்மொழிவுகள் அர்த்தமற்றவை. இந்த எதிர்க்கருத்தியல் இன ஒருமைப்பாட்டை நோக்கிய சமூக நீதித்தளத்திலிருந்து எழுதல் அவசியம்.

இலங்கைத் தமிழ் அரசியல் மொழியாடலில் ‘சுயாட்சி’ என்பதன் பொருளை விரிவாக விளக்குதல் இங்கு அவசியம். இலங்கையில் சமஷ்டிக் கட்சி வட கிழக்கில் உள்ள தமிழர்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு கூட்டாட்சி அரசாங்கத்தை அமைக்கக்கூடிய ஒரு கூட்டாட்சி அரசு அமைப்புக்காக அரசியல் பரப்புரைகளை மேற்கொண்டது. 1968ஆம் ஆண்டில், சமஷ்டிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான வி.நவரத்தினம் கட்சியை விட்டு வெளியேறி, சுதந்திரத் தமிழர் தாயக கோட்பாட்டின் அடிப்படையில் தமிழர் சுயாட்சிக் கழகத்தை நிறுவினார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சுயாட்சிக் கழகத்தின் பரப்புரையால் ஈர்க்கப்பட்டு 1970களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கினார். ‘சுயாட்சி’ என்பது பிரிந்து செல்வதற்கான உரிமையையும் ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட அரசை உருவாக்குவதையும் குறிக்கிறது. எனவே, ஒரு அரசியல் கட்சி சுயாட்சியை முன்மொழியும் போது அது சுயநிர்ணய உரிமை மற்றும் பிரிந்து செல்லும் உரிமையை பரிந்துரைக்கிறது. ஓரளவுக்குப் பொருத்தமான அரசியல் சொல் மாநில சுயாட்சி எனலாம். அதாவது ஒரு ஐக்கிய அரசுக்குள் உள்ள பிராந்தியங்களுக்கு அதிக அரசியல் அதிகாரங்களை வழங்குதல். எவ்வாறாயினும், மாநில சுயாட்சி இன அடிப்படையில் வரையறுக்கப்படுதல் ஆபத்தானது. ஏனெனில், அவ்வாறான வரையறுப்பு, குறிப்பிட்ட பிராந்தியங்களில் வாழும் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்கள் மத்தியில் பிளவுகளை உருவாக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.

சுயாட்சி என்பது சுயநிர்ணய உரிமை கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது என்று சுவஸ்திகா அருளிங்கம் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, இது ஒரு முன்மொழிவு மட்டுமே என்றும் அவர் கூறினார்.

இன்னொரு முன்னணிப் பேச்சாளரான செந்திவேல்,‘தேசியப் பிரச்சினை’ நீண்டகாலமாக இலங்கையில் அரசாலோ அல்லது அரசியல் கட்சிகளாலோ தீர்க்கப்படாமல் உள்ளது. தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதும் சுயாட்சியை ஸ்தாபிப்பதுமே முன்னணியின் தீர்வு என்றும் கூறினார். இலங்கையில் நான்கு தேசிய இனங்களும் பல இனக்குழுக்களும் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த முன்னணிப் பேச்சாளரான ராஜீவ்காந்த், முன்னணியானது  ஒற்றையாட்சி அமைப்பை முழுமையாக எதிர்ப்பதாகவும், தமிழர்களது ‘சுயாட்சிக்காக’ குரல் கொடுப்பதாகவும் கூறினார். ‘சுயாட்சி’க்காக தமிழர்கள் நீண்டகாலமாக காத்திருந்ததாகவும், ‘சுயாட்சி’யின் கீழ் தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆள முன்னணி ஒரு தீர்வை முன்மொழிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

முன்னணியானது 13ஆவது திருத்தத்தை எதிர்க்காத அதேவேளை, 13ஆவது திருத்தச்சட்டம் ‘தேசிய பிரச்சினையை’ தீர்க்காது என்பதை ஏற்றுக்கொள்கிறது என்று அவர் வலியுறுத்தினார். அவர் மேலும் தெரிவிக்கையில், தென்னிலங்கையில் ஆதரவைப் பெறுவதற்கும் இனவாதத்தைப் பரப்புவதற்கும் தமிழ் பிராந்தியங்களில் ஒரு விடயத்தையும் தெற்கில் இன்னொன்றையும் கூறும் ஏனைய தென்னிலங்கைக் கட்சிகளைப் போலல்லாமல் முன்னணியானது தமிழ் மக்களுக்கான தீர்வாக ‘சுயாட்சி’ என்று தெளிவாக வரையறுக்கும் எழுத்துவடிவமான கொள்கை அறிக்கையைக் கொண்டுள்ளது என்றார். இந்த நிலைப்பாடு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சியின் ‘ஒரு நாடு, இரண்டு தேசம்’ கொள்கையை ஒத்ததாகத் தெரிகிறது.

மேலும், 1983ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும், இதுவரையும் எவ்வித பொறுப்புக்கூறலும் இல்லை என்றும் ராஜீவகாந்த் குறிப்பிட்டார். இது உண்மைக்குப் புறம்பானது. 1994 இல் பொதுஜன முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க 83 இல் தமிழர்கள் வன்முறைக்காளானதற்குப் பகிரங்க மன்னிப்பு கோரினார்.

2001ஆம் ஆண்டில், அவர் ஒரு உண்மை அறியும் ஆணைக்குழுவை நியமித்தார், மேலும் 1,278 பேர் இழப்பீடு கோரி கோரிக்கைகளை சமர்ப்பித்தனர். இந்த ஆணைக்குழு வன்முறைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தது, 949 நஷ்ட ஈட்டு கோரிக்கைகளை  ஏற்றுக்கொண்டது, பாதிக்கப்பட்டவர்களுக்கு மொத்தம் 72 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது. 2004ஆம் ஆண்டு 83 படுகொலையின் 21ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் கூட்டத்தில் சந்திரிக்க குமாரதுங்க இரண்டாவது முறையாக பகிரங்க மன்னிப்புக் கோரினார். நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் கூட்டுப்பொறுப்பு ஏற்கவேண்டும், பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிவித்தார்

இந்த நடவடிக்கைகள் போதுமானவை அல்ல அத்துடன் இவை ஒரு விதிவிலக்கே.  எனினும், குறைந்தபட்சம் அரச தலைவர் பகிரங்க மன்னிப்பு கோரினார் மற்றும் பொறுப்புக்கூறலை ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடப்பட வேண்டியது. அதனை விமர்சனம் செய்யலாம். ஆனால், மறைப்பது அரசியல் அறமாகாது. தமிழ்த் தேசியவாதிகளுக்கு இவை தேர்ந்தெடுத்த ஞாபக மறதியாக செயல்படுகின்றது என்பதே யதார்த்தம்.

எனக்கு சிங்களம் தெரியாது. எனவே, ‘தேசியப் பிரச்சினை’க்கான தீர்வு பற்றி சிங்களம் பேசுபவர்கள் என்ன கூறினார்கள் என்பது பற்றி எனக்கு முழுமையாக தெரியாது. துரதிர்ஷ்டவசமாக, அவர்களின் உரைகள் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ மொழிபெயர்க்கப்படவில்லை (ஆங்கிலத்தில் பேசிய பத்திரன மற்றும் சுருக்கமாக தமிழில் பேசிய உடுவரகெதர தவிர). முன்னணியின் முன்மொழிவு ‘சுயாட்சி’ என்று உடுவரெதர  தமிழில் குறிப்பிட்டார்.

எனது புரிதலானது முன்னணியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டின் படி பிராந்தியங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது, இனம் அல்லது வேறு அடையாளங்களின் அடிப்படையில் அன்றி, பிராந்திய அரசாங்கங்கள் மத்திய அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் சுயாட்சி அலகுகளாக நிறுவப்பட்டு, இரு சபை சட்டவாக்க அமைப்பின் கீழ் செயல்படும் என்பதாகும்.

முன்னணியின் முன்மொழிவுகளை தெளிவாக முன்வைப்பதற்குப் பதிலாக, ராஜீவகாந்த் தமிழ் தேசியவாத உணர்வுகளை ஜனரஞ்சக முறையில் தூண்டினார். சுயநிர்ணய உரிமை மூலமான ‘சுயாட்சி’ என  செந்திவேல் கூறினார்.

இலங்கைச் சூழலில், குறிப்பாக வடக்கில், சமூக வர்க்கம் மட்டுமல்ல, சாதியும் சமூக அசமத்துவ அடுக்கு முறையில் பாரிய பங்கு வகிக்கிறது. இச்சந்திப்பில் சாதி வேற்றுமை குறித்து பேச்சாளர்கள் மௌனம் சாதித்தது வெளிப்படையான நிதர்சனம். முன்னணிக்கு சமூக நீதி நிகழ்ச்சி நிரல் இருப்பின், சாதி மற்றும் பாலின  வேறுபாடுகள் ஏன் முன்னிலைப்படுத்தப்படவில்லை என்பது கேள்விக்குரியது.

இலங்கையில் தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு அரசியல் அதிகாரம், முழு ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக நீதி இல்லை என்பது யதார்த்தம். எனினும், இன அடையாளங்கள் இன மேன்மை மற்றும் கலாச்சார தனித்துவத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்படுவதால், அவை சமத்துவம், சகோதரத்துவம், சம நீதி போன்ற கோட்பாடுகளுக்கு விரோதமானவை, ஒன்றுக்கொன்று போட்டியிடும் தேசியவாத சித்தாந்தங்கள் பெரும்பாலும் பிரத்தியேகமானவை, சகிப்புத்தன்மையற்றவை மற்றும் ஜனநாயகமற்றவை என்பதை அனுபவம் காட்டுகிறது.

வரலாற்று ரீதியாக, சிங்கள மற்றும் தமிழ் தேசியவாதங்களின் போட்டியாலும் அதன் விளைவான நீண்டகால யுத்தம் காரணமாகவும் இனக் குழுக்களுக்கு இடையிலான பிளவுகள் ஆழமடைந்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சியின் போது வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதன் மூலம் இன அடையாளங்களின் அடிப்படையில் பிரதேச ஆட்சியை வரையறை செய்தல் ஒரு தனித்துவ இன அடையாள  நிகழ்ச்சி நிரலைக் கொண்ட பிளவுவாத அரசியலை முன்னெடுக்கின்றது என்பதை கடந்த கால படிப்பினைகள் சுட்டுகின்றன

எனவே, சிங்களமயமாக்கலையும் பௌத்த மயமாக்கலையும் எதிர்த்துப் போராடுவது அவசியமானது. ஆனால், அது தமிழ் தேசியவாத சிந்தனையின் அடிப்படையில் எழுவது இனங்களுக்கிடையிலான பிளவுகளை அதிகரிக்கச்செய்வது மட்டுமல்ல பேரினவாத சித்தாந்தத்தை மேலும் வளர்க்க உதவும். மேலும் சிங்களப் பெரும்பான்மைவாதத்திற்கு சாதகமான வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மாகாண எல்லைகளை மீண்டும் வரையறுப்பதற்கான எந்தவொரு நகர்வும் எதிர்க்கப்பட வேண்டும், அதிகாரப் பகிர்வு ஒரு இனக் குழுவுக்கு மட்டுமே பிரத்தியேகமானது அல்ல என்பதை உறுதிப்படுத்தல் அவசியம். வட கிழக்கினதும் மற்றைய பிரதேசங்களினதும் சுயாட்சி அலகுகள் இன அடிப்படையில் அன்றி பிராந்திய வடிவில் அப்பிராந்தியங்களில் வாழும் அனைத்து மக்களினதும் அரசியல் அபிலாசைகளையும் சமூக நீதியையும் நிலை நாட்டும் வகையிலான மீள் வரைவின் அவசியத்தை முன்னணி பரிசீலிக்க வேண்டும்.

பாரம்பரிய தமிழர் தாயகம் போன்ற பிரத்தியேகவாத சொல்லாடல்களை அடிப்படையாகக்கொண்ட பழமைவாத இன அரசியலிலிருந்து விடுபட்டு இன, மத, கலாசார மற்றும் மொழி வேறுபாடின்றி தற்போது வட கிழக்கு மாகாணங்களில் வாழும் அனைத்து மக்களினதும் சமூக நீதி அரசியலை முன்னெடுக்கும் புதிய அறிவியல் சிந்தனை மாற்றம் இன்றைய தேவை.

கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்களுடன் இணைந்த இத்தகைய அறிவார்ந்த மாற்றத்தின் ஊடாகவே பிராந்தியத்தின் தற்போதைய சிங்களமயமாக்கல் மற்றும் பௌத்த மயமாக்கலுக்கு சவால் விடக்கூடிய பிராந்திய சுயாட்சி பற்றிய ஒரு புதிய, வலுவான கருத்துருவை உருவாக்க முடியும்.

ஜனநாயக சமூகமொன்றை உருவாக்க பிரதேசங்களுக்கு அதிகாரப் பகிர்வு அத்தியாவசியமானதாகும். எனினும், ரோசா லுக்சம்பேர்க் எச்சரித்ததைப் போல, தேசிய சுய – நிர்ணயம் என்பது தொழிலாளர் அமைப்புகளுடன் ஒத்துழைக்க வேண்டிய நிலைப்பாட்டிலிருந்து மாறிய ஆபத்தான திசைதிருப்பலாக இருக்கும். இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடி, கடன் சுமை மற்றும் பல்தேசிய நிறுவனங்கள் மற்றும் வல்லரசுகளால் உழைப்பு மற்றும் இயற்கை வளங்கள் சுரண்டப்படுதல் ஆகியவற்றை எதிர்கொள்கிறது.

தொழிலாளர்கள், விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்கள், பெண்கள், LGBT+ மற்றும் ஒடுக்கப்பட்ட சாதியினர் போன்ற விளிம்பு நிலை மக்களை முதன்மைப்படுத்தும் சமூக நீதி அரசியலின் தேவை இன்றைய நெருக்கடிக்கால கட்டத்தில் அவசியமானதும் அவசரமானதுமாகும். முன்னணி ஒரு முற்போக்கு இயக்கம் என்ற வகையில், மக்களை ஒன்றிணைக்க அதிகாரப் பகிர்வு மட்டுமன்றி வர்க்க, சாதி மற்றும் பாலின வேறுபாடுகள், சுரண்டல் மற்றும் உடைமை பறிப்பு போன்ற அடிப்படைப் பிரச்சினைகளுக்க்கான குரலாக பரிணமிக்க வேண்டும்.

மேலும், இலங்கையில் மிகவும் பாதிக்கப்பட்ட சமூகம் மலையகத் தமிழர்கள், குறிப்பாக தோட்டத் தொழிலாளர்கள், அவர்கள் வாக்குரிமை பறிக்கப்பட்டதால் பன்னெடுங் காலமாக நாடற்றவர்களாக இருந்து, ஒதுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மற்றும் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட சமூகமாகும். மலையக மக்கள் தேச வரைபடத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள். அவர்கள் அன்னியர்கள். பிரஜாவுரிமை கிடைத்தும் பிரஜைகள் அல்லா அந்நியர்கள். இவ்வகையில் ‘சுயாட்சி’ பற்றி விவாதிக்கும் போது வடக்கில் உள்ள தமிழர்களுக்கு மட்டுமே ‘சுயாட்சி’ பொருந்தும் என்பது போல பேச்சாளர்கள் மலையகத் தமிழர்கள் பற்றி மௌனம் சாதித்தது கேள்விக்குரியது.

எனவே, தன்னாட்சி அலகுகள் என்றால் என்ன என்பதையும், ‘தேசிய இனப்பிரச்சினைக்கு’ அவற்றின் தீர்வு என்ன என்பதையும் முன்னணி தெளிவுபடுத்த வேண்டும் (நான் “சிறுபான்மை இனங்களின் பிரச்சினை” என்ற பதத்தை விரும்புகிறேன்). செந்திவேல் மற்றும் ராஜீவகாந்த் ஆகியோரின் ‘சுயாட்சி’ பற்றிய மொழியாடல் தவறான கருப்பொருளை மக்களிடம் முன் மொழிகிறது. வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்களுக்கு இன அடிப்படையிலான சுயாட்சி அல்லது இன/ மொழி அடிப்படையில் மாநில சுயாட்சியை முன்னணி முன்மொழிகிறது என வடக்கு வாழ் தமிழர் அர்த்தப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் என நான எண்ணுகிறேன்.

மாநில சுயாட்சியை அமல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட எந்தவொரு பொறிமுறையும் வடக்கு, கிழக்கு மற்றும் பிற மாகாணங்களில் சாதி, பாலினம் மற்றும் வர்க்க அடிப்படையிலான பாகுபாடுகளை நிவர்த்தி செய்யும் சமூக நீதி அரசியலை முன்னெடுத்தல் காலத்தின் தேவை.

மார்க்ஸ் ஒருமுறை கூறினார்: “இறந்துபோன தலைமுறைகளின் பாரம்பரியம் உயிருடன் இருப்பவர்களின் மூளையில் ஒரு மலை போல கனக்கிறது.” ஒருவர் ஒரு புதிய மொழியைக் கற்கும்போது ஆரம்பத்தில் அவர்கள் தமது மூளைக்குள் தமது தாய்மொழியில் புதிய மொழியை மொழி பெயர்த்து விளங்கிக்கொள்கின்றனர். அவர்கள் தங்கள் சொந்த மொழியில் புதிய மொழியை மூளைக்குள் மொழிபெயர்ப்பதை நிறுத்தி, புதிய மொழியை முற்றிலும் உள்வாங்கி அதில் மூழ்குவதன் மூலமே தமது சொந்த மொழியால் வரைவிலக்கணம் செய்வதை நிறுத்தி புதிய மொழியை முழுமையாக உள்வாங்கி அந்த மொழியால் முற்றிலும் புதிய வரைவிலக்கணத்தை கொடுக்கும் சுதந்திர சிந்தனையை பெறுவர்.

இவ்வகையில், இனத்துவ – தேசியவாத அரசியல், சமூகங்களை துருவப்படுத்தி, ஒருவருக்கொருவர் எதிரிகளாக நிலை நிறுத்தும் இலங்கை போன்ற ஒரு நாட்டில், இன தனித்துவத்தை கைவிட்டு இன ஒருங்கிணைப்பை வலியுறுத்தும் அதிகாரப் பகிர்வு கட்டமைப்பின் கீழ் நமது அரசியல் எதிர்காலம் பற்றி பேச நமக்கு ஒரு புதிய மொழி தேவை.

அரகலய போராட்டங்களின் போது, ஒரு ஜனநாயக சூழல் இயல்பாக உருவானது, இது இலங்கைப் பேரினவாத தேசியத்தின் பெயரால் இழைக்கப்பட்ட கடந்தகால அநீதிகள், காலனித்துவத்திற்குப் பிந்தைய சூழலில் சிங்கள பௌத்த இனத்துவ தேச அரசு கட்டுமானத்தின் தோல்விகள், இனச் சிறுபான்மையினரை புறம் தள்ளுதல் போன்ற முக்கிய பிரச்சனைகள் கலந்துரையாடப்பட்டு விவாதிக்கப்பட்டன, அரசியல் தலைவர்கள் அதிகாரத்தைக் கையாள்வதற்காக உண்மைகளைத் திரித்து, மக்களை ஏமாற்றுவதற்கான கருவியாக பிளவுபடுத்தும் அரசியலைப் பயன்படுத்துகிறார்கள் என்ற ஒருமித்த கருத்து எழுந்தது.

அரகலய எழுச்சிக் காலகட்டத்தில் சிங்கள பௌத்த பெரும்பான்மைவாத சித்தாந்தத்தில் சிறு விரிசல் ஏற்பட்ட போதிலும், நூற்றாண்டு கால பழமையான அரசியல் மற்றும் சமூக சொல்லாடல்கள் குறுகிய காலத்திற்குள் மாறிவிடும் என்று எதிர்பார்க்க முடியாது.

அரகலய போராட்டங்களில், ஒன்றுபட்ட மக்கள் ஜனநாயகத்தை முதன்மைப்படுத்தி புதிய கண்ணோட்டமும் புதிய சிந்தனை முறைகளும் தோன்றின, இளைஞர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு அரும்பிய புதிய சிந்தனைகளை வளர்க்க ஜனநாயக முற்போக்கு சக்திகளின் பங்கு அவசியமானது. எனினும், பிற்போக்கு மற்றும் பிளவுபடுத்தும் அரசியல் சக்திகளின் ஆதிக்கத்தை குறைத்து மதிப்பிட முடியாது.

இது ஒரு ஆரம்பம் மட்டுமே, அனைத்து மக்களையும் இன, மத வேறுபாடின்றி ஒன்றிணைக்கும் ஜனநாயக சமூகத்தை உருவாக்குவது பெரும் சவால். ஆனால், அவசியமானது. தேசம், தேசப்பற்று, இறையாண்மை என்ற மொழியாடல்களால்  நியாயப்படுத்தப்படும் அரச அநீதிகளையும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளையும் எதிர்த்துப் போராட வேண்டிய கடமை சிங்கள சமூகத்திற்குள் உள்ள முற்போக்கு சக்திகளுக்கு உண்டு. ஆனால், இன அடையாளங்களை முதன்மைப்படுத்துவது ஆபத்தான அரசியல் மட்டுமல்ல பேரினவாத சித்தாந்தத்தை உரம் போட்டு வளர்க்கும் செயலுமாகும். எனவே, இன, மத வேறுபாடின்றி அனைத்து சமூகங்களிலுமுள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகள் அணி திரள்வதற்கான முன்னெடுப்பே மாற்று அரசியலாக மிளிரும்.

வரலாற்று ரீதியாக, பெரும்பான்மைவாத தேசியவாத சித்தாந்தத்தை எதிர்கொள்ள  வட – கிழக்கின்  தமிழ் அரசியல் தலைமைகள்  தற்காப்பு தமிழ் தேசியவாத சித்தாந்தத்தை கட்டமைத்தன, இந்த சித்தாந்தம் சிங்கள தேசியவாதத்தின் கண்ணாடி விம்பம். ஒரு நாணயத்தின் இருவேறு பக்கங்கள்.

இந்த தமிழ் தேசிய கருத்தியலில் தமிழர்கள் தனித்துவமான ஒரு இனக்குழுவாக, பாரம்பரிய பிரதேசங்களை கொண்டவர்களாக, தம்மைத்தாமே ஆழும் பிறப்புரிமை கொண்டவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். அதேவேளை, சிங்கள பௌத்த தேசியவாத கருத்தியல் ஒட்டுமொத்த இலங்கையும் சிங்கள பௌத்த தேசமென கட்டமைக்கிறது. இந்த கருத்தியல்கள் சமூக – அரசியல் பரப்பில் இயங்கி, அரசியல், சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகளை இன அடிப்படையில் குறுக்கிக்கொள்கின்றன.

இலங்கையின் நெருக்கடி நிலையில் எரியும் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வை முன்னணி தேசியவாத கருத்தியல் மன நிலையிலிருந்து பார்க்கிறது. சிங்கள பௌத்த தேசியவாத கருத்தியலுக்கு மாற்றாக தமிழ் தேசியவாத கருத்தியலுக்கு முண்டு கொடுப்பதன் மூலம் தமிழ் தேசியவாத சக்திகளை சமாதானப்படுத்த முயற்சிக்கிறது, இது எதிர்மறையானது. இன்று இலங்கை எதிர்கொண்டுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணமான ஜனநாயக விரோத, இனவாத, நவதாராளவாத அரச கட்டமைப்பை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்வதே தலையாய பணியாகும்.

கருத்தியல் தளத்தில் அரசின்  இனத்துவ மேலாதிக்க கருத்தியலை எதிர்கொள்ள அரகலய காலத்தில் அரும்பிய புதிய மொழியான இன ஐக்கியம், மூலமான ஜனநாயக சமூக நீதி கருத்தியலை முன்னெடுத்தல் முதன்மையான பணியாகும். அத்தகைய அறிவுசார் சிந்தனை மாற்றம் இன்றிய முன்மொழிவுகளும் அறிக்கைகளும் அர்த்தமற்றவை.

ராகவன்