Photo, @PMDNewsGov
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை அதன் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட முறையில் மீண்டும் முக்கியத்துவத்தைப் பெறத்தொடங்கியிருக்கிறது போன்று தெரிகிறது.
ஆபிரிக்க நாடான உகண்டாவின் தலைநகர் கம்பாலாவில் தற்போது நடைபெற்ற அணிசேரா நாடுகளின் 19ஆவது உச்சிமாநாட்டிலும் 77 நாடுகள் குழு மற்றும் சீனாவின் மூன்றாவது தெற்கு உச்சிமகாநாட்டிலும் ஜனாதிபதிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் கிடைத்தது. உகண்டா ஜனாதிபதி ஜோவெரி முசவெனியின் அழைப்பின் பேரில் விக்கிரமசிங்க முக்கியமான சந்திப்புகளில் பங்கேற்றது மாத்திரமல்ல, அணிசேரா உச்சிமாநாட்டிலும் தெற்கு உச்சிமகாநாட்டிலும் உரையாற்றினார் என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
கம்பாலாவுக்கான தனது விஜயத்தின்போது அவர் ஆபிரிக்க பிராந்தியத்தைச் சேர்ந்த தலைவர்களுடன் இரு தரப்பு உறவுகளைப் பலப்படுத்துவதில் முக்கிய கவனத்தைச் செலுத்தியதுடன் தெற்கு உலக நாடுகளின் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
அணிசேரா இயக்கத்தின் 120 தலைவர்களும் ஒன்றாக எடுத்த படத்தில் உச்சிமகாநாட்டை நடத்தும் உகண்டா ஜனாதிபதிக்கு பக்கத்தில் முன்வரிசையில் நின்றதைக் காணக்கூடியதாக இருந்தது. 1976 ஆண்டு கொழும்பில் பிரதமர் திருமதி சிறிமா பண்டாரநாயக்க அணிசேரா நாடுகளின் உச்சிமகாநாட்டை நடத்தியபோதே இறுதியாக இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் கிடைத்தது. சர்வதேச பொருளாதார நீதிக்கு கோராக்கை விடுத்து அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் நடத்திய ஒரு முக்கியமான மகாநாடாக அது அமைந்தது.
அந்த நேரத்தில் இலங்கை சர்வதேச அரங்கில் பொருளாதார கொள்கையில் உதாரணம் வகுக்கும் ஒரு நாடாக விளங்கியது. சமத்துவத்துடனான அபிவிருத்திக்கான சாத்தியப்பாட்டை வெளிக்காட்டியது. ஏனைய பல நாடுகளையும் விட உயர்ந்த தனிநபர் வருமானத்துடன் தரம்வாய்ந்த பௌதீக வாழ்க்கைக் குறிகாட்டியில் முன்னிலையில் இலங்கை அன்று விளங்கியது.
உச்சிமகாநாட்டில் ஜனாதிபதி விக்கிரமசிங்க நிகழ்த்திய உரை முன்னுதாரணமானதாக அமைந்ததுடன் அங்கு கூடியிருந்த உலகத் தலைவர்களின் பெரும் மதிப்பையும் பெற்றது. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் அக்கறைக்குரிய இரு முக்கிய பிரச்சினைகளை அவர் தனதுரையில் மிகவும் துணிச்சலான முறையில் கையாண்டார்.
மத்திய கிழக்கில் காசா போர் நெருக்கடிக்கும் தெற்கு உலகம் மீதான வடக்கு உலகின் தொடர்ச்சியான ஆதிக்கத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவர் உரையாற்றினார்.
காசா பள்ளத்தாக்கின் மனிதாபிமான நெருக்கடியையும் இலங்கையில் இனமோதலைக் கையாண்டதில் தனக்கு இருக்கும் அனுபவங்களைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட பெருவாரியான தீர்மானங்களுக்கும் இந்த அணிசேரா உச்சிமாநாட்டின் பிரகடனத்துக்கும் இசைவான முறையில் மேற்கு ஆற்றங்கரை, காசா பள்ளத்தாக்கு மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகியவை பாலஸ்தீன அரசின் எல்லைகளுக்குள் வருவதை அங்கீகரிக்கவேண்டும் என்றும் காசாவின் இனரீதியான குடிப்பரம்பலில் மாற்றம் இருக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.
மதிப்பாய்வுடனான அணுகுமுறை
அமெரிக்காவின் தலைமையிலான சர்வதேச கடற்படையில் இணைந்து கொள்வதற்கு இலங்கையின் போர்க்கப்பல்களை செங்கடலுக்கு அனுப்புவதற்கு ஜனாதிபதி எடுத்த சர்ச்சைக்குரிய தீர்மானத்துக்கு பிறகு இலங்கையிலும் சர்வதேச ரீதியாகவும் முஸ்லிம்களின் உணர்வுகளை சாந்தப்படுத்துவதற்கு பெருமளவு உதவக்கூடியதாக ஜனாதிபதியின் உச்சிமகாநாட்டு உரை அமைந்தது.
சுதந்திரமான கப்பல் போக்குவரத்துக்காக ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இலங்கைக் கடற்படைக் கப்பல்களை அனுப்புவதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானம் இலங்கையில் உள்ள மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்கள் அவரைச் சந்தித்துப் பேசவேண்டிய அவசியத்தை உருவாக்கியது.
சனத்தொகையில் கால்வாசிக்கும் அதிகமானவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஒரு நாட்டைப் பொறுத்தவரை பெரும் செலவுபிடிக்கிற ஒரு கடற்படை நடவடிக்கையில் இறங்குவது கட்டுப்படியாகாத ஒன்று என்று கடுமையான விசனமும் வெளிப்படுத்தப்பட்டுவருகிறது.
அத்துடன், பாலஸ்தீனப் போராட்டத்துக்கு உணர்ச்சிபூர்வமாக ஒருமைப்பாட்டை வெளிக்காட்டும் இலங்கை முஸ்லிம் மக்களின் உணர்வுகளை அவமதிப்பதாகவும் ஜனாதிபதியின் தீர்மானம் அமைந்தது.
நாட்டின் நலன்களை சர்வதேச சமூகத்தின் முன்னால் முன்னுரிமைப்படுத்தும் அக்கறை காரணமாகவே ஜனாதிபதி பெருவாரியான வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்கிறார் என்று அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்றுவருவதற்கு ஒரு நியாயப்பாட்டை அவரின் சீடர்களில் ஒருவரான ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரான வஜிர அபேவர்தன முன்வைக்கிறார். மேலதிக செலவினங்கள் நாட்டுக்கு கட்டுப்படியாகாத ஒரு நேரத்தில் பெருமளவு பணத்தை ஜனாதிபதி செலவுசெய்கிறார் என்ற ஒரு விமர்சனம் இருக்கிறது.
ஒன்றரை வருட காலத்தில் நெருக்கடி நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுத்து அபிவிருத்திப் பாதையில் நகர்த்துவதற்கான தனது முயற்சிகளின் விளைவாக இலங்கை மீது உலகின் கவனத்தை ஜனாதிபதி விக்கிரமசிங்க திருப்பியிருப்பதாகவும் அதற்காக தனது வெளிநாட்டு விஜயங்களை அவர் பயனுறுதியுடைய முறையில் பயன்படுத்தியிருப்பதாக அபேவர்தன கூறுகிறார்.
உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் போன்ற சர்வதேச நிறுவனங்களினதும் பல்வேறு நாடுகளினதும் ஆதரவுடன் இலங்கையை முன்னேற்றுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
நாட்டுக்கு உச்சபட்ச பயன்களைப் பெறுவதற்காக செங்கடலுக்கு மதிப்பாய்ந்த ஒரு வெளியுறவுக் கொள்கையை ஜனாதிபதி கடைப்பிடிக்கிறார் என்று தெரிகிறது. கடற்படையை அனுப்பும் தீர்மானத்தில் இருந்து ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ பின்வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உகண்டாவில் அணிசேரா நாடுகளின் உச்சிமகாநாட்டில் ஜனாதிபதியின் உரையின் முற்பகுதியைப் போன்றே பிற்பகுதியும் நிச்சயம் பாராட்டவேண்டியதாக இருக்கிறது. அணிசேரா நாடுகள் குழுவுக்கு அறிவுத்திறனுடைய தலைமைத்துவம் ஒன்றின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். வடக்கு – தெற்கு பிளவு குறித்தும் தெற்கு உலகம் தன்முனைப்புடன் செயற்படவேண்டிய அவசியம் குறித்தும் அவர் உணர்ச்சியைக் கிளறும் வகையில் பேசினார்.
“எமது உறுப்பு நாடுகள் இனிமேலும் பலவீனமான அரசுகளின் ஒரு குழுவாக இல்லை. ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க பிராந்தியங்களின் சில நாடுகளின் துரித முன்னேற்றம் மற்றும் பொருளாதார மேம்பாட்டின் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டது என்பதை நாம் அங்கீகரிக்கவேண்டும். 2050ஆம் ஆண்டளவில் உலகின் பத்து முன்னணி பொருளாதாரங்களில் பெரும்பாலானவை அணிசேரா இயக்கத்துக்குச் சொந்தமானவையாக விளங்கும். அவை தலைமைத்துவத்தை வழங்குவதற்குத் தயாராக வேண்டும்” என்று விக்கிரமசிங்க தனதுரையில் கூறினார்.
நம்பிக்கையை வென்றெடுத்தல்
அணிசேரா உச்சிமகாநாட்டில் பங்கேற்ற 120 நாடுகளில் அனேகமாக அரைவாசி நாடுகள் ஆபிரிக்க கண்டத்தைச் சேர்ந்தவை என்கிற அதேவேளை அவற்றின் ஆதரவு இலங்கைக்கு தேவை என்பதை கருத்திற் கொண்டதாகவே கம்பாலாவில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் அமைந்தன.
“இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்” என்ற தொனிப்பொருளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 46/1, 51/1 தீர்மானங்களின் நடைமுறைப்படுத்தல் தொடர்பில் எதிர்வரும் மார்ச்சிலும் பிறகு செப்டெம்பரிலும் பேரவையின் கூட்டத்தொடர்களில் ஆராயப்படவிருக்கிறது.
உள்நாட்டுப்போர் 2009 ஆண்டில் முடிவுக்கு வந்த பிறகு இலங்கை மனித உரிமைகள் பேரவையின் அறிவுறுத்தல்களுக்கு உள்ளாகிவருகிறது. பேரவையில் ஒரு தடவை மாத்திரம் வெற்றி பெறக்கூடியதாக இருந்தது. போருக்குப் பின்னரான பிரச்சினைகளை கையாளுவதில் இலங்கை அக்கறையுடன் செயல்படுவதாக கலாநிதி தயான் ஜெயதிலக தலைமையிலான இராஜதந்திரிகள் குழுவினரால் தெற்கு உலகின் நாடுகளை நம்பவைக்கக்கூடியதாக இருந்தது. ஆனால், அதற்குப் பிறகு தீர்மானங்கள் மீதான சகல வாக்கெடுப்புக்களிலும் இலங்கை தோல்வி கண்டது. மனித உரிமைகள் பேரவைக்கு அளித்த உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்றத் தவறியதே அந்தத் தோல்விகளுக்கான காரணமாகும்.
தற்போது போருக்குப் பின்னரான நீதியைப் பொறுத்தவரை இலங்கை நிறைவேற்றுவதற்கு பல உறுதிமொழிகள் இருக்கின்றன.
இலங்கையில் பதவியில் இருந்த அரசாங்கங்கள் உறுதிமொழிகளைக் காப்பாற்றத் தவறியதனால் சர்வதேச மனித உரிமைகள் சமூகம் “இலங்கையில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்ந்து தகவல்களையும் சான்றுகளையும் திரட்டுவதற்கும் எதிர்காலப் பொறுப்புக் கூறலுக்கான செயன்முறைகளுக்கு சாத்தியமான திட்டங்களை வகுப்பதற்கும் பலியானவர்களுக்கும் உயிர்தப்பியவர்களுக்கும் நீதி கிடைப்பதற்காக குரல்கொடுப்பதற்கும் தகுதிவாய்ந்த நியாயாதிக்கமுடைய உறுப்புநாடுகளில் பொருத்தமான நீதிச் செயன்முறைகளை முன்னெடுப்பதற்கும் உதவியாக ஜெனீவாவில் சர்வதேச தரவு திரட்டல் பிரிவு ஒன்றை அமைத்திருக்கிறது.
ஆனால், உகண்டாவில் ஜனாதிபதி முன்னெடுத்த ஆதரவு திரட்டும் முயற்சிகளுக்குப் பிறகு இலங்கை மீண்டும் ஒரு தடவை (2009ஆம் ஆண்டில் இடம்பெற்றதைப் போன்று) மனித உரிமைகள் பேரவையின் பெரும்பான்மையான உறுப்பு நாடுகளின் ஆதரவைப் பெறக்கூடியதாக இருக்கும்.
காசா பள்ளத்தாக்கில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இயலாமற்போன சூழ்நிலைகளில் ஐக்கிய நாடுகளின் நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டிருக்கின்றமையால் இலங்கை தற்போது சர்வதேச ரீதியில் ஆதரவைத் திரட்டும் பணிகள் சுலபமாகிவிட்டன எனலாம்.
இந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஒன்றின் மூலமாக நல்லிணக்கப் பொறிமுறைகளை குறிப்பாக தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க அலுவலகத்தை அமைக்கும் செயன்முறைகளை முன்னெடுப்பதில் வெற்றிகாணமுடியும் என்று அரசாங்கம் இரண்டு மடங்கு நம்பிக்கையுடன் இருக்கிறது. உண்மை, ஐக்கியம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கான சட்டமூலம் இப்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கிறது.
அரசாங்கத்தின் இந்த முன்முயற்சிகள் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கத் தவறுவதற்கு வாய்ப்பில்லை. அரசாங்கம் சர்வதேச அரங்கில் அதன் போராட்டங்களை ஒவ்வொன்றாக வென்றுகொண்டு வருகிறது.
ஆனால், நாட்டுக்குள் மக்களின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் அரசாங்கத்தினால் வென்றெடுக்க இயலுமா என்பது முக்கியமான கேள்வி. பிரதான தமிழ்க் கட்சியின் புதிய தலைவர், தேர்தலில் மிதவாத வேட்பாளரின் தோல்வி மேலும் பல விடயங்களைச் செய்யவேண்டிய தேவையை உணர்த்திநிற்கிறது.
கலாநிதி ஜெகான் பெரேரா