Photo, HARVARDPOLITICS

கடந்த அக்டோபர் 7ஆம் திகதி இடம்பெற்ற ஹமாஸ் தாக்குதலை கண்டனம் செய்து, அதனை உரிய பின்புலத்தில் வைத்து நோக்கவேண்டுமென ஐ.நா. செயலாளர் நாயகம் உலகுக்கு எச்சரிக்கை விடுத்த பொழுது, இஸ்ரேல் அவரை மிகக் கடுமையாக விமர்சனம் செய்தது. ஆனால், அவர் அப்பொழுது சொன்னது சரி. (ஏற்கனவே இடம்பெற்று வரும்) ஒரு கதையின் நடுவில் முரண்பாடொன்றுக்குள் பிரவேசிப்பது எம்மை பிழையான வழியில் வழிநடத்த முடியும்.

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலின் கதை 19ஆம் நூற்றாண்டின் முடிவில் ஆரம்பிக்கின்றது. அதாவது, புலம்பெயர்ந்த யூதர்களின் ஒழுங்கமைந்த குழுக்கள் பாலஸ்தீனத்துக்கு வந்த சந்தர்ப்பத்தில் அது ஆரம்பித்தது. அந்த நிலம் இறைவனால் தமக்கு வாக்களிக்கப்பட்ட நிலம் என அவர்கள் உரிமை கோரினார்கள்.

அச்சந்தர்ப்பத்தில் பலஸ்தீனத்தில் பெருமளவுக்கு (முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை உள்ளடக்கிய) அரேபிய பாலஸ்தீனியர்களே வசித்து வந்தார்கள். அதேவேளையில் யூதர்கள், துருஸ் மற்றும் சமாரிட்டன் பாலஸ்தீனியர்கள் போன்ற சிறு சிறு சமூகங்களும் அங்கு வசித்து வந்தன. அச்சமூகங்கள் அனைத்துமே யூதர்களின் இந்தக் கோரிக்கையை அநியாயமான ஒரு கோரிக்கையாகக் கருதின. பாலஸ்தீனம் அச்சமூகங்களுக்குச் சொந்தமான நிலமாக இருந்து வந்தது.

மனிதாபிமானமற்ற முறையில் இன்று இடம்பெற்று வரும் பாலஸ்தீனியர்களின் படுகொலை, இந்தக் கதையின் இற்றைப்படுத்தப்பட்ட வடிவமாகும். அது ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் பாலஸ்தீனத்தின் வாசற்படியில் வந்து உறுதியாகக் காலூன்றிய ஒரு குழு, அந்நிலத்தை எவ்வாறு அடிமைப்படுத்தியது என்ற கதையைக் கூறுகிறது. அங்கு வாழ்ந்து வந்த மக்கள் தமது நிலத்தையும், சுதந்திரத்தையும், இன்னும் பலவற்றையும் இழந்துள்ளார்கள். பொறியில் சிக்கவைக்கப்பட்டு, தாக்குதல்களுக்கு இலக்கு வைக்கப்பட்டிருக்கும் அம்மக்கள் ஒட்டுமொத்த அழிவை எதிர்நோக்கியிருக்கின்றார்கள்.

சியோனிசம் மற்றும் தண்டனை விலக்குரிமை என்பவற்றின் ஒரு கலவை நீதி நியாயம் கேலிக் கூத்தாக்கப்பட்டிருக்கும் இந்த நிலைமையை எடுத்து விளக்குகின்றது.

சியோனிசம்

கிறிஸ்தவ ஐரோப்பாவில் இடைவிடாது நிகழ்ந்து வந்த யூத இன அழிப்புச் செயல்களினால் சியோனிசக் கருத்தியல் தூண்டப்பட்டது. அந்த இன அழிப்புச் செயற்பாடு யூதர்களை “இயேசுவின் கொலைகாரர்களாக” சித்தரித்து, அவர்களை துன்புறுத்திய ஒரு செயற்பாடாக இருந்து வந்தது. சியோனிசத்தின் தந்தையான தியொடோர் ஹேர்சல் யூதர்கள் அனுபவித்த கடுந்துன்பத்தை, பாலஸ்தீனத்தில் அவர்களுக்கான ஒரு தாயகத்தை கோரும் ஒரு கோரிக்கையாக வடிவமைத்தார்.

சியோனிசம் என்பது யூதர்களின் மதம் (Judaism) அல்ல. முழு பாலஸ்தீனத்தையும் ஆக்கிரமித்து, பாலஸ்தீனியர்களை அங்கிருந்து துரத்தியடிப்பதில் கவனம் செலுத்திய ஓர் இனத்துவ – தேசியவாத நிகழ்ச்சிநிரலாக அது உருவாகியது.

இதற்கு மாறான விதத்தில், ஜூடாயிசம் யூதர்களின் அதிகாரபூர்வமான சமயமாகும். ஏனெனில், அது இறைவன் மீதான விசுவாசத்தை, தமது அயலவரை அன்புடன் நேசிப்பதற்கு இணையானதாக கருதுகின்றது. அது மற்றவர்களுடன் சக வாழ்வு நடத்துவதற்கான உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்த வேறுபாட்டைக் கருத்தில் கொண்டே யூதர்களான பெருந்தொகையான இஸ்ரேலியர்கள் சியோனிச இஸ்ரேலின் நிகழ்ச்சிநிரலுக்கு இன்று எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றார்கள்.

இரு காரணிகளின் சங்கமம் சியோனிச நிகழ்ச்சிநிரலுக்கு உதவியுள்ளது. பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கான ஒரு தாயகத்தை வடிவமைத்த பல்போர் பிரகடனம் (யூத இன அழிப்பு தொடர்பான) ஐரோப்பிய குற்ற உணர்ச்சியைப் பிரதிபலித்தது. ஐரோப்பாவில் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களுக்கு ஐரோப்பிய யூதர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டியிருந்தது. ஆனால், அது ஐரோப்பாவிலிருந்து  வெகு தொலைவில் அமைந்திருக்கும் ஓரிடத்திலேயே வழங்கப்பட்டது. அந்த நிலத்தில் அப்போது வசித்து வந்த மக்களின் “உரிமைகள் மற்றும் சலுகைகள் என்பன பாதுகாக்கப்படும்” என்ற விதத்தில் இப்பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த ஏற்பாடு பொய்யானது என்பது இப்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மற்றைய காரணி மேலைத்தேச காலனித்துவத்தின் அப்போது நிலவிய சூழலாகும். பேராசை பிடித்த ஒரு சில நாடுகள் ஏனைய நாடுகளை கொள்ளையடிப்பது சர்வ சாதாரணமாக இடம்பெற்று வந்த ஒரு கால கட்டத்திலேயே பாலஸ்தீனத்தின் மீதான சீயோனிச ஆக்கிரமிப்பு நிகழ்ந்தது.

தண்டனை விலக்குரிமை

சியோனிசம் மட்டும் இஸ்ரேலை ஓர் அரக்க அரசாக மாற்றியமைத்திருக்க முடியாது. மேலைய உலகின் குற்ற உணர்ச்சி, சியோனிசம் தொடர்பான எந்தவொரு விமர்சனத்தையும் ஒரு யூத எதிர்ப்பு நிலைப்பாடாக தந்திரமாகக் கட்டமைத்தது. இந்நிலைமையே தண்டனைக் குறித்த எவ்வித அச்சமுமின்றி தாராளமாகக் குற்றச் செயல்களை இழைக்கும் உரிமையை இஸ்ரேலுக்குப் பெற்றுக் கொடுத்தது. ஒரு சில ஐக்கிய அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யூத எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக அண்மையில் காங்கிரஸ் சபையினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள், இந்த விடயம் எவ்வாறு மிகவும் தந்திரமான விதத்தில் கையாளப்பட்டு வருகின்றது என்பதனை எடுத்துக் காட்டுகின்றன.

சியோனிஸ்ட்களின் தண்டனை விலக்குரிமை முதலில் பிரிட்டிஷ் பணிப்பாணையின் கீழ் (1920 – 1948) காலப் பிரிவில் வெளிப்படுத்திக் காட்டப்பட்டது. யூத ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிய பாலஸ்தீன மக்கள் கிளர்ச்சிக்காரர்களாக முத்திரை குத்தப்பட்டனர். அவர்களுடைய தலைவர்கள் சீஷெல்ஸ் நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டதுடன், சியோனிச இஸ்ரேல் பின்பற்றி வந்த ஒரு நடைமுறையின் பிரகாரம், அவர்களுடைய வசிப்பிடங்கள் இடித்தழிக்கப்பட்டன. யூதர்கள் நடத்திய நில அபகரிப்புக்கு எதிராக பாலஸ்தீன மக்கள் புரட்சி செய்த பொழுது, பிரித்தானியா இராணுவச் சட்டத்தைப் பிரகடனம் செய்து, திருப்பித் தாக்குவதற்கென இரவு நேர யூதப் படையணிகளுக்குப் பயிற்சியளித்தது. இந்தப் படையணிகள் பின்னர் இஸ்ரேல் பாதுகாப்புப் படையாக (Israeli Defence Force – IDF) பரிணாம வளர்ச்சியடைந்தன.

இந்த மோதல் கைமீறிச் சென்ற பொழுது, இந்நிலப்பரப்பை பிரிப்பதற்கு பிரிட்டிஷ் முயற்சி செய்தது. மேலும், யூதர்களின் குடிவரவையும், காணிகளை கையகப்படுத்துவதனையும் ஒழுங்குமுறைப்படுத்துவதற்கும் அது நடவடிக்கை எடுத்தது. ஆனால், அவை காலம் பிந்திய செயற்பாடுகளாகவே இருந்து வந்தன. ஏனென்றால், சியோனிச இஸ்ரேல் ஏற்கனவே தண்டனை விலக்குரிமையின் அதிகாரத்தை சுவைத்திருந்தது.

போர் மற்றும் உத்திகள்

இரண்டாவது உலகப் போர் மற்றும் மிகக் கொடூரமான யூத இன அழிப்பு என்பவற்றின் விளைவாக  பெரும் எண்ணிக்கையிலான யூத அகதிகள் லஸ்தீனத்துக்குள் வந்தார்கள். அது சியோனிஸ் நிகழ்ச்சிநிரலுக்கு மேலும் ஓர் எழுச்சித் தூண்டுதலை வழங்கியது. பிரிட்டிஷ் கட்டுப்பாட்டின் பின்னர்,  1948 இல் இஸ்ரேல் அரசு பிரகடனம் செய்யப்பட்டதனையடுத்து, இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான அயல் அரபு அரசுகளுக்குமிடையில் போர் வெடித்தது. 1967 இல் இடம்பெற்ற இஸ்ரேல் – எகிப்து பதற்ற நிலைமைகள், இரண்டாவது அழிவுகரமான போரொன்றுக்கு வழிகோலின.

இந்த இரு போர்களும் யூத இன அழிப்பு ஏற்படுத்திய பேரதிர்ச்சி தொடர்பான நினைவுகளை தூண்டியதுடன், தனது சொந்த நிலம் குறித்த சியோனிச இஸ்ரேலின் திடசங்கற்பத்தை மேலும் வலுப்படுத்தியது. அதன் விளைவாக உருவாகிய இஸ்ரேலின் மேலும் புத்துணர்ச்சியூட்டப்பட்ட  படைகள் எதிரிகளை இரு தடவைகள் துவம்சம் செய்தன. அதனையடுத்து, திட்டமிட்ட விதத்திலான ஒரு பலவந்தமான ஆக்கிரமிப்புச் சுழல் முன்னெடுக்கப்பட்டது; அது இஸ்ரேலின் எல்லைகளை, அதன் சியோனிச நிகழ்ச்சிநிரலை எட்டக் கூடிய அளவுக்கு விரிவாக்கியது.

நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கிராமங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்கள் என்பன அழித்தொழிக்கப்பட்டதுடன், பல இலட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் இடம்பெயர்ந்தார்கள்; நாடு கடத்தப்பட்டார்கள்; அல்லது தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். பல இலட்சக்கணக்கான ஏக்கர் பாலஸ்தீன காணிகள் கையகப்படுத்தப்பட்டன. முன்னர் பாலஸ்தீனர்கள் வாழ்ந்து, விவசாயம் செய்த நிலங்களில் ஆயுதம் தாங்கிய இஸ்ரேல் குடியேற்றவாசிகளைக் கொண்ட குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன.

வெகு விரைவில் குடியேற்றவாசிகளுக்கென பிரத்தியேகமான பாதைகள் மற்றும் பாதுகாப்புச் சுவர்கள் என்பன நிர்மாணிக்கப்பட்டு, பாலஸ்தீன கிராமங்கள் வேறாகப் பிரிக்கப்பட்டன. பாலஸ்தீன மக்களின் ஒற்றுமையையும் அது சீர்குலைத்தது. ஆயுதம் தாங்கிய குடியேற்றவாசிகளுக்கும், கல்லெறிந்து தாக்குதல் நடத்தும் பாலஸ்தீனர்களுக்குமிடையிலான சிறு சிறு மோதல்கள் தோன்றிய சந்தர்ப்பங்களில் எல்லாம் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தலையிட்டு, அடுத்த கட்ட தடுத்து வைப்பு மற்றும் இடப்பெயர்வு என்பவற்றை மேற்கொண்டன. மேலும், மேலும் புதிய குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன.

1948 போரின் முடிவின் போது இஸ்ரேல் ஜெருசலத்தின் பெரும் பகுதிகளையும் உள்ளடக்கிய விதத்தில் 77% பாலஸ்தீன காணிகளை ஆக்கிரமித்திருந்தது. மிகுதி 22%, 1967 ஆறு நாள் போரின் போது இணைத்துக் கொள்ளப்பட்டது. 2023ஆம் ஆண்டு தொடக்கத்தில் இஸ்ரேல் போர் இயந்திரம் பாலஸ்தீன காணிகளில் 150 க்கும் மேற்பட்ட குடியேற்றங்களை சட்டவிரோதமாக ஸ்தாபித்திருந்தது. பாலஸ்தீனம் முழுவதும் இஸ்ரேலின் கீழ் கொண்டுவரப்பட்ட நிலையில், அம்மக்களை தமது சொந்த நிலங்களில் அடிமைப்படுத்தும் நிலை அநேகமாக முற்றுப் பெற்றது.

ஒட்டுமொத்த ஆக்கிரமிப்பு தொடர்பான சியோனிச நிகழ்ச்சிநிரலை இரண்டு இஸ்ரேலிய சட்டங்கள் ஊர்ஜிதப்படுத்தின. திரும்பி வருவதற்கான உரிமைச் சட்டம், உலகில் எந்த ஒரு பாகத்திலிருந்தும் அங்கு வரும் யூதர்களை வரவேற்றது. எதேச்சாதிகார இயல்பிலான (காணி உரிமையாளர்) குறிப்பிட்ட இடத்தில் இல்லாத நிலை தொடர்பான சட்டம், பாலஸ்தீன மக்கள் நிலங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட பின்னர் அவர்களுடைய காணிகளின் உரித்தை ரத்து செய்தது.

பாரிய எண்ணிக்கையிலான யூத அகதிகள் மற்றும் வேறு நாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்கள் ஆகியோரின் உள்வருகை மற்றும் 20 இலட்சத்துக்கு மேற்பட்ட பாலஸ்தீன அகதிகள் அங்கு திரும்பி வருவது தடுக்கப்பட்டமை என்பவற்றுடன் இணைந்த விதத்தில் பாலஸ்தீனத்தின் குடிசனவியல் தீவிரமான விதத்தில் மாற்றமடைந்தது.

ஐக்கிய அமெரிக்கா மற்றும் அதன் மேலைய தோழமை நாடுகள் என்பவற்றினால் உறுதிப்படுத்தப்பட்ட இஸ்ரேலின் தண்டனை விலக்குரிமை, சர்வதேச மனித நேயச் சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டம் என்பன மிக மோசமான விதத்தில் மீறப்படுவதற்கு வழிகோலியது. மனித உரிமை மீறல்கள் சர்வ சாதாரணமாகக் கருதப்பட்டன. கொடூரமான குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகம், மிகக் கொடூரமான அடக்குமுறைகளை நிகழ்த்தும் ஒரு சமூகமாக மாற்றமடைந்தது; அதன் தோழமை நாடுகள் வரலாற்றின் பிழையான பக்கத்தில் நின்றிருந்தன.

அதே வேளையில், பாலஸ்தீன மக்களின் சுய நிர்ணய உரிமைக்கு உலகளாவிய ரீதியில் கிடைத்த அங்கீகாரம், பாலஸ்தீன அதிகார சபை தொடர்பான ஐ.நாவின் அங்கீகாரம், பாலஸ்தீனத்துக்கு ஐ.நாவில் அவதானிப்பாளர் அந்தஸ்து வழங்கப்பட்டமை மற்றும் 1988 இன் பாலஸ்தீன அரசுப் பிரகடனம் என்பன எவ்விதத்திலும் இஸ்ரேலின் மனப்பாங்கினை மாற்றியமைக்கவில்லை.

இந்த இறுக்கமான நிலைப்பாடு, பாலஸ்தீனத்தை விடுவித்துக் கொள்வதற்கென திடசங்கற்பத்துடன் செயற்படும் பாலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO) போன்ற குழுக்களின் எழுச்சிக்கு வழிகோலியது. பாலஸ்தீனத்தையும், அதன் மக்களையும் சியோனிச ஆக்கிரமிப்பின் நுகத்தடியிலிருந்து விடுவித்துக் கொள்ளும் நோக்கத்துடன் அவ்வியக்கங்கள் தோன்றின. மேலைத்தேய காலனித்துவத்தின் கீழ் வாழ்ந்து வந்த அனைத்து மக்களையும் பொறுத்தவரையில் இது ஒரு பொதுவான பண்பாக இருந்து வந்தது. இந்த பாலஸ்தீன மக்கள் இரண்டாவது உலகப் போரின் போது ஜேர்மனிய ஆக்கிரமிப்பை எதிர்த்து நின்றிருந்தால், அவர்கள் அந்த எதிர்ப்புணர்வு தொடர்பாக கௌரவிக்கப்பட்டிருப்பார்கள்.

காலப்போக்கில் யசீர் அரபாத் தலைமையின் கீழான மதச்சார்பற்ற பாலஸ்தீன விடுதலை இயக்கம் அதன் நிலைப்பாட்டை மாற்றி, இடதுசாரி அணியைச் சேர்ந்த இஸ்ரேல் பிரதமர் இஸ்டாக் ரபீனுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு முன்வந்தது. வன்முறையிலிருந்து பேச்சுவார்த்தைகளை நோக்கி ராபின் மேற்கொண்ட துணிச்சலான நகர்வு அவருடைய உயிரைப் பழிவாங்கியது. ஆயுதம் தாங்கிய ஓர் இஸ்லாமிய குழுவான ஹமாஸ் இயக்கம் பின்னர் எழுச்சியடைந்தது. அதனுடன் இணைந்த விதத்தில் இந்த மோதல் தீவிரமடைந்ததுடன், இரு தரப்புக்களிலும் கொலைகள் அதிகரித்தன. பாலஸ்தீன விடுதலை இயக்கம் மற்றும் ஹமாஸ் இயக்கம் என்பவற்றுக்கிடையில் உறவுகள் சீர்குலைந்தமை காரணமாக அவை வெவ்வேறு வழிகளில் பயணிக்கத் தொடங்கின. மேற்குக் கரை, காஸா ஆகிய பகுதிகளில் அவை முறையே சிறு நிலப்பரப்புக்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.

காஸா

சனச்செறிவு மிகுந்த காஸா நிலப்பரப்பு 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலினால் இலாபமற்ற, ஸ்திரமற்ற ஒரு வலயமாக கருதப்பட்டு கைவிடப்பட்டது. அங்கு வாழ்ந்து வந்த இஸ்ரேல் குடியேற்றவாசிகளுக்கு நட்டஈடு வழங்கப்பட்டு, அவர்கள் பாலஸ்தீனத்தின் மேற்குக்கரையில் குடியேற்றப்பட்டார்கள். அதன் பின்னர் இஸ்ரேலின் வெளியேற்றம் ஒரு முற்றுகையாக மாற்றமடைந்தது. காஸா எல்லைகள் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதுடன், அங்கு மக்கள் உள்ளே வருவதும், வெளியே செல்வதும் கட்டுப்படுத்தப்பட்டது. ஐ.நா. நிவாரணப் பணிகள் முகவரகத்தினால் மேற்கொள்ளப்பட்ட உணவு, மருந்துப் பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகம் போன்ற செயற்பாடுகளும் கண்காணிப்பு வலயத்துக்குள் கொண்டுவரப்பட்டன. இஸ்ரேல் அதற்கே உரித்தான ஒரு சட்டத்தை கொண்டிருந்ததுடன், காஸாவை அதன் பிடியின் கீழ் வைத்திருந்தது.

அதனையடுத்து அக்டோபர் 7 சம்பவங்கள் நிகழ்ந்தன.

தற்பொழுது காஸா மீது இடம்பெற்று வரும் இடையறாத குண்டுத் தாக்குதல்கள், அப்பாவி மக்கள் படுகொலை, வைத்தியசாலைகள், ஐ.நா. தொண்டு பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் மீதான தாக்குதல்கள், அதேபோல உணவு, மருந்துப் பொருட்கள், எரிபொருள் என்பவற்றின் விநியோகங்களை இலக்குவைத்து நடாத்தப்படும் தாக்குதல்கள் என்பன வரையறையற்ற தண்டனை விலக்குரிமையின் தீவிரமான வலிமையை எடுத்துக் காட்டுகின்றன. ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஒரு சில மேலைத்தேய தோழமை நாடுகள் என்பவற்றால் தன்னிச்சையாக வழங்கப்பட்ட தற்பாதுகாப்பு என்ற போர்வையின் கீழ் இஸ்ரேல் நடத்தி வரும் குண்டுத் தாக்குதல்கள் ஹமாஸ் இயக்கம் நிர்மூலமாக்கப்படும் வரையில் இடம்பெற முடியும் என்ற அச்சுறுத்தல் நிலவுகிறது. அதிக எண்ணிக்கையிலான சிவிலியன்களின் மரணங்களும், இஸ்ரேல் பணயக் கைதிகள் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரால் கொலை செய்யப்பட்ட அண்மைய வெள்ளைக் கொடிச் சம்பவமும் ஹமாஸ் இயக்கம் ஒழிக்கப்பட வேண்டுமானால் அதற்கென சிவியன்கள் கொல்லப்பட வேண்டும் என்பதனைக் காட்டுகின்றன. காஸாவின் பின்னர், உடனடியாக இல்லாவிட்டாலும் கூட, இறுதியில் மேற்குக் கரையில் இதே சம்பவங்கள் நிகழ முடியும்.

எல்லோரும் பகிர்ந்து கொள்ளும் ஒரு நிலம்

இலட்சியபூர்வமான ஓர் உலகில் இந்த மோதலுக்கான இலட்சியபூர்வமான ஒரு தீர்வு எல்லோரும் பகிர்ந்து கொள்ளும் ஒரு நிலமாகும். இது எப்போதாவது சாத்தியப்பட்டால், பாலஸ்தீன மக்கள் தமது நிலத்தில் சுதந்திரமானவர்களாக இருந்து வருவார்கள். அத்துடன், இஸ்ரேல் மக்கள் தமக்கு வாக்களிக்கப்பட்ட நிலம் என நம்பும் ஒரு நிலத்தில் சுதந்திரமானவர்களாக வாழ்ந்து வருவார்கள்.

ஆனால், இவ்விதம் இந்நிலம் பகிர்ந்து கொள்ளப்படும் ஒரு நிலமாக உருவாக வேண்டுமானால், மிகக் கடுமையான இரண்டு முன்நிபந்தனைகள் நிறைவேற்றப்படுதல் வேண்டும்.

  1. ஐக்கிய அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கி வரும் பாதுகாப்பு நிறுத்தப்படும் வரையிலும், ஐ.நா. பாதுகாப்புச் சபையில் பாரபட்சமான விதத்தில் ஒரு சில அரசுகள் அனுபவித்து வரும் வீட்டோ அதிகாரம் ரத்து செய்யப்படும் வரையிலும், ஐ.நா. அமைப்பு அதன் பணிகளை சுயாதீன விதத்தில் முன்னெடுத்துச் செல்வதற்கான அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் வரையிலும் அது நடப்பதற்குச் சாத்தியமில்லை.
  2. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கம் என்பன நிகழ்த்தியிருக்கும் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளும், இஸ்ரேலினால் நிகழ்த்தப்பட்டிருக்கும் மனித குலத்திற்கு எதிரான குற்றச் செயல்கள் மற்றும் இனச் சுத்திகரிப்பு என்பன தொடர்பான விசாரணைகளும் இடம்பெறும் வரையில் அது சாத்தியப்பட முடியாது. அவசர பேச்சவார்த்தைகள் அத்தகைய விசாரணைகளை ஒத்திவைக்க முடியாது. சமாதானத்தின் பெயரில் நீதி தாமதப்படுத்தப்படும் பொழுது, குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டு விடுவார்கள்.

இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எமது உலகம் எமது கண்களுக்கு எதிரிலேயே மற்றொரு இனப் படுகொலையை பார்க்க நேரிடும்.

அனைவருக்கும் சமாதானமும், ஆசீர்வாதங்களும் கிட்டட்டும்.

அருட்தந்தை துலிப் டி சிக்கேரா

Zionism Plus Impunity: The Mathematics of Israel என்ற தலைப்பில் Groundviews தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.