Photo, Selvaraja Rajasegar
அக்டோபர் 4ஆம் திகதியோடு ஊடகவியலாளர், கேலிச்சித்திர பத்திரிகையாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலரான பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டு 5000 நாட்கள் ஆகின்றன. அத்துடன், நான் அவரது மனைவி சந்தியா எக்னெலிகொடவை ஆரம்ப நாட்களில் முதல் தடவையாக சந்தித்து பிரகீத்தை தேடுவதற்கும் அதற்கு காரணமானவர்களைப் பொறுப்புக் கூறவைப்பதற்கும் அவருடன் இணைந்து போராடி இன்றுடன் கிட்டத்தட்ட 5000 நாட்கள் ஆகின்றது,
எக்னெலிகொட வழக்கு
எனக்குத் தெரிந்தவரை, இலங்கையில் இதுவரை ஊடகவியலாளர்களுக்கு எதிரான கொலைகள் மற்றும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டமை உட்பட மிகக் கடுமையான குற்றங்களுக்காக ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை.
இரண்டு வழக்குகள் மட்டுமே விசாரணைக் கட்டத்தை எட்டியது. அவற்றில் ஒன்றில், சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கை தொடர வேண்டாம் என 2021ஆம் ஆண்டு சட்டமா அதிபர் நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. தொடரும் ஒரே வழக்கு பிரகீத்தின் வழக்கு மட்டுமே, பல இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு ஒன்பது சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் பெரும்பாலான விசாரணை சிறிசேன அரசாங்கத்தின் கீழ் முன்னேற்றகரமாக மேற்கொள்ளப்பட்டது, ஆனால், 2019 நவம்பரில் ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், ‘போர் வீரர்கள்’ (இராணுவ அதிகாரிகள்) மீது வழக்குத் தொடர மாட்டோம் என்று ராஜபக்ஷ அரசாங்கம் உறுதியளித்ததால் புதிய தடைகள் ஏற்பட்டது. வழக்கை விசாரணை செய்த உயர் மட்ட விசாரணை அதிகாரி ஒருவர் உயிர் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடொன்றில் தஞ்சம் புகுந்தார். மற்றும் விசாரணைகளை கண்காணிக்கும் பிரதம அதிகாரி கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.
பிரகீத்தின் வழக்கை விசாரிக்க நீதிபதிகள் நியமிக்கப்பட்டாலும், நீதிபதிகள் மாற்றப்பட்டதோடு, நீதிமன்ற விசாரணைகளில் கால தாமதங்கள் ஏற்பட்டதுடன், ராஜபக்ஷவினர் ஆட்சிக்கு வந்த பிறகு சாட்சியாளர்கள் தங்கள் சாட்சியத்தை மாற்றியதுடன், நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் சாட்சியாளர்கள் அரசு நியமித்த விசாரணை ஆணைக்குழு முன் சாட்சியம் அளிக்காதிருந்தனர். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி அரசியல்வாதியாக இருந்த போது, பிரகீத்தின் பெயரைப் பயன்படுத்தி இலங்கையில் ஊடக சுதந்திரம், விடுபாட்டுரிமை போன்றவற்றை முன்னிலைப்படுத்தும் வகையில் பேசியதோடு 2015-2019 காலப்பகுதியில் பிரதமராக இருந்தபோது விசாரணைகளில் முன்னேற்றம் குறித்து தகவல் வழங்கப்படவேண்டும் என்று கூறியதை நான் நினைவூட்டுகின்றேன். ஆனால், இப்போது, அவர் ஜனாதிபதியாக இருக்கும் போது, நீதியை உறுதி செய்வதற்கான வழக்கு விசாரணை பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
உண்மை மற்றும் நீதியைக் கண்டறிய நீதிமன்றங்களிலும், தெருக்களிலும், ஊடகங்களிலும் மற்றும் சர்வதேச அளவிலும் போராடும் சந்தியாவின் முயற்சிகள்தான் பெரும்பாலும் குறைந்தபட்ச முன்னேற்றம் கூட ஏற்பட காரணமாகும்
சந்தியாவின் போராட்டங்கள்
சந்தியாவின் போராட்டத்தின் தனித்தன்மை என்னவென்றால், இந்த 5000 நாட்கள் முழுவதும் புதிய முயற்சிகளைப் பற்றி சிந்திக்கும் திறன், அதேசமயம் பிரகீத் காணாமல்போன அன்றே ஆரம்பித்து இன்று வரை கைவிடாமல் இருக்கும் முயற்சிகள் மற்றும் சில நாட்களுக்குப் பிறகு ஆரம்பித்த பொலிஸ் முறைப்பாடுகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் என்பனவாகும்.
கடந்த வாரம், கொழும்பு BMICH இல் நடந்த சர்வதேச புத்தகக் கண்காட்சியின் போது, BMICH இன் வாயிலுக்கு வெளியே சாலையோரம் நின்று, பிரகீத்தின் கட்டுரைகள் அடங்கிய இரண்டு புத்தகங்களை விற்றார். புத்தகங்களை விற்கும் முயற்சியில் அவருடன் நான் நின்ற சில மணி நேரத்தில், தெரிந்தவர்கள் மற்றும் தெரியாதவர்கள், பௌத்த துறவி உட்பட இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் பலர் புத்தகங்களை வாங்கி, விவரம் கேட்டனர், அவருக்கு ஆதரவும் தெரிவித்தனர், சிலர் பிரகீத் காணாமல்போனது மற்றும் அதற்கு தண்டனையில்லாமை குறித்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். .
நாங்கள் அணுகியபோது சிலர் கடந்து சென்றனர், ஆனால் விரைவாக திரும்பி வந்து “காணாமல் போன பத்திரிகையாளர் பிரகீத் தொடர்பானதா?” என்று கேட்டு புத்தகங்களை வாங்கினர். புத்தகங்களில் ஒன்றை வாங்கிச்சென்ற ஒரு குடும்பம், போய்விட்டு திரும்பி வந்து, மற்ற புத்தகத்தையும் வாங்கி சென்றனர்.
தெருவோர வியாபாரி ஒருவர் கையில் பணம் இல்லை என்று அன்றைய தினம் கூறினார், அடுத்த நாள் சந்தியா திரும்பி வருவாரா என்று கேட்டார். இந்த 5000 நாட்களில், சந்தியா இலங்கையிலும் அதற்கு அப்பாலும் பல அறியப்படாதவர்களின் இதயங்களை, அபிமானிகளை, அதிகம் வென்றுள்ளார்.
அக்டோபர் 4ஆம் திகதியோடு 5000 நாட்கள் ஆகுவதோடு, அவர் தனது வீட்டின் மிகவும் தனிப்பட்ட இடத்தைத் திறக்கிறார், அங்கு அவர், பிரகீத் மற்றும் அவர்களது இரண்டு மகன்கள் பல ஆண்டுகளாக வசித்து வந்தனர். அவரது வீடு ஒரு பழக்கமான இடம் – நடு இரவில் நானும் ஒரு சக நண்பரும் சந்தியாவின் உயிருக்காக பயந்து விரைந்த இடம், அங்கு பல நாட்கள் நீதிமன்ற நடவடிக்கைகளின் ஆயிரக்கணக்கான பக்கங்களை ஆய்வு செய்தோம் மற்றும் சந்தியாவை சந்திக்க விரும்பும் பல சொந்தங்கள் வருவார்கள். ஆனால், அங்கு இன்று, அவர் என்னையும் மற்றவர்களையும் புதிய, ஆக்கப்பூர்வமான மற்றும் சக்திவாய்ந்த ஒன்றைக் கொண்டு ஆச்சரியப்படுத்துவார் என்று நான் நம்புகிறேன்.
சவால்கள்
மிகவும் இருண்ட, கிட்டத்தட்ட நம்பிக்கையற்ற கட்டமைப்புடைய காணாமல் போன பல்லாயிரக்கணக்கானவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான கடுமையான குற்றங்களில் தண்டனை விதிக்கப்படாத இந்த சூழலில், சத்தியம், நீதிக்கான மற்றும் நம்பிக்கையின் சின்னமாக சந்தியா இருந்துள்ளார். அவர் தனக்கும் குழந்தைகளுக்கும் மரண அச்சுறுத்தல், மிரட்டல், அவமதிப்பு என்பன இருந்தும் கூட உண்மை மற்றும் நீதியைப் கண்டறிய இவற்றை தைரியமாக எதிர்கொண்டார்.
அவருக்கு எதிராக பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதோடு இணையத்தில் அவதூறு பரப்பியும் வந்தனர். 2012ஆம் ஆண்டில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரலால் நீதிமன்றத்தில் கடுமையான கேள்விகளுக்கு உட்படுத்தப்பட்டார். அதாவது, அவர் தனது கணவரின் உண்மையையும் நீதியையும் தேடுவது நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டது. பிரகீத் வெளிநாட்டில் வசிப்பதாக ஐ.நா. சித்திரவதைக்கு எதிரான குழுவின் அப்போதைய அரசாங்கத் தூதுக் குழுவின் தலைவர் மொஹான் பீரிஸ் கூறியபோது, குழுவின் மேலதிக விசாரணைகளை இலங்கையில் மேற்கொள்ளுமாறு சந்தியா கோரியதோடு இலங்கை நீதிமன்றத்தில் மொஹான் பீரிஸை சாட்சியம் வழங்குமாறும் கூறினார். மேலும், அவர் சந்தேக நபர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் குற்றம்சாட்டப்பட்ட போதிலும் (மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள்), அவர்கள் இருக்கும் போதே 100 தடவைகளுக்கு மேல் நீதிமன்றத்துக்கு வருகை தந்ததோடு அதிக தடவைகள் தனியாகவும் வருகை தந்துள்ளார்.
பொதுபல சேனாவின் தலைவரான பௌத்த பிக்கு கலகொட அத்தே ஞானசார தேரரினால் நீதிமன்ற வளாகத்திற்குள் அவர் அச்சுறுத்தப்பட்டபோது, அவர் பொலிஸில் முறைப்பாடு செய்தார். பின்னர் மத்தியஸ்தம் மூலம் வழக்கை தீர்க்கும் முயற்சிகளை நிராகரித்தார். அந்த நேரத்தில் இருந்த நீதவானும், நீதிமன்றத்தில் அன்றைய தினம் பிக்குவின் நடத்தை குறித்து புகார் அளித்தார், மேலும் இரண்டு வழக்குகளிலும் பிக்கு குற்றம் இழைத்ததாக தீர்ப்பளிக்கப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதி பிக்குவிற்கு பொது மன்னிப்பு வழங்கினார், ஆனால், சந்தியா அந்த பொது மன்னிப்பை நீதிமன்றத்தில் சவாலுக்குற்படுத்தினார். ஒரு தாயாகவும் மனைவியாகவும், சந்தியா அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவிக்குக் கடிதம் எழுதினார், பிரகீத்தை கண்டுபிடிக்க உதவுமாறு அப்போதைய முதல் பெண்மணியினை தலையிடுமாறும் வேண்டுகோள் விடுத்தார். அவர் தனது மகனுடன் நாடாளுமன்றத்திற்கு வெளியே நின்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டுகோள்களை வழங்கினார்.
அவர்கள் காலி இலக்கிய விழாவிற்குச் சென்று அங்கு கூடியிருந்த எழுத்தாளர்கள் மற்றும் பிறருக்கு இது தொடர்பாக தெளிபடுத்தினார். கொழும்பில் ஏராளமான போராட்டங்கள், விழிப்புணர்வுகள் மற்றும் மத சடங்குகளை ஏற்பாடு செய்வதில் அவர் முன்முயற்சி எடுத்தார். புலனாய்வாளர்கள், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதிமன்றங்களுடன் இராணுவம் ஒத்துழைக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்ததும், சந்தியா அப்போதைய இராணுவத் தளபதியை நேரில் சந்தித்து உதவி கோரினார். மேலும் அவர் உண்மையையும் நீதியையும் கண்டறிய சர்வதேச ஆதரவை உருவாக்குவதற்காக இராஜதந்திரிகள், ஐ.நா. அதிகாரிகள், சர்வதேச அமைப்புகள் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களைச் சந்தித்தார்.
பிரகீத்தின் கட்டுரைகள் மற்றும் கார்ட்டூன்கள் கொண்ட புத்தகங்களை வெளியிட பிரகீத்தின் நண்பர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுடன் இணைந்து பணியாற்றினார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தமிழ்க் குடும்பங்களின் போராட்டங்களுக்கு ஆதரவாகவும், வடக்கில் நடைபெற்ற போராட்டங்களில் அவர்களுடன் இணைந்தும், அவர்களின் போராட்டங்களைப் பற்றியும் தனது ஆக்கங்களிளும் பேசினார். இந்த ஆண்டு, அவர் தனது வீதிப் போராட்டத்தை விசாரணையாளர்கள் வெளிப்படுத்திய பிரகீத் கொண்டு செல்லப்பட்ட கிழக்கு மாகாணத்தில் உள்ள நகரமான அக்கரைப்பற்றுக்கு எடுத்துச் சென்றார்,
இவை அனைத்திற்கும் மேலாக, தனது இரண்டு மகன்களை வளர்க்கவும் அவர் போராட வேண்டியிருந்தது, தற்போது அவர்கள் காணாமல் போன தந்தையின் வெற்றிடத்தை நிரப்ப முயற்சிக்கும் இளைஞர்களாவர். சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அக்டோபர் 2020 இல், உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் நீதிக்காக 411,220 கிலோமீட்டர் அவர் பயணம் செய்ததாக மதிப்பிட்டார்.
2017ஆம் ஆண்டில், அமெரிக்க அரசினால் தைரியமான பெண்களில் ஒருவராக சந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் 2022 இல் பிபிசியின் 100 செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், எனக்கும் இன்னும் பலருக்கும், அவருடைய தைரியமும் உறுதியும் இந்த சர்வதேச மரியாதைகள் மற்றும் அங்கீகாரங்களுக்கு அப்பாற்பட்டது. இந்த 5000 நாட்களில், நான் சந்தியாவுடன் கணிசமான அளவு நேரத்தை செலவிட்டேன், அதிகமாக கொழும்பில் வீதிகளில் கவனயீர்ப்பு, போராட்டங்கள், சமய நிகழ்வுகள், அத்துடன் வடக்கில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குடும்பங்களுடனும் மேலும், நீதிமன்றங்களிலும், கருத்தரங்குகளிலும், கூட்டங்களிலும் ஆகும். இது தவிர ஐ.நா. மற்றும் இராஜதந்திரிகளுடன், வெளிநாட்டு ஊடகவியலாளர்கள், சில சமயங்களில் அவருக்காக பொருள்கோடல் செய்தல் மற்றும் அவர் வீட்டில் கூட அதிக நேரத்தைச் செலவிட்டிருக்கிறோம். சந்தியாவுடனான இந்த நீண்ட தொடர்பு மிகவும் சவாலானது – அவரது ஆற்றல், செயல்திறன், தொடர் முயற்சிகள், தைரியம், உறுதிப்பாடு ஆகியவற்றைத் தொடர்வது கடினம். ஆனால், இது ஒரு ஆர்வலராக எனக்கு மிகவும் பலனளிக்கும் மற்றும் ஊக்கமளிக்கும் அனுபவங்களில் ஒன்றாகும்.
2023 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் திகதி டெய்லி மிரர் பத்திரிகையில் முதற்பதிப்பாக வெளிவந்த ருக்கி பெர்னாண்டோ எழுதிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பாகும்.