வழமையாக வேலை முடிந்ததும் வீடு வந்துசேரும் கணவர் அன்று பின்னிரவாகியும் வந்துசேரவில்லை. ஏதாவது அவசர வேலையென்றாலும் தவறாமல் அழைப்பெடுத்து மனைவிக்கு அறிவிப்பது வழமை. ஆனால், அன்றைய தினம் அவ்வாறானதொரு தகவல் வந்துசேரவில்லை. வழமைக்கு மாறாக போனும் சுவிட்ச் ஓப் செய்யப்பட்டுள்ளது. நேரம் போகப் போக பதற்றம் அதிகரிக்கிறது. தெரிந்தவர்கள், கணவருடன் வேலை செய்பவர்கள் என்று எல்லோரிடமும் விசாரித்தாகிவிட்டது. சார்ஜ் இல்லாமல் போன் ஓப் ஆகியிருக்கலாம், வந்துவிடுவார் என்று மனதை தேற்றிக்கொண்டாலும் ஆழ் மனதில் ஏதேதோ எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அடிக்கடி கதவைத் திறப்பதும், கதவை நோக்கியே காதுகளை வைத்திருப்பதும், அடுத்தடுத்து போன் செய்வதுமாக அன்றைய நாள் விடிகிறது.

காலை 9 மணியாகியும் வரவில்லை. தெரிந்த ஒருவருடன் ஹோமாகம பொலிஸ் நிலையத்துக்குச் செல்கிறார், காலை 10.30 மணியிருக்கும். முறைப்பாட்டைப் பெற்றுக்கொள்ளாமல் சுமார் 2 மணித்தியாலங்கள் அலையவிடுகிறார்கள். கடைசியாக 12.20 மணியிருக்கும், முறைப்பாட்டை எடுத்துக்கொள்கிறார்கள், நிபந்தனைகளுடன்.

கணவரைத் தேடி அன்றைய தினம் ஆரம்பமான சந்தியா எக்னலிகொடவின் போராட்டம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கு விசாரணையில் நேற்று செப்டெம்பர் 29ஆம் திகதி கலந்துகொண்டது வரை, 10 வருடங்களுக்கும் மேலாக தொடர்கிறது. இந்த 10 வருடங்களில் பலதரப்பட்ட நபர்களைச் சந்தித்தும், பல அமைப்புக்களிடம் முறையிட்டும் தனது கணவருக்கு என்ன நேர்ந்தது? எதற்காக கடத்தப்பட்டார்? யாரால் இந்தச் சம்பவம் நிகழ்த்தப்பட்டது என்பதை அறிந்துகொள்வதற்காக – நீதியை அடைவதற்காக நெடுந்தூரம் பயணித்துக்கொண்டிருக்கிறார்.

10 வருடங்களாக அவர் எவ்வளவு தூரம் பயணம் செய்திருக்கிறார் என்பதை கிலோமீற்றர்கள் அடிப்படையில் கணிப்பிட முடிவுசெய்தேன். இலங்கையினுள்ளும், வெளிநாடுகளுக்கும் சென்றுவந்த தூரத்தை அளவிட Google Maps மற்றும் Free Map Tools களைப் பயன்படுத்தினேன். அதனடிப்படையில் நீதிமன்றம் (ஹோமாகம நீதவான் நீதிமன்றம், அவிசாவளை நீதவான் நீதிமன்றம், கொழும்பு மேல் நீதிமன்றம், உயர் நீதிமன்றம்), அரச நிறுவனங்கள் (பொலிஸ் நிலையங்கள், இராணுவத் தலைமையகம், சிஐடி, மனித உரிமைகள் ஆணைக்குழு), செய்தியாளர் சந்திப்புகள், ஆர்ப்பாட்டங்கள், கண்காட்சிகள், மதத்தலங்கள், வெளிநாட்டு பயணங்கள் (மனித உரிமைகள் ஆணைக்குழு, கண்காட்சிகள், விருதுகள்) என சந்தியா எக்னலிகொட சென்றுவந்த இடங்களுக்கு இடையிலான தூரத்தை கணிப்பிட்டுள்ளேன். மொத்தமாக 411,220km நீதியை அடைவதற்காக சந்தியா பயணித்திருக்கிறார். சராசரியான எண்ணிக்கையே இது. நினைவுக்கு வந்​ததை – என்னுடன் அவர் பகிர்ந்துகொண்டதை வைத்துக்கொண்டு கணிப்பிட்டது. எண்ணிக்கை இதைவிட அதிகம் என்கிறார் சந்தியா.

சந்தியா பயணம் செய்த 411,220km ஐ இன்போகிரபிக்ஸ் வடிவமைப்பைக் கொண்டு ஒப்பீட்டு ரீதியாக விளக்க முயற்சி செய்துள்ளேன். இன்போகிரபிக்ஸ்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

ஆங்கில மொழியில் Groundviews தளத்திலும் சிங்கள மொழியும் Vikalpa தளத்திலும் இன்போகிரபிக்ஸ்களைப் பார்க்கலாம்.