“வரேக்க நான் தாலி போட்டுக்கொண்டுதான் வந்தனான். இரண்டு பிள்ளைகள் இருக்கிறதால ஆமின்ட பக்கம் போனா நீ இயக்கம் என்டு சொல்லி பதியாத, தாலிய தந்திட்டுப் போ, நான் கொண்டுவாறன் என்டு அவர் சொன்னவர்.

தாலிய அவரே கழற்றி எடுத்து ஒரு பன மரத்து கொப்புக்குள்ளால வச்சவர். இப்ப நான் எங்கப் போய் அத தேட?

இப்ப அவரும் இல்ல, தாலியும் இல்ல. ஏதாவது நல்ல காரியங்கல்ல தாலி இல்லாத ஆக்கள் முன்னுக்கு வரக்கூடாது என்று சொல்லுவினம். அப்போ எனக்கு எப்படியிருக்கும் தெரியுமா? அதனால நான் ஒரு காரியத்துக்கும் போறதில்ல.

ஆமின்ட பக்கம் வரேல்ல என்டுதான் அவர் சொல்லிக் கொண்டிருந்தவர். அப்ப நான்தான், புள்ளைகளுக்காக வாங்க என்டு சொன்னன். இப்போ என்ட கையாள கூட்டிக்கொண்டு வந்து நானே குடுத்திட்டன். அங்கயே விட்டுட்டு ஏதாவது நடந்திருந்தா கூட அவர் இல்லையென்டு எண்ணி மனம் ஆறியிருக்கும். எங்கட கையாளயே கொண்டுவந்து அவையிட்ட குடுத்துப்போட்டு இப்ப வேதனைப்படுறம்.”

கணவனை இராணுவத்திடம் கையளித்துவிட்டு கடந்த 14 வருடங்களாக அவர் பற்றி ஏதாவது தகவலொன்றாவது கிடைத்துவிடாதா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சச்சிதானந்தம் பத்மரஞ்சனியின் மனக்குமுறலே இது.

தன்னுடைய 31ஆவது வயதில் 7 வயது மகளுடனும் 5 வயது மகனுடனும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த பத்மரஞ்சனி, சிறுவயது பிள்ளைகள் இருவர் இருப்பதால் விசாரணையின் பின்னர் கணவரை விட்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் இராணுவத்திடம் கையளித்திருக்கிறார்.

தங்களது பெயர் விவரங்களைப் பதிவுசெய்த, இராணுவத்திடம் கையளித்த இடங்களில் பெரிய புளிய மரமொன்றும் பனை மரக்கூட்டமும் இருந்ததாகக்  கூறுகிறார் பத்மரஞ்சனி. அவற்றுக்கு வாயிருந்தால், அவற்றால் பேச முடிந்தால் இந்நேரத்துக்கு எங்களுக்கு நீதி கிடைத்திருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

“ஒரு பெரிய புளிய மரமொன்று இருந்தது. அந்த இடத்தில இருந்துதான் சரணடையச் சொல்லி எலவுன்சிங் செய்தவ. பெரிய பனக்கூடலும் இருந்தது. அந்த இடங்களல்ல வச்சிதான் எங்கள பதிவு செய்தவங்க, அவர தனியா ஒரு பனக்கூடல் ஒன்டுக்க இருத்தி வச்சவ. அந்த இடத்தில் இன்னும் 50 பேர் அளவுல இருத்தி இருந்தவ. இப்போவும் அந்தப் புளிய மரமும் பனக்கூடலும் இருக்கு. இந்த வழியால பஸ்ல, பைக்ல போகேக்க நினைக்கிறனான், அந்தப் புளிய மரத்துக்கடியில, பனக்கூடலுக்குள்ளதானே என்ட மனுஷன குடுத்திட்டு போனனான் என்டு.”

என்றாவது ஒருநாள் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் போராடிக்கொண்டிருக்கும் சச்சிதானந்தம் பத்மரஞ்சனி பற்றிய வீடியோ பதிவே கீழே தரப்பட்டுள்ளது. பத்மரஞ்சனி எம்மோடு பகிர்ந்துகொண்ட கருத்துக்களின் ஆங்கில மொழிபெயர்ப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.