Photo, President’s Media Division
பொருளாதார வீழ்ச்சி மற்றும் அதன் விளைவான அரசியல் போராட்டங்களின் உடனடி யதார்த்த நிலைவரங்களை கையாளுவதற்கான தேவை கடந்த இரு வருடங்களாக அரசியல் நலனில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. ஆனால், தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனப்பிரச்சினை மற்றும் நல்லிணக்கச் செயன்முறையை தேசிய அரசியலில் முக்கிய இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறார். அது அவ்வாறுதான் இருக்கவேண்டும்.
தீர்வு காணப்படாதிருக்கும் இனப்பிரச்சினை பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை கையாளுவதற்கான நாட்டின் முயற்சிகள் மீது ஒரு ஆபத்தான தாக்கத்தைத் தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் முல்லைத்தீவில் போர்க்களத்தில் அழித்தொழிக்கப்பட்டதுடன் இனப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது என்ற நம்பிக்கை ஆதாரமற்றது
மத்தியமயப்படுத்தப்பட்ட அரசின் ஆதிக்கத்துக்கு எதிரான தமிழர்களின் எதிர்ப்பு பலவீனப்படுத்தப்பட்டதை அடுத்து வெளித்தலையீடுகள் பலமடைந்திருக்கின்றன.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தங்களால் திரட்டப்படுகின்ற எந்தவொரு சான்றும் சர்வதேச நியாயாதிக்கத்தின் (Universal Jurisdiction) அடிப்படையில் வழக்குத்தொடுக்க விரும்புகின்ற எந்தவொரு நாட்டுக்கும் கிடைக்கச்செய்யப்படும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கடைசியாக நடைபெற்ற அதன் கூட்டத்தொடரில் பிரகடனம் செய்தது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மட்டத்திலான ஆராய்வில் முன்னரங்கத்தில் தொடர்ச்சியாக நிற்கும் எந்தவொரு நாட்டினதும் நேர்மறையான படிமம் வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவதற்கு நிச்சயமாக இடையூறாகவே இருக்கும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் இலங்கை அரசுக்கு எதிரான அறிவுறுத்தல்கள் இறுக்கமடைந்து கொண்டுபோவதையே காணக்கூடியதாக இருக்கிறது. தேசிய நல்லிணக்க செயன்முறையில் வெற்றிகாணப்படுமேயானால், நாட்டுக்கு வெளிநாட்டு முதலீடுகளைக் கவரும் முயற்சிகளில் ஒரு உத்வேகம் பிறக்கும்.
அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை வகுப்பது குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி விக்கிரமசிங்க கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் உள்ள சகல அரசியல் கட்சிகளையும் அழைத்தார். அந்த அழைப்பை பெரும்பாலான கட்சிகள் ஏற்றுக்கொண்டன.
சர்வகட்சி மகாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி இந்த விவகாரத்தில் எடுக்கப்படக்கூடிய எந்தவொரு தீர்மானமும் சம்பந்தப்பட்ட சகல கட்சிகளினதும் கருத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.
எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளை கையாளுவதற்கு புதிய சட்டங்களை நிறைவேற்றுவதற்கான அதிகாரம் தனக்கோ அல்லது தனக்கு முன்னர் பதவியில் இருந்த ஏழு ஜனாதிபதிகளுக்கோ இருக்கவில்லை என்றும் அவ்வாறு செய்யும் அதிகாரம் முற்றுமுழுதாக நாடாளுமன்றத்துக்கு மாத்திரமே இருக்கிறது என்றும் அவர் கூறினார். ஆனால், மகாநாட்டில் பங்கேற்ற கட்சிகள் வெளியிட்ட கருத்துக்கள் அரசியல் முறைமை (Political system) முழுவதும் அவநம்பிக்கை பரவிக்கிடக்கிறது என்பதை பிரதிபலித்தன.
சகல தரப்புகளிலும் உள்ள அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளிலும் உட்கிடையாக அரசியல் சுயநலனும் அதிகார வேட்கையும் இருக்கின்றன என்று ஒரு நம்பிக்கை உண்டு. அரசாங்கத்தின் நடத்தை இந்த அவநம்பிக்கையை இல்லாமல் செய்ய உதவவில்லை.
தேர்தல்கள் ஒத்திவைப்பு
மாகாண சபை தேர்தல்களுக்கு முன்னுரிமை கொடுத்து சர்வகட்சி மகாநாட்டில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த வாதங்கள் இரு அடிப்படைகளில் பெறுமதியானவையாக இருக்கின்றன.
முதலாவது மாகாண சபைகளில் எந்தவொரு சீர்திருத்தத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கு மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட மாகாண சபைகள் அவசியமாகும். இரண்டாவது தற்போதைய அரசாங்கம் கொண்டிருக்கக்கூடிய மக்கள் ஆணையின் சந்தேகத்துக்கிடமான தன்மையாகும்.
‘அறகலய’ காலப்பகுதியில் அன்றைய ஜனாதிபதியையும் பிரதமரையும் அமைச்சரவையையும் பதவிவிலக நிர்ப்பந்தித்த மக்கள் கிளர்ச்சி, அரசாங்கம் முன்னர் அனுபவித்த மக்கள் ஆணையை செல்லுபடியானதாக்குவதற்கு புதிய தேர்தல் ஒன்றை அவசியப்படுத்தியது. ஆனால், அதற்குப் பதிலாக நாடாளுமன்றத்தில் உள்ளவர்கள் அரசியலமைப்பின் பிரகாரம் புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவுசெய்தனர்.
பாதுகாப்புப் படைகளைப் பயன்படுத்தி போராட்ட இயக்கத்தை ஒடுக்குவதற்கு புதிய ஜனாதிபதியிடம் அரசியல் சாதுரியமும் துணிவாற்றலும் இருந்தது. ஆனால், ஆணை தொடர்பான கேள்வி தொடரவே செய்கிறது.
மக்கள் தங்களது பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதற்கு கிரமமாக தேர்தல்களை நடத்துவது ஜனநாயக அரசியல் சமுதாயமொன்றின் அடிப்படை அம்சமாகும். இது விடயத்தில் இலங்கை குறைபாடுகளுடைய ஒரு ஜனநாயகமாகப் போய்விட்டது.
அரசாங்க நிர்வாகத்தின் இரண்டாவது, மூன்றாவது அடுக்குகளுக்குத் தேர்தல்கள் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன. மாகாண சபைத் தேர்தல்கள் நான்கு வருடங்களுக்கும் மேலாக நடத்தப்படவில்லை. உள்ளூராட்சி தேர்தல்கள் ஐந்து மாதங்களுக்கு முன்னர் நடத்தப்பட்டிருக்கவேண்டும்.
ஜனாதிபதியினால் உத்தேசிக்கப்படுகின்றவாறு மாகாண சபைகளின் அதிகாரங்களை மேம்படுத்துவதற்கு முன்னதாக அவற்றுக்குத் தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என்று சர்வகட்சி மகாநாட்டில் கலந்துகொண்ட பெரும்பாலான கட்சிகள் கோரிக்கை விடுத்தன. மாகாண சபைகளை வலுவூட்டுவதற்கு அவை நடைமுறையில் இருக்கவேண்டியது அவசியம். மாகாண சபைகளுக்கு தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகள் அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகளில் அடையாளம் காணப்படக்கூடிய போதாமைகளையும் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டுவதற்குப் பெருமளவுக்கு நியாயப்பாட்டையும் அறிவையும் கொண்டிருப்பார்கள்.
இத்தகைய பின்னணியில், இந்த நேரத்தில் தேர்தல்களை நடத்தவேண்டிய தேவை முன்னுரிமைக்குரியது என்று நல்லெண்ணமுடைய மக்கள் கருதுவது நியாயமானதேயாகும். மாகாண சபை தேர்தல்களை நடத்தவேண்டும் என்று சர்வகட்சி மகாநாட்டில் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு ஜனாதிபதி மகாநாட்டை இடைநடுவில் முடித்துக்கொண்டு வெளியேறி தனது பிரதிபலிப்பை வெளிக்காட்டினார். அவரது செயல் அந்த வேண்டுகோளை அவர் நிராகரித்ததன் விளைவா அல்லது இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டையும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் மறுபரிசீலனை செய்யப்போகிறாரா என்பது அடுத்தவரும் நாட்களில் தெளிவாகும்.
ஜனநாயக அடிப்படையில் நோக்கும்போது தேர்தல்களை ஒத்திவைப்பது என்பது நியாயப்படுத்தமுடியாததாகும். தேர்தல் போட்டியொன்றில் மக்கள் செல்வாக்கைப் பெரிதாக வெளிப்படுத்துவது சாத்தியமில்லை என்ற அரசாங்கத்தின் கணிப்பீட்டின் அடிப்படையில் தேர்தல்களை ஒத்திவைப்பது ஜனநாயக நியமங்களைச் சீரழிக்கும் செயலாகும்.
2024 தேர்தல்கள் வருடமாக இருக்கும் என்று கூறிய ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன அந்த வேளையில் எதிர்க்கட்சியில் உள்ள உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் இணைவார்கள் என்று நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இப்போதே தொடங்கவேண்டும்
இந்தச் சூழ்நிலைகளில் தேர்தல்களை சாத்தியமானளவு நீண்டகாலத்துக்கு ஒத்திவைக்க அரசாங்கம் விரும்பக்க்கூடும். இது குறைந்தபட்சம் ஜனாதிபதித் தேர்தலை 2024 செப்டெம்பர் வரை நீடிக்கக்கூடும். ஆனால், ஜனாதிபதியின் நேர அட்டவணைக்கு பொருந்தக்கூடிய வகையில் தேர்தல்களை ஒத்திவைப்பது ஒரு ஜனநாயக சீரழிவாக அமையும்.
தேர்தல்களை ஒத்திவைக்கும் இத்தகைய நாட்டுக்குப் பாதகமான கைங்கரியங்கள் இலங்கைக்கு ஒன்றும் புதியவையல்ல.1975ஆம் அத்தகைய ஒரு சந்தர்ப்பத்தை நாடு கண்டது. தன்னால் கொண்டுவரப்பட்ட புதிய அரசியலமைப்புப் பதவியில் இருப்பதற்கு மேலதிகமாக இரு வருடங்களை தந்திருப்பதாக கூறி அன்றைய அரசாங்கம் தேர்தலை பின்போட்டது. தேர்தல் நடந்தபோது அந்த அரசாங்கம் படுமோசமாக தோற்கடிக்கப்பட்டது
இன்னொரு சந்தர்ப்பத்தில் உரிய நேரத்தில் பொதுத்தேர்தலை நடத்துவதற்குப் பதிலாக அரசாங்கம் நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பபை நடத்தியது. அதற்குப் பிறகு இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான 1983 கறுப்பு ஜூலை இன வன்செயல்கள் மூன்று தசாப்தகால உள்நாட்டுப்போருக்கு வழிவகுத்தன.
நாட்டின் எதிர்காலத்துக்கான ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் நோக்கு எதுவாக இருந்தாலும், அவர் ஜனநாயக செயன்முறைகளுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டியது அவசியமாகும். இதற்கு உள்ளூராட்சி தேர்தல்களும் மாகாண சபை தேர்தல்களும் விரைவாக நடத்தப்படவேண்டும்.
ஜனாதிபதியின் பங்களிப்பின் பெறுமதியும் நம்பகத்தன்மையும் அந்தத் தேர்தல்களில் அரசாங்கம் வெற்றிபெறுகிறதோ தோல்வியடைகிறதோ என்பதில் அவர் எடுக்கக்கூடிய தீர்மானத்தின் நேர்மையில்தான் தங்கியிருக்கிறது. ஜனநாயக நியமங்களை பின்பற்றுவதில் அவர் காட்டக்கூடிய உறுதிப்பாடு அரசியல் சமுதாயத்துக்கு அவர் மீதும் அவரின் உறுதிமொழிகள் மீதும் நம்பிக்கையைப் பெருக்கும்.
நாட்டை சரியான தடத்தில் பயணம் செய்யவைப்பதற்கு தேவையான பொருளாதார சீர்திருத்தச் செயன்முறையை ஜனாதிபதி தொடங்கியிருக்கிறார். அதேபோன்றே சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து நாட்டை பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கிவரும் இனப்பிரச்சினை விடயத்திலும் நடந்துகொள்ள அவர் விரும்புகிறார் போன்று தெரிகிறது.
இந்த இரு குறிக்கோள்களையும் அடைவதற்கு அடுத்த ஜனாதிபதித் தேர்தலை நடத்தவேண்டிய 2024 செப்டெம்பர் வரை ஜனாதிபதிக்கு கால அவகாசம் இருக்கிறது.
அரசியலமைப்பில் உள்ளவாறு 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டிய தேவையை கடந்த ஆறு மாத காலத்தில் செய்த பல அறிவிப்புக்களில் ஜனாதிபதி வலியுறுத்திக்கூறி வந்திருக்கிறார். தனக்கு முன்னர் பதவியில் இருந்த ஏழு ஜனாதிபதிகளும் செய்யத் தவறியதை விக்கிரமசிங்க செய்துகாட்டவேண்டிய தேவை இருக்கிறது. அதாவது, பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் உட்பட மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பரவலாக்கம் செய்வது தொடர்பில் அரசியலமைப்பில் உள்ள ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தவேண்டும்.
13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதை கல்விமான்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் வழிநடத்திலின் கீழான அறிவூட்டல் செயன்முறையொன்றில் இருந்து தொடங்கலாம்.
மாகாணங்களுக்கு முழுமையான அதிகாரப்பரவலாக்கத்தைச் செய்தாலும் கூட பொலிஸ் மற்றும் காணி் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தின் இறுதி அதிகாரத்தின் கீழ் எவ்வாறு இருக்கும் என்பதை கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் அருளானந்தம் சர்வேஸ்வரன் தனது அண்மைய கட்டுரைகளில் தெளிவாக விளக்கியிருக்கிறார். அவர் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவுக்குழுவின் ஒரு உறுப்பினராக இருந்தவர்.
நம்பிக்கைப் பற்றாக்குறையே இலங்கையில் உள்ள பிரச்சினையாகும். அது சர்வ வியாபகமாக இருக்கிறது. அதை வெற்றிகொள்வதற்கு நம்பிக்கைவைக்கக்கூடிய தலைமைத்துவம் அவசியம்.
கலாநிதி ஜெகான் பெரேரா