Photo, SRILANKA GUARDIAN

2023 ஜூலை 23ஆம் திகதி 1983 ஜூலை இன அழிப்பின் 40ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கின்றது. இந்த இன அழிப்பு இலங்கையின் வரலாற்றில் அழியாத ஒரு கறையை விட்டுச் சென்றிருக்கிறது. இந்த இருண்ட அத்தியாயம் நமது தேசத்தின் சுதந்திரத்துக்குப் பிற்பட்ட யுகத்தின் பூதாகரமான ஒரு நிழலாக வியாபித்திருப்பதுடன், அதனையடுத்து இடம்பெற்ற நீண்ட உள்நாட்டுப் போரில் மிக முக்கியமான ஒரு பாத்திரத்தை வகித்தது. இந்த வன்முறைக்கான விதைகள் நீண்ட காலத்துக்கு முன்னரேயே விதைக்கப்பட்டிருந்தன. 1956, 1958, 1961, 1964, 1974, 1977 மற்றும் 1981 ஆகிய வருடங்களையும் உள்ளடக்கிய விதத்தில் 1983 வரையில் தமிழர்களுக்கெதிரான பகைமையுணர்ச்சி பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்திக் காட்டப்பட்டிருந்தது.

ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் கீழான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் வடக்கிலும், கிழக்கிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், தெற்கில் மக்கள் விடுதலை முன்னணியையும் ஒடுக்குவதற்கு முயற்சித்தது. இந்தக் கொடூர உத்தியின் விளைவாக சுமார் 200,000 மக்கள் (பெரும்பாலும் சிவிலியன்கள்) உயிரிழந்தார்கள். வன்முறைச் சம்பவங்களின் விளைவாக பல்லாயிரக்கணக்கான இலங்கையர்கள் இடம்பெயர்ந்ததுடன், அவர்கள் தமது சொந்த நாட்டிலும், வெளிநாடுகளிலும் அகதிகளாக மாறினார்கள். இந்தச் சம்பவங்களின் பின்னர் பெருந்தொகையான குடும்பத் தலைவிகள், பெற்றோரை இழந்தோர் மற்றும் உடல் ரீதியான, உள ரீதியான காயங்களைக் கொண்ட தனிநபர்கள் பெரும் எண்ணிக்கையில் எஞ்சியிருந்தார்கள். பெண்கள் மற்றும் பிள்ளைகளையும் உள்ளடக்கிய விதத்தில் பல கிராமங்கள் முற்று முழுவதும் நிர்மூலமாக்கப்பட்டன. சிறப்புச் சலுகையுடன் கூடிய சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தை ஏனைய குடிமக்கள் மீது பிரயோகிக்கும் நோக்கத்துடனேயே இவை அனைத்தும் முன்னெடுக்கப்பட்டன.

இப்பொழுது 40 வருடங்கள் கழிந்திருக்கும் நிலையிலும் கூட, ஒன்றன் பின் ஒன்றாக ஆட்சிக்கு வந்த பல்வேறு அரசியல் கூட்டணிகளுடன் கூடிய அரசாங்கங்கள் இந்த வன்முறையைத் தூண்டிய தேசிய பிரச்சினையின் மூல காரணங்களை கவனத்திலெடுக்கத் தவறியுள்ளன. இந்த இன அழிப்பின் பின்னணியிலிருந்த காரணங்களைப் புரிந்துகொள்ளும் பொருட்டு பெரும்பான்மை சாராத சமூகங்களுக்கு – குறிப்பாக தமிழ் சமூகத்துக்கு – எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட பாரபட்ச இயல்பிலான கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் என்பவற்றை எடுத்து விளக்கும் சுருக்கமான ஒரு வரலாற்றுக் குறிப்பை வழங்குவது அவசியமாகும்.

பத்து இலட்சம் மலையகத் தொழிலாளர்களின் குடியுரிமையைப் பறித்த 1948ஆம் ஆண்டின் இலங்கை குடியுரிமை மசோதாவுடன் பாரபட்சம் காட்டும் கொள்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. குடியுரிமை வழங்குவதற்கான ஒரு வழிமுறையாக அது சமர்ப்பிக்கப்பட்டிருந்த அதேவேளையில், அந்த மசோதாவின் உண்மையான நோக்கம் பிரதானமாக இடதுசாரி வேட்பாளர்களுக்கு ஆதரவளித்து வந்த இந்தத் தொழிலாளர்களின் குடியுரிமையை மறுப்பதாகும். பல தலைமுறைகளைச் சேர்ந்த மலையகத் தொழிலாளர்கள் நாட்டுக்கு வழங்கிய பொருளாதார பங்களிப்புக்கள் உதாசீனப்படுத்தப்பட்டது. அவர்கள் வழங்கி வரும் பங்களிப்பு இது வரையில் உரிய விதத்தில் அங்கீகரிக்கப்படவில்லை.

அரசு வன்முறைக்கூடாக தமிழர்கள் வலுவிழக்கச் செய்யப்பட்டமை தமிழர்களின் குடித்தொகையிலும், நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்திலும் ஒரு குறைவை எடுத்து வந்தது. இது சிங்கள மேட்டுக்குடியினர் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பளித்ததுடன், தம்மை மிகவும் மோசமாகப் பாதித்த கொள்கைகளைத் தடுப்பதற்கு அதிகாரமற்ற ஒரு சமுதாயமாக தமிழர்கள் கைவிடப்பட்டிருந்தார்கள். தெற்கில் அரசியல் போட்டி தீவிரமடைந்து வந்த நிலையில் தமது இன, மொழி மற்றும் சமயப் பின்னணிகளை  அடிப்படையாகக் கொண்டு சமூகங்களை வெவ்வேறு பிரிவுகளாக பிரிக்கும் ஒரு போக்கு தோன்றியது. இந்தப் பிரிவினை இன்று வரையில் தொடர்ந்து நிலவி வருவது கவலைக்குரியதாகும்.

எஸ்.டப்பிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் என்பவற்றினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட 1956 இன் சிங்களம் மட்டும் கொள்கை வரலாற்று ரீதியாக ஆங்கிலத்தின் இடத்தில் சிங்களத்தை எடுத்து வந்ததுடன், உத்தியோகபூர்வ பாவனையிலிருந்து தமிழ் மொழியை வெளியேற்றியது. ஏற்கனவே பலர் விருப்பத்துடன் பாடசாலைகளில் சிங்கள மொழியைக் கற்றிருந்த போதிலும், இந்த நகர்வு தமிழர்கள் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முன்னேற்றம் என்பவற்றுக்கு சிங்கள மொழியைக் கற்க வேண்டிய நிர்ப்பந்தத்தை எடுத்து வந்தது. மேலும், அது சிங்கள மக்களை ஒரு மொழியை மட்டும் பயன்படுத்துபவர்களாக ஆக்கியதன் மூலம் பிரதிகூலமான ஒரு நிலைக்குள் தள்ளியது.   மேட்டுக்குடியினர் அல்லாத பல தலைமுறைகளைச் சேர்ந்த சிங்களவர்கள்; சமூகத்தில் மேல் நோக்கிச் செல்வதற்கான வாய்ப்புக்களை அது வரையறை செய்தது.

பண்டாரநாயக்க – செல்வநாயகம் மற்றும் டட்லி – செல்வநாயகம் ஒப்பந்தங்கள் போன்ற அரசாங்கத்துக்கும், தமிழ் அரசியல் கட்சிகளுக்குமிடையில் நல்லிணக்கத்தை எடுத்து வருவதற்கான முயற்சிகள் தீவிர சிங்கள பௌத்த தேசியவாத அழுத்தங்கள் காரணமாக இறுதியில் கைவிடப்பட்டன. இந்தக் கால கட்டம் நெடுகிலும் சிங்கள மக்கள் தமிழர்கள் செறிந்து வாழ்ந்து வந்த பிரதேசங்களில் மீள் குடியமர்த்தப்பட்டு வந்தனர். இது சிங்கள ஆதரவு தேர்தல் அனுகூலத்தைப் பெற்றுக் கொள்ளும் விதத்தில் குடிசனவியலில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு வழிகோலியது. பண்டாரநாயக்க ஆட்சி 1950 களில் தமிழர்களின் அஹிம்சை வழியிலான எதிர்ப்புக்களை அடக்குவதற்கென கும்பல் வன்முறையைப் பயன்படுத்தியது. 1958 கும்பல் வன்முறை காரணமாக சுமார் 300 மரணங்கள் இடம்பெற்றன.

சிங்கள பௌத்தத்துக்கு சாதகமான 1972 இன் புதிய அரசியல் யாப்பு மற்றும் கல்வியை தரப்படுத்துவது தொடர்பான கொள்கையின் அறிமுகம் என்பன பல்கலைக்கழக அனுமதியில் தமிழ் மாணவர்களுக்கு மேலும் பாரபட்சத்தை எடுத்து வந்திருந்தன.

இந்தப் பாரபட்ச இயல்பிலான வழிமுறைகள் வன்முறையுடன் கூடியதான ஒரு சூழலில் அமுல் செய்யப்பட்டன. இதனை ஒரு சாக்காகக் கொண்டு பண்டாரநாயக்க அரசாங்கம் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியதுடன், தீவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இராணுவத்தை சேவையில் அமர்த்தியது. தீவிரவாத கூறுகள் அகற்றப்பட வேண்டுமென்றும், அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டாவது இதனை மேற்கொள்ள வேண்டுமென்றும் கேர்ணல் ரிச்சர்ட் உடுகம கண்டிப்பான விதத்தில் உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்.

1972 இன் சிங்கள பௌத்த ஆதரவு அரசியல் யாப்பிற்கு எதிராக தமிழ் இளைஞர்கள் கறுப்புக் கொடி காட்டிய பொழுது அவசரகால சட்ட விதிகளின் கீழ் அவர்கள் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். 1977 ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஆறு மாத காலத்துக்குள் பயங்கரவாதத்தை முற்றாக துடைத்தெறிய வேண்டுமென்ற கட்டளையுடன் பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்கவை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்தது. 1980 களுக்கு முற்பட்ட காலப் பிரிவின் போது வடக்கிலும், கிழக்கிலும் நிகழ்த்தப்பட்ட பெருந்தொகையான அட்டூழியச் செயல்களுக்கு உடுகம மற்றும் வீரதுங்க ஆகியோர் பொறுப்புக் கூற வேண்டும் என்பதனைக் காட்டும் நம்பகமான சான்றுகள் கிடைத்துள்ளன.

அதன் விளைவாக, தமிழ் மக்கள் எதிர்கொண்டு வந்த பாரபட்சம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தமிழ் அரசியல் கட்சிகளினால் தீர்த்து வைக்க முடியவில்லை. தெற்கில் 1977 இல் ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் தெரிவு செய்யப்பட்டது. வடக்கிலும், கிழக்கிலும் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையிலான தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி வட்டுக்கோட்டை பிரகடனத்தை வாக்காளர்கள் முன்னால் எடுத்துச் சென்று, தமிழ் ஈழம் எனப்படும் ஒரு தனிநாட்டை உருவாக்குவதற்கு மக்கள் ஆணை தமக்கு வழங்கப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டது. அதனையடுத்து அவர்களுக்கு அமோகமான ஒரு மக்களாணை கிடைத்தது. தேர்தலுக்குப் பிற்பட்ட காலப் பிரிவின் போது தமிழ் குடிமக்களுக்கு எதிராக மிக மோசமான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. அந்த வன்முறைச் சம்பவங்கள் அரச அனுசரணையுடன் நிகழ்த்தப்பட்ட காரணத்தினால் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எத்தகைய நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

வடக்கை ஆக்கிரமித்திருந்த இராணுவத்தின் மீதான முதலாவது தாக்குதல் 1981 அக்டோபர் மாதம் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனத்துவ பயங்கரவாதம் காரணமாக பதவியுயர்வு பெற்று, புதிய இராணுவ கமாண்டராக பதிவியேற்ற திஸ்ஸ வீரதுங்கவை வரவேற்பதற்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அணிவகுப்பு மரியாதையுடன் இணைந்த விதத்தில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது போல் தெரிந்தது. அரச பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் விதத்தில் இராணுவ வாகனத் தொடரணிகள் மற்றும் ரோந்துப் படையணிகள் என்பவற்றை இலக்கு வைத்து நிகழ்த்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்தன. பாதுகாப்புப் படையினரால் தாக்குதல் தொடுக்கும் நபர்களை தேடிப் பிடிக்க முடியாதிருந்த காரணத்தினால் அவர்கள் சிவிலியன்களை இலக்கு வைக்கத் தொடங்கினார்கள். சிவிலியன்கள் மீதான தாக்குதல்கள் புதியவை அல்ல. உலகளாவிய ரீதியில் பல மோதல்களின் போது தாக்குதல் தொடுப்பவர் யாராக இருந்தாலும் வன்முறையின் விளைவுகளை பெருமளவுக்கு சிவிலியன்களே ஏற்க வேண்டியிருந்தது என்பதனை வரலாறு உறுதிப்படுத்துகின்றது. இலங்கையில் நிகழும் சம்பவங்களுக்குப் பதிலடியாக தமிழ் இளைஞர்கள், தமக்குத் தோல்வியை எடுத்து வந்த வாக்குச் சீட்டுக்களுக்குப் பதிலாக ஆயுதங்களை ஏந்தத் தொடங்கினார்கள். தீவிரவாத தமிழ் இளைஞர்களின் நோக்கம் தாம் உள்ளாக்கப்பட்டிருந்த பாரபட்ச நிலையிலிருந்து தமது மக்களை விடுவிப்பதாகவே இருந்து வந்தது. சமூகங்களை இன, மொழி மற்றும் சமயப் பிரிவினைகளின் அடிப்படையில் பிரித்து வைப்பதற்குப் பதிலாக, அவற்றை ஒற்றுமைப்படுத்தி, தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியை முன்னெடுப்பதில் சுதந்திரத்துக்குப் பிற்பட்ட இலங்கை/ ஸ்ரீ லங்கா தோல்வியடைந்திருந்த நிலைமை காரணமாகவே தமிழ் இளைஞர்கள் அவ்விதம் ஆயுதம் ஏந்தியிருந்தார்கள்.

1981 இல் இடம்பெற்ற ஆயுதப் போராட்டத்துடன் இணைந்த விதத்தில் நிலைமை மேலும் மோசமடைந்தது. அது 1983 ஜூலையில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக்கு வழிகோலியது. இந்த வன்முறை தமிழ் சிவிலியன்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதுடன், அதன் விளைவாக ஆயிரக்கணக்கான மரணங்கள், இடப்பெயர்வுகள், காயங்கள் மற்றும் வன்புணர்வுகள் என்பன நிகழ்ந்தன. மேலும், அம்மக்களின் சொத்துக்களும் அழிக்கப்பட்டன. அரசாங்கம் இதற்கான பழியை வேறு தரப்புக்களிடம் போட முயற்சித்தது. ஆனால், இந்த வன்முறை சர்வதேச கவனத்தை ஈர்த்திருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்குள் இருந்த இனத்துவ தீவிரவாதத் தலைமைத்துவம் 1983 ஜூலை கலவரங்களைத் திட்டமிட்டு நிகழ்த்தியதன் மூலம் ஏற்கனவே கொந்தளிப்பாக இருந்து வந்த  நிலைமையை மேலும் மோசமாக்கியது. அக்கலவரங்கள் சிறில் மெத்தியூ போன்ற அமைச்சர்கள், எல்லே குணவங்ச தேரர் போன்ற மதகுருக்கள் ஆகியோரினால் மிகவும் நுட்பமான விதத்தில் திட்டமிடப்பட்டிருந்தன. எல்லே குணவங்ச தேரர் ஜனாதிபதி ஜயவர்தன மற்றும் ஏனைய சிங்கள தீவிரவாதிகள் ஆகியோரின் ஒரு நெருங்கிய கூட்டாளியாக இருந்து வந்தார். மெத்தியூ போன்ற அமைச்சர்கள் தமது சொந்த ஆயுதக் குழுக்களை பராமரித்து வந்ததுடன், சட்டத்துக்கு அப்பால் அவர்கள் செயற்பட்டு வந்தார்கள். இன்னமும் அத்தகைய நிலைமைகள் நிலவி வருவது கவலைக்குரிய ஒரு விடயமாகும். எவ்வாறிருப்பினும், இன அழிப்பின் விளைவாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பலம் வாய்ந்த இயக்கமாக வளர்ச்சியடைந்ததுடன், இன அழிப்பு காரணமாக தென்னிலங்கையிலிருந்து தப்பிச் சென்ற பெருந்தொகையான இளைஞர்கள் அந்த இயக்கத்தில் இணைந்து கொண்டார்கள்.

சமூகங்களுக்கிடையிலான நிலவரம் அப்போது ஒரு வெடி மருந்து கிடங்கு போல் இருந்து வந்தது. ஒரு தீக்குச்சியை கொளுத்துவதே செய்ய வேண்டியிருந்த ஒரே காரியமாக இருந்து வந்தது. இதற்கான பொறி 1983 மே மாதம் கிடைத்தது. ஒரு இராணுவ வாகன அணி மீது மறைந்திருந்து நிகழ்த்தப்பட்ட ஒரு தாக்குதலை அடுத்து பாதுகாப்புப் படையினர் கடும் அட்டூழியங்களை  நிகழ்த்தினார்கள். யாழ்ப்பாண தீபகற்பத்தின் பல்வேறு இடங்களில் அவர்கள் 51 அப்பாவி தமிழ் சிவிலியன்களை கொலை செய்தார்கள். ஜூன் மாதம் இடம்பெற்ற அத்தகைய ஒரு தாக்குதலின் போது வவுனியாவில் கடற்படை அதே விதத்தில் பழிவாங்கல் நடவடிக்கையை மேற்கொண்டது. தமிழ் தீவிரவாதிகளை அழித்தொழிப்பதற்கான இறுதித் தீர்வை அரசாங்கம் அமுல் செய்யப் போகின்றது என்ற விதத்திலான வதந்திகள் கொழும்பில் பரவியிருந்தன.

திருநெல்வேலியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மறைந்திருந்து நிகழ்த்திய ஒரு தாக்குதலில் 13 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட போது அந்தத் திட்டத்தைத் துவக்கி வைப்பதற்கான வாய்ப்பு அரசாங்கத்துக்குக் கிடைத்தது.

அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், வடக்கில் செயற்பட்டு வரும் அதனையொத்த ஏனைய இயக்கங்களையும் தடை செய்தது. தொடக்கத்தில் அவசரகால சட்டங்களின் கீழ் 1983 ஜூலை மாதத்தில் தெற்கில் ஜே.வி.பி, நவ சம சமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி என்பனவும் தடை செய்யப்பட்டன. பின்னர் அத்தடை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டது. இச்சட்டம் கைது செய்யப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்தது. அவ்விதம் கைதுசெய்யப்பட்டவர்களை குற்றப் பத்திரிகையோ அல்லது வழக்கு விசாரணையோ இல்லாமல் பதினெட்டு மாதங்கள் வரையில் தடுப்புக் காவலில் வைக்கக்கூடிய வாய்ப்பு அதிகாரிகளுக்குக் கிடைத்தது. மேலும், சித்திரவதையின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட குற்ற வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்கத்தக்கவையாகவும் ஆக்கப்பட்டது. தமிழ் மக்களை சரணடையச் செய்வதற்கு நிர்ப்பந்திப்பதற்கென அம்மக்கள் மீது தொடர்ந்தும் பயங்கரவாதம் மற்றும் வன்முறை என்பவற்றை கட்டவிழ்த்து விடுவதே அரசின் கொள்கையாக இருந்து வந்தது.

தமிழ் மக்களுக்கெதிரான 1983 இன அழிப்புக்குத் தலைமைத்துவம் வழங்கியதாக ஒரு போலிக் குற்றச்சாட்டின் பேரில் நான் தவறான விதத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன். அதற்கு முன்னர், கொழும்பிலிருந்த பல ஜே.வி.பி. தோழர்கள் இன அழிப்பின் போது என்ன நடந்தது என்பது குறித்து எனக்கு விளக்கமளித்திருந்தார்கள். தமிழர்கள் வாழும் இடங்களைக் கண்டறிந்து கொள்வதற்காக வாக்காளர் பட்டியல்களைப் பயன்படுத்துதல், தாக்குதல்களுக்கென கும்பல்களை அணி திரட்டுதல் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் என்பவற்றுக்குச்  சொந்தமான வாகனங்களில் அவர்களை அந்தந்த இடங்களுக்கு எடுத்துச் சென்றமை போன்ற விடயங்கள் எனக்குத் தெரிவிக்கப்பட்டன. கொழும்பு வீதிகளில் அத்தகைய கும்பல்கள் செய்த காரியங்களை தனிப்பட்ட ரீதியில் பார்க்கக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

இந்த இன அழிப்பின் போது ஐயாயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட தமிழ் சிவிலியன்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டதுடன், பல நூற்றுக் கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள். மேலும், ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்ததுடன், சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது ஒரு சிலர் கொல்லப்பட்டார்கள். கும்பல்கள் ஒரு சில தமிழ் மக்களை உயிருடன் எரித்தன. பல நூற்றுக்கணக்கான பெண்கள் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டார்கள். பல்லாயிரக்கணக்கான தமிழ் சிவிலியன்களின் வீடுகள், வியாபாரங்கள் மற்றும் கைத்தொழில்கள் போன்ற சொத்துக்கள் தாக்கி அழிக்கப்பட்டதுடன், பாதுகாப்புப் படையினரின் கண்களுக்கெதிரிலேயே அவை தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. வணிகத் துறை தலைவர்கள், தொழில்வாண்மையாளர்கள் மற்றும் ஏனையோர் ஆகியோரை உள்ளடக்கிய 200,000 க்கும் மேற்பட்ட சிவிலியன்கள் இடம்பெயர நேரிட்டதுடன், வேறிடங்களில் அவர்கள் தஞ்சம் புகுந்தார்கள். பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்கள்; அவர்களில் ஒரு சிலர் இன்னமும் இந்திய அகதி முகாம்களில் மிகவும் வசதிகளற்ற நிலைமைகளின் கீழ் வாழ்ந்து வருகின்றார்கள்.

அரசியல் யாப்புக்கான ஆறாவது திருத்தம் நிரூபித்துக் காட்டியதைப் போல அரசாங்கம் தொடர்ந்தும் அதிகளவில் எதேச்சாதிகார இயல்பையும், பொறுப்புக் கூறாத இயல்பையும் முன்னெடுத்து வந்தது. இந்த ஆறாவது திருத்தம் தமிழீழம் தொடர்பான  கோரிக்கையை சட்ட விரோதமான ஒரு செயலாக ஆக்கியதன் மூலம் நாடாளுமன்றத்திலிருந்த தமிழ் தலைவர்களை அங்கிருந்து வெளியேற்றியது. கறுப்பு ஜூலை 1983 நிகழ்வை அதன் போர் முயற்சியை தீவிரப்படுத்துவதற்கும், சட்டபூர்வமாக்குவதற்கும் அரசினால் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான ஒரு முயற்சியாக நோக்க முடியும். இந்த இன அழிப்பின் பின்னர் வடக்கு கிழக்கில் அடிக்கடி தொடர்ச்சியாக கொடூரமான சம்பவங்கள் நிகழத் தொடங்கின. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 2009 மே மாதம் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டதுடன் இணைந்த விதத்தில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால், போருக்கு வழிகோலிய காரணங்கள் இன்னமும் அதே விதத்தில் இருந்து வருகின்றன.

இனப் படுகொலையைத் தடுத்தல் மற்றும் அதற்கு தண்டனையளித்தல் தொடர்பான ஐ.நா. சமவாயத்தில் இலங்கையும் கையொப்பமிட்டிருக்கின்றது. இந்தச் சமவாயம் இனப் படுகொலை என்பதற்கு ஒரு தேசிய இனத்துவ, இன அல்லது சமயக் குழுவை முழுமையாக அல்லது ஒரு பாகமாக அழிப்பதனை நோக்கமாகக் கொண்டு நிகழ்த்தப்படும் ஒரு செயல் என வரைவிலக்கணம் வழங்குகிறது. இலங்கையில் இனப் படுகொலை இடம்பெறவில்லை எனக் கூறுபவர்கள் அதனை பொய்யென நிரூபித்துக் காட்டுவதற்கு எவையேனும் விடயங்களையோ அல்லது சம்பந்தப்பட்ட வாதங்களையோ ஒருபோதும் முன்வைத்திருக்கவில்லை. இந்த வரைவிலக்கணம் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடவில்லை; ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டமை, அரச சிறைக்கூடங்களில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டமை, தமிழ் மக்களின் கலாசார சமய அடையாளங்கள் அழிக்கப்பட்டமை, வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருள் விநியோகத்தைத் தடுக்கும் நோக்கிலான பொருளாதார தடைகள் போன்ற அமுல் செய்யப்பட்ட கொள்கைகள் மற்றும் முன்னெடுக்கப்பட்ட செயன்முறைகள் என்பவற்றின் நோக்கம் இங்கு கருத்தில் கொள்ளப்படுதல் வேண்டும். 1983 ஜூலை மாதத்தில் திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்ட தமிழர் இன அழிப்பு மற்றும் அதன் பின்னர் அரசினால் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்படாத செயல்கள் என்பனவும் அந்த விவரணத்தின் கீழ் வருகின்றன.

ஜனாதிபதி ஜயவர்தனவும், அவருடைய அரசாங்கமும் இன அழிப்புக்கான பழியை சிங்கள மக்கள் மீது போட்டாலும் கூட, தீவிரவாதிகளினால் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த வன்முறைக் கும்பல்களின் தாக்குதல்களை எதிர்கொண்ட மக்களுக்கு தஞ்சமளிப்பதற்கும், அவர்களுடைய உயிரைப் பாதுகாப்பதற்கும் தமது உயிரைப் பணயம் வைத்து பல சிங்களவர்கள் முன்வந்திருந்தார்கள். தேசிய தீவிரவாதிகள் இந்த வன்முறைக்கு ஆதரவளித்திருக்க முடியும்; ஆனால், பெரும்பாலானவர்கள் எதனையும் செய்ய முடியாத நிலையில் வெறும் பார்வையாளர்களாக இருந்து வந்தது போல் தெரிகிறது. எவ்வாறிருப்பினும், இந்த வன்முறை சர்வதேச சமூகத்தின் – இந்தியா மற்றும் அதன் மக்களின் – கவனத்தை ஈர்த்தது. அரசாங்கத்தின் மீதான அவப் பெயர் அகற்றுவதற்கென அது ஒட்டுமொத்தமாக சிங்கள மக்கள் மீது அதற்கான பழியைப் போட்டதுடன், அதன் பின்னர் ஒரு சில இடதுசாரி அரசியல் அமைப்புக்களையும் குறை கூறியது.

இன அழிப்பின் காரணமாக பத்து இலட்சம் தமிழர்கள் இடம்பெயர்ந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் முக்கியமாக மேலைய நாடுகளில் குடியேறினார்கள். மருத்துவம், பொறியியல், கணக்கீடு, ஆசிரியர், சட்டம் மற்றும் வர்த்தகம் போன்ற பன்முக அறிவுத்துறைகளைச் சேர்ந்த தொழில்வாண்மை நிபுணர்களாக அவர்களில் பலர் இருந்தார்கள். அதன் விளைவாக, இலங்கை அதன் சமூக அபிவிருத்திக்கான அந்த மக்கள் பிரிவினரின் பங்களிப்புக்களை இழந்தது. இலங்கையின் இழப்புக்களிலிருந்து பல நாடுகள் பயனடைந்தன. தாம் புதிதாக குடியேறிய நாடுகளின் அபிவிருத்திக்கு அத்தகைய தொழில்வாண்மையாளர்கள் பரந்தளவிலான பங்களிப்பை வழங்கினார்கள். இலங்கை தமிழ் இளைஞர்கள் மட்டும் அத்தகைய நிலைமாற்றத்தை எதிர்கொண்டிருக்கவில்லை. சிங்கள மற்றும் முஸ்லிம் இளைஞர்களும் அரச பயங்கரவாதத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள்.

எனக்குத் தெரிந்த வரையில் கறுப்பு ஜூலை இன அழிப்பு அல்லது அதற்கு முன்னரும், பின்னரும் நாட்டின் பல்வேறு பாகங்களில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் குறித்து வினைத்திறன் மிக்க புலன்விசாரணைகள் எவையும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. ஜனாதிபதி உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு, கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, காணாமற் போன ஆட்கள் தொடர்பான அலுவலகம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் என்பவற்றுக்கான அலுவலகம் போன்ற பெருந்தொகையான பொறிமுறைகள் ஸ்தாபிக்கப்பட்டன. அப்பொறிமுறைகள் ஒரு சில பிரச்சினைகளை ஓரளவுக்குக் கவனத்தில் எடுத்திருக்க முடியும். ஆனால், இந்த ஆணைக்குழுக்களினால் குறிப்பிட்டு கூறும் அளவுக்கு எத்தகைய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இறுதியில் இப்பொறிமுறைகள் செயல்முடக்கமடைந்தன. ஆணைக்குழுக்களின் பக்கச்சார்பான உருவாக்கம், பல்வேறு அரசாங்கங்கள் அரசியல் ரீதியாக மேற்கொண்ட தலையீடுகள் என்பனவே  இதற்கான காரணமாகும். அது தவிர, இன முரண்பாட்டின் ஒரு சில பிரச்சினைகளை கவனத்தில் எடுப்பதற்கென முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் தொடர்பாக ஓர் உதாசீன உணர்வும் காணப்பட்டது. நிபுணர்களைக் கொண்ட ஐ நா குழு, மனித உரிமைகள் குழுக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இந்தப் பொறிமுறைகள் குறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளன. அவற்றின் வரையறுக்கப்பட்ட பணிப்பாணைகள், சுயாதீனம் குறைவாக இருந்த நிலை மற்றும் குறைந்தபட்ச சர்வதேச தரநியமங்களை நிறைவேற்றி வைக்கத் தவறியமை அல்லது சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்கத் தவறியமை போன்ற காரணங்களாலேயே இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது 2017 பெப்ரவரி அவுஸ்திரேலிய விஜயத்தின் போது, மீண்டும் நாடு திரும்பி, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு உதவுமாறு புலம்பெயர் சமூகத்தினரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். தான் ஓர் அமைச்சராக இருந்து வந்த 1980 களின் அரசாங்கம் முதலாவது தமிழ் தலைமுறையினருக்கும், இரண்டாவது சிங்கள தலைமுறையினருக்கும் நிகழ்த்திய சேதம் குறித்து அவர் அறிந்திருந்தாரா? அல்லது அது குறித்த ஒரு விளக்கத்தை கொண்டிருந்தாரா? இந்த இரு தரப்பினரும் தலைமுறைகளுக்கிடையிலான பேரதிர்ச்சியின் விளைவாக தமது தாய் நாட்டிலிருந்து வெளியேற நேரிட்டது. அந்தப் பேரதிர்ச்சி எதிர்கால தலைமுறையினருக்கும் கடத்தப்படுமா?

அவர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டுமென அரசாங்கம் எவ்வாறு வெறுமனே கேட்டுக் கொள்ள முடியும்? இது அவர்கள் நாடு திரும்புவதற்கு உசிதமான நிலைமைகளை நாட்டில் உருவாக்குவதற்கென நிலவரங்களை கவனத்தில் எடுக்காது விடுக்கப்பட்ட ஒரு வேண்டுகோளாகும். பலர் அவ்விதம் நாடு திரும்புவதற்கான அவாவைக் கொண்டிருப்பதுடன், தமது தாய்நாட்டு மக்களுக்கு சேவையாற்றும் விருப்பினையும் கொண்டுள்ளார்கள். ஆனால், நாட்டு நிலவரங்கள் அவ்வாறு அவர்கள் திரும்பி வருவதற்கு உசிதமானவையாக இருந்து வரவில்லை. தமது   இனத்துவம், மொழி மற்றும் சமயம் என்பன என்னவாக இருந்து வந்தாலும், அனைத்து மக்களும் ஒப்புரவுடனும், சமத்துவத்துடனும், கண்ணியத்துடனும் நடத்தப்படும் சகிப்புத்தன்மை, ஒத்துணர்வு, பத்திரம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றைக் கொண்ட ஒரு சூழலை அரசாங்கம் இன்னமும் உருவாக்கவில்லை. அதே போல, அதற்கு உசிதமான அரசியல், பொருளாதார, சமூக, கலாசார சூழலொன்று உருவாக்கப்படவுமில்லை.

ஆயுதப் போராட்டத்தின் முடிவின் பின்னர் தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் அதன் மூலம் தமக்கு பொருளாதார பயன்கள் கிட்டும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், சமூக – பொருளாதார மற்றும் அரசியல் அனுகூலங்கள் பெருமளவுக்கு மேல்தட்டு மக்களை நோக்கிச் சென்ற காரணத்தினால் சாதாரண மக்களின் அத்தகைய எதிர்பார்ப்புக்கள் நிறைவேறவில்லை. இன அழிப்பு ஏற்படுத்திய சேதங்கள் தொடர்பாக அரசு முற்றுமுழுதாக நட்ட ஈடுகளை வழங்கவில்லை. இந்த இன அழிப்பு ஒரு பாரிய குடிசனவியல் நகர்வை தூண்டியதுடன், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் வடக்கு கிழக்குக்கு வெளியில் மீள் குடியமர்ந்தார்கள். சுமார் 150,000 தமிழர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றார்கள்.

மீண்டும் ஒரு முறை எதேச்சாதிகாரம் மற்றும் குடும்ப ஆட்சி என்பன தேசபக்தி என்ற போர்வையுடன்  வெளியில் வந்திருக்கின்றன. அடிப்படைவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் ஆகிய தரப்புக்கள் தற்போதைய பொருளாதார, கட்டமைப்பு ரீதியான, நிறுவன ரீதியான மற்றும் அரசியலமைப்பு ரீதியான சகதியிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதன் மூலம் இனத்துவ மற்றும் சமயப் பதற்ற நிலைமைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாடு இருண்ட ஓர் எதிர்காலத்தை எதிர்கொண்டுள்ளது. ஆளும் மேட்டுக்குடியினரும், அவர்களுடைய அடிவருடிகளும் மீண்டுமொரு முறை இலங்கையிலும், வெளிநாடுகளிலும் புதிய எதிரிகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். இது சமூக நீதி, வெளிப்படைத்தன்மை, உச்ச மட்டத்தில் பொறுப்புக் கூறும் நிலை என்பவற்றைக் கொண்ட ஜனநாயக நல்லிணக்க தேசமொன்றின் மிக முக்கியமான பணியினை சாதித்துக் கொள்வதனை மேலும் சிரமமாக்கும். இந்த இருண்ட சித்திரத்தை எதிர்கொள்ளும் பொருட்டு இலங்கை மக்கள் 1983 ஜூலை இன அழிப்பு, அதன் பின்னர் இடம்பெற்ற பெரும் துயரச் சம்பவங்கள் மற்றும் தொடர்ச்சியான வன்முறை நிகழ்வுகள் என்பவற்றை ஒருபோதும் மறவாதிருக்க வேண்டும் என்பதே எமது நம்பிக்கையாகும். அத்தகைய நிகழ்வுகள் எதிர்காலத்தில் நிகழ்வதைத் தடுக்கும் தேவையை இலங்கை பிரஜைகள் அனைவரும் கருத்தில் கொள்ளவேண்டும்.

1983 ஜூலை இன அழிப்பு தென்னிலங்கையில் வாழ்ந்து வந்த தமிழ் மக்களுக்கு கடும் பாதிப்பை எடுத்து வந்தது. அவர்கள் தமிழர்களாக இருந்து வந்ததே அதற்கான ஒரேயொரு காரணமாகும். தென்னிலங்கையில் குறிப்பாக கொழும்பு மற்றும் ஏனைய பெரு நகர மையங்களில் தமிழர்களின் பொருளாதார அடித்தளத்தை நிர்மூலமாக்குவதும், அந்தப் பொருளாதார அடித்தளத்தை சிங்கள ஆளும் மேட்டுக்குடியினர், அவர்களுடைய தோழமைக் குழுக்கள் மற்றும் அடிவருடிகள் ஆகியோர் சட்ட விரோதமாக, கொடூரமாகக் கைப்பற்றச் செய்வதுமே இதன் நோக்கமாக இருந்து வந்தது.   (அவ்வாறு சட்ட ரீதியாக செய்ய முடியுமாக இருந்தால்) தான் விரும்பும் எந்தவொரு இடத்திலும் ஒரு தொழிலை மேற்கொள்வதற்கான உரிமையை நல்லிணக்கம் நிலவும் இலங்கையில் ஒவ்வொரு பிரஜையும் கொண்டிருத்தல் வேண்டும். இந்த இன அழிப்பு அடிப்படையில் – தமிழர்களாக, முஸ்லிம்களாக அல்லது செட்டி சமூகத்தினராக எந்த இனத்தவராக இருந்தாலும் – ஏனைய தேசிய இனங்களின் பொருளாதார வாழ்வாதாரங்கள் மற்றும் வணிகங்கள் என்பவற்றை அழித்தொழிப்பதற்கென சிங்கள ஆளும் மேட்டுக்குடியினரால் தொடுக்கப்பட்ட ஒரு பொருளாதார போர் தவிர வேறெதுவுமல்ல என்பதனை இங்கு குறிப்பிடுதல் வேண்டும்.

இந்த இன அழிப்பும், அதன் விரிவாக்கமாக சுமார் முப்பது வருடங்கள் நீடித்த ஆயுதப் போராட்டமும் தெற்கிலும், வடக்கிலும் தமிழர் பொருளாதார அடித்தளத்தை மேலும் நிர்மூலமாக்கின. எனவே, தமிழ் சமூகம் அதிகாரப் பகிர்வு, பன்முகப்படுத்தல் – பிரிவினை என்பவற்றைக் கூட – கோருவதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. பேராசை, ஆற்றலின்மை, ஊழல் மற்றும் தீவிரவாதம் என்பவற்றின் ஒரு கூட்டு விளைவாக சுதந்திரத்தின் பின்னர் நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. திருப்பிச் செலுத்த முடியாத கடன்களை அதிகரித்தளவில் பெற்றுக் கொள்ளும் நிலையுடன் இணைந்த விதத்தில் இலங்கை மேலும் மேலும் கடன் பொறிக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. திருந்தாத அரசு பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் தருநர்கள் பெருந்தொகையினருடன் பல எதிர்கால தலைமுறையினரின் எதிர்காலத்தை அடகு வைத்திருக்கிறது.

இலங்கை தற்பொழுது கடந்து செல்வதைப் போன்ற தற்காலிக மற்றும் குறுங்கால நிவாரண நிலைமைகளுக்கும் மத்தியிலும் கூட, அடிப்படை கட்டமைப்பு ரீதியான காரணங்கள் இன்னமும் கவனத்தில் எடுக்கப்பட்டிருக்கவில்லை. இது தொடர்ந்தும் இலங்கையின் எதிர்காலத்தின் மீது அச்சமூட்டும் ஒரு தாக்கத்தைக் கொண்டிருக்கும். அரசு அதன் தற்போதைய தலைமைத்துவத்தின் கீழ் பொருளாதார நெருக்கடியையோ அல்லது தேசிய பிரச்சினையையோ தீர்த்து வைக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. ஏனெனில், இந்த இரண்டு பிரச்சினைகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவையாகும். கொந்தளிப்புடன் கூடிய ஒரு சமூகச் சூழ்நிலையைப் பராமரித்து வருவது ஆளும் மேட்டுக்குடியினருக்கும், அவர்களது ஆதரவாளர்களுக்கும், அடிவருடிகளுக்கும் தமது வழமையான ஊழல் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான வாய்ப்புக்களை வழங்கும்.

அறகலய மக்கள் இயக்கம் ஒரு சிறந்த ஜனநாயக ஆட்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சகிப்புத்தன்மையுடன் கூடிய ஒரு சமுதாயம் என்பவற்றுக்கான பெரும்பாலான இலங்கை மக்களின் அபிலாசைகளின் ஒரு வெளிப்பாடாகும். ஆனால், அந்த அபிலாசைகளை சாதித்துக் கொள்ளும் விடயத்தில் அரசு பாரிய இடையூறுகளை கட்டியெழுப்பி வரும் நிலையில் அவை இன்னமும் நிறைவேறியிருக்கவில்லை. இந்நிலைமைக்கு மத்தியிலும் கூட, ஒரு சிறந்த, நியாயமான, அனைவரையும் உள்ளடக்கிய இலங்கைத் தேசத்துக்கென போராடுவதற்கு பல வாய​ப்புக்கள் இருந்து வருகின்றன. மக்களின் அபிலாசைகளை முறியடிப்பதற்கென ஒன்றன்பின் ஒன்றாக வந்த அரசாங்கங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் காலனித்துவ கட்டமைப்புக்களை அழித்தொழிப்பதற்கு நாடும், அதன் பன்முகச் சமூகங்களும் ஒன்றாக இணையும் சந்தர்ப்பத்தில் அதனை சாதித்துக் கொள்ள முடியும்.

பொருளாதாரத்தின் இயல்பு மற்றும் அரசின் வடிவம் என்பவற்றின் அடிப்படையில் தம் மீது திணிக்கப்பட்டிருக்கும் அத்தகைய காலனித்துவ கட்டமைப்புக்களை அகற்ற வேண்டுமென மக்கள் தீர்மானித்தாலேயொழிய தொடர்ந்தும் எதிர்காலம் இருள்மயமானதாகவே இருந்து வர முடியும். பல்வேறு உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுக்கள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் என்பன முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், முரண்பாடுகளை தூண்டிய மூல காரணங்கள் போதியளவில் கவனத்தில் எடுக்கப்பட்டிருக்கவில்லை. வரையறுக்கப்பட்ட பணிப்பாணைகளும், அரசியல் தலையீடுகளும் இது தொடர்பான முன்னேற்றத்தை தடுத்து வருகின்றன. தற்போதைய இனத்துவ மற்றும் சமய பதற்றங்களினால் தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் பொருளாதார கட்டமைப்பு ரீதியான மற்றும் அரசியல் ரீதியான சவால்களுடன் இணைந்த விதத்தில் இலங்கையின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே இருந்து வருகின்றது. அரசாங்கத்தினால் இடம்பெற்ற அத்துமீறல்கள் தொடர்பாக சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்படுவதைத் தடுப்பதற்கான வசதியான ஒரு சாக்காக அத்தகைய பொறிமுறைகள் உருவாக்கப்பட்டனவா என்ற கேள்வியை இது எழுப்புகின்றது. அனைத்து கட்சித் தலைவர்களும் உடன்படுமிடத்து அரசியல் யாப்புக்கான 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல் செய்யப்படும் என்ற தற்போதைய அரசாங்கத்தின் பிரகடனத்தை இந்தப்  பின்னணியிலேயே கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது.

இலங்கை பிரஜைகள் 1983 ஜூலை பேரனர்த்தச் சம்பவங்களை நினைவில் வைத்திருப்பதுடன், அத்தகைய வன்முறைச் சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழ்வதை தடுப்பதற்கும் முயற்சிக்க வேண்டும். ஒரு சிறந்த இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக மக்கள் ஒன்றாக இணைந்து, பிரிவினை மற்றும் ஏற்றத்தாழ்வு என்பவற்றை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டிருக்கும் காலனித்துவ கட்டமைப்புக்களை நிர்மூலமாக்க வேண்டும். சமூக நீதி, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக் கூறும் நிலை என்பவற்றுடன் கூடிய நல்லிணக்கம் நிலவும் தேசமொன்றுக்கான பாதையை நிர்மாணிப்பதற்கு இன, மொழி, மதப் பேதங்களை மறந்து அனைத்து பிரஜைகளினதும் ஒரு கூட்டு முயற்சி தேவைப்படுகின்றது. அந்த நிலையில் மட்டுமே இலங்கை பெருமளவுக்கு அனைவரையும் உள்ளடக்கிக் கொண்ட ஒரு தேசமாக, வளமார்ந்த ஓர் எதிர்காலத்தை நோக்கி உண்மையில் நகர்ந்து செல்ல முடியும்.

லயனல் போப்பகே