Photo, Eranga Jayawardena, AP
ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் இலங்கையில் நீதிக்கும் பொறுப்புக்கூறலுக்குமான சர்வதேச சமூகத்தின் தேடல் தொடருகின்றது என்பதற்கு போதுமான சான்றாகும்.
“மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களில் பொறு்புக்கூறலுடன் தொடர்புடைய அம்சங்களை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருப்பது கவலைக்குரியதாக இருக்கின்ற போதிலும், அது களத்தில் உள்ள எமது அமைப்புக்களுடன் தொடர்ச்சியாக ஊடாட்டங்களைச் செய்திருக்கிறது. கடந்த தசாப்தத்தில் குறிப்பிட்ட ஆணையுடன் செயற்படும் ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் (Mandate holders) பல தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கிறார்கள். அவர்களின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தை நான் ஊக்கப்படுத்துகிறேன்” என்று வருடாந்த அறிக்கையைச் சமர்ப்பித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் ரேக் குறிப்பிட்டிருக்கிறார்.
கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து விலகி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நாடாளுமன்றத்தினால் ஜனாதிபதியாகத் தெரிவு செயய்பட்டதனால் ஏற்பட்ட மாற்றம் இலங்கை அரசாங்கத்திடம் சர்வதேச சமூகம் முன்வைத்த கோரிக்கைகளிலும் எதிர்பார்ப்புகளிலும் எந்த வேறுபாட்டையும் ஏற்படுத்தவில்லை.
ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு சமாந்தரமாக இலங்கையில் மனிதப்புதை குழிகள் மற்றும் காணாமல் போனோர் தொடர்பில் ஐந்து முன்னணி சிவில் சமூக அமைப்புக்களினால் மேற்கொள்ளப்பட்ட கடந்த கால விசாரணைகளின் அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
“மூன்று தசாப்தங்களுக்கும் இருபது மனிதப்புதைகுழிகள் தோண்டும் முயற்சிகளுக்கும் பிறகு சில சடலங்களே இதுவரையில் அடையாளம் காணப்பட்டு குடும்பங்களிடம் திருப்பிக் கையளிக்கப்பட்டன. நாடு பூராவும் ஆழமற்ற புதைகுழிகளில் ஆயிரக்கணக்கான சடலங்கள் கிடக்கின்றன என்பது எம்மெல்லோருக்கும் தெரியும். அதனால் விசாரணைகளில் போதிய முன்னேற்றம் ஏற்படாத இந்த நிலைமையை துரதிர்ஷ்டம் என்று எம்மால் வர்ணிக்கமுடியாது. அரசியல் துணிவாற்றலோ விருப்போ இல்லை என்பதே தெளிவானது ” என்று ‘காணாமல் போனோர் குடும்பங்கள்’ என்ற அமைப்பின் தாபகரான சிவில் சமூக செயற்பாட்டாளர் பிரிட்டோ பெர்னாண்டோ கூறினார்.
அந்த அறிக்கை வெளியிடப்பட்ட நிகழ்வுக்கு ஊடகங்கள் கொடுத்த பெரும் முக்கியத்துவம் போரின் போதும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) கிளர்ச்சிகளின்போதும் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் அனுபவித்த வேதனையையும் அவலத்தையும் பிரதிபலிக்கிறது.
சர்ச்சைக்குரிய மனித உரிமை மீறல்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் ஊடகங்கள் காட்டுகின்ற ஆர்வம் போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தின் மிகவும் நேர்மறையான அம்சங்களில் ஒன்றாகும்.
‘த ஐலண்ட்’ பத்திரிகை காணாமல் போனோர் தொடர்பிலான அறிக்கை வெளியீட்டு நிகழ்வு பற்றிய செய்திக்கு முன்பக்க முக்கியத்துவம் கொடுத்திருப்பது மாத்திரமல்ல, இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக சுமத்தப்பட்ட இனப்படுகொலை குற்றச்சாட்டு தொடர்பில் கனடா அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து கொழும்பில் உள்ள அந்நாட்டு தூதரகத்திடம் விளக்கத்தையும் கேட்டிருந்தது.
மே 18ஆம் திகதியை தமிழர் இனப்படுகொலை நினைவு தினமாக அனுஷ்டிப்பதற்கான தீர்மானத்தை 2022 மே 18 கனடா நாடாளுமன்றம் ஏகமனதாக நிறைவேற்றியது என்று அந்நாட்டு பிரதமர் ஜஸ்ரின் ரூடோ குறிபிட்டிருந்தார்.
முதலாவது தமிழர் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் தெரிவித்த கூற்று கனடாவின் நிலைப்பாட்டையும் இலங்கை மோதலில் பாதிக்கப்பட்டவர்கள், உயிர்தப்பி வாழ்பவர்கள் மற்றும் தொடர்ந்து இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவரும் சகல இலங்கையர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுப்பதை கனடா நிறுத்தப்போவதில்லை என்பதையும் பிரதிபலிக்கிறது என்று அந்நாட்டு உயர்ஸ்தானிகரகம் வலியுறுத்திக் கூறியது.
மிகவும் கடினமான பணி
அரசியலமைப்பு வரையறைக்குள் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் நோக்கிய நீண்டகால அடிப்படையிலான நடவடிக்கைகள் மீது தொடர்ந்து கவனத்தை செலுத்துவதே தனது நிலைப்பாடாக இருந்துவருவதாக கூறும் அரசாங்கம் தேசிய இறைமையை பாதிக்கக்கூடிய சர்வதேச பொறிமுறைகளை எதிர்க்கிறது.
போர் இராணுவ ரீதியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட 2009ஆம் ஆண்டிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான முதல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அன்றிலிருந்து இலங்கை அரசாங்கங்கள் தீர்மானங்களைத் தோற்கடிப்பதற்கே முயற்சிகளை முன்னெடுத்தன. ஜெனீவாவில் தூதுக்குழுவுக்கு அன்றைய தூதுவர் கலாநிதி தயான் ஜெயதிலக தலைமை தாங்கியபோதே முதற்தடவையாக தீர்மானத்தை தோற்கடிப்பதில் இலங்கை வெற்றி கண்டது.
ஆனால், வழங்கிய உறுதிமொழிகளை (கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரைகள் உட்பட) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதை அடுத்தே தொடர்ச்சியாக மேலும் பல தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு இலங்கைக்கு எதிராக அலை திரும்பியது.
2015ஆம் ஆண்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் புதிய தீர்மானம் ஒன்றுக்கு இணை அனுசரணை வழங்குவதற்கு இணங்கியபோது மாத்திரமே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் விவகாரத்தில் சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைப்பதில் இலங்கை ஆர்வம் காட்டியது. பாதுகாப்புப் படைகளின் அதிகாரிகளை அணுகி ஆராய்வது, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களைப் பாதுகாப்பு படைகளில் இருந்த நீக்குவது, பொறுப்புக்கூறல் பிரச்சினைகளை ஆராய சர்வதேச பங்கேற்புடன் கூடிய விசேட நீதிமன்றங்களை அமைப்பது என்று பல்வேறு விதப்புரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.
அந்தக் காலப்பகுதியில் காணிகளை திருப்பிக்கொடுத்தல், குடிமக்கள் வாழ்வில் இராணுவத்தின் ஈடுபாட்டைக் குறைத்தல் போன்ற மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கையாள சில முயற்சிகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், அரசாங்கம் அமைத்த காணாமல்போனோர் விவகார அலுவலகம் போன்ற நிறுவனங்கள் அவற்றின் மட்டுப்படுத்தப்பட்ட தன்மை காரணமாக விரைவாகவே நம்பகத்தன்மையை இழந்தன.
கடந்த காலத்தை விசாரணை செய்வதற்கு அரசாங்க முறைமைக்குள் இருந்தும் பொதுவில் பரந்தளவு சமூகத்திடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. அவை போரை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டின் ஐக்கியத்தையும் இறைமையையும் பேணிப் பாதுகாப்பதற்கு அவசியமான சேவையைப் பாதுகாப்புப் படைகள் செய்ததாக நோக்கின, தொடர்ந்து நோக்குகின்றன.
ஸ்பெயின் நாட்டின் சர்வாதிகார யுகத்தின் காயங்களைக் குணப்படுத்தும் செயன்முறையின் ஒரு அங்கமாக பாஸ்க் பிராந்தியத்தின் ஒர்டுனா நகரில் ஆழமற்ற புதைகுழிகளில் இருந்து 53 சடலங்களை ஸ்பெயின் தொண்டர்களும் தடயவியல் தொல்லியலாளர்களும் தோண்டியெடுத்ததாக சில மாதங்களுக்கு முன்னர் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. 1936 – 1939 ஸ்பெயின் உள்நாட்டுப் போரின்போது ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டார்கள். ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் காணாமல் போனதாகவும் வரலாற்றாசிரியர்கள் மதிப்படுகிறார்கள். இவர்களில் பலர் அடையாளமிடப்படாத குழிகளில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சர்வாதிகார ஆட்சியின் குற்றங்கள் பற்றிய உண்மையைக் கண்டறியும் பரந்தளவிலான முயற்சியின் ஒரு அங்கமாக அந்தப் புதைகுழிகளில் இருந்து சடலங்களைத் தோண்டியெடுப்பதற்கு 80 வருடங்களுக்கும் அதிகமான காலத்துக்கு பின்னர் 2020 ஆண்டிலேயே நிதியை வழங்குவதற்கான சட்டத்தை அரசாங்கம் கொண்டவந்தது. முன்னாள் ஜனாதிபதி பிரான்சிஸ்கோ பிராங்கோவின் மரணத்துக்குப் பிறகு நான்கு தசாப்தங்கள் கடந்துவிட்ட பின்னரும் கூட காயங்கள் குணப்படுத்தப் படவில்லை. பாஸ்க் பிரிவினைவாதத்துக்கு வழிவகுத்த உள்நாட்டுப்போரின் காயங்கள் மற்றும் பிளவுகளை இன்றுவரை ஸ்பெயின் கொண்டிருக்கிறது.
மந்திர மருந்து
நீதியும் பொறுப்புக்கூறலுமே எந்தவொரு சமுதாயத்தையும் பிணைக்கின்ற காரணிகளாகும். தாங்கள் அரசாங்கத்தினால் நேர்மையாக நடத்தப்படுவதாகவும் அவ்வாறு நேர்மையாக நடத்தப்படாவிட்டால் நீதியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் மக்கள் உணரக்கூடியதாக இருக்கவேண்டும்.
சர்வதேச சமூகம் உயர்ந்த மட்டங்களில் அபிவிருத்தியையும் சுபீட்சத்தையும் அடைந்த மேற்குலக நாடுகளின் தலைமையில் இருக்கிறது. மேற்குலக நாடுகள் அவற்றின் நலன்களுக்காக செயற்படுகின்ற சமுதாயங்களை உருவாக்கியிருக்கின்றன. இலங்கை அபிவிருத்தி, நீதி மற்றும் சுபீட்சத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதால் அந்த நாடுகள் விதிக்கின்ற வழிகாட்டல்களை நாம் பின்பற்றவேண்டியிருக்கிறது.
மனித உரிமைகளுக்கான பிரதி உயர்ஸ்தானிகர் நடா அல் – நஷீவ் ஜூன் 21 தனது வாய்மூல அறிக்கையில், “உண்மை, பரிகாரம், நினைவுகூரல், பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களை இணைக்கக்கூடியதும் வெற்றிகரமானதும் நிலைபேறானதுமான நிலைமாறுகால நீதிச் செயன்முறையொன்றுக்கான சூழலை சாத்தியமாக்கக்கூடியதுமான ஒரு கட்டுறுதியான திட்டமே இன்று தேவைப்படுகிறது” என்று கூறியிருக்கிறார்.
சர்வதேச சமூகத்திடமிருந்து வருகின்ற இந்த நெருக்குதல்களுக்கு அரசாங்கத்தின் பதில் காணாமல்போனோர் விவகார அலுவலகம் போன்ற ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பொறிமுறைகளுக்கு புத்துயுரளித்து வலுப்படுத்துவதாக இருக்கவேண்டும். காணாமல்போனோர் விவகார அலுவலகம் புதிய தலைமைத்துவத்தின் கீழ் அதன் ஆற்றலை சர்வதேச சமூகத்தினதும் சிவில் சமூக அமைப்புக்களினதும் ஆதரவுடன் கட்டியழுப்புகின்றது. அதேவேளை, காணாமல் போனோரினதும் மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்டவர்களினதும் குடும்பங்களுக்கு நிதி மற்றும் இழப்பீடுகளை வழங்குவதில் இழப்பீட்டு அலுவலகத்தின் வகிபாகத்தை அதிகரிக்கும் முயற்சிகளையும் முன்னெடுக்கவேண்டும்.
ஆனால், அரசாங்கத்திடம் இருக்கும் பிரதான சாதனம் உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்றே தோன்றுகிறது. இந்த ஆணைக்குழு தொடர்பான வரைவு அடுத்த மாதம் இராஜதந்திர சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளப்படவிருக்கிறது. அந்த வரைவு நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றதும் 2023 டிசம்பர் மட்டில் நடைமுறைப்படுத்தப்படும்.
உண்மை மற்றம் நல்லிணக்க ஆணைக்குழு பொறுப்புக்கூறல் பிரச்சினைக்கு தீர்வைத் தரப்போவதில்லை என்பது வரைவை பார்வையிட்ட தமிழ்த் தலைவர்களின் அபிப்பிராயமாக இருககிறது. குற்றங்களைச் செய்தவர்களை பொறுப்புக்கூற வைப்பதாக வரைவு இல்லை. அரசாங்கத்துக்கு தலைமை தாங்குகிறவர்கள் கடந்தகால கிளர்ச்சிகளை ஒடுக்குவதில் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் முக்கிய பங்கு வகித்தவர்களாக இருப்பதால் இந்த நேரத்தில் அந்த மட்டத்தில் பொறுப்புக்கூறலை எதிர்பார்க்கமுடியாது.
அரசாங்கத் தலைவர்கள் தங்கள் மீது தாங்களே குற்றச்சாட்டுகளை சுமத்துவார்கள் அல்லது அத்தகைய குற்றஞ்சுமத்தலுக்கும் வழக்கு தொடுத்தலுக்கும் வழிவகுப்பார்கள் என்று எதிர்பார்ப்பது பொருத்தமானதல்ல. பாதுகாப்புப் படைகளை இலக்கு வைக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையும் பெருமளவுக்கு கடந்த 80 வருடங்களுக்கும் மேலாக ஸ்பெயினில் நிலைத்திருப்பதைப் போன்ற பிளவு சமூகத்தில் ஏற்படுவதற்கும் அரசாங்கத் தலைமைத்துவத்துக்கு எதிராக மக்கள் வாக்களிக்கவும் வழிவகுக்கும்.
2019 ஆண்டில் உண்மையில் நடந்தது அதுவே. இணை அனுசரணையுடனான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிராகரிக்கவேண்டும் என்பதை தனது நிலைப்பாடாக அறிவித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ சிங்களப் பெரும்பான்மையின வாக்குகளினால் அதிகாரத்துக்கு வந்தார்.
தற்போதைய தருணத்தில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றின் வகிபாகத்தை மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக ஏற்றுக்கொள்ளவேண்டிய தேவை இருக்கிறது. காணாமல் போனவர்களுக்கு நடந்தது என்ன என்ற உண்மையை தற்போதைக்கு உறுதிப்படுத்திக் கொண்டு, சர்வதேச கவனத்தை பெற்றுவரும் இனப்படுகொலை குற்றச்சாட்டை காலப்போக்கில் கையாளலாம்.
கடந்த கால தவறுகள் மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்யுமுகமாக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் கடந்த காலத்தைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்க வேண்டிய பெரிய தேவை இருக்கிறது.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பிரச்சினைகளுக்கு சுலபமாகவும் துரிதமாகவும் தீர்வைத் தரவல்ல ஒரு மந்திர மருந்தாக இருக்கப்போவதில்லை; ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்கு பதில்களைத் தரப்போவதுமில்லை. அந்தத் தீர்மானங்களை மாற்றத்துக்கான ஒரு செயன்முறையில் வேறு பல வழிகளில் கையாளவேண்டியது அவசியமாகும். அந்த செயன்முறைகளை முன்னெடுக்கும்போது நேர்மை வெளிக்காட்டப்பட வேண்டும்.
ஜெகான் பெரேரா