Photo, THE WASHINGTON POST

முன்னாள் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சாம் விஜேசிங்க முதலில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டவாதியாக பணியாற்றினார். செயலாளர் நாயகம் பதவி முன்னர் நாடாளுமன்ற எழுதுவினைஞர்  (Parliament Clerk) என்றே அழைக்கப்பட்டது.

1960 களின் நடுப்பகுதியில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து விலகி விஜேசிங்க நாடாளுமன்ற எழுதுவினைஞராக பணியில் இணைந்தபோது அவரை வரவேற்ற பழம்பெரும் இடதுசாரி தலைவரும் சட்டமேதையுமான கலாநிதி கொல்வின் ஆர்.டி சில்வா, “சாம் நீங்கள் இதுவரை கிறிமினல்கள் மீது வழக்கு தொடுப்பதற்கு உங்கள் நேரத்தைச் செலவிட்டீர்கள். இனிமேல் கிறிமினல்களுடன் சேர்ந்து பணியாற்றக் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கும்” என்று கூறினாராம்.

நாடாளுமன்றத்தில் பெரும்பாலும் படித்தவர்களும் மக்கள் சேவைக்கு தங்களை அர்ப்பணித்த கண்ணியமிகு கனவான்களும் அங்கம் வகித்ததாக கூறப்பட்ட அந்த நாட்களிலும் கூட அதன் உறுப்பினர்கள் குறித்து பொதுவில் எத்தகைய எண்ணம் நிலவியது என்பதை கலாநிதி சில்வாவின் அந்தக் கூற்று வெளிக்காட்டுகிறது.

விஜேசிங்க நாடாளுமன்ற செயலாளர் நாயகமாக 1981 வரை பதவி வகித்தார். பின்னர் அவர் நாடாளுமன்ற ஆணையாளராகவும் (குறைகேள் அதிகாரி) பல வருடங்கள் பதவி வகித்தார். இறுதிக் காலங்களில் அவர் புதிதாக தெரிவான உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்து விளக்கமளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்குகளில் உரையாற்றுவதற்கு அழைக்கப்படுவது வழமையாக இருந்தது.

அத்தகைய கருத்தரங்கொன்றில் ஒரு தடவை விஜேசிங்க புதிய உறுப்பினர்களைப் பார்த்து “நீங்கள் எல்லோரும் எதற்காக நாடாளுமன்றம் வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டாராம். அதற்கு அவர்கள் ஏகோபித்த குரலில் “மக்களுக்கு சேவை செய்வதற்காகவே நாம் வந்திருக்கிறோம்” என்று  பதிலளித்தார்களாம்.” இல்லை, இல்லை நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பயன்படுத்தி பெரும் பணம் பண்ணுவதை நோக்கமாகக்கொண்டே வந்திருக்கிறீர்கள்” என்று எந்த தயக்கமும் இல்லாமல் முகத்தில் அடித்தாற்போல் விஜேசிங்க மறுத்துக்கூறினாராம். அந்தச் சம்பவத்தை அவரே பிறகு ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.

தனது ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்றத்தில் அடிக்கடி இடம்பெற்ற அமளிதுமளியால் பெரும் வெறுப்படைந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பாடசாலை வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றியபோது “மதுவுக்கும் போதைப் பொருளுக்கும் அடிமையானவர்கள் பிறகு அவற்றைத் தயாரித்து விற்பனை செய்வதை தொழிலாகக்கொண்டு சொத்துக்களைக் குவித்து இறுதியில் நாடாளுமன்றத்துக்குள்ளும்  வந்துவிட்டார்கள்” என்று கூறினார்.

முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் லண்டனுக்கு மேற்கொண்ட ஒரு விஜயத்தின்போது ஐக்கிய இராச்சியம் – இலங்கை சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்துபசாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றியவேளை “பிரிட்டனில் எம்.பி.க்களை  கௌரவ உறுப்பினர்கள் என்று அழைப்பதில்லை. ஆனால், அவர்களில் சிலர் கௌரவமானவர்களாக இருக்கிறார்கள். இலங்கையில் எம்.பி.க்கள் கௌரவ உறுப்பினர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஆனால், அவர்களில் சிலர் கௌரவமானவர்களாக இருப்பதில்லை” என்று கூறினாராம்.

இவற்றை எல்லாம் இன்று நினைவுபடுத்துவதற்கு காரணம் அண்மையில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம் மத்திய துபாய் நாட்டில் இருந்து தங்கத்தைக் கடத்திவந்தபோது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் பிடிபட்டு அபராதம் செலுத்திய சம்பவமும் அவரை நாடாளுமன்றத்தில் இருந்து இடைநிறுத்துமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை கேட்பதற்கு பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்‌ஷ தலைமையில் இடம்பெற்ற சபை அலுவல்கள் குழுவின் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமுமேயாகும்.

றஹீம் விவகாரம் தொடர்பில் 20 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கடிதம் ஒன்றையும் கையளித்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகளையும் இராஜதந்திர கடவுச்சீட்டையும் விமான நிலையத்தின் அதிமுக்கிய பிரமுகர்கள் ஓய்வறையின் ஊடாக தங்கத்தைக் கடத்துவதற்கு றஹீம் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக் கோவையையும் அவர் முற்றாக மீறியிருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக அவர்களாலேயே நிறைவேற்றப்பட்ட சட்டங்களை மீறுவது அரசாங்கத்தினதும் எதிர்க்கட்சியினதும் உறுப்பினர்கள் மீதான மக்களின் நல்லெண்ணமும் நம்பிக்கையும் சீர்குலைவதற்கு வழிவகுக்கும். இதனால் நாட்டின் சட்டங்களை பின்பற்றி நடப்பதற்கு மக்கள் மறுக்கக்கூடிய நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து இருக்கிறது என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை இடைநிறுத்துவதற்கான அதிகாரம் சபாநாயகருக்கு இருக்கிறது என்று பிரதி சபாநாயகர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ கூறியதாக அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியான போதிலும், றஹீமுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுப்பதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என்று சபாநாயகர் அபேவர்தன கூறியிருக்கிறார்.

இங்கு கவனிக்கவேண்டிய சுவாரஸ்யமான  விடயம் ஒன்று இருக்கிறது. அதாவது நாடாளுமன்ற உறுப்பினர்கள்  சட்டங்களை மீறினால் அவர்கள் மீதான மக்களின் நல்லெண்ணமும் நம்பிக்கையும் சீர்குலைந்துவிடும் என்பதை றஹீம் விமான நிலையத்தில் தங்கத்துடன் கையும் மெய்யுமாக  பிடிபடும்வரை எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிந்திருக்கவில்லையா?

தங்கள் மீது மக்களுக்கு இன்னமும் நல்லெண்ணம் இருப்பதாக இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்களா என்பது இன்னொரு கேள்வி.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகலரையும் சட்டங்களை மீறுபவர்கள் என்றோ முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் என்றோ இங்கு நாம் கூற முன்வரவில்லை. ஆனால், அதிகப் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களை பொதுவில் அரசியல்வாதிகளை நல்லொழுக்கமுடையவர்களாக மக்கள் கருதவில்லை என்பது உண்மை. அல்லாவிட்டால் ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சியின்போது மொத்தம் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வீட்டுக்குப் போகவேண்டும் என்ற முழக்கம்  எழுந்திருக்காது.

அதேவேளை நேர்மையான உறுப்பினர்களும் கூட  நல்லொழுக்கம் இல்லாத தங்கள் சகாக்களின் முறைகேடான  நடவடிக்கைகளினால் அவமானப்படவேண்டியிருக்கிறது என்பது துரதிர்ஷ்டவசமானது. மக்கள் பொதுவில் அரசியல்வாதிகளை பழிபாவத்துக்கு அஞ்சாத ஒரு கூட்டமாகவே நோக்குகிறார்கள்.

ஜனாதிபதி ரணில்  விக்கிரமசிங்க எதிர்க்கட்சியில் இருந்தவேளை ஒரு தடவை நாடாளுமன்ற கட்டடத்தை சூழ்ந்திருக்கும் தியவன்ன ஓயாவில் உறுப்பினர்கள் சகலரையும் தூக்கிப்போடவேண்டும் என்று எவரோ  கூறியதற்கு வேடிக்கையாக பதிலளித்த அவர், “அவ்வாறு செய்வது பெரிய தவறாக இருக்கும். ஏனென்றால், களனி கங்கை முழுவதுமே மாசடைந்துவிடும்” என்று கூறியது இப்போது நினைவுக்கு வருகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக்கோவை பற்றி றஹீம் விவகாரத்துக்குப் பிறகு பெரிதாக பேசப்படுகிறது. கரு ஜெயசூரிய சபாநாயகராக இருந்தபோது ஒழுக்கக்கோவை ஒன்றை வகுப்பதற்கு பெரிதும் பாடுபட்டார்.  2018 மார்ச்சில் ஒழுக்கக்கோவைக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியது. ஆனால், அதே வருடம் அக்டோபரில் அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் பதவியில் இருந்து விக்கிரமசிங்கவை அதிரடியாக நீக்கிவிட்டு அவரின் இடத்துக்கு மஹிந்த ராஜபக்‌ஷவை நியமித்ததை அடுத்து மூண்ட அரசியலமைப்பு நெருக்கடியின்போது நாடாளுமன்றத்திற்குள் நடந்த படுமோசமான களேபரத்தை எவரும் மறந்திருக்கமாட்டார்கள்.

மஹிந்த அமைதியாக தனது ஆசனத்தில் அமர்ந்திருந்து பார்த்துக்கொண்டிருக்க அவருக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் நடத்திய அட்டகாசம் இலங்கை நாடாளுமன்றத்தின் வரலாற்றில் இடம்பெற்றிருக்கக்கூடிய மிகவும் கேவலமான சம்பவங்களில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. அது குறித்து விபரிக்க இங்கு இடவசதி போதாது.

அந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்த நாடாளுமன்றக்குழு ஒன்று 60 உறுப்பினர்களை குழப்பங்களுக்குப் பொறுப்பானவர்கள் என்று கண்டது. அந்தக் குழுவின் அறிக்கை நாடாளுமன்ற ஒழுக்கநியதி மற்றும் சிறப்புரிமைகள் குழுவுக்கும் சமர்ப்பிக்கப்பட்டது. அது மாத்திரமல்ல, இரகசியப் பொலிஸாரும் தனியான விசாரணை நடத்தியதாகக் கூறப்பட்டது. ஆனால், குழப்பத்தை விழைவித்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த விவகாரம் அப்படியே கைவிடப்பட்டது. அதில் சம்பந்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டு அனேகமாக முன்னைய தேர்தலில் பெற்றதையும் விட கூடுதல் வாக்குகள் பெற்று  மீண்டும் நாடாளுமன்றம் வந்து கோட்டபாய ஆட்சியில் மிக முக்கியமான அமைச்சர் பதவிகளை வகித்ததையும்  கண்டோம்.

இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக்கோவை பற்றி சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிரணி உறுப்பினர்கள் அந்த  2018 டிசம்பர் சபைக் குழப்பம் பற்றி எதுவுமே பேசுவதில்லை.

கடந்த வருடம் அக்டோபரில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான 21ஆவது திருத்தத்தின் பிரகாரம் இரட்டைக்குடியுரிமை கொண்ட எவரும் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கமுடியாது. தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் பத்துப்பேர் இரட்டைக்குடியுரிமை கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது. அத்தகைய பத்துப் பேர் இருப்பதாக முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க வெளிப்படையாகவே சொன்னார். ஆனால், அவர்களில் எவருமே இதுவரையில் பதவிதுறக்கவில்லை. தங்கள் கட்சிகளில் இருக்கக்கூடிய இரட்டைக்குடியுரிமை நாடாளுமன்ற உறுப்பினர்களை கண்டறிந்து அவர்களை பதவிதுறக்கச் செய்வதற்கு எந்தக் கட்சியின் தலைவரும் கூட இதுவரையில் முன்வரவில்லை. சட்டத்தை அவர்கள் மதித்து நடக்கும் இலட்சணம் இது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக்குடியுரிமை கொண்டவர்களாக இருக்கிறார்களா இல்லையா என்பதைக் கண்டறிவது நாடாளுமன்றத்தின் பொறுப்பு அல்ல என்று சபாநாயகர் கூறிய அதேவேளை அவர்களின் குடியுரிமை குறித்து விசாரணை செய்வது தங்களது பொறுப்பு அல்ல என்று கூறிய தேர்தல் ஆணைக்குழுவும் இது விடயத்தில் எவரும் நீதித்துறையையே நாடவேண்டும் என்றது.

தங்களது இரட்டைக்குடியுரிமையை சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரகசியமாக வைத்திருப்பது தொடர்பில் மூண்ட சர்ச்சை குறித்து குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிக்கையொன்றை சமர்ப்பிக்கும் என்று கூறப்பட்ட போதிலும் அத்தகைய அறிக்கை எதுவும் வெளிவந்து இரட்டைக்குடியுரிமை உறுப்பினர்கள் கண்டுபிடிக்கப்பட்டு பதவிதுறக்க வைக்கப்பட்டதாக இல்லை. ஆக, நாடாளுமன்றத்தில் சட்டவிரோதமாகவும் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கிறார்கள் என்றாகிறது. சட்டத்தின் ஆட்சியை விட அரசியல் அனுகூலத்துக்குத்தான் முக்கியத்துவம்!

டயானா கமகே ஐக்கிய இராச்சியத்தின் குடியுரிமையைக்  கொண்டவர். எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் 6 தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான அவர் அரசாங்கப் பக்கத்துக்கு மாறி இப்போது சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கிறார்.

அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு எதிராக வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. எவ்வாறோ இலங்கை  இராஜதந்திர கடவுச்சீட்டைப்  பெற்ற அவர் அது காலாவதியானதும் புதியதைப் பெற விண்ணப்பித்தபோது ஐக்கிய இராச்சியத்தின் குடியுரிமையை அவர் கைவிட்டதாக ஆவணம் எதையும் சமர்ப்பிக்கவில்லை என்ற காரணத்தால் அந்தக் கடவுச்சீட்டை வழங்குவது சாத்தியமில்லை என்று குடிவரவு, குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் பாதுகாப்பு அமைச்சு செயலாளருக்கு கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கடந்த வருட இறுதியில் சபையில்  சமர்ப்பித்தார்.

டயானா கமகே குடிவரவு, குடியகல்வு சட்டத்தை மீறியிருந்தால் அவரைக் கைதுசெய்வதற்கு உத்தரவொன்றை நீதிமன்றம் பிறப்பிக்கத் தேவையில்லை. நடைமுறையில் உள்ள சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு அதிகாரம் இருக்கிறது என்று கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அறிவித்து ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. இன்னமும் அவர் கைது செய்யப்படவில்லை. அரசாங்கத் தரப்புக்கு மாறாமல் அவர் எதிர்க்கட்சியில் தொடர்ந்தும் இருந்திருந்தால் நிலைமை நிச்சயமாக வேறு விதமாகவே அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சட்டத்தை மீறிச் செயற்படுகின்ற அரசியல்வாதிகள் தண்டனைக்குள்ளாவது அவர்கள் எந்தப் பக்கத்தில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்ததாகவே பெரும்பாலும் இருக்கிறது.

மாகாண முதலமைச்சராக இருந்தபோது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி செய்த உதவிக்கு கைமாறாக பெருந்தொகைப் பணத்தை தருமாறு வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்திய அரசியல்வாதியொருவருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்தது. அந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டைச் செய்த அவர் இன்றைய அரசாங்கத்தில் மிக முக்கியமான அமைச்சராக பதவி வகிக்கக்கூடியதாக இருக்கிறது.

போலிக்கடவுச்சீட்டுடன் இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற சீனப்பிரசை ஒருவரை குடிவரவு அதிகாரிகள் விமானநிலையத்தில் தடுத்துவைத்தபோது இராஜாங்க அமைச்சர் ஒருவர் அவர்களுக்கு உத்தரவிட்டு அவரை விடுவித்தார். இலங்கையில் முதலீடு செய்வதற்கு வந்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் கூறிய அந்த சீனர் தனது நாட்டில் போதைப்பொருளுடன் தொடர்புடைய  குற்றத்துக்காக தேடப்படும் ஒருவர் என்று நீதிமன்றத்தில் சட்டமா அதிபரின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. எத்தகைய பேர்வழிகளிடம் இருந்து அரசியல்வாதிகள் முதலீடுகளை எதிர்பார்கிறார்கள் என்று பாருங்கள்.

சீனரை விடுவிக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்ட அமைச்சருக்கு எதிராக எந்த விசாரணையும் நடத்தப்படமாட்டாது என்று உள்நாட்டு பாதுகாப்புக்குப் பொறுப்பான அமைச்சர் அறிவிக்கவும் தயங்கவில்லை. இவ்வாறாக தங்கள் தரப்பு சட்டமீறல்களை அரசாங்கந்தரப்பு மூடிமறைப்பது அல்லது அவற்றைச் செய்தவர்களைப் பாதுகாப்பது ஒரு கலாசாரமாகவே வளர்க்கப்பட்டு வந்திருக்கிறது.

கோட்டபாய ஆட்சிக்காலத்தில் அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாளில் இருந்து அரசாங்கத்துக்கு சார்பாக செயற்பட்டுவந்த அலி சப்ரி றஹீம் பொதுப்பயன்பாட்டு வசதிகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவிநீக்குவதற்கு அரசாங்கம் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த பிரேரணையை எதிர்த்தே வாக்களித்தார். ஏன் அவ்வாறு செய்தீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டபோது ஆபத்தில் மாட்டிக்கொண்டவேளையில் தன்னைக் காப்பாற்றுவதற்கு ஜனாதிபதியோ பிரதமரோ முன்வரவில்லை. எதற்காக அவர்களின் அரசாங்கத்தை நான்  ஆதரிக்கவேண்டும் என்று பதில் கேள்வியையே கேட்டார்.

முன்னர் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்த சந்தர்ப்பங்களில் எல்லாம் ‘ஆபத்துகளில்’ இருந்து தன்னை அரசாங்கத் தலைவர்கள் காப்பாற்றியதற்கான கைம்மாறைத்தான் அவர் செய்தாரோ?

சட்டவிரோதமான வழி முறைகளில் பெரும் பணம் பண்ணுபவர்களுக்கு குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு  அரசியல் அதிகாரத்தின் உதவி தேவைப்படுகிறது. அந்த உதவி கிடைப்பதைப் பொறுத்தே எந்தப் பக்கத்துக்கு ஆதரவாக செயற்படுவது என்பதை அவர்கள் தீர்மானிக்கிறார்கள் போலும்.

என்னைப் பதவிநீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் அரசாங்கம் பிரேரணையைக் கொண்டுவந்தாலும் நான் நீக்கப்படப் போவதில்லை என்று எனது உள்மனம் கூறுகிறது. ஏனென்றால், அரசாங்கம் மின்கட்டணங்களை முன்னென்றும் இல்லாத அளவுக்கு அதிகரித்த சந்தர்ப்பங்களில் அதை கடுமையாக எதிர்த்து மககளின் பக்கத்தில் நான் நின்றதால் சபையில் பெரும்பாலான உறுப்பினர்கள் எனக்கு எதிராக வாக்களிக்கமாட்டார்கள் என்று முதல்நாள் கூறிய ஜனக ரத்நாயக்க மறுநாள் தான் பதவி நீக்கப்பட்ட பிறகு அரசியல்வாதிகள் தங்களது விருப்புவெறுப்புகளுக்கு ஏற்பவே தீர்மானங்களை எடுக்கிறார்கள் என்று கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது. எமது அரசியல்வாதிகளைப் பற்றிய ஒரு சரியான மதிப்பீட்டை அவரால் செய்யமுடியவில்லையே!

1978ஆம் ஆண்டில் ஜே.ஆர். ஜெயவர்தன அரசாங்க காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான அநுர டானியல் தங்கப்பாளங்களை கடத்திக்கொண்டுவந்து விமான நிலையத்தில் பிடிபட்ட சம்பவத்துக்குப் பிறகு அதாவது 45 வருடத்துக்கு பிறகு  தங்கத்தை கடத்த முயன்றபோது  பிடிபட்ட அடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் றஹீம் என்று கூறப்படுகிறது. ஆனால், அந்த நான்கரை தசாப்தங்களில் இந்த இரு அரசியல்வாதிகள் மாத்திரமே இதுவரையில் விமான நிலையத்தின் ஊடாக கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்று நம்பமுடியுமா?

முறைகேடான வழிகளில் பழிபாவத்துக்கு அஞ்சாமல் சொத்துக்களை குவித்தவர்கள் பெருவாரியானோர் இன்று அரசியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். கட்சிகளின் தலைவர்களும் அவர்களையே திரும்பத்திரும்ப தேர்தல்களில் வேட்பாளர்களாக நிறுத்துகிறார்கள்.

பெரும் பணபலமும் அடியாள் பலமும் அரசியலுக்கு முக்கியமான ‘தகுதியாக’ விளங்கும் இன்றைய மோசமான அரசியல் கலாசாரத்தில் அரசியல் குற்றச்செயல்மயப்படுத்தப்பட்டிருக்கிறது; குற்றச்செயல் அரசியல்மயப்படுத்தப்பட்டிருக்கிறது.

வீரகத்தி தனபாலசிங்கம்